3 Sept 2020

கொரோனா காலத்துக் கறிகாய்கள்

 


கொரோனா காலத்துக் கறிகாய்கள்

            கொரோனா வந்தத்துக்குப் பெறவு எல்லாருக்கும் கெடைக்குற நேரம் அதிகமா இருக்கு. அந்த நேரத்துல டிவி பாக்குறவங்க இருக்காங்க. மொபைல நோண்டுறவங்க இருக்காங்க. சீட்டு வெளையாடுறவங்க இருக்காங்க. வெட்டியா அரட்டை அடிக்கிறவங்க இருக்காங்க. உபயோகமா வேலப் பாக்குறவங்களும் இருக்காங்க.

            கொரோனாவுக்குப் பயந்துகிட்டு வீட்டுல இருக்குற நேரம் அதிகமா இருக்கு. எவ்ளோ நேரந்தாம் வீட்டுக்குள்ளயே அடைஞ்சிட்டுக் கெடக்க முடியும்ன்னு தோட்டம் போடுறதுல கவனம் கொஞ்சம் அதிகமாவே போனுச்சு. ஏற்கனவே கொல்லையில கத்திரி, வெண்டெ, கொத்தவர, கீரெ இப்படிப் போடுறது உண்டு. பரங்கி, சொரெ, பூசணி போடுற நேரத்துல அதெயும் போட்டு வைக்கிறது உண்டு. அப்பப்ப நேரம் கெடைக்குறப்ப செஞ்ச இந்தக் காரியத்தெ இப்போ முழு நேரமா செய்யுறதுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சது.

            கொரோனா பயத்துல காய்கறி வாங்குறதுலயும் அச்சம் இருக்கத்தாம் செய்யுது. அதெ வாங்கி சோப்பப் போட்டுக் கழுவி, மஞ்சத் தண்ணிய ஊத்திக் கழுவி ஏகப்பட்ட வேலைகளச் செய்ய வேண்டி இருக்கு. அதுக்கு வூட்டுலயே கொஞ்சம் கறி காயி வெளைஞ்சா நல்லா இருக்கும்ன்னு முழு நேரமா அதுல எறங்குனதுல நெரம்பவே கறி காயி வெளைஞ்சு தள்ளுனுச்சு. அக்கம் பக்கத்துலயும் அது போல அவுங்கவங்க போட ஆரம்பிச்சாங்க. ஒருத்தரு மாத்தி ஒருத்தர்கிட்டெ இங்க சுத்தியே கறிகாயி வாங்குகிக்கற அளவுக்கு நெலமெ உண்டாச்சு.

            எதிர் கொல்லையில மொளகா செடி வெச்சதுல அது பாட்டுக்குக் காய்ச்சி பெனாட்டித் தள்ளிப்புடுச்சு. பச்ச மொளவாய்க்குப் பஞ்சமில்லாமல போனதோட, கடைசியல காய்ஞ்ச மொளகா வாங்குற வேலையும் இல்லாமப் போயிடுச்சு. வெச்ச கறிகாய்லயே கீரைதாம் ரொம்ப விஷேசம். அது பாட்டுக்கு கெளம்பி வந்துக்கிட்டெ இருந்துச்சு தெனமும் கீரைக் கொழம்பு, கீரைக் கறிங்ற அளவுக்கு கீரை மயமா ஆயிடுச்சு சமையலு. அது தண்டுக்கீரை இருக்கே. அதெ வளர வுட்டதுல நெஞ்சு உசரத்துக்கு அது பாட்டுக்கு மரத்தெப் போல வளந்து நிக்குது. அதுவும் நாம்ம போட்ட செவப்புத் தண்டு கீரை. கத்திரி, கொத்தவர, வெண்டெ எல்லாமே நல்ல வெளைச்சல்தான். என்ன மெனக்கெடுதாம் ரொம்ப அதிகம். நெதம் பாத்துப் பாத்து தண்ணி ஊத்திக்கிட்டெ கெடக்கணும். களைப் புடுங்கிக்கிட்டெ இருக்க வேண்டியதா இருக்கு. சமயத்துல பூச்சித் தொல்லையும் அதிகமாயிடுது.



            வாழையையும் தண்ணிய ஊத்தி நல்லா பராமரிச்சதுல மரம் ஒவ்வொண்ணும் பாதி தென்னை மரத்துக்கு மேல கெளம்பி, இலை ஒவ்வொண்ணும் ரொம்ப அகலமா, தாரு ஒவ்வொண்ணையும் சொல்லவே வேண்டியதில்லே. மத்தபடி கொல்லையில கொய்யா, கறிவேப்பலை, இருவாச்சி, மாதுளம், நாரத்தை, எலுமிச்சை, தென்னை மரங்க இருக்கு. அதெயும் கொஞ்சம் கவனிச்சிப் பாக்க நேரம் கிடைச்சது. அதுல கொஞ்சம் இப்போத்தாம் அண்மையில படம் எடுக்கணும்ன்னு தோணி எடுத்தேன். அந்தப் படங்கத்தாம் இங்க இருக்குறது.







            கிராமத்துல இன்னொரு விசயம் என்னான்னா வீட்டுக்கும், வயலுக்கும் நடையா நடந்துக்கிட்டெ இருக்கணும். சித்தெ நேரம் வீடு ஓய்ஞ்சு உக்காந்தா வயலோட ஞாபவம் வந்துடும். ஒடனே நடையப் போடு வயலுக்குன்னு காலு பாட்டுக்கு வயல நோக்கிப் போயிடும். பாக்கணும்ன்னு அவசியம் இருக்கோ இல்லையோ காத்தாலயும், சாயுங்காலமும் காலு பாட்டுக்கு வயல நோக்கிப் போயிக்கிட்டெ இருக்கும். அப்போ சம்பாவ முடிச்சி எள்ளு போட்டுருந்தோம். அதெ குட்டான் போட்டு எள்ளு அடிச்சி எடுத்ததெ எல்லாம் படம் பிடிச்சி வெச்சிருந்திருக்கலாம்ன்னு இப்போ தோணுது. அப்போ தோணல. அதுவும் இல்லாம எல்லாரும் வெளியில கெளம்புறப்பத்தாம் கையில அலைபேசிய எடுத்துட்டுப் போவாங்க. நமக்கு அப்பிடியே நேர்மாறான கொணாம். வெளியில கெளம்புறப்போ அந்தக் கருமத்தெ கையில எடுக்குறதேயில்ல. அது காரணமாவும் படம் பிடிக்க முடியாமப் போயிடுச்சு.

            இப்போ நெனைக்கிறப்போ அதெயெல்லாம் படம் பிடிக்காம விட்டுடோம்மேன்னு ஏக்கமாத்தாம் இருக்கு. எங்க பேராசிரியர் ஜே.பி.யும் இதெயெல்லாம் பதிவு பண்ணணும்ன்னு சொல்லுவாரு. இதெல்லாம் இன்னும் இருவது வருஷம் கழிச்சி முக்கியமான ஆவணங்கள்ன்னும் சொல்லுவாரு. நாம்ம கூட இந்தந்த வருஷத்துல இன்னன்னதெ பண்ணோங்றதெ பாத்துக்கலாம் பாருங்க. அத்தோட கிராமத்து வாழ்க்கையத் தெரிஞ்சிக்க நெனைக்குறவங்களுக்கு அது ஒரு உபயோகமாவும் இருக்கும் பாருங்க. இப்போ கொஞ்ச நாளாத்தாம் வயக்காட்டுப் பக்கம் போறப்போ கையில அலைபேசியை எடுத்துட்டுப் போறது. அதுல இப்போ சம்பா நடக்குறத கொஞ்சம் படம் எடுத்திக்கிட்டு இருக்கேன். அதெ கொஞ்சம் கொஞ்சமா போடுறேன். 

*****

1 comment:

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...