6 Sept 2020

சில நாள் சாக்ரடீஸ்


சில நாள் சாக்ரடீஸ்

            அவ்வபோது தன்னைப் பற்றி எஸ்.கே.வுக்கு எழுதிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இல்லையென்றால் அவன் குழம்பி விடுகிறான். சில நாட்கள் அவனைப் பற்றி எழுதிக் கொள்ளாததன் விளைவாகத் தெரு தெருவாக அலைந்து திரிய ஆரம்பித்தான். பார்ப்போரிடமெல்லாம் வளைத்துக் கட்டி முன்னுப் பின் தொடர்பில்லாமல் பேசிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் வீடு வீடாகப் போய் பேச ஆரம்பித்தான். பேச்சுக் கலையின் முற்றிய நிலையில் அவன் இருந்தான்.

            எஸ்.கே. பேசியதில் தவறேதும் இல்லை. அவன் பேசியதில் எதையும் கடைபிடிக்க முடியாததாக இருந்தது. உதாரணத்துக்கு நேர்மை, நியாயம், நீதி என்பன போன்றவை அவனது வார்த்தைகளில் அதிகம் கலந்திருந்தது.  அவன் அப்படிப் பேசிக் கொண்டு வீடு வீடாக அலைந்தது ஒன்றும் தவறு என்று சொல்ல முடியாது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் மக்களால் எதைப் பயன்படுத்த முடியவில்லையோ அதை அவர்கள் தூக்கி எறியவே நினைக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் நேர்மை, நியாயம், நீதி என்பதைத் தூக்கி எறிந்து நாளாகி விட்டதால், எஸ்.கே.வையும் தூக்கி எறியலாமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

            ஆக, எஸ்.கே.வுக்கு இதில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. அவ்வளவுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவன் வீடு வீடாக செல்லா விட்டாலும் மக்கள் எந்த அளவுக்குக் குறைந்தபட்ச நேர்மை, நியாயம், நீதியோடு இருந்திருப்பார்களோ அந்த அளவுக்கே இருந்திருப்பார்கள். அதில் அளவு கூட்ட முயற்சிப்பது என்பது அவர்களைப் பொருத்த மட்டில் அவர்களுக்கு விஷத்தைக் கூட்ட முயற்சிப்பது போல. உண்மையில் இந்த உவமை மிக மோசமானதாக இருக்கலாம். ஆனால் உண்மை என்பது நிச்சயமாக அதுவேதான். உண்மையான ஒன்றிற்கு உவமை தேவையில்லை என்று நீங்கள் வாதடலாம். இந்த உவமை உண்மையோடு பொருந்திய உண்மையான உவமை.

            அவ்வளவுதான் மக்களின் நீதியும், நியாயமும், நேர்மையும். இருந்தாலும் ஒரு முயற்சி என்பான் எஸ்.கே. அது குறித்து. இப்படி ஒரு மடத்தனமான முயற்சி எதற்கு என்றால், "பலருக்கு நேரமில்லை, எனக்கு நேரமிருக்கிறது. இருக்கின்ற நேரத்தில் அதைச் செய்து பார்த்தாயிற்று. அவ்வளவுதான். அதற்காக ராத்திரி நேரம் கூட அலைந்ததை நினைக்கும் போதுதான் இப்போது எரிச்சலாக இருக்கிறது. ஏதோ மனதில் தோன்றியது செய்து பார்த்தேன். அது இப்படி படுதோல்வியில் முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை." என்றான் எஸ்.கே.

            அன்று அவன் நேர்மை எனும் ஆற்றை, நியாயம் எனும் வாய்க்காலை, நீதி எனும் குளத்தை வெட்ட மக்கள் மனமென்னும் நிலத்தை நோக்கிச் சென்றிருக்க வேண்டியதில்லை. சென்றதன் விளைவு ஆறு வளைந்தோடுகிறது, வாய்க்கால் கோணலாகிறது. குளம் காணாமல் போகிறது. எஸ்.கே.வுக்கு நேரம் வீண். அந்த வேலையைப் பற்றி எதுவும் தெரியாமல் அதில் அவன் இறங்கியிருக்கவே வேண்டியதில்லை. எதைப் பற்றி யாருக்கு முழுமையாகத் தெரியாதோ அதில் கருத்துச் சொல்லவே வேண்டியதில்லை.

            மக்கள் வளைவான ஆற்றில் அழகைக் காண கூடியவர்கள். நேர்மையற்ற மக்கள் மத்தியில் கொஞ்சம் நேர்மையைப் பார்த்தால் போதும் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். மிகுதியான நேர்மை‍யைப் பார்த்தால் கல்லெடுத்து அடிப்பார்கள். நியாயமற்ற சமூகத்தில் அவர்களுக்குத் தேவையானதெல்லாம் சிறிது நியாயம் மட்டுமே. மிகுதியான நியாயம் அவர்களைத் திகட்டச் செய்து விடும். எப்போதோ அவர்களுக்கு நீதி கிடைத்தால் போதும். எப்போதும் நீதி கிடைத்தால் அவர்களால் எப்படி நீதிப் போராட்டம் செய்ய முடியும்?

            பெரும்பாலான தவறுகளுக்கு உள்ளுணர்வால் தோன்றுவதை வைத்து ஒரு முடிவுக்கு வந்து விடுவதுதான் எஸ்.கே.வின் மாபெரும் பலகீனம். ஆனால் உள்ளுணர்வால் தோன்றுவதை வைத்து நீங்கள் எழுதலாம் எதை வேண்டுமானாலும். படைப்பு நன்றாக இருக்கிறது என கைதட்டுவார்கள். அதை வைத்துக் கொண்டு மார் தட்டிக் கொண்டு சமூகத்தைத் திருத்த முயலக் கூடாது என்கிற எதிர்பார்ப்பு இருப்பதை மறந்து விடக் கூடாது. உள்ளுணர்வுகள் படைப்புகளுக்கு நல்ல ஆக்கச் சக்திதான். பொதுவாக உள்ளுணர்வுகளைச் செயல்படுத்தும் போது அதைப் பற்றிப் பகுத்தாராய்வு செய்து கொள்ள வேண்டும். அந்த உள்ளுணர்வின் விளைவுகள் தவறாகப் போய் விட்டால் மொத்தப் பழியையும் எஸ்.கே.வே சுமப்பது போல ஆகி விடும். மேலும் ஆளாளுக்கு இப்படி உள்ளுணர்வு சொல்கிறது என்று கிளம்பி விட்டால் சமூகத்தை அடித்துத் திருத்தி, அடித்துத் திருத்தி மாற்றுவதே வேலையாகப் போய் விடாதா? ஒரு தாளில் எத்தனை முறை அடித்துத் திருத்தி எழுத முடியும் சொல்லுங்கள்?

            விஷேசமான போக்குடைய எஸ்.கே. தன்னுடைய விசயத்தில் எப்படி வேண்டுமானால் வைத்துக் கொண்டு அவனை எப்படி வேண்டுமானாலும் செயல்படுத்திக் கொள்ளலாம். சமூகம் என்பது மொத்த எந்திரம். தனித்த எந்திரமா என்ன அது? தன்னிடம் நேர்பவைகள் தான் மட்டும் அறிய வேண்டிய ரகசியம். மற்றவர்களுக்கு நீங்கள் அதை அறிவிக்க முடியாது. ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு போக்கில் ஓடும்.

            எஸ்.கே. ஏன் அநாவசியமாக வார்த்தைகளை விடுவானேன்? அதற்காக வரிந்துக் கட்டிக் கொண்டுப் பழியைச் சுமப்பானேன்? நேர்மைக்காக, நீதிக்காக, நியாயத்துக்காகப் பழியைச் சுமப்பது பழியே ஆகாது என்பான் எஸ்.கே. பழியோடு கூடிய நேர்மை எப்படி நேர்மையாகும்? பழியோடு கூடிய நியாயம் எப்படி நியாயமாகும்? பழியோடு கூடிய நீதி எப்படி நீதியாகும்? எஸ்.கே.வின் கையில் இருப்பது சாக்ரடீசின் நஞ்சுக் கோப்பையும் அன்று, அவன் சுமப்பது ஏசு பிரானின் முள் முடியும் அன்று, கலீலியோவின் கருத்தான வாசகமும் அன்று.

            ஒன்றும் அவசரம் இல்லை. நீங்கள் யோசித்து நிதானமாகப் பதிலைச் சொல்லலாம். அவரசப்பட்டு ஒன்றின் விளைவு எப்படி ஆகும் என்று தெரியாமல் அகப்பட்டுக் கொள்வது புத்திசாலித்தனம் இல்லை. மக்களுக்குத் தெரியும் எந்த அளவுக்கு நீதியோடும், நியாயத்தோடும், நேர்மையோடு இருக்க வேண்டும் என்பது. அதற்குக் கூடுதலோ, குறைச்சலோ இல்லாத அளவுக்கு அவர்கள் இருப்பார்கள். அதில் அவர்கள் குறைவைக் காணும் போது அவர்கள் அழிந்துப் போய் அடுத்தச் சந்ததிக்கு அதை அவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

            இறுதியாக எஸ்.கே.வைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். அவன் பேசுவதை நிறுத்தி சில நாட்கள் ஆகிறது. ஓயாமல் பேசுபவன் ஒரு நாள் நிறுத்தித்தான் ஆக வேண்டும். அதிலும் இப்படி நியாயம், நீதி, நேர்மை என்று பேசுபவன் கதி கடைசியில் அதுவாகத்தான் இருக்கும். மெளனமாக இருப்பவர்கள் மிகுந்த நியாயத்தையும், நீதியையும், நேர்மையும் சொல்கிறார்கள். ஆம் அவர்கள் சொல்கிறார்கள் அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதை அதிகபட்ச மெளனத்தோடு.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...