25 Sept 2020

ஒரு நேர்காணல்

ஒரு நேர்காணல்

            ஒரு பிரபல எழுத்தாளரான பிறகு எஸ்.கே. அளித்த முதல் பேட்டியின் சுருக்கம் இது. இதற்கு முன்னும் எஸ்.கே. பல பேட்டிகள் கொடுத்திருந்தாலும் அவை அனைத்தும் தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட பேட்டிகள். இது ஒன்றே அப்படியல்லாத ஒன்று. இந்தப் பேட்டி முழுவதும் பேட்டி எடுப்பவருக்கு எந்தப் பிரச்சனையும் கொடுக்காமல், குறிப்பாகக் கேள்வியைக் கூட கேட்க விடாமல் எஸ்.கே. பேசிக் கொண்டிருந்தார். அந்த விஷேஷமான பேட்டியின் அம்சம் இதோ கீழே...

            "எனக்கே பல விசயங்கள் புரிவதில்லை. அதெல்லாம் அந்த நேரத்தில் தீர்மானம் ஆகுபவைகளே. குறிப்பாக எழுத்து. அது கண்டிப்பாக அந்த நேரத்தில் தீர்மானம் ஆகுவதே. அதைப் பற்றி பெரிதாக எதையும் என்னால் சொல்ல முடியவில்லை. ஆக அது பற்றிய கேள்விகளை முடிந்த வரை தவிருங்கள்.

            ஒரு சிக்கலைத் தீர்ப்பது என்பது எளிதன்று. மனதிற்கான இணக்கம் காண வேண்டியது அதில் முக்கியம். பல நேரங்களில் பொருளாதார, சமூக, உறவுக் காரணிகள் அதற்கு இணக்கமாக இல்லை. ஒவ்வொன்றிலும் பல வித சிக்கல்கள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் இணக்கம் கண்டு விட்டாலும் மனம் இணக்கமாக இருந்து விடுமா? உதாரணமாக எனது சாமனியன் நாவலின் சந்திராவையும், சுதந்திர மூர்த்தியையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பதென்றே புரியவில்லை.

            சந்திரா தன் மனப்போக்கைச் சார்ந்து நகர்த்துபவள். மனநிலையை நிறைவு செய்ய முற்படுபவள். பொதுவாக மனநிலை என்பது நிறைவு செய்ய முடியாதது. அவளுடைய இந்தப் பிரச்சனைகள் எப்போதும் ஒரே மாதிரியானவைத்தாம். சுதந்திரமூர்த்தி தன்னிடம் இருக்கும் பணத்திற்கு ஒரு வாழ்க்கையை வாழ்ந்துப் பார்க்க நினைப்பவன். இதுதான் வித்தியாசம். சந்திரா தன்னிடம் இருக்கும் மனதுக்கு வாழ்ந்து பார்க்க நினைக்கிறாள். சுதந்திரமூர்த்தி தன்னிடம் இருக்கும் பணத்துக்கு அதை செய்யப் பார்க்கிறான். இந்த இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது சாமனியன் நாவல் உருபெறுகிறது. மனத்துக்காகவும், பணத்துக்காகவும் வாழ நினைப்பவர்கள் எப்படிச் சாமனியர்கள் ஆகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். நாவலின் கடைசியில் அதுதானே நடக்கிறது. நாமெல்லாம் சாமனியர் ஆகவே பிறந்திருக்கிறோம், மகான்களாகவோ, கடவுளாகவோ, புனிதராகவோ, இறை தூதராகவோ, மேம்பட்ட மனிதராகவோ அல்ல. இது அப்படித்தான். மனமும் பணமும் அப்படியில்லை என்று காட்டுகிறது. அது அப்படியில்லை என்பதை நானும் நாவலில் காட்டியிருக்கிறேன்.

            என்னைப் பற்றிச் சொல்வதென்றால் என்னைப் பற்றி நானே எப்போதும் எழுதிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தியானம் முக்கியமாக இருக்கிறது. அதற்காக நாம் எதைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியாது. பேசித்தான் ஆக வேண்டியதாக இருக்கிறது. மிக மென்மையாக, நளினமாக, நகைச்சுவையாகப் பேசித்தான் ஆக வேண்டும். நகைச்சுவை மிக முக்கியம். ஆனால் நகைச்சுவையாக எழுதவில்லை என்கிறார்கள். என் எழுத்தின் நகைச்சுவை என்னைத் தொடர்ந்து வாசித்து வருவதன் மூலமே புரிந்து கொள்ள முடியும்.

            என் பேச்சைப் பற்றிச் சொல்வதென்றால், எல்லாநேரங்களிலும் பேச்சு சரியாக சாதிக்க வேண்டியதைச் சாதித்து விடுமா என்று சொல்ல முடியாது. அதற்கு அந்த அளவுக்கு நுட்பமாகவும், கூர்மையாகவும் பேச வேண்டியிருக்கும். அது எல்லாருக்கும் சாத்தியமாகாவிட்டாலும் மென்மையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவது என்பது எல்லாருக்கும் சாத்தியமானதே. அதனால் பெரிதாகப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் புதிதாகப் பேசியப் பேச்சினால் வேறெந்த பிரச்சனையும் உண்டாகாமல் தடுத்து விட முடியும். பேசவில்லை என்ற குறையும் இல்லாமல் போய் விடும். என்னால் பல சந்தர்ப்பங்களில் பேசவே முடிந்ததில்லை. பேசுவதற்கான வெறுப்பான மனநிலையை நான் அடைந்ததே அதற்கான காரணம். என்னை அந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுவார்கள். பிறகு எப்படி என்னால் பேச முடியும்? நானும் வெறுத்துப் போய் பேசாமல் இருந்து விடுவேன். அப்போதுதான் நான் எழுத ஆரம்பிக்கிறேன். இதுதான் எனது பேச்சுக்கும் எழுத்துக்கும் இருக்கும் தொடர்பு.

            இந்த சாமானியன் நாவலை ஆரம்பத்தில் என்னால் என்னால் எழுதவே முடியவில்லை. மனதில் சோர்வை உணர்ந்தேன். ஒரு வேலையைத் தொடர்ந்து செய்யும் போது உண்டாகும் சோர்வுதான் அது. அப்போது நான் உணர்ந்த களைப்பைப் பற்றி என்ன சொல்வது? நான் பாட்டுக்குத் தூங்கிக் கொண்டே இருந்தேன். ஏன் அப்பிடித் தூங்கிக் கொண்டே இருந்தேன் என்று தெரியவில்லை. மனதிற்குள் பெரிதும் களைப்பாக இருந்தது. என்ன காரணமென்று தெரியவில்லை. அந்த நாவலால் மன அழுத்தம், மன இறுக்கம் சார்ந்த பிரச்சனையில் நான் சிக்கியிருந்தேன். பேச்சு மன உளைச்சல் தருகிறது என்று எழுத ஆரம்பித்து அதுவும் மன உளைச்சல் தந்தால் நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்? எதைச் செய்தால் அந்த மன உளைச்சல் தீரும் என்று புரியாமல், அவ்வபோது உறக்கத்திலிருந்து விழிக்கும் போதெல்லாம் கண்டதையும் மாற்றி மாற்றிச் செய்து கொண்டிருந்தேன். எனக்கு அப்போது இந்த மனஇறுக்கத்திலிருந்து வெளியே வர வேண்டும். அதற்காக விதவிதமான வழிகளைக் கையாண்டு வந்தேன். ஆனால் எந்த வழியும் அதைத் தீர்ப்பதாகத் தெரியவில்லை.

            மேலும் எப்போதும் என்னைப் பொருத்த வரையில் கடைசி கட்டத்தை நெருங்கும் போது எப்போதும் தடுமாறுவேன். அது அப்போது நடந்தது என்று நினைக்கிறேன். கிட்டதட்ட சாமானியன் நாவலின் கடைசி கட்டம்தான். அதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. இன்னும் நூறு அத்தியாயங்கள் எழுதுவதா? இத்தோடு நிறுத்திக் கொள்வதா? என்று பலவிதமான சிந்தனைகள். இன்னும் நூறு என்றால் என்னால் முடியுமா என்ற சந்தேகம் என்னை அறியாமல் உண்டானது. நான் எழுதி எழுதிக் களைத்து விட்டவன் போல் உணர்ந்தேன். அப்பிடியானால் நிச்சயம் சில நாட்களாவது ஓய்வெடுத்துதான் ஆக வேண்டும். எனக்கு அப்போது வேறு வழியில்லை. தொடர்ந்தாற் போல் அந்த வேலையைச் செய்ய முடியாது. எந்த வேலைக்கும் இது பொருந்தும். சிறு இடைவெளி கொடுப்பதன் மூலமே அந்த வேலையை பழைய சகஜ நிலைக்குக் கொண்டு வந்து செய்ய முடியும்.

            என் மனம் பாவம். அது சிந்தித்துச் சிந்தித்துக் களைத்துப் போயிருந்தது. அதற்கு ஓய்வு கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும் அதை அப்போது என்னால் செய்ய முடியவில்லை என்றால் நம்புவீர்களா? செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் செய்வதற்கான சக்தி இல்லாதது போல் உணர்ந்தேன். அதெல்லாம் தீர்ந்து வடிந்து விட்டதாக நினைத்தேன். இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரே வழி இடைவெளிதான் என தெரிந்தது. வேறு வழிகள் எதுவுமில்லை. இல்லையென்றால் இன்னும் எழுத வேண்டிய அத்தியாயங்களை குறிப்பெடுத்துக் கொண்டு போகலாம். இருக்குற அந்த நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்க வேண்டுமானால் அது ஒன்றுதான் வழி அப்போது. அதன் மூலம் இன்னும் எத்தனை அத்தியாயங்கள் எழுத இருக்கிறேன் என்பது புலப்பட்டு விடும் எனத் தோன்றியது. அதற்காகப் பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை. மனதில் எப்படித் தோன்றுகிறதோ அப்படி எழுதிக் கொண்டே போகலாம் என நினைத்தேன்.

            எனக்கு அப்படித்தான் ஒரு முறை மேற்கொண்டு எப்படி எழுதிக் கொண்டு போவது என புரியாமல் போன போது நான் சென்று கொண்டிருந்த சாலையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு தலைப்பு வாரியாக எழுதிக் கொண்டு போனேன். உடனே எனக்கு பாதை புரிந்தது போல இருந்தது. நான் பல அத்தியாயங்களை அதற்குப் பின் தொடர்ந்து எழுதினேன். சரியான வழி புலப்படாத போது மனதில் தோன்றியவைகளை எழுதிக் கொண்டே போகும் போது சரியான வழியொன்று புலப்பட்டு விடும். எனக்கு நானே வழிகாட்டிக் கொள்வதற்கு அதைத் தவிர என்ன வழியிருக்கிறது சொல்லுங்கள்?

            மனதுக்குள் நான் விதித்துக் கொள்ளும் நிபந்தனைகளும், கட்டுபாடுகளும்தான் என்னை செயல்தன்மை அற்றவனாக மாற்றிக் கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன். அது படைப்பாற்றல் திறனை இல்லாமல் செய்து விடுகிறது. எந்த நிபந்தனையும், கட்டுபாடும் தேவையில்லை. அதை உடைத்து எறிந்து விட்டு நம் போக்கில் போனால் எதையும் செய்து முடித்து விடலாம் என்பதை இந்த நேரத்தில் உங்களிடம் கூற விரும்புகிறேன். முடியாதது என்று எதுவும் இல்லை. இதை நெப்போலியன் சொன்னதாகச் சொல்வார்கள். ஏன் நான் சொன்னதாக இருக்கக் கூடாதோ என்னவோ!

            நான் என்னைப் பற்றி எப்போதெல்லாம் எழுதிக் கொள்கிறேனோ அப்போதெல்லாம் நான் மீண்டு எழுகிறேன். இனி சாமானியனைப் பொருத்த வரையில் அத்தியாயம் சிறிதோ, பெரிதோ அதைப் பற்றி யோசிக்க வேண்டாம், எழுதிக் கொண்டே போ, பிறகு பார்த்துக் கொள்ளலாம், அதுதான் ஒரே வழி, யோசித்துக் கொண்டு நின்றால் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான், அதுவும் குழப்பமான யோசனைகள் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருக்குமே தவிர அவை தீர்வுகளைத் தருவதில்லை, எழுதுவது ஓர் அற்புதமான செயல், நாம் பாட்டுக்குச் செய்து கொண்டு இருக்கலாம், அது சரியா? தவறா? என்பதை பின்னர் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துச் சரி செய்து கொள்ளலாம் என்றெல்லாம் எனக்கு நானே கட்டளையிட்டுக் கொண்டேன்.

            எந்தக் கட்டுபாடும் தேவையில்லை என்று சொல்லிக் கொண்டு நான் கட்டுப்பாடு விதித்துக் கொண்டது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அது அப்படித்தான். அந்த நேரத்தில் அப்படித்தான் நிகழ்ந்தது.  அந்த எழுத்துதான் என்னை இத்தனை காலமாக மனிதனாக வைத்துக் கொண்டு இருக்கிறது. இல்லையென்றால் பேயாகவோ, பிசாசாகவோ ஆகியிருப்பேன். ஒருவேளை நான் மட்டும் எழுதாமல் இருந்திருந்தால் நிச்சயம் மிருகமாகி இருப்பேன் என்றும் சொல்லலாம். என் மனநிலை அப்படி. என் மனநிலையை இந்த எழுத்துதான் அவ்வபோது சீர் செய்து இருக்கிறது.

            எழுதி எழுதித்தான் என்னை நான் சரிசெய்து கொண்டேன். என்னால் மற்றவர்களின் நாவல்களைப் படிக்க முடியாத சூழ்நிலையில் கூட நான் எழுதி எழுதித்தான் படித்தேன். எழுத்து எனக்கு எப்போதுமே துணை நின்றிருக்கிறது. எனக்கு உதவிகள் செய்திருக்கிறது. தொடர்ந்து எழுதுவது என்பது கடினமாக இருந்தாலும். அந்தக் கடினத்தை நான் எப்போதும் விரும்பியிருக்கிறேன். எனக்கு அதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்பதும் ஒரு காரணம். ஆக என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

            நான் நேற்று இரவு செய்த தியானத்தின் போது ஒரு குறிப்பிட்ட விசயத்தைத் தெரிந்து கொண்டேன். என்னிடம் எவ்வளவு குழப்பமான விசயங்கள் இருக்கிறதென்று. அத்தனையையும் கொட்டித் தீர்த்தால் ஒழிய அவை ஒழியப் போவதில்லை. யாரிடம் கொட்ட முடியும், எழுத்தைத் தவிர. எழுத்தில் கொட்டுவது பாதுகாப்பானது. என்னைத் தவிர யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனால் நீங்கள் அப்படிக் கொட்டி எழுதிய சாமனியன் நாவலைப் படிக்கும்படி செய்து விட்டேன். அது ஒரு துரதிர்ஷ்டம்தான். ஆனால் சில எழுத்துகளில் விருப்பம் இருந்தால் அதை வெளியிடலாம். அல்லாது வெளியிடாமல் கூட போகலாம்.

            நான் நினைக்கிறேன், சாமானியன் நாவலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் மூன்று முறைகளுக்கு மேல் சரிபார்ப்பு செய்துதான் மனஇறுக்கத்திற்கும், மன உளைச்சலுக்கும் காரணமா என்று. இருக்கக் கூடும். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் அப்பிடி மூன்று முறை சென்ற போது சில அருமையான மாற்றங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் சேர்க்க முடிந்தது என்பதை மறுக்க முடியாது. இதுவரை எழுதி வந்த முறை ஒரு மாதிரியானது என்றாலும் இனி எழுதப் போகும் முறை முற்றிலும் மாறானதுதான். நிச்சயம் ஒரு சுருக்கத்தை உருவாக்காமல் மேற்கொண்டு எழுத முடியாது. ஒரு வரைபட குறிப்பைத்தான் நாவலாக மாற்ற வேண்டும். அதுதான் சரி. முதலில் எப்படியெல்லாம் தோன்றுகிறதோ. அப்பிடியெல்லாம் எழுதிக் கொள்ள வேண்டும். பிறகு அதை திருத்திக் கொள்ள வேண்டும். கூடுதலாகச் சேர்ப்பதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாமானியனுக்கு அடுத்ததாக எழுதப் போகும் சும்மா நாவலை அப்படித்தான் செய்யலாம் என்று இருக்கிறேன்.

            மற்றபடி என்னை பேட்டிக் கண்டதற்கு நன்றி! விடாமல் நானே பேசியதற்குக் காரணம் இருக்கிறது. பல பேரை பேட்டி எடுக்க மண்டையைப் பிய்த்துக் கொண்டு கேள்வியை நீங்கள் யோசித்திருப்பீர்கள். அப்படி ஒரு சிரமத்தைக் குறைந்தபட்சம் என்னுடைய பேட்டியிலாவது நான் கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். அதற்காக நீங்கள் எனக்கு நன்றி சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் பேட்டியை எவ்வித சுருக்க குறுக்கம் செய்யாமல் வெளியிட்டால் மகிழ்வேன். அப்படிச் செய்தாலும் கால் பக்கத்திற்குக் குறையாமல் வெளியிட்டால் இன்னும் அதிகமாய் மகிழ்வேன்! மீண்டும் நன்றி! பாவம் படிக்கப் போகும் வாசகர்களுக்கும் சேர்த்து நன்றி! மொத்தத்தில் நன்றி! நன்றி! நன்றி!"  

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...