10 Oct 2020

பகலுல ஆம்பளெ! ராவெல்லாம் பொம்பளெ!

பகலுல ஆம்பளெ! ராவெல்லாம் பொம்பளெ!

செய்யு - 590

            “அந்த நேரந்தாம் ஒரத்தநாட்டுலேந்து போதும்‍பொண்ணு போனு அடிச்சிருந்துச்சு, தங்காச்சிக்கு நர்ஸூ படிப்புக்குக் கட்ட பணமில்லாம தங்காச்சிய காலேஜூலேந்து அனுப்பி வுட்டுப்புட்டதா. பத்தாயிரம் யிருந்தா போதும்ன்னு சொன்னுச்சு. ஊருல கேக்க வழியில்லாம எஞ்ஞப் பாத்தாலும் கடனா இருக்குறதா பொலம்புனுச்சு. நமக்கு அத்துச் சொல்றதெ கேக்கப் பாவமா இருந்துச்சு. நாம்ம எதாச்சும் பண்ண முடியுமான்னு பாக்குறேம்ன்னு சொன்னேம். அவ்வேம் கோயம்புத்தூருப் போற குஷி மூடுல இருந்தாம். இப்பிடியே கொண்டு போயி கொஞ்சம் கொஞ்சமா அவனோட மூடெ மாத்திப்புடலாங்ற நம்பிக்கையில நாமளும் யிருந்தேமா. போதும்பொண்ணோட தங்காச்சிய விசயத்தெ சொல்லிப் பாப்பேம்ன்னு வாயெடுத்தெம் பாரு.

            “கட்டாயம் இந்த ஒதவியப் பண்ணியாவணும்ன்ட்டாம் அந்த எடுபட்ட பயெ. நாம்ம இதெ எதிர்பாக்கல. நாம்ம அவ்வேம் பண்ண ஒவ்வொண்ணுக்கும் எதெ வாணாலும் பண்ணித் தொலைச்சுக்கோன்னு வுட்டதுல அவனும் பதிலுக்கு நாம்ம விருப்பப்பட்டதெ எதாச்சும் செய்யணும்ன்னு நின்னாம் போலருக்கு. நாம்ம மட்டும் சொல்லிருந்தா அப்பவே பம்பாயிக்குப் போயி ஆபரேஷனப் பண்ணி பொம்பளையா வாடான்னு சொல்லிருந்தாலும் வந்திருப்பாம். அப்பிடி ஒரு பித்தேறி நின்னாம். ஒடனே பாங்கி அக்கெளண்ட்டு நம்பர்ரு வாங்கு, பத்தாயிரத்து அனுப்பிப்பிட்டுத்தாம் மறுவேல பாக்கணும்ன்னு நின்னு ஆஸ்பிட்டலுக்குக் கூட போவாம பணத்தை டிரான்ஸ்பர் பண்ணிட்டு வந்து நின்னாம். அப்பிடி அவ்வேம் பண்ணப்போ நமக்கும் கொஞ்சம் பெருமையாத்தாம் இருந்துச்சுண்ணே, ஏழை பாழையோட படிக்குறதுக்குல்லாம் ஒதவி பண்ணுறானேன்னு. நல்ல மனசுதாம், நெறைய படிச்சிப் படிச்சிப் புத்திக் கொஞ்சம் பெசவி போயிடுச்சுன்னு நெனைச்சுக்கிட்டேம். நாம்ம கொஞ்சம் கரிசனமா நடந்துகிட்டா பெசவிப் போனதையும் காலப்போக்குல சரிபண்ணிப்புடலாம்ங்ற மாதிரிக்கிப் புரிஞ்சிக்கிட்டெம்.

            “அன்னிக்கு ராத்திரிதாம் கோயம்புத்தூரு கெளம்புதேம். ஏர்போர்ட்டுக்குக் அழைச்சிட்டுப் போனாம். அதெப் பாக்கப் பாக்க பிரமாண்டமா இருந்துச்சு. ஏரோபிளான நேர்ல கண்ணால பாத்தப்போ அப்பிடியே அசந்துப் போயிட்டேம்.  அதுவரைக்கும் ஏரோப்ளான்ன வானத்துல பறந்தப்போ, டிவியில, படத்துல பாத்ததுதானே. நமக்காக நம்ம புருஷங்கார்ரேன் இம்மாம் செய்யுறானே அவ்வேம் கேக்குறதையெல்லாம் செஞ்சி அவனெ சந்தோஷமா வெச்சிக்கிறதுதாம் நம்மளோட வாழ்க்கையோட நோக்கம்ன்னு அந்த நொடியில முடிவெ பண்ணிக்கிட்டேம்.

            “கோயம்புத்தூருக்கு ஏரோப்ளான்ல போயி எறங்குனப்போ இந்த வாழ்க்கையில எதையோ சாதிக்க முடியாத ஒண்ணுத்தெ சாதிச்சதுப் போல இருந்துச்சு. நாம்ம ரொம்ப சந்தோஷமா இருக்குறதெ அவ்வேம் புரிஞ்சிக்கிட்டாம். அந்தச் சந்தோஷத்‍தெ கொறைய வுடாம டிராவல்ஸ்ல கார்ர எடுத்துக்கிட்டு காடு, மலென்னு கண்ட எடத்தையும் சுத்திக் காட்டுனாம். கோயம்புத்தூர்லயே ஒரு ஓட்டல்ல ரூம்ம புக் பண்ணிருந்தாம். அஞ்சு நட்சத்திர ஓட்டலா இருக்கும்ன்னு நெனைக்கேம். ரொம்ப வசதியா இருந்துச்சு. இவனெ இவ்வேம் வழியில போயி நிமுத்துறதுதாங்ன்னு செரி அவ்வேம் போக்குலயே வுட்டுப் பிடிச்சேம். வெளியில போறப்பத்தாம் ஆம்பளையா இருப்பாம். ஓட்டல்ல ரூமுக்கு வந்தா போதும் பொட்டையா மாறிடுவாம். அதுல அவனுக்கு அப்பிடியொரு சந்தோஷம்.

            “அவனுக்கு இருந்தப் பழக்கத்தோட இன்னொரு புதுப்பழக்கம் வந்து சேந்துச்சு. நம்மள கண்ணாபின்னான்னு செல்லுல போட்டோ பிடிக்க ஆரம்பிச்சாம். வெளியல சுத்திப் பாக்குற எடம்ன்னு போட்டோ பிடிக்க ஆரம்பிச்சி ஓட்டலு ரூமுக்குள்ளயம் பிடிக்க ஆரம்பிச்சாம். இன்ன நேரமின்னு கணக்கு வழக்கமா பைத்தியம் பிடிச்சப் பயெ மாதிரி அவ்வேம் பாட்டுக்குப் பிடிச்சித் தள்ள ஆரம்பிச்சாம். செரி அவ்வேம் பொண்டாட்டித்தானே நாம்ம. அவ்வேம் போன்லத்தானே பிடிக்காம்ன்னு நெனைச்சி ஒண்ணும் சொல்லாம இருந்துட்டேம். அரையும் கொறையுமா பிடிச்சிருந்த போட்டோக்க வேற அதுல நெறைய இருந்துச்சு. அதுல வேற அவனுக்குக் குஷி ஏறிப் போயிடுச்சு. 

            “கோயம்புத்தூருக்குப் போயி ரொம்ப சந்தோஷமாத்தாம் சென்னைக்கு ஏரோப்ளான்ல திரும்புனோம். ஆளெ அடியோட மாறிட்டாப்புலத்தாம் இருந்தாம். எந்நேரத்துக்கும் எம் பின்னாடியே குட்டிப் போட்ட பூனையப் போல சுத்திக்கிட்டுத் திரிஞ்சாம். சென்னைப் பட்டணதுக்குக் குடித்தனம் வந்த அன்னிக்கு காலம்பர ஏழு மணிக்கெல்லாம் விழுந்தடிச்சு ஆஸ்பிட்டலு ஓடுவாம் பாரு அத்து மாதிரிக்கெல்லாம் ஓடல. ஒம்போது மணி, பத்து மணின்னு நெதானமா போவ ஆரம்பிச்சாம். செல நாளு சாயுங்காலம் கிளினிக்குல்லாம் போறதில்ல. நெசமாவே குட்டிப் போட்ட பூனையப் போல வூட்டுலயே நம்மளோட அடைஞ்சிக் கெடக்க ஆரம்பிச்சாம், வூட்டுக்குள்ள பொட்டெக் குட்டியோ போடுற அசிங்கமான உடுப்புகளாப் போட்டுக்கிட்டு. செரி எப்பிடியோ வூட்டுக்குள்ள இப்பிடி நம்மள சுத்தி அடைஞ்சிக் கெடக்குற வரைக்கும் செரித்தாம்ன்னு நாமளும் வுட்டுட்டேம்.

            “எல்லாம் நல்லதாத்தாம் போயிட்டு இருந்துச்சு. ஒரு நாளு ஆஸ்பிட்டல்லேந்து கோயம்புத்தூர்ல எடுத்த போட்டோவ வாட்ஸாப்புல எம் போனுக்கு அனுப்புற வரைக்கும். அதெப் பாத்ததும் நமக்குக் குப்புன்னு வேர்த்துடுச்சு. ஒரு பத்து நிமிஷத்துக்கு ஒவ்வொரு தவாவும் ஒவ்வொரு போட்டோவா அனுப்ப ஆரம்பிச்சாம். நமக்குக் குப்புன்னுப் போயிடுச்சு. பயம் கெளம்ப ஆரம்பிச்சிடுச்சுண்ணே. தீரதா மனஉளைச்சல் உண்டாவ ஆரம்பிச்சிடுச்சு. அப்பிடியே மண்டெ கொழம்புனாப்புல உக்காந்தேம். மத்தியானம் சமைக்க வேண்டிய வேலையப் போட்டுட்டு அப்பிடியேப் போயி கட்டில்ல வுழுந்த நாம்மத்தாம். யோஜிச்சு யோஜிச்சு மண்டெயே வெடிச்சிடும் போல இருந்துச்சு. அப்படியே எப்போ தூங்குனேம்ன்னு தெரியல. நாம்ம பாட்டுக்குத் தூங்கிட்டேம். தூக்கத்துல கெட்ட கெட்ட கனவா வருது. நம்மட பொட்டோவ வச்சி அவ்வேம் நம்மள சின்னாபின்னா படுத்துறாப்புல ஒரே கனா.

            “மத்தியானம் சாப்புட வந்த அவ்வேம் பாட்டுக்கு போன அடிச்சிட்டுக் கெடந்திருக்காம். நமக்குத் தெரியல. அவ்வேம் அஞ்சாறு தவா அடிச்சப் பெற்பாடுதாங் சத்தத்துல கண்ண முழிச்சேம். அவ்சர அவ்சரமாப் போயி கேட்ட தொறந்தேம். உள்ளார அழைச்சாந்த நமக்கு இதெப் பத்தி எப்பிடிப் பேசுறதுன்னு தெரியல. அவ்வேம் நம்மள குறுகுறுன்னுப் பாத்தாம். எப்பிடிடிருக்குப் போட்டோல்லாம்ன்னாம்? கோவம்ன்னா கோவம் நமக்குத் தாங்க முடியாத கோவம். கண்ணுல்லாம் செவந்துப் போச்சு. நாம்ம சொல்லப் போற பதிலப் பாக்காமப் போயி சமையல்கட்டெப் பாத்தாம். ஒண்ணும் சமைக்காம கெடக்குறதெப் பாத்தப்போ, ரொம்ப பசியா வந்தேம், சமைக்காம கெடக்கேன்னாம். நமக்கு ஒரே தலெவலின்னு சொன்னேம்.

            “அய்யோ தலவலியான்னு அப்பிடியே துடிச்சிப் போயிட்டாம். அதெப் பாத்ததும் நமக்கு அவ்வேம் மேல எஞ்ஞயிருந்துதாங் பரிதாபம் வந்துச்சோ தெரியல. சித்தெ யிருங்க சமைச்சி முடிச்சிடுறேன்னேம். தலெவலியோட எப்பிடிச் சமைப்பேன்னு சொல்லிட்டு ஒடனே மாத்திரைய எடுத்துக் கொடுத்தாம். கொடுத்துப்புட்டு யிப்போ சமைக்க வாணாம். நாம்மப் போயி ஓட்டல்ல சாப்பாட்ட எடுத்துட்டு வர்றேம்ன்னு கெளம்பிட்டாம். அவ்வேம் அந்தாண்ட போனதும் நாம்ம இந்தாண்ட அவ்வேம் தந்த மாத்திரையே தூக்கிப் போட்டுட்டு உக்காந்தேம். என்னா வேகத்துல போனான்னோ தெரியல பத்து நிமிஷத்துல சாப்பாட்டோட வந்துநின்னாம். அப்போ ரண்டு பேரும் ஓட்டல்லேந்து எடுத்து வந்த பார்சல் சாப்பாட்டத்தாம் சாப்பிட்டேம்.

            “அன்னிக்குச் சாயுங்காலம் அவ்வேம் கிளினிக்குப் போகல. வூட்டுலயேத்தாம் இருந்தாம். நமக்கு ஒடம்பு சரியில்லன்னு அவ்வேந்தாம் தோச மாவுப் பாக்கெட்ட வாங்கியாந்து தோசெ ஊத்தி, சட்டினியெல்லாம் செஞ்சி சாப்புட வெச்சு அவனும் சாப்புட்டாம். எதையாவது பேசிப் பெரச்சனையெ பெரிசு பண்ண வாணாம்ன்னுத்தாம் நாம்ம மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டெம். ஆன்னா நமக்குள்ள ன்னா ஆனுச்சோ புரியல, ராத்திரி மறுக்கா அவ்வேம் போட்டோ அனுப்புனதெப் பத்தி எதுவும் சொல்லலன்னு சொன்னப்ப அவ்வேம் போன புடுங்கி பாக்க ஆரம்பிச்சேம். ரொம்ப மோச மோசமான போட்டோவ எடுத்திருந்தாம். அந்தப் போட்டோக்கள எல்லாத்தையும் ஒவ்வொண்ணா டெலிட் பண்ண ஆரம்பிச்சேம். அவனுக்குக் கோவம் வந்துடுச்சு. எங்கிட்டெயிருந்து போன புடுங்கப் பாத்தாம். நாம்ம போன கொடுக்காம அவ்வேங்கிட்டெயிருந்து தப்பிச்சிக்கிட்டு டெலிட் பண்ணுற வேலையில மும்மரமா யிருந்தேம். ஒடனே அவ்வேம் நம்மளோட மொபைல எடுத்து நாம்ம டெலிட் பண்ணுன போட்டோக்கள எல்லாத்தையும் நமக்கு வாட்ஸாப்புல அனுப்பிருந்தாம் பாரு, அதெ திரும்ப தன்னோட மொபைலுக்கு அனுப்ப ஆரம்பிச்சாம். அனுப்பிச்சிட்டு வில்லனப் போல சிரிச்சாம் பாரு, நமக்குக் கோவம்ன்னா கோவம். நாம்ம ஒத்தக் கேள்வித்தாம் கேட்டேம்ண்ணே! நீஞ்ஞ பொட்டச்சிப் போல உடுப்புகள உடுத்திட்டு இருக்குறதெ ஒத்த போட்டோ எடுத்து அதெ வாட்ஸாப்புல அனுப்பி வுடவான்னு.

            “அவனுக்கு வந்துச்சுப் பாரு கோவம். அந்தக் கோவத்துல நம்மளோட மொபைல அப்பிடியே தூக்கி வீசுனாம். ஓடியாந்து நம்மள ஓங்கி ஒரு அறை அறைஞ்சாம். நமக்கு அப்பிடியே பொறி கலங்குனாப்புல போயிடுச்சு. ஒடனே ‍கையில இருந்த போன பிடிச்சிட்டாம். அந்த ராத்திரி முழுக்க ரண்டு பேத்துக்கும் சண்டெ ஆரம்பிச்சிடுச்சுண்ணே. அவ்வேம் பாட்டுக்கு வாயில வந்ததெ எல்லாம் பேசுறாம். எவ்வேம் கூப்டாம்ன்னாலும் ஏரோப்ளான்னா போயிடுவீயாடீ? தேவிடியா நாயேன்னாம் பாரு. நமக்கும் கோவம் தாங்கல. நீந்தாம்டா தேவிடியான்னுட்டேம் நாம்ம. எப்பிடிடி நம்மள தேவிடியான்னு சொன்னேன்னு பிடிச்சிக்கிட்டாம். நாமளும் வுடல, நீந்தான்டா பொட்டச்சி மாதிரிக்கி உடுப்புகள உடுத்திக்கிட்டுக் கெடக்குறெ, அந்த தொலாமணியோட பொட்டச்சிப் போல படுத்துக்கிறே, கட்டிப் புடிச்சிக்கிறே, முத்தா கொடுத்துக்கிறே. எல்லாம் நமக்குத் தெரியாதுன்னு நெனைச்சிக்கிட்டீயா? எல்லாத்தையும் பாத்துட்டேன்டா தேவிடியாப் பயலேன்னேம்.

            “ஓ அதெ பாத்துப்புட்டுத்தாம் நம்மள வளைச்சுப் போடுறாப்புல நாம்ம பண்ணுறதுக்கெல்லாம் ஓக்கேன்னு சொன்னியாக்கும்ன்னாம். ஆம்மாம்டி நாம்ம பொட்டப் பயதாம். நமக்கு வேறெங்க பொண்ணு எடுத்தாலும் பெரச்சனெ ஆவும்ன்னு நமக்குத் தெரியும். அதாங் யோஜனெ பண்ணி எஞ்ஞ பொண்ண எடுத்தா பயந்துக்கிட்டு அம்மிக்கிட்டுப் போவாங்களோ அஞ்ஞப் பொண்ண எடுத்தேம். ஒங் குடும்பமே ஒரு பயந்தாங்கொள்ளி பக்குட்டிக் குடும்பம்ன்னு தெரியும். என்னத்தெ பண்ண முடியும் ஒம்மால? எதாச்சும் வெளியில சொன்னீன்னா... சொல்லுவீயா? ம்ஹூம் எப்பிடிச் சொல்லுவே? நீந்தாம் கற்பூரத்துல அணைச்சிச் சத்தியம்லா பண்ணிருக்கே. கற்பூரத்தல மட்டுமா ஒந் தலையில அடிச்சில்லா வேற சத்தியம் பண்ணிருக்கே. அப்பிடியே சொன்னாலும் நீயி கப்சா அடிக்கிறதா ஈஸியா தப்பிச்சு வந்துட்டே இருப்பேம். ன்னாடிப் புரியுதா அப்பாவிப் பொண்ணே?ன்னாம் பாரு அப்பத்தாம் நமக்கு பயம் இன்னும் அதிகமாவ ஆரம்பிச்சிது.

            “இனுமே எம்மட பக்கமே வாரதடா பொட்ட நாயேன்னேம் கோவத்துல. இனுமே நாம்ம ஏம்டி ஒம் பக்கத்துல வர்றப் போறேம்? நமக்கொண்ணும் பொட்டச்சிக மேல பெரிசா வந்ததில்லே. இனுமே நீயி நமக்குத் தேவையுமில்லே. ஒழுங்கு மருவாதியா ஒரத்தநாட்டுல ஒரு பொண்ணுக்கு பணத்தெ பத்தாயிரத்தெ வாங்கிக் கொடுத்தில்லா அதெ வாங்கிக் கொடுத்துப்புட்டு மறுவேல பாரு. இல்லன்னா வெச்சுக்கோ ஒனக்கும் அவளுக்கும் லெஸிபியன்னு சொல்லி ஊர்ர நாறடிச்சிடுவேம்ன்னாம். அதெ கேட்டதும் அப்பிடியே நமக்குத் தலையெல்லாம் கிறுகிறுன்னு சுத்துறாப்புல ஆச்சு. ‍இதென்னடா புள்ளையாரு புடிக்கப் போயி கொரங்கப் பிடிச்ச கதையா ஆச்சுன்ன அப்பத்தாம் நமக்குப் புரிஞ்சது.

            “அந்த நாளுக்கு மின்னாடி வரைக்கும்தாம் நம்மளோட சந்தோஷம். அதுக்குப் பெறவு நம்மாள சரியா சாப்புட முடியல, தூங்க முடியல. எந்நேரத்துக்கும் ஒரே கேரியா இருக்க ஆரம்பிச்சிது. இருக்குற எடம், வூடு எல்லாம் சொழலுறாப்புல ஆயிடுச்சு. நாம்மப் பாட்டுக்கு ரூமோட ஒரு மூலையில சாஞ்சிக்கிட்டு அழுவ ஆரம்பிச்சேம். அவ்வேம் பாட்டுக்கு ஹால்லப் போயி படுத்துக்கிட்டாம். அவ்வேம் பக்கத்துலப் போவவே நமக்குப் பயமா இருந்துச்சு. அழுதுகிட்டெ உக்காந்திருந்தேம். எம்மாம் நேரம் அழுதிருப்பேன்னு தெரியல. அப்பிடியே உக்காந்த வாக்குலயே தூங்கிட்டெம். காலையில நாம்ம கண்ணு முழிச்சப்போ வெளிச்சம் வந்து பொழுதெல்லாம் விடிஞ்சிருந்துச்சு. அவ்வேம் பாட்டுக்குக் குளிச்சி முடிச்சி ஆறரைக்குல்லாம் ஆஸ்பிட்டலு கெளம்புனாம். அன்னிக்குப் பூரா சாப்புட வூட்டுக்கு அவ்வேம் வரவே யில்ல. காலைச் சாப்பாட்டுக்கு வரலேன்னதும் தூக்கி வீசி செதறிக் கெடந்த போன எடுத்து ஒண்ணு சேத்துப் போன போட்டுப் பாத்தேம். நல்ல வேளையா போனு போனுது. நாம்ம போனு மேல போன அடிச்சேம். போனயே எடுக்கல. சைலண்டுல போட்டுருப்பானோ என்னவோ. மத்தியானச் சாப்பாட்டுக்கும் வரலன்ன ஒடனே திரும்ப மறுக்க மறுக்கா போன அடிச்சிட்டெ இருந்தேம். அதுக்கும் எடுக்கவும் யில்ல. நூத்து முறைக்கு மேல போன அடிச்சிருப்பேம். நமக்குப் பைத்தியமே பிடிச்சிடும் போலருந்துச்சுண்ணே. நமக்கு என்ன பண்ணுறோம்? ஏம் இப்பிடி நடந்துக்கிறேம்ன்னு ஒண்ணுமே புரியல.

            “சாயுங்காலம் ஆவ ஆவ தவிப்பு அதிகமாயிட்டெ இருந்துச்சு. பயமா வேற இருந்துச்சு. போன அடிக்க அடிக்க அப்பவும் எடுக்கல. நமக்கு ஒலகமே வெறுத்துப் போயிடுச்சு. ராத்திரிக்கி எட்டு மணி இருக்கும். அவ்வேங்கிட்டெருந்து போனு வந்துச்சு. நாம்ம எடுத்துப் பேசுனா ஆஸ்பிட்டல்லேந்து நேரா கிளினிக்குப் போயிட்டதா சொன்னாம். அன்னிக்கு ராத்திரிக்கு ஜெயில்ல கைதியோளுக்கு என்னவோ கெளன்சிலிங்க் கொடுக்கப் போறதாவும் மறுநாளுத்தாம் வருவேம்ன்னாம். வூட்டெப் பூட்டிக்கிட்டு சூதானமா உள்ளுக்குள்ள இருன்னாம். அன்னிக்குப் பூரா நாம்ம சாப்புடவே ல்லண்ணா. அவ்வேம் மட்டும் ஓட்டல்ல சாப்புட்டுக் கெடந்தாம். பச்சத் தண்ணி கூட நம்ம பல்லுல படலண்ணா. நமக்கு யாருக்குச் சொல்றது? யாருட்டெ போன் பண்ணி பேசுறதுன்னே புரியல. யாருக்காச்சும் போன் பண்ணிச் சொல்லி அவுக வந்து கேட்டு, அதெ வெச்சி வேற இவ்வேம் சந்தேகப்பட்டு எதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணுவானோன்னு பயமா இருந்துச்சுண்ணே.

            “அந்த ராத்திரி கதவுகளச் சாத்திட்டு வூட்டுக்குள்ள நாம்ம இருந்தப்போ நாம்ம என்னவோ தப்பு பண்ணிட்டு ஜெயில்ல இருந்தாப்புல இருந்துச்சு. ஆம்மா நாம்ம தப்புத்தாம் பண்ணிட்டேம். அந்தப் பயெ தாலி கட்டுறப்போ தலைய நீட்டுனேம்லா. அத்து தப்புத்தானே. அந்தத் தப்புக்குத்தாம் தண்டனெய அனுபவிச்சிட்டு இருந்தேம். சென்னைப் பட்டணத்துல அஞ்ஞ இஞ்ஞன்னு எரைச்சலு யில்லாத எடமே கெடையாது. நமக்கு அப்போ சென்னைப் பட்டணமே அமைதியா இருக்குறாப்புல இருந்துச்சு. யாரும் நம்ம கூட பேசாம கொல்லுறதப் போல இருந்துச்சு. குடும்பத்துல நம்ம யப்பா, யம்மா, ஏம் நீயி கூட பேசாம மெளனமா இருக்குறாப்புல இருந்துச்சு. நமக்கு இந்தக் கலியாணத்தப் பண்ணி வெச்ச யம்மா மேல, யப்பா மேல கோவம் கோவமா வந்துச்சு. அந்த ராத்தரிண்ணெ! ரொம்ப தனிமெ! ரொம்ப பயம்ண்ணே! அந்த ராத்திரி விடியவே விடியாது போல இருந்துச்சுண்ணே! அந்த ராத்திரியில நம்மளோட உசுருப் போயிருந்தா கூட ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேம்ண்ணே! ஆனா போவலியே யண்ணே! போவலியே யண்ணே! நாமளா போவட்டும் நெனைச்சு இஞ்ஞ வந்து தூக்குல தொங்குனாலும் அதுக்கும் கொடுப்பினெ இல்லையே யண்ணே! யில்லையே யண்ணே!”ன்னு தலையில அடிச்சிக்கிட்டு செய்யு பாட்டுக்கு அழுவ ஆரம்பிச்சா.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...