5 Sept 2020

ராத்திரி நேரத்து நடையிலே!


 ராத்திரி நேரத்து நடையிலே!

செய்யு - 555

            மணி பதினொன்னரைய நெருங்குனுச்சு. பாதிச் சனங்கப் படுக்கையப் போட்டுருந்துச்சு. பாதி சனங்க உக்காந்து பேச்சு அளந்துகிட்டு இருந்துச்சு. வெளியில ஊத்துற மழெ அது பாட்டுக்கு ஊத்திக்கிட்டு இருந்துச்சு.

            "சாப்புடுறத வுட்டுப்புட்டு எங்கடா போயி நனைஞ்சிட்டு வந்து நிக்குதீயே?"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா தெரியாததப் போல.

            "லேசா தண்ணிய ஊத்திட்டு அப்படியே தொடைச்சிட்டு வந்துடுறோம்!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "அப்பிடியே கொல்லப் பக்கம் போங்கடா!"ன்னு பெரிம்மா துண்டத் தூக்கிப் போட்டுச்சு.

            மூணு பேரும் சாப்புட உக்காந்தப்போ, "எல்லாரும் சாப்புட்டாச்சா?"ன்னாம் விகடு.

            "மூணு பேத்துதாங் பாக்கி! அத்து நீங்கத்தாம்! எல்லாம் கட்டயச் சாய்ச்சு படுத்துட்டுப் பாருங்க!"ன்னுச்சு பெரிம்மா.

            "பெரிப்பா?"ன்னாம் விகடு.

            "சாப்புடுறப்ப அதெ நாம்ம கவனிக்கலீயேடா! எங்கடா கெடக்கு? போயி பாருங்கடா!"ன்னுச்சு பெரிம்மா.

            "மா‍டியில கொட்டாய்ல படுத்துக் கெடக்குதுல்லா!"ன்னாம் விகடு. அதெ கேட்டுட்டு, படுத்துக் கெடந்த சந்தானம் அத்தான் எழும்புனுச்சு. எழும்பிப் போவ நெனைச்ச விகடுவெ கையால அமத்திட்டு அத்து ஏறிப் போனுச்சு. மாடி மேல ஏறிப் பாத்தா பெரிப்பா ஒலகத்தெ மறந்துப் போயிக் மல்லாந்துப் போயிக் கெடக்கு. "வூட்டுல எவ்ளோ வேல நடந்துகிட்டு இருக்கு. நீயிப் பாட்டுக்கு ஒருத்தருக்கும் தெரியாம மேல வந்துப் படுத்துகிட்டு ரவுசு பண்ணிட்டுக் கெடக்கே. எழும்பிச் சாப்புட வா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "சாப்பாடல்லாம் எப்பயோ முடிஞ்சாச்சுடா! எத்தனெ தடவெடா கலியாணத்தெ முடிச்சி எத்தனெ தடவடா சாப்பாட்டப் போடுவீயே?"ன்னுச்சு பெரிப்பா.

            "கலியாணச் சாப்பாடு முடிஞ்சி பொழுதாச்சு. ராச்சாப்பாடு சாப்புடாம படுக்கக் கூடாது. சாப்புட்டு வந்து படு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "சாப்பாடும் வாணாம். மண்ணும் வாணாம். ஆளெ வுடுங்டா சாமீ!"ன்னு தூக்கக் கலக்கத்துல மொனகுனுச்சு பெரிப்பா.

            "பாட்டிலு ஒண்ணு இருக்கு. வேணும்ன்னா சாப்புட்டு வா! வாணாம்னனா நீயிப் பாட்டுக்குப் படுத்துக்கோ! நமக்கென்ன ஆச்சு?"ன்னு சந்தானம் அத்தான் சொல்லிட்டுக் கீழே வந்துடுச்சு.

            பெரிப்பா தடுமாறி தடுமாறி மாடியிலேந்து கீழே எறங்கி வந்துச்சு. "ஒரு மனுஷன் சாப்புடாம மாடியில கெடக்குறானேன்னு எதாச்சும் நெனைச்சுச்சா? எல்லாம் அதது வேலையப் பாத்துப்புட்டுச் சாப்புட்டுப் படுக்குறதுல நிக்குதே தவுர நம்மள யாரும் நெனைக்கலீயே?"ன்னுச்சு பெரிப்பா. சாப்புட்டுட்டு இருந்த மூணு பேத்தோட உக்காந்து சாப்புட ஆரம்பிச்சிது பெரிப்பா. சாப்பாடு முடிஞ்சதும் சந்தானம் அத்தானப் போயிப் பாத்து, "சாப்டாச்சு. தீர்த்தத்த ஊத்து!"ன்னுச்சு பெரிப்பா. "இருந்தாத்தானே ஊத்த? காலையில வாங்கி ஊத்தி வுடுறேம் போ! போயிப் படு! சின்ன புள்ளையாட்டம் வந்து நின்னுட்டு முட்டாயிக் கொடு, ரொட்டிக் கொடுன்னா? முட்டாயி, ரொட்டியா நீயி கேக்குறது? நெனைச்ச நேரத்துல வாங்கியாந்துக் கொடுக்குறதுக்கு?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "கார்ல வெச்சிருப்பே! போயி எடுத்தாடா!"ன்னுச்சு பெரிப்பா.

            "நாம்ம ன்னா கார்ல வெச்சு யேவாரமா பாக்குறேம்? ரோதன பண்ணீன்னா நாளைக்குக் கெடைக்குறதையும் யில்லாம பண்ணிடுவேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "மனுஷன்னா வாக்குச் சுத்தம் வாணும்டா! வாக்குச் சுத்தம் யில்லாதவல்லாம் ன்னடா மனுஷன்? நீயில்லாம் மனுஷன்?"ன்னுச்சு பெரிப்பா.

            "சொல்லீட்டீல்ல பெரிய மனுஷா! இஞ்ஞப் படுக்குதீயா? மேலப் போறீயா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "இஞ்ஞ மனுஷன் படுப்பானாடா? நீஞ்ஞல்லாம் மனுஷனே கெடையாதுடா! ஒஞ்ஞ கூட எவ்வேம் படுப்பாம்?"ன்னு சொல்லிக்கிட்டு கொஞ்சம் தடுமாற்றமா மாடி மேல ஏறுனுச்சு பெரிப்பா. அது கெளம்பி அந்தாண்ட போவப் போவ முழிச்சிக்கிட்டு இருந்த சனங்க ஒண்ணு ரண்டு சனங்க இங்க சிரிக்க ஆரம்பிச்சது. "இன்னிக்கு விடிய விடிய சிவராத்திரிதாம் போ! காலையில வேற சாப்பாட்ட முடிச்சி அழைப்பு இருக்கு. சுருக்கா படுத்து சுருக்கா எழும்பித் தொலைங்க! எலே சந்தானம்! நீயாச்சும் போயி அதுக்குத் தொணையா மாடில்ல படுடா! ஒண்ணுக்குப் போறதுக்குன்னு எழும்பித் தொலைச்சு மாடியிலேந்து விழுந்து வைக்கப் போவுது!"ன்னுச்சு பெரிம்மா.

            "ஏம் நீயிப் போயி படுக்க வேண்டித்தானே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ஆமாம்டா! நமக்கு இன்னிக்குத்தாம் கலியாணம் ஆயி மொத ராத்திரிப் பாரு! போடா போயி படுடா மேல!"ன்னு சொல்லிட்டு உள்ளாரப் போயிடுச்சு பெரிம்மா. சந்தானம் அத்தான் ஒண்ணும் சொல்ல முடியாம, "ஒரு எடத்துல படுக்க வுடுதுங்களாடா சனங்க!"ன்னு மொணகிட்டெ மாடி மேல ஏறுனுச்சு.

            "படுத்துக்கிட்டுப் பேசுவமா? பேசிட்டே படுப்பமா? தம்பீ இருக்குற எல்லாத்துக்கும் பாயோ, போர்வையோ கொண்டாந்து போடு!"ன்னுச்சு பரசு அண்ணன். கொஞ்ச நேரம் தூக்கம் வராம திண்ணையில படுத்துக் கெடந்த மூணு பேத்துக்கும் பேச்சு வளந்துச்சு. மிச்ச சனங்க எல்லாம் கொறட்டைய அடிச்சிட்டுக் கெடந்துச்சுங்க.

            அப்பத்தாம் பிந்து நடுக்கூடத்தத் தாண்டி திண்ணைக்கு வந்துச்சு. "ன்னா இன்னும் நீயி தூங்கலையா?"ன்னாம் வேலன்.

            "நமக்கு இஞ்ஞ தூக்கம் வார மாட்டேங்குது. யக்கா வூட்டுக்குப் போயிடுவேம் வாஞ்ஞ!"ன்னா பிந்து.

            "ன்னா வெளையாட்டா? வெளியில மழெ அடிச்சிக்கிட்டு ஊத்துது. கரண்டு வேற யில்ல. இந்த நேரத்துல எஞ்ஞ வெளியிலக் கெளம்பிக்கிட்டு? படுத்துக்கிட்டு அப்பிடியே கண்ண மூடிகிட்டா தூக்கம் வந்துடும். இதுக்காக இந்த ராத்திரியில, மழையில, மணி பன்னெண்டுக்கு மேல ஆவப் போவுது, வெளியில கெளம்புறது நல்லதில்ல!"ன்னுச்சு பரசு அத்தான்.

            "யிப்போ வாறீயளா? யில்ல நாம்ம மட்டும் கெளம்பி ஒத்தையில கார்ல போயிட்டு இருக்கவா?"ன்னுச்சு பிந்து. வுட்டா வெளியில கெளம்பி ஓடுற நெலையில நின்னா பிந்து. இதென்னடா இந்த நேரத்துல வந்து சோதனைன்னு நெனைச்சுக்கிட்டு, "இஞ்ஞ ன்னா கொறைச்சலு? அசந்தா தூக்கம் வர்றதும் தெரியப் போறதில்ல, முழிக்கப் போறதும் தெரியப் போறதில்ல. ரண்டு நிமிஷந்தாம் தூங்குனதுப் போல இருக்கும். பொழுது விடிஞ்சிப் போயிடும். பொழுது விடிஞ்சிட்டா வேல முடிஞ்சிது. அஞ்சு மணி நேரப் பொழுது. அதுக்குப் போயி மழையில அலைஞ்சிக்கிட்டு?"ன்னு பரசு அண்ணன் மறுபடியும் சொன்னிச்சு.

            "அதெல்லாம் முடியா. டிரைவரு எங்க? எழுப்பி வண்டிய எடுக்கச் சொல்லுங்க!"ன்னுச்சு பிந்து.

            "அதானே பெரச்சனெ. வண்டிச் சகதியில சிக்கிடுச்சு. பொழுது விடிஞ்சாத்தாம் எடுக்க முடியும்!"ன்னாம் வேலன்.

            "வண்டி ல்லன்னா ன்னா? கொடைய எடுங்க! கெளம்புவேம்!"ன்னா பிந்து.

            "இதுக்கு மேல நம்மாள நெலமையச் சமாளிக்க முடியாது. இவ்வே குதிக்க ஆரம்பிச்சா வூடு தாங்காது, பூகம்பமே வந்துப்புடும்!"ன்னாம் வேலன்.

            "யண்ணே! நாமளும் அப்பிடியே தொணையா போயிட்டு வந்துடுவோமா?"ன்னாம் விகடு.

            "நம்மாள முடியாதும்பீ! ஒடம்பெல்லாம் அசந்து வருது. சித்தெ படுத்து எழும்புன்னாத்தாம் விடிஞ்சா பொழைப்பேம். ல்லன்னா போயிச் சேந்துடுவேம் போலருக்கு. நேத்தி ராத்திரிக்கி மண்டபத்துலயும் தூக்கம் யில்ல. அத்து ன்னாம்பீ கொசு அன்னா கடி கடிக்குது? எனக்கென்னன்னு நீயிப் பாட்டுக்குத் தூங்கிட்டுக் கெடக்கே?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "சரிண்ணே! தொணைக்கு நாம்ம போயிட்டு வர்றேம்!"ன்னாம் விகடு.

            "திரும்பி வர்றப்ப தனியாவா ஒத்தையில திரும்புவே?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "ஒத்தையில திரும்ப வாணாம். அஞ்ஞ எஞ்ஞ யக்கா வூட்டுலயேப் படுத்துகிட்டுக் காலங்காத்தால திரும்பலாம்!"ன்னுச்சு பிந்து.

            "பாரும்பீ! அவுங்க மட்டும் இஞ்ஞ தங்க மாட்டாங்களாம்! நாம்ம மட்டும் அஞ்ஞ தங்கணுமாம்!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "ஏம்ண்ணே! சந்தானம் அத்தானோட காரன்ன கேட்டுப் பாக்கலாமா?"ன்னாம் விகடு.

            "இப்பதாம் மாடிக்குப் போயிப் படுக்கப் போயிருக்கு. அநேகமா படுத்திருக்கும். நேத்திக்கு ராத்திரி முழுக்கா சென்னைப் பட்டணத்துலேந்து டிரைவிங்கு. இன்னிக்கு முழுக்க பொண்ணு மாப்புள்ளையோட அலைஞ்சிருக்கு. எழுப்புனா கொன்னோ போட்டுடும். அதொட முழியப் பாத்தியா? செவந்துப் போயிக் கெடக்கு! பேயாம படுக்குற வழியப் பாருங்க எல்லாம். இந்த மழையில வேலையத்த வேல இத்து!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "கார்லாம் வாணாம். யாரயும் எழுப்பித் தொந்தரவுல்லாம் பண்ண வாணாம். எஞ்ஞள இஞ்ஞ இருக்கச் சொல்லித் தொந்தரவு பண்ணாம போவ வுடுங்க!"ன்னா பிந்து.

            இதுக்கு மேல தடுக்குற வேல ஆவாதுங்றது புரிஞ்சிப் போயி கெளம்புன வேலன்கிட்டயும், பிந்துகிட்டெயும் ரண்டு கொடையக் கொடுத்துட்டு, விகடுவும் ஒரு கொடைய எடுத்துக்கிட்டு ஒவ்வொண்ணும் கையில செல்போன்ல இருக்குற டார்ச்சை அடிச்சிக்கிட்டு கெளம்ப தயாரானாங்க. வூட்டுலப் பாக்க ஒவ்வொரு சனமும் அசந்துத் தூங்கிட்டுக் கெடந்துச்சுங்க. முழிச்சிட்டு இருந்ததுதுன்னா இப்போ அந்த நாலு பேருதாம். பரசு அண்ணன் பாத்துச்சு, அதுக்கு மனசு கேக்காம அதுவும் கெளம்பிடுச்சு. ஊரு ஒலகமே ஒறங்கிக் கெடந்துச்சு. நாலிரண்டு எட்டுப் பாதங்க மட்டும் அடிக்கிற மழையில எட்டு வெச்சு நடந்துகிட்டு இருந்துச்சுங்க. முச்சந்தித் திரும்பி கேணிக்கரை தாண்டி வாள்பட்டறையக் கடந்து நடந்துப் போயிட்டு இருக்குறப்போ, சரியா பாவாடைச் சாமி கோயில்ட்டப் போயிட்டு இருக்குறப்போ மழெ சுத்தமா விட்டு வெறிச்சாப்புல இருந்துச்சு. வானத்துல நட்சத்திரங்க நல்லா தெரிய ஆரம்பிச்சது.

            எல்லாரும் கொடைய மடக்குனாங்க. ஒரு சொட்டுத் தண்ணி வானத்துலேந்து ஊத்தல. மழெ பேஞ்ச வானாமான்னு பாக்க அதிசயமா இருந்துச்சு. வேலன் வேக வேகமா பாவடை சாமிக் கோயிலு படிக்கட்டுல எறங்குனாம். ரோடு மேடு. கோயிலு கொஞ்சம் பள்ளங்றதால ரோட்‍டுலேந்து படிகட்டு எறக்கமா இருந்துச்சு.

            "இந்த நேரத்துல இத்து தேவையா? வூட்டுக்குப் போயிச் சேர்ற வழியப் பாக்கலாம்!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "இவரு ஒரு சக்தி வாய்ந்த சித்தரு. ஒவ்வொரு தவா இஞ்ஞ வர்றப்பயும் வாரணும்ன்னு நெனைக்கிறது. முடியாம போயிடுது. இன்னிக்குத்தாம் வாய்ப்புக் கெடைச்சிருக்கு!"ன்னாம் வேலன்.

            "அதுக்குன்னு நடுராத்திரியிலயா?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            வேலன் பூட்டிக் கெடந்த கோயிலுக்கு மின்னாடி நின்னுகிட்டு வேண்டிக்கிட்டு நின்னாம்.

            "ராத்திரிப் பொழுது ந்நல்லா போவுதம்பீ!"ன்னுச்சு பரசு அண்ணன். ஒரு பத்து நிமிஷம் ஆயிருக்கும். டிவியெஸ்ஸூ எக்செல்ல சித்துவீரன் வந்துச்சு. ரோட்டுல நின்னுகிட்டு இருந்த பிந்துக் கைய காட்டி நிறுத்துனுச்சு. விகடுவையும், பரசுவையும் பாத்த சித்துவீரன், "பிந்து போனு அடிச்சிது. மழையா இருக்கேன்னேம். கெளம்பி வாரதுன்னுச்சு. சொன்னது வாரலையேன்னு உக்காந்திருந்தேம். மழெ சித்த வுட்டுச்சா. அதாங் பாத்துப்புட்டு வந்துப்புடுவேம்ன்னு ஓடியாந்தேம்!"ன்னுச்சு சித்துவீரன்.

            "ஏங்க நாம்ம வண்டியில ஏறிக் போறேம்!"ன்னு சொல்லிட்டு வேலனோட பதில எதிர்பார்க்காம அது பாட்டுக்குச் சித்துவீரனோட வண்டியில பின்னாடி ஏறிட்டு வண்டிய எடுக்கச் சொல்லி போயிட்டே இருந்துச்சு.

            விகடுவும், பரசுவும் ரோட்டோரத்துல இருந்த கட்டையில உக்காந்துச்சுங்க. "பாரும்பீ! இந்தப் பொண்ணு எல்லா வேலையையும் போன்ல பாத்துட்டுத்தாங் கெளம்பிருக்கு!"ன்னு மொல்லமா சொன்னுச்சு பரசு அண்ணன் விகடுவோட காதுக்கு மட்டும் கேக்குறாப்புல. ரொம்ப நேரத்து வேண்டுதல முடிச்சிட்டு படியேறி வந்தாம் வேலன்.

            "அப்பிடி ன்னா வேண்டுதலு நடுராத்திரியில?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "வேண்டுதல சொன்னா பலிக்காது!"ன்னாம் வேலன். அதுக்குள்ள பிந்துவ வூட்டுல விட்டுப்புட்டு திரும்பி வந்துச்சு சித்துவீரன்.

            "நீஞ்ஞ வூட்டப் பாக்க கெளம்புங்க. காலையில நாம்ம வந்துப்புடறேம்!"ன்னாம் வேலன் சித்துவீரனோட வண்டியில ஏறிக்கிட்டு.

            "பாத்துப் பத்திரமா வூடுப் போயிச் சேருங்கப்பா! இருட்டு நேராம இருக்கு!"ன்னு சொல்லிட்டு வண்டியக் கெளப்பிட்டுப் போனுச்சு சித்துவீரன்.

            "அததானடாம்பீ நாம்ம சொன்னேம்! இப்ப நமக்கே சொன்னா எப்பூடி? இனுமே வூடு திரும்பி என்னத்தெ ஆவப் போவுது? வாயேம் இப்பிடியே ஒரு நடெ நடந்துட்டுத் திரும்புனா பொழுது விடிஞ்சிடும். தூங்குற வேலையாச்சும் மிச்சமாவும்!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "இப்பிடியாவாண்ணா?"ன்னாம் விகடு.

            "ஆமாம்பீ! நாமளும் ராத்திரியில இந்த மாதிரிக்கி ரோட்டுல நடந்ததில்ல!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "இப்பிடியே நடந்தா கொஞ்ச தூரத்துல சுடுகாடு வந்திடும்ண்ணே!"ன்னாம் விகடு.

            "அப்போ வூடு திரும்பிடலாம்பீ! ஆன்னா அலுப்பா இருக்கும்பீ! இஞ்ஞயே படுத்துடலாமாம்பீ?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "வூட்டுல யாராச்சும் எழும்பி தேடுனா சங்கடமா போயிடும்ண்ணே!"ன்னாம் விகடு.

            "ஆமாம்பீ! அதுவும் சனங்க நம்மள நம்பாது! சரக்கடிக்கத்தாம் வெளியில கெளம்பிட்டேம்ன்னு நாளு முழுக்க ஒக்கார வெச்சு ஓட்டியெடுத்துப்புடும்ங்க!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            விகடுவும், பரசுவும் வூட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சாங்க. எந்தச் சலனமும் இல்லாம எல்லாத்தையும் பாத்தபடி கோயிலு மேல சிலையா உக்காந்திருந்தாரு பாவாடை சாமிச் சித்தரு!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...