செய்யு - 559
பாக்குக்கோட்டை குடும்பத்து ஒறவுக முழுதுமே
வீடு முழுக்கப் படுத்திருந்துச்சு. அந்தாண்ட இந்தாண்ட நவுர இடமில்லே. வீடுன்னு பாத்தா
ஒரு கூடம், ரண்டு அறைக, கடெசீயா சமையல்கட்டு இருந்துச்சு. சமையல்கட்டு விசாலமா இல்ல.
ஒரு ஆளு மட்டும் மின்னாடி நின்னு சமைக்குறாப்புலத்தாம் இருந்துச்சு. ராத்திரி பாக்குக்கோட்டையிலேந்து
ஒரு வேன பிடிச்சி ராத்திரி ரண்டு மணி வாக்குல வந்து எறங்குனதா சொன்னாவோ. நல்லா தூங்கிட்டு
இருந்ததெ கட்டிலு, பீரோ கொண்டாந்து வைக்குறவனுவோ எழுப்பிட்டதாவும் பெறவு தூக்கம்
வர மாட்டேங்குதுன்னு அப்பிடியே படுத்துருக்குறதாவும் படுத்துக் கெடந்த சனங்க சொன்னுச்சுங்க.
கூடம் முழுக்க ஆம்பளைக. ரண்டு ரூம்லயும் பொம்பளைப் படுத்திருந்துச்சுங்க.
சுந்தரி குடும்பத்தோட பாக்குக்கோட்டைப்
போயி வேன்லயே சென்னைப் பட்டணம் வந்திருக்கும் போல. சித்துவீரன் மட்டும் பீரோலு,
கட்டில ஏத்திட்டு வர்றதுக்காக டாட்டா ஏசியோட வந்திருப்பாம் போலருக்கு. ஒரு அறையில
கட்டிலு, பீரோலு, டிரெஸ்ஸிங் டேபிள்ள வெச்சதுல அத்து கணிசமான எடத்தெ அடைச்சிருந்துச்சு.
நடுக்கூடத்துல டைனிங் டேபிள் சமையக்கட்ட ஒட்டிக் கெடந்துச்சு. அதுலயும் கணிசமான எடம்
அடைபட்டுக் கெடந்துச்சு. மிச்ச இருந்த எடமெல்லாம் சனங்க சுருண்டுகிட்டும், பெரண்டுகிட்டும்
கெடந்துச்சுங்க. காலாங்காத்தால பால காய்ச்சிப் புடுவாங்களோன்னு நெனைச்சிட்டு வந்த
உள்ள நொழைஞ்ச சுப்பு வாத்தியாரு கோஷ்டி நொழைஞ்ச வேகத்துக்கு வெளியில வந்து மாடிப்பக்கமாவே
நின்னதுக்கு அதுதாங் காரணம்.
சனங்களா
அதுங்கப் போக்குக்கு அலுப்பு நீங்கி சோம்பல களைச்சிக்கிட்டுக் கெளம்புனப்போ ஏழு
மணியக் கடந்துடுச்சு. அதுல குளிக்கணும்ன்னு சனங்க நின்னதுல அதுல கொஞ்சம் நேரம் கடந்துச்சு.
ஏழரை மணி வாக்குலத்தாம் செய்யுவ வுட்டுப் பாலக் காய்ச்சுனுச்சுங்க சனங்க. சரசு ஆத்தா
எல்லாத்துக்கும் பாலக் கொண்டாந்துக் கொடுத்துச்சு. "சின்னப் புள்ளைங்களா நாம்ம
பாலக் குடிக்கிறதுக்கு? காப்பியக் கொண்டாங்கப்பா!"ன்னாம் வேலன். "மொதல்ல
இதெ கொஞ்சம் குடிங்கடா பேருக்கு. ஒடனே காப்பியப் போட்டுக் கொண்டார்ரேம்!"ன்னுச்சு
சரசு ஆத்தா.
"நாம்ம ஆஸ்பிட்டல் போயிட்டு ஒம்போதரைக்கு
வந்துப் புடுறேம். அதுக்குள்ள சமைச்சி முடிச்சிப்புடுங்க!"ன்னாம் பாலாமணி.
"சனங்க எல்லாம் வந்திருக்குங்க. நீயிப்
பாட்டுக்குக் கெளம்பிப் போனா ன்னா அர்த்தம்டா?"ன்னுச்சு சரசு ஆத்தா.
"இஞ்ஞ ச்சும்மாத்தாம் பேசிட்டு நிப்பேம்.
தேவையில்லாம ஒரு நாளு லீவு போவும். போயிட்டு வந்தேம்ன்னா லீவு இல்லாமப் போவும்!"ன்னாம்
பாலாமணி.
"ஏம்டா இஞ்ஞ வந்திருக்குறவுங்க எல்லாம்
அப்பிடி நெனைச்சா எப்பிடிடா வர்ற முடியும். எல்லாம் லீவுப் போட்டுப்புட்டுத்தானே வந்திருக்காவோ!"ன்னுச்சு
சரசு ஆத்தா.
"பக்கத்துல இருக்கு ஆஸ்பத்திரிக்குப்
போயிட்டு வந்துப்புடுறதுல ன்னம்மா இருக்கு? தேவையில்லாம சென்டிமெண்டப் பத்த வைக்காதே.
சென்னைன்னா இப்பிடி இருந்தாத்தாம் பொழைப்ப ஓட்டலாம்!"ன்னாம் பாலாமணி.
"ஒங்கிட்டெப் பேசி வழிக்குக் கொண்டு
வார முடியாது. நாம்ம நின்னா சாப்பாட்டு வேலத்தாம் பாதிப்பாவும். நீயி ன்னா பண்ணணுமோ
அதெ பண்ணு. எப்பிடி ஆடணும்ன்னு நெனைக்குதீயோ அப்படி ஆடு!"ன்னுச்சு சரசு ஆத்தா.
பாலாமணி வேக வேகமா வெளியில கெளம்புனாம்.
வெளியில நின்னுகிட்டுப் பேசிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு, சந்தானம் அத்தான், விகடுவெப்
பாத்து, "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ரண்டு மணி நேரத்துல வந்துடுறேம்! ஆஸ்பிட்டல்
வரைக்கும் கொஞ்சம் வேல இருக்கு!"ன்னு சொல்லிட்டு அவுங்களோட பதிலெ கூட எதிர்பார்க்காம
வேக வேகமா கெளம்புனாம். கொஞ்ச தூரம் போனவெம் சட்டுன்னு உள்ளாரப் போயி செய்யுவக்
கூப்புட்டாம். "வெளியில வந்து கேட்டச் சாத்திக்கோ! இனுமே அத்து ஒம் பொறுப்பு.
அதாங் வந்து எறங்குன ஒடனே ரண்டு தவா ஒண்ண பூட்டித் தொறக்கச் சொல்லி ப்ராக்டீஸ் பண்ணேம்.
எக்காரணம் கொண்டும் கேட்டுத் தொறந்திருக்கக் கூடாது. தொறந்திருந்தா மித்த வூட்டுக்காரவுக
திட்டுவாக, யாரு தொறந்துப் போட்டதுன்னு. அந்தப் பேச்சு வராதபடிக்குப் பாத்துக்கணும்!
இந்த ஏரியா பக்கா சேப். இருந்தாலும் நாமளும் சேப்பா இருக்கணும். ரைட்?"ன்னாம்
பாலாமணி.
செய்யு தலையாட்டிக்கிட்டு அவ்வேம் பின்னாடியே
போயி பூட்டெ தொறந்து விட்டா. வெளிகேட்டுக்கு மின்னாடி மாமரத்தடியில ஒரு தூசு படிஞ்ச
சுஸூகி அக்செஸ் வண்டிக் கெடந்துச்சு. அந்த வண்டிய எடுத்தாம் பாலாமணி. டாட்டா காட்டிட்டு
வண்டிய எடுத்தவேம், கொஞ்ச நேரம் பேசிட்டு வண்டியில கெளம்பிப் போயி மறைஞ்சாம். அவ்வேம் கெளம்புன ஒடனே வெளி கேட்டு, மாடி கேட்டுன்னு
எல்லாத்தையும் பூட்டிட்டு உள்ளார வந்தா செய்யு.
"எப்பப் பாத்தாலும் இப்பிடி ரண்டு
இடத்துல பூட்டித் தொறந்துட்டுத்தாம் இருக்கணுமா?"ன்னாம் விகடு.
"ஆமாண்ணே! ரண்டு யில்ல. மூணு. வெளிக்கதவையும்
பூட்டிட்டுத்தாம் உள்ளார இருக்கணுமாம். யிப்போ எல்லாரும் இருக்குறதால இன்னிக்கு அந்த
ஒண்ணு வாணம்ன்னும் நாளைக்கு எல்லாரும் கெளம்புன பெற்பாடு மூணையும் பூட்டிட்டுத்தாம்
இருக்கணும்ன்னும் சொன்னாவோ. செல்போன்ல கூப்புட்டு வுட்டாத்தாம் வந்துக் கதவெ தொறக்கணுமாம்.
மித்தபடி வேற எதுக்கும் கதவெ, கேட்ட தொறக்கக் கூடாதாம். அவுங்க அஞ்ஞ ஆஸ்பிட்டல்லேந்து
கெளம்புறப்பவே போன அடிச்சிறுவாவோளாம். நாம்மப் போயி தொறந்து வெச்சுட்டு நிக்கணுமாம்.
அதெத்தாம் படிச்சிப் படிச்சிச் சொல்லிட்டுப் போறாவோ!"ன்னா செய்யு.
"டிரிபிள் லாக்கிங் சிஸ்டம்!"ன்னாம்
விகடு தனக்குள்ளார.
"ன்னா சொல்றேண்ணே?"ன்னா செய்யு.
"இந்த வூட்டப் பத்தி டபுள் லாக்கிங்
சிஸ்டம்ன்னு அத்தாம் சொன்னாப்புல. அதாங் டபுள் லாக்கிங் சிஸ்டம் யில்ல, டிரிபிள் லாக்கிங்
சிஸ்டம்ன்னு சொன்னேம்!"ன்னாம் விகடு.
"மாப்ளே! நீயி கிராமத்துல கோவணத்தக்
கட்டிட்டுச் சொதந்திரமா அலையுற மாரில்லாம் இஞ்ஞ அலைய முடியாது!"ன்னுச்சு சந்தானம்
அத்தான் சிரிச்சிக்கிட்டெ.
"என்னத்தாம் எப்பப் பாத்தாலும் கோவணும்,ஜட்டின்னுகிட்டு?
கிராமத்துல வெளையுற பருத்திலத்தாம் ஜட்டி, பனியன், சட்டை, பேண்டு, கோட்டுன்னு நாலு
பேரு போடுறதெ சேத்து ஒருத்தருப் போட்டுக்கிட்டு அலையுதீயே. அஞ்ஞ கிராமத்துல நாலு
பேத்துப் போடுறதெ இஞ்ஞ பட்டணத்துல ஒரு ஆளு பிடுங்கிக்கிட்டு கிராமஞ் சரியில்லன்ன ஆச்சா?"ன்னாம்
விகடு.
"அதுக்கில்லடா மாப்ளே! இஞ்ஞ எல்லாம்
இருந்தாலும் பூட்டிக்கிட்டு இருந்தாத்தாம் காவந்து பண்ண முடியும். அஞ்ஞ ஒண்ணும் இல்லாம
இருந்தாலும் மதுவாங்கட்டெயில படுத்துட்டு வானத்தெ அண்ணாந்துப் பாத்தாலும் எதுவும் ஆயிடப்
போறதில்ல. துட்டுச் சேக்கணும்ன்னா இஞ்ஞ வந்தாத்தாம். அதுக்கு இப்பிடில்லாம் இருந்தாவணும்!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"இதுக்கு எதுவுமே யில்லாம கெராமத்துல
வானமே கூரை, பூமியே வூடுன்னு இருந்துட்டுப் போயிடலாம். தங்கக் கூண்டுன்னாலும் கிளிக்கு
அத்து சிறைதானே யத்தாம்? பணத்தெ நகையப் பாதுகாப்பா இருக்கணும்ன்னா லாக்கர்ல வெச்சுப்
பூட்டுவாங்கப் பாத்திருக்கேம். மனுஷங்களேயே லாக்கர்ல வெச்சுப் பூட்டுறாப்புல இருக்குறதெ
இஞ்ஞத்தாம் பாக்குறேம்! இஞ்ஞ இருக்குற ஒவ்வொரு மனுஷனும் தங்கக் கூண்டுல இருக்குற கிளிங்கத்தாம்!"ன்னாம்
விகடு.
"ன்னடா மாப்புளே! நீயி பாட்டுக்குப்
புலவர்ரு அளவுக்குப் பேசுதே? இஞ்ஞ குடிக்கிற தண்ணிலேந்து, போவுற மூத்திரலேந்து எல்லாத்துக்கும்
காசியக் கொடுத்தாத்தாம் சிட்டி ஒன்னய இஞ்ஞ வெச்சிக்கும்!"ன்னு சொல்லிட்டு பகபகன்னு
சிரிச்சுச்சு சந்தானம் அத்தான்.
"துட்டே இல்லன்னாலும் கிராமம் ஒங்கள
ஒண்ணும் சொல்லாம வெச்சிக்கிம் யத்தாம். ஒரு நாளு இந்த டவுன்ல அந்தாண்ட இந்தாண்ட நவுர
முடியாம, சோத்துக்கு வழியில்லாம, சம்பாதிக்க கதியில்லாம நீஞ்ஞல்லாம் கிராமத்தப் பாக்க
ஓடி வர்றீயளா இல்லையான்னு பாருங்க?"ன்னாம் விகடு.
"ன்னடா மாப்ளே! இப்பதானே புலவருன்னேம்.
ஒடனே அதுக்கு ஏத்தாப்புல அறம் பாடுதீயளோ? நாஞ்ஞ ஏம்டா கிராமத்துக்கு வார்றப் போறேம்?
நீஞ்ஞதாம்டா கெராமத்துலேந்து பொழப்புக்கு இஞ்ஞ ஓடி வாரணும்!"ன்னுச்சு சந்தானம்
அத்தான்.
"நீஞ்ஞளும் அப்பிடி ஓடி வந்த ஆளுதானே?"ன்னாம்
விகடு.
"அதெத்தாம்டா மாப்ளே சொல்றேம்! இஞ்ஞ
ஓடி வந்தாத்தாம் பொழைக்கலாம். யில்லன்னா கிராமத்துல கோயிலு, மதுவாங்கட்டைன்னு கொறட்டை
அடிச்சிக்கிட்டுப் படுத்துக் கெடக்க வேண்டியதுதாங். அத்து என்னடா மாப்ளே எப்பப் பாத்தாலும்
எந்தக் கவலையும் யில்லாம் கெராமத்துல நாலு பயலுவோ இன்னும் தாயம், ஆடுபுலி ஆட்டம்ன்னு
உக்காந்துக்கிறதும், மரத்தடியக் கண்டா படுத்துகிடறதும்? எப்பிடிடா மாப்ளே இந்த நாடு
மின்னேறும்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"எல்லாரும் சம்பாதிச்சிட்டெ கெடந்தா
எப்பிடி யத்தாம்? யாராச்சும் அனுபவிச்சித்தானே ஆவணும். நீஞ்ஞ சம்பாதிச்சிக்கிட்டெ கெடங்க.
நாங்க அனுபவிச்சிட்டுக் கெடக்குறேம்! சம்பாத்தியம் ஒங்களுக்கு. சந்தோஷம் எங்களுக்கு!"ன்னாம்
விகடு.
"கெராமத்தெ எல்லாத்தையும் டவுனு ஆக்குனாத்தாம்
மாப்ளே உருப்படும்! சோம்பேறிப் பயலுவோ! அதெ வுட்டுப்புட்டு மாசம் பொறந்தா ஓசி அரிசியக்
கொடுத்தா எப்பிடி உருப்படும்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"அதாங் டவுன நல்லா உருப்பட வெச்சிருக்கீயளே?
இஞ்ஞ நாலு வூடு இருக்கு. நாலு வூட்டுக்கு நாலு பூட்டு பத்தாதுன்னு நாப்பத்து ரண்டு
பூட்டெ வாங்கிப் போட்டுருக்கீயளே? ஒரு ஆத்தெ ஒஞ்ஞளால ஒழுங்க வெச்சிக்கிட முடியுதா?
கூவத்தைப் போட்டு நாறடிச்சி வெச்சிருக்கீயே. ஒரு பத்து நாளு ஒஞ்ஞள எல்லாம் வெரட்டி
அடிச்சா அதுல நல்ல தண்ணி ஓடும் தெரியுமா? காத்தாட கெளம்பி வெளியில நடக்க முடியுமா?
பொகைய நெரப்பிக்கிட்டுதாங் உள்ளார வாரணும். வண்டியில சுதந்திரமா போயித்தாம் வர்ற
முடியுமா? டிராபிக்ல நிப்பாட்டி வெளக்கப் பாத்துட்டுப் போடாம்பீயே! தவிச்ச வாய்க்கு
தண்ணி கெடைக்குமா? காசி இருந்தா வாங்கிக் குடிச்சிட்டுப் போ, யில்லன்னா தாவத்தாலயே
செத்துப் போம்பீயே! ன்னா டவுனு? ன்னா சிட்டி? நீஞ்ஞத்தாம் மெச்சிக்கிடணும். நீஞ்ஞ
பணத்தெ சம்பாதிக்கிறதுக்குன்னு இருக்குற எடத்தையெல்லாம் டவுனு, சிட்டின்னு ஆக்கி ஊரு
ஒலகத்தெ கெடுத்துட்டு வர்றீயே!"ன்னாம் விகடு.
"எலே தங்காச்சி வூட்டுக்கு வந்திருக்கேம்டா!
நீயி பாட்டுக்கு சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்கியேடா?"ன்னுச்சு வெங்கு
விகடுவப் பாத்து. அவுங்க ரண்டு பேத்தோட பேச்சு இப்போ நிக்குற பாடாயில்ல.
"வுடு யத்தே! அவ்வேம் பேசட்டும்.
எத்தனெ நாளுதாம் அவ்வேம் கெராமத்துலயே இருக்காம்ன்னு பாக்குதேம்? ஒண்ணு திருவாரூர்ரப்
பாக்க யில்ல ஆர்குடியப் பாக்க ப்ளாட்ட வாங்கிப் போட்டுட்டு வூட்டக் கட்டிட்டு எண்ணி
அஞ்சே வருஷத்துல அவ்வேம் வரலன்னா சொல்லு? ஏம்டா மாப்ளே! கிராமத்துல ஒடம்புக்கு ஒண்ணுனா
ஒரு டாக்கடர்ர ஒடனேப் பாத்து வைத்தியம் பண்ணிக்கிட முடியுமா? புள்ளீயோளா நல்ல வெதமா
படிக்கத்தாம் வைக்க முடியுமா? என்னத்தெ வெச்சிருக்குற நீயிக் கெராமத்துல?"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
விகடு சிரிச்சாம். "சிரிச்சுல்லாம்
மலுப்பக் கூடாது! பதிலெச் சொல்லணும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"ஒடம்பு நல்லா யில்லாதவங்க ஒடம்ப
டாக்கடர்ட்டத்தாம் பாக்கணும். ஒடம்பு நல்லா இருக்குறவேம் ஏம் டாக்கடர்ரப் பாக்கணும்?
எந்த டாக்கடர்ராவது கெராமத்துல இருப்பாவளா? இருக்க மாட்டாவோ! எப்பிடி இருப்பாவோ?
கெராமத்துலத்தாம் எல்லாம் ஒடம்பு நல்லா இருக்கானே. அங்க எப்படி யேவாரம் ஓடும்? எப்பிடிச்
சம்பாத்தியம் ஆவும்?"ன்னாம் விகடு.
சந்தானம் அத்தான் சிரிச்சிக்கிட்டெ,
"அதெ போல சிட்டியில இருக்குறவேம்லாம் படிக்காத முட்டா பயலுவோளா இருக்காணுவோ.
அவனுகளப் படிக்க வைக்கிறதுக்குத்தாம் நெறையப் பள்ளியோடம் இருக்குன்னு சொல்ல வர்றீயா?"ன்னுச்சு
விகடுவெப் பாத்து.
"அத்து யாருக்குத் தெரியும்? பட்டணத்துல
இருக்குற ஒஞ்ஞளக்குத்தாம் தெரியும். நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கெராமம்தாம். சம்பாதிக்காமலேயே
கெராமத்துல இருக்குறவனுக்கு வாழத் தெரியும். சம்பாதிச்சாத்தானே டவுன்ல இருக்குறவனுக்கு
வாழத் தெரியும். அந்தச் சம்பாத்தியத்துக்காகப் படிக்குதீயே! நீஞ்ஞ ன்னா படிப்பெ வளக்குறதுக்காவா
படிக்குதீயே? படிக்க வைக்குதீயே? ஏம் நீஞ்ஞ ஒஞ்ஞ புள்ளீயோள டாக்கடரும், எஞ்சினியரும்ன்னு
படிக்க வைக்கிறதெ வுட்டுப்புட்டு லிட்டரேச்சரும், ஹிஸ்டரியும் படிக்க வையுங்களேம்?"ன்னாம்
விகடு.
"அதெல்லாம் படிச்சா சோத்துக்குச்
சிங்கி அடிக்கணும் மாப்ளே இஞ்ஞ?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"கடெசீயில வெசயத்துக்கு வந்திட்டீங்க
யத்தாம்! சோத்துக்குத்தான எல்லாத்தையும் பண்ணுதீயே? இப்போ ஒத்துக்கிட்டீயளே! நீஞ்ஞ
சுத்தி வளைச்சுப் பண்ணுதீயே! கெராமத்துல நாஞ்ஞ நேரடியா பண்ணுதேம். சோத்துக்குன்னு
வெள்ளாமையப் பாத்துட்டு பேயாம கெடக்குறேம். நீஞ்ஞ வெள்ளாமயத் தவுர பாக்கி எல்லாத்தையும்
பாத்துட்டு பேசிட்டுக் கெடக்குதீயே!"ன்னாம் விகடு.
"ன்னா பேச்சு பலமா இருக்கு? சாப்பாடு
தயாரு ஆயிடுச்சு. கொஞ்ச கொஞ்சமா வந்தீயன்னா சாப்புட்டுப் புடலாம். ஒரே நேரத்துல எல்லாத்துக்கும்
சாப்பாட போட முடியாது. எடமில்லே!"ன்னுச்சு சரசு ஆத்தா.
"ந்நல்ல வேள யத்தே! எம் மவளெ ஒம்
மவனுக்குக் கட்டிக் கொடுக்காம போனேம். கட்டிக் கொடுத்திருந்தேம்ன்னா வெச்சுக்கோ
இஞ்ஞ இருக்குற அத்தனெ சொத்தையும் வித்துப்புட்டு கெராமத்துலக் கொண்டு நிறுத்தி நம்மள
கோவணத்தோட வயல்ல எறக்கியிருப்பாம் ஒம் மவ்வேம்!"ன்னு சொல்லிட்டுச் சிரிச்சிச்சு
சந்தானம் அத்தான். சின்னதா ஒரு இடைவெளி வுட்டு அதுவே சொன்னுச்சு, "கடெசீக் காலத்துல
வேலங்குடியில கொஞ்சம் நெலத்தெ வாங்கிப் போட்டுக்கிட்டு அஞ்ஞத்தாம் வாரலாம்ன்னு இருக்கேம்!"ன்னு.
"நீஞ்ஞல்லாம் ஒரு காலத்துக்கும் வார
மாட்டீயே யத்தாம்!"ன்னாம் விகடு.
"எப்பிடிடா மாப்ளே சொல்லுதே?"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"பன்னிக்குக் சாக்கடெதாம் பிடிச்சிருக்குங்றதுக்காக
அதெ ஒண்ணும் குத்தம் சொல்ல முடியாது. அதுக்கு நல்ல எடத்தெ நீயி காட்டி வுட்டாலும்
அத்து அஞ்ஞ வாராது. பொத குழியில வுழுந்தவேம் எவ்வேம் பொழைச்சி வந்திருக்காம் சொல்லு?
யம்மா அடிக்கடிச் சொல்லும், அடிக்குற குளிருல போர்வே வாங்கிப் போத்திட்டுதாம் மறுவேல
பாக்கணும்ன்னு ராத்திரி பூரா நெனைச்சிட்டுக் கெடக்குமாம் தெருநாயி! விடிஞ்சி வெயிலு
வெறிச்சா ஆம்மாம் போ என்னத்தெ போர்வெய வாங்கிட்டுன்னு அதுப் பாட்டுக்குத் திரிய ஆரம்பிச்சிடுமாம்
வெறுநாயின்னு. அந்தக் கதெத்தாம் யத்தாம் ஒஞ்ஞ கதெ!"ன்னாம் விகடு.
"எலே யத்தாம்கிட்டெ பேசுற பேச்சாடா
இத்து? மொதல்ல உக்காந்துச் சாப்புடுங்க வாஞ்ஞ!"ன்னுச்சு வெங்கு.
"மாப்ளய ஒண்ணும் சொல்லாதே யத்தே!
சரிய சரின்னும், தப்பெ தப்புன்னும் சொல்லுற ஒரே ஆளு மாப்ளத்தாம். மித்தவனுங்கல்லாம்
எஞ்ஞட்ட இருக்குறப் பணத்துக்காக சரியத் தப்பும்மாம்ப, தப்பெ சரிம்மாம்!"ன்னுச்சு
சந்தானம் அத்தான். அதுக்குள்ள செய்யுவும் அங்க வந்தா, "ப்ளீஸ்ண்ணே! தயவு பண்ணி
பேச்ச நிப்பாட்டிப்புட்டு எல்லோத்தடயும் சாப்புட வாண்ணே! எலையில எடுத்த வெச்சது அப்பிடியே
இருக்கு!"ன்னா செய்யு.
"இன்னிக்கு ஒரு நாளு பேச வேண்டியதெ
தாண்டிப் பேசியாச்சு. இனுமே இந்த நாளு முடிஞ்சி மறுநாளு பொழுது விடியுற வரைக்கும்
ரண்டு பேத்தும் எதையும் பேயக் கூடாது!"ன்னுச்சு வெங்கு. அதெ கேட்டுட்டுச் சிரிச்சுக்கிட்டெ
சாப்புடுறதுக்கு உள்ளாரப் போனாங்க வெளியில நின்னுகிட்டு இருந்த எல்லாம்.
*****
No comments:
Post a Comment