18 Sept 2020

படிக்காத பாஸ்டர்டு!

 
படிக்காத பாஸ்டர்டு!

செய்யு - 568

            மணி மத்தியானம் ரண்டரைக்கு மேல ஆயிருந்துச்சு. சந்தானம் அத்தான் வந்து காத்திருந்துச்சு. டிவிப் பொட்டி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் எல்லாத்துக்கும் ஆளுக வந்து இன்ஸ்டாலேஷன் பண்ணிக் கொடுத்துட்டுப் போனதாவும், எலையப் போட்டா சாப்புடலாம்ன்னும் செய்யு சொன்னா. கேபிள்கார்ரனும் வந்து கனெக்சன கொடுத்துட்டுப் போயிருந்தாம். ஏற்கனவே கனெக்சன் இருந்த வூடுங்றதால சுலபமா கொடுத்துட்டதா சொன்னா செய்யு.

            "எ ஸ்மால் எக்ஸ்கியூஸ். எல்லாரும் கொஞ்சம் வெயிட் பண்ணா குளிச்சிட்டு வந்துடுவேம். கொஞ்சம் பிரெஷ்ஷா இருக்கும்!"ன்னாம் பாலாமணி. அதுக்கு யாரும் ஒண்ணும் சொல்லல. பாலாமணி குளிச்சிட்டு வர்றதா சொன்னதும் அவனுக்காக எல்லாரும் கொஞ்சம் நேரம் காத்துக் கெடக்க வேண்டியதா இருந்துச்சு. குளிச்சி முடிச்சிட்டு வேட்டியையும், மேலுக்கு ஒரு பனியனையும் போட்டுட்டு அதுக்கு மேல ஒரு துண்டெ போட்டுகிட்டு வந்து உக்காந்தாம் பாலாமணி. சாப்பாடு பரிமாறுறது ஆரம்பமானுச்சு. சாம்பாரு, ரசம், மோரு, ரண்டு கறி வெச்சி சாப்பாடு தயாரு பண்ணிருந்தா செய்யு. அத்தோட வடையும், பாயாசமும், அப்பளமும் விருந்துக்கு ஏத்தாப்புல பண்ணிருந்தா. வெங்கு, ஆயின்னு ரண்டு பேரும் தொணையா இருந்தது அவ்வே சமைக்குறதுக்கு வசதியா இருந்துச்சு.

            சாப்புட்டுட்டு இருக்குறப்பவே பாலாமணி சொன்னாம். "கிளினிக்கத் தொறந்து நாளாவுது. இன்னிக்குத் தொறக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேம். நெறைய பேஷண்ட்ஸ் அப்பாய்ன்மெண்ட்ஸ் அப்பிடியே கெடக்குது! அஞ்சு மணிக்கு கிளினிக்ல இருக்கணும்!"ன்னாம்.

            "நாஞ்ஞ சாயுங்காலமா கெளம்புலாம்ன்னு பாக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஒரு வாரம் இருந்துட்டுதாம் போவணும்!"ன்னாம் பாலாமணி.

            "குடி வெச்சாச்சு. வரவேற்ப முடிச்சாச்சு. பெறவென்ன சோலி? கலியாணமாயி இருக்குற எளஞ்சோடிங்க வேற. கெளம்புறதாங் செரி!"ன்னுச்சு வெங்கு.

            "ஒரு வாரம் இருந்துட்டுப் போனீயன்னா கொஞ்சம் தொணையா இருக்கும்லம்மா!"ன்னா செய்யுவும்.

            "அதாங் பக்கத்துல மதுரவாயல்ல அத்தாம், அத்தாச்சில்லாம் இருக்குல்லா. வாரத்துக்கு ஒரு நாளு வந்துப் பாத்துட்டுப் போவச் சொல்றேம். நீயும் யம்பீயோடப் போயி அப்பைக்கப்போ பாரு. திருவேற்காட்டுல நம்ம சனங்க இருக்குங்க. சொல்லிட்டுப் போறேம். வந்துப் பாக்குமுங்க. எல்லா வூட்டுக்கும் ஒரு நாளு விருந்துக்குப் போயிட்டு வந்துப்புடுங்க! ரொம்ப ஆவலாதியா இருக்குங்க. இந்தப் பக்கம் எப்போ வந்தாலும் வந்துட்டுப் போறேம்ன்னு சொல்லிருக்குங்க. பாக்குக்கோட்டையிலேந்து சின்னம்மா வேற ரண்டு நாளுல்ல இஞ்ஞ வர்றேன்னு சொல்லிருக்கு. பெறவென்ன யம்பீதாம் இருக்குல்லடி!"ன்னுச்சு வெங்கு.

            "அதுக்கில்லம்மா நீயும் இருந்தா தேவலாம்ன்னு நெனைக்குறேம்!"ன்னா செய்யு.

            "இத்தனெ நாளு ஒங் கூடத்தானே இருந்தேம். இனுமே புகுந்த வூடுன்னு ஆயிட்டப் பெறவு இனுமே இதாங் ஒனக்கு வூடு. ஒம் புருஷம்தாம் எல்லாம். ஒனக்கென்னடி கொறைச்சலு ராசாத்தி? பைப்பத் தட்டி வுட்டா தண்ணி அது பாட்டுக்கு ஊத்துது. தூக்கணுங்ற அவசியம் கூட யில்ல. துணி தொவைக்குற வேலை கூட யில்ல. எந்திரம் தொவைச்சிப் போடப் போவுது. தோசை மாவு, இட்டிலி மாவு வரைக்கும் விக்குறாம். வாங்குனா ஊத்திச் சாப்புட வேண்டியதுதாங். பெரிய டிவிப் பொட்டி தேட்டரு போலல்லா இருக்கு. ஒனக்கென்னடி செருமம் இருக்கு தொணைக்கு ஒரு ஆளு நின்னு ஒத்தாசி பண்ணுறதுக்கு? எவனாச்சும் உள்ள வாரணும்ன்னா ரண்டு கேட்டத் தாண்டித்தாம் வாரணும்!"ன்னுச்சு வெங்கு.

            "நாமளும் சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டெ இருந்தேம் மாப்ளே!நாளைக்கித் திருவேற்காடு போவணும். சனங்களுக்கு இன்னும் அஞ்ஞ வரலன்னு ஒரு ஏக்கம். அங்க அப்பிடியேப் பாத்துட்டு சாயுங்காலமா பஸ்ஸப் பிடிச்சிடலாம்ன்னு பாக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பாலாமணியப் பாத்து.

            "நாளைக்கி எப்போ?"ன்னாம் பாலாமணி.

            "ராத்திரி எப்படியும் சாப்பாட்ட முடிச்சிட்டு ஒம்போது மணிக்கு மேல ஆயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாளைக்கி கிளினிக் எப்பிடி இருக்குன்னு தெரியல மாமா. ரொம்ப நாளா தொறக்காம இருக்குறதால ஒரு வாரத்துக்குக் கூட்டம் தாங்காது. நம்மாள பஸ்ஸூ ஏத்தி வுட வர முடியுமான்னு தெரியல. ஒருவேள வர முடியாம போயிட்டுன்னா ஒண்ணும் தப்பா நெனைச்சிக்கிட கூடாது!"ன்னாம் பாலாமணி.

            "நீஞ்ஞ செருமப்பட வாணாம் மாப்ளே! சந்தானம் இருக்குல்லா! கார்ல கொண்டாந்து கோயம்பேட்டுல வுட்டுப்புடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "டிக்கட் ரிசர்வ் பண்ணியாச்சா?"ன்னாம் பாலாமணி.

            "அதல்லாம் வாணாம்! போயி நிக்குறப்ப எந்த பஸ்ஸூ இருக்குதோ அதுல ஏறிப் போயிட வேண்டியதுதாங். இது நாளு வரைக்கும் அப்பிடிதாங். டிக்கட்டு பதிவு பண்ணதல்லாம் கெடையாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்ம அப்பிடியில்லா. டிக்கட் முங்கூட்டியே ரிசர்வ் பண்ணியாவணும்! எனிவே ஒங்க கேஸ்ங்றது டிபரண்ட வே ஆப் டிராவல்லிங்!"ன்னாம் பாலாமணி.

            சாப்பாட்டு முடியுற வரைக்கும் சந்தானம் அத்தான் எதையும் பேசல. சாப்புட்டு முடிச்சி கைய அலம்பிட்டு உக்காந்திருக்குறப்பத்தாம் பேச ஆரம்பிச்சிது. "அப்புறம் வந்து மாப்ளே! கார் ன்னா ப்ராண்டுல வாங்கப் போறதா முடிவு பண்ணிருக்கீயே?"ன்னு நேரடியாவே பேச்ச எடுத்துச்சு. பாலாமணியோட மொகம் வெளிறிப் போயிடுச்சு. அந்த வெளிறிப் போனது கொஞ்ச நேரந்தாம். சட்டுன்னு, "கார்ரு வாங்குற காசிய ஆட்டையப் போட்டாப்புலல்லா கேக்குதீயே?"ன்னாம் சட்டுன்னு மொகம் செவந்துப் போயி.

            சந்தானம் அத்தான் சிரிச்சிது. "தப்பா நெனைக்காதீயே மாப்ளே! நாம்ம மின்னாடி வேகன் ஆர் வெச்சிருந்தேம். இப்போ மாருதி ஸ்விப்ட் டிசையர் வெச்சிருக்கேம். நாம்ம எப்பவும் மாருதி புராடக்ட்தாம். அது மாதிரிக்கி மாப்புள்ளையோட டேஸ்ட் என்னாங்றதெ தெரிஞ்சிக்கிடலாம்ன்னு கேட்டேம்."ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ஓ! அப்பிடியே கேக்குதீயளா? ஆல்வேஸ் டோயட்டோ. இன்னோவாதாம் நம்ம சாய்ஸ்! பெட்ரோல்தாம் பன்னெண்டு தாண்டற ஒரு மாடல் செலக்ட் பண்ணிருக்கேம். கொடுத்தது பத்துதானே. அதாங் அப்பிடியே வெச்சிருக்கேம். பட் இப்போ நெனைப்பு வேற மாதிரிக்கிப் போவுது. அதுக்கு ஏம் கார்ர வாங்கணும்? ஒரு எடத்தெ வாங்கிப் போட்டுப்புடலாம்ன்னு. அதுலயும் பாருங்க குவார்ட்டர்ஸ் கொடுத்துட்டா எல்லா ஸ்பெசிலிட்டியும் வந்துடும். பணத்தெ பத்திரமா பாங்கியில போட்டு வெச்சிருக்கேம். சந்தேகம்ன்னா பாங்கிக்கு வந்துப் பாத்துக்கிடலாம்!"ன்னாம் பாலாமணி சூடா.

            "சந்தேகம்லாம் யில்ல மாப்ளே! நாம்ம கார்ல போயிட்டு இருக்குற ஆளா. அதாங் தெரிஞ்சிக்கிடணும்ன்னு ஆசெ. நாமாளும் ஒஞ்ஞ அனுபவத்தெ வெச்சி மாருதியிலயே இருக்கலாமா? டயோட்டாவுக்கு மாறலாமான்னு ஒரு நெனைப்புத்தாங். வேற ஒண்ணுமில்ல. வாங்குன்னா கட்டாயம் நாம்ம ஒரு டிரைவ் பண்ணிப் பாக்கணும். எக்ஸ்பீரியன்ஸ் எப்பிடி இருக்கும்ன்னு பாக்கணுமில்லா. பெறவு ப்ளாட் வாங்குறதன்னாலும் சொல்லுங்க. நமக்குத் தெரிஞ்ச எடத்துல சொல்லி வுடுறேம். சென்னையில நமக்கு எல்லா எடமும் அத்துப்படி! சீப் ரேட்டுல அடிக்கலாம். திருவேற்காடுன்னா எப்ப வாணாலும் வாங்கலாம். அஞ்ஞ நம்ம தம்பியோ எல்லாத்துக்கும் எடத்தெ வாங்கிக் கொடுத்தது நாம்மதாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ப்ளாட் இஞ்ஞயில்ல. பாக்குக்கோட்டையில. அஞ்ஞ ஒஞ்ஞளால முடியுமா?"ன்னாம் பாலாமணி குத்தி வுடுறாப்புல.

            "வேல இஞ்ஞத்தானே? பெறவு அஞ்ஞ எடத்தெ வாங்கிட்டு?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "இஞ்ஞ எப்பிடியும் கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்ஸ கலியாணம் ஆனதெ ஒரு சாக்கா வெச்சிப் பிடிச்சிடுவேம். ரண்டு மூணு மாசம் இஞ்ஞ இருந்தா அதிகம். மினிஸ்டர் பூவலிங்கம் தெரிஞ்சவர்தாம். அவர்ரப் போயி ஒரு தவா பாத்தேம்ன்னா விசயம் முடிஞ்சிடுச்சு. அவருக்கு ட்ரீட்மெண்டு நாம்மத்தாம்! சுகரு, பிரஸ்ஸருன்னு ஏகப்பட்ட வெசயத்துல அவ்திப்படுறாரு மனுஷம். நம்மகிட்டெயிருந்து ஒரு வாரத்துக்கு மருந்துப் போவலன்னா ஆளு துடிச்சிப் போயிடுவாரு. கலியாண‍ வேலையில கூட அவருக்கு மருந்தெ அனுப்பிச்சிட்டுதாம் மறுவேல பாத்தேம். மேரேஜ்க்குக் கூட வாரணும்ன்னு பிரியப்பட்டாரு. கடெசீ நேரத்துல வேற சில அப்பாய்ன்மெண்ட்ஸ் ஆயிப் போனதால முடியாமப் போயிட்டு!"ன்னாம் பாலாமணி.

            பேச்சு எங்கயோ ஆரம்பிச்சி, எங்கயோ போறதெ புரிஞ்சிக்கிட்டு சந்தானம் அத்தான், "செரி நமக்குக் கொஞ்சம் சைட்டப் பாக்குற வேல இருக்கு. நாம்ம கெளம்பட்டுமா மாப்ளே! மாமா கெளம்புறேம். பயலுக்குப் போன் அடிச்சின்னா வந்து அழைச்சிட்டுப் போயிடுவாம்!"ன்னுச்சு. சந்தானம் அத்தான் கெளம்ப செய்யு போயி கேட்டுகளத் தொறந்து விட்டுட்டுப் பூட்டிட்டு மேல வந்தா.

            மேல வந்த செய்யுகிட்டெ, "இந்தாரு செய்யு! இனுமே கார்ரப் பத்தி ஒஞ்ஞ வூட்டுலேந்து யாரும் நம்மள ஒரு வார்த்தெ கேக்கப்படாது. அப்பிடி கேக்குறதா யிருந்தா யிப்பவே சொல்லிடணும். ஒடனேப் போயி பணத்தெ எடுத்தாந்து மூஞ்சியில விசிறியடிச்சிடுவேம். நம்மளப் பாத்தா டாக்கடர்ரா தெரியுதா? ப்ராடு போல தெரியுதா? என்னவோ செஞ்சேம் செஞ்சேம்ன்னு சொல்லிக்காட்டிட்டு அசிங்கப்படுத்திட்டு இருக்கக் கூடாது! அதுக்குச் செய்யாமலே இருந்துக்கிடலாம். எடது கையி கொடுக்குறது வலது கையிக்குத் தெரியக் கூடாது. அதாங் செய்யுறது. நாம்ம கிளினிக் போவணும். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். போயி படுக்குறேம்! ஷார்ப்பா நாலுக்கு எழுப்பிடு. சில அரெஞ்மெண்ட்ஸ் பண்ணணும். பண்ணிட்டுதாங் கெளம்பணும்."ன்னு அறைக்குள்ளார கதவ்வப் படார்ன்னு சாத்திட்டுப் படுக்கப் போனாம் பாலாமணி.

            ஒரு அசாதாரண சூழ்நெல உருவானதுப் போல அந்த எடமெ இறுக்கமா இருந்துச்சு. யாரோட யாரு எப்பிடிப் பேசுறதுன்னு ஒரு அஞ்சு நிமிஷத்துக்குப் புரியல. செய்யுதாம் மெதுவா ஆரம்பிச்சா, "யிப்ப யாம்பா சந்தானம் அத்தான் கார்ரப் பத்தி ஆரம்பிச்சிது? வந்தம்மா, சாப்புட்டம்மான்னு போவ வேண்டித்தானே? அதெ ஏம் மத்தியானச் சாப்பாட்டுக்குக் கூப்டேம்ன்னு ஆச்சு! யிப்போ எப்பிடியாச்சுன்னா நீஞ்ஞ கேட்கச் சொல்லி அத்துக் கேட்டாப்புல ஆச்சுப் பாருங்க. என்னவோ நீஞ்ஞ அத்து வூட்டுக்குத்தாம் போவணும் போவணுங்றீயே? அத்து வேற அவுங்களுக்குக் கோவமா இருக்கு!"ன்னு சொல்லிட்டு அறைக்கு உள்ளாரப் போனா. அறைக்குள்ள பாலாமணியும், செய்யுவும் பேசிட்டு இருக்குறது கேட்டுச்சு. பாலாமணி பேச்சுல சூடு கொறையல.

            "ஒரு டாக்கடர்ட்ட எப்பிடிப் பேசணும்ன்னு தெரியணும்! இந்தக் கேள்விய ஒம் அண்ணங் கேக்கலாம் மச்சாங்ற மொறையில. ஏம் ஒம் யப்பா கூட கேக்கலாம். மாமாங்ற மொறையில. ஒம் யம்மா கூட கேக்கலாம் யக்காங்ற மொறையில. அவனுக்குக் கேக்க ன்னா ரைட்ஸ் இருக்கு? ஹூ இஸ் ஹீ? ன்னா படிச்சிருக்காம் அவ்வேம்? படிக்காதப் பயதானே அவ்வேம். கேள்விப்பட்டெம். கான்ட்ராக்ட் எடுத்துக் கொள்ளையடிச்சிட்டுச் சம்பாதிச்சிட்டு இருக்காம்ன்னு. மினிஸ்டர் பூவலிங்கத்தப் பாக்குறப்ப சொன்னேம்ன்னா வெச்சுக்கோ அவ்வேம் சென்னையிலயே இருக்க முடியாது. கோவணம் வரைக்கும் அவுத்துட்டு சிட்டிக்கு அவுட்டர்ல அடிச்சி வுட்டுடுவேம். என்னவோ ஒரு புல்லட்டும், கார்ரும் வெச்சிட்டா பெரிய புடுங்கியா அவ்வேம்? பெரிய மசுரு மாதிரிக் கேக்குதாம்? அந்தப் பயெ இனுமே இந்த வூட்டுப் பக்கம் அடியெடுத்து வெச்சாம் நாம்ம செருப்ப எடுக்கக் கூட தயங்க மாட்டேம்!"ன்னாம் பாலாமணி. அவ்வேம் பேசுறது அப்பிடியே வெளியில சன்னமா கேட்டுச்சு.

            "மெதுவா பேசுங்க. வெளியில கூடத்துல யப்பா, யம்மா, யண்ணன், யண்ணில்லாம் இருக்காங்க. யிப்போ ன்னா ஆயிடுச்சு? நீஞ்ஞ சொல்லுறாப்புல யம்மா, யப்பா, யண்ணன்ல யாரு கேட்டா? யாரும் கேக்கலல்ல. சொந்தக்காரவுங்கன்னா நாலு பேத்து நாலு வெதமாத்தாம் பேசுவாங்க. அதுக்குப் போயிக் கோவப்பட்டா எப்பிடிங்க?"ன்னு செய்யு பேசுறதும் மெதுவா கூடத்துக்குக் கேட்டுச்சு.

            "டென்ஷன் பண்ணிட்டாம். ஹேப்பியான மூடுல்ல வந்தேங்றேம். அதெ குழி தோண்டிப் பொதைச்சட்டாம் ராஸ்கல். எஞ்ஞச் சாப்பாடு போடுறதுன்னு சொன்னாலும் பிச்சக்கார பயெ மாதிரி வந்துப்புடுவானா செம்புநக்கி? கூடத்துலயே வுட்டுப் பேத்து எடுத்திருப்பேம்! போனா போவுதுன்னுத்தாம் வுட்டேம்! பாஸ்டர்டு!"ன்னாம் பாலாமணி இன்னும் சூடு கொறையாமா.

            "நாம்ம இதெப் பத்திப் பேசுறேம். அதாச்சி இனுமே இதெப் பத்தி யாரும் எதையும் பேயக் கூடாதுன்னு. நீஞ்ஞ கோவப்படுற அளவுக்கு ஒண்ணும் நடக்கல! படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. கிளினிக் வேற போவணும்ங்றீயளே? குடி வந்து ரண்டு நாளு கூட ஆவலே. ஒரு வாரம் போயித்தாம் போனான்னா? நமக்கும் ஒரு தொணை வேணும்லா எடம் புரியுறதுக்கும், பழகுறதுக்கும்!"ன்னு செய்யு கேக்குறதும் கூடத்துக்குக் கேட்டுச்சு.

            "நோ! நோ! கட்டாயம் போயி ஆவணும். அதெ தடுக்காதே. நமக்குக் கெட்ட கோவம் வந்துப்புடும்!"ங்றாம் பாலாமணி.

            "யிப்போ வந்ததெ வுடவா?"ன்னு சொல்லிச் சிரிக்கிறா செய்யு. கொஞ்சம் பேச்சோட சூடு தணிஞ்சாப்புல இருந்துச்சு.

            இருந்தாலும் என்னடா இப்பிடியாச்சுங்ற மாதிரி சுப்பு வாத்தியாரு விகடுவெப் பாத்தாரு. அமைதியா இருங்ற மாதிரி விகடு சுப்பு வாத்தியார்ரப் பாத்தாம். வெங்குவுக்கு ஒண்ணும் புரிஞ்சிக்க முடியல. வறண்டு போனாப்புல ஒரு சிரிப்பெ சிரிச்சிது. ஆயி பவ்வுப் பாப்பாவத் தூக்கி இறுக்கி அணைச்சுக்கிட்டா.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...