25 Sept 2020

முடிஞ்சது தாலி பெருக்கிப் போடுற சடங்கு!

முடிஞ்சது தாலி பெருக்கிப் போடுற சடங்கு!

செய்யு - 575

            காலையில ஒம்போது மணி வாக்குல சுப்பு வாத்தியாரு வூட்டுலேந்து கெளம்புன வேனு குடும்பத்தோட தெரு சனங்கள ஏத்திக்கிட்டுப் போயி பொன்னியம்மன் கோயில்ல நின்னுச்சு. வேனுக்குப் பின்னால டிவியெஸ்ஸூ பிப்டியில விகடு போனாம். அங்கப் போயி பாத்தா மாப்புள வூட்டுச் சனங்கன்னு யாரயும் காங்கல.

            "என்னடாம்பீ! போயிக் வெடிக்கடெகாரரு வூட்டுல கொஞ்சம் பாத்துட்டு வாடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. செரிதான்னு விகடு டிவியெஸ்ஸூல முருகு மாமா வூட்டுக்குப் போனாம். அஞ்ஞ ராசாமணி தாத்தாவும், சரசு ஆத்தாவும் உக்காந்துப் பேசிட்டு இருந்துச்சுங்க. இவ்வேம் வந்து நின்னதப் பாத்துட்டு, "என்னடா பேராண்டி சனங்க எல்லாம் கோயிலுக்கு வந்துப்புட்டுங்களா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "எல்லாரும் வந்தாச்சுத் தாத்தா! ஒஞ்ஞளுத்தாம் எதிர்பாத்துட்டு நிக்குதுங்க எல்லாம்!"ன்னாம் விகடு.

            "அப்டியே வண்டிய எடுடா பேராண்டி!"ன்னு ராசாமணி தாத்தா பின்னாடி ஏறுனுச்சு. விகடு வண்டியில ஏத்திட்டுக் கொண்டாந்து பொன்னியம்மன் கோயிலுகிட்டெ வுட்டாம்.

            "அப்பிடியே போயி எல்லாத்தையும் ஒவ்வொண்ணா கொண்டா பாப்பேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            விகடு ஒடனே வண்டியக் கெளப்பிட்டுத் திரும்பிப் போனாம். அஞ்ஞ போனதும் சரசு ஆத்தா சொன்னுச்சு, "அப்பிடியே போயி சுந்தரி வூட்டுல பாத்துட்டு வாடாம்பீ!"ன்னு. விகடு நேரா சுந்தரி வூட்டுக்குப் போனாம். சுந்தரி கெளம்பி தயாரா நின்னுச்சு. இவ்வேம் வந்து நின்னதப் பாத்துட்டு, "அவுங்க இத்தோ வந்துடுறதா சொல்லிட்டுப் போனாங்க. வந்த ஒடனே வந்துடுறேம்! அவுங்களுக்குத்தாம் காத்துகிட்டு நிக்கேம்!"ன்னுச்சு.

            "இந்த வண்டியிலயே வாரீயளா?"ன்னாம் விகடு.

            "வாணாம். அவுங்க வந்துப்புடட்டும். நாம்ம வூட்டையெல்லாம் வேற பூட்டிட்டு வாரணும். சொல்லாம நாம்ம பாட்டுக்கு வந்துட்டு அந்த மனுஷன் வாயிலேந்து வண்டை வண்டையா வாங்கிக் கட்டிக்கிடுறாப்புல ஆயிடும். த்தோ அஞ்சு நிமிஷத்துல நாம்ம அவுகளோட வந்து நிப்பேம்!"ன்னுச்சு சுந்தரி. செரித்தாம்ன்னு விகடு முருகு மாமா வூட்டுக்குப் போயி சரசு ஆத்தாவ அழைச்சிட்டுப் போயிக் கோயில்ல விட்டாம். அடுத்ததா அவ்வேம் கெளம்புறப்போ சுப்பு வாத்தியாரு பிடிச்சிக்கிட்டாரு, "ஏம்டாம்பீ! இந்த வேன கொண்டு போனீன்னா ஒரே தவாவுல்லா அழைச்சாந்துப்புடலாம்! இப்பிடி ஒவ்வொரு தவாயா போயிட்டுக் கெடக்குதீயே?"ன்னாரு.

            "இதுக்குப் போய் ஏம் வேனப் போட்டு அலைக்கழிச்சிக்கிட்டு. போனான்னா யண்ணிய அழைச்சிட்டு வந்துட்டாம்ன்னு கூட போதும். யண்ணம் கூட மெதுவா நடந்து வந்துடும். எம்புட்டு தூரம்? நீயி வண்டியிலயே போயி கொண்டாடாம்பீ!"ன்னுச்சு சரசு ஆத்தா.          விகடு அடுத்ததா நீலு அத்தைய பின்னாடி வெச்சுக் கொண்டாந்தாம். நீலு அத்தைய அழைச்சிட்டு வர்றப்பவே முருகு மாமா சொன்னிச்சு, "நமக்கா வார வாணாம். நாம்ம சித்தெ கடையில உக்காந்திருந்துப்புட்டு மெல்லமா வர்றேம். செரியான நேரத்துக்கு வந்துப்புடுவேம். நீயி அஞ்ஞ ஆவ வேண்டிய காரியத்தெ பாரு!"ன்னுச்சு. அழைச்சிட்டு வர்ற வேல முடிஞ்சதும் விகடு வண்டிய ஓரமா நெழல்ல போட்டுட்டுக் கோயிலுக்குள்ள நொழைஞ்சாம். சுந்தரியும் சித்துவீரனோட வண்டியில வந்து எறங்குனுது. சுந்தரிய கொண்டாந்து விட்டுட்டு சித்துவீரன் ஒடனே திரும்பப் போயிட்டாம். ஏன்னு ஏதுன்னு ஒரு வார்த்தெ கேட்கல. போனவேம் போனவந்தாம்.

            தாலி பெருக்கிப் போடுறதுக்கான சடங்க மொறைக ஆரம்பமானுச்சு.

            "இது மாதிரியான ஒரு சடங்குங்றப்போ எல்லாரும் கூடுனாத்தானே நல்லா இருக்கும். நெறைய விசயங்களப் பேசித் தீத்துக்க முடியும். தனியா இருந்து யோசிக்கிறப்போ உண்டாவுற எண்ணங் கூட கூட்டமா கூடிப் பேசுறப்போ மாறிப் போவும். மனசுல அப்பைக்கப்போ மாத்தம் உண்டாவணுங்றதுக்காகத்தாம் இது போல சடங்குகளச் செய்யுறது. ல்லன்னே தாலிய கட்டுன அன்னிக்கே நீயு ஒம் வேலயப் பாத்துக்கிட்டு போ! நாம்ம நம்ம வேலையப் பாத்துட்டுப் போன்னு போயிருக்க மாட்டேமா?"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா.

            "பெரியவங்களப் பாக்குறப்போ அவுங்க அனுபவத்துல சில விசயங்கள இந்த மாதிரி நேரத்துல சொல்லுவாங்க. அதெல்லாம் பொக்கிஷங்க மாதிரி. அவுங்க கால்ல வுழுந்து ஆசிர்வாதம் வாங்குறதுக்கான காரணமே அதுதாம். அவ்வளவு காலம் வாழ்ந்து முடிச்சித் தெரிஞ்சிக்கிட்ட விசயத்தெ வாழப் போற எங்களுக்காக கொடுத்திருக்கீங்களேங்ற நன்றி உணர்வெ அவுங்க கால்ல வுழுந்துதாம் தீத்துக்க முடியும். அதுக்குப் பொண்ணோட மாப்புள்ளத் தம்பீயும் வந்திருக்கணும் இல்லியா? அதுக்கு என்ன சோலியோ?"ன்னு அம்மாசியம்மா பேசுனுச்சு.

            பொண்டுக ஓரிடத்துல கூடுனாவே இப்பிடித்தாம். பேச்சோட பேச்சா வேலையும், வேலையோட வேலையா பேச்சும் ஆவும். பேசாம அவுங்களால வேல பாக்க முடியாது.

            "என்னதாம் லீவு போட முடியாத அளவுக்கு வேலைன்னாலும் தாலி பெருக்கிப் போடுற இந்தச் சடங்குக்கு மாப்புளப் புள்ள வந்திருக்கணுமா இல்லியா? பொண்ணு மாப்புள்ளைய ரண்டு பேத்தையும் உக்காத்தி வெச்சாத்தானே அம்சமா இருக்கும். குத்து வெளக்கையே அதுக்குத்தாம் ரண்டா ஏத்தி வைக்கிறது!"ன்னுச்சு பரமுவோட அம்மா. ஆளாளுக்கு இப்பிடி சனங்க பேசிட்டு இருக்குறப்போ, நீலு அத்தையால சும்மா இருக்க முடியுமா? "பொம்பளப் புள்ளைக்கான சடங்குல ஏம்டியம்மா ஆம்பளப் புள்ளய எதிர்பாக்குறீயே?"ன்னுச்சு நீலு அத்தே.

            "அதுவுஞ் செரித்தாம். அதாங் மாப்புள்ள சிங்கம் கலியாணத்து அன்னிக்கே தாலியக் கட்டி முடிச்சிட்டாப்புலயே. இனுமே அதெ கட்டி வுடுறது நம்மள மாதிரிக்கிப் பல்லு போன கெழவிகளோட வேலன்னு நெனைச்சிட்டாப்புல போருக்கு!"ன்னு தம்மேந்தி ஆத்தா சிரிச்சிச்சு.

            எல்லாம் பேசுறதையெல்லாம் ஓரத்துல தூணுக்குக் கீழே நின்னு கேட்டுட்டு இருந்தாம் விகடு. விகடுவுக்குப் பாலாமணி வர்றாம இருக்குறது பலவெதமான யோசனைகளக் கெளப்பி வுட்டுக்கிட்டு இருந்துச்சு. அவ்வேம் பாட்டுக்கு யோசிச்சிட்டு நின்னாம். கலியாணம்ன்னா மாப்புள்ள தாலி கட்டுறதெ பாக்குறதுக்குச் சனங்க கூடும். இந்தச் சடங்குல மாப்புள்ளைய வுட பொண்ணுக்குத்தாம் முக்கியத்துவம் அதிகம். தனக்கான முக்கியத்துவம் இதுல இருக்காதுங்ற நோக்கத்துல கூட பாலாமணி இதுக்கு வர்றாம் இருந்திருக்கலாம். யில்ல நெசமாலுமே வேலயும் இருந்திருக்கலாம். ஆனா அவ்வேம் மனசுல என்ன இருக்குங்றது அவனுக்குத்தாம் தெரியும்.

            மாப்புள வர்றாம இருக்குறதப் பத்தி சனங்க கொஞ்சம் குத்தலாத்தாம் பேசுனுச்சுங்க. சரசு ஆத்தா அதெ பெரிசா கண்டுக்கிடாத மாதிரிக்கிச் சடங்குக்கான வேலையில கவனமா இருக்குறாப்புல காட்டிக்கிடுச்சு. அப்பிடிச் சனங்க ஓரஞ்சாரமா பேசுற அந்தக் கருத்துச் சரியோ தப்போ? இந்தச் சடங்குக்கு பாலாமணி வந்திருந்தா அவ்வேம் மனசுல கூட ஒரு தினுசான மாத்தம் உண்டாயிருக்குந்தாம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்க ஒவ்வொண்ணுலயும் பெரியவங்க அவுங்கள அறிஞ்சோ அறியாமலோ ஒரு சில வாக்கியங்கள சொல்லுறாப்புல சில நெலமெ எப்பிடியும் வந்துடும். அதெ கூர்ந்து கவனிச்சுப் பாக்குறவங்களுக்கு அதுல இருக்குற நுட்பமான சேதி வாழ்க்கைக்கு எந்த அளவுக்குப் பயன்படுங்றது புரியும். வாழ்ந்து முடிச்ச அனுபவக் கட்டைகச் சொல்லுற சொல்லுக்கு ஒரு மந்திரச் சக்தியும் இருக்குதுங்றதெ இது மாதிரியா அனுபவப்பட்டவங்களுக்குத்தாம் தெரியும். புருஷங்காரனோட சண்டெய வெச்சிட்டு வந்துருக்குற பொண்டாட்டிக்காரி இப்பிடிச் சடங்குல அந்நியோன்யமா இருக்குற வயசான கெழடுகள ரண்டப் பாத்தா போதும் மனசு அப்பிடியே மாறிப் போவும். அப்பிடி சில பல விசயங்க இம்மாதியான சடங்குகள நடக்கும்.

            மனுஷனோட நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் விஷேசங்களுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கு. எல்லாத்துலயே நாலு பேரு கூடுறாப்புல, பேசுறாப்புல, கலந்துக்கிறாப்புல ஒரு அமைப்புங்றது இருக்கு. ஒரு கொழந்தை பொறக்குறப்போ நாலு பேரு வந்துப் பாக்குறாங்க. அந்தக் கொழந்தைக்குப் பதினாறு கொண்டாடுறப்போ, காது குத்துறப்போன்னு நாலு பேரு கூடுறாப்புலத்தாம் தேவைங்க இருக்கு. அது அப்பிடியே கலியாணம் காட்சின்னு விரிவாயி ஒரு மனுஷன் சாவுறப்ப கூட தனியா உக்காந்து அழுவுறது கெடையாது. சனங்க கூடித்தாம் அழுவுதுங்க. அப்பிடி அழுததுக்கு மாறா கருமாதின்னு ஒண்ணுத்தெ நாலு சனங்க கூடி செஞ்சு மனசெ ஆறுதலு பண்ணிட்டுதாம் கெளம்புதுங்க. இதெல்லாம் வெறுமனே நாலு சனங்க கூடிக்குறதுக்கு மட்டுமில்ல. மனசுல எதாச்சும் வருத்தம்ங்க, சங்கடங்க இருந்தாலும் அதெ சடங்கோட சடங்கா, தேவையோட தேவையா பேசி ஆத்திக்கிறதுக்குத்தாம். அப்படி ஏதாச்சும் பாலாமணிக்கும், செய்யுவுக்கும் மனவருத்தங்க இருந்தா கூட இப்பிடி வந்துட்டுப் போறப்ப சிலது மாறிப் போறதுக்கு வாய்ப்பு இருக்கு.

            இந்த மாதிரியான சடங்குக இல்லாம போறப்போ ஒறவுகளோ, சொந்தங்களோ கூட சந்திக்க வாய்ப்பே இல்லாம போனாலும் போனதுதாம்.

            வடவாதி பொன்னியம்மன் கோயில்ல செய்யுவக் கெழக்கப் பாக்க உக்கார வெச்சி கலியாணத்தப்போ கட்டுன தாலிய அவுத்து, புதுசா வாங்கியாந்திருந்த தாலிச் சரட்டுல மஞ்சக் கயித்தக் கோத்து அதுல காசு, மாங்கா, தாலிகுண்டு, குழாய்களக் கோத்துத் தாலியப் பெருக்கிப் போட்டாங்க. வந்திருந்த மவராசிக எல்லாத்துக்கும் தட்டுல ஜாக்கெட்டு துணி, மஞ்சள் குங்கும டப்பா, பழம், வெத்தல பாக்குக் கொடுத்து கால்ல விழுந்தா செய்யு. மவராசிக அதெ வாங்கிக்கிட்டு ஆசிர்வாதத்தப் பண்ணி வுட்டு பத்து, இருவதுன்னு கையில காசிய வெச்சிக் கொடுத்துச்சுங்க. பொண்டுகளே மின்னாடி நின்னு இந்தச் சடங்கெ முடிச்சதுங்க. சரியா சடங்கு முடியுற நேரமா பாத்து முருகு மாமா வந்துச்சு. பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா, சுப்பு வாத்தியாரு, விகடு எல்லாம் ஆளுக்கொரு மூலையில நின்னாங்க.  

            சடங்க முடிச்சதும் சனங்க பாட்டுக்கு வேன்ல வந்து ஏறுனுச்சுங்க. வூட்டுக்கு வந்தப்போ மணி பத்தரைய நெருங்குனுச்சு. கொஞ்ச நேரம் சனங்க அதையும் இதையும் பேசிட்டுக் கெடந்துச்சுங்க. பதினோரு மணி ஆனப்போ சுப்பு வாத்தியாரு ராசாமணி தாத்தாவப் பாத்துக் கேட்டாரு, "மாமா! சாப்பாட்ட முடிச்சிப்புடலாமா?"ன்னு

            "தேவ முடிஞ்சிட்டுங்றப்போ சாப்பாட்டையும் முடிச்சிப்புட வேண்டியதுதாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. கூடத்துலயே எலையப் போட்டு சாப்பாட்டுக்கு ஏற்பாடு ஆனுச்சு. சாப்பாடு முடிஞ்ச பெற்பாடு சனங்க ஒவ்வொண்ணா கெளம்ப ஆரம்பிச்சதுங்க. கெளம்புறப்ப ஒவ்வொருத்தரும் செய்யுவ வந்துப் பாத்து, "ஒடம்பப் பாத்துக்கடி தங்கம். ஒடம்பு பெலமா இருந்தாத்தாம் ஒலகத்துல எதையும் சாதிக்க முடியும். ஒடம்பு பெலமா இருந்தாத்தாம் மனசும் பெலமா இருக்கும். ஒனக்கென்னடி ராசாத்தி கொறெ? இந்த ஊர்ல எந்தப் பொண்ணுக்கும் பண்ணாத அளவுக்கு யப்பா, யண்ணன்லாம் மின்னாடி நின்னு கலியாணத்தப் பண்ணி வுட்டுருக்குங்க. ந்நல்லா ஞாபவம் வெச்சுக்கோ ஒடம்பு பலம் இல்லாம போயிட்டா ஒண்ணும் பண்ண முடியாது ஆங்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புனுச்சுங்க. சங்கதி இதெதான்னாலும் ஒவ்வொண்ணும் வெவ்வேற வெதமா செய்யுகிட்டெ வந்து சொன்னுச்சுங்க. அதையெல்லாம் கேட்டுக்கிட்டா செய்யு.

            சாப்புட்டு முடிச்சதும் ராசாமணி நாற்காலியில உக்காந்தே தூங்க ஆரம்பிச்சது. அதெ கெளப்பியாந்து ஒரு பாய போட்டு படுக்க வைச்சப்போ தூக்கம் கலையா மாதிரிக்கே அது பாட்டுக்கு கொறட்டைய வுட ஆரம்பிச்சது. தாலி பெருக்கிப் போடுறதுக்காக காலாங்காத்தால சீக்கிரமா எழும்பி நெறைய வேலைகளப் பாத்ததால வூட்டுல இருந்த எல்லாத்துக்குமே கொஞ்சம் களைப்பத்தாம் இருந்துச்சு. அத்தோட உண்ட மயக்கம் வேற சேந்துக்கிட எல்லாம் சித்தெ கண்ணசந்ததுங்க.

            மூணு மணிக்கு மேல ஒரு கார்ரை வெச்சு மவளக் கொண்டு போயி வுடுறதுக்கு சுப்பு வாத்தியாரு ஏற்பாட்டப் பண்ணிருந்தாரு. கெளம்புறதுக்கு மின்னாடி கேசரியும், பஜ்ஜியும், காப்பியும் கொடுத்து முடிச்சானுது. மூணே காலுக்கு மேல கெளம்புறதுக்கான ஏற்பாடுக ஆரம்பமானுச்சு. கிட்டதட்ட செய்யு பாக்குக்கோட்டைக்குக் கெளம்பிட்டா. இருந்தாலும் அவ்வே மனசுக்குள்ள ஒரு கேள்வி எஞ்சியிருந்துச்சு. செரியா கெளம்புற நேரத்துல அவ்வே வெங்குவக் கேட்டா, "யம்மா! ஒரு ரண்டு நாளு இருந்துட்டுப் போறனேம்மா!"ன்னு.

            "ன்னா புள்ளீயோ நீயி? தாலி பெருக்கிப் போட்டுட்டு அன்னிக்கே பூந்த வூட்டுக்குப் போவணுங்றது ஒரு மொறை. பொறந்த வூடு தங்கக் கூடாதும்பாவோ. அதெ மாத்த முடியாது. நீயி போயிட்டு வாடி ராசாத்தீ! நாம்ம இன்னொரு நாளு வந்து அழைச்சிக்கிறேம்! ரண்டு நாளு ன்னா? பத்து நாளு வெச்சிக்கிடுறேம்!"ன்னுச்சு வெங்கு.

            அதேப் பாத்துட்டு இருந்த சரசு ஆத்தா சொன்னுச்சு, "ஒடனேயும் ஒன்னய நாம்ம சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பல. ஒரு வாரம் பாக்குக்கோட்டையில நம்ம கூடயே இருந்துட்டுக் கெளம்பலாம்! இப்பிடி கெளம்ப வேண்டிய நேரத்துல தயங்கி நின்னா வூட்டுல நம்மளப் பத்தில்லாம் என்னத்தெ நெனைச்சுப்பாங்க சொல்லு? மனசுல எதாச்சும் கொறையிருந்தாலும் சொல்லு. ஆக்கினையப் பண்ணிடுவோம்!"ன்னு.

            செய்யு ஒண்ணும் பேசல. வேற வழியில்லாததப் போல ஒரு நெனைப்பு அவ்வே மனசுக்கு வந்ததோ என்னவோ? அவ்வே பாட்டுக்குக் கெளம்பி வந்தா. கார்ல ஏறுனா. கார்ல வெச்சு ராசாமணி தாத்தா, சரசு ஆத்தாவோட செய்யுவையும் அனுப்பிச்சி வெச்சாரு சுப்பு வாத்தியாரு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...