8 Sept 2020

இவை உபதேசத்திற்கு அல்ல!

 
இவை உபதேசத்திற்கு அல்ல!

            ஒரு விசயம் என்னவென்றால் ஒருவர் கோபமாக இருக்கிறார் என்று நினைத்து அதைத் தணிக்க முயலாதீர்கள். ஏனென்றால் கோபமே தவறு. ஆக அது அவருடைய தவறு. அவருடைய தவறை அவர்தான் சரிசெய்து கொள்ள வேண்டும். அதை நீங்கள் தணிக்க முயல்வது என்பது சப்பைக்கட்டுக் கட்டுவதைப் போல. மேலும் ஒவ்வொரு சொல்லும் செயலோடு இணைந்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. ஆதலால் வார்த்தைகளைச் செயலினின்று விலக்கி விட்டுப் பேசுவதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் ஆறுதல் என்றால் ஆறுதல் மட்டுமே சொல்ல வேண்டும். வாக்குறுதிகளை வரிந்து கட்டிக் கொண்டு வழங்கி விடக் கூடாது. எப்போது எப்படி பேச வேண்டுமோ அப்படி பேச வேண்டும். உங்கள் காரியத்தில் கண்ணாக இருந்து சாதித்துக் கொள்ள வேண்டும். அநாவசிய காரியங்களில் இறங்கி முழி பிதுங்கி நிற்கக் கூடாது.

            எந்த நேரத்தில் எப்படி வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு கலை. முதலில் விசயங்களைக் கறந்தால்தான் எப்படிப் பேச வேண்டும் என்பதே புலப்படும். அதை விடுத்து விட்டு அவசரப்பட்டு நீங்கள் உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தால் தேவையில்லாமல் நீங்கள் சிக்கிக் கொள்ள நேரிடும்.

            தானாக சூழ்நிலைகள் மாறும் போது எல்லாம் மாறுகின்றன. ஆகவே நீங்கள் மாற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பொறுமையாக இருப்பது மட்டுமே. பொறுமையாக இருந்தால் எந்தப் பழம் காம்பில் தொங்கிக் கொண்டிருந்ததோ அதுவே வந்து மடியில் விழும். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இப்படி இருக்கிறதே நிலைமை, இதற்கு எதாவது செய்தாக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது. ஒரு நிலைமை அப்படி இருக்கிறதென்றால் அதில் பல பேரின் மனநிலைகள் அடங்கி இருக்கிறது என்பதை யோசிக்க மறுக்கிறீர்கள். அதில் உங்கள் மனநிலையைக் குறுக்கே நுழைத்து மாற்றி விட முடியும் என்று நினைக்கிறீர்கள். அதை மாற்றுவது என்பது சுலபமில்லை. மனிதர்கள் ஏதாவது ஒன்று கிடைக்கும் என்றால்தான் அந்த மனநிலையை விட்டு மாறி வருகிறார்கள். அல்லது அதிகாரத்துக்கு அடங்கி மனநிலையை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் மாறுதலை எதிர்க்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது நீங்கள் மாற்ற நினைத்து நீங்கள் எதிரியாகத்தான் ஆக வேண்டும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்றபடி நைச்சியமாகப் பேசக் கூடியது என்பது எப்போதும் கிட்டக்கூடிய கலையில்லை.

            இப்போதும் எதுவும் கெடுதலாக நடந்து விடவில்லை. நீங்கள் கொஞ்சம் தேவையில்லாமல் சிலவற்றை மாற்ற நினைத்ததால் அப்படி நேர்ந்து விட்டது. அது அப்படி என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

            இனிமேல் அநாவசியமாக எதைப் பற்றியும் கருத்துச் சொல்வதை விட்டு விடுங்கள். அது எப்படியோ போகட்டும். யாரைப் பற்றியும் கருத்துச் சொல்லாதீர்கள். அது தேவையற்றது. அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் அவர்கள் ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு அதில் கைதியாக இருக்கிறார்கள். அதற்கு யார்தான் என்ன செய்வது? அதற்கு உங்கள் கருத்து என்ன செய்து விடப் போகிறது?

            எந்த ஒன்றைச் செய்த பிறகும் மனதை உறுத்தக் கூடாது. அப்படி உறுத்துகிறது என்றால் ஒன்று நீங்கள் தவறு செய்து விட்டதாகத்தான் அர்த்தம் அல்லது யோசிக்காமல் செய்து விட்டதாகத்தான் அர்த்தம்.

            எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்கலாம். அத்தனையும் உங்களுக்கு வேண்டியதில்லை. பொறுமை என்று ஒரு நல்ல குணம் மட்டும் போதும் உங்களுக்கு. ஏனென்றால் பொறுமை உள்ளவர்தான் நிலைத்து நிற்கிறார், அனுபவிக்கிறார். வாழ்ந்து பார்க்கிறார். பொறுமையானது மாறுவதையோ, மாறாமல் இருப்பதையோ கண்டு கொள்வதில்லை. அது பாட்டுக்குப் பொறுமையாக இருக்கிறது. ஒன்று தெரியுமா? உலகில் எல்லாவற்றுக்கும் அழிவு இருக்கிறது. பொறுமையோடு இருப்பவருக்கு அழிவில்லை என்பார்கள். இதைப் பற்றி தயவுசெய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். இது உங்களுக்குப் பொருந்தும் அளவுக்குச் சத்தியமாக யாருக்கும் குறிப்பாகப் பிறருக்குப் பொருந்தவே பொருந்தாது.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...