4 Sept 2020

நெல் அவித்தல்

நெல் அவித்தல்

            மேட்டூர் அணை திறக்கப்படுவதைப் பொருத்தே இங்கே இருபோகச் சாகுபடியான குறுவையும் தாளடியும். சரியாக ஜூன் 12 இல் அணை திறக்கப்பட்டால் குறுவையை முடித்து விட்டுத் தாளடிக்குத் தயாராகி விடலாம்.

            குறுவை, தாளடி இரண்டுமே காரணப்பெயர்கள். குறுவை என்பது குறுகிய கால நெற்பயிராக இருக்கும். பெரும்பாலும் தொண்ணூறிலிருந்து நூற்று இருவது நாட்கள் அறுவடை செய்யக் கூடிய பயிர்கள். குறுவையை முடித்து விட்டு அறுத்த நெற்தாள்களை மடக்கி உழவு செய்து அடுத்த சாகுபடியைத் தொடங்குவது தாளடி. அதாவது தாளை (நெற்தாளை) அடித்து (மடக்கி உழுது) அடுத்த உழவை ஆரம்பிப்பதால் தாளடி.

            மேட்டூர் அணையின் தண்ணீர் திறப்பு ஆகஸ்ட், செப்டம்பர் என்று தள்ளிப் போய் விட்டால் ஒரு போகச் சாகுபடி சம்பா மட்டும்தான். சம்பா பொதுவாக நீண்டகால நெற்பயிர். நூற்று நாற்பதிலிருந்து நூற்று அறுபது நாட்களில் அறுவடைய செய்யக் கூடியதாக இருக்கும்.

            குறுவை நெல்லை விட சம்பா நெல்லுக்கு இங்கே மதிப்பு அதிகம். வியாபாரிக்கு ரண்டும் ஒன்றுதான். அது வேறு. பெரும்பாலும் வீட்டுக்கு சம்பா நெல்லைத்தான் எடுத்து வைத்துக் கொள்வார்கள். பத்தாயங்களும், குதிர்களும் இருந்த காலத்தில் அதுதான் நடைமுறை. ரேஷன் கடைகளும், அரிசிக் கடைகளும் வந்து விட்ட பிறகு இப்போது யாரும் நெல்லை வீட்டுக்கென எடுத்து வைத்துக் கொள்வதில்லை. எல்லாம் வியாபாரியிடமே போகின்றன.

            ஒரு சிலர் பத்து மூட்டை நெல், இருபது மூட்டை நெல் என்று அரிசி ஆலையில் போட்டு விட்டு அதற்குப் பதிலாக மாதா மாதம் ஒரு மூட்டைக்கு இவ்வளவு அரிசி என்று கணக்குப் பண்ணி வாங்கிக் கொள்கிறார்கள். அது தவிர டாட்டா ஏஸ் வாகனத்தில் வைத்து அரிசியோடு வியாபாரி வரும் போது, இவ்வளவு நெல்லுக்கு இவ்வளவு அரிசி என்று பண்டம் மாற்றிக் கொள்வதும் உண்டு.

            கிராமத்தில் நெல் அவிப்பவர்கள் படிப்படியாக கணிசமாகக் குறைந்து இப்போது இல்லாமலேயே போய் விட்டார்கள். சரியாகச் சொல்வதென்றால், நெல்லை அவித்துக் காய வைத்து, கைக்குத்தலாக இடித்து அரிசியாக்கிய காலம் மாலையேறி, இடைக்காலத்தில் நெல்லை அவித்து காய வைத்து அரிசி மில்லில் அரைத்ததும் போய், இப்போது அரிசி என்பது கடையில் காய்க்கும் பண்டமாகி விட்டது.

            திட்டை கிராமத்தை எடுத்துக் கொண்டால் அநேகமாக சுப்பு வாத்தியாரின் வீட்டில் மட்டும்தான் நெல் அவித்து அரிசியாக்குவது நடக்கிறது. அது ஒரு பழைய மனோபாவத்தில் விளைவு என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கென்னவோ நம் கண் பார்க்க விளைந்த நெல்லை அறுத்து, அந்த நெல்லைக் கண் பார்க்க அவித்து, கண் பார்க்க மில்லில் அரைத்து அரிசியாக்கிச் சாப்பிட வேண்டும் என்ற மனோபாவத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. கிராமத்தில் எவ்வளவோ வீடுகள் கடை அரிசிக்கும், ரேஷன் அரிசிக்கும் மாறி விட்ட பிறகு அவரால் தன்னுடைய மனோபாவத்தை மாற்றிக் கொள்ள முடியாமல் இன்னும் நெல் அவிப்பதை மெனக்கெட்டு செய்து கொண்டிருக்கிறார்.

            நெல் அவித்தல் கொஞ்சம் மெனக்கெடு பிடித்த வேலை. பெரும்பாலும் சுப்பு வாத்தியார் சாயுங்காலத்துக்கு மேல்தான் அவிப்பார். இதற்கென காலையிலேயே பத்தாயத்திலிருந்து நெல்லை எடுத்து ஆனைக்கால் குவளையில் நெல்லை ஊற வைத்து வேடு கட்டி வைத்து, அவிக்கப் போகும் நேரத்தில் அதை வடிகட்டி எடுத்து, அதற்கென இருக்கும் பெரிய அலுமினியக் குவளையில் அவித்துக் கொட்டி அதை நிழலில் நான்கு நாட்கள் வரை காய வைத்து பிறகு அரைத்துக் கொண்டு வருவார்.

            நெல் அரைப்பதற்குப் பக்கத்தில் இரண்டு மில் இருந்தாலும் சுப்பு வாத்தியார் வேலுக்குடி வரை போய் மெனக்கெட்டுதான் அரைத்துக் கொண்டு வருவார். அங்கேதான் அரைவை சரியாக இருப்பதாக அவரது கணிப்பு. ஓர் ‍அரிசி கூட உடையாமல் அரைத்துக் கொண்டு விடுவார். அதற்கு அவ்வளவு பதமாக காய வைத்திருக்க வேண்டும். காய்ச்சலில் பதம் மாறி விட்டால் நெல்லை நல்லவிதமாக அரிசியாக அரைக்க முடியாது. இடிந்து போய் விடும். இதுபற்றி நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரே மூச்சில் சொல்வது கடினம்தாம். கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்கிறேன். ஒரு நாள் இதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த வேலையில் ஒரு சிலவற்றை மட்டும் படமாக எடுத்தேன். அதைப் போட்டிருக்கிறேன் பாருங்கள். "ஏம்டா இதெ படமா எடுக்குறதுக்கு அப்பாருக்குக் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கலாமுல்லா!"ன்னு அம்மா திட்டுனது தனிக்கதை. அதுவும் விரிவாக எழுதுவதற்கு உரியதே.

            ஒரே வேலையை ரசனை மாறாமல் மாதா மாதம் செய்வது ஒரு கலைதான். ஒவ்வொரு மாதமும் அவ்வளவு விருப்பமாகச் சுப்பு வாத்தியார் நெல் அவிப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.









***** 

2 comments:

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...