28 Sept 2020

விவசாய வீட்டின் அடையாளங்கள்

விவசாய வீட்டின் அடையாளங்கள்

            அப்போதெல்லாம் வீட்டில் எப்போதும் வெடி இருக்கும் என்றால் அதற்குக் காரணம் நெல் காய வைக்கும் சம்பவம் நடப்பதுதான். தீபாவளிக்கு வாங்கிய வெடிகளைத் திருக்கார்த்திகைக்குப் பத்திரப்படுத்தி அத்தோடு மாதத்துக்கு ஒரு முறையோ ரெண்டு மாதத்துக்கு ஒரு முறையோ காய வைக்கும் நெல்லுக்காகவும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் வழக்கம்.

            நெல்லுக்கும் வெடிக்கும் அப்படியென்ன சம்பந்தம் என்று கேட்டால், நெல்லைக் காய வைக்கும் போது காக்கா, குருவிகள் வந்து நெல்லைக் கொத்தித் தின்னும் பாருங்கள், அப்போது ஒரு வெடி வைத்து விடுவது. சாதாரணமாக ச்சூ என்று விரட்டினாலோ, ஒரு சிறு கல்லைத் தூக்கி எறிந்தாலோ ஓடி விடும் காக்கா, குருவிகளுக்கு ஒரு வெடியை வைத்து அந்தச் சத்தத்தில் விரட்டுவது அப்போது ரொம்ப ஆர்வ சுவாரசியமாக இருக்கும். இதற்காகவே நெல் அவிப்பதையும் காய வைப்பதையும் ரொம்ப ஆவலாதியாக ஒவ்வொரு வீட்டில் இருக்கும் வாண்டுகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.

            வீட்டில் இருக்கும் கிழவிகளும் நெல்லைக் காய வைக்கும் போது, "எலே பாரு! காக்காயும் குருவியும் கொத்திக்கிட்டுக் கெடக்குது. ஒத்த வெடியோ, ஒலக்க வெடியோ ஒண்ணுத்தெ போட்டு வுடு!" என்று சத்தம் கொடுப்பதை நெல் காய வைக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பட்டாசுச் சத்தத்துக்கு நிகராகக் கேட்கலாம். நெல் காய வைக்கும் போது அதைப் பார்த்துக் கொள்ள வாண்டுகள் இல்லாத வீட்டிலும் இந்த வாண்டுகள் சுயவிருப்பத்தின் பேரில் போய் வெடி வைத்துக் காக்கை குருவிகளை விரட்டி விடும் தன்னார்வ சேவைகள் செய்வதும் நடக்கும்.

            தெருவுக்கு வந்துப் பார்க்காமலே கேட்கும் வெடிச் சத்தத்தை வைத்தே யாரோ ஒருவர் வீட்டில் நெல் காய வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். வீட்டின் வாசலுக்கு முன்பாக படுதாவைப் போட்டு அதில் அவித்த நெல்லைக் காய வைப்பார்கள். இதற்கென உரம் வாங்கும் சாக்கைப் பத்திரப்படுத்தி ஒவ்வொரு வீட்டிலும் படுதா தைத்து வைத்திருப்பார்கள். நெல்லைக் காய வைக்கும் போது படுதா காற்றோட்டத்தில் பறந்து விடாமல் இருப்பதற்காக மூலைக்கு ஒன்றாகவும், மூலைக்கு இடையே ஒன்றாகவும் என்று வைப்பதற்கென்றே எட்டு ‍அரை செங்கற்கள் வரை திட்டமிட்டுச் சேகரித்துத் தயாராக வைத்திருப்பார்கள்.

            நெல் அவித்துக் காய வைத்து அரிசியாக்கிக் கொடுத்துச் சம்பாதிப்பவர்களும் அப்போது தெருக்களில் இருந்தார்கள். நெல் அவித்துக் காய வைக்க முடியாதவர்கள் அவரிகளிடம் காசு கொடுத்து அப்படி செய்து வாங்கிக் கொள்வார்கள். கிராமத்துப் பெண்கள் இது தவிர அரிசி வியாபாரத்திலும் கலக்கிக் கொண்டிருப்பார்கள். படியரிசிதான் கணக்கு.

            வீட்டில் பத்தாயமும் பசுவும் இருப்பதை அப்போது மிகக் கெளரவமாகக் கருதினார்கள். பத்தாயத்தில் நெல்லெடுத்து அவித்துக் காய வைத்து அரிசியாக்கிச் சாப்பிடுபவர்களும், கறவை பசு வைத்து பால் கறந்து குடிப்பவர்களுமே கெளரமானவர்கள் என்று பேசிக் கொள்வார்கள். கடையில் அரிசி வாங்கித் தின்பதைக் கேவலமாக வேறு பேசுவார்கள். இதற்காகவே நிலம் வாங்கி, பத்தாயம் செய்து கெளரவத்தை நிலைநாட்டியவர்கள் இருந்தார்கள். வீட்டில் கறவை நின்று விட்டால் கறவை பசுவை எங்கிருந்தாவது வாங்கி வந்து கட்டிப் பால் கறந்து குடித்தவர்கள் இருந்தார்கள். காலப்போக்கு அந்தக் கெளரவத்தை மிக மோசமாகவும் கேவலமாகவும் அடித்துச் செல்லும் என்று யாரும் எதிர்பாத்திருக்க மாட்டார்கள்.

            அங்காடி அரிசி படிப்படியாக மூன்று ரூபாய் அம்பது காசு, இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் என்று விலைக்கு இறங்கி விலையில்லா அரிசியாக மாற மாற, அரிசிக் கடைகள் என்றே தனிக்கடைகள் முளைக்க முளைக்க நெல் அவிப்பது குறைந்து போனது. ஆமாம் இந்த நெல்லை அவித்துக் காய வைத்து, அதை அரைத்து அரிசியாக்கி என்று அந்தச் செயல்முறையைக் கெளரவக் குறைச்சலாகப் பேசும் தற்காலம் எனும் நிகழ்காலம் ரொம்ப வேகமாகவே வந்து விட்டது.

            பத்தாயங்கள் வீட்டை அடைத்துக் கொண்டிருப்பதாகப் பேசிக் கொண்டு அதை விற்பதைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று செலவு செய்து செய்தப் பத்தாயத்தை ஆயிரம், ரெண்டாயிரம் என்று கிடைத்த விலைக்குத் தரகு பேசி விடும் யேவாரிகளிடம் விற்க ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் பத்தாயத்தைப் பிரித்து பலகைகளைத் தடுப்புகள் போல வீட்டிற்கு அடித்துக் கொண்டார்கள். ஒரு சிலர் அலமாரிகள் போல செய்து கொண்டார்கள். மொத்தத்தில் வீடுதோறும் இருந்த பத்தாயம் இல்லாமல் போனது அல்லது உருமாறிப் போயிருந்தது. பத்தாயத்தை அழித்தொழித்து முடித்த பின் யாரும் நெல் அவிப்பதிலோ, காய வைப்பதிலோ இறங்க வில்லை. சிறுவர்களும் நெல் காய வைக்கும் போது வெடிப்பதற்கு வெடி வேண்டுமே என்று வெடிகளைப் பத்திரப்படுத்துவதில் இறங்கவில்லை. அதை விட முக்கியமாக இப்போது கைபேசியும், தொலைக்காட்சியும் மாய வேடிக்கைகள் காட்டும் போது எந்தச் சிறுவர்கள் உட்கார்ந்துப் பொறுமையாக நெல்லைக் காய வைப்பதைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்களோ? நெல் காய வைப்பதை ஒரு விளையாட்டுச் செயலியாக்கினால் வேண்டுமானால் அதை விளையாடிக் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

            இப்போதும் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லைத்தான் சாப்பிடுவதாகச் சொல்பவர்கள் மூட்டைகளை மொத்தமாக நவீன அரிசி ஆலையில் போட்டு விட்டு மாதத்திற்கொரு முறை அரிசியை அங்கிருந்து வாங்கி வருகிறார்கள். அவர்கள் வாங்கி வரும் அரிசியானது அவர்கள் போட்ட நெல்லிருந்து வருகிறதா? வேறொருவர் போட்ட நெல்லிலிருந்து வருகிறதா? என்பதைக் கண்டுபிடிப்பது உண்மையில் சிரமமானது.

            எங்கள் திட்டை கிராமத்தில், எங்கள் தெருவில், எங்கள் வீட்டில் மட்டும் இன்னும் நெல் அவிப்பதும், நெல் காய வைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கள் வீட்டில் இன்னும் பத்தாயம் இருக்கிறது. அதுவும் ஒன்றுக்கு இரண்டாக. சாப்பாட்டு நெல்லுக்கு என ஒன்று, விதை நெல்லுக்கென மற்றொன்று. உளுந்து பயிறுக்கென ஆனைக்கால் குவளைகள் இருக்கின்றன. அதை மாதந்தோறும் ஓர் அமாவாசை நாளில் காய வைக்கும் வழக்கம் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கென மெனக்கெடல்கள் அதிகந்தான் என்றாலும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைச் செய்தாக வேண்டும் என்ற பிடிமானம் வயதானவர்களிடம் இருக்கிறது.

            எங்கள் வீட்டில் நெல் அவிப்பதிலும், காய வைப்பதிலும் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அலுமினியக் குவளையில் அவித்த நெல்லை, தற்போது பெரிய அலுமினிய வட்டாவில் வைத்து அவிக்கிறார்கள். வீட்டின் வாசற்படிக்கு முன் காய வைத்த நெல்லைக் கூரை வீட்டிலிருந்து மாடி வீடான பிறகு மாடியில் காய வைக்கிறார்கள். அப்படி காய வைத்த போது எடுத்த படந்தான் கீழே இருப்பது.

            தற்போது எங்கள் வீட்டிலிருந்து மூன்று குடும்பங்களுக்கு நெல்லை அவித்துக் காய வைத்து அரைத்துக் காய வைத்து அரிசியாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் குடும்பத்தையும் சேர்த்தால் நான்கு குடும்பத்துக்கான அரிசி. அதற்கான நெல்லைச் சேகரம் செய்து வைத்துக் கொள்ள கூடுதலாகத் தற்போது இன்னொரு பத்தாயம் தேவைப்படுகிறது. அதற்காக ஒரு பத்தாயம் செய்ய வேண்டும் என்று தச்சு ஆசாரியிடம் போய் நின்றால், பட்டறை போட்டுப் பத்தாயம் செய்ய வேண்டுமே, அந்த வேலையை மறந்து விட்டதே என்ற சொல்கிறார்கள். இருந்தாலும் பட்டறை போட்டு பத்தாயம் செய்யும் வேலை ஞாபகம் உள்ள ஒரு பழம் தச்சு ஆசாரியைப் பிடித்து ஒரு பத்தாயத்தைச் செய்துதான் ஆக வேண்டும்.

            எங்கள் வீட்டில் இருக்கும் இரு  பத்தாயங்களின் படம் கீழே இருக்கின்றது. பத்தாயங்கள்தான் ஒரு வீட்டின் தானியக் களஞ்சியங்கள். வீட்டின் நிலையின் மேல் தொங்கும் நெல்கொத்தும், வீட்டினுள் இருக்கும் பத்தாயமும் கிராமத்து வீட்டின் அடையாளங்கள். இப்போது நிலையின் மேல் தொங்கும் நெல்கொத்தை வைத்து ஒரு கிராமத்து வீட்டை விவசாயம் செய்யும் வீடு என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...