4 Sept 2020

சகதியில சிக்குன வண்டி!


சகதியில சிக்குன வண்டி!

செய்யு - 554

            சுப்பு வாத்தியாரோட வூட்டுலேந்து கெழக்கால போறப்போ அஞ்சாறு வூடு தள்ளி பரமுவோட வூடு. அந்த எடத்துல தெரு முடியுது. அதுக்கு நேரா லேசா வளைஞ்சாப்புல போனா கொஞ்ச தூரம் போயி வடக்குத்தெரு போற ரோடோட வடக்காலயும், கடைத்தெருவுக்குப் போற ரோடோட தெற்காலயும் ரோடு பிரிஞ்சி முடியும். அந்த ரோட்டுக்கு எடையிலத்தாம் கருப்பத்தேவரு வுடு தன்னந்தனியா இருக்கு. அதுக்குக் கொஞ்சம் மின்னாடித்தாம் திட்டைப் பள்ளியோடத்துக்கும், மாரியம்மன் கோயிலுக்கும் போற குறுக்கு வழி இருக்கு. பகல் நேரத்துல புள்ளீயோளும், ஆடு மாடுகளும் நடமாட்டமா இருக்குற அந்த எடம் ராவான்னா ஊருல மனுஷருங்க இருக்கான்னு கேக்குற மாதிரி இருக்கும்.

            பரமு வூட்டோட தெரு முடியுற எடத்துல வடக்கப் பாத்து ஒரு சின்ன தெரு. அந்த எடத்தப் பாக்குறப்போ இங்கிலீஷ்ல டேபிளுக்கு வருமுல்லா மொத எழுத்தா 'டி' அந்த எழுத்தெப் பாக்குறாப்புல இருக்கும். மூணா பிரியுற ரோட்டுல வடக்கப் பாக்கப் போற அந்தத் தெரு பூக்காரத் தெரு. அந்தத் தெருவுக்குள்ளார பூந்தோட்டமோ, பூவு கட்டி விக்குற அசாமிங்களோ யாருமில்ல. நாலு கோனாரு வூடும், முறுக்குச் சுட்டு விக்குற பெரிய பாப்பா வூடும்ன்னு சேத்து அஞ்சு வூடுதாம். அஞ்சு வூட்டுக்குன்னு ஒரு ‍தெரு. வூட்டப் பக்கணும்ன்னா தெருவுக்குள்ள கொஞ்சம் நட நடந்துத்தாம் போவணும். அந்தப் பூக்காரத் தெருவுக்குள்ளப் போவணும்ன்னா குட்டை ஒண்ணு இருக்கு. அந்தக் குட்டையோட கரை மேலத்தாம் போயாவணும்.

            ரோட்டையும், குட்டையையும் ஒட்டுனாப்புல வடவண்டப் பக்கம் ஒரு குப்பைக் குழி வேற. அதாவது தெரு தொடங்குற பத்தடி தூரத்துக்குள்ளார. அந்தப் பக்கத்துல இருக்குற அத்தனெ சனங்களோட வூட்டுலேந்தும் மாட்டுச் சாணியும் வந்து குமியுற எடம் அந்தக் குப்பைக் குழித்தாம். சமீப காலமா மாட்டோட சாணியோட வூட்டுல ஒடைஞ்ச ஒடைசல்லு, பழந்துணின்னு கணக்கு வழக்கில்லாம எல்லாம் அந்த எடத்துலத்தாம் குமியுது. மழை நேரங்கள்ல அந்த குட்டைக் கரையும் குப்பைக் குழியும் தண்ணியும் ஒண்ணா கலந்து தண்ணி எங்க இருக்கு, ரோடு எங்க இருக்கு, குட்டை எங்க இருக்குன்னு தெரியாம போயிடும்.  பகல்ல அந்த எடத்தப் பாத்தவங்களுக்கு தண்ணியா நின்னாலும் அனுமானிச்சி நடந்துடலாம். கரண்டுப் போன ராத்திரியிலன்னா ரொம்ப கஷ்டந்தாம். மொழங்காலு மட்டும் தண்ணியில நடந்து அந்த ரோட்டு வழியா வூட்டுக்குப் போறதுல்லாம் பூக்காரத் தெரு சனங்களுக்குச் சர்வ சாதாரணம்.

            மழை இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அடிச்சப் பெறவு மழைத்தண்ணி வடியுற வரைக்கும் பூக்காரத் தெருவோட குட்டைக் கரையில மொழங்காலுக்கு மேலத்தாம் தண்ணிப் போவும். அதுக்குக் கொஞ்சம் மின்னாடி போனதால அங்க ரோடு தெரிஞ்சதெ வெச்சு, அந்த எடத்துல வெச்சு வண்டிக்கார்ர டிரைவரு ரிவர்ஸ் எடுத்திருக்காம் வண்டிய. கரண்டுப் போயி நின்ன நேரத்துல வெளிச்சமும் அத்துப் போயிருந்திருக்கு. இத்தனைக்கும் பின் சீட்டுல வேலன் உக்காந்திருக்காம். மழை அடிச்சிக்கிட்டு ஊத்துனதால அவ்வேம் எறங்கி ரிவர்ஸ் பாக்கமா வுட்டுப்புட்டாம். ரோடுதாம் கண்ணுல தெரியுதுங்றதே வெச்சி, அந்த எடத்துக்குக் கொண்டு போயி ரிவர்ஸ் அடிச்சி இன்னோவா கார்ரத் திருப்பிருக்காம் வண்டிக்கார்ரேம். 

            வண்டி பின்னாடி போனது போனதுதாங். மின்னாடி வார மாட்டேங்குது. நல்லா சகதியல மாட்டிக்கிடுச்சு. குப்பைக்குழிக்குப் பக்கத்துல இருக்குற சகதிக்குள்ளயே சக்கரம் சுத்துது. அந்தச் சகதி களிமண்ணா? மாட்டுச் சாணியும் மண்ணும் கலந்ததா?ன்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லாம் ஒண்ணுச் சேந்த ரண்டுங்கெட்டான் சகதி. அந்தச் சகதியிலேந்து கெளம்பி வர்றதுக்கான பிடிமானம் வண்டிக் சக்கரத்துக்குக் கெடைக்கல. வண்டிய அந்தாண்ட இந்தாண்ட நவுத்த முடியல. அதுவும் இந்த ஊரு களிமண்ணப் பத்திச் சொல்லணுமா? அதெப் பத்தி கதெ கதெயா எழுதலாம். களிமண்ணுல சிக்குன வண்டிச் சக்கரமும், பூச்சிப் பல்லுல மாட்டிக்கிட்டு எலும்புத் துணுக்கும் அதோட வேலையக் காட்டிப்புடும். வண்டிச் சக்கரம் ஒரே எடத்துல நின்னுச் சுத்துற காத்தாடியப் போலச் சுத்துதே தவுர, நவுந்துப் போயி சுத்த அதுக்கு கிரிப்புக் கெடைக்காம தள்ளாடுது.

            வண்டிக்கார்ர ‍டிரைவரு பாத்துப்புட்டு, வேலன்கிட்டெ, "கொஞ்சம் போன்ன போட்டு ஆட்கள வாரச் சொல்லுங்க!"ன்னிருக்காம். வேலன் விகடுவுக்குப் போனப் போடப் போட நாட் ரீச்சப்பிள்ன்னு அலுத்துக்காம சலிச்சுக்காம ஒரு பொண்ணு பாட்டுக்குப் போன்ல  சொல்லிட்டுக் கெடந்திருக்கு. அடுத்ததா பாலாமணி, பிந்துன்னு ஒருத்தரு மாத்தி நம்பருக்கு அடிச்சிட்டெ கெடந்திருக்காம். அதெ பழையப் பல்லவியத்தாம் போனு நாட் ரீச்சபிள்ன்னு சொல்லுதே தவுர தொடர்புக்குக் கொண்டுப் போயி வுட மாட்டேங்குது. மழையும் ச்சோன்னு அடிச்சிக்கிட்டு ஊத்துது.

            என்னத்தெப் பண்ணுறதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்சுக்கிட்டு இருந்தவனுவோ யாராச்சும் ஒருத்தரு எறங்கிப் போயிச் சொன்னத்தாம் வேல ஆவுமுன்னு தெரிஞ்சப்போ, வண்டிக்கார்ர டிரைவரு சொல்லிருக்காம், "நாம்ம எறங்கிப் போயிக் கூப்புட்டா அடையாளம் தெரியாது யாருக்கும். நாம்ம வண்டியிலயே இருக்கேம். நீஞ்ஞப் போயி கொஞ்சம் கூப்டாங்க!"ன்னு. வேலனும் செரின்னு எறங்கி மழையில நனைஞ்சிக்கிட்டு ஓடியாந்தாம்.

            தவிப்போட வந்து நின்ன வேலனோட அப்ப குடைய எடுத்துக்கிட்டு அங்கப் போன ஆளுங்கத்தாம் விகடுவும், பரசுவும். வண்டிய மின்னாடிப் பிடிச்சி இழுத்தா மின்னாடியும் வர மாட்டேங்குது. பின்னாடிப் பிடிச்சித் தள்ளினாலும் முன்னாடி போவ மாட்டேங்குது. வண்டியில உக்காந்துகிட்டு டிரைவரு கியர்ரப் போட்டுக்கிட்டு, "ம்! ந்நல்லா பிடிச்சித் தள்ளுங்க!"ங்றாம். "ம்! தள்ளு! தள்ளுத் தள்ளு! ந்நல்லா இழுத்துப் பிடிச்சித் தள்ளு!"ன்னு வேலனும் சத்தத்தெப் போட்டுத் தள்ளுறாம். அவ்வேம் இருக்குற உடம்புக்கு ஒரு ஒதெ வுட்டான்னா வண்டி அந்தாண்டப் போயி வுழுவணும். ஆளு அம்மாம் கனமான ஆளா இருக்காம். வண்டி என்னவோ அவ்வேம் ஒடம்பையும் மதிக்குறாப்புல யில்ல, விகடு, பரசுன்னு தள்ளுற ஆளுங்களுக்கு அசைஞ்சிக் கொடுக்குறாப்புலயும் யில்ல.  என்னென்னவோ ஆயிடுச்சு. வண்டி நல்லா ஒறுப்பான எடையான வண்டியா இருக்கும் போலருக்கு. அசைஞ்சிக் கொடுக்க மாட்டேங்குது. என்னத்தெ கியர்ரப் போட்டுத் தூக்குனாலும் சக்கரம் ரண்டு சகதிக்குள்ளாரயே சுத்திக் குழியப் பறிச்சிக்கிட்டே இருக்குதே தவுர வெளியில கெளம்ப மாட்டேங்குது.

            குடைய எடுத்துட்டுப் போயி பிரயோசனம் இல்லாமப் போயிடுச்சு. குடைய பிடிச்சிக்கிட்டு வண்டிய எப்பிடித் தள்ளுறதுன்னு குடைய மடக்கி வண்டிக்குள்ளயேப் போட்டுகிட்டுத் தள்ளுனதுல எல்லாரும் தொப்பரையா நனைஞ்சு நின்னதுதாம் மிச்சம். மழையில நனையாம போறதுக்குத்தாம் வண்டி வாங்குறதுன்னா, யிப்போ வண்டிய அந்தாண்ட தள்ளிக் கொண்டுப் போறதுக்குள்ள வண்டிக்கு வெளியில எல்லாரும் மழையில நனைஞ்சாச்சு. மழைத்தண்ணி வேற சுள்ளு சுள்ளுன்னு மேல அடிக்கிது. அந்த அடி ஒவ்வொண்ணும் வானத்துலேந்து யாரோ சின்ன சின்ன கல்லா வுட்டு எறிஞ்சி அடிக்குறாப்புல இருக்குது, அதாச்சி, ஏம்டா அறிவுக் கெட்ட பயலுவோளா! ஒஞ்ஞளுக்கு வேற வேல இல்லியா? போயி வூட்டுல படுங்கடான்னு வெரட்டுறாப்புல. வண்டியும் கெளம்ப மாட்டேங்குது, வானமும் பொத்து பொத்துன்னு மழைத்தண்ணியால அடிக்கிறதையும் நிப்பாட்ட மாட்டேங்குது.

            ஒரு ரண்டு பலவையப் பாத்து பின்னாடிச் சக்கரத்துக்குக் கீழே கொடுத்தா வண்டிக் கெளம்பிடும்ன்னு யோசனையக் கொடுத்தாம் வண்டிக்கார்ர டிரைவரு. மழை பாட்டுக்கு ச்சோன்னு அடிச்சிக்கிட்டு இருக்குற நேரத்துல எந்த வூட்டுலப் போயிப் பலவைய வாங்குறது? அடிக்குற மழையில அத்து வேற கதவா தொறந்தா வூட்டுக்குள்ளாரயும் வந்து அடிச்சிப் பெனாட்டி எடுத்துப்புடுமோன்னு அவனவனும் கதவச் சாத்திடுல்லா, பூட்டையும் போட்டுட்டுல்லா படுத்திருப்பாம். ஒரு வேள கதவெத் தொறந்து வெளியில ஆளு எவனாச்சும் வெளியில வந்தாலும், எந்த வூட்டுல வண்டி இப்படிச் சகதியில சிக்கும், அதுக்குப் பலவைய வெச்சிருப்போம்ன்னு வெச்சிருப்பாங்க? வண்டியத் தள்ளுறது, இழுக்குறதுன்னு எவ்வளவையோ செஞ்சிப் பாத்தாச்சி. அதைத்தாம் செய்யணும்ன்னா, அதாங் கடெசீ வழின்னா வேற என்னத்தெ பண்ணுறதன்னு பக்கத்துல இருந்த பரமுவோட வூட்டுலப் போயிக் கதவெத் தட்டி விசயத்தச் சொன்னாம் விகடு. பரமுவோட அப்பா வெளியில வந்தவரு, ஒரு குடையப் பிடிச்சிக்கிட்டு டார்ச் லைட்டோட வந்துப் பாத்தாரு. வண்டிய ஒரு சுத்துச் சுத்துனாரு.

            "கோயில்லேந்து வர்றப்பவே நனைஞ்சிக்கிட்டுத்தாம் வந்தேம். வந்துத் தொடைச்சிக்கிட்டு அசந்திருக்க மாட்டேம். யிப்போ இருக்குற நெலையப் பாத்தா மறுக்கா கொடையத் தூக்கி அந்தாண்டப் போட்டுட்டு நனைய வேண்டியதால்லா இருக்கும் போல. வண்டிய ஒடனே எடக்கணுமா? எப்பிடி? ஏன்னா வண்டி நிக்குற நெல அப்பிடி!"ன்னாரு பரமுவோட அப்பா. விகடு முழிச்சிக்கிட்டுப் பார்த்தாம்.

            "வண்டி நைட் ஹால்ட்த்தாம்!"ன்னாம் வேலன்.

            "பெறவென்ன? மழெ வேற பேஞ்சிட்டுக் கெடக்கு. இப்போ ஒண்ணும் வேலயாவாது. காலங்காத்தால வெக்காளிக்கிட்டும். நாமளே ஆளக் கொண்டாந்து அந்தாண்ட நவுத்திப்புடுறேம். அஞ்சாறு ஆளு மொறையா வந்தானுவோன்னா வண்டிய அப்பிடியே அலாக்காத் தூக்கி அந்தாண்டவே வெச்சிப்புடுவானுவோ. அதுக்கு விடிஞ்சாத்தாம் மார்க்கமுண்டு. இப்போ வெளிச்சமும் தொணையில்ல, அடிக்கிற மழையும் தோதில்ல. பெய்யுற மழையில வெள்ளம் வந்து ஒண்ணும் வண்டிய அடிச்சிட்டுப் போவப் போறதில்ல. வண்டியோட கதவெ நல்லா சாத்திப்புட்டுப் போயி படுங்க. வூட்டுக்குப் பக்கத்துலதான வண்டிக் கெடக்குது. பாதுகாப்பா கெடக்கும். பாத்துக்கிடலாம்!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "ஒரு ரண்டு பலவெ கொடுத்தீயேன்னா வண்டிய எடுத்துப்புடலாம்!"ன்னாம் வண்டிய ஓட்டிட்டு வந்த டிரைவரு.

            "வண்டிய எடுக்காம வுட மாட்டீயே போலருக்கே! சொல்றதையும் வாங்கிக்கிட மாட்டேங்குதீயே! வேறென்ன பண்ணுறது? சித்தெ இருங்க!"ன்னு சொல்லிட்டு வூட்டுக்குப் போனவரு, கொல்லப் பக்கம் போயி கறையான் அரிச்சிப் போயி பொத்தலா கெடந்த ரண்டு பலவையக் கொண்டாந்தாரு. அவரு தூக்கிட்ட வர்தப் பாத்து விகடுவும், பரசுவும் ஓடிப் போயி வாங்கிக் கொண்டாந்து டிரைவரு சொன்னாப்புல பின்னாடி சக்கரத்துக்கு அடியிலே கொடுத்து வண்டிய எடுத்தா, பலவை சக்கை சக்கயைா நொறுங்கி சகதியில மெதக்குது. கறையான் அரிச்சப் பலவெ, வீணாப் போன பலவன்னாலும் பரமு வீட்டோட பலவெ ரண்டு சுக்கு நூறானதுதாம் மிச்சம்.

            "இதுக்கு மேல முடியாதுடா சாமீ! வண்டிப் பாட்டுக்கு வண்டி கெடக்கட்டும். நீங்கப் பாட்டுக்கு வர்றவங்க வாங்க! குளிரு தாங்கல. பல்லு தந்தி அடிக்க ஆரம்பிச்சிட்டு. போன ஒடனே தண்ணிய ஊத்திக் குளிச்சிப்புடணும். சளிப் பிடிச்சதுன்னா மனுஷன வுடாது ஒரு வார காலத்துக்கு!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            டிரைவரு பாத்தாம். "நீஞ்ஞ கெளம்புங்க. நாம்ம வண்டியில இருக்கேம்! இன்னும் நாலு ஆளெ கொண்டாந்தீங்கன்னா எப்படியும் எடுத்துப்புடலாம்!"ன்னாம்.

            "யப்பா நீயி அடங்க மாட்டே! இந்த மழையில எவ்வேம் வருவாம்? கூப்ட்டா மூஞ்சுலயே மொத்துவாம்! கெளம்பி வாப்பா மொதல்ல! வண்டிக்குத்தாம் ஒண்ணும் ஆவாதுன்னு பெரியவரு சொல்றாப்புல யில்ல!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "வண்டி ரொம்ப வெல. வண்டிக்கு ஏதுன்னா மொதலாளி தொளைச்சிப்புடுவாம்! நாம்ம கதவெ சாத்திக்கிட்டு வண்டியிலயே கெடக்கோம்"ன்னாம் வண்டிக்கார்ர டிரைவரு.

            "சாப்பாட்ட முடிச்சிட்டு வந்து வண்டியிலயே படுத்துக்கிடலாம்ப்பா!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "கொஞ்சம் முயற்சிப் பண்ணிட்டு வர்றேம்!"ன்னாம் டிரைவரு.

            "வண்டியிலத்தாம் படுக்கணும்ன்னு அவசியமில்லே. நம்ம வூட்டுல கூட படுத்துக்கோங்க. அங்கப் போயித்தாம் சாப்புடணும்ன்னு யில்ல. நம்ம வூட்டுலயும் சாப்புட்டுக்கிடலாம். கிட்டன்ஸ்லத்தானே வூடு இருக்குது! பொழுது விடிஞ்சு மழெ விட்டுச்சுன்னா பொசுக்குன்னு ஆயிடும் வேல! செரி கெளம்புங்க! நம்ம ஊர்லத்தானே வண்டிக் கெடக்குது. ஒண்ணும் பயப்பட வாணாம்!"ன்னாரு பரமுவோட அப்பா.

            அதுக்கு மேல வேல ஆவாதுன்னு விகடு, பரசு, வேலன் மூணு பேரும் கெளம்ப பரமுவோட அப்பாவும் கெளம்புனாரு. கெளம்புறப்போ விகடு கேட்டாம், "பரமு செளரியமா இருக்கானா?"ன்னு.

            "யிப்பத்தாம் அவ்வேம் ஞாபவம் வந்துச்சா? அவ்வேம் ஞாபவம் வர்ற வண்டி ஒண்ணு வந்து இஞ்ஞ மாட்ட வேண்டிருக்கு! படிச்சிப்புட்டு ஒன்னயப் போல ஊர்ல வேலையில இருக்கோணும். வெளிநாட்டுலப் போயில்லா வேலைன்னு கெடக்குறானுவோ! முந்தா நேத்திக் கூட போன் அடிச்சாம். ஒந் தங்காச்சிக் கலியாணத்தப் பத்திச் சொன்னேம். சந்தோஷப்பட்டுக்கிட்டாம்! ஒமக்கு போன அடிக்கச் சொல்றேம்! மழெ வுடறாப்புல தெரியல. வூடுப் போயிச் சேர்றதப் பாருங்க மொதல்ல!"ன்னாரு பரமுவோட அப்பா.

            மூணு பேத்துமா கெளம்பி மேற்கால வர்ற வர்ற அங்க கெழக்கால வண்டி ம்ம் ம்ம்ன்னு உறுமிக்கிட்டு மின்னாடி போவப் பாக்குறது கேக்குது. சத்தந்தாம் மின்னாடிப் பாயுதே தவுர வண்டி மின்னாடிப் பாய மாட்டேங்குது. திரும்பிப் பாக்குறப்போ காரோட லைட்டு வெளிச்சம் அந்த எடத்துல மட்டும் பளிச்சுன்னு தெரியுது.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...