26 Sept 2020

பொறந்தது புது வருஷம்!

பொறந்தது புது வருஷம்!

செய்யு - 576

            ரண்டாயிரத்து பதினைஞ்சாவது வருஷம் பொறந்திருச்சு.

            தாலி பெருக்கிப் போட்டுட்டுப் போயி பாக்குக்கோட்டைக்குப் போன செய்யு அதுக்குப் பெறவு ஒரு பத்து நாளு சென்னைப் பட்டணத்துல போயி தங்கியிருந்ததாவும், நாளுக்கு நாளு மெலிஞ்சிட்டுப் போறதால சரசு ஆத்தா போயி பாக்குக்கோட்டைக்கு அழைச்சிட்டு வந்ததாவும் போன்ல சொன்னுச்சு. பெறவு திடீர்ன்னு ஒரு நாளு சாயுங்காலமா செய்யுவ அழைச்சிட்டு முருகு மாமா வூட்டுக்கு வந்ததிருக்கதாவும், விகடுவெ வரச் சொல்லுன்னும் போன அடிச்சிது. விகடு அப்பங்காரரோட டிவியெஸ்ஸூ எடுத்துட்டு ஓடுனாம். முருகு மாமாவோட வூட்டுல உக்காந்து சரசு ஆத்தாவும், நீலு அத்தையும் பேசிட்டு இருந்துச்சுங்க. முருகு மாமா வெளியில கடையில உக்காந்திருந்துச்சு. முருகு மாமாவப் பாத்து பேசிட்டு விகடு உள்ளார போனாம்.

            செய்யு ஓரமா உக்காந்திருந்தா. ஆளு பாக்குறதுக்கு ஒடைஞ்சிப் போயிருந்தா. தாலிபெருக்கிப் போடறப்ப பாத்ததெ வுட படுமோசமா இருந்தா. அதெ பாத்ததும் விகடுவுக்குக் கண்ணுத் தண்ணியே வந்துடும் போல இருந்துச்சு. "நீயி தங்காச்சிய அழைச்சிட்டுப் போயி வுட்டுட்டு வா. பெறவு நாம்ம வர்றேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "தங்காச்சி ஒரு மாதிரியா இருக்கே? ஒடம்புக்கு எதுவும் செரியில்லையா?"ன்னாம் விகடு.

            "ஏம்டா டாக்கடர்ரு பொண்டாட்டிக்கு ஒடம்புச் செரில்லன்னா ச்சும்மா வுட்டுப்புடுவானா டாக்கடர்ரு! யப்பா யம்மாவ பிரிஞ்சிப் போன ஏக்கம்டா! இவனுக்கு ஒவ்வொண்ணுத்தையும் வெலாவாரியாச் சொல்லணும். போயி வுட்டுப்புட்டு வந்து யாத்தாவ அழைச்சிட்டுப் போடா. யாத்தா வந்து சொல்லும்!"ன்னுச்சு நீலு அத்தை.

            செரித்தாம்ன்னு விகடு செய்யுவ பின்னாடி உக்கார வெச்சி அழைச்சிட்டுக் கெளம்புனாம். இப்பிடி எளைச்சித் துரும்பா போயிருக்குற ஒடம்போட எப்பிடி அழைச்சிட்டுப் போறதுன்னு தயக்கமா இருந்துச்சு விகடுவுக்கு. தெரு வழியா போவாம பயந்துப் போயி வூட்டுல எறங்குறாப்புல ஒரு ஏற்பாடு இருந்தா கூட தேவலாம்ன்னு அவ்வேம் நெனைச்சாம். டிவியெஸ்ஸூ பிப்டிக்கு எந்தக் காலத்துல றெக்கை இருந்துச்சு? அதெ வெச்சி ரோட்டுலத்தாம் போயாவணும். பயந்துப் போயி ஏர்போட்டுக்குப் போறதா இருந்தாலும் இஞ்ஞயிருந்து திருச்சிக்குப் போயாவணும். அப்பிடியிருக்க விகடுவோட‍ நெனைப்பு நெறைவேறுறதுக்கு வாய்ப்பே யில்ல. மனுஷனுக்கு இன்னொரு மனுஷன் கண்ணு படாம பறந்துப் போற சக்தியில்லாம போனதெ நெனைச்சு மொத மொதல்லா வருத்தப்பட்டாம் விகடு.

            செய்யுவோட அவ்வேம் வூடு வந்துச் சேந்தப்போ அந்தப் பக்கம், இந்தப் பக்கம் பாக்காம கண்ணு கட்டுன குதிரையைப் போல வந்தாம். அப்பிடி வந்ததால அவ்வேம் யாரையும் பாக்கல. அப்பிடிப் பாக்காம இருந்ததெ வெச்சி தங்கள யாரும் பாக்கலன்னு மனசுக்குள்ள அவனா நெனைச்சிக்கிட்டாம். செய்யுவ எறக்கி வுட்டுப்புட்டு, மறுக்கா அவ்வேம் சரசு ஆத்தாவ கூப்புடப் போனாம். சரசு ஆத்தா வண்டியில ஏறுனதுலேந்து பேசிட்டெ வந்துச்சு. "நீஞ்ஞல்லாம்தாம்டா அவளுக்குத் தெம்பு தெகிரியத்தெ கொடுக்கணும். பூந்த வூட்டுக்கு வந்தா பொண்ணுக்கு பொறந்த வூட்டு நெனைப்பு மறந்திட வாணாமா? எவ்ளோ சொல்லிப் பாத்துட்டேம்டாம்பீ! கேக்குறாப்புல யில்ல. நாமளும் கொஞ்ச நாளுப் போயிக் கெடந்துதாம் பாத்தேம். செரித்தாம் கெடக்குப் போன்னு பாக்குக்கோட்டைக்கும் கொஞ்ச நாளு கொண்டாந்து வெச்சிப் பாத்தேம். இஞ்ஞ பாக்குக்கோட்டைக்கு வர்றப்போ சரியாயிடுறவெ, சென்னைப் பட்டணத்துககுப் போறப்ப மோசமாயிடுறா! என்னான்னே நமக்குப் புரியலடாம்பீ! அதாம் பாத்தேம்! கொஞ்ச நாளு வூட்டுல கொண்டாந்து வுட்டுப்புட்டாலாவது தேவலாம்ன்னு பாத்துட்டு அழைச்சாந்துட்டேம். சின்னப் புள்ளதானடாம்பீ! கொஞ்ச நாளு வூட்டுல இருக்கட்டும். மனசு கொஞ்சம் தேறுன பெற்பாடு அழைச்சிட்டுப் போவலாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            அதுக்குள்ள வூடு வந்துச்சு. சரசு ஆத்தா எறங்கி வேக வேகமா உள்ளாரப் போனுச்சு. சமையக்கட்டெத் தாண்டி இருக்குற அறைக்குள்ள போனுச்சு. அங்கத்தாம் செய்யு போயி கட்டில்ல ஒடம்ப குறுக்கிக்கிட்டுப் படுத்தபடி தலைய வெங்குவோட மடியில வெச்சிருந்தா. ஒரு சின்னக் கொழந்தையப் போல செய்யு வெங்குவோட மடியில மொகத்தப் புதைச்சுக்கிட்டுத் தேம்பித் தேம்பி அழுதா. "ந்தாரு ன்னா சின்னப்புள்ளையாட்டம்! சில பேத்துக்கு அப்பிடித்தாம் பொறந்த வூட்டு ஞாபவமா இருக்கும். எல்லாம் கொஞ்ச நாளிக்குத்தாம். பெறவு கொஞ்ச கொஞ்சமா மனசு சரியா போயிடும். இதுக்குப் போயா அழுவாங்க? இன்னும் கொஞ்ச நாளாச்சுன்னா கொழந்தெ ஒண்ணு பொறந்துப்புடும். கொழந்தெ ஒண்ணு பொறந்தா பொறந்த வூட்டு ஞாபவமே யில்லாம கொழந்தெயெ கதின்னு கெடப்பே. அதுக்குப் போயி இப்பிடியா தெகிரியம் இல்லாம யிருப்பாங்க!"ன்னு சொல்லிட்டு இருந்துச்சு வெங்கு. ஆயி எதுவும் சொல்ல முடியாம பக்கத்துல நின்னுட்டு இருந்தா.

            "ந்நல்லா சொல்லுடியம்மா! இப்பிடித்தாம் எதெ கேட்டாலும் தேம்பித் தேம்பி அழுவுறது. ன்னான்னு சொன்னாத்தாம்னே எதாச்சும் செய்ய முடியும்? ஒண்ணுத்தையும் சொல்லித் தொலைய மாட்டேங்றா! செரி இஞ்ஞ வந்தாளாச்சும் எதாச்சிம் சொல்லி மனசு தேறுதான்னு பாக்கத்தாம் கொண்டாந்தேம். கொஞ்ச நாளு இருக்கட்டும்டி ஆயா! அப்பம் ஆயி மொகத்தப் பாத்து மனசு தெளிஞ்சாத்தாம் செரிபட்டு வரும். அதாங் கொண்டாந்துட்டேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "ஒன்னய நம்பித்தாம் சின்னம்மா பொண்ண கொடுத்திருக்கேம். இவ்வே என்னவோ யிப்பிடி இருக்காளே? சொந்தத்துலயே யிப்பிடின்னா பெறத்தியாகிட்டெ கொடுத்திருந்தா இவ்வே ன்னாத்தப் பண்ணுவா? தெய்வந்தாம் பாத்து ஒங்கிட்டெ சேத்திருக்கு. ரொம்ப பயப்படுவா சின்னம்மா இவ்வே! அதாங் கொறெ. அதாலயே வூட்டுலயும் செரி, நாமளும் செரி ஒத்த வார்த்தெ சொல்லுறது யில்ல. இத்தனெ வருஷம் வெச்சு வளத்தாச்சு. அந்தப் படிக்குக் கொடுக்கணும்ன்னுத்தாம் சின்னம்மா ஒம்மட வூட்டுக்கு அனுப்பி வெச்சேம்!"ன்னுச்சு வெங்கு. வெங்குவுக்கும் கண்ணுல்லாம் கலங்கிப் போயிருந்துச்சு.

            "எதுக்குடிம்மா நீயி இப்போ அழுகாச்சிய வைக்குறே? நீயி கலங்குறதெப் பாத்தா அவ்வே கலங்க மாட்டாளா? யிப்போ ன்னா ஆயிடுச்சு? கலியாணம் ஆயி கொஞ்சம் அப்பன் ஆயியப் பாக்கணும்ன்னு ஒரு ஆசெ. இருந்து பாத்துட்டு கொஞ்ச நாளு கழிச்சி குடித்தனத்தெ நடத்து. ஒண்ணுங் கெட்டுப் போவப் போறதில்ல. யப்பா யம்மாவோட உக்காந்து கலகலப்பா பேசிட்டு தெளிவா வா. பொங்கலுக்குப் பெறவு நல்ல வெதமா சென்னைக்குப் போயி குடித்தனத்தெ நடத்து. அதுவும் நல்லதுதாங். தை பொறந்தா வழி பொறக்கும்ன்னு அந்தக் காலத்துலயே ச்சும்மாவா சொன்னாங்க?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            அவுங்கப் பேசிட்டு இருக்குறப்பவே ஆயிப் போயி டீத்தண்ணியப் போட்டு எடுத்துக்கிட்டு, தட்டுல நெறைய பிஸ்கோத்துகள வெச்சி எடுத்துட்டு வந்தா.

            "யிப்போ சாப்புடுறதுக்கு நேரமில்லடி ஆயா. ஒரு ரொட்டிய மட்டும் கொண்டா. அத்தோட ரவ்வ டீத்தண்ணிய மட்டும் கொண்டா. நனைச்சிச் சாப்புட்டுட்டுக் கெளம்புறேம். கெழவெம் வேற பாக்குக்கோட்டையில கெடந்து செருமப்பட்டுக்கிட்டுக் கெடப்பாம்! நாம்ம போயித் தொலையிலன்னா அதுக்கு வேற பாட்டு வுட்டுட்டுக் கெடப்பாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "யிரு சின்னம்மா! தங்கிட்டுப் போ!"ன்னுச்சு வெங்கு.

            "முடியாதுடி தங்கம்! அஞ்சரை பஸ்ஸூக்கு சட்டுபுட்டுன்னு கெளம்புதேம். பயல கொண்டாந்து யண்ணம் வூட்டுல மட்டும் வுடச் சொல்லு. அஞ்ஞ இருந்தம்ன்னா கையக் காட்டி பஸ்ஸ நிப்பாட்டிட்டு அப்பிடியே ஏறிடுவேம். வூட்டுல வேற வேல நெறையக் கெடக்கு. இருக்குற வேலய முடிச்சிட்டு இன்னொரு நாளு சாவகாசமா வர்றேம்!"ன்னு சரசு ஆத்தா பிடிவாதமா நின்னுச்சு.

            "அப்பிடின்னா யாத்தாவக் கொண்டு போயி வுட்டுட்டு வாடாம்பீ!"ன்னுச்சு வெங்கு விகடுவப் பாத்து.

            சரசு ஆத்தா கெளம்பி வந்துச்சு. நடுக்கூடத்துல சுப்பு வாத்தியாரு நின்னுகிட்டு இருந்தாரு. "என்னத்தெ சொல்லுறது போங்க? இந்தக் காலத்துல இப்பிடியா ஒரு பொண்ணு இருப்பா? ஒண்ணொண்ணும் கலியாணத்தக் கட்டிட்டு வெளிநாட்டுக்கேப் போயி குடித்தனத்தெ நடத்துதுங்க! இத்து என்னவோ இஞ்ஞ இருக்குற சென்னைப் பட்டணத்துக்குப் போயி குடித்தனம் பண்ண பயப்படுது! கைக்குள்ளயே வெச்சி வளத்துப்புட்டீங்க! அப்பம் ஆயி நெனைப்பத் தவுர வேற நெனைப்பே வர்ற மாட்டேங்குது! அதாங் கொஞ்ச நாளு இஞ்ஞ இருக்கட்டுன்னு கொண்டாந்து வுட்டேம்!"ன்னுச்சு சரசு அத்தா.

            "ஆரம்பத்துல இப்பிடித்தாம் இருக்குமுங்க. போவப் போவ செரியாயிடும். இந்த மாதிரி இருக்குறதுங்கத்தாம் பின்னாள்ல தெறமெயா குடும்பத்தையும் நடத்திக்கிட்டுப் போவுமுங்க. படிச்சிக்கிட்டெ இருந்த புள்ள. ரொம்ப படிக்க வெச்சா இப்பிடி ஒரு பெரச்சனெ ஆயிடுது. ஒலகம் புரியாம போயிடுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அஞ்சு நாளு, பத்து நாளு வெச்சு தெகிரியம் பண்ணுங்க! பெறவு பாத்துட்டு அழைச்சிட்டுப் போறேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "ந்நல்ல காரியந்தாம் பண்ணீயே! பயப்படுதுன்னு தெரிஞ்சு அஞ்ஞயே வுட்டுப்புடாம கொண்டாந்த வரைக்கும் செளரியந்தாம். நாலு நாளைக்கு உக்காந்துப் பேசுனா செரிபட்டு வந்துப்புடும். படிச்ச புள்ளதானே. புரிஞ்சிக்கிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இத்து திடீர் யோஜனெ. அதால வூட்டுல போட்டது போட்டபடி போட்டுட்டு வந்துட்டேம். வூட்டுக்காரரு வந்து காத்துக் கெடப்பாரு. இப்ப கெளம்புன்னா செரியா போயிச் சேந்துப்புடலாம். அதாங் கெளம்பிட்டேம். பேராண்டி கொண்டாந்து வுட்டாட்ம்ன்னா அஞ்சரைக்கு வர்ற ரண்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சிடுவேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            சுப்பு வாத்தியாரு விகடுவெப் பாத்தாரு. "வேகமா கொண்டுப் போயி வுட்டுட்டு வாடாம்பீ!"ன்னாரு. விகடு கெளம்புனாம். கெளம்பி வண்டிய ஸ்டார்ட் பண்ண நேரத்துல வெங்கு உள்ளேந்து ஓடியாந்துச்சு. "ரொம்ப நாளாச்சேன்னு வூட்டுல எல்லாம் பரோட்டா கேட்டுச்சுங்கன்னு அதெ வாங்கிட்டு வந்தாரு. டீத்தண்ணியப் போட்டுக்கிட்டு அதெ திங்கக் கொடுக்கலாம்ன்னு நெனைச்சிட்டு இருந்தப்ப நீயி வந்துட்டே சின்னம்மா. யிப்போ வேற அவ்சரமா கெளம்புறீயா? இந்த டப்பாவுல நாலு பரோட்டோவப் போட்டு சால்னாவ ஊத்திருக்கேம். வூட்டுப் போயிச் சேந்து சாப்புடு!"ன்னுச்சு வெங்கு.

            "ஏம்டி நாம்ம ன்னா பரோட்டாவையே பாக்காதவளா? அதெ தூக்கிட்டு யிப்படி ஓடியாறீயே?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "வூட்டுக்கு வந்துட்டு செரியா சாப்புடாம கொள்ளமா கெளம்புதீயே சின்னம்மா! அதாங் மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. அதாங் தூக்கிட்டு ஓடியார்றேம்!"ன்னுச்சு வெங்கு.

            "இவ்வே ஒருத்தி! மவளத் தாண்டி இவ்வே ஒரு கூறு கெட்டவே!"ன்னு சொல்லிட்டு வெங்கு கொண்டாந்த சாப்பாட்டு டப்பாவ வாங்கி வெச்சுக்கிட்டு. விகடு வண்டியக் கெளப்புனாம். நேரா கொண்டு போயி முருகு மாமாவோட வூட்டுல வுட்டாம். அவ்வேம் கெளம்புறப்போ, "தங்காச்சிய தெகிரியம் பண்ணி வுடு! பாத்துக்கிடுறேம்! இந்தாடா இந்த டப்பாவக் கொண்டுப் போயி வூட்டுல இருக்குற ஒம் மவ்வேகிட்டெ கொடுடா! சின்ன புள்ளீயோ இதெ ஆசையா சாப்புடும். அதெ தூக்கி நம்ம கையில கொடுக்குறா ஒம்மட ஆயி!"ன்னு பரோட்டா வெச்ச சாப்பாட்டு டப்பாவ திருப்பி நீட்டுன்னுச்சு சரசு ஆத்தா. அதெ விகடு வாங்கிக்க மாட்டேம்ன்னாம்.

               "இவ்வேம் ஒருத்தெம்? ஆயாக்காரியா தாண்டுனாப்புல. இனுமே புரோட்டா சாப்புடுற வயசாடா நமக்கு?"ன்னு சொல்லிட்டெ டப்பாவோட முருகு மாமாவோட வூட்டுக்குள்ள போனுச்சு சரசு ஆத்தா. இவ்வேம் வண்டியக் கெளப்பிட்டு திரும்புனாம். கொஞ்ச தூரம் வந்திருப்பாம். ரண்டாம் நம்பரு பஸ்ஸூ பாம் பாம்ங்ற சத்தத்தோட ஆர்குடிய நோக்கி மேக்கால போனுச்சு. இந்த நேரமா பாத்து சரசு ஆத்தா வூட்டுக்குள்ள வேற போயிடுச்சே. பஸ்ஸ வுட்டுப்புடுமோன்னு நெனைச்சி திரும்பிப் பாத்தாம். பஸ்ஸு முருகு மாமா வூட்டக் கடந்து அந்தாண்ட போனுச்சு. பஸ்ஸ சரசு ஆத்தா வுட்டுப்புட்டுன்னுத்தாம் நெனைச்சாம் விகடு. இன்னும் சீக்கரமா வந்திருக்கணுமோன்னு நெனைச்சு முருகு மாமா வீட்டையே பாத்துட்டு இருந்தப்போ, பஸ்ஸூ அந்தாண்ட போனதும் இந்தாண்ட வந்த சரசு ஆத்தா முருகு மாமாவோட கடைக்குள்ள நெழைஞ்சு உக்காந்து பேச ஆரம்பிச்சது.

            விகடுவுக்குச் சந்தேகமா இருந்துச்சு. இந்தப் பஸ்ல ஏறணும்ன்னுத்தான அரக்கப் பரக்க கெளம்பி வந்துச்சு. இந்த பஸ்ல ஏற வாய்ப்பு இருந்தும் ஏறாம உக்காந்து என்னத்தெ பேசிட்டு இருக்குன்னு அவ்வேம் நெனைக்க நெனைக்க ஒண்ணும் புரியல. வேற ஏதோ சில சங்கதிக பேசிட்டு அடுத்தாப்புல போற பஸ்ல கெளம்பும்ன்னு நெனைச்சி அவ்வேம் கொஞ்சம் புரியாமத்தாம் கெளம்புனாம்.

*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...