10 Sept 2020

அசைவச் சோறும் சைவ கடவுளும்!

 
அசைவச் சோறும் சைவ கடவுளும்!

செய்யு - 560

            சந்தானம் அத்தானும், விகடுவும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தது, அவுங்க சாப்புடப் போயி உக்காந்தப்பத்தாங் தெரிஞ்சது. கிட்டதட்ட எல்லாரும் காலைச் சாப்பாட்ட முடிச்சிருந்தாங்க. அன்னிக்குப் புதுசா போட்டிருந்த டைனிங் டேபிள்ளயும், கீழேயுமா ரண்டு எடத்துல சாப்பாடு நடந்துச்சு. டைனிங் டேபிள்ல ஆறு பேத்து உக்காந்து சாப்புடுற அளவுக்குப் பெரிசா நாலு நாற்காலிங்க போட்டிருந்துச்சு. இப்போ ஆளுங்க கம்மியாயிட்டதால டைனிங் டேபிள்ளயே உக்காந்துச் சாப்புடலாம்ங்ற மாதிரி டைனிங் டேபிளு வெறிச்சோடி கெடந்துச்சு. விகடு கைய அலம்புறதுக்கு மின்னாடி ஒரு நிமிஷம் யோசிச்சாம் பாலாமணியும் வந்துப்புடட்டும்ன்னு.

            சரசு ஆத்தா அதெ புரிஞ்சதெப் போல, "டாக்கடருக்காக யோஜிக்கிறாம் போல வெகடு. அவனெ பாக்காதடா. வேக வேகமா வருவாம். வேகமா சாப்புட்டுக் கெளம்புவாம். நீயிச் சாப்புட்டு முடிச்சிடு. எங்களுக்கும் ஒரு வேல முடிஞ்சாப்புல இருக்கும். இல்லாட்டி வெச்சுக்கோ காலச் சாப்பாட்டு முடியாம மத்தியானச் சாப்பாட்ட ஆரம்பிக்கிறதுல சிக்கலு இருக்கு. இன்னும் நாலு பேத்து சாப்புடலங்ற நெனைப்பு இருந்துகிட்டு இருக்கும். ஆம்பளைங்க சாப்பாட்ட முடிச்சிட்டீங்கன்னா பொம்பளைங்க நாங்க சாப்ட்டு முடிக்க எதுவா இருக்கும்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "இதுல ஆம்பளெ பொம்பளெ வித்தியாசம் ன்னா? இருக்குற ஆளுங்களுக்கு மொதல்ல சாப்பாட்டப் போட்டு முடிங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ந்நல்ல கதெயக் கெடுத்தீயே! ஆம்பளைங்கச் சாப்புடாம பொம்பளைங்க எப்பிடிச் சாப்புடுறது?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "அவ்வே அப்பிடித்தாம் ஒளறிட்டுக் கெடப்பா மாப்ளே! ஒக்காந்து காலச் சாப்பாட்ட முடிங்க!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "மாமா! வாங்கச் சாப்புடுவோம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இன்னும் பல்லயே வெளக்கல மாப்ளே. காப்பிய மட்டும் குடிச்சாச்சு. எங்கப் போவப் போறேம் இஞ்ஞ? வெளியில போனாலும் ஒண்ணும் புரியாது போலருக்கு. எங்காச்சும் வழி தப்பிப் போனாலும் போனதுதாங். அர்த்த ராத்திரியில கொண்டாந்து எறக்கிப்புட்டானுவோ. வேன்ல செரியா உக்கார முடியல. தூங்க முடியல. எம்மாம் நேரந்தாம் அந்தச் சீட்டுல, அதாங் வேன்னு சீட்டுல உக்கார முடியாமலும், தூங்க முடியாமலும் உக்காந்திருப்பே சொல்லு! இப்பதாங் கண்ணெக் கொண்டு தள்ளது. சித்தெ படுத்துப்புட்டுச் சாப்புடுதேம்! நம்மள எதிர்பாக்காதே! நீயிச் சாப்புடு மாப்ளே!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            அதுவும் சரித்தாம்ன்னு சாப்புட உக்காந்துச்சுங்க மிச்சமிருந்த சனங்க. சுப்பு வாத்தியார்ரு கீழே உக்காந்ததப் பாத்து சந்தானம் அத்தானும், சந்தானம் அத்தான் கீழே உக்காந்ததப் பாத்து விகடுவும், விகடு கீழே உக்காந்ததப் பாத்து சந்தானம் அத்தான் மவ்வேனும் கீழயே மடக்கிப் போட்டிருந்த போர்வையில உக்காந்தாச்சு.

            "டைனிங் டேபிள் சும்மாத்தானே இருக்கு. மேல உக்கார வேண்டித்தானே?"ன்னா செய்யு.

            "வூட்டுல எல்லா எடத்துலயும் கீழேயே உக்காந்துப் பழக்கமாச்சு. கீழேயே போடு! நம்ம வூட்டுல கீழ உக்காந்தா ன்னா? மேல உக்காந்தா ன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "எடம் இல்லாட்டி பரவாயில்ல. எடம் இருக்குறப்போ அவ்வே சொல்றது சரிதானே? எஞ்ஞளுக்குக் குனியாம போட கொள்ள வசதியா இருக்கும்! பெறவு எதுக்குத்தாங் டைனிங் டேபிளு சேர்ன்னு செஞ்சுப் போட்டீயளாம்? சுந்தரிப் புருஷன் செஞ்சது. உக்காந்துதாம் பாருங்களேம், வேல எப்பிடி இருக்குன்னு?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "இதுல இத்து வேற இருக்கா? அத்துத் தெரியாமப் போச்சே!"ன்னு எழும்ப எத்தனிச்சாரு சுப்பு வாத்தியாரு.

            "உக்காந்தவங்கள ஏம்மா எழுப்புறே?"ன்னு கேட்டுக்கிட்டு வந்த சுந்தரி, "அப்பிடியே இருக்கட்டு!"ன்னு சொல்லி எலைகளப் போட்டுச்சு. காலைச் சாப்பாட்டுக்குன்னு கேசரி, பொங்கல், இட்டிலி, சட்டினி, சாம்பாரு அத்தோட சேமியா கிச்சிடி பண்ணிருந்துச்சு. அத்தோட வடையும் சுட்டுப் போட்டுருந்துச்சு. சாப்பாட்டுல உக்காந்து பாதி முடிஞ்சிருக்கும் பாலாமணிட்டேயிருந்து போனு வந்துச்சுன்னு செய்யு கேட்டத் தொறக்க ஓடுனா. கொஞ்ச நேரத்துல பாலாமணி உள்ளார வந்தாம். "டைனிங் டேபுள்ள எடம் இருக்குறப்ப ஏம்ப்பா கீழே உக்காந்துச் சாப்புடுறாங்க?"ன்னாம்.

            "எல்லாரும் கேட்டு முடிஞ்சாச்சு. இப்ப நீயி வந்து ஆரம்பிச்சு வையி!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "ஆயுர்வேத மொறைப்படி டைனிங் டேபிள்ள உக்காந்துச் சாப்புடுறதெ வுட, கால்கள சம்மணங்கொட்டி இப்பிடி உக்காந்துச் சாப்புடுறதாங் செரி. வெஸ்டர்ன் டாய்லட்டுல உக்காந்துப் போறதெ வுட இந்தியன் டாய்லெட்டு உக்காந்துப் போறதுதாங் கரெக்ட். முட்டி வலிங்ற பெரச்சனெ வராது. சம்மணங்கொட்டி உக்காந்திருக்கப்பத்தாங் உணவுப் பையி சாப்பாட்ட எதிர்கொள்ளுறதுக்கான சரியான நெலையில இருக்கு!"ன்னு சம்மணங்கொட்டி கீழே உக்காந்ததுக்கு தகுந்தாப்புல உள்ள தள்ளுறதுக்கும், வெளியில தள்ளுறதுக்குமான ரண்டையும் இணைச்சி ஒரு வெளக்கத்த அதுக்குக் கொடுத்தாம் பாலாமணி.

            "ஆமாம்டா நீயி வந்து ஒரு வெளக்கதெ வையி! நீயி மேல உக்காந்துச் சாப்புடுதீயா? கீழே உக்காந்துச் சாப்புடுதீயா? மேல டிபனப் போட்டு வெச்சு கீழே எறக்க முடியாது. கீழே டிபனப் போட்டு வெச்சு மேல ஏத்த முடியாது. ஏன்னா சாப்பாட்டு டிபன்னப் போடுறது எலையில, தட்டுல யில்ல. ஒம் முடிவெச்  சொல்லுடா!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "பேன்ட் போட்டுருக்குறதுல அத்து ஒரு எடைஞ்சல். சாப்பாட்ட மேலயேப் போடு!"ன்னாம் பாலாமணி.

            "அட்டியே செய்யு! நீயும் கூட வந்து உக்காரு. பொண்ணும் மாப்புள்ளையுமா ரண்டு பேத்தும் உக்காந்துச் சாப்புடுங்க! அத்து ஒரு வேல முடியட்டும்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "யில்ல யாத்தா! அவுகளுக்குச் சாப்பாட்டப் போட்டுட்டு அந்த எலையிலயே நாம்ம பெறவு சாப்புடுதேம்!"ன்னா செய்யு.

            "நாளையிலேந்து அப்பிடித்தாம். நாங்கல்லாம் இருக்குறவாசிக்கு இன்னிக்கு ஒரு நாளு அப்பிடி. இந்த ஒரு நாளு இப்படி இருந்துக்கோ. பெறவு நீயி நெனைக்குறாப்புல சாப்பாட்ட போட்டு வெச்சிட்டுச் சாப்புட்டுக்கலாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா. செரின்னு அவ்வே டைனிங் டேபிள்ள சாப்புட உக்காந்தா பாலாமணியோட.

            பாலாமணியும், செய்யுவும் சாப்புட ஆரம்பிக்கிறப்போ விகடு, சுப்பு வாத்தியாரு, சந்தானம் அத்தான், சந்தானம் அத்தானோட மவ்வேன்னு நாலு பேத்து சாப்புட்டு முடிச்சாங்க. சாப்புட்டு முடிச்ச எல்லாரும் சமையக்கட்டுல இருந்த தொட்டியிலத்தாம் கைய அலம்ப வேண்டி இருந்துச்சு. ஒருத்தரு போனா இன்னொரு ஆளு போவ முடியாத அளவுக்குக் குறுகலா இருந்த அதுக்குள்ள ஒவ்வொருத்தரா போயி கைய அலம்பிட்டு வந்தாங்க. பாலாமணி சாப்புட்டு முடிச்சிட்டு வாரதுக்காக காத்துட்டு நின்னாங்க. அஞ்சு நிமிஷத்துல அவ்வேம் சாப்புட்டு வந்துப்புட்டாம். வந்தவங்கிட்டெ சுப்பு வாத்தியாரு பேசுனாரு.

            "டிவிப்பொட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்னு, கிரைண்டரு, மிக்சில்லாம் வாங்க வேண்டி இருக்கு. அத்தோட மளிகெ சாமானுங்களும் வாங்க வேண்டிக் கெடக்கு. அத்தெ போயி வாங்கிட்டு வந்துப்புடறேம். சந்தானமும் தொணை இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்கும் கொஞ்சம் ஆஸ்பிட்டலுக்குப் போவ வேண்டிய வேல கெடக்கு. போயிட்டு ஒரு மணியோ, ரண்டு மணியோ திரும்புனம்ன்னா இன்னிக்கு டூட்டி முடிஞ்சது. அதுக்குப் பெறவு மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் சந்நிதியிலயே இருக்குற மண்டபத்துல வரவேற்புக்கான வேலையப் பாக்கணும்! அதெ சின்ன சபரிமலைன்னே சொல்றது உண்டு. வரவேற்ப அஞ்ஞ வெச்சதுக்கான காரணமே நம்ம சனங்க எல்லாம் சென்னையில இருக்குற அந்த எடத்தெ பாக்கணும்ன்னுத்தாம். அதெ முடிச்சிட்டு சனங்கள்ல்லாம் இன்னிக்கே வூட்டுக்குக் கெளம்புறதா இருக்கு. அதால இன்னிக்கு மத்தியானமே நாம்ம வைக்க வேண்டிய விருந்தெ முடிச்சிப்புடலாம்ன்னு நெனைக்கிறேம்!"ன்னாம் பாலாமணி. 

            "விருந்துன்னா சைவமா? அசைவமா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "சைவத்தையல்லாம் விருந்துன்னா யாரு ஒத்துப்பா? மட்டன் பிரியாணி ஆர்டரு பண்ணியாச்சு. அத்தோட சிக்கன் கிரேவியும். மத்தியான விருந்துக்கு எல்லாரும் வந்துப்புடணும்!"ன்னாம் பாலாமணி.

            "மகாலிங்கப்புரத்துல அய்யப்பன் கோயிலு மண்டபத்துல வரவேற்ப வெச்சிக்கிட்டு அசைவம்ன்னா ஒத்து வருமா? நாம்ம வருஷா வருஷம் சபரிமலைக்கு மாலை போட்டுட்டுப் போயிட்டு வர்ற ஆளு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "இந்தக் காலத்துல யாரு அதெல்லாம் பாக்குறா? அதெல்லாம் ஒரு காலம். இப்போ சனங்க வந்தா வேல முடிஞ்சுதா கெளம்புணும்னு நிக்குதுங்க. அதாங் பாக்குக்கோட்டையிலேந்து எடுத்துட்டு வந்த வேனைக் கூட அனுப்பல. ராத்திரி வரவேற்ப முடிச்சிட்டு அதுலயே சனங்கள பேக் பண்ணி அனுப்பிப்புடலாம்ன்னு நிப்பாட்டி வெச்சிருக்கு! நீஞ்ஞ கெளம்புறதுன்னாலும் அதுலயே போவலாம். ஏன்னா நாஞ்ச நாலைஞ்சு டிக்கெட்டு இஞ்ஞருந்து வாரப் போறதில்லா. எடம் இருக்கும். பஸ்ஸூன்னா இஞ்ஞயிருந்து நாலு ஆட்டோவப் பிடிச்சி கோயம்பேட்டுல எறக்கி, பெறவு அங்க பஸ்ஸூல ஏறி, பாக்குக்கோட்டையில எறங்கி, திரும்ப வூட்டுக்கு ஒரு ஆட்டோவப் பிடிச்சி அலைச்சலா இருக்கும். வேனுன்னா இஞ்ஞ ஏறுனா நேரா வூட்டுலப் போயி எறங்கிப்புடலாம். அத்தோட அரும்பாக்கத்துலேந்து மகாலிங்கப்புரத்துக்கும் வரவேற்புக்கும் அதுலயே போயிடலாம்லா!"ன்னுச்சு பாலாமணி.

            "அத்துச் செரி! ஒரே நாள்ல விருந்து, வரவேற்புன்னு ஒத்து வாருமா? வரவேற்பு முடிஞ்சு நாளைக்குக் கூட விருந்தே வெச்சிக்கிடலாம்! ஒரே நாள்ல ரண்டு அலட்டு சுத்தப்படுமா? அதுல வேற அசைவப் பெரச்சனெ இருக்கே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "மத்தியானச் சாப்பாட்ட நாமளா செய்யப் போறேம்? ஓட்டல்ல சொல்லி வுட்டாச்சு. டான்னு பன்னெண்டு மணி போனா போதும் கொண்டாந்துக் கொடுத்துட்டுப் போயிடுவாம். அதெ சாப்புட்டா வேல முடிஞ்சது. வரவேற்பு ஆறு மணிக்குத்தானே. அதுக்குள்ள அசைவம் சாப்புட்டு நாலஞ்சு மணி நேரம் ஆயிருக்கும். அதால அத்து ஒரு பெரச்சனெ ஆவாது. இஞ்ஞயிருந்து அஞ்ஞப் போறதுக்கு நாலு மணிக்குக் கெளம்புனாலும் போதும். போயிடலாம்!"ன்னாம் பாலாமணி. அதெ கேட்டுட்டு சந்தானம் அத்தான் ரொம்ப யோசனெ பண்ணுச்சு.

            "‍அசைவச் சாப்பாடுன்னா நாம்ம வெளியில பாத்துக்கிறதுதாங் நல்லது. அய்யப்பன்னா அப்பிடிச் சுத்தபத்தமா இருந்து பழகியாச்சு. அதெ மாத்திக்கிட வாணாம்ன்னு நெனைக்குறேம். மாப்புள தப்பா நெனைச்சிக்கக் கூடாது!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "இஞ்ஞ மித்தவங்கத்தாம் மட்டனையும், சிக்கனையும் சாப்புடப் போவுதுங்க. நாமளே சைவச் சாப்பாடுதாங். அதுக்கான சாப்பாட்ட ஏற்பாட்ட பண்ணச் சொல்லிட்டேம். அத்துத் தனிச் சமையலு இருக்கு! அதெ வுடுங்க இந்தக் காலத்துல யாரு அய்யப்பன் கோயிலுக்கு அந்தக் காலத்துலப் போகுற மாதிரிக்கிப் போவுதுங்க. சுருட்டு, பீடி, சீரெட்டு, தண்ணின்னு கஞ்சா அடிக்குற கேஸூங்க வரைக்கும் போவுதுங்க. காலம்லாம் மாறிப் போயிடுச்சு! மின்ன மாதிரியா சபரி மலைக்கு நடந்தே போயி, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைன்னு பாடிட்டுப் போறாங்க இப்போ? எல்லாம் மாறுனாப்புல இதுலயும் சில மாத்தங்களப் பண்ணிக்கிட வேண்டித்தாம். நம்மத் தோதுக்குத் தகுந்தபடி செஞ்சிக்க வேண்டியதுதாங்!"ன்னாம் பாலாமணி.

            "ஒண்ணு ரண்டு அப்பிடி இருக்கலாம். இன்னும் ஆச்சாரமா போயிட்டு இருக்குறவங்க இருக்கத்தாம் செய்யுறாங்க. அந்த எண்ணிக்கெ ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடல!"ன்னுச்சு சந்தானம் அத்தான். அத்து பாலாமணிக்குப் பிடிக்கலங்றது மொகம் மாறுனதெ வெச்சே தெரிஞ்சது.

            "நாம்ம சொல்றதெ சொல்லிப்புட்டேம். பெறவு ஒஞ்ஞ இஷ்டந்தாம். சைவச் சாப்பாடும் இஞ்ஞ இருக்கு! செரி நமக்கு நேரமாயிடுச்சு. கெளம்பியாவணும். எந்த முடிவுன்னாலும் செரித்தாம்!"ன்னுச்சு பாலாமணி.

            "நீஞ்ஞளும் கெளம்புங்க. நாஞ்ஞளும் கெளம்பி வாங்க வேண்டிய சாமாஞ் செட்டுகள வாங்கிப்புடறேம்! அத்து முடிஞ்சா நம்ம கடமெ முழுசா முடிஞ்சது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வாங்க எல்லாரும் சேந்து ஒரே அடியா கெளம்பிடுவேம். ரண்டு தவாவா கெளம்புன்னா ரண்டு தவா கெளம்பி வந்து தொறந்து பூட்டியாவணும்!"ன்னாம் பாலாமணி. அதுவும் சரித்தான்னு, பாலாமணி, விகடு, சந்தானம் அத்தான், சந்தானம் அத்தானேட மவ்வேம்ன்னு அஞ்சு பேரும் சொல்லிட்டுக் கெளம்புனாங்க. சனங்க எல்லாம் வெளிகேட்டு வரைக்கும் மாடியிலேந்து எறங்கி வந்துச்சுங்க வழியனுப்பி வுட. பாலாமணி சுசூகி அக்செஸ்ல எடப்பக்கமா நேரா போனாம். சந்தானம் அத்தானோட காருல ஏறுன சனங்க வலப்பக்கமா போனுச்சுங்க.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...