17 Sept 2020

ஜென்டில்மேன் படத்தின் தோல்வி

 ஜென்டில்மேன் படத்தின் தோல்வி

            நல்லதை நிகழ்த்த ஒரு மனிதர் என்ன செய்கிறார் என்பதை விட அவர் எத்தகைய வழியில் அதைச் செய்கிறார் என்பதும் முக்கியம்.

            ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தின் அடிப்படைத் தோல்வியே அதுதான். ஷங்கரின் பல படங்களில் இத்தகைய அடிப்படைத் தோல்வி இருக்கிறது. ஆனால் இதைச் சிந்திக்க முடியாதபடி வியக்கத்தக்க காட்சி அமைப்புகளை ஷங்கர் பயன்படுத்துவார்.

            அவ்வபோது தொலைக்காட்சியில் ஜென்டில்மேன் படம் ஓடும் போது அதை ரசித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும் இப்படத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பார்கள். மிக எளிதாகக் கேட்பதானால் திருடுவது சரியா என்ற கேள்விக்கு இந்தப் படம் என்ன பதிலைத் தர முடியும்? ஒரு நன்மைக்காகப் பொய் சொல்வதைப் போல, ஒரு நன்மைக்காகத் திருடுவது சரியானது என்ற பதிலையா தர முடியும்? 

            மருத்துவக் கனவில் இருக்கும் இரு இளைஞர்களுக்கு அது கிடைக்காத போது அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு, மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் என்ன செய்வார் என்பதை இப்படத்தின் ஒருசில வரிக் கதையாகக் கொள்ளலாம் என்றால், இந்த ஒருசில வரியைக் கொண்டு இப்படத்தைப் பல்வேறு சாத்தியக்கூறுகளில் படமாக்கலாம். அதை வியத்தற்குரிய வகையில் படமாக்க நினைத்ததன் மூலம் ஷங்கர் கொள்ளையடித்துதான் நல்லதைச் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்.   அவரது பல படங்களிலும் இப்படிப்பட்ட அறத்திற்குப் புறம்பான முடிவைத்தான் அவர் பெரும்பாலும் நாடுகிறார். 

            ஷங்கரின் ஜென்டில்மேன்  திரைப்படத்தோடு அவரது இன்னபிற சில படங்களைக் கருத்தில் கொண்டால் அரசியலமைப்பில் இருக்கும் ஊழலும், லஞ்சமும் அவரின் பிரதான எதிர்ப்பொருள்கள் எனலாம். அதை எதிர்கொள்வதற்கு அவர் பெரும்பாலும் ஆள்கடத்தல், பழி தீர்த்தல், கொலை செய்தல் என்பதையே ஏற்ற வழிமுறைகளாகக் கொள்கிறார். (இவ்வகையில் ஷங்கர் கொலைகளின் காதலன் என்ற தலைப்பிலான ஒரு பத்திமை கட்டுரை இதே வலைப்பூவில் உள்ளது) இவ்வழிமுறைகளில் வியத்தற்குரிய அம்சங்களை எளிதாகச் சேர்த்து திடுக்குறச் செய்யலாம் என்பதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆக்கம் என்பதை விட அழிவு என்பது சட்டென மனதைக் கவரும் வியத்தற்குரிய அம்சமாக இருக்கிறது. காட்சி ஊடகங்களைப் பொருத்த மட்டில் சுனாமிப் பேரழிவோ, பூகம்பமோ, போரோ, விபத்தோ இன்னபிற பேரிடரோ மனிதர்களைச் சட்டெனப் பார்க்கத் தூண்டும் வணிகச் சரக்காக இருப்பதையும் இவ்விடத்தில் கருத்தில் கொள்ளலாம். ஷங்கரின் வணிகச் சரக்கும் அநேகமாக இதுவாக இருக்கலாம்.

            ‍ஜென்டில்மேன் படத்தில் மருத்துவக் கனவை நனவாக்கிக் கொள்ள முடியாத கதையின் நாயகன் என்ன செய்கிறான் என்றால் அக்கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியாதவர்களுக்காகப் பணத்தைக் கொள்ளையடித்து மருத்துவக் கல்லூரியைக் கட்ட முயல்கிறான். இப்படி கனவை நிறைவேற்ற முடியாத ஒவ்வொருவரும் அறத்திற்குப் புறம்பான வழிமுறைகளைக் கைக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும் என்ற வினாவுக்கு எவ்வித விடையைக் காண்பது? ஷங்கரின் உண்மையான நோக்கம் அரசியலின் ஊழல்களும், லஞ்சங்களும்தான் என்றால் அது அமைப்பியலைச் சரியாகச் செயலாக்க முடியாமையில் உள்ள பிரச்சனைகளேயன்றி, தனிமனித கனவை எப்படி வேண்டுமானால் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதில் உள்ள பிரச்சனையன்று.

            ஒரு தனிமனிதக் கனவு நிறைவேறாமையின் விரக்தியை எவ்விதத்திலும் தீர்த்துக் கொள்ளலாம் என்ற அறத்திற்குப் புறம்பான முடிவையே ஷங்கரின் பெரும்பாலான படங்கள் பேசுகின்றன. மேலும் அது பிரச்சனைக்கான எளிய வழி போலவும் ஒரு தோற்றத்தைத் தரவும் செய்கின்றன என்றாலும் அது அபாயகரமான வழிமுறையாகும். ஷங்கரின் கதைநாயகர்கள் சமூகத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்ளும் வழிமுறைகளைப் பெரும்பாலும் கைகொள்வதில்லை. அவர்களுக்கென இருக்கும் நகைச்சுவையான மனிதர்களையே (காமெடி கூட்டத்தை) துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். அல்லது ஆளுமைச் சிதைவு போன்ற அபாயகரமான அம்சத்தைத் துணை கொள்கிறார்கள். அதையும் தாண்டி மேலும் வியத்தற்குரிய அம்சத்தைச் சேர்க்கும் வகையில் மீள்பிறத்தல், ஆன்மா போன்ற கருப்பொருள்கள் வரை சென்று சேர்கிறார்கள்.

            ஜென்டில்மேன் படத்தை எடுத்துக் கொண்டால் மருத்துவத்தின் மூலமாக சேவை செய்ய நினைப்பதாக அக்கதை நாயகனின் கருத்தை ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால், அது சாத்தியமாகாத நிலையில் வேறு பிற வழியில் அதைச் சாத்தியமாக்க தன்னுடைய ஆக்கச் சிந்தனையை ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? பல்வேறு ஆக்கச் சிந்தனையோடு கொள்ளையடிக்க முடியும் ஒரு கதை நாயகனால் அதைச் செய்திருக்க நிறைய வாய்ப்பிருப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்த் திரையுலக இயக்குநர்களால் அதைச் செய்ய முடியாது. கதையைத் தாங்கிப் பிடிக்கும் கதை நாயகனுக்கான பிம்பத்தைக் கட்டி அமைக்க வேண்டிய அடிமைத்தனக்குத் தேவையான சரக்குகளையே அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் சமூகம் தனக்கான நாயகனை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதாக அவர்களாகவே ஒரு கற்பிதமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாயகர்களைப் பிரசவிக்க அவர்கள் அதிபிரயதனப்பட்டுப் புறம்பான முடிவுகளுக்கு ஏற்ற கற்பனையை நாடுகிறார்கள். சரியான நாயகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்றால் தனிமனித கனவுகளை நிறைவேற்றும் உந்துதலிலிருந்து அல்லாமல், சமூகக் கனவுகளை நிறைவேற்றும் உந்துதலிலிருந்தே உருவாகிறார்கள். இந்த அடிப்படை வேறுபாட்டை மறந்து தனிமனிதக் கனவுகளை நிறைவேற்றும் உந்துதலினின்று நாயகர்கள் உருவாவதாகக் கொள்வதே ஷங்கரின் படங்கள் செய்யும் தவறு எனலாம். அதனாலேயே அவரது படங்கள் குறுகிய நோக்கத்தைப் பிரமாண்ட நோக்கங்களாகச் சித்தரிக்கும் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

*****

1 comment:

  1. அந்த படத்தில் ஊழல் அரசியல்வாதிகளின் பணத்தை தான் கொள்ளை அடிப்பார்கள். கொள்ளை அடிப்பதே தவறு தான். ஆனால் அது ஒரு படம். படத்தில் தான் நியாயம் என்று நினைப்பதை ஹீரோ செய்கிறார். ஷங்கரில் இருந்து ஹரியின் படங்கள் வரை இது தான். ஒரு படத்தில் நல்ல விஷயங்களை தான் காட்ட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நாம் நினைப்பது போன்று வேண்டும் என்றால் நாம் தான் படமெடுக்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...