17 Sept 2020

ஒரு பொழுது கழிகிறது!

ஒரு பொழுது கழிகிறது!

செய்யு - 567

            பாலாமணி வந்த உக்காந்த ஒடனே விகடுவப் பாத்தாம். ஆளெ காங்கலங்ற ஒடனே சுத்திலும் ஒரு பார்வெ பாத்தவேம், பக்கத்துல வெசாரிச்சாம். ஒடனே வெளியில வந்துப் பாத்தாம். தூரத்துல ஒரு மரத்தடியில நின்னுகிட்டு இருந்தாம் விகடு. பாலாமணி வேகமா நடந்து வந்தாம். "ஏம் மச்சாம் வெளியில வந்தாச்சு?"ன்னாம். விகடு பதில் ஒண்ணும் சொல்லல. பொம்பளைப் புள்ளைங்க அழுதுட்டுப் போனது அவனோட மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. அதெப் புரிஞ்சிக்கிட்டவேம் மாதிரிக்கி, "அவளுகல்லாம் அப்பிடித்தாம். நடிப்பாளுவோ! நாளைலேந்து ஒழுங்கா இருப்பாளுவோ. மச்சானுக்கு இதெப் பத்தில்லாம் புரியாது. நாம்ம நம்ம கடமெயெச் செஞ்சேம். தட்ஸ் ஆல்! இதெப் பத்தி நெனைக்க ஒண்ணுமில்ல!" அப்பிடின்னாம். விகடுவோட கையப் பிடிச்சி உள்ளார அழைச்சாம்.

            "இனும இஞ்ச உக்கார வைக்கக் கூடாது!"ன்னு பக்கத்துல நின்ன ஒரு உதவியாள கூப்புட்டு, "ஒரு ஓபி சீட்டு போட்டு வா. பேரு விகடபாரதி!"ன்னாம். அந்த ஆளு கொஞ்ச நேரத்துல போயிட்டு வெளியில வந்தாம். அந்தச் சீட்ட வேக வேகமா வாங்கி மருந்துகளையும், சிகிச்சை மொறையையும் எழுதி, "அழைச்சிட்டுப் போங்க!"ன்னாம் கண்ணக் காட்டி. அந்த ஆளு அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல விகடுவெ கையோட அழைச்சிட்டுப் போனாம். விகடுகிட்டெ அவனுக்கு என்ன பண்ணுது? ஏது பண்ணுதுன்னு ஒரு கேள்வியும் கேக்கல பாலாமணி. பாலாமணியே உத்தேசமா பார்வையில புரிஞ்சிக்கிட்டு அவ்வேம் பாட்டுக்கு எழுதி அனுப்பி வுட்டாம்.

            விகடுவெ அழைச்சிட்டுப் போன உதவியாளு மருந்து கொடுக்குற எடத்துல மருந்தெ வாங்கிக்கிட்டாம். அடுத்ததா உள்நோயாளிங்க தங்கியிருக்குற எதுத்தாப்புல இருந்த கட்டடத்துக்கு அழைச்சிட்டுப் போனாம். பெரும்பாலான நோயாளிங்க வாதம் வந்து இழுத்துக்கிட்டுக் கெடந்தவங்களா இருந்தாங்க. ஒரு சில பேரு கையி, காலு வெளங்காதவங்களா கெடந்தாங்க. அந்தக் கட்டடத்துல நொழைஞ்சி வடவண்டையில கடைசியா இருக்குறப் பக்கத்துக்கு வந்தப்போ அங்க ரெண்டு மூணு பேரு நின்னாங்க. ரொம்ப முடியாதவங்க சக்கர நாற்காலியில உக்காந்திருந்தாங்க. ரண்டு பேரு சிகிச்சையில இருந்தாங்க. அதுதாங் ஆயுர்வேத சிசிக்சைக் கொடுக்குறதுக்கான எடம் போலருக்கு.

            ஒரு பக்கத்துல வெந்நித் தண்ணிக் கொதிச்சிக்கிட்டு இருந்துச்சு. இன்னொரு பக்கத்துல மூலிகெ வாசம் வர்றாப்புல எல, தழைகளப் போட்டுக் காய்ச்சிக்கிட்டு இருந்தாங்க. ரண்டு பேருக்கு அப்போ சிகிச்சை நடந்துகிட்டு இருந்துச்சு. அதுல ஒருத்தரு உக்காந்திருந்தாரு. அவருக்கு தலையில எதையோ எண்ணெயத் தடவி கழுத்துல ஒத்தடம் கொடுக்குறாப்புல எதையோ செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. இன்னொருத்தர்ர ஜட்டியோட படுக்க வெச்சி அவரு மேல ஒத்தடம் கொடுக்குறாப்புல கொதிக்கிற கஞ்சிலேந்து துணியில என்னவோ வெச்சிக் கட்டிருந்த முடிச்ச எடுத்து எடுத்து வெச்சிட்டு இருந்தாரு சிகிச்சை கொடுக்குற ஆளு. மல்லாக்கப் படுத்திருந்தவரோட உடம்பு முழுக்க ஒத்தடம் முடிஞ்சதும் அவரு, "ம்!"ன்னாரு. நடுத்தர வயசுள்ள பொம்முனாட்டி ஒருத்தவங்க கால பிடிச்சிக்க, சிகிச்சை கொடுத்த ஆளு தோள்பட்டைய புடிச்சிக்க அப்பிடியே குப்புறப் போட்டாங்க கவுத்து. அந்தக் கஞ்சி ஒத்தடம் அப்பிடியே பின்னாடி நடந்துச்சு. அது முடிஞ்சதும் ரெண்டு பேருமா சேந்து அவர்ர அந்த எடத்துலேந்து எறக்கி கீழே உக்கார வெச்சாங்க.

            பக்கத்துலயே வெந்நித் தண்ணி கொதிச்சிக்கிட்டு இருந்துச்சு. அதுலேந்து வெந்நித் தண்ணிய எடுத்து பக்கத்துல இருந்த பாத்திரத்துல கொஞ்சம் பச்ச தண்ணி வுட்டுக் கலந்து எதமா இருக்குதான்னு பாத்துட்டு அந்த பொம்முனாட்டி அவரு மேல தண்ணிய ஊத்திக் குளிப்பாட்டு வுட்டுச்சு. அவரு மேல தண்ணிய ஊத்துனப்போ அந்த ஆளு மேல ஆவிப் பறந்துச்சு. சூடு கடுமையான சூடா இருக்கணும். அந்த ஆளுக்கு கையி கால அசைக்க முடியல. அந்த பொம்முனாட்டித்தாம் அவரு மேல கைய வெச்சித் தேய்ச்சு வுட்டுச்சு. விகடு அதெயேப் பாத்துட்டு இருந்ததப் பாத்து அந்த பொம்முனாட்டிப் பேசுனுச்சு, "வாதம் வந்து இழுத்துக்கிட்டு. செங்கல்லு சூளையில வேல. மாடு போல ஒழைச்சவரு. கையி, காலு முடியலன்னதும் ரண்டாயிரத்தெக் கொடுத்து கழட்டி வுட்டுப்புட்டாங்க. நெலகெட்டு நின்னேம். இஞ்ஞ வந்தா கொணம் காணும்ன்னு சொன்னாங்க. வந்து ரண்டு வாரத்துக்கு மேல ஆவுது. கொஞ்சம் பரவால்ல. இன்னும் கொஞ்சம் நாளு ஆனா கையில காலு அசைக்க முடியும்ங்றாங்க. அதெயுந்தாம் பாக்கணும்!"ன்னுச்சு அந்தப் பொம்முனாட்டி. அதுப் பேசுனதெ வெச்சுப் பாத்துப்ப அந்த பொம்னாட்டித்தாம் அந்த ஆளோட பொண்டாட்டியா இருக்கணும்ன்னு தோணுச்சு.

            விகடு ஆறுதலா பாத்துட்டு இருந்ததெப் பாத்து அந்தப் பொம்முனாட்டி மேலும் பேசுனுச்சு. "பாக்குறதுக்கு ஆளு கெடையாது. அவருக்கு நாம்ம, நமக்கு அவரு. கொழந்தைக் குட்டியும் கெடையாது. என்னவோ ஆண்டவேம் இப்பிடிச் சோதிக்கிறாம். இவர்ரக் கொண்டு போயி பெட்ல போட்டேம்ன்னா, ஆஸ்பிட்டலுக்கு வெளியில ஒரு ஓட்டல் கடை இருக்கு. அஞ்ஞப் போயி வேல. பாத்திர பண்டம் கழுவுவேம். தண்ணித் தூக்கிப் போயி ஊத்துவேம். எலைய எடுத்துப் போடுவேம். சொல்ற வேலையெல்லாம் செய்வேம். எப்பப் போனாலும் சாப்புட்டுக்கலாம். ஒரு நாளைக்கி நூத்தம்பவது ரூவா. அதெ வெச்சித்தாங் பொழப்பு ஓடிட்டு இருக்கு. கொஞ்சம் கையி, கால்ல அசைவு கண்டாலும் போதும் உக்கார வெச்சி ராசா மாதிரிக்கி வாழ வைப்பேம். எப்பிடி ஒழைச்ச கட்‍டெ தெரியுமாங்க!"ன்னுச்சு அந்தப் பொம்முனாட்டி. அதெ சொல்லுறப்ப அதோட கண்ணுல தண்ணியா ஊத்துனுச்சு. அதெ தொடைச்சிக்கிட்டெ புருஷனையும் தொடைச்சி வுட்டு, கைத்தாங்கலா சக்கர நாற்காலியில உக்கார வெச்சி தள்ளிட்டுப் போனுச்சு.

            போறப்ப, "யாருகிட்டெயும் எங் கதெயெச் சொன்னதில்ல. என்னவோ சொல்லணும்ன்னு போல தோணுச்சு. தப்பா நெனைச்சுக்காதீயே!"ன்னுச்சு அந்தப் பொம்முனாட்டி. அப்பிடில்லாம் இல்லங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டுனாம் விகடு. போறப்ப அந்த பொம்முனாட்டி இருவது ரூவாய ஒத்தடம் கொடுத்து சிகிச்சை பணணி வுட்ட ஆளுக்குக் கொடுத்துச்சு. அவ்வேம் அதெ கொஞ்சம் சலிச்சாப்புல வாங்கிக்கிட்டாம். "நவ்ரா அரிசியாக்கும். அதோட கஞ்சியாக்கும். ரொம்ப காஸ்ட்லி. நாளையிலேந்து இருவதெ முப்பதா ஆக்கிப்புடணும். ல்லன்னா அரிசியக் கொறைச்சிடுவேம்!"ன்னாம்.

            "எல்லா கேஸூம் முடிஞ்சிடுச்சு. இன்னும் ரண்டுதாங் பாக்கி. இப்போ ஒண்ணு சேந்திருக்கு!"ன்னாம் இப்போ அந்த சிகிச்சை பண்ண ஆளு விகடுவெப் பாத்ததும்.

            "பாலாமணி டாக்கடருக்குச் சொந்தம். பாத்துக்கிறீயா? நமக்கு அடுத்த பிளாக்குல கொஞ்சம் வேல இருக்கு! பண்ண வேண்டிய வெவரம் இந்தச் சீட்டுல இருக்கு!"ன்னாம் விகடுவெ அழைச்சிட்டு வந்த ஆளு. சிசிக்சை பண்ணுற ஆளு அந்தச் சீட்டெ வாங்கிப் பாத்தாம். "டாக்கடர்ரு அனுப்பி வெச்ச ஆளுங்றீயே. ஒடனே பாத்துடுறேம்!"ன்னாம்.

            "யில்ல! நாம்ம வரிசையா பாத்துக்கிறேம். இப்பிடி உக்காந்திருக்கேம். மொற வர்றப்போ கூப்புடுங்க!"ன்னாம் விகடு.

            "ம்ஹூக்கும்! அந்த டாக்கடர்ரு வந்தா நைய்யி நைய்யின்னுச் சத்தம் வைப்பாம். ஓப்பி முடியுற நேரம். சரியா வர்ற நேரம். ஏறி உக்காரு சாரு நீயி! அந்தப் பொம்பள யாருட்டேயும் ஒரு வார்த்தெ பேசாது. என்னவோ ஒன்னயப் பாத்த ஒடனே சொந்தப் புராணத்தெ அவுத்து வுடுதே!"ன்னாம் சிசிக்சை பண்ணுற அந்த ஆளு ரண்டு தெனசரி தாள ஸ்ட்ரெட்சர் மாதிரி இருந்த அந்த மேடையிலப் போட்டுட்டு. ஒண்ணும் சொல்ல முடியாம விகடு அது மேல ஏறி உக்காந்தாம்.

            "சட்டையக் கழட்டு சாரு!"ன்னாம் அந்த ஆளு. விகடு சட்டையைக் கழட்டுனாம். தலை முழுக்க கற்பூரு வாடை அடிக்கிற எண்ணெய்ய வெச்சி நல்லா தேய்ச்சி வுட்டாம். அப்பிடியே தலையில அஞ்சு நிமிஷத்துக்கு மேல மசாஜ் பண்ணிட்டெ இருந்தாம். பெறவு என்னத்தையோ சூடு பண்ணி புகைய உண்டாக்கி அதெ நல்லா உள்ள இழுத்து சளி வந்தா ஓரமா இந்த டப்புல துப்புன்னாம். விகடு அதெப் போலச் செஞ்சாம். நெடி ஏறுறாப்புல இருந்துச்சு. அதெ தொடந்தாப்புல காய்ஞ்சுப் போன எலைகளா இருந்ததா சுருட்டி அதெ கொளுத்தி வெச்சி அதுலேந்து வர்ற புகைய உள்ளார இழுக்கச் சொன்னாம். இப்பிடியே அதெ மூணு நாலு மொறை செய்யச் சொன்னாம்.

            "யிப்போ மூக்கு எப்பிடிச் சாரு இருக்கு?"ன்னாம் அந்த ஆளு.

            "பரவால்ல!"ன்னாம் விகடு.

            "எழும்பி அந்தாண்டப் போயி உக்காரு சாரு! டாக்கடர்ரு கேட்டாக்க ந்நல்லா பண்ணி வுட்டதா சொல்லு! காசி யிருந்தா இருவது கொடு. டாக்கடர்ட்ட சொல்லிப் புடாதே. மருந்துல்லாம் ந்நல்லா போட்டு செஞ்சி விட்டுருக்கேம்."ன்னாம் அந்த ஆளு.

            விகடு எழுந்திரிச்சிப் போயி கழட்டி வெச்ச சட்டையில இருந்த பையிலேந்து இருவது ரூவாய எடுத்துக் கொடுத்தாம். அதெ வாங்கிட்டு, "தேங்ஸ் சாரு! இப்பிடியே இந்த வழியே நேரா போயி கொஞ்சம் குறுக்க திரும்புனா வெளியில போயிடலாம். போறீயா சாரு? யில்ல ஒன்னய அழைச்சாந்து வுட்ட ஆளு வர்ற வரைக்கும் உக்காந்திருக்கீயா?"ன்னாம் அந்த ஆளு.

            "நாம்ம கெளம்புறேம்!"ன்னு அந்த ஆளு காட்டி வுட்ட வழியா வெளியில வந்தாம் விகடு. கொஞ்சம் குறுக்க திரும்பி நேரா பாலாமணி உக்காந்திருக்குற எடத்துக்கு வந்தாம். பாலாமணி எல்லாம் பாத்து முடிச்சிட்டுச் சரியா வெளியில வந்தாம். விகடுவெப் பாத்ததும், "நாம்ம கூட அனுப்பி வுட்ட ஆளு எஞ்ஞ?"ன்னாம். விகடு ரொம்ப சாமர்த்தியமா, "இஞ்ஞ அழைச்சாந்து வுட்டுப்புட்டு, யாரோ கூப்புட்டாங்கன்னு போனாப்புல!"ன்னாம் விகடு.

            "ரொம்ப நல்ல பையேம். அவ்வேம் ஆயுர்வேதா கெடையாது. சித்தாவுல இருக்குறவேம். அடிக்கடி நம்மகிட்டெ வந்துடுவாம். நம்ம கிளினிக்லயும் வந்து வேல பாப்பாம். சொன்னதெல்லாம் கேப்பாம். அது இருக்கட்டும். ட்ரீட்மெண்ட்லாம் எப்பிடி இருந்துச்சு? யிப்போ சுவாசம் எப்பிடி இருக்கு?"ன்னாம் பாலாமணி.

            "ந்நல்லா இருக்கு!"ன்னாம் விகடு.

            "தட்ஸ் ஆயுர்வேதா! வாங்களாம் மச்சாம்! உள்ளார ஒரு பார்வெ பாத்துட்டு வந்துடலாம்!"ன்னாம் பாலாமணி. செரின்னு தலையாட்டிட்டுக் கெளம்புனாம் விகடு. போறப்ப பாலாமணி கேட்டாம், "உள்ள எதாச்சும் பணம் கேட்டானுவோளா?"ன்னு. விகடு இல்லங்ற மாதிரி தலையாட்டுனாம்.

            "நம்ம கேஸூன்னாவோ, நாம்ம இருக்குறேம்ன்னு தெரிஞ்சாவோ கேக்க மாட்டானுவோ. நாம்ம ல்லன்னா பணத்தெ உறிஞ்சி அள்ளிடுவானுவோ. கொஞ்சம் மெரட்டித்தாம் வெச்சிருக்கேம். இருந்தாலும் லாலு மாமாவுக்கு இஞ்ஞ ஒரு டிரீட்மெண்ட் கொடுத்தப்போ அத்து நூத்து ரூவாயத் தூக்கிக் கொடுத்திருக்கு. ஒண்ணுஞ் சொல்ல முடியல. கேட்டாக்கா மெனக்கெட்டு வேல செஞ்சிருக்காம்டா போடாங்குது. நமக்கு செமத்தியான கோவம். மாமான்னு கூட பாக்காம திட்டி வுட்டுப்புட்டேம். அவ்வேம் ச்சும்மாவா வேல பாக்குறாம்? அவ்வேம் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா மயக்கம் போட்டு வுழுவ வேண்டியதுதாங்!"ன்னாம் பாலாமணி. விகடு எதையும் சொல்லாம கேட்டுகிட்டெ வந்தாம். விகடு ஏற்கனவே பாத்துட்டுப் போன எடங்கத்தாம். பாலாமணி உள்ளார கேஸ் ஹிஸ்டரியப் பாத்து ஏதோ எழுதிக் கொடுத்தாம். சில பேத்த வெசாரிச்சாம். சில பேத்து அவனெ கைய எடுத்துக் கும்புட்டுச்சுங்க.

            "நாம்ம இருக்குற வரைக்கும் இன்பேஷண்ட் வார்டு புல்லா இருக்கும். கலியாணத்துக்குன்னு கொஞ்ச நாளு எம்மெல் அடிச்சேன்னா கொறைஞ்சிடுச்சு. எல்லாத்தையும் ஒப்பீயிலேயே பாத்து அனுப்பிச்சிடலாம்ன்னு நெனைக்குறாங்க. நமக்கு அப்பிடிக் கெடையாது, கவர்மெண்ட் கொடுக்குற காசிய புல்லா யுடிலைஸ் பண்ணணும். நாலு ஏழைக் குடும்பங்க நல்ல வெதமா இருந்துட்டுப் போவுது. இஞ்ஞ இருக்குற அத்தனெ கேஸ்லயும் நைன்ட்டி பர்சென்ட் நாம்மளா தேடித் தேடிச் சேத்ததுதாம்! வந்துட்டேம்ல. இனுமே இதெ நெரம்பி வழிய வெச்சிட்டுத்தாங் வேல."ன்னாம் பாலாமணி. அப்போ அவ்வேம் மொகத்துல ஒரு பெருமிதம் மின்னி மறைஞ்சது. அதெ அப்பிடியேப் பாத்துட்டு சிகிச்சை நடக்குற வடவண்டைப் பக்கமா வந்தப்போ அங்க யாரும் இல்ல. கிட்டதட்ட வேல முடிஞ்சிருந்துச்சு.

            "நாம்ம அஞ்ஞ லோடு பண்ண பண்ண, இஞ்ஞ வேல அதிகமாயிட்டெ இருக்கும். அதால இஞ்ஞ இருக்குறப் பயலுவோளுக்கு நம்மள பிடிக்காது. பட், அதுக்குத்தானே ஆஸ்பிட்டல்! சித்தெ மின்னாடித்தாம் செய்யு போன அடிச்சா! சாப்பாட்டு தயாருன்னு! கெளம்பிடுவமா?"ன்னு சொல்லிச் சிரிச்சாம். ம்ங்ற மாதிரிக்கித் தலையாட்டுனாம் விகடு.

            இப்போ நேரம் மத்தியானத்தெ நெருங்கியிருந்துச்சு. பாலாமணி சுசூகி அக்செஸ்ஸ ஸ்டார்ட் பண்ணி விகடுவெ ஏத்திக்கிட்டாம். நேரா வூட்டுப்பக்கம் போவாம எடது பக்கமா ஒடிச்சி கடைத்தெரு பக்கமா போனாம். சம்பந்தம் இல்லாம எங்கப் போறாம்ன்னு விகடு முழிக்கிறதுக்குள்ள, "வூட்டுக்குக் கொஞ்சம் பினாயிலு, டாய்லெட் சாமானுங்க வாங்கணும். வாங்கிட்டுப் போயிடலாம்ல!"ன்னாம் பாலாமணி.

            சைதாப்பேட்டை ரோட்டுல நேராப் போயி ஒரு யுடர்ன் அடிச்சாம். ஹார்ட்வேர்ஸ் கடையப் போல இருந்த பெரிய கடையில நிறுத்தி சாமானுங்களச் வேக வேகமா சொன்னாம். அவ்வேம் கையில ஒரு லிஸ்ட் இருந்துச்சு. ஏற்கனவே உக்காந்து எழுதியிருப்பாம் போல. அவ்வேம் சொல்ல சொல்ல கடையில வேலப் பாத்தப் பொண்ணு வேக வேகமா எடுத்து பில்லப் போட்டு ரூவாயச் சொன்னுச்சு. பாலாமணி கடையோட மொதலாளி போல ஓரத்துல உக்காந்திருந்த ஆளுகிட்டெ பணத்தெ கொடுத்தாம். அந்தப் பொண்ணு ரூவாயச் சத்தமா சொன்னுச்சு. செரிங்ற மாதிரிக்கி மொதலாளி தலைய ஆட்டுனதும், அந்த கடைக்காரப் பொண்ணு ஒரு பாலிதீன் பையில எல்லாத்தையும் போட்டு பாலாமணி கையில கொடுத்துச்சு. பாலாமணி அதெ வாங்கியாந்து வண்டிக்கு மின்னாடி மாட்டுனாம். விகடு பின்னால வந்து ஏறுனாம்.

            "வழியில எவ்ளவோ கடையிருக்க இஞ்ஞ வந்து ஏம் வாங்குனேம்ன்னு மச்சானுக்கு ஒரு கேள்வி இருக்குல்லா?"ன்னாம் பாலாமணி.

            அந்தக் கேள்விக்கு என்னத்தெ பதிலச் சொல்றதுங்ற மாதிரி விகடு பேயாம உக்காந்திருந்தாம். "ஒன் நைஸ் ரீசன்! ஹோல்சேல் ரேட்டுக்கு சில்லரை ஐட்டத்துக்கும் வெல போடுவாங்க. வேற எங்கயும் அப்பிடிக் கெடையாது. ஒவ்வொரு சாமானுங்களையும் எங்க வாங்கணும்ன்னு கண்டுபிடிச்சி வெச்சிருக்கேம். ஒரே பொருள்தாம் எங்க வாங்குனாலும். நாம்ம கண்டுபிடிச்சி வெச்சிருக்குற கடையில வாங்குறப்போ வெல கம்மியாகும்!"ன்னு சொல்லிச் சிரிச்சாம் பாலாமணி.

            டாய்லெட்டு கழுவுற பிரஸ்ஸூங்க, பினாயிலு பாட்டிலுங்க இதெ வாங்குறதுக்கு கிட்டதட்ட ரண்டு மூணு கிலோ மீட்டராவது இருக்கும், அவ்வளவு தூரம் வந்து, அதே தூரம் அரும்பாக்கத்துக்குத் திரும்புனாம் பாலாமணி. அரும்பாக்கத்தெ நெருங்கறப்புவே விகடுகிட்டெ, "செய்யுவுக்குப் போன அடிங்க மச்சாம்! போயி நிக்குறப்ப செரியா கேட்ட தொறந்துகிட்டு நிக்கணும். ஒரு செகண்ட் கூட வெயிட்டிங்ல வேஸ்ட் ஆவக் கூடாது!"ன்னாம் பாலாமணி.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...