1 Oct 2020

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் வாழ்வியல் மாற்றங்கள்

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் வாழ்வியல் மாற்றங்கள்

            கொரோனா கல்வி, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், அணுகுமுறை, போக்குவரத்து என்று பல கூறுகளில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பேருந்துகளோ, தொடர்வண்டிகளோ ஓடாமல் இருப்பதைப் பெரிதுபடுத்தாமல் இரு சக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் மக்கள் போட்டிப் போட்டு வாங்கியதில் எல்லாம் தாறுமாறாக விலையேறிக் கிடக்கின்றன. பயன்படுத்திய இரண்டாம் முறை வாங்கும் வாகனங்களையும் வழக்கமான விலையிலிருந்து ஐயாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் விலை ஏற்றியே சொல்கிறார்கள். அநேகமாக மக்கள் நோயுடன் வாழப் பழகி விட்டார்களோ இல்லையோ இரு சக்கர வாகனங்களில் அதிகமாகப் போகப் பழகி விட்டார்கள்.

            ஒரு சில வீடுகளுக்குச் சென்றால் தேநீர், குளம்பி தந்து உபசரிப்பதற்குப் பதிலாக கபசுர குடிநீர் தந்து உபசரிக்கிறார்கள். தங்கள் வீட்டிற்கு வந்து சென்றதற்காக முகக்கவசத்தையும், சிறிய கிருமி நாசினிப் புட்டியையும் அன்புப் பரிசாகக் கொடுக்கிறார்கள். இது கொரோனா விருந்தோம்பல் எனும் பண்பாட்டில் ஏற்படுத்திய முக்கிய மாற்றம்.

            பெண்கள் புடவையோ, சுரிதாரோ அணியும் போது அதன் நிறத்திற்கேற்றவாறு முகக்கவசத்தைத் தேர்ந்தெடுத்து அணிகிறார்கள். ஆண்களிலும் ஆடைகளின் நிறத்திற்கேற்றவாறு முகக்கவசத்தைத் தேர்ந்து அணிபவர்கள் அங்கங்கே காணப்படுகிறார்கள். புடவை, முழுக்கால் சட்டைக்குப் பொருத்தமாகச் சட்டைத் துணி வாங்குவதைப் போல முகக்கவசத்தையும் பொருத்தமான நிறம் பார்த்து வாங்குகிறார்கள். கொ‍ரோனாவால் ஆடை நாகரிகத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் என்று இதைச் சொல்லலாம்.

            சமூக இடைவெளியைப் பின்பற்ற 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் எந்தெந்த அடியில் நிற்க வேண்டும்? என்று கேள்வி கேட்டு மகளுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு தகப்பனார் இந்தக் கொரோனா காலத்தில் என்னை ஆச்சரியப்படுத்தினார். காலத்திற்கேற்ப கணக்கைச் சொல்லிக் கொடுப்பது ஒரு கலை என்பதை மறுப்பதற்கில்லை.

            பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட பிள்ளைகள் பலர் தேர்வானதில் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறுவார், தேர்வு எழுதாமலும் தேர்ச்சி பெறுவார் என்று அதை பெருமை பொங்க பேசிக் கொள்கிறார்கள்.

            ஆசிரியர் முன் பாடம் கற்ற நிலை மாறி இணையம் எனும் ஆன்லைன் முன் பாடம் கற்கும் நிலை கல்வியில் கொரோனா ஏற்படுத்திய முக்கிய மாற்றம். எந்தக் கைபேசியை வைத்து அடிக்கடி நோண்டிக் கொண்டிருக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் பிள்ளைகளைக் கண்டித்தார்களோ அதே கைபேசியை நோண்டித்தான் பிள்ளைகள் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வங்கிக் கடன், வீட்டுக்கடன் என்று வாங்கி மாதந்திர தவணை கட்டிக் கொண்டிருப்போர்கள் இப்போது பிள்ளைகளுக்காக உயர்தர கைபேசியை வாங்கிக் கொடுத்து அதற்கும் மாதாந்திர தவணையைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

            மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டியதில்லை. கொஞ்சம் இருமினால் போதும் ஆறடியிலிருந்து நூறடி தூரம் வரை மக்கள் தள்ளிப் போய் விடுகிறார்கள். லேசாக காய்ச்சல் இருப்பதாகச் சொன்னால் போதும் கேள்வி கேட்காமல் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் ஆலைகளிலும் தாராளமாக விடுப்பு தருகிறார்கள். முகக்கவசம் போடாமல் போனால் சுட்டிக் காட்டுகிறார்கள். கடைகளில் சந்தனம் கொடுத்து வரவேற்பது போல கிருமிநாசி கொடுத்து வரவேற்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கினால் கபசுர குடிநீர் பொட்டலத்தை இலவசமாகத் தருகிறார்கள். இதெல்லாம் மக்களின் பழக்க வழக்கம் மற்றும் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள்.

            முகந் தெரிந்தவர் முகக்கவசத்தை அணிந்து கொண்டு போகும் போது அடையாளம் தெரியாமல் போனாலும் கண்களையும் நடை உடை பாவனைகளையும் கொண்டு அடையாளம் காணும் போக்குக்கு மக்கள் மாறியிருப்பது அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றம். பணத்தைக் கையாள்வதிலும் கொரோனா பலவித மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கிறது. கொரோனாவுக்குப் பின் பணத்தை எச்சில் தொட்டு எண்ணும் போக்கு வெகுவாக குறைந்திருக்கிறது. பெண்களில் ஒரு சிலருக்கு மூக்குத்தியையும், உதட்டுச் சாயத்தையும் பார்க்க விடாமல் முகக்கவசம் மறைப்பதாக ஒரு வருத்தம் இருக்கிறது. ஆண்களுக்கு அப்பிடியில்லை. மழிக்காத முகத்தை மறைப்பதற்கு வசதியாக இருக்கிறது. இன்னும் சிலருக்குக் கடன் கொடுத்தவர்களிடமிருந்துத் தப்பிக்கவும் வசதியாக இருக்கிறது. வெகு முக்கியமாக ஒரு முகக்கவசம் போதும், முக அழகு பசைகள் தேவையில்லை என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.

            கொரோனா கால தனிமை கூண்டுப்பறவைகளின் தனிமையையும் முதியோர் இல்ல தாத்தா பாட்டிகளின் தனிமையையும் கூட உணர்த்தியிருக்கிறது. ஒரு வகையில் பார்த்தால் அத்தனிமைகள் மனிதர் கண்டுபிடித்து உருவாக்கிய தனிமை. அத்தனிமை தந்த சாபம் போலவே தென்படுகிறது இல்லையா இக்கொரோனா கால தனிமையும்?! இதற்கான பதிலை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...