3 Sept 2020

பொசுக்குன்னு போன கரண்டு!

 
பொசுக்குன்னு போன கரண்டு!

செய்யு - 553

            கார்ல வந்துட்டு இருந்த பொண்ணும் மாப்புள்ளையும் வடவாதிய நெருங்குறப்ப செய்யு விகடுவுக்குப் போனடிச்சு, "கோயில்ல வந்து நில்லுண்ணா!"ன்னா. விகடு தங்கூட பரசு அண்ணன அழைச்சிக்கிட்டுக் கோயிலுக்குப் போனாம். ஐயரு உக்காந்து பரமுவோட அப்பாவோட பேசிட்டு இருந்தாரு. அவருக்குப் பால்ய காலம் ஞாபவம்லாம் வந்திருக்கணும். அந்த நெனைப்போட நாங்கோ சின்ன புள்ளைகளா இருந்தப்போன்னு எதையோ சுவாரசியாம பேசிட்டு இருந்தாரு. விகடுவெப் பாத்தவரு பேசிட்டு இருந்ததெ நிறுத்திச் சிரிச்சாரு. "ஒரே நாள்ல ரண்டு தவா கோயிலுக்கு வந்துட்டுப் போறாப்புல ஆயிடுச்சுல்ல. கடவுளோட சக்திங்றது அதாங்! கடவுளோட அனுகிரகம் ஒனக்கு இருக்கு வா!"ன்னாரு ஐயரு.

            "பொண்ணு மாப்புள அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாங்க சாமீ!"ன்னாம் விகடு.

            "வாரட்டும் வா! நான் என்னா கெளம்பியா ஓடிப் போயிடப் போறேன்? ரொம்ப நேரமா காத்திருக்கேன்னு நெனைச்சுக்கிட்டு எனக்காகச் சொல்றீயா? இல்லே ஐயர்வாள் இருக்காரா? ஓடிட்டாரா?ன்னு சந்தேகப்பட்டு வந்துப் பாத்துப்புட்டு சொல்றீயா? எவ்ளோ நேரம் இருந்தாலும் இருந்துட்டுதான் போவேன்!"ன்னாரு ஐயரு. திரும்பவும் அவருகிட்டெ சிரிப்புக் கொப்புளிச்சது.

            "வந்துடுவாங்க சாமீ! போன்ன அடிச்சிட்டாங்க! அதுக்குப் பெறவுதாம் கெளம்பி வர்றேம்!"ன்னு விகடு சொல்லி முடிச்சாம். கோயிலுக்கு மின்னாடி இன்னோவா காரு வந்து நின்னு அதுலேந்து பொண்ணு மாப்புள ரண்டு பேரும் எறங்கி வந்ததெப் பாத்ததும் ஐயரு விகடு சொன்னதோட அர்த்தத்தெ புரிஞ்சிக்கிட்டாரு. உக்காந்திருந்த ஐயரு எழும்பிட்டாரு. "எல்லாம் ரெடியா இருக்கே. உள்ள வாங்கோ!"ன்னாரு ஐயரு. பொண்ணு மாப்புள்ளையோட கூடவே வேலனும் பிந்துவும் எறங்கி வந்துச்சுங்க.

            பிள்ளையாருக்கு ஒரு கிரிடம், நெத்திப் பட்டை, வடநாட்டு புள்ளையாருக்குல்லாம் போடுறாப்புல ஒரு விஷேசமான மாலை ஒண்ணு வாங்கியிருந்தாம் பாலாமணி. அதெ விகடுகிட்டெ கொடுத்து ஐயருகிட்டெ கொடுக்கச் சொன்னாம். விகடு வாங்கி அதெ ஐயருகிட்டெ கொடுத்தாம்.

            "இப்பிடியெல்லாம் கோயிலுக்கு நேறையப் பேரு செய்யுறதில்லே. என்னய்யா புள்ளையாரே மொட்டத் தலையா இருக்குறாரேன்னு ரொம்ப நாளா நெனைச்சிக்கிறது. ரொம்ப சக்தி வாய்ந்த புள்ளையாருதாம். கிரீடத்தெ ஒங்கள ஊருக்கு மாப்புள்ளையா வர வெச்சிக் கொண்டு வர்ற வெச்சிப்புட்டாரே ஒங்க மூலியமா!"ன்னு பரமுவோட அப்பா பாலமணியப் பாத்துச் சொன்னாரு.

            "பொண்ணுப் பாக்க வந்தப்பவே கோயிலுக்கு வந்து, கலியாணம் நல்ல வெதமா நடந்து முடிஞ்சா, புள்ளையார்ரே ஒமக்குக் கிரீடம் வாங்கி வெச்சிடுறேம்ன்னு வேண்டிக்கிட்டேம்! அத்து படியே வாங்கி வெச்சாச்சு. கிரீடத்துல புள்ளையாரு எப்பிடி அம்சமா இருக்காரு! இன்னும் நெறையச் செய்யணும் இந்தப் புள்ளையாருக்கு! ஒவ்வொரு தவா ஊருக்கு வர்றப்பயும் செய்துட்டே இருப்பேம்!"ன்னாம் பாலாமணி.

            "செய்யுங்கோ! ஒங்கள மாதிரி வர்றவங்க செய்யுறப்பத்தாம் கோயில் பெரிசா வளரும். வளரட்டும்! வேண்டிக்கோங்க! வரசித்தி விநாயகரு! வரத்தையும் சித்தியையும் கொடுக்குறதுல வல்லவரு!"ன்னு சேப்பு ஐயரு, சூடத்தெ புள்ளையாருக்குக் காட்டிப் பொண்ணு மாப்பிள்ளைகிட்டெ கொண்டாந்தாரு. ரண்டு பேத்தும் அதெ கண்ணுல எடுத்துக்கிட்டு ஒத்திக்கிட்ட ஒடனே துன்னூரும் குங்குமமும் கொடுத்தாரு ஐயரு. "ஒங்கக் கையாலயே பூசி வுடுங்க சாமீ!"ன்னாம் பாலாமணி. "பரவால்ல ஒங்க மச்சினனுக்கும் சேத்து பக்தியா இருக்கேள்!"ன்னு சொல்லிட்டெ ஐயரு சிரிச்சப்படி பூசி வுட்டாரு. விகடுவெப் பாத்து கண்ணடிச்சாரு. பூசி வுட்டதும் ஐயரோட தட்டுல நூத்து ரூவாய எடுத்து வெச்சாம் பாலாமணி. விகடுவும் மின்னாடி போயி பையிலேந்து நூத்து ரூவாய எடுத்து வைக்கப் போனாம்.

            "என்னா ஆளாளுக்கு பணத்தோட நிக்குறீங்களே? பணம் நெறைய இருக்கு போலருக்கே. இருந்தா சாமிக்குச் செய்யுங்கோ! அசாமிக்குச் செய்யாதீங்கோ! நீயி பணத்தெ உள்ள வையி!"ன்னாரு ஐயரு விகடுவப் பாத்து.

            "ரொம்ப நேரமா காத்துகிட்டு இருந்திருக்கீங்களே சாமீ!"ன்னாம் விகடு.

            "நம்ம தொழிலு அதானடப்பா! எங்க காத்துட்டு இருக்கேம்? ஆண்டவனோட சந்நிதியிலத்தான? அதெ வுட வேறென்ன கொடுப்பினை வேணும் நமக்கு? பத்து ரூவா போதும்! நூறு ரூவா வெச்சிருக்கேள்! ரொம்ப சந்தோஷம். அதாங் அளவு. அதுக்கு மேல எதிர்பார்க்கக் கூடாது! தெய்வத்துக்கு ஒத்துக்காதுடாப்பா! பூசைக்குக் கூலி வாங்குறதே கரும்புத் திங்குறதுக்கு கூலி வாங்குறாப்புலதாங். அதுல அதுக்கு மேல இப்படி தட்சணை! போதும் போதும்!"ன்னாரு ஐயரு. விகடுவுக்கு எடுத்தப் பணத்தெ திரும்ப பையில எப்பிடி உள்ளார கொண்டு போறதுன்னு யோசனை. பரமுவோட அப்பா இதெ பாத்துக்கிட்டு இருந்தவரு, "யிப்போ பணத்தப் பையில வையி. அதுக்குக் கூடிய சீக்கிரமெ வேல இருக்கு. கோயிலு தேவை வர்றப்ப சேத்து வாங்கிக்கிறேம்! நேரத்தோட பொண்ணு மாப்புள்ளைய வூட்டுக்கு அழைச்சிட்டுப் போ! ஆலத்தி எடுக்க பொண்டுவ வெளியில காத்துக்கிட்டு நின்னுகிட்டு இருக்கும்! மழெ வரும் போலருக்கேடா!"ன்னாரு சிரிச்சிக்கிட்டு.

            "வாரப்ப வூட்டுக்கு வந்துட்டுப் போங்க!"ன்னாம் விகடு.

            "யிப்போ பொண்ணு மாப்புள்ளைக்கி ஏகப்பட்ட வேலைய செஞ்சாவணும். நீயிக் கெளம்பு. நமக்கு எப்போ வர்றதுன்னு தெரியும். அப்போ வர்றேம் போ!"ன்னாரு பரமுவோட அப்பா.

            பொண்ணு மாப்புள்ள ரண்டு பேரும் இன்னோவால ஏறி உக்காந்தாங்க. செய்யு, "வா ண்ணே! வண்டியிலயே போயிடுவோம்!"ன்னா. "நீங்கக் கெளம்பி வெரசாப் போங்க! ரொம்ப நேரமா வூட்டுல காத்திட்டு இருக்காங்க! நாலு தப்படி வெச்சா நானும் யண்ணணும் வூட்டுல இருப்பேம்!"ன்னாம் விகடு பரசு அண்ணனக் காட்டி. இன்னோவா கெளம்பி அடுத்தப் பத்து நொடியில வூட்டுக்கு மின்னாடி நின்னுச்சு.  ரண்டு வேன்லேந்து எறங்குன சனங்களும், சந்தானம் அத்தான், ராமு அத்தான்லாம் கெளம்பிப் போயி வீட்டுல இருந்துச்சுங்க. ஒண்ணும் கோயிலுக்கு வாரல. இத்தனைக்கு வேனு நின்னது கோயிலுக்கு மின்னாடிதாம். வாசலுக்கு மின்னாடி ஒறவுக்கார சனங்க எல்லாம் கும்முட்டு நின்னு கூட்டமா இருந்துச்சு. பொண்ணு மாப்புள்ள ரண்டும் கார்லேந்து எறங்கி உள்ளார வர வெலகி வழிய வுட்டுச்சுங்க.

            பொண்ணு மாப்புள வூட்டுக்குள்ள வந்து நொழைஞ்சதும் நொழையாததுமா மழெ அடிச்சிக்கிட்டு ஊத்துனுச்சு. பாதி தூரம் வந்திருப்பாவ்வ, விகடுவும், பரசுவும். மழையில நனைஞ்சிடப் படாதுன்னு ரண்டு பேரும் தலையில கைய வெச்சுக்கிட்டு ஓடியாந்து பந்தலுக்குள்ளப் பூந்தாங்க. "அத்து என்னடியம்மா இத்து! வர்ற பொண்ணும் மாப்புள்ளையும் மழையையும் கூடவேவா அழைச்சிட்டு வாரது?"ன்னு இதுக்குன்னே தேங்காயோட குடுமியில துணியச் சுத்தி, அதெ நெய்யில நனைய வுட்டு அதெ எரியப் பண்ணி பொண்ணு மாப்புள்ளைய மின்னாடி நிறுத்தி வெச்சுச் சுத்தி, அதுக்குன்னே ஒரு பாட்டெ பாடி பெரிம்மா பண்ணுற ஒவ்வொண்ணும் ரொம்ப ரசமா இருந்துச்சு. வேட்டுச் சத்தத்தெ வெச்சது போல மழெ படபடன்னு படுவேகமா வானமே கிழிஞ்சிக் கொட்டுறாப்புல கொட்டுச்சு. பட்டுன்னு கரண்டு நின்னு எடமெல்லாம் இருட்டாச்சு. பெரிம்மா சுத்தி நிறுத்துன தேங்கா குடுமியிலேந்து வந்த வெளிச்சத்துல பொண்ணு மாப்புள்ளையோட முகம் மட்டுந்தாம் தெளிவா தெரிஞ்சது. எல்லாத்துக்கும் ஒரு மாதிரியா போச்சுது. பொண்ணு மாப்புள உள்ளார வர்ற நேரமாப் பாத்துக் கரண்டு போவுதேன்னே.

            "வெளக்க எடு!"ன்னு சனங்க ஒவ்வொண்ணும் வூட்டுக்குள்ள பாஞ்சதுங்க. வூட்டுல சாமி மாடத்துல நல்ல வெளக்கு ஒண்ணுதாம் எரிஞ்சிக்கிட்டு இருந்துச்சு. வூடு முழுக்க சனங்கள வுட வேகமா இருட்டப் பூந்திருந்தச்சு. சீமெண்ணெய்ல வெளக்கக் கொளுத்தி ரண்டு மூணு திண்ணைப் பக்கம் வந்ததும் கொஞ்சம் வெளிச்சம் பரவுனுச்சு. அடுத்தது வேக வேகமா தயாரு பண்ணி வெச்சிருந்த ஆலாத்தியில வெத்தலைக்கு நடுவே வெச்சிருந்த கற்பூரத்தெ கொளுத்தி ஆலாத்திய எடுத்து முடிச்சி பொண்ணு மாப்புள்ளைய உள்ளார அழைச்சாந்தது விருத்தியூரு பெரிம்மா. ஆலாத்தி எடுத்தத் தண்ணிய ஊத்துனப்போ மழைத்தண்ணி அதெ அடிச்சிட்டுப் போச்சு. அந்த அளவுக்கு சித்தெ நேரத்துல மழை பொளந்து கட்டுனுச்சு வானமே பொத்துக்கிட்டு ஊத்துறாப்புல. விகடுவுக்கு ஐயரோட நெனைப்பு வந்துடுச்சு. அவரு வடவாதி போவ வேண்டிய ஆளு. மழெ வேற, கரண்டுப் போயி இருட்டு வேற. எப்பிடிப் போவாரோன்னு நெனைச்சாம்.

            "இம்மாம் நேரம் கழிச்சா வாரது?"ன்னு சுப்பு வாத்தியாரு சந்தானம் அத்தானப் பாத்துக் கேட்டாரு.

            "நீயி ஒம் மாப்புள்ளயக் கேளு மாமா! ஊர்ல ஒரு கோயிலு வுடாம பாத்துட்டு வரணும்ன்னா இதுவே சீக்கிரம். பொண்ணு மாப்புள கூட எஞ்ஞள போயி அனுப்பி வுட்டப் பாரு. சாமியப் பாத்துப் பாத்து அலுத்துப் போச்சு. ஒரே நாள்ல அத்தனெ சாமியளயும் பாக்கணும்ன்னா எப்பிடி? கூட கோவுரத்துல இருக்குற சாமியிலேந்து பொட்டத் தெடல்ல கெடக்குற சாமி வரைக்கும் ஒண்ணுத்தையும் வுடல. எல்லாத்தையும் பாத்தாச்சு. பொண்ணு மாப்புள்ளையோட போறமா? சாமியாரு கூட்டத்தோட போறமான்னு சந்தேகமாப் போயிடுச்சு. கலியாணம் கடந்து ஒவ்வொரு நாளா பாத்துட்டுப் போனாத்தாம் ன்னாவாம்? நல்லவேள மாமா நீயித் தப்பிச்சிகிட்டு ஒரு வேன எடுத்துக்கிட்டு சனங்கள அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துப்புட்டே! செரித்தாம் மாமா சொல்லுதேன்னு போன நாம்ம அலைஞ்சு ஓஞ்சு வார்றேம். வெரசா எல்லாத்துக்கும் ஒரு காப்பித் தண்ணியப் போட்டுக் கொடுக்கச் சொல்லு மாமா! இன்னும் நாலைஞ்சு வெளக்கக் கொளுத்தி கொண்டாந்து வைக்கச் சொல்லு வெளிச்சம் பத்தல. கரண்டு வருமா? வர்றதா?"ன்னுச்சு சந்தானம் அத்தான். பொண்ணு மாப்புள்ளையோட வந்தச் சனங்க ஏன் புள்ளையாரு கோயில்ல நொழையலங்றதுக்கான காரணம் இப்போ புரிஞ்சது. கோயிலு கோயிலா வெவ்வேறு சாமியப் பாத்து பாத்து அலுத்துப் போயிருந்துச்சுங்க சனங்க.

            இந்த ஊர்ல அது ஒரு ரோதன. காத்தோ, மழையோ பாத்துப் பதனமா அடிக்கணும். அளவுக்கு மீற அடிச்சா பொசுக்குன்னு பொத்துட்டுக் கோவம் வந்து ஊர்ர வுட்டுக் கெளம்பிடும் கரண்டு. மறுபடி கரண்டு நடுராத்திரியில வந்தாலும் வந்துதாம், யில்ல மறுநாளு வந்தாலும் வந்ததுதாம். கோவிச்சிக்கிட்டுப் போனவேம் எப்போ திரும்புவாங்றதுக்குக் கணக்கா இருக்கு? திரும்புறப்பத் திரும்புறதுதாங்.

            பொண்ணு மாப்புள்ளையப் பாத்துட்டுத்தாம் போவணும்ன்னு உக்காந்திருந்தவங்க வந்துப் பாத்துப்புட்டு, "நல்ல வெதமா நோய் நொடி யில்லாம ஒருத்தருக்கொருத்தரு தொணையா நீண்ட ஆயுசோட மக்களப் பெத்து மவராசியா மவராசன இருக்கணும்!"ன்னு நெட்டிய முறிச்சிக்கிட்டு பொண்ணு மாப்புள்ள கையில பணத்தெ கொடுத்துட்டுத் திண்ணையிலப் போயிட்டு, வெளியில கொட்டிக்கிட்டு இருந்த மழையப் பாத்து திட்டிக்கிட்டு இருந்துச்சுங்க. "சித்தெ நேரம் இருந்தா வூடுப் போயி சேந்திருப்பமே! அதுக்குள்ள ன்னா அவ்சரம் இந்த மழைக்கி?"ன்னு.

            வூடு முழுக்க கூட்டமா இருந்துச்சு. திடீர்ன்னு அந்த நேரமா பாத்து மின்னலு பளிச்சுன்னு அடிச்சுச்சு. இருட்டா இருந்த எடமெல்லாம் பளிச்சுன்னு அந்த ஒரு நொடியில மின்னுச்சு. எல்லாம் சில நொடிதாங். டக்குன்னு வெளிச்சமா இருந்த எடமெல்லாம் இருட்டாயிடுச்சு. சாமி மாடத்துல ஏத்தி வெச்சிருந்த வெளக்குலேந்து மட்டும் வெளிச்சம் வந்துகிட்டு இருந்துச்சு. திண்ணையில, கூடத்துல, சமையல்கட்டுலன்னு ஏத்தியிருந்த சீமெண்ணய் வெளக்குலேந்து வெளிச்சம் சன்னமா வந்துக்கிட்டு இருந்துச்சு. இருட்டுல அடுத்தடுத்தா வேல பாக்குறது கொஞ்சம் செருமமாத்தாம் இருந்துச்சு. ஆவுற வேலை ஆயிகிட்டெ இருந்துச்சு. அதுக்குன்னு ஆவுற வேலையோட வேகம் கொறையல.

            "சனங்கள சட்டுன்னு உக்கார வெச்சு சாப்பாட்டப் போட்டு முடிச்சிட்டா வேல ஆயிடும்! பொண்ணு மாப்புள்ளைக்கான கிச்சிடி தயாரா செஞ்சு இருக்கு. அதுகளுக்கும் சாப்புட்ட வெச்சு முடிச்சா ரூமுல அடைச்சிட்டு நாம்ம நிம்மதியா தூங்கலாம். ரூமுல்லாம் பண்ண வேண்டிய அலங்காரத்தெப் பண்ணித் தயாரா இருக்குல்லா! லைட்ட கூட அணைக்க வேண்டில்லா. அதுவே அணைஞ்சுப் போச்சு"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா. அதெ கேட்ட சுத்தி நின்ன சனங்க பொக்குன்னு சிரிச்சிதுங்க.

            "கரண்டுப் போயி வேல ஆவுறுதுல செருமம் இருக்கேன்னு நெனைக்குதா பெரிய ஆயி! சிரிப்பாணி வெச்சிக்கிட்டுக் கெடக்குது. வெளிச்சம் இருந்தா வேல வெரசா ஆவாதா? இருட்டுல கொஞ்சம் நெதானமாத்தாம் வேல ஆவும். சித்தெ பொறு ஆயி!"ன்னுச்சு ராமு அத்தான்.

            "கூடத்தெ தயாரு பண்ணி மாப்புள்ள வூட்டு சனங்களுக்கு மொதல்ல சாப்பாட்டுப் போட்டு முடிப்பேம். மாமா பணத்தெ எடுத்து வெச்சுக்கோ. எலையில மொதல்ல மொய்ய வையி. பெறவு பொண்டுவ சாப்பாட்ட வைக்கட்டும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            பொண்ணு மாப்புள்ளைய உக்கார வெச்சு, கூடவே ரண்டு வேன்ல வந்திருந்த மாப்புள்ள வூட்டுச் சனங்கள உக்கார வெச்சு பந்தி ஆனுச்சு. கொஞ்சம் கொஞ்சமா இருந்த சனங்க எல்லாத்தையும் உக்கார வெச்சு பந்தி முடியுறப்போ மணி பத்தெ நெருங்குனுச்சு. பந்தியில சாப்பாட்ட வுட பேச்சுத்தாம் பெரிசா இருந்துச்சு. ஒவ்வொரு எலைக்கும் ஒரு ஆளு வுடாம சுப்பு வாத்தியாரு நூத்து ரூவாய மொய்ய வெச்சிட்டு இருந்தாரு. கலியாணத்துக்குச் சனங்க வெச்சிட்டுப் போன மொய்யில அவரு இலையில வெளையாடிட்டு இருந்தாரு. பணத்தெ எடுத்து பாக்கெட்டுலயும், பர்ஸ்லயும் வெச்சிக்கிட்ட சனங்க போன எடத்தெப் பத்தி, கும்புட்ட சாமியப் பத்தி சனங்க ஒவ்வொண்ணும் கதெ அளந்துச்சுங்க. இருட்டுல கூடத்துக்கும் திண்ணைக்கும் போயிட்டு வாரதுல கொஞ்சம் செருமம் இருந்துச்சு. அந்த இருட்டு ஒரு அசாதாரணமான அலுப்ப வேற கொண்டு வந்துச்சு. மழெ அதுபாட்டுக்கு ஒரு நாளு பெய்யாம வுட்டாதுக்குச் சேத்து அடிக்குறாப்புல அடிச்சிது.

            "பொண்ணு மாப்புள்ளைய வாரச் சொல்லு! சாமிக் கும்புடச் சொல்லி ரூமுக்குள்ள அனுப்பி வுடணும்!"ன்னு சொல்லிகிட்டெ விருத்தியூரு பெரிம்மா வந்தப்போ, "நாம்ம குளிக்கணுமே!"ன்னாம் பாலாமணி.

            "மாப்புள குளிக்கணுமாம். அத்தெ இப்போ சொன்னா இருட்டுல என்னத்தெ பண்ணுறது? செரி இருக்கட்டும்! வெந்நியப் போட்டு கொதிக்க வுடுங்க. சித்தெ இருப்பா. குளிச்சிப்புடலாம்!"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா. அதுக்கேத்தாப்புல வெந்நியப் போட்டு அவனுக்கு வெளக்குப் பிடிச்சிக் கொண்டு போயி குளிக்க வுட்டுக் கொண்டு வர்ற வேண்டியதாயிடுச்சு. பாலாமணி குளிச்ச வந்த பெற்பாடு அடுத்தடுத்த வேலைகளப் பாத்து விருத்தியூரு பெரிம்மா முடிச்சது. பொண்டுக கூடி நின்னு செய்யுகிட்டெ குசுகுசுன்னு எதையெதையோ பேசிட்டு நின்னாங்க.

            "பொண்ணு மாப்புள சாப்புடுறப்போ மச்சாங்கரப் பயெ எஞ்ஞ ஆளயே காங்கலையே? நம்மப் பயெ பரசையும் ஆளையே காங்கலையே?"ன்னுச்சு பெரிம்மா.

            "பொண்ணு மாப்புள வந்த காரு திருப்பிட்டு வாரேன்னுப் போயி அங்க பரமு வூட்டுக்கு எதுத்தாப்புல இருக்குற பூக்கார தெருவுல வுட்டு திருப்புறப்போ சேத்துல மாட்டிக்கிட்டாம். மாப்புள்ளையோட சகல ஓடியாந்து சேதிச் சொன்னதும் ரண்டு பயலும் கொடைய எடுத்துக்கிட்டுக் கெளம்பிப் போனானுவோ! இன்னும் வாரல!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "வண்டி ரொம்ப பெலமா மாட்டிக்கிட்டோ?"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா.

            "போயிப் பாத்தாதானே தெரியும்! மழெ பேஞ்சுகிட்டு இருக்குறப்போ கார்ர போட்டுட்டுப் பெறவு திருப்பிக்கிட்டாத்தாம் என்னாவாம்?"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா.

            "அவ்வேம் கொண்டாந்து வுட்டுப்புட்டு வூடு திரும்ப வேண்டியதில்லையா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "வேனு மட்டும் திரும்புதுங்க. அவுங்க கோயில்ல காரு நின்னதப் பாத்துட்டு அங்கயே நிப்பாட்டி எறக்கி வுட்டுப்புட்டு ஒடனடியா வசதியா அங்ஙனயே ரிவர்ஸ்ல எடுத்துக்கிட்டுப் போயித் திருப்பிட்டானுங்க. காரு நைட்டு ஹால்ட்டுதாம். இஞ்ஞ உள்ள வந்தவேம் திருப்பிக் கொண்டாந்துப் போட்டுப்புடலாம்ன்னு நெனைச்சிருப்பாம்! வூட்டுலேந்து கோயிலு எம்மாம் தூரம்? அப்பிடியே ஒரு ரிவர்ஸ் அடிச்சிருக்கலாம். பின்னாடி உக்காந்திருந்த வேலன் யோஜனெ சொல்லிருப்பாம் போல. நேரா கெழக்கப் போயிட்டாம் போலருக்கு. இப்படியாயிடுச்சு!"ன்னு சொன்னதுங்க மாப்ள வூட்டுச் சனங்க.

            "இஞ்ஞயே கெடக்கக் போற காருன்னா அப்பிடியே கெடந்திருக்கலாமே! அதுவும் அஞ்ஞப் போயா திருப்பணும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "என்னவோ காரு போயாச்சு. சேத்துல மாட்டியாச்சு. பாத்துதாங் கொண்டாரணும்! அதுக்கு இந்த ரண்டு பயலுகளும் போயியும் இம்மா நேரமா?"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...