சைக்கோபாத் புருஷங்காரன்!
செய்யு - 592
பேச ஆரம்பிச்ச செய்யு பேசிகிட்டே இருந்தா.
அதெ கேக்க விகடுவுக்கு மலைப்பா இருந்துச்சு. இம்மாம் விசயம் மனசுக்குள்ள இருந்தா பைத்தியந்தாம்
பிடிக்கும்ன்னு தோணுனுச்சு.
“சரசு ஆத்தா நம்மள ஊர்ல இஞ்ஞ கொண்டாந்து விட்டப்போ யிப்பிடி ஒரு வாழ்க்கெ
தேவையான்னு தோணுனுச்சு. அத்தோட அந்தப் பத்தாயிர ரூவா பெரச்சனெ வந்தப்போ இந்த வாழ்க்கெ
தேவையே யில்லன்னு மனசுக்குள்ள எண்ணம் உண்டாயிடுச்சு. நாம்ம யாருக்கும் பாரமா இருந்துடக்
கூடாது. நம்மட பெரச்சனெ நம்மளோட போவட்டும். ஒருவேள இதெ சரிபண்ணிக் கொண்டு போயி
வுட்டாலும் திரும்ப நரக வாழ்க்கெதாம் அமையப் போவுது. அப்பிடி ஒரு வாழ்க்கெ அமையுறதுக்குச்
செத்துப் போயி நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லன்னுத்தாம் அந்த முடிவெ எடுத்து தொங்கிப்புடலாம்ன்னுப்
பாத்தேம். அதுக்கும் நமக்கு அதிர்ஷ்டம் இல்லாம, போயிச் சேர்ற வுதி யில்லாம போச்சுப்
பாரு. அப்பத்தாம் நெனைச்சேம் தலயெழுத்துன்னு ஒண்ணு இருக்கு. அதெ மாத்த முடியாது. கெடந்து
அனுபவிக்கிறதுக்கு இன்னும் இந்த வாழ்க்கையில நெறைய இருக்குன்னுப் புரிஞ்சிக்கிட்டேம்.
“இருந்தாலும் ஒரு நம்பிக்கெ. நீஞ்ஞ சமாதானம்
பேசி வுட்டப்போ எல்லாம் மாறிடும்ன்னு நெனைச்சேம். அந்த நெனைப்பு சரிதாங்ற மாதிரிக்கி
கொஞ்ச நாளு அவ்வேம் எல்லாம் மறந்ததெப் போல பாசமாத்தாம் இருந்தாம். எத்தனெ நாளு அவனால
அப்பிடி இருக்க முடியும்? அத்து அவனோட நெசமான இயல்புன்னா அப்பிடி இருக்க முடியும்.
அவனால ரொம்ப நாளு பாசமா இருக்க முடியல. அதாச்சி அப்பிடி நடிக்க கூட முடியல. கூடிய
சீக்கிரமே அவனோட சுயரூபம் வெளியில வர்ற ஆரம்பிச்சிடுச்சு.
“நீஞ்ஞல்லாம் சமாதானம் பண்ணி சென்னைப்
பட்டணம் கொண்டு போயி விட்ட மொத நாளுல்ல அவ்வேம் பேசுன பேச்சு இருக்கே. அதெ கேட்டா
யிப்பிடி ஒரு புருஷனுக்கு எப்பிடி ஒரு பொண்டாட்டியா இருக்கணும்ன்னு கேப்பீயே. நாம்ம
தொங்க நெனைச்சதெப் பத்தித்தாம் அன்னிக்கு முழுக்கக் கேட்டாம். என்னவோ அதிசயமா அவ்வேம்
கண்ணுல்லாம் வேற கலங்குனுச்சு. நமக்காகப் போவாத கோயிலுயில்ல, வேண்டாத தெய்வமில்லன்னு
அவ்வேம் பாட்டுக்கு அவுத்து விட்டுக்கிட்டெ இருந்தாம். ஏம் புள்ளே இப்பிடிப் பண்ணுனேன்னு
நொடிக்கு ஒரு தரம் கேட்டுகிட்டெ இருந்தாம். அதுக்கு என்னத்தெப் பதிலெச் சொல்றதுன்னு
அந்த நேரத்துல நாம்மளே தவிச்சித்தாம் போயிட்டேம். ஏன்னா அதுக்கான காரணம் அத்தனையும்
அவனுக்குத் தெரியும். அதெ நம்மகிட்டெ கேட்டா நமக்கு என்னத்தத் தெரியும்? எதுவும் தெரியாதவனுக்கு
எதாச்சிம் சொல்லிப் புரிய வைக்கலாம். எல்லாம் தெரிஞ்ச கம்முனாட்டிக்கு என்னத்தெச்
சொல்லிப் புரிய வைக்குறது?
“நாம்ம தொங்கிப் பொழைச்ச அன்னிக்கு இந்த
அம்மாசிக் கெழம் இருக்கே. அத்து சைக்களி எடுத்துட்டுப் போயி முருகு மாமாட்ட சேதி சொன்னவுடனே
அவனுக்கு போன்ல சேதிப் போயிருக்கு. அப்பிடியே ஆளு அவிஞ்சிப் போயி உக்காந்திருக்காம்.
போலீசு வருமோ? கைது பண்ணுமோன்னு வெடவெடத்துப் போயிருக்காம். அவனால ரூம்லயே இருக்க
முடியலயாமாம். தோலாமணிக்குப் போனப் போட்டு வர்றச் சொல்லிருக்காம். அவ்வேம் வந்தும்
இவனோட கையி காலு ஆட்டம் அடங்கல. நடுங்கிக்கிட்டெ கெடந்திருக்கு. என்னென்னவோ மாத்திரைகளெ
வேற அள்ளிப் போட்டிருக்காம். அவ்வேம் அன்னிக்கு இருந்த நெலைக்குச் செத்தேப் போயிடுவான்னுத்தாம்
நெனைச்சேம் யண்ணின்னு ஒரு நாளு வூட்டுக்கு வந்த தோலாமணி நம்மகிட்டெச் சொன்னாம்ன்னா
பாத்துக்கோயேம். அப்பிடிக் கெடந்திருக்காம் நாதாரிப் பயெ. அவனால அதெ சமாளிக்க முடியாம
ஒடனே பாக்குக்கோட்டைக்குச் சரசு யாத்தாவுக்குப் போனப் போட்டு வேற வர்ற சொல்லிருக்காம்.
அத்து கொஞ்சம் இருடா ராத்திரிக்கு மேல கெளம்பி வர்றேம்ன்னு சொன்னதெ கேட்காம, ஒடனே
கெளம்பி வர்றீயா? யில்ல நாம்ம இஞ்ஞ செத்துக் கெடக்கட்டுமான்னு ஒப்பாரி வெச்சிருக்கும்.
“சரசு ஆத்தா ன்னா பண்ணுறது? ஏது பண்ணுறதுன்னு
புரியாம ஒடனே அந்த நேரத்துக்கு ஒரு கார்ரப் பிடிச்சி நடுராத்திரியிலப் போயி அரும்பாக்கத்துல
எறங்கியிருக்கு. அத்து வாரதுக்காகவே அன்னிக்கு கேட்டு, கதவுகளத் தொறந்து போட்டுக்கிட்டு
மாடிப்படியிலயே கெடந்திருக்கானுவோ. சரசு ஆத்தா கார்லேந்து எறங்கி கேட்டத் தொறந்ததும்
அந்த எடுபட்ட பயெ பதறி அடிச்சி எழுந்து வூட்டுக்குள்ளப் போயி வுழுந்திருக்காம். சரசு
ஆத்தா, தோலாமணி எல்லாம் வூட்டுக்குள்ள ஓடுனா தலையில அடிச்சிக்கிறானாம், சொவத்துல
மோதிக்கிறானாம், தரையில படுத்துக்கிட்டு சின்ன புள்ளையாட்டம் கையையும் காலையையும்
போட்டு ஒதைச்சிக்கிறானாம். அதெ தோலாமணிச் சொல்லுறப்ப நமக்குச் சிரிப்புதாம் வந்துச்சு.
அவனும் ன்னா யண்ணி நீஞ்ஞ பாட்டுக்கு ஒரு காரியத்தெ பண்ணிப்புட்டீயே, இஞ்ஞ யண்ணன வெச்சிக்கிட்டு
நாஞ்ஞ படாதப்பாடு பட்டுப்புட்டேம்ன்னாம். யண்ணம் இவ்ளோ பயந்து நாம்ம பாத்ததே யில்லன்னாம்.
உண்மெயிலயே அன்னிக்கு ராத்திரி மெரண்டுத்தாம் போயிருக்காம். அதெயெல்லாம் நம்மகிட்டெ
சொல்லிச் சொல்லி அழுதாம்ன்னா பாத்துக்கோயேம். இந்தப் பயலுக்கு அழக் கூட தெரியுமான்னு
நாம்ம நெனைச்சேம். அதெயெல்லாம் பாத்துப் பாத்து அவ்வனெப் பாக்குறப்ப பாவமா இருந்துச்சுன்னு
நாம்ம கொஞ்சம் சரியாவுறப்போ அந்தப் பயெ பழைய நெலமைக்கு மாற ஆரம்பிச்சிம்.
“ன்னா ஒண்ணுன்னா யம்மா கூட இருந்ததால மின்னாடி
மாதிரிக்கி ரொம்ப கொடுமெயெல்லாம் யில்ல. ஆன்னா எத்தனெ நாளு யம்மா இதெப் போல நம்ம
கூடவே இருக்கும்ன்னு நெனைச்சப்போ நமக்குப் பயமாவும் நடுக்கமாவும் இருந்துச்சு. அதெயெல்லாம்
நாம்ம யம்மாகிட்டெ காட்டிக்கிடல. யம்மா கவலப்படக் கூடாதுன்னு நாம்ம அந்தக் காவாளிப்
பயலோட சந்தோஷமா இருக்குற மாதிரிக்கி நாமளும் நடிக்க ஆரம்பிச்சேம். கொஞ்ச நாள்லயே
யம்மா அதெ புரிஞ்சிக்கிட்டு. என்னத்தெ பண்ணுறதன்னு அத்துவும் கண்டும் காணாம இருந்துகிட்டு
நாகம்மா கோயிலுக்குப் போயி வேண்டிக்கிட்டெ கெடந்துச்சு. எப்படியாச்சும் ஒரு கொழந்தெ
குட்டி உருவாயிட்டா ரண்டு பேத்துக்கும் இருக்குற பிணக்கம் தீந்துப் போயிடுமுன்னு அதுவா
ஒரு நெனைப்பு நெனைச்சிக்கிட்டு வேண்டிக்கிட ஆரம்பிச்சிச்சு.
“எப்பிடி எங்களுக்குள்ளக் கொழந்தெ பொறக்கும்
சொல்லு. ராத்திரிக்கி ஆன்னா யம்மா யிருக்குறதால ரூமுக்குள்ள படுப்பானே தவுர எங்களுக்குள்ள
எந்த ஒட்டும் யில்ல, ஒறவும் யில்ல. அவ்வேம் பாட்டுக்குத் தரையில உருண்டு கெடப்பாம்.
நாம்ம பாட்டுக்குக் கட்டில்ல கெடப்பேம். அதுல செல நாள்ல மருந்துக் காய்ச்சிறேன்னு ராத்திரி
முழுக்க சமையல்கட்டுலப் போயி நின்னுக்குவாம். படுக்க வந்தாலும் என்னத்தையோ கட்டுரைய
எழுதுறேம், பொத்தகத்தப் படிக்கிறேன்னு ராத்தரி பன்னெண்டு மணி வரைக்கும் பக்கத்து அறையிலத்தாம்
உக்காந்துக் கெடப்பாம் பொட்டப் பயெ. அதுக்கு மேல வந்துப் படுத்தாம்ன்னா அவ்வேம் பாட்டுக்கு
கொறட்டைய வுட்டுக்கிட்டுத் தூங்கிட்டு இருப்பாம். நாலரை மணி ஆச்சுன்னா எழுந்து குளிச்சிட்டு
ரூமெ வுட்டுப்புட்டு அந்தாண்டப் போயிடுவாம். என்னவோ அவ்வேம் போக்குக்கு ஒரு வாழ்க்கெ
வாழ்ந்துகிட்டுக் கெடந்தேம்.
“அதுல பலநாளு ராத்திரி வூட்டுப் பக்கம்
வர்ற மாட்டாம். நானும் யம்மாவுந்தானே தனியா இருந்திருக்கேம். அதெ நெனைக்காம தரமணியில
பிந்துவோட வூட்டுக்குப் போயிட்டு வர்றேம்ன்னு கெளம்பிடுவாம். பிந்துவோட வூட்டுக்குப்
போறானா? தோலாமணியோட ரூம்ல கொஞ்சிக் கொலாவிகிட்டுப் படுக்கப் போறானான்னு யாருக்குத்
தெரியும். அப்பிடி ராத்தங்கப் போனாக்கா காலச் சாப்பாட்டுக்கும் வர்ற மாட்டாம். அஞ்ஞயே
சாப்புட்டுட்டு ஆஸ்பிட்டலு போயிடுறேம்ன்னு சொல்லுவாம். யில்லாத கூத்தையெல்லாம் அடிச்சிட்டுக்
கெடந்தாம்.
“திடீரு திடீருன்னு சில நாள்ல நம்ம மேல
பாசம் வந்துப்புடும். அத்து எப்பிடித்தாம் வருதேன்னே தெரியாது. நம்மள அழைச்சிக்கிட்டு
யம்மாகிட்டெ சொல்லிட்டு கடைத்தெருவுக்கு அழைச்சிட்டுப் போவாம். எதாச்சும் வாங்கிக்கிடச்
சொல்லுவாம். ஏற்கனவே பத்தாயிரங் கதெயே இந்தப் பயகிட்டெ சொல்லி நாம்ம அனுபவப்பட்டது
போதாதான்னு நாம்ம ஒண்ணும் கேக்குறதுமில்லே. வாங்கிக்கிடறதுமில்லே. அவனா எதாச்சும்
வாங்கிக் கொடுத்தா வேணாங்றதுல. அந்தப் பாசம்ல்லாம் கடைத்தெருவெ வுட்டுக் கெளம்பி வூட்டுக்கு
வர்ற வரைக்குந்தாம். திரும்ப உம்முன்னு ஆரம்பிச்சிடுவாம். ஆன்னா அன்னிக்கு முழுக்க
யம்மா சந்தோஷமா இருக்கும். ஆம்பளென்னா அப்பிடி இப்பிடித்தாம் இருப்பாம். நீந்தாம்
புரிஞ்சிக்கிட்டு தகுந்தாப்புல வளைஞ்சி நெளிஞ்சிப் போவணும்ன்னு யம்மாவும் வெவரம் புரியாம
அவனுக்குத் தகுந்தாப்புல நம்மகிட்டெ அன்னிக்குப் பூரா உக்காந்து அறிவுரெ சொல்லிட்டுக்
கெடக்கும். ன்னா ஒண்ணுன்னா யம்மா இருந்ததால யிப்பிடி பேச்சுத் தொணைக்கு ஒரு ஆளு இருந்துச்சு
அவ்வளவுதாங். ஒருவேள யம்மா கூட யில்லாம யிருந்திருந்தா நிச்சயம் இந்த தடவெ கொண்டுப்
போயி வுட்டதுக்கு நீஞ்ஞ அரும்பாக்கத்துலேந்து கீழ்ப்பாக்கத்துலக் கொண்டுப் போயித்தாம்
சேக்க வேண்டிருந்திருக்கும்.
“ஒரு நாளு போறது அப்பிடியே நூறு நாளு
போறாப்புல இருக்கும்ண்ணே. நரகத்துல கூட சந்தோசமா வாழ்ந்துப்புடலாம். அந்தப் பயெ கூட
வாழவே முடியாது. எப்பிடில்லாம் குரூரமா சித்திரவதெ பண்ண முடியுமோ அப்பிடில்லாம் பண்ணுவாம்.
பத்திரிகெக்கு கட்டுரெ எழுதுறென்னு ஆம்பளைகளோட பாலியல் பிரச்சனைகளெப் பத்தி அவ்வேம்
சொல்ல நம்மள எழுதச் சொல்லுவாம். அப்பத்தாங் ஆம்பளையோட பாலியல் பெரச்சனைகள நம்மாளப்
புரிஞ்சிக்க முடியும்ன்னு நம்மகிட்டெயே சொல்லுவாம்ண்ணே. நாமளும் கண்ணு தண்ணி வெளியில
வர்றாம பாத்துக்கிட்டு அந்தப் பயெ சொல்லுறதையெல்லாம் பண்ணுறது. அப்பிடியாச்சு மனசு
மாறி ஒரு கொழந்த குட்டி உருவாயிடாதான்னு ஒரு நப்ப ஆசெத்தாம். அந்தப் பயெ ஆம்பளெயா
இருந்திருந்தா அவனோட பாலியல் பெரச்சனைக்கு ஒரு தீர்வு கெடைச்சிருக்கும். அவ்வேம்ந்தாம்
ஆம்பளையே யில்ல. எஞ்ஞப் போயி அதுக்குத் தீர்வெ கண்டுபிடிக்கிறது? அவ்வேம் பேயாம ஆபரேஷனப்
பண்ணிக்கிட்டுப் பொம்பளையாப் போயி தோலாமணியக் கட்டிக்கிட்டுச் சந்தோஷமா இருந்துக்கிட
வேண்டிய ஆளுண்ணே.
“அப்பிடியும் யில்லாம, நம்மகிட்டெ யிப்பிடியும்
இருக்க முடியாம ரொம்ப நொந்துப் போயிருப்பாம் போலருக்கு. அதே நேரத்துல சமுதாயத்துல
தன்னோட கெளரவம் கொறைஞ்சிடக் கூடாதுன்னும் ஒருநெனைப்பு அந்தப் பயலுக்கு இருக்கும்
போல. அதுக்கேத்தாப்புல ஆம்பளெயப் போல நடந்துப்பாம். ஆன்னா அவனால குடித்தனத்துல ஆம்பளையாவே
நடந்துக்க முடியல. அதெ கூட ஒரு கட்டத்துல நாம்ம பெரிசா நெனைக்க வாணாம்ங்றெ முடிவுக்குக்
கூட வந்துட்டேம். ஒரு கொழந்தையக் கூட தத்தெடுத்து வளத்துப்போங்ற நெனைப்புக் கூட வந்துச்சு.
ஆன்னா அவ்வேம் நைச்சியமா பண்ற டார்ச்சர் இருக்குப் பாரு, அதெ நெனைக்க நெனைக்கத்தாம்
வந்த ஆத்திரத்தெ கொறைச்சிக்கிட முடியல.
“திடீர்ன்னு பீரோல பாத்தா ஒரு பாவடெ கூட
இருக்காது. எங்கக் கொண்டுப் போயிப் போடுவான்னோ, என்னத்தெ பண்ணுவானோ தெரியல. அன்னிக்குப்
பூரா எப்பிடி குளிக்கிறது? குளிச்சிட்டா உடுத்திருக்குற பாவடெ காயுற வரைக்கும் என்னத்தெ
பண்ணுறதுன்னு கொழப்பமா இருக்கும். அப்புறம் பார்த்தா பொடவை ஒண்ணும் இருக்காது. யம்மா
இருக்குறதால அதோடெ பொட்டியிலேந்து அன்னிக்கு ஒண்ணுத்தெ எடுத்து உடுத்திப்பேம். எல்லாத்தையும்
வுட பீரியட்ஸ் நேரத்துல இருக்குற பேண்டிஸ்லாம் தூக்கிட்டு எங்காச்சிம் கொண்டுப் போயி
ஒளிய வெச்சிப்புடுவாம். ரொம்ப செருமமாப் போயித் தொலையும். வெளியல கெளம்புற நேரத்துல
செருப்பக் கொண்டுப் போயி எங்காச்சிம் போட்டுப்புடுவாம். செருப்பு போட்டத்தாம் ன்னா?
போடாட்டியும் ன்னான்னு அதெப் பத்தியில்லாம் கூட நாம்ம பெரிசா நெனைச்சிக்கிட மாட்டேம்.
திடீர்ன்னுப் பாத்தின்னா பீரோல்ல பொடவயா வாங்கியாந்து நெரப்புவாம். பாவாடையாக் கொண்டாந்து
வைப்பாம். அதெ எப்போ வைப்பாம்? எப்போ தூக்குவாம்ன்னு ஒண்ணுமே புரியாது. நமக்கு அப்பிடியே
மண்டக் காய்ச்சலா பைத்தியம் பிடிக்குறாப்புலத்தாம் இருக்கும்.
“சமைக்கக் சொல்லிட்டுச் சாப்புட வர்றாம
இருக்குறது? சமயத்துல சமைக்கவும் சொல்லிப்புட்டு, வேணுக்குமின்னே எல்லாத்துக்கும்
ஓட்டல்ல பார்சல் சாப்பாட்ட வாங்கியாந்து அதெ சாப்புடுங்கன்னு சொல்லுறது, வீணாப் போன
பால் பாக்கெட்டெ தேடிக் கண்டுபிடிச்சி வாங்கியாந்து கொடுத்துப்புட்டு, நாம்ம சுத்தப்பத்தமில்லாம
இருக்குறதாலத்தாம் பாலு திரிஞ்சிப் போயிடுதுன்னு கதெ கட்டி வுடுறது, தோசெ மாவு வாங்கியாறேன்னு
புளிச்ச மாவே வாங்கியாறானோ யில்ல ரண்டு மூணு நாளைக்கு மின்னாடியே வாங்கி வெச்சி புளிக்க
வெச்சி அதெ கொண்டாரானோன்னு தெரியாது. யம்மாவுக்கும் இவ்வேம் பண்ணுற அடாவடியெல்லாம்
ஓரஞ்சாரமா புரிய ஆரம்பிச்சிது. இந்தப் பயெ கூட நாம்ம எப்பிடிக் குப்பெ கொட்டப் போறம்ன்னு
நெனைச்சிட்டு இருந்தப்பத்தாம் நீயி போனு அடிச்சிக் கெளம்பி வர்றச் சொன்னே! இத்தாம்ண்ணே
நடந்தது, நாம்ம நொந்தது எல்லாம்!”ன்னு ஒரு வழியா அது வரைக்கும் நடந்து முடிஞ்சதெ சொல்லி
முடிச்சா செய்யு.
*****
No comments:
Post a Comment