11 Oct 2020

கடவுளும் சாத்தானும் கூடிகிட்டுச் செய்த மனிதன்!

கடவுளும் சாத்தானும் கூடிகிட்டுச் செய்த மனிதன்!

செய்யு - 591

            “பொழுது விடிஞ்சி ஆறு மணிக்கு மேலத்தாம் அவ்வேம் வந்தாம். போயிக் கேட்டத் தொறந்து வுட்டு உள்ளார வந்தேம். அன்னிக்கு ரா முழுக்க நாம்ம தூங்கல. அழுது அழுது கண்ணு வீங்குனதுதாம் மிச்சம். சாப்பாடும் யில்ல. அவ்வேம் உள்ள வந்ததும் அவ்வேம் உருவம் கொஞ்சம் கொஞ்சமா மறையுறாப்புல இருந்துச்சு. அவ்வுளதாங் தெரியும். நமக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. மயக்கம் அடிக்கி வுழுந்துட்டேம். அந்தப் பயெ மெரண்டுப் போயிருப்பாம் போல. ஒடனே மொகத்துல தண்ணிய அடிச்சி எழுப்புனாம். சமையக்கட்டுக்கு ஓடிப் போயி டீத்தூளப் போட்டு வரத்தண்ணியப் போட்டுக் கொண்டாந்தாம். அதெ குடிச்சப் பெறவுதாம் ஏதோ கொஞ்சம் புரிஞ்சாப்புல இருந்துச்சு. ஒடம்புல சித்தெ தெம்பு வந்தாப்புல இருந்துச்சு. அந்த தெம்பு ஏம்டா வந்துச்சுங்றது போல ஒடனே சண்டெய வைக்க ஆரம்பிச்சிட்டாம். நீயி எப்பிடிச் சாப்புடாம கெடந்தேன்னு மண்டையிலப் போட்டு நொங்கு நொங்கன்னு குத்துறாம்ண்ணே. கன்னத்துலப் போட்டு பளார் பளார்ன்னு அறையுறாம்ண்ணே. ஒடம்ப வளைச்சி முதுகுலயே மொழுக் மொழுக்குன்னு குத்துறாம்ண்ணே. யாராச்சும் மயக்கமடிச்சி வுழுந்தப் பொண்ண அப்படிப் போட்டு அடிப்பாங்களா? நீயி அடிப்பியாண்ணே? அவ்வேம் ஒரு டாக்கடர்தான்னேன்னே? அப்பிடி அடிக்கலாமா? அவ்வேம் அடிச்ச அடியத் தாங்க முடியாம மறுக்கா மயக்கமடிச்சி வுழுந்துப்புட்டேம்.

            “திரும்பவும் தண்ணியத் தெளிச்சித் தெளிய வெச்சி எழுப்பி அடிக்குறாம்ண்ணே. ஒரே சித்திரவதையாப் போச்சுதுண்ணே. ஒடம்பு கிறுகிறுண்ணு ஆயிடுச்சு. இந்தப் பயெ வந்ததுக்கு வாராமலே இருந்திருக்கலாமேன்னு நெனைக்குறாப்புல ஆயிடுச்சுண்ணே. ராத்திரி தனிமையா இருந்தது கூட யிப்போ பெரிசா தெரியல. இந்த கொலகாரப் பாவி ஏம் வந்தாம்ன்னு ஆச்சுது. நாம்ம சொல்லிட்டேம், இனுமே அடிச்சேன்னா செத்துப் போயிடுவேம், கொல பண்ண கேஸ்ல உள்ள போயிடுவேன்னு. அதெக் கேட்டுட்டு அவ்வேம் சிரிச்சாம் பாரு ஒரு சிரிப்பு. நமக்கு மனசெ வுட்டுப் போயிடுச்சு. அவ்வேம் டாக்கடர்ங்றதால செத்தாலும் அதெ எப்பிடி மாட்டிக்கிடாம இயற்கையான சாவுங்றதெ காட்ட முடியுங்றாம். என்னவோ ஊசி போடுற சிரிஞ்ச வெச்சி ஒடம்புல குத்தி வெறுங்காத்தெ இழுத்தா போதுமாமே, மாரடைப்பு வந்தாப்புல செத்துப் போயிடுவாங்கன்னு சொல்லி அந்த மாதிரிக்கிப் பண்ணிப்புடுவேம்ன்னு மெரட்டுனாம். சிலிண்டர்ர வெடிக்க வைக்குறதுக்கு ரொம்ப நேரமாவதுன்னு நேராவே சொன்னாம்ண்ணே.

            “நமக்கு யிப்பிடி ஒரு சோதனையா வந்துப் போவும்ன்னு நெனைச்சிக்கிட்டெ ஓரமா ஒடுங்கிப் போயி உக்காந்தேம். என்ன நெனைச்சானோ அந்தப் படுபாவிப் பயெ ஒடனே ஓட்டலுக்கு ஓடிப் போயி நாலு இட்டிலியக் கட்டியாந்தாம். அதெ ‍கூட கையில கொடுக்கல. நமக்கு மின்னாடி தூக்கிப் போட்டுட்டு, அவ்வேம் பாட்டுக்கு அவனுக்கு வாங்கியாந்த இட்டிலியப் பிரிச்சி வெச்சித் தின்னாம். நம்மளச் சாப்புடுன்னு கூட ஒரு வார்த்தெ சொல்லல. அப்பிடிச் சாப்புட்டு என்னத்தெ உசுர்ர வெச்சிக்கிட்டுன்னு நாமளும் அதெ சாப்புடல. சாப்புட்டு முடிச்சிட்டு அவ்வேம் பாட்டுக்குப் போயி படுத்துத் தூங்குனாம். தூங்கி எழும்பி அவ்வேம் பாட்டுக்கு ஒரு குளியலப் போட்டுக்கிட்டுக் கெளம்பிப் போயிட்டே இருந்தாம். நாம்ம அப்பிடியே குத்த வெச்ச செலையாட்டம் உக்காந்திருக்கிறதெப் பத்தியோ, மின்னாடி பிரிக்காம கெடக்கற இட்டிலி பொட்டணத்தைப் பத்தியோ அவ்வேம் பெரிசா எதையும் கண்டுக்கிடல.

            “அந்தப் பயெ போனப் பெறவு நமக்கும் அந்த இட்டிலியச் சாப்புடப் பிடிக்கல. ஆன்னா பசியாத்தாம் இருந்துச்சு. வவுறு நாளு பூரா சாப்புடாததால பகபகன்னு எரிஞ்சிச்சு. ஒடம்பெல்லாம் வெடவெடன்னு நடுங்குனுச்சு. எழுந்துப் போயி கொஞ்சம் அரிசியப் போட்டு கஞ்சி வெச்சிக் குடிச்சப் பிற்பாடுதாங் ஒடம்புல கொஞ்சம் சீவன் வந்ததெப் போல இருந்துச்சு. அன்னியோட வூட்டுல சமைக்கிறதுல்லாம் நின்னுப் போச்சு. நாம்ம சமைச்சி வெச்சாலும் அதெ சாப்புட மாட்டாம். வேணும்ன்னுட்டே கடையில வாங்கியாந்து வெச்சித் தின்னுவாம். நமக்கும் ஒத்த ஆளுக்கு என்னத்தெப் பெரிசா சமைக்குறதுன்னு ஆர்வமில்லாமப் போயிடுச்சு. நெனைச்சா கொஞ்சம் அரிசியப் போட்டு கஞ்சி வெச்சிக் குடிக்கிறதோட செரி. யில்லன்னா டீத்தூளப் போட்டு வரத்தண்ணியா வெச்சிக் குடிக்குறதுதாங். யப்பதாங் ரண்டு மாசத்துக்குத் தேவையான மளிகெ சாமாஞ் செட்டுகள வாங்கியாந்துப் போட்டிருந்துச்சே. அதுல காலியானது டீத்தூளும், சீனியும், கொஞ்சம் அரிசியுந் மட்டுந்தாம். மித்ததெல்லாம் காலியாவாம அப்பிடியே கெடந்துச்சு. இந்தப் பெய பேருக்குக் கூட கொஞ்சம் கறிகாயே வாங்கியாறதில்ல.

            “நாமளா கொஞ்சம் வெளியிலப் போயி பாலு பாக்கெட்டு, கறிகாயின்னு வாங்கியாந்தாலும் இழுத்துப் போட்டு அடிக்க ஆரம்பிச்சாம்ண்ணே. யார்ரப் போயி ரூட்டு வுடப் போறேடி தேவிடியான்னு வாயிக்கு வந்த படியெல்லாம் பேச ஆரம்பிச்சாம். அப்பிடி என்னத்துக்குப் பேச்ச வாங்கிட்டுப் போயி சாமான வாங்கித் தின்னு ஒடம்ப வளக்கணும்ன்னு வூட்டுல கெடக்குறதெப் போட்டு எதோ சாப்புட்டுக்கிறது. அதுவும் அந்த வரத்தண்ணியக் குடிச்சா போதும்ன்னே பசியே எடுக்காது. பக்கத்து வூட்டுக்கார்ரேம், கீழ் வூட்டுக்கார்ரேம்ன்னு ஒருத்தெம் பக்கத்துல ன்னா நடக்குதுன்னு வந்து எட்டிப் பாக்க மாட்டானுவேண்ணே. என்னவோ அவனோளுக்கு நேரமே யில்லாததப் போல பரபரன்னு வூட்ட வுட்டு ஓடுவானுவோ. பரபரன்னு வூட்டுல வந்து பூந்துப்பானுவோ.

            “நாளாவ நாளாவ நமக்கு நெசமாலுமே பைத்தியம் பிடிச்சிப் போயிடுமோன்னு பயமே வந்துடுச்சுண்ணே. என்னத்தெ பண்ணுறது? அந்தப் பயெ வந்தாலும் அடிக்கிறாம், வாராமலே இருந்தாலும் தேவலாமுன்னு நெனைச்சாலும் ராத்திரி வந்தாக்கா ரொம்ப கஷ்டமா இருக்கும்ண்ணே. தரமணியில இருக்குல்லா அவ்வேம் தங்காச்சி பிந்து. அத்து வூட்டுக்குப் போறதாச் சொல்லிட்டு ரா வூடு தங்க மாட்டேம்ண்ணே! நாம்ம சின்னப் பொண்ணுதானேன்னே. எத்தனெ நாளு ராத்திரி தனியா ஒத்த ஆளா அந்த வூட்டுல இருக்க முடியும் சொல்லுண்ணே. ஒவ்வொரு ராத்திரியும் நமக்குப் பயங்கரமா ஆவ ஆரம்பிச்சிது. சம்பந்தம் சம்பந்தம் யில்லாம நெனைப்பு வர்ற ஆரம்பிச்சது. புத்தி பெசகுறாப்புல, பேயி பிடிச்சி அலையுறாப்புல அதெப் பத்தி யிப்ப நெனைச்சாலும் பகீர் பகீர்ங்குது.

            “இதுல அந்தப் பயெ நெசமாலுமே பிந்துவோட வூட்டுக்குத்தாம் போயிருக்காம்ன்னா? யில்ல தோலாமணியோட ரூமுக்குப் போயிப் படுத்துக் கெடக்காம்ன்னான்னு வேற யோஜனெ பலவெதமாப் போவும். செரித்தாம் தங்காச்சி வூட்டுக்குப் போறதுதாம் போறாம். நம்மளயும் அழைச்சிட்டுப் போனாக்கா அங்க கொஞ்சம் பேசி மனசாச்சும் கொஞ்சம் தெளிஞ்சாப்புல இருக்கும்ன்னு நெனைப்புத் தட்டும். அதெயும் வெக்கங்கெட்டுப் போயி ஒரு நாளு கேட்டுப்புட்டேம். ஒஞ்ஞ தங்காச்சி வூட்டுக்கு ஒரு நாளு அழைச்சிட்டுப் போஞ்ஞன்னு. சொவத்தோட வெச்சி நம்மள ஒரு இறுக்கு இறுக்குனாம் பாரு. ஏம்டா கேட்டோம்ன்னு ஆச்சு. ஏம்டி வருஷத் தேவிடியா நீயி கெட்டதோட வந்து எந் தங்காச்சியையும் கெடுக்கப் பாக்குதீயான்னாம்.

            “நாம்ம யப்படி ன்னா கெட்டுப் போயிட்டேம்ன்னு கேட்டேம் பாரு. ஒடனே அவ்வேம் செல்லுல நம்மள எடுத்த போட்டோவ வரிசெயாக் காட்டி இதெல்லாம் யாருகிட்டெ காட்டி எடுத்துட்ட போட்டாம்ன்னாம் பாரு. அன்னிக்குத்தானே நாம்ம அவ்வேம் மயித்தப் பிடிச்சி குலுக்கி அப்பிடியே கீழே தள்ளி வுட்டேம். அவ்வேம் மயித்தப் பிடிச்சதுல நாலு மசுரு நம்ம கையோட வந்துச்சு. வெளக்கமாத்தெ எடுத்து நாலு சாத்துச் சாத்துனேம். அம்மாம் கோவம்ண்ணே நமக்கு. அன்னியிலேந்துதாங் அவ்வேம் கையி கொஞ்சம் ஓஞ்சது. கொஞ்சம் கொஞ்சமா பேச்சக் கொறைச்சிட்டுத் தள்ளிப் போவ ஆரம்பிச்சாம். சுத்தமாவே யாரோடயும் எந்தப் பேச்சும் யில்லன்னா எப்பிடிண்ணே இருக்கும் சொல்லு? பசியே சுத்தமா கெடையாது! நம்ம நெலமெயெ நெனைச்சிப் பாரேண்ணே! சத்தியமா சொல்றேம்ண்ணே நரகம்ன்னு ஒண்ணு யிருந்தா அத்து நாம்ம கலியாணத்துக்குப் பெறவு வாழ்ந்த வாழ்க்கெதாம்ண்ணே. 

            “இந்தச் சங்கதி எதையும் நாம்ம பாக்குக்கோட்டையில இருக்குற தாத்தாவுக்கோ, யாத்தாவுக்கோ யாருட்டெயும் சொல்லல. அவுங்களுக்கும் இவனெப் பத்தி அப்பிடி யிப்பிடின்னு ஏதோ கொஞ்சம் தெரிஞ்சிருக்குந்தாம் போல. நமக்குச் செரியா புரியல. யம்மாகிட்டெதாங் ண்ணே நாம்ம அப்போல்லாம் போன்ல சாயுங்காலத்துக்கு மேல அந்த படுபாவிப் பயெ கிளினிக்குக்குப் போயித் தொலைஞ்ச பின்னாடி பேசுவேம். பேசுவேம்ன்னா பேசிட்டே இருப்பேம். ன்னாடி யிப்பிடி நுணுக்கி நுணுக்கி எதெ எதையோ சம்பந்தம் யில்லாமப் பேசிட்டு இருக்கீயோன்னு யம்மாவே சொல்லும். நமக்கு வேற பயமா இருக்கும். கலியாணத்தக் கட்டி வுட்டு நாம்ம இஞ்ஞ சந்தோஷமா யில்லங்றது அதுக்குத் தெரிஞ்சிப் போயி கவலேப் பட்டுடுமோன்னு.

            “ஆன்னா ஒண்ணுண்ணே! யம்மாகிட்டெ மட்டும் போன்ல நாம்ம பேயாம கெடந்திருந்தேன்னா சத்தியமா சொல்றேம் நமக்குப் பைத்தியந்தாம் பிடிச்சிப் போயிருக்கும். நீஞ்ஞ நம்மள அஞ்ஞயிருந்து பைத்தியமாத்தாம் அழைச்சி வர்றாப்புல இருந்திருக்கும். அவ்வேம் திட்டங் கூட அப்பிடித்தாம் இருந்திருக்கும் போல. நம்மள பைத்தியமாக்கி வூட்டுல கொண்டாந்து வுட்டுப்புடுறதுன்னு. அப்பிடி வுட்டுப்புட்டா நகெ நட்டு, காசிப் பணம்லாம் அவ்வேம் கையிக்கு வந்துப்புடும். அவ்வேம் நெனைச்ச மாதிரிக்கி எந்த ஆம்பளையோடாச்சும் குடித்தனத்தெ பண்ணிட்டுக் கெடக்கலாம் பாரு.

            “இப்பிடியே காலம் போனா நம்ம நெலமெ என்னாவுறதுன்னு நாம்ம யோஜிச்சுட்டுக் கெடந்தப்பத்தாங் பாக்குக்கோட்டையிலேந்து யாத்தா வந்துச்சு. நம்மளப் பாத்துட்டு ஒடம்பப் பாத்துட்டு அதுவும் கண்ணுத்தண்ணி வுட்டுச்சு. ஏம்டி யிப்படி இருக்கேன்னு கேட்டுச்சு. யப்பவாச்சும் நாம்ம உண்மையச் சொல்லித் தொலைச்சிருக்கணும். கலியாணம் ஆன புதுசுலயே கொறையச் சொல்லுறாளேன்னு நெனைச்சிப்பாங்கன்னு நெனைச்சிக்கிட்டு யம்மா, யப்பாவப் பாக்க முடியாத ஏக்கந்தாம்ன்னு நாமளா வாயில வந்ததெ அடிச்சி வுட்டேம். அதுதாங் உண்மென்னு நெனைச்சிக்கிட்டு சரசு யாத்தா அவ்வேம் பாலாமணிகிட்டெ சொல்லிட்டு நம்மள பாக்குக்கோட்டைக்கு அழைச்சாந்தது. அஞ்ஞ வந்துத்தானே நாம்ம கொஞ்சம் நிம்மதியா சாப்புட்டது.

            “கெளம்புறப்போ ரொம்ப அக்கறையா அந்தப் பயெ மருந்து மாத்திரைகள வேற ஒரு பெரிய கம்புப் பையிலப் போட்டுக் கொடுத்தாம் பாரு. இதுல அவ்வேம் அஞ்ஞ இருந்த வரைக்கும் மருந்து மாத்திரையக் கொடுத்துப் படுத்துனப் பாடு இருக்கே. நாம்ம சாப்புட மாட்டேம்ன்னு நெனைச்சி வாயில போட்டு தண்ணிய ஊத்தி வுடுவாம்ண்ணே வலுக்கட்டாயமா. ஒண்ணுஞ் சாப்புடாம வெறும் வயித்துல கெடக்குறாளே அதுக்குச் சோத்தச் சாப்புட வைக்கணும்ங்ற அறிவே யில்லாத பயலுண்ணே அவ்வேம். சித்திரவதையும் பண்ணி அதுக்கு மருந்தும் கொடுத்த ஒரு டாக்கடர்ரு அவனாத்தாம் இருப்பாம்.

            “சரசு ஆத்தாவும் நம்மளப் புரிஞ்சிக்கிட்டாப்புல வூட்டுல கொஞ்ச நாளு கொண்டுப் போயி வுட்டாத்தாம் சரிபட்டு வரும்ன்னு தாத்தாகிட்டெ கலந்துகிட்டு இஞ்ஞ கொண்டாந்து வுட்டுச்சு. அது வரைக்கும் அத்து நல்ல மனுஷியாத்தாம் இருந்துச்சு. அதுகிட்டெயும் போனப் போட்டு ஒரத்தநாட்டு போதும்பொண்ணோட தங்காச்சி விசயமா பத்தாயிரம் பணத்தெ அனுப்புன வெசயத்தச் சொல்லி, நாம்மத்தாம் மல்லுகட்டி அதெ கொடுக்கச் சொன்னதா ஒரு பொரட்டக் கெளப்பி வுட்டு கெட்ட மனுஷியா மாத்துனாம். அத்தோட வுடாம ஈஸ்வரி, சுந்தரி, பிந்து, குயிலின்னு ஒருத்தரு பாக்கியில்லாம எல்லாத்துக்கிட்டெயும் இந்தப் பத்தாயிரம் வெசயத்தப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கெட்டப் பேர்ர உருவாக்குனாம். எஞ்ஞ நாம்ம அஞ்ஞ நடந்ததெப் பத்தி எதையாச்சிம் சொல்லிப்புடுவேம்ங்ற பயம் போலருக்கு. அப்பிடிச் சொன்னாலும் இந்தப் பத்தாயிரம் வெசயத்தத்தாம் தெச திருப்ப நாம்ம கதெ கட்டி வுடுறதா திருப்பி வுட்டுப்புடலாமுன்னு நெனைச்சிருப்பாம் போலருக்கு.

            “ஈஸ்வரிக்கோ, சுந்தரிக்கோ, யில்ல பிந்துக்கோ, குயிலிக்கோ போனப் போட்டா‍ போதும் பொட்டச்சிக பனெ மட்டையில மூத்திரத்தெ அடிக்கிறாப்புல பேசிட்டே இருப்பாம்ண்ணே. அவ்வேம் போன்ல எடுத்துப் பாத்தீன்னா அதுககிட்டெ முக்கா மணி நேரம், ஒரு மணி நேரம், ரண்டு மணி நேரம்ன்னு பேசிருப்பாம். செரியான பொட்டப் பயெ. பேர்ரப் பாரு பாலாமணின்னு. ஆம்பளெப் பேரா? பொம்பளப் பேரா? ரண்டும் கலந்துகட்டுன பேரான்னு புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு ஒரு பேரு!

            “குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்குறாப்புல அப்பைக்கப்போ போனப் போட்டு நல்லவேம் மாதிரியும் பேசுவாம். காலையில நல்லவனா பேசுனாம்ன்னா சாயுங்காலம் பேசுறப்ப வில்லனா மாறிடுவாம் பரதேசிப் பயெ. ஒரு மனுஷனுக்குள்ள மனுசனும் இருக்காம், மிருகமும் இருக்கும்ன்னா அத்து அந்தப் பயெதாம். நல்லவனா நடந்துக்கிறான்னே நெனைச்சி முடிக்கிறதுக்குள்ளார கெட்டவனா நடந்துப்பாம். கெட்டவனா நடக்குறானேன்னே நெனைச்சி முடிக்கிறதுக்குள்ளார நல்லவனா நடந்துப்பாம். அவனெப் பத்தி நெனைக்குறதெ பாவம்ன்னு நெனைக்குற அளவுக்கு வெத வெதமா நடந்துப்பாம். இந்த ஒலகத்துல கடவுளு எப்பிடி இப்பிடி ஒரு மனுஷப் பொறப்பு உருவாக்குனாருன்னு நெனைச்சி மாஞ்சி மாஞ்சிப் போவும்ண்ணே நமக்கு. அவ்வேம் நிச்சயம் கடவுளு மட்டும் உருவாக்குன படைப்பா இருக்க மாட்டாம். சாமியும் சைத்தானும் கூட்டணிப் போட்டுகிட்டு கை கோத்து உருவாக்குன படைப்பாப்பாம் இருப்பாம்.

            “ஒரு குடிக்காரப் பயன்னா குடிச்சாம் அதால அடிக்கிறாம்ன்னு நெனைச்சிக்கிடலாம். கஞ்சா, போயிலன்னு போதெ பழக்கம் இருந்தாலும் கூட அதுல புத்திக் கெட்டுப் போயி நடந்துக்கிறாம்ன்னு புரிஞ்சிக்கிடலாம். இவ்வேங்கிட்டெ குடியும் கெடையாது, போதெப் பழக்கமும் கெடையாது. ஆன்னா குடிகாரனே வுட மோசமா நடந்துப்பாம். கஞ்சா அடிக்கிறவனெ வுட கொடூரமா நடந்துப்பாம். அவனுக்குப் பைத்தியமா? உள்ளுக்குள்ள சைக்கோவா? மனநலம் பாதிச்சப் பயலா?ன்னு நம்மாள சத்தியமா புரிஞ்சிக்கிடவே முடியல. அவ்வேன கலியாணமே பண்ணிருக்கக் கூடாதுன்னே. அவ்வேம் கலியாணம் பண்ணுறதுக்கான ஆளு இல்லன்னு நிச்சயம் பாக்குக்கோட்டெ தாத்தாவுக்கும், தஞ்சாவூரு லாலு மாமாவுக்கும், வடவாதி முருகு மாமாவுக்கும் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சிருக்காம இருக்காது. அந்த உண்மெய மறைச்சித்தாம் நம்மக் குடும்பத்தெ பிடிச்சி, செரியான இளிச்சவாயம் குடும்பம்ன்னு கட்டி வெச்சிருக்கானுவோன்னு நெனைக்கிறேம். பண்ணதெப் பண்ணிப்புட்டானுவோ. எம் வாழ்க்கெல்லா போயிடுச்சு. யிப்பிடி நடுச்சந்தியில நிப்பாட்டிப் புட்டானுவோளே படுபாவிப் பயலுவோ!...” செய்யு சொல்ல சொல்ல விகடுவுக்குக் கண்ணு தண்ணியா கரைஞ்சு ஊத்துறாப்புல இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...