8 Sept 2020

டபுள் லாக்கிங் சிஸ்டம்!


 டபுள் லாக்கிங் சிஸ்டம்!

செய்யு - 558

            சந்தானம் அத்தானோட மதுரவாயல் வூட்டுல நொழைஞ்சதுமே தனம் அத்தாச்சி, "வாங்கப்பா! வங்கம்மா! வாடாம்பீ! வாடி பொண்ணு!"ன்னு எல்லாத்தையும் கூப்டுகிட்டு, பவ்வுப் பாப்பாவ கையில வாங்கி தூக்கிக்கிடுச்சு.

            "ஆறு மணிக்குல்லாம் பாலு காய்ச்சிறதாங். குளிச்சிட்டுக் கெளம்புனம்னா செரியா இருக்கும்லா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வந்தோன்னயே ஆரம்பிச்சிட்டீயா? சித்தெ படுத்துட்டுக் குளியேம் மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "வேலய முடிச்சிட்டேம்ன்னா பெறவென்ன இருக்கு? படுத்துத் தூங்க வேண்டியதுதாங்! அதெ மொதல்ல முடிச்சிட்டுப் பெறவு தூக்கத்தப் பாப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "சொல்றதெ கேக்க மாட்டீயே மாமா! செரி ஒம் ஆட்டத்தெ ஆரம்பி! திருவேற்காட்டுல வேற நீயி வரலன்னு சொல்லிட்டுக் கெடந்துச்சுங்க!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "மொதல்ல இந்த வேலைய முடிச்சிடுவேம் யம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அப்புறம் மாமா! நீயி வந்துதாங் பிரீட்ஜ், வாஷிங் மெஷின்னு, டிவி, கிரைண்டரு, மிக்ஸில்லாம் வாங்கணும்ன்னு இருக்கேம். ஏம்ன்னா டிசைன்னு நீயி பாத்துச் சொல்லணும்ன்னுத்தாம். பால காய்ச்சி முடிச்சிப்புட்டு, காலச் சாப்பாட்டையும் முடிச்சிப்புட்டு அப்பிடியே அரும்பாக்கத்துல நமக்குத் தெரிஞ்ச கடெ ஒண்ணு இருக்கு. நமக்குன்னா கொஞ்சம் மலிவா கொடுப்பாம். அஞ்ஞ வாங்கிப்புடலாமா? யில்ல வசந்த் அன்‍ கோவுலயே வாங்கித் தர்றட்டுமா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "நமக்குச் சென்னைப் பட்டணத்தெப் பத்தி ன்னா தெரியும்பீ? நீயா பாத்து எங்காச்சிம் நல்ல வெதமா வாங்கிக் கொடு. எங்க வாங்கிக் கொடுத்தா ன்னா ஒம் மனசு போல வாங்கிக் கொடு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. இவுங்க ரண்டு பேரும் பேசிட்டு இருக்குறப்ப விகடுவோட செல்போன் அடிச்சி அவ்வேம் ஓடியாந்தாம். என்னாங்ற மாதிரி சுப்பு வாத்தியாரு பாத்தாரு.

            "சித்துவீரன் பேசுறாப்புல. அத்து டாட்டா ஏசியில கட்டிலு பீரோவ ஏத்திட்டு வருதாங். டவுன் லிமிட்டெ நெருங்கிட்டாங்களாம். நெறைய வாகனங்களப் பாத்ததும் டிரைவரு ஓட்ட முடியாதுன்னு சொல்ல வண்டிய ஓரமா நிறுத்திட்டு நிக்குறாங்களாம். எந்த எடம்ன்னு புரியலன்ன சொல்லுதுப்பா!"ன்னாம் விகடு.

            "அதுக்கு எதுக்குடா நமக்குப் போன அடிக்கிறாம்? சென்னைக்கு வந்தும் உசுர்ர எடுக்குறாம்ன்னே! வண்டியில சாமாஞ் செட்டுகளப் போட்டு எடுத்துட்டு வர்றவேம் அதுக்குன்னு ஒரு நல்ல டிரைவர்ரப் போட்டு எடுத்துட்டு வாரதில்ல. இப்பிடியா ஒரு பயந்தாங்கொள்ளிப் பாடாவதி டிரைவர்ரப் போட்டுட்டு வந்து பேதியக் கெளப்புவாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            சுப்பு வாத்தியாரு சொல்ல சொல்ல சேதிய வெளங்க்கிட்டு சந்தானம் அத்தான், "டிரைவரு புதுசா இருப்பாம் போலருக்கு. சென்னைக்கு வர்றாதவனா இருப்பாம். மொத மொதல வண்டிய எடுத்து ஊர்ல ஓட்டிட்டுக் கெடந்திருப்பாம். அந்த மாதிரி ஆளுங்கத்தாம் காசி கம்மியாக் கேப்பாம்ன்னு அவனெ தூக்கிப் போட்டுக்கிட்டுக் கொண்டாந்திருப்பாம் போலருக்கு மாமா! அந்த மாதிரிப் பயலுவோ இஞ்ஞ ஆயிரம் ரோடு பிரியுறதுல எஞ்ஞப் போவணும், எப்பிடிப் போவணும்? சிக்னல்ல எப்ப நிக்குறது? எப்ப எடுக்குறதன்னு? கொழம்பிடுவானுவோ!"ன்னுச்சு.

            "யிப்ப ன்னாம்பீ பண்ணுறது? நாம்ம குளிச்சி முடிச்சி பாலு காய்ச்சுற எடத்துக்குப் போறதா? இந்தப் பயெ கட்டிலோடயும் பீரோவோடயும் நிக்குற நடுரோட்டுக்குப் போறதா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நீயி வேற சிரிப்பெ கெளப்பாதே மாமா! நீயி சேக்குற செட்டுல்லாம் இருக்குப் பாரு! பெருங்கூத்தா இருக்கு! அவ்வேம் எப்பிடி இஞ்ஞ நீஞ்ஞ வந்திருப்பீயேன்னு கணக்குப் பண்ணிப் போன அடிக்கிறாம் பாரு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அத்து வந்தும்பீ! நாம்ம பேசுறப்பச் சொல்றதுதாங். சென்னைப் பட்டணத்துல எஞ்ஞ யக்கா மவ்வேம் பெருங்கையா இருக்காம்ன்னும், அஞ்ஞப் போனா நாம்ம அஞ்ஞத்தாம் தங்குறதுன்னும். அதெ கேட்டு வெச்சிக்கிட்டு இப்போ செரியா அடிக்கிறாம் இஞ்ஞத்தாம் வந்திருப்பேம்ன்னு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "செரிடா மாப்ளே! போன கொடு!"ன்னு விகடுகிட்டேருந்து வாங்கிச் சந்தானம் அத்தான் பேசுனுச்சு. சித்துவீரன் டாட்டா ஏசியோட நிக்குற எடத்தெப் பத்தி சொன்ன அடையாளத்த வெச்சி, வண்டியோட நம்பரையல்லாம் கேட்டுகிட்டு, உடுத்தியிருக்குற சட்டையோட நெறத்தையெல்லாம் கேட்டுகிட்டு, "அஞ்ஞயே அப்பிடியே இருங்க. கொஞ்ச நேரத்துல ஒரு ஆளு பிடிச்சி அனுப்பி வுடுறேம். அவ்வேம் வந்துச் சேருவாம் அஞ்ஞ. வந்து சேந்த ஒடனேயே அத்து இருக்கட்டும். இப்போ நம்பர்ர சொல்றேம் குறிச்சிக்கோங்க!"ன்னு சொல்லி தன்னோட நம்பர்ர சொன்னிச்சு சந்தானம் அத்தான். சொல்லிட்டு, "அவ்வேம் வந்து சேந்த வுடனேயே இந்த நம்பருக்குப் போன அடிங்க! நாம்ம அந்தப் பயலுக்கு ரூட்டைச் சொல்லி வுட்டா கொண்டாந்துப்புடுவாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            சந்தானம் அத்தான் பேசி முடிச்சதும், சுப்பு வாத்தியாரு கேட்டாரு, "என்னாம்பீ கட்டிலு பீரோல்லாம் நம்ம எடத்துக்கு வந்துப்புடுமா? வேற எங்காச்சும் போயிடுமா?"ன்னு.

            "எது வாணும்ன்னாலும் நடக்கலாம் மாமா! ஒங் கூட்டம்லாம் இருக்குப் பாரு. அந்த மாதிரித்தாம் இருக்கு!"ன்னு சொல்லிட்டு சிரிச்சுச்சு. பெறவு, !நாம்ம நமக்குத் தெரிஞ்ச டிரைவரு ஒருத்தனுக்கு இப்ப போன்ன அடிச்சிச் சொல்றேம் பாரு! எப்பிடிச் சொன்ன எடத்துக்குக் கொண்டாந்துச் சேக்குறாம் பாரு!"ன்னு சிரிச்சிக்கிட்டெ சொன்னுச்சு. சொன்னபடிக்கு ஒரு ஆளுக்குப் போன அடிச்சிச் சொன்னுச்சு. சொல்லிட்டு அந்த ஆளுகிட்டெ, "அஞ்ஞ வந்து எறக்குறப்ப செருமப்பட்டுகிட்டு இருப்பீயே? சைதாப்பேட்டைட்டாண்ட மின்னாடி வர்றப்பயே அரும்பாக்கத்துல ரூம்ல கெடப்பானுவோளே நம்ம ஆளுங்க நாலு பேத்த அந்த எடத்துக்கு வாரச் சொல்லிப்புடு. சுலுவா எறக்கி ஏத்திப்புடலாம். எடம் மாடிடா. எறக்கிட்டு அப்பிடியே அவனுங்கள ஆபீஸ்ல நம்ம பாக்குறப்ப ஞாபவமா ஆளுக்கு அம்பதெ வாங்கிக்கிடச் சொல்லு! ஒமக்கு நாம்ம அந்தப் பக்கம் வார்றப்போ பணத்தெ தந்துக் கவனிக்கிறேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            அதெ முடிச்சிட்டு, "யிப்போ நீயி குளிச்சிட்டுக் கெளம்பு மாமா! ஏ தனம்! காப்பித் தண்ணியப் போட்டு வெச்சு எல்லாம் கெளம்புங்க. பாலு காய்ச்சுற வூட்டுக்குப் போயிட்டு வந்துப்புடுவேம். நாம்மப் போயி அந்த எடத்துல எறங்குறதுக்குள்ள பீரோ, கட்டிலு எல்லாம் அங்க எப்பிடி வந்து எறங்கியிருக்கு பாரு மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            பேருக்கு ஒரு குளியலப் போட்டுட்டு சனங்க எல்லாம் தயாரு ஆனுச்சுங்க. சந்தானம் அத்தான் எல்லாத்தையும் கார்ல இழுத்துப் போட்டுகிட்டு மதுரவாயல்லேந்து அரும்பாக்கத்துல பாத்திருந்த வாடகை வூட்டுக்குக் கொண்டாந்துச்சு. வந்ததும் உள்ளார நொழைய முடியாத அளவுக்கு ரண்டு கேட்டுங்க. ஒண்ணு வூட்டுக்கு மின்னாடி. இன்னொண்ணு மாடிப்படிக்கு மின்னாடி. செய்யுவுக்குப் போன அடிச்சிச் சொன்ன பிற்பாடு அவ்வேதாம் வந்து தொறந்தா. அதுக்குப் பெறவுதாம் சனங்க உள்ளார நொழைஞ்சி, மாடிப் படியேறி வூட்டக்குள்ளார போவ முடிஞ்சது. சந்தானம் அத்தான் சொன்னபடிக்கு கட்டிலு, பீரோ, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள் எல்லாம் வந்து எறங்கி மாடி மேல இருந்த அந்த வூட்டுல இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு அசந்துப் போயிட்டாரு. அதெ பாத்துப்புட்டு மாடிக்கு வெளியில வந்தவரு "எப்பிடிம்பீ! ஒரு ஆளு நொழைஞ்சு வர்றதே செருமமா இருக்குற இந்த எடத்துல அம்மாம் சாமானையும் கொண்டாந்து வெச்சாயிருக்கே?"ன்னு சந்தானம் அத்தானப் பாத்துக் கேட்டாரு. வூட்டச் சுத்திப் பாத்த சனங்க ஒவ்வொண்ணும் மாடிக்கு வெளியில வந்து சுத்திலும் வேடிக்கையப் பாக்க ஆரம்பிச்சிதுங்க.

            "இஞ்ஞ அப்பிடி வேலயச் செஞ்சு பழக்கம் மாமா! இதெ வேலைய அதாங் கட்டிலு, பீரோ செய்யுற வேலையத்தாம் சொல்றேம்! நம்மகிட்டெ கொடுத்திருந்தேன்னா அறுவதாயிரத்துல அடிச்சி முடிப்பேம். அதெ இருவதாயிரம் லாவத்தெ வெச்சி அடுத்த அஞ்சே நிமிஷத்துல விப்பேம். அப்பிடி பண்ணுற தெறமெ இருந்தாத்தாம் இந்தப் பட்டணத்துல இருக்க முடியும். இல்லன்னா துணியச் சுருட்டிக்கிட்டுக் கிராமத்துல வந்துத்தாங் கெடக்கணும். தெனமும் காலையில நாலரைக்கு முழிக்கிறேம் மாமா. படுக்குறப்போ நேரம் கணக்குல்லாம் கெடையாது. பத்துக்கு படுத்தாலும் படுத்ததுதாங். பன்னெண்டுக்குப் படுத்தாலும் படுத்ததுதாங்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "இதெ கேக்குறப்ப, நீயி இஞ்ஞ இருக்குறதாலயும், மாப்புள்ள இஞ்ஞ இருக்குறதாலயும் கலியாணத்தையே இஞ்ஞ முடிச்சிருக்கலாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "செரியா சொன்னே மாமா! மண்டப வாடவ ஒண்ணுத்தாம் அதிகம். மித்தத எல்லாத்தையும் சீப் ரேட்டுல அடிக்கலாம். அதுக்கு நம்மிட்டெ இஞ்ஞ ஆளு இருக்கு மாமா! அதாங் பண்ணி முடிஞ்சிடுச்சே! இனுமே பேசி என்னத்தெ பண்ணுறது? ஏம் யத்தே மாமாக்குன்னா ஒரு பொண்ணப் பாத்து இஞ்ஞ சீப் ரேட்டுக்கு ஒரு கலியாணத்தெ முடிச்சிடுவமா?"ன்னுச்சு சந்தானம் அத்தான் வெங்குவப் பாத்து.

            "ஏம்டாப்பா! அத்து ஒண்ணுத்தாம் கொறைச்சல ஒமக்கு? ஏம் ஒமக்கு ஒரு பொண்ணப் பாத்து முடிச்சிட வேண்டித்தானே! கலியாண வயசுல பொண்ண வெச்சிட்டுப் பேசுறாம் பாரு பேச்சு?"ன்னுச்சு வெங்கு.

            "யில்ல யம்மா! அதெ செய்யுங்க மொதல்ல. இவுங்கள வெச்சிட்டு ஒவ்வொரு நாளும் நாம்ம படுற இம்செ இருக்கே! அதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்கட்டும்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி அதெ கேட்டுட்டு.

            "அப்புறம் ஏம்த்தே யோஜிக்கிறே? நீயித்தாம் மாமாவுக்குப் பொண்ணு வாண்டாம்ன்னுட்டே. நமக்காச்சிம் ஒரு நல்ல பொண்ணா பாரு!"ன்னுச்சு சந்தானம் அத்தான் கேலியாப் பேசுறாப்புல.

            "பொண்ணு புள்ளீயோளுக்கு நல்ல வழியாப் பாத்து கலியாணத்தெ பண்ணி வைக்குற வழிய பாருடாப்பா!"ன்னுச்சு வெங்கு.

            "ன்னடா மாப்ளே! அப்பலேந்து பாக்குறேம்! ஒண்ணுமே பேயாம வர்றீயே?"ன்னுச்சு சந்தானம் அத்தான் விகடுவெப் பாத்து.

            "யத்தாம்! மரத்து மேல கேமரா இருக்குல்லா?"ன்னாம் விகடு.

            "நாம்ம ஒண்ணுத்தெ பாத்தா மாப்ள இவ்வேம் ஒண்ணுத்தப் பாப்பாம். நாம்ம ஒண்ணுத்தப் பேசுனா மாப்ள இவ்வேம் ஒண்ணுத்தெ பேசுவாம். இத்து ன்னா ஒங் கிராமம்ன்னு நெனைச்சீயா? வெச்சது வெச்ச எடத்துல, போட்டது போட்ட எடத்துல கெடக்க. காவாளிப் பயெ ஊரு. கொஞ்சம் அசந்தீன்னா ஜட்டிய வரைக்கும் உருவிட்டு வுட்டுப்புடுவானுவோ. அதுக்குத்தாங் கேமரா. எந்த எடத்துல எங்க இருக்கும்ன்னே தெரியாது. அத்து இருக்குற வாசித்தாம் கிரைம் ரேட் கொஞ்சம் சிட்டியில கம்மியா இருக்குடா மாப்ளே!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            விகடு அந்த வூட்டெ கவனிச்சான். மெயின் ரோட்டுலேந்து ரண்டு திருப்பம் திரும்பி வர வேண்டியதா இருந்துச்சு. ஒரு காலனி போல வூடுங்க இருந்துச்சு. உள்ள நோழையுறதுக்கு மின்னாடி ஒரு போன போட வேண்டியதா இருந்துச்சு. அப்படிப் போன போட்டு, வூட்டுல இருக்குறவங்க வந்துதாம் கேட்ட தொறக்க வேண்டியதா இருந்துச்சு. கேட்டுக்கு மின்னாடி நாலு பிஞ்ச  ஒயர்கூடைக இருந்துச்சு. அது பால்பாக்கெட்டுப் போடுறதுக்கான கூடைகளா இருக்கணும். அந்தக் கூடைக அழுக்கடைஞ்சி தூசிப் படிஞ்சிப் போயி பிய்ஞ்சிப் போயி பாக்குறதுக்கே அருவருப்பா இருந்துச்சு. அதெ தொடர்ந்தாப்புல மாடியில ஏறுனப்போ அங்க ஒரு கேட்டு. அதெயும் சாவி போட்டு பூட்டெ உள்ளார இருக்குறவங்க வந்து தொறந்தாத்தாம் உண்டு. கீழே ரண்டு வூடு வரிசையா. அதுக்குப் பெறவு மேல போனா அங்க ரண்டு வூடு. அதுல ரண்டாவது வூடுதாம் பொண்ணு மாப்புள குடித்தனத்துக்காக வாடவைக்கு எடுத்த வூடு.  வீட்டுக்கு மின்னாடி மாமரங்களா இருந்துச்சு. அந்த மாமரங்கள்ல காய்ப்போட கேமராவும் காய்ச்சிருந்தாப்புல இருந்துச்சு. அதெத்தாம் விகடு சந்தானம் அத்தாங்கிட்டெ கேட்டாம்.

            சுருக்கமா சொல்லணும்ன்னா ஜெயில்ல கைதிகள உள்ளார வுட்டு, வெளியில பூட்டிடுறாங்க. இங்க சனங்க தங்கள தாங்களே உள்ளார வுட்டுக்கிட்டு தங்களத் தாங்களே உள்ளார வெச்சுப் பூட்டிக்கிடுதுங்க. ஒவ்வொரு தவாவும் உள்ளார வந்து வெளியில போறதுன்னா ரண்டு பூட்டெத் தொறந்தாவணும். அதெப் பத்திதாம் விகடு யோசிக்குறாங்றதெ கப்புன்னு பிடிச்ச சந்தானம் அத்தான் சொன்னிச்சு, "இதாம்டா மாப்ளே! டபுள் லாக்கிங் சிஸ்டம்! ஒஞ்ஞ கிராமத்துல கதவத் தொறந்துப் போட்டுகிட்டு கால பரப்பிக்கிட்டுல்லா படுத்திருப்பீயே! இஞ்ஞ அப்பிடி படுத்தீன்னா கோவணம் வரைக்கும் போயிடும்! அம்மணக்கட்டையா நிக்கணும். அதாம்டா மாப்ளே சிட்டி!"ன்னு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...