7 Sept 2020

அவசரமா ஆறாயிரம்!

அவசரமா ஆறாயிரம்!

செய்யு - 557

            கலியாணம் முடிஞ்சி ரண்டு வாரம் கழிச்சி திங்கக் கெழமெ பொண்ணு மாப்புள்ளைய சென்னைப் பட்டணத்துல அரும்பாக்கத்துல குடி வைக்கிறதா முடிவாயிருந்துச்சு. வூடெல்லாம் வாடகைக்குப் பாத்தாயிருந்துச்சு. அட்வான்ஸ் ஒண்ணரை லட்சம்ன்னு, மாத வாடவை பன்னெண்டாயிரம்ன்னும் சொல்லிருந்துச்சு ராசாமணி தாத்தா.

            சென்னைப் பட்டணம் போறதுக்கு ரண்டு நாளுக்கு மின்னாடி சனிக்கெழமெ சித்துவீரன் சுப்பு வாத்தியார்ரப் பாக்க ஓடியாந்துச்சு.

            "அவ்சரமா ஒரு ஆறாயிரம் பணம் கொடுங்க!"ன்னுச்சு சித்துவீரன் சுப்பு வாத்தியார்ரப் பாத்து.

            "எதுக்கும்பீ திடீர்ன்னு ஆறாயிரம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "கட்டிலு பீரோ செய்யுறதுல காசி கொஞ்சம் இடிக்கிது!"ன்னுச்சு சித்துவீரன். கலியாணத்துக்கு விழுந்த மொய்யிப் பணத்தெ வெச்சிச் செலவெ பண்ணிட்டு இருந்தவரு, அடுத்ததா சென்னைப் பட்டணம் போயிட்டு வர்ற சிலவெ கணக்குப் பண்ணி, "லட்சத்து அம்பதினாயிரம் கொடுத்தேன்னே யம்பீ! நல்ல வெதமா அதுக்குக் கொறைச்சலாவே கட்டிலு பீரோவ பண்ணிருக்கலாமே. பணங்காசி இடிக்கிறதுக்கு ஒண்ணும் வேலயில்லையே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பணத்தெ கொடுங்க! பெறவு சொல்றேம் வெசயத்த. காரணமிருக்கு!"ன்னுச்சு சித்துவீரன்.

            "போன வாரம் நாம்ம பட்டறைக்கி வந்தப்பவே பாத்தேம். வேல நெறையா செய்ய வேண்டில்லா கெடக்கு! பலவையும் தேக்கமான்னு சந்தேகமல்லா இருந்துச்சு. திங்கக் கெழம காத்தால வேற சென்னைப் பட்டணத்துக்குப் போயாவணும்! அதுக்குள்ளயாவாது வேல முடிஞ்சிடுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதுக்குதாங் காசியக் கேக்குறேம். பணம் கொஞ்சம் சிலவாப் போயிட்டதாலதாங் செருமமாப் போயிடுச்சு. நம்மாள வேலயச் செரியா முடிக்க முடியல. இப்போ கொடுத்தா முடிச்சிப்புடுவேம். ஞாயித்துக் கெழம ராத்திரிக்குள்ள டாட்டா ஏசியப் பிடிச்சி ஏத்தியாவணும் சாமானுங்க எல்லாத்தையும். அதுக்குப் பணத்தெ அச்சாரமா வேற கொடுத்தாவணும். அச்சாரம் கொடுக்கலன்ன வாகனம் கெடைக்காது. சாமாஞ் செஞ்சம் நேரத்துக்குப் போயாவாது. அதுக்கும் சேத்துதாங் கேக்குறேம். புரிஞ்சிப்பீங்கன்னுப் பாத்தா பேசிட்டே போறீயளே?"ன்னாம் சித்துவீரன்.

            "ஒடனடியா கையில பணம் இல்லம்பீ! நீஞ்ஞ கெளம்புங்க நாம்ம வூட்டுக்கு வர்றேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பணம் மட்டும் வர்லேன்னா திங்க கெழமெ கட்டிலு பீரோ அஞ்ஞ சென்னைப் பட்டணத்துல இருக்காது. பெறவு நம்ம மேல கோவிச்சிக்கிட்டு வருத்தப்படுறதுல ஒண்ணுமில்லே. அதுக்காகச் செய்யாம போட்டுப்புட மாட்டேம். பெறவு நமக்கு எப்போ தோதுபடுதோ அப்பத்தாம் செய்வேம்!"ன்னுச்சு சித்துவீரன்.

            "அதுக்குத்தாங் யம்பீ! கலியாணத்துக்கு அன்னிக்கு வேலைய முடிச்சி அஞ்ஞ வெச்சிப்புடணுங்றது. இப்பப் பாருங்க வேல மெனக்கெடுதுப் பாருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "கலியாணத்தெ நீஞ்ஞளா பண்ணீயே? எல்லாத்தையும் தூக்கி எஞ்ஞ தலையிலப் போட்டுப்புட்டு ஹாய்யா நீஞ்ஞ பாட்டுக்குக் கலியாணத்துக்கு வந்தீயே என்னவோ டூர்ருப் போறாப்புல. அஞ்ஞ நின்னு வேல செஞ்சது நாம்மத்தானே. ஒரே நேரத்துல கலியாண வேல, கட்டிலு பீரோ வேலன்னு எத்தனெ வேலைய நாம்ம பாக்குறது? நமக்கு ன்னா பத்துக் கையா இருக்கு? யிப்போ வேல முடியப் போறதெ அதிஷ்டம்ன்னு நெனைச்சிக்கிடணும். யிப்போ இந்த நேரத்துல வேல முடியுறதும், முடியாம போறதும் ஒஞ்ஞ கையிலத்தாம் இருக்கு. வருங்காலத்துல வேல முடியாமப் போனா அதுக்கு நம்ம பலியாவா முடியாது சொல்லிட்டேம், சொல்லிட்டேம்!"ன்னுச்சு சித்துவீரன்.

            சுப்பு வாத்தியாரு இதென்னடா வம்பாப் போச்சுன்னு யோசிக்க ஆரம்பிச்சாரு. "நீஞ்ஞ கெளம்புங்கம்பீ! பணத்தெ போரட்டிட்டு நாம்ம பட்டறைக்கோ, வூட்டுக்கோ வந்துப்புடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வூட்டுப்பக்கம்லாம் வாணாம். நாம்ம பட்டறையிலத்தாம் உக்காந்திருப்பேம்! பணத்தோட வந்துச் சேருங்க. கட்டிலு பீரோ வேலயும் ஆன மாதிரி இருக்கான்னு வேவு பாத்தாப்புலயும் இருக்கும்லா!"ன்னு எகத்தாளமா சொல்லிட்டு விருட்டுன்னு கெளம்பிட்டு சித்துவீரன். அவ்வேம் கெளம்பிப் போன பெற்பாடு, "சுந்தரிப் புருஷன் சித்து வந்ததெப் போல இருந்துச்சேன்னு டீத்தண்ணியப் போட்டுட்டு வர்றேம்! எங்க ஆளு?"ன்னு வந்துச்சு வெங்கு.

            சுப்பு வாத்தியாருக்குப் பதிலச் சொல்ல எரிச்சலா வந்துச்சு. "எங்கன்னு‍ கேக்குறம்லா? அவ்சரமா வந்தப் புள்ளே ஒரு வாயி டீத்தண்ணியக் கூட ஊத்திக்காம ஓடிருக்கு!"ன்னுச்சு வெங்கு.

            "வேணுன்னா ஒம் மாமம் மவ்வேந்தான்னா, போயி வாயில ஊத்திட்டு வா!"ன்னு எரிச்சலா சொன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "எதுக்கு இப்போ கோவம்ன்னு புரியலயே? வந்தப் பயெ ன்னா சொல்லிட்டுப் போனாம்ன்னு தெரியலயே!"ன்னுச்சு வெங்கு.

            "பணம் ஆறாயிரம் வேணுமாம்! அப்பதாங் கட்டிலு, பீரோல்லாம் சென்னைப் பட்டணத்துக்குப் போயிச் சேரும்ன்னு மெரட்டுறாப்புல பேசிட்டுப் போறாம்! பேச்சுல ஒரு மட்டு மருவாதி யில்ல. வார்த்தைய அள்ளித் தெளிச்சிட்டுப் போறாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அந்தப் பயெ காசிய ஏம் கையில வெச்சிக்கிட்டு? மொகத்துல தூக்கி எறிய வேண்டித்தானே?"ன்னுச்சு வெங்கு.

            "அட ங்ஙொப்புரான வுட்டே வுட்டேம்! மொத்தக் காசியையும் லட்சத்து அம்பதாயிரத்தெ பாங்கியிலேந்து பணத்தெ எடுத்து கொடுத்திருக்கு. பாத்துட்டுத்தானே இருந்தே. எம்மட வார்த்தையக் கெளறாதே ஆம்மா! மேக்கொண்டு பணம் பணம்ன்னு புடுங்கியெடுத்தா, நீயே போயி அவனெ இன்னும் வந்துப் பிடுங்கிட்டுப் போன்னு சொல்லுவே போலருக்கே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதானே பெறவு எதுக்கு அந்தப் பயெ மறுக்கா மறுக்கா வந்து பணம் பணம்ன்னு நிக்குறாம் கடங்கார பயலப் போல?"ன்னு வெங்கு தெசையத் திருப்பிப் போட்டுக் கெள்வியக் கேட்டுச்சு.

            "‍வேலைக்கான பணம் பத்தலியாம். அதெ எப்ப வந்துச் சொல்றாம் பாரு. இன்னிய ஒரு நாளு, நாளைய ஒரு பகலுதாம் இருக்கு. ராத்திரிக்கிக் கெளம்புனாத்தாம் பொண்ண குடித்தனம் வைக்க அஞ்ஞ சென்னைப் பட்டணத்துல நாம்ம இருக்க முடியும். இவ்வேம் வந்து திடீர்ன்னு பணம்ன்னு நின்னா, அஞ்ஞ சென்னைக்குப் போறப்ப பணம் கையில யில்லாம நாம்ம நக்கிக்கிட்டா நிக்க முடியும்? ன்னத்தா நெனைச்சிக்கிட்டு இந்தப் பயெ பணம் பணம்ன்னு வந்து நிக்குதான்னு தெரியலையே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெ கெடக்குது ஆறாயிரம் காசிதான்னே. பிசாத்துக் காசி. அந்த நாயீ மொகத்துல தூக்கி எறிஞ்சிட்டுப் போங்க. கட்டிலு, பீரோ யில்லாம அஞ்ஞ நம்ம பொண்ணுதானே செருமப்படும். கடெசீயா பிச்செ போடுறாப்புல போட்டுப்புட்டு வந்துப்புடுங்க!"ன்னுச்சு வெங்கு கொஞ்சம் கொரல தணிச்சாப்புல.

            "நாயிக்கு வாக்கப்பட்டு கொரைக்குதேன்னு சொல்ல முடியுமா? யில்ல கழுதைக்குத்தாம் வாக்கப்பட்டு ஒதைக்குதேன்னு சொல்ல முடியுமா? பன்னிக்கு வாக்கப்பட்டு சேத்துல படுக்க வைக்குதேன்னு வருத்தப்பட முடியுமா? டாக்கடரு மாமானாரு, மாமியாருன்னு ஆவ ஆசெபட்டு அதெல்லாம் பாக்க முடியுமா? கலியாணத்தோட இந்தக் கெட்டப் பயலோட சகவாசம் அந்துப் போயிடுமுன்னு பாத்தா தொடருதே!"ன்னு சலிச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. அந்தச் சலிப்போட மொய்யா வுழுந்த பணத்தெ எண்ணி பீரோக்குள்ள வெச்சிருந்தாரு ஒரு கைப்பையில. அதெ எடுத்து அதுலேந்து ஆறாயிரத்தெ எடுத்துக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "இந்தப் பயெ மெட்ராஸூ செலவு பண்ணிட்டுப் போறதுக்குல்லாம் நம்மகிட்டெ எப்டி காசிய வாங்கிட்டுப் போவ நிக்குறாம் பாரு! காசில்ல வாத்தியார்ரே! நாலு டிக்கட்டெ போட்டுக் கொடுன்னா போட்டுக் கொடுத்துட்டுப் போறேம்! அதெ வுட்டுப்புட்டு நாம்ம கொடுத்த ஒரு வேலைய வெச்சி என்னமா மெரட்டுறாம்? அதெ வெச்சி என்னம்மா காசியக் கறக்குறாம்? ஒரு ஞாயம் தர்மம் வாணாமா? ச்சைய்! ஊர்ர ஏய்ச்சி பொழைக்குற அந்தப் பயெகிட்டயா காசில்லாமப் போயிடப் போவுது? நம்ம காசியில ஏம் போவணும்ன்னு நெனைப்பானோ என்னவோ? வாத்தியாரு காசித்தாம் இருக்கேன்னு வருத்தப்படாம போவ நெனைக்கிறாம். இப்படிப்பட்ட மவுட்டிப் பயலுவோள நாம்ம சென்மத்துல பாத்ததில்லே!"ன்னு சொல்லிட்டு சுப்பு வாத்தியாரு சட்டைய மாட்டிக்கிட்டு, அந்தச் சட்டையோட பையில பணத்தெ திணிச்சிக்கிட்டு தன்னோட டிவியெஸ்ஸூ வண்டியில கெளம்புனாரு.

            சித்துவீரன் பட்டறையிலப் போயி சேந்த அடுத்த அரை மணி நேரத்துல அங்க பணத்தோட நின்னாரு சுப்பு வாத்தியாரு. அவர்ரப் பாத்ததும், "நீஞ்ஞ வருவீயேன்னு தெரியும். திடீர்ன்னு வந்து நின்னு பணங் கேட்டதெ பெரிசா நெனைச்சுகிடாதீயே? இஞ்ஞ வந்து கட்டிலு, பீரோவப் பாருங்க. அப்பிடியே வைரத்தால எளைக்காத கொறைதாங். எப்பிடி இருக்கு பளபளன்னு? நீஞ்ஞ நெனைப்பீயே இதெல்லாம் தேக்கம்ன்னு! எதுவும் தேக்கமே யில்ல. எல்லாம் வேங்கெ. வேங்கையிலயே எப்பிடிப் பாருங்க தேக்கத்தப் போல வேலப்பாட்டெ காட்டியிருக்கேம்!"ன்னுச்சு சித்துவீரன். அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

            "அடப் பாவி! தேக்கம் இருக்காதுன்னு சந்தேகப்பட்டதும் உண்மையாப் போச்சுது. வேங்கையில கட்டிலு பீரோ செய்யுறதுக்கு எப்பிடிடா ஒண்ணரை லட்சம் ஆவும்? எண்பதினாயிரத்துக்குள்ளயே முடிக்கலாம். அதிகபட்சமா போனாலும் ஒரு லட்சத்துக்கு மேலப் போவாதேடா! மாப்புள்ளைக்கு மச்சாங்காரனா இருக்கானேன்னு நெனைச்சிக்கிட்டு வேலைய எடையில முழுசா வந்து நின்னுப் பாக்காம, எட்டிப் பாத்துட்டுக் கெடந்தது தப்பாப் போச்சுது. சொந்தம்ன்னு வந்து நிக்குற இந்தப் பயலுவோளே இப்பிடி ஏமாத்துன்னா என்னத்தெ பண்ணுறது?"ன்னு நெனைக்க நெனைக்க சுப்பு வாத்தியாருக்கு அடக்க முடியாத கோவம் வந்துச்சு. படாத கடன்லாம் பட்டு, வாங்காத எடத்துல எல்லாம் கடனெ வாங்கி சின்னபின்னா பட்டது இப்படி அங்கங்க ஒவ்வொருத்தனும் பணத்தெ பெருச்சாளி கணக்கா இருந்துகிட்டுத் திங்கத்தானான்னு சோந்துப் போனாரு சுப்பு வாத்தியாரு.

            "செரித்தாம்! கட்டிலு பீரோ சாமாஞ் செட்டுல்லாம் செரியா திங்க கெழமெ சென்னைப் பட்டணம் வந்து எறங்கிப்புடும்லா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு சுரத்தெ யில்லாம்.

            "அதுக்குத்தாம் வேல ஆவணுமேன்னு பணத்தெ வந்து வாங்கிருக்கேம்! எப்பிடி கட்டிலும் பீரோவும் அஞ்ஞ வந்து நிக்குதுன்னு பாருங்க!"ன்னாம் சித்துவீரன்.

            "கலியாணத்துலப் பண்ணது மாதிரிக்கி ஆயிடப் படாது யம்பீ! கலியாணத்துலயே காரு ஏம் வாங்கல? கட்டிலு பீரோ ஏம் வாரலேன்னு சனங்க நம்மளப் போட்டு பிய்ச்சி எடுத்துப்புடுச்சீங்க சனங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதாங் சொன்னேம்ன்னா வேல நெருக்கடின்னு. இனுமே ன்னா வேல நெருக்கடி? வண்டிக்காரனே ஏத்திட்டு வாராட்டியும் தலையில சொமையாச் சொமந்தாச்சும் திங்கக் கெழமெ பொழுது விடியுறதுக்குள்ள அஞ்ஞ கொண்டாந்துப்புடுவேம் போங்க!"ன்னாம் சித்துவீரன். செரின்னு சுப்பு வாத்தியாரு அதெ வுட்டு கெளம்புனாரு.

            ஞாயித்துக் கெழமெ ராத்திரி அவரு பொண்ணு மாப்புள்ளையச் சென்னைப் பட்டணத்துல குடி வைக்குறதுக்காக குடும்பத்தோட கெளம்புனாரு. வெங்கு, ஆயி, விகடு, பேத்தியா பவ்வுன்னு எல்லாத்தையும் அழைச்சிக்கிட்டு மொத முறையா ஆர்குடி வழியா போயி சென்னைப் பட்டணத்துல கோயம்பேட்டுல காலடி எடுத்து வெச்சதும், சந்தானம் அத்தான் விடியக்கால நாலரை மணிக்கெல்லாம் வந்து தன்னோட மதுரவாயல் வூட்டுக்கு அழைச்சிட்டுப் போனுச்சு.

*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...