9 Oct 2020

பிணிகள் தீர்க்க கனிகள்

பிணிகள் தீர்க்க கனிகள்

            நோயுற்றவரைப் பார்க்கச் சென்றால் பழங்களை வாங்கிச் செல்லும் பழக்கம் இப்போதும் இருக்கிறது. பிணிகளைத் தீர்க்கும் ஆற்றல் கனிகளுக்கு இருக்கிறது. பெரும்பாலான நோய்களுக்குக் பழங்களே மருந்துகளும் கூட. தமிழ் இலக்கிய வரலாற்றில் அதியமான் சாவா மருந்தாக நெல்லிக்கனியை ஒளவைப் பிராட்டிக்கு வழங்கிய நிகழ்வு இருக்கிறது. ஆங்கிலத்தில் 'An apple a day keeps the doctor away' என்ற பழமொழி இருக்கிறது.

            நோயுற்ற பின் பழங்களைச் சேர்ப்பதை விட, தினந்தோறும் ஒரு பழத்தைச் சேர்த்துக் கொள்ளும் போது நோயற்ற வாழ்வு வாழலாம். அதற்காக நாம் சிற்றுண்டிகளுக்குக் கொடுக்கும் இடத்தைப் பழங்களுக்குக் கொடுத்தால் போதுமானது.

            பகல் பதினோரு மணி அளவில் சாப்பிடும் வடை அல்லது போண்டாவிற்குப் பதிலாக இரண்டு வாழைப் பழங்களோ அல்லது ஒரு கொய்யா பழமோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒரு கனியைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளலாம்.

            இருவேளை குடிக்கும் தேநீருக்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாற்றையோ அல்லது தங்களுக்குப் பிடித்த பழச்சாற்றையோ குடிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளலாம். இது ஒரு நல்ல மாற்றம் எனினும் பழச்சாறினும் பழமாகச் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

            பழங்களின் விலை அதிகம் என்றாலும் வாழைப்பழத்தின் விலையோ கொய்யாவின் விலையோ அப்படி ஒன்றும் வாங்க முடியாத நிலைக்குப் போய் விடவில்லை. அவையிரண்டும் ஏழைகளின் கனிகளாய் எப்போதும் இருக்கின்றன. இரண்டு வாழைப்பழம் புரதச் சத்தையும், பலவித தாதுச் சத்துகளையும் வழங்கும் அட்சயப் பாத்திரமாக இருக்கிறது. ஒரு கொய்யா மூன்று ஆப்பிள்களுக்குச் சமமாக இருக்கிறது.

            கொரிப்பதற்கான சிற்றுண்டிகளின் இடத்தில் தேங்காய் கீற்றுகள் இரண்டை வைக்கும் போது வயிற்றைத் தூய்மை செய்யும் பணியையும், வயிற்றுப் புண்களை ஆற்றும் பணியையும் அத்தேங்காய் கீற்றுகள் எடுத்துக் கொண்டு விடும். மிட்டாய்களோ சாக்லேட்களோ அந்த இடத்தில் பேரீட்சை பழங்களை வைத்து விடும் போது இரும்புச் சத்துக்கு உடலில் எந்தப் பஞ்சமும் ஏற்படப் போவதில்லை.

            கிராமங்களில் நாவல் பழத்திற்கும் இலந்தைப் பழத்திற்கும் விளாம்பழத்திற்கும் நாரத்தம் பழத்திற்கும் பஞ்சம் இருக்காது. நாவல் பழங்களை சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாக இப்போது சொல்கிறார்கள். பழங்கள் மருந்துகள் என்பதற்கு இது ஓர் ஆதாரம் என்றால் மணித்தக்காளி வயிற்றுப் புண்ணுக்குக் கண்கண்ட மருந்து என்பார்கள் கிராமங்களில். இலந்தைப் பழமும், நாரத்தம் பழமும் செரிமானத்திற்கு நல்லது என்றால் விளாம்பழம் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பார்கள் பெரியவர்கள்.

            ஒவ்வொரு பழத்தையும் எடுத்துக் கொண்டால் அதில் ஒரு மருத்துவ குணம் கண்டிப்பாக இருந்தே தீரும். மருந்துவ குணம் இல்லாத பழத்தைக் காண்பது அரிது. இரத்தத் தூய்மைக்கு மாதுளம் பழத்தைச் சாப்பிட சொல்வார்கள். இரத்தம் தொடர்பான பெரும்பாலான நோய்களும், வயிறு தொடர்பான நோய்களுக்கும் மாதுளம் நல்ல மருந்தாகும். பல்லாண்டு காலம் எவ்வளவோ ஆங்கில மருந்துகளை தனது முதுகு வலிக்குச் சாப்பிட்ட பார்த்தும் குணமாகாத என் அக்கா (பெரியப்பாவின் மகள்) மாதுளம் பழங்களைத் தொடர்ந்து ஒரு வார காலம் சாப்பிடத் தொடங்கிய போது முதுகு வலியிலிருந்து விடுபட்டதுடன் தற்போது முதுகு வலியே இல்லாமல் இருக்கிறார். தினம் ஒரு மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அவருக்கு இருந்த ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள், சர்க்கரை நோயின் அறிகுறிகள் கூட தற்போது இல்லை என்று கூறுகிறார்.

            எந்தப் பழம் கிடைக்கிறதோ இல்லையோ, எந்தப் பழத்தை வாங்க முடிகிறதோ இல்லையோ வாழைப்பழமும், தேங்காயும் எப்போதும் கிடைக்கக்கூடியதுடன், எப்போதும் வாங்கக் கூடிய விலையில் இருக்கின்றன. இந்த இரண்டு பழங்களே கூட போதுமானது மனிதர்களின் பிணிகளைப் போக்க. அதனால் கூட பூஜை புனஸ்காரங்களுக்கு முக்கியமாக இந்த இரண்டையும் சேர்த்திருக்கலாம் ஆன்மீகவாதிகள். அத்துடன் இந்த இரண்டையும் வீட்டிற்கு ஒன்று என பலன் தரும் மரங்களாக வளர்த்து விடலாம். வேரால் உண்டதைத் தலையால் தென்னை மரம் காலத்துக்கும் நன்றிக் கடனாகத் தேங்காயாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒருமுறை பலன் தந்து அத்தோடு மாய்ந்து விடாமல் வாழையடி வாழையாய் பயன் தந்து கொண்டிருக்கும் வாழை. இந்த இரண்டும் பிணிகளைத் தீர்க்க மட்டுமல்ல மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் கண் முன் நின்று காலந்தோறும் பாடங்களையும் சொல்லிக் கொண்டிருக்கும். காணி நிலம் கேட்ட பாரதி பத்து பனிரெண்டு தென்னை மரங்களையும் அல்லவா கேட்கிறார். இதிலிருந்தே புரிந்திருக்கும் உண்மை. நாம் அத்துடன் வாழை மரங்களையும் சேர்த்துக் கொண்டால் மருந்து மாத்திரைகளை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...