6 Sept 2020

அடுத்தடுத்த அழைப்புகள்!

அடுத்தடுத்த அழைப்புகள்!

செய்யு - 556

            "நல்ல ஒடம்புக்கார்ரேம் மழையில நனைஞ்சாவே நாலு நாளு தும்மிட்டுக் கெடப்பாம். சளி சனியனப் போல பிடிச்சிக் கெடக்குற ஒடம்பு. இவ்வேம் போயி மழையில நனைவான்னா? ஏம்டி ஆயி நாம்ம ஒருத்தியா குடும்பத்துல எல்லாத்தையும் பாத்துக்கிட்டுக் கெடக்க முடியுமா? புருஷங்கார்ரேம் எஞ்ஞ இருக்காம்? ன்னத்தா பண்ணிட்டுக் கெடக்குறான்னு பாக்குறது இல்லியா?"ன்னுச்சு வெங்கு.

            "அவுங்க ஆம்பளைங்களப் பாத்துட்டு அஞ்ஞ நின்னாங்க யத்தே! நாம்ம பொண்டுகளோட இஞ்ஞ நின்னேம் யத்தே! அவுக ஆம்பளைக எல்லாம் ஒண்ணா நின்னுட்டு இருக்குறப்ப நாஞ்ஞ எப்பிடிப் போயி நிக்குறது யத்தே?"ன்னா ஆயி.

            "ஒடம்பு நெருப்பால்ல கொதிக்குது. ராத்திரி நனைஞ்சிட்டு வந்து நின்னானுவோ. நாம்மதாம் சாப்பாட்டப் போட்டு படுக்க வெச்சது!"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா.

            "ஆம்மாம்மா! நீயி படுத்ததெப் பாத்தே? அதுக்குப் பெறவும் கொடைய எடுத்துட்டு பாவாட சாமியாம்ல்லாம்ல, அந்தக் கோயிலு வரைக்கும் போயிட்டு வந்துதாம் படுத்தது!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "அஞ்ஞல்லாம் யாரு ஒங்களப் போவச் சொன்னுச்சு? சுடுகாட்டுப் பக்கம் வரைக்கும் போயிட்டு வந்திருக்குங்க வூடடங்கிக் கெடக்காம! ஏம்டா ஒஞ்ஞளுக்கு மட்டும் மழெ வுட்டப்புட்டா அந்தாண்டப் பெய்யும்?"ன்னுச்சு வெங்கு.

            விகடுவுக்குக் காய்ச்சலா இருந்துச்சு. ஒரு நாளு ராத்திரி மழையில நனைஞ்சது ஒத்துக்கிடல. பரசு அண்ணனுக்கு காயச்சல் எதுவுமில்ல. சொகமா இருந்துச்சு. காலையில எழும்புனதும் விகடுவோட ஒட்டிப் படுத்துக் கெடந்து பரசு அண்ணன், ஒடம்புச் சூட்டப் பாத்துப்புட்டு, யாரையும் கெளப்பாம நைசா அத்து வாசலு தெளிக்க வந்த பெரிம்மாகிட்டெ சொல்ல, பெரிம்மா கொல்லப்பக்கம் போயி வெங்குகிட்டெ சொல்ல, வெங்கு அப்பிடியே ஆயிய அழைச்சுக்கிட்டு வந்து அதுக்கு மேல யாருகிட்டெயும் சொல்லாம திண்ணையில வந்துப் பாத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணு பேசிக்கிட்டுச்சுங்க.

            "பொண்ணு மாப்ளே சாப்புட்டா கெளப்பி வுடுணுமேடா அடுத்த அழைப்புக்கு! பலவாரம்ல்லாம் போயி வெச்சிக் கொடுக்கணுமேடா! இப்பிடிக் கொதிக்குதேடா ஒடம்பு?"ன்னுச்சு வெங்கு தலையில கைய வெச்சிக்கிட்டு.

            "குளிச்சா காய்ச்சலு சரியாயிடும்!"ன்னாம் விகடு.

            "படிச்சால்லே புத்திப் போயிடுமாடா? காய்ச்சல்ல குளிச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆவுறுது?"ன்னுச்சு வெங்கு.

            "அதாங் டாக்கடர்ரு மச்சாங்கார்ராரு வந்தாச்சுல்லா. மொத மொதலா வைத்தியத்தெ குடும்பத்துல மச்சாங்கிட்டேயிருந்து ஆரம்பிக்கிட்டும். ன்னா யம்பீ?"ன்னுச்சு பரசு அண்ணன் விகடுவப் பாத்து.

            "இத்து சளி பிடிக்குறதுக்கான காய்ச்சல்ண்ணே! நல்ல காய்ச்சல்ண்ணே!"ன்னாம் விகடு.

            "ஒலகத்துலயே காய்ச்சல்ல நல்ல காய்ச்சல்ன்னு சொன்ன ஒரே ஆளு நீந்தாம்பீ! சட்டுபுட்டுன்னு முடிவெச் சொல்லு. ல்லன்னா நாம்ம அண்ணிய அழைச்சிட்டுப் போயிட்டு வந்துடுறேம்!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "எல்லாருமே சேந்து போயிட்டு வந்துடுவேம்ண்ணே! காய்ச்சல் பாட்டுக்குக் காய்ச்சல்லு. பயணம் பாட்டுக்குப் பயணம். நடந்தா வர்றப் போறேம்? யில்ல, ஓடியா வர்றப் போறேம்? கார்லத்தானே! நமக்குக் காயச்சல்ன்னு வெளியில பரப்பிட வாணாம்! பெறவு நம்மள அனுப்பச் சம்மதப்பட மாட்டாங்க!"ன்னாம் விகடு.

            "நீயா யாரு கிட்டெ போவாத வரைக்கும் யாருக்கும் தெரியாது. வேணும்ன்னா ஒம் பக்கத்துல மழெக் கால குளிருக்கு எதமா இருக்கும் ஒடம்புக் காய்ச்சல்ன்னு பக்கத்துல நாம உக்காந்திருக்கேம்! அதாங் நாம்ம செய்யலாம்!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "மேக்கொண்டு இதெப் பேசித் தொலையாதீயடா! போற வழியில்ல கடையில ஒரு மாத்திரைய வாங்கிப் போட்டா காய்ச்சலு போன எடம் தெரியாமப் போயிடும்! கூட்டம் போட்டு நிக்காதீயே. மொதல்ல கலைஞ்சு அந்தாண்டப் போயித் தொலைங்க. யாராச்சும் பாத்தா என்னா ஏதுன்னு கேட்டு வெசயம் வெளியில சொல்லுறாப்புல ஆயிடும்!"ன்னுச்சு பெரிம்மா. பேச்சு அத்தோட அடங்குனுச்சு.

            "தம்பீக்குத் தாலி கட்டாம கர்ப்பம் ஆயிருக்கு! வெஷயம் வெளியில தெரிஞ்சி அமளி துமளி ஆவப் போவுது. போம்மா அந்தாண்ட!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "யண்ணே! சேத்துல சிக்குன வண்டிய வேற எடுக்கணும்லே?"ன்னாம் விகடு.

            "அத்து ன்னடாம்பீ நீயி? எப்பப் படுத்தாலும் பொசுக்குன்னு நீயிப் பாட்டுக்குத் தூங்கிப்புடுறே! வந்துப் படுத்த நமக்கு தூக்கம் கொள்ளல. செரின்னு தெருவுல எட்டிப் பாத்துட்டு நின்னா வண்டி நம்ம எதுத்தக் கொல்லைக்குப் பக்கத்துல கெடக்குது. ன்னடா அதிசயம்ன்னு போயிப் பாத்தா வண்டிக்கார டிரைவரு உள்ளாரப் படுத்திருந்தாம். நமக்குத் தூக்கம் வர்றதாப்ப எப்பிடி ஒருத்தெம் படுத்துக் கெடக்குறதுன்னு அவனெ எழுப்பி வுட்டுக் கேட்டா, சுத்திக் கெடந்த அரைக்கல்லு, காக்கல்லு, முழுகல்லுன்னு ஒரு கல்லு பாக்கியில்லாம பொறுக்கிப் பின்னாடி சக்கரத்துக்குக் கீழே போட்டு வண்டியக் கெளப்பிட்டு வந்திருக்காம். கெட்டிக்காரப் பயலாத்தாம் இருப்பாம் போலருக்கும்பீ! நமக்கு இனுமே போயி வண்டியக் கெளப்பி வுடுற வேலயில்ல. அந்தக் கவலையெ வுடு! அவ்வேம் அங்க கொட்டி வெச்ச கல்லு குவியல்ல அந்த ரோட்டுல வர்ற எத்தனெ பேரு இன்னிக்குத் தடுக்கிட்டு வுழப் போறானுவோளோ? அத்து வேற இருக்கு. நீயி வேணும்ன்னா சித்தெ படு. சனங்கல்லாம் எப்பிடியும் ஏழு மணி ஆவும் எழும்ப. எட்டு மணியானாலும் ஆனதுதாங். பயணம் கெளம்ப எப்பிடியும் பத்து மணியோ பதினொண்ணோ ஆவும். மணி இப்போ ஆறுதாம்டாம்பீ ஆவுது! வெறிச்ச வானம் வெறிச்சிக்கிட்டுடா! இப்பிடியே ரண்டு நாளுக்கு மழெ யில்லாம கெடந்துச்சுன்னா அழைப்பு முடிஞ்சி அம்சமா போயிடுமடா!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "படுத்துக் கெடந்தா காய்ச்சல்ன்னு தெரிஞ்சிப் போயிடும்! நாம்ம கெளம்பித் தயாரு ஆவுறேம்ண்ணே!"ன்னாம் விகடு.

            "ஒம் மூஞ்சியப் பாத்தாலே தெரிஞ்சிடும். மொசப் புடிக்கிற நாயோட மூஞ்சே பாத்தால தெரியாதா? சித்தெ அடங்கி உக்காரு! என் தங்கெ கலியாணி படத்தோட டி.ராசேந்தருப் போலப் பாயாதே!"ன்னுச்சு பரசு அண்ணன். சித்தெ அடங்கி விகடு எதையும் வெளிக்காட்டிக்காம வேலையப் பாக்கப் போனான்.

            ஒம்போது மணி வாக்குல சித்துவீரனும், சுந்தரியும் டிவியெஸ் எக்செல்ல வந்து எறங்குனுச்சுங்க. அதெ தொடந்தாப்புல இன்னோவா வண்டிக்காரனெ கெளப்பி வுட்டு வேலனும், பிந்துவும் வந்து எறங்குனுச்சுங்க. வர்றப்பவே பிந்து, "யக்கா வூட்டுக்குப் போனதால நிம்மதியா தூங்குனேம். இஞ்ஞன்னா தூக்கம் பிடிக்காம கண்ணுல கருவளையம் கட்டிருக்கும்!"ன்னுச்சு.

            "என்னடாம்பீ! அத்து கருவளையத்துலேந்து தப்பிடுச்சு. நீயிக் காய்ச்சல்லேந்து தப்பிக்க முடியலையடா!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            சுப்பு வாத்தியாரு என்னா பண்ணிருந்தார்ன்னா, பலவாரம்லாம் கொண்டு போவணும், அத்தோட மாப்ள வூட்டுச் சனங்களும் போவணும்ன்னு ஒரு வேனயே ஏற்பாடு பண்ணிருந்தாரு. அதுல நேத்தி கேயெம்டி ஸ்வீட்ஸ்லேந்து வாங்கியாந்த பலவாரத்தையெல்லாம் விறுவிறுன்னு ஏத்தி ஆனுச்சு. அதெ நேரத்துல காலச் சாப்பாடும் ஒவ்வொரு எலைக்கும் மொய்யிப் பணம் வெச்சி மொறையா முடிஞ்சிருந்துச்சு. மொய்யா வந்தப் பணத்தெ எலைக்கு நூத்து ரூவாய்ன்னு அள்ளித் தெளிச்சிட்டு இருந்தாரு சுப்பு வாத்தியாரு.

            பொண்ணும் மாப்புள்ளையும் கெளம்புற நேரமா பாத்து மாப்புள்ள வூட்டுச் சனங்களோட நடுக்கூடத்துல வந்து உக்காந்தாரு சுப்பு வாத்தியாரு. ஒரு தாம்பாளம் நெறைய நகைப் பொட்டிகளா இருந்துச்சு. பாலாமணியையும், செய்யுவையும் பக்கத்துல ஒரு நாற்காலியப் போட்டு உக்கார வெச்சு கையில எழுதி வெச்சிருந்த ஒரு சீட்டுலேந்து ஒவ்வொண்ணா நகெ பேர்ர வாசிச்சி அதெ எடுத்துக் காமிச்சிகிட்டெ இருந்தாரு. கடெசீயா வாசிச்சு முடிச்ச பிற்பாடு மொத்தமா நூத்துப் பவுனுக்கு எல்லா நகெயும் இருக்குன்னு சொல்லி நகெப் பொட்டிகள ஒவ்வொண்ணா எடுத்து கம்புப் பையில போட்டுக் கொடுத்தாரு. அதுலேந்து தோடு, சங்கிலி, மோதிரம்ன்னு ஒரு ஏழு பவுனு நகையெ எடுத்து செய்யுகிட்டேயும், பிரஸ்லட், மோதிரம், செயின்னு ஒரு ஆறு பவுனு நகைய எடுத்து பாலாமணிகிட்டெயும் கொடுத்து அதெ மட்டும் எப்பயவும் ஒடம்புலயே போட்டுக்கிடச் சொன்னாரு.

            மித்த நகெ பெட்டிகள எடுத்து வெச்சதுல ஒரு பெரிய கம்புப் பையும், ஒரு சின்ன கம்புப் பையுமா ரண்டு பைகள்ல மிச்ச எல்லா நகெயும் இருந்துச்சு. அதெ அப்பிடியே எடுத்து பாலாமணி கையில கொடுத்து, "நகெ பத்ரம்! நகெ பத்ரம்! பையி ரண்டையும் கையிலயே வெச்சிக்கிடணும். வூட்டுக்குப் போயி மொத வேலையா எங்கப் பாதுகாப்பா வைக்கணுமோ அங்க பாதுகாப்பா வெச்சிப்புடணும்! கலியாணத்துக்குன்னு நாம்ம செய்யுறதா சொன்ன அத்தனையையும் செஞ்சி முடிச்சிட்டேம். இத்து ஒண்ணுத்தாம் ஒப்படைக்காம இருந்துச்சு. அதையும் இப்போ ஒப்படைப்புப் பண்ணியாச்சு! மாமாகிட்டெ எல்லா வெவரத்தையும் சொல்லிப் புடணும். எல்லாத்தையும் வெச்சிட்டுச் சொல்லிட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இதெல்லாம் கலியாண அன்னிக்குப் போட்டு வுட்டுருந்தா எம்மா அம்சமா இருந்திருக்கும்?"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா அதெ பாத்துப்புட்டு.

            "அததுக்கு நடக்கற நேரம் வர்றப்பத்தாங் நடக்கும்!"ன்னுச்சு வெங்கு அதெ கேட்டுகிட்டு.

            "இதுல பல நகையெ போட்டுக் கூட பாக்கல. கடையிலேந்து பாத்து எடுத்து வந்ததுததாங். அப்பிடியே இருக்கு. லாக்கர்ல வைக்கிறதுக்கு மின்னாடி ஒரு தவா போட்டுப் பாத்தப்புடுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதல்லாம் நாம்ம பாத்துக்கிடறேம் மாமா!"ன்னாம் பாலாமணி.

            சித்துவீரன் அந்த எடத்துல, "கட்டிலு, பீரோ, டைனிங் டேபிள்லாம் சென்னைப் பட்டணத்துக்குக் குடித்தனம் போறதுக்குள்ள போயி எறங்கிப்புடும்!"ன்னுச்சு.

            "அத்து இனுமே மச்சாங்காரங்குள்ளார இருக்குற வெசயம். நமக்கென்ன மாமா அதெப் பத்தி! குடித்தனம் அஞ்ஞ வைக்கிற அன்னிக்கு பிரிட்ஜூ, வாஷிங் மெசின், கிரைண்டரு, மிக்சி, ஐயன் பாக்ஸூ, எல்யிடி டிவி எல்லாம் அஞ்ஞ வந்து சேந்துப்புடும்! ஏன்னா அதெல்லாம் மாமா சார்பா நாஞ்ஞ வாங்கிக் கொடுக்கற பண்டங்க!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "பேசிட்டெ இருந்தா நேரந்தாம் ஆவும். பொண்ணு மாப்புள அஞ்ஞப் போயி மறு அழைப்பு திரும்பட்டும். ரண்டாம் அழைப்பு முடிஞ்சு மூணு அழைப்பையும் அழைச்சி முடிச்சிப்புட்டா ஒரு வேல முடியும்!"ன்னுச்சு பெரிம்மா.

            சனங்க கெளம்பிப் போயி கார்லயும், வேன்லயும் ஏறுனுச்சுங்க. இஞ்ஞ சுப்பு வாத்தியாரு குடும்பத்துச் சார்பா விகடு, ஆயி, பரசுன்னு மூணு பேத்து மட்டுந்தாம் கெளம்புனாங்க. மித்த மாப்புள வூட்டுச் சனங்க, பொண்ணு, மாப்புள எல்லாம் கெளம்பிப் போயி இருக்குற எடத்துக்குத் தகுந்தாப்புல கார்லயும், வேன்லயும் கலந்தபடிக்கு ஏறுனுச்சுங்க. விகடு கெளம்பி ஏறுறப்பத்தாம் சுப்பு வாத்தியாரு கிட்டெ வந்து, "பலவாரத்தையெல்லாம் மொறையா எடுத்து வெச்சுக் கொடுத்து தாத்தா சொல்றாப்புல கேட்டுக்கிடணும்! கூடவே இருந்து மத்தியானச் சாப்பாட்ட முடிச்சி சாயுங்காலம் போல இஞ்ஞ வர்றாப்புல பொண்ணையும் மாப்புள்ளையையும் கொண்டாந்துப்புடுங்க! பாத்து மருவாதியா பெரியவங்க சொல்றதெ கேட்டுக்கிடணும்! மருவாதிக் கொறைவா எதுவும் நடந்துப்புடக் கூடாது!"ன்னு சொன்னப்பதாங் விகடுவோட ஒடம்புல வெளிப்பட்ட உஷ்ணத்தெ உணர்ந்துகிட்டாரு. உணர்ந்தது உணர்ந்தபடிக்கு வெளியில காட்டிக்கிடல. கெளம்புற நேரத்துல கெளம்பக் கூடாதுன்னு எதாச்சும் அபசகுனமா சொல்லிடக் கூடாதுன்னு பேசாம இருந்துகிட்டாரு சுப்பு வாத்தியாரு. காரும் வேனும் பாக்குக்கோட்டைய நோக்கிக் கெளம்புனுச்சு. அது கெளம்புன பெற்பாடு விருத்தியூரு பெரிம்மா, பெரிப்பாவைத் தவுர மித்த சனங்களும் ஒவ்வொண்ணும் அதது வூட்டைப் பாக்கக் கெளம்ப ஆரம்பிச்சதுங்க.

            இங்க, திட்டையிலேந்து கெளம்பி அங்க, பாக்குக்கோட்டைக்குப் போயி ஆனதும் எல்லாம் சுப்பு வாத்தியாரு சொன்னபடியே செஞ்சு ஆனது. அடுத்தடுத்து என்னென்னதெ எப்பிடிச் செய்யணும்ன்னு ராசாமணி தாத்தாவே சொன்னுச்சு. அதுபடி செஞ்சு முடிச்சாம் விகடு. அங்க மத்தியானச் சாப்பாடு நடக்குறப்ப வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் வந்துச்சு.

            "அடடே! கலியாணத்துலயே எதிர்பார்த்தேம்! இப்பத்தாங் வாரத் தோணுச்சா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "கலியாணத்துக்கு வந்தா முழிக்கக் கூடாதவங்க மூஞ்சுல முழிக்குறாப்புல இருக்குமேன்னுத்தாம் வாரல. நாம்ம தூக்கி வளத்த பொண்ணுல்லா செய்யு. அதோட தேவைக்கு எப்பிடி வாரமா இருக்க முடியும். அதாங் வெவரத்தையெல்லாம் வெசாரிச்சிக்கிட்டு எப்போ வாரணும், எப்பிடி வாரணும், எங்க வாரணும்ன்னு திட்டம் பண்ணிட்டு வந்திருக்கேம்!"ன்னுச்சு வீயெம் மாமா.

            "செரி! சரியான நேரத்துலதாங் வந்திருக்கே. மொதல்ல சாப்பாட்ட முடி. பெறவு பேசுவேம்!"ன்னு சொன்ன ராசாமணி தாத்தா, "ஏம் பெரியவனுக்கும்தாம் பத்திரிகெ வூடு தேடிப் போயி வெச்சேம். ஆள காங்கலையே?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "அந்தப் பயலப் பத்தி நம்மகிட்டெ பேசாதீயே!"ன்னுச்சு வீயெம் மாமா.

            "செரி வுடு! மொதல்ல சாப்புடு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            வீயெம் மாமாவுக்கும், கோகிலா மாமிக்கும் எலைப் போட்டு சாப்பாடு ஆனுச்சு. வீயெம் மாமா வேற யாருகிட்டெயும் பேசல. மொகத்தத் திருப்பி வெச்சுக்கிட்டே இருந்துச்சு. சாப்புட்டு முடிச்சி ஒடனே கெளம்புறதுல குறியா நின்னுச்சு. செய்யுவையும், பாலாமணியையும் கூப்புட்டு வெச்சு ஒரு தாம்பாளத்துல பணத்தெ வெச்சிக் கொடுத்து, "ந்நல்லா இருங்கப்பா!"ன்னுச்சுங்க வீயெம் மாமாவும், கோகிலா மாமியும்.

            "இருந்துட்டுப் போ மாமா! இருந்துட்டுப் போங்க மாமி!"ன்னா செய்யு.

            ‍"சென்னையிலத்தான இருக்கப் போறே? அஞ்ஞ வர்றேம். இப்ப ஆளெ வுடு. ஒரு மாசம் வந்து மாமிய அழைச்சிட்டு அஞ்ஞ கெடக்கேம்!"ன்னுச்சு வீயெம் மாமா. அவ்வளவுதாங் வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் சொவடு தெரியாம, "எல்லாத்துக்கும் கெளம்புறேம்! பெறவு வர்றேம்!"ன்னுச்சுங்க, கெளம்பிட்டுங்க. இப்படி வீயெம் மாமா கலியாணம் வெசாரிக்க வந்ததெ விகடுப் பாத்தாம். குமரு மாமா அப்பிடி வந்ததா தெரியல. கண்ணுல படவே யில்ல.

            மத்தியானச் சாப்பாட்ட முடிச்சிக்கிட்டுக் கெளம்புறதுதாங் திட்டம். ஆன்னா சரசு ஆத்தா தங்கிக் கொஞ்சம் இளைப்பாறிகிட்டு சாயுங்கால டிபனையும் முடிச்சிக்கிட்டுக் கெளம்ப சொன்னுச்சு. அதால வேற வழியில்லாம பாக்குக்கோட்டையில இருக்குறபடிக்கு ஆனுச்சு. விகடுவுக்குத்தாம் காய்ச்சலோட உக்கார்றது செருமமா இருந்துச்சு. அவ்வேம் மாத்திரையையும் வாங்கிப் போட்டுக்கிடமுடியாதுன்னுட்டாம். யாரு கிட்டேயும் நெருங்காம அந்தாண்ட இந்தாண்டன்னு காலனிக்கு எதுத்தாப்புல இருந்த எடத்துல நடந்துகிட்டுக் கெடந்தாம். பொழுது மசங்குற நேரமா பாத்துப் பொண்ணையும் மாப்புள்ளையையும் அவுங்கள கொண்ட்டுட்டுப் போன வேன்லயே வெச்சு வூட்டுக்குக் கொண்டாந்தப்போ அத்து ரண்டாவது அழைப்பு.

            அன்னிக்கு ராத்திரி தூங்கி எழும்பி, மறுநாளு காலைச் சாப்பாட்ட முடிச்சிட்டு பாக்குக்கோட்டைப் போயி, மூணாவது அழைப்புக்குத் திரும்பக் கொண்டாந்துப்புடுறதுன்னுத்தாம் ஒரு திட்டம். ஆனா பாலாமணி சாமிமலெ கோயிலுக்குப் போவணும்ன்னு சொல்லிப்புட்டதால, காலங்காத்தாலயே திட்டத்தெ மாத்தி சுப்பு வாத்தியாரு ஒரு அம்பாசிடரு கார்ரப் பிடிச்சி விருத்தியூரு பெரிம்மாவோட பொண்ணு மாப்புள ரண்டு பேத்தையும் அனுப்பி வெச்சாரு. பொண்ணும் மாப்புள்ளையும் கோயிலுக்குப் போயிட்டு வந்து மத்தியானத்துக்கு மேல மூணு மணி வாக்குல வந்துச்சுங்க. அதுக்குப் பெறவு மத்தியானச் சாப்பாட்டை முடிச்சி, ரொம்ப ஒரே அடியா அடுத்தடுத்ததா அலைச்சலு வேணாம்ன்னு கொஞ்ச தங்க வெச்சி அத்தோட சாயுங்கால டிபனைப் பண்ணி வுட்டு ராத்திரி விகடுவோடும் ஆயியோடும் அதெ அம்பாசிடரு கார்ரப் பிடிச்சிப் பொண்ணையும் மாப்புள்ளையையும் பாக்குக்கோட்டைக்கு அனுப்பி வைச்சு ராத்திரி ஹால்ட் அடிக்க வெச்சி மறுநாளு காலையில மூணாவது அழைப்பையும் கையோட கொண்டாந்துடச் சொல்லிட்டாரு சுப்பு வாத்தியாரு. 

            விகடுவுக்கு அத்துச் சமயத்துல காய்ச்சல் கொறைஞ்சி சளி கண்ட மேனிக்கு மழையப் போல மூக்குலேந்து ஊத்த ஆரம்பிச்சிருந்தது. மழையில நனைஞ்சதால உண்டான சளி அப்பிடித்தாம் மழையப் போல ஊத்தும் போல. சுப்பு வாத்தியாரு சொன்ன படிக்கி மூக்குச் சளிய பெரிசு பண்ணிக்கிடாம பாக்குக்கோட்டையில ராப்பூரா தங்கி காலையில கெளப்பிக் கொண்டாந்து மூணாவது அழைப்பையும் முடிச்சாம் விகடு. பெறவு கையோட கார்ரப் பிடிச்சி மத்தியானச் சாப்பாட்டுக்குப் பெறவு நல்ல‍ வெதமா பாக்குக்கோட்டையிலக் கொண்டு போயி பொண்ணு மாப்புள்ளைய வுட்டுப்புட்டு வந்துப்புட்டாங்க விகடுவும் ஆயியும்.

            பொண்ணும் மாப்புள்ளையும் பாக்குக்கோட்டையில ஒரு வார காலம் வரைக்கும் தங்கி அந்த திங்கள் போயி மறு திங்களுக்குச் சென்னைப் பட்டணத்துக்குக் குடித்தனம் போறதாவும், அன்னிக்குச் சாயுங்காலமெ அங்க ஒரு வரவேற்பையும் முடிச்சிப்புடுறதா திட்டம். அதுக்கு இடையில சொந்தக்காரவுங்க ஒவ்வொரு வூட்டுக்கும் போயி விருந்தெ முடிச்சிப்புடறதுன்னு திட்டம்.

            அண்ணங்கார்ரேம்ங்ற‍ மொறையில விகடுவும் ஒரு நாளு விருந்து வைக்கணும்ங்றதால மறுவாரத்துல ஒரு நாளு கார்ர வெச்சிக் கொண்டாந்து ஆட்டுக்கறியில பிரியாணி, கோழியில வறுவலு, மீன்ல பொரியல்ன்னு ‍ஒரு பெரு விருந்தெ வெச்சி விட்டு சவுளிகளையும் எடுத்துக் கொடுத்தாம். அந்த நாள்கள்ல விகடு சளியோட போராடிட்டுக் கெடந்தாம். அதெ பாத்த பாலாமணி சில மருந்துகளையும், மாத்திரைகளையும் கொடுத்தாம். அவ்வேம் கொடுத்த எந்த மருந்துக்கும் சளி நிக்குற பாடால்ல. சளி இருந்தாலும் அதெ கண்டுக்கிடாம சுறுசுறுப்போட திரிஞ்சிகிட்டெ இருந்தவேம், அந்த மருந்துக்குப் பெறவு மந்தக் கதிக்கு ஆளாயி தூங்குற நெலைக்கு வந்துட்டாம். பாலாமணி அத்தோட வுடாம, சென்னைப் பட்டணம் வர்றப்போ ஆஸ்பத்திரியில வெச்சு இதுக்குன்னு சிறப்பா ஆயுர்வேத சிகிச்சையப் பண்ணி வுடுறதாவும் சொன்னாம். இந்த மருந்துக்கே இம்மாம் தூக்கம்ன்னா சிகிச்சைல்லாம் பண்ணா எம்மாம் தூக்கம் வருமோன்னு நெனைச்சாம் விகடு. அத்து நடக்குறப்போ அப்போ பாத்துப்பேம்ன்னு அத்தெ அத்தோட விட்டாம்.

            பொண்ணுக்கு அண்ணங்காரனும், மாப்புள்ளைக்கி மச்சாங்காரனுமான விகடுவோட விருந்தெ முடிச்ச பெற்பாடு, மித்த மித்த நாள்கள்ல பொண்ணும் மாப்புள்ளையும் சித்துவீரனோட வூடு, திருச்சியில இருந்த ஈஸ்வரியோட வூடு, பாக்குக்கோட்டையில இருந்த சொந்தக்காரவுங்களோட வூடுன்னு ஒவ்வொரு நாளா விருந்துக்குப் போயிட்டுக் கெடந்துச்சுங்க. அழைப்பு, விருந்துன்னு முடிஞ்சி பொண்ணும் மாப்புள்ளையும் சென்னைப் பட்டணத்துல குடித்தனத்தெ பண்ண வேண்டிய நாளு நெருங்குனுச்சு.

*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...