அன்றொரு நாள் பிசாசு குறித்து எண்ணத்தில்
மூழ்க ஆரம்பித்தார் எஸ்.கே. இந்த உலகில் நிஜமாக பிசாசு இருக்கிறது? பிசாசு இருப்பது
போல ஒரு மாயத்தோற்றம் நிலவுகிறதா? இந்த சந்தேகத்தின் முடிச்சில் மிக வலுவாகச் சிக்கிக்
கொண்டார் எஸ்.கே. மேற்கொண்டு இதைத் தவிர வேறு எதையும் அவரால் சிந்திக்க முடியவில்லை.
பிசாசு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்தச் சொல் உருவாகி விட்ட பிறகு
அது குறித்து ஏதோ ஒன்று இருக்கிறது என்ற கண்டுபிடிப்பு எஸ்.கே.க்குள் பளிச்சிட ஆரம்பித்தது.
இன்றைய இனிய தினத்தில் பிசாசு குறித்து
எழுதுவது என்று தீர்மானித்துக் கொண்டார் எஸ்.கே. பிசாசு என்பதில் ஒரு வேகம், ஒரு பரபரப்பு,
ஒரு பயம், ஒரு நடுக்கம் இருக்கிறதா என்பது குறித்து முதலில் யோசித்துப் பார்த்தார்.
திரைப்படங்களைக் கருத்தில் கொண்டால் நகைச்சுவைக்கான காரியங்களைச் செய்யும் பிசாசுகள்
இருக்கின்றன. அத்துடன் நன்மை செய்யும் பிசாசுகளைக் கூட பார்க்க முடியும். உண்மையில்
பிசாசு என்பது நன்மையின் வடிவமா? தீமையின் வடிவமா? என்ற கேள்வியில் வலுவாகச் சிக்கியது
போலிருந்தது எஸ்.கே.வுக்கு.
இந்த உலகில் இருக்கும் கோடானு கோடி ஜீவராசிகளில்
பிசாசு என்ற ஒன்று தேவைதானா? இருக்கின்ற கொடிய பிராணியில் ஒன்றைக் கூட பிசாசு ஆக்கியிருக்கலாம்.
ஆனால் மனித மனத்தின் விசித்திரமான கற்பனைக்கு அந்தக் கொடுமையோ அல்லது அமானுஷ்யமோ
போதாமையாக இருந்திருக்கலாம். அந்த இடத்தில் வந்து உதித்ததாக இருந்திருக்க வேண்டும்
பிசாசு. ஒருவகையில் பிசாசை உருவாக்கி விடலாம். அந்தப் பிசாசு மனதில் எப்படி உருவானது
என்பதைக் கண்டறிவது சவாலானது.
பொதுவாகப் பிசாசுகளை மற்றவர்களை அச்சுறுத்துக்குடிய
ஜந்துக்களாகவோ, அமானுஷ்யங்களாகவோ நினைக்கிறார்கள் மனிதர்கள். அது உண்மையில் உருவாகிக்
கருக்கொண்ட மனித மனத்தையே அச்சுறுத்துகிறது. அது தன்னை அச்சுறுத்துவதைப் புரியாமல்
உலகை அச்சுறுத்துவதாக நினைத்துக் கொள்வது மனித வேடிக்கைகளில் ஒன்று. தன்னை அச்சுறுத்துவதாகச்
சொன்னால் எந்த மனிதர் உதவிக்கு வருவார் சொல்லுங்கள். எல்லோரையும் அச்சுறுத்துவதாகச்
சொன்னால்தான் உலகின் கூட்டு உதவி கிடைக்கும். அப்படித்தான் பிசாசு குறித்த கூட்டு
அச்சம் இந்த உலகில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உலகில் பிசாசு இருக்கிறதா இல்லையா என்றால்
இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் மனிதன் ஒரு மோசமான பிசாசுதான். இல்லாத ஒன்றை மனித
மனத்தால் படைக்க முடியாது. மனித மனம் தன்னிலிருந்தே பிசாசைப் படைக்கிறது. பிசாசு என்பதற்கான
கற்பனையோ, வரையறையோ, உருவமோ அது எதுவாக இருந்தாலும் அது மனித மனதால் தன்னிலிருந்து
கண்டறிந்து சித்தரித்ததுதான். ஒவ்வொரு மனித மனதிலும் பிசாசு என்பதற்கான சித்திரம்
இருக்கிறது. அதில் சரிபாதி தன்னிலிருந்து வரைந்து கொண்ட சித்திரமாகவும், மற்றொரு
சரிபாதி பிறரிடமிருந்து வரைந்து கொண்ட சித்திரமாகவும் இருக்கும்.
மனித மனம் தன்னைப் பற்றி மட்டுமே ஓயாது
சிந்திக்கிறது. அந்தச் சிந்தனையின் விளைவே தன்னை மையமாகக் கொண்டு பிறரை வைத்து அதிகமாகப்
யோசித்துப் பார்க்கிறது. அதற்கு ஏற்றாற்போல மனமானது தன் போக்கிற்கு எல்லாவற்றையும்
மாற்ற முனைகிறது. அப்படி மாற்ற முனைந்து அதற்கேற்ப மாறாதவர்கள் பற்றி ஓயாது குற்றம்
சொல்கிறது. மற்றவர்களை ஒரு கட்டுக்குள் வரச் செய்ய நினைக்கும் மனம், தன்னைப் பொருத்த
மட்டில் எந்தவித கட்டிற்குள்ளும் வர விரும்பவதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு நிறைய கட்டுபாடுகளையும்,
சட்டங்களையும் உருவாக்கித் தந்து கொண்டிருக்கிருக்கும். தன்னுடைய போக்குதான் சரி,
பிறருடைய போக்குகள் எல்லாம் தவறு என்ற நோக்கில் அது ஓர் உள்உலகைச் சிருஷ்டித்துக்
கொண்டிருக்கும். அதற்கேற்பவே செயல்பட நினைக்கும்.
மனம் இப்போது தனக்கொத்த ஓர் உலகை உருவாக்கியப்
பிறகு அதற்கொப்ப தோன்றுவனவே அதற்கு இயல்பான அம்சங்கள். அதற்கு விரோதமாகத் தோன்றும்
அம்சங்கள் ஒவ்வொன்றும் பிசாசின் ரூபங்கள். இப்படித்தாம் மனமானது பிசாசு குறித்த ஒரு
விநோதமான நிலைக்கு வருகிறது. சாதாரண நிலையிலிருந்து பிசாசு மனநிலையை உருவகிப்பதோ,
பிசாசின் மனநிலையில் இருந்து கொண்டு சாதாரண நிலையை பிசாசின் மனநிலையாக உருவகிப்பதோ
மனம் அப்போது இருக்கும் இயல்பான அல்லது திரிபு நிலையைப் பொருத்தது.
எப்படியோ மனதுக்கு ஒரு பிசாசு தேவைப்படுகிறது.
அமைதியாக இருக்க இயலாத மனம் தனக்குச் சண்டைப் போடவேனும் ஒரு பிசாசை உற்பத்திச் செய்து
கொள்கிறது. பிசாசு எனும் விசித்திரத்தைக் கற்பித்துக் கொள்ளும் மனம் அதுவும் ஒரு
கட்டத்தில் பிசாசாக உருமாறும். ஆக பிசாசுகள் மனதின் உலகில் வாழும் விசித்திரப் பிராணிகள்.
அதற்கான உருவம் மனதிலிருந்து உருவாகி புற உலகின் விசித்திரங்களாக அல்லது குரூரங்களாக
அல்லது திரிபுகளாக ஏதோ ஒரு வடிவில் உருப்பெறுகின்றன.
எஸ்.கே. மொத்தத்தில் தன் தீவிர சிந்தனையிலிருந்து
விடுபட்டார். அவர் முன்னே இப்போது ஒரு பிசாசு உட்கார்ந்து கொண்டிருந்தது. அதனோடு
கைகுலுக்கிக் கொண்டு புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார். இப்போது அந்தப் பிசாசு
காணாமல் போனது போலிருந்தது.
*****
No comments:
Post a Comment