24 Sept 2020

மெலிஞ்சிப் போயி வந்தப் பொண்ணு!

மெலிஞ்சிப் போயி வந்தப் பொண்ணு!

செய்யு - 574

            திருமாங்கல்யத்தோட கட்டுற தாலியில தாலிகுண்டு, காசு, மாங்கா, குழாய் கோத்து கட்டுன தாலியப் பெருக்கிப் போடுறது ஒரு சடங்கு. கலியாணத்துக்குக் கட்டுன பட்டத்துல காசு, மாங்கான்னு பவுன்ல நகெ சேந்திருக்கும். அதெ அப்பிடியே கோத்துப் போட்டும் தாலி பெருக்கிப் போடுறதெ செய்யுறதும் உண்டு. அதெ உருக்கி தாலி குண்டாவும், காசாவும், மாங்காவாவும் மாத்திச் செஞ்சு கோத்துப் போடறதும் உண்டு. போதுமான அளவு காசோ, மாங்காவோ கலியாணத்துல ஒறவுகப் போடாம போயிடுற சந்தர்ப்பங்கள்ல நகெக் கடையில அதெ வாங்கியும் போட்டுக்கிறது உண்டு. சமீபமா மஞ்சக் கயித்துக்குப் பதிலா தங்கத்துல தாலி சரடு பண்ணி அதுல மஞ்சக் கயித்தெ முடிஞ்சி அத்தோட காசு, மாங்கா, குழாயின்னு சேத்து வசதிபட்டவங்க தாலி பெருக்கிப் போடுறதெ செய்யுறதையும் ஒரு வழக்கமாக்கிக் கொண்டாந்துட்டாங்க. தாலி கட்டுறப்ப திருமாங்கல்யத்தோட மட்டும் இருக்குற தாலி அதுக்குப் பெறவு காசு, மாங்கா, குழாய்ன்னு சேந்து பெருகுறதால தாலிபெருக்கிப் போடுறதுங்ற அந்தச் சடங்கோட பேரு ஒரு காரணப் பேருதாம்.

            கலியாணம் ஆவுற மாசத்துலயே அந்தச் சடங்க செய்யுறது உண்டு. அந்த மாசம் தப்புனா மூணாவது மாசம் செய்யுவாங்க. அதுக்குள்ள இந்தச் சடங்கெ எப்படியும் முடிச்சிடுவாங்க. தாலியக் கட்டுன பொண்ணு புள்ளதாச்சியா ஆனாக்கா அதெ செய்யக் கூடாதுன்னு ஒரு கணக்கு இருக்குறதால மொத மாசம் அல்லது மூணாவது மாசந்தாம் தாலியப் பெருக்கிக் போடுறதுக்கு உகந்த மாசங்க. தாலி கட்டுன பொண்ணு ஒருவேள மாசமா ஆவாம இருந்தா அஞ்சாவது மாசம் செய்யுறதும் உண்டு. அவவளவு நீட்டிச்சி பொதுவா யாரும் செய்யுறது இல்ல. இந்தச் சடங்க ஒருபோதும் ரட்டிச்ச மாசத்துல செய்ய மாட்டாங்க. அதாவது தாலி கட்டுன ரண்டாவது மாசம், நாலாவது மாசத்துல செய்ய மாட்டாங்க. அப்பிடிப் பண்ணக் கூடாதுன்னு ஒரு கணக்கையும் வெச்சிருக்காங்க.  

            வெங்குவுக்குத் தாலி கட்டுன ஐப்பசி மாசத்துலயே பொண்ணுக்குத் தாலி பெருக்கிப் போடுறதெ செஞ்சிடணும்ன்னு ஆசெ. அதுக்கேத்தாப்புல அத்து சரசு ஆத்தாவுக்குப் போன போட்டுக் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. அந்த மாசத்துலயே தாலியப் பெருக்கிப் போட்டுட்டா அத்து ஒரு வேல முடிஞ்சதோட, பொண்ணையும் ஒரு தவா பாத்துப்புடலாம்ன்னு நெனைச்சிது. தாலி பெருக்கிப் பொடுற சடங்குங்றது பொண்ணு வூட்டுல பண்ண வேண்டியது. அன்னிக்குப் பண்ணி ரா தங்காம மாப்புள வூட்டுக்கு அனுப்பிச்சிடுவாங்க. அதால பொண்ண அழைச்சியாந்தா பாக்குறதுக்கு அத்து ஒரு வாய்ப்பாவும் போயிடுது, தாலியப் பெருக்கிப் போட்டாப்புலயும் ஆயிடுதுங்றதால ஒரு கல்லுல வுழுவுற ரண்டு மாங்காவா அதெ வெங்கு நெனைச்சிச்சு. என்னத்ததாம் சென்னைப் பட்டணத்துக்குப் போயி குடித்தனம் வெச்சிட்டு வந்து பாத்து சில நாளுங்கத்தாம் ஆயிருந்தாலும் மறுபடியும் மவளெ பாக்கணுங்ற ஆசெய அதால கட்டுக்குள்ள கொண்டு வர்ற முடியல. அதுக்குத் தாலி பெருக்கிப் போடுறதெ ஒரு வாய்ப்பா பாத்துச்சு வெங்க.

            சரசு ஆத்தாகிட்டெ வெங்குக் கேட்டப்பல்லாம், "இப்பதாம்டி மவ்வேம் கலியாணத்துக்காக லீவுல்லாம் போட்டுட்டு வந்திருக்காம். ஒடனே மறுக்கா லீவு போட்டுட்டு வர்றதுங்றது முடியாதுங்காம். பொண்ணு மாப்புளன்னு ரண்டு பேத்தையும் வெச்சுல்லா அதெ செஞ்சாவணும். கொஞ்சம் பொறு நாம்ம கேட்டுட்டுச் சொல்லுதேம்!"ன்னு சொல்லிட்டே இருந்துச்சே தவுர வைக்குறதுக்கான தோதுபாடோட எதையும் சொல்லல. அதுக்குள்ள ஐப்பசி முடிஞ்சிப் போனதுதாம் மிச்சம். வெங்குவுக்கு அதெ பத்தி மனசுக்குள்ள வருத்தம்ன்னாலும் வெளியில சொல்லிக்கிடல. தெனமும் மவளோட சாயுங்காலம் ஆனாக்க ஒரு மணி நேரத்துக்கு மேல போனப் போட்டு பேசி மனசெ ஆத்திக்கிடுச்சு. அதுக்குன்னே விகடு பள்ளியோடம் விட்டு வந்ததும் மொத வேலையா போன எடுத்து அது பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிடும். அந்த நேரத்துல பாலாமணியும் கிளினிக்குக் கெளம்பிப் போயிடுறதால வெங்குவுக்குப் பேசுறது ரொம்பவே வசதியாப் போயிடுச்சு.

            ஐப்பசி மாசம் முடிஞ்சி கார்த்திகெ மாசத்துல ஒரு நாளு சரசு ஆத்தாவே போன அடிச்சி இந்த மாசத்துல வெச்சிக்கிடலாமான்னு கேட்டுச்சு. "ன்னா சின்னம்மா மொத மாசத்தெ வுட்டுப்புட்டு ரட்டிச்ச மாசத்துல வைக்குலாங்றீயே? அப்பிடி யாராச்சும் செய்வாங்களா? நாம்ம கேள்விப்பட்டதில்லையே. தள்ளிப் போனதுதாங் போச்சு. இந்த மாசத்தெ வுட்டு மூணாவது மாசத்துல பண்ணிப்புடலாமே!"ன்னுச்சு அதுக்கு வெங்கு.

            "தாலி பெருக்கிப் போடுறதுக்கு மாசக் கணக்கா பாப்பாவோ? நாளு கணக்குப் பாத்தாலே போதும்டி! மூணாவது மாசம்ன்னா மார்கழியா போவுது. அந்த மாசத்துல யாரு செய்யுவாங்க? ன்னான்னு சொல்லு. இதெ வுட்டா ஒங் கணக்குப்படியே அஞ்சாவது மாசத்துல வேணும்ன்னா செய்வேம். அவ்வேம் டாக்கடர்ரெ லீவு கெடைக்கலன்னு நிக்காம். இதுல இவ்வே ஒருத்தி மாசக் கணக்கப் பாத்துட்டு நிப்பீயா? ன்னா ஏத்துன்னு யோஜனெ பண்ணிச் சொல்லு!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "நமக்கென்ன சின்னம்மா தெரியும்? ஊரு ஒலகத்துல சொல்றதெ சொல்லுதேம். நீயி சித்தப்பாகிட்டெ கேட்டீயா? என்னத்தெ சொன்னுச்சு?"ன்னுச்சு வெங்கு.

            "அதுகிட்டெ கேக்காமலா சொல்லுவேம்? ஒஞ்ஞ சித்தப்பா சொன்னதுதாங். இந்த மாசத்துல முடிச்சிப்புடலாம்ன்னு. தோதா யிருந்த சொல்லு இந்த ஞாயித்துக் கெழமெ முடிச்சிப்புடலாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "இதுவும் ஞாயித்துக் கெழமதான்னா சின்னம்மா? பொண்ணு, மாப்புளப் பாத்தது, நிச்சயம் பண்ணது, கலியாணம் பண்ணதுன்னு எல்லாம் ஞாயித்துக் கெழமெ. இதுவும் ஞாயித்துக் கெழமெ! செரித்தாம் சின்னம்மா! செரிங் சின்னம்மா நாம்ம வூட்டுக்காரர்ட்டெயும் ஒரு வார்ததெ கேட்டுட்டுச் சொல்லுதேம்!"ன்னுச்சு வெங்கு.  எல்லாம் போன்லயே பேசி முடிஞ்சிது. அதுக்குப் பெறவு வெங்கு சுப்பு வாத்தியார்கிட்டெ இதெ பத்திக் கேட்டப்போ, "அவுங்க தோதுக்கே போயிடுறதுதாங் நல்லது! நாம்ம ஒண்ணு சொல்லி அவுக ஒண்ணு சொல்லி எல்லாம் தள்ளித் தள்ளிப் போயிட்டே இருக்கும். முடிவு அவுக முடிவாவே இருந்துடட்டும்!"ன்னுட்டாரு. செரின்னு சரசு ஆத்தா சொன்னபடியே செய்யுறதுன்னு முடிவு ஆனுச்சு. அதெ கேட்டுட்டு அன்னிக்கு ராத்திரியே வெங்கு சரசு ஆத்தாவுக்குப் போன்ல பேசுனுச்சு. "வூட்டுல பேசிட்டேம் சின்னம்மா! நீயி சொல்றபடிக்கே வெச்சிப்புடலாம்!"ன்னு.

            "அதுல பாருடி வெங்கு! ஞாயித்துக் கெழமெ உகந்தாப்புல இல்லியாம். திங்க கெழமெ வெச்சிக்கிடலாமாடி?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "நீயி சொல்ற நாளுதாங் சின்னம்மா! அன்னிக்கே வெச்சிப்புடுவேம். நாம்ம தெருவுல எல்லாத்துக்கும் சொல்லிப்புடுதேம். நீஞ்ஞ அஞ்ஞ பாக்குக்கோட்டையிலேந்து எத்தனெ பேத்து வர்றீயேன்னு சொல்லீட்டீன்னா அதுக்கு ஏத்தாப்புல ஏற்பாட்ட பண்ணிப்புடலாம்!"ன்னுச்சு வெங்கு.

            "நாம்ம இஞ்ஞ கூட்டத்தெ சேக்குறாப்புல இல்லிடியம்மா! நாமளும் அவரும் வந்துடுதேம். வடவாதியில சுந்தரி வூட்டுல, நீலு வூட்டுல மட்டும் கூப்பிட்டுக்கிடுவேம். பிந்துவக் கேட்டேம். அவ்வே இம்மாம் தூரம் வந்துட்டுத் திரும்பணும்ன்னு யோஜனெ பண்ணுறா?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "ஒம் இஷ்டப்படியே பண்ணிக்கிடலாம் சின்னம்மா!"ன்னுச்சு வெங்கு. இந்த யோசனைப்படி கார்த்திகெ மாசத்துல ரண்டாவது திங்க கெழமெ தாலி பெருக்கிப் போடுறதா முடிவானுச்சு. இதுக்குன்னு செய்யுவும், பாலாமணியும் பாக்குக்கோட்டைக்கு சனிக்கெழமெயே வந்துப்புடறதாவும், ஞாயித்துக் கெழமெ சுப்பு வாத்தியாரு கார்ர வெச்சி பொண்ணையும் மாப்புள்ளையையும் ‍அழைச்சிட்டு வந்துப்புடறதா திட்டம் பண்ணிக்கிட்டுப் பேசிக்கிட்டாங்க.

            அதுபடியே ஞாயித்துக் கெழமெ மத்தியானமா சாப்பாட்ட முடிச்சிக்கிட்டு சுப்பு வாத்தியாரு பொண்ண அழைச்சிட்டு வர்றதுக்காக வெங்குவோட பாக்குக்கோட்டைக்குப் போனாரு. மனசுல ரொம்ப சந்தோஷமாத்தாம் போனாரு. பொண்ணப் போயி பாக்குற வரைக்கும் அந்தச் சந்தோஷத்துக்கு எந்தக் கொறையும் யில்ல. பொண்ணப் பாத்தப் பெறவு அந்தச் சந்தோஷம் வடிஞ்சிப் போயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கு. வெங்குவுக்கு மவளப் பாக்கவ முடியல. நல்ல வனப்பா இருந்தவெ நெஞ்செலும்பு தெரியுற அளவுக்கு அந்த ஒண்ணரை மாசத்துக்குள்ள எளைச்சிருந்தா. மொகத்துல கலையே யில்லாம கவலெ படிஞ்சாப்புல இருந்தா.

            அதெப் பாத்து மொகம் மாறுனதப் பாத்துட்டு சரசு ஆத்தா பேசுனுச்சு. "அவளுக்கு ஒஞ்ஞ ஞாபவமாவே இருக்கும் போலருக்கு. அந்த நெனைப்புலயே சரியா சாப்புடுறதில்ல. தூங்றதில்ல. அப்பிடியே நையின்னுப் போயிட்டா. நாம்ம போயி பத்து நாளு வரைக்கும் இருந்துட்டுதாம் வந்தேம். யிப்ப கூட போன வாரம் போயிட்டு வந்த நாம்மத்தாம். அப்போ சித்தெ நல்லாதாங் இருந்தா. கலியாணம் ஆயி புகுந்த வூடு வந்தப் பொண்ணு பொறந்த வூட்டப் பத்தியே நெனைச்சிட்டு இருக்கலாமா? நாமளும் சொல்லிட்டேம். ஒஞ்ஞ பங்குக்கு நீஞ்ஞளும் சொன்னீயேன்னாத்தாம் செரிபட்டு வரும்!"ன்னு.

            அந்தப் பேச்சக் கேட்டத்துக்குப் பெறவுதாம் சுப்பு வாத்தியாருக்குக் கொஞ்சம் ஆசுவாசமா இருந்துச்சு. ராசாமணி தாத்தாவும் வுடாம அடிச்சிச்சு, "பொண்டாட்டி இப்பிடி இருக்குறதெப் பாத்து மவ்வேம் அப்பிடியே துடிச்சிப் போயிட்டாம் மாப்ளே! அவ்வேம் என்னன்னவோ டானிக்கு மருந்து மாத்திரயெல்லாம் எழுதிக் கொடுத்து அதெ பார்ரேம் மாப்ளே! ஏய் செய்யு அதெ எடுத்தாந்து காட்டுப் பாப்பேம்! டாக்கடர்ருப் பொண்டாட்டி யிப்பிடி யிருந்தா அவனுக்குந்தாம் எம்மாம் வருத்தம்மா இருக்கும்?"ன்னு பேசுனுச்சு. செய்யு அந்த மருந்து மாத்திரை டானிக்கையெல்லாம் எடுத்தாந்துக் காட்டுனா.

            "ஒஞ்ஞளப் பத்தி, மாப்புள்ளையப் பத்தித் தெரியாதா மாமா? இதெல்லாம் கொண்டாந்து காட்டச் சொல்லிட்டு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இதெ வேற செரியா சாப்புடறது யில்ல மாப்ளே! அதுக்கு வேற கோவப்படுறாம் ஒம் மாப்ளே பயெ. இதுங்க ரண்டுக்கு இப்பிடி சண்டை ஆவுறதெ தணிச்சி வுடுறதெ நமக்கு வேலையா இருக்கு. நேத்தி வர்றதா சொல்லிட்டு காத்தாலத்தாம் ரண்டும் வந்துச்சுங்க. வந்ததுலேந்து மவ்வேம்ங்கார்ரேம் பொண்டாட்டிக்காரி மருந்தெ சாப்புட மாட்டேங்றானனு மோளாச வைக்க ஆரம்பிச்சிட்டாம். பெறவு நாம்மத்தாம் அந்தாண்ட போடா நீயின்னு பக்கத்துல இருந்த மருந்தெ கொடுத்தேம். கலியாணமாயி அப்பம் ஆயிய இப்பத்தானே பிரியுது பொண்ணு. அந்த ஏக்கம் இருக்கத்தானே செய்யும்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "நாம்ம வர்றப்பே சொல்லிட்டுதாம்டி வந்தேம். தாலி பெருக்கிப் போடுறதுக்குப் பாத்தாவணும்ன்னு. அதுக்குள்ள இப்பிடி நெனைச்சிட்டுக் கெடந்தீன்னா என்னத்தெ பண்ணுறது? யிவ்வே மாசமான கூடவே போயித்தாம் இருந்தாவணும் போலருக்கு! ன்னா பொண்ணுடி நீயி?"ன்னுச்சு வெங்கு செய்யுவப் பாத்து.

            "தாராளமா போயி இருந்துக்கடியம்மா! அம்மாம் பெரிய வூட்டுல இதுக ரண்டுந்தானே இருக்குதுங்க. கொஞ்சம் வெவரம் புரியுற வரைக்கும் ஒரு தொணையாவும் ஆவும் பாரு!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "நாம்மப் போயி இருக்குறதெ வுட நீயும் சித்தப்பாவும் போயி இருந்துக்கிட்டா ந்நல்லா இருக்கும் சின்னம்மா! இஞ்ஞ தனியா ரண்டு பேத்தும் கெடந்து செருமப்படணும்ன்னு ன்னா தலையெழுத்தா?"ன்னுச்சு வெங்கு.

            "அவ்வேம் நம்ம பயெ இஞ்ஞ பாக்குக்கோட்டையில கிளினிக்க வுட மாட்டாம்பாம். இவரு ஒஞ் சித்தப்பா சாதவம் பாக்கற தொழில வுட மாட்டேம்பாரு. பயெ வேற இஞ்ஞத்தாம் ப்ளாட்ட வாங்கிப் போடணும்ன்னு நிக்காம். இதுல நாம்ம வேற அஞ்ஞப் போயி கெடக்கச் சொல்லுதீயா நீயி? வேணும்ன்னா மாசமான்னா ஒரு தவா போயிட்டு வந்துடுதேம்! அதாங் நம்மப் பக்கத்துல செய்ய முடியும்டிம்மா!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            சுத்திலும் பாத்தவரு, "வந்ததுலேந்து மாப்புளையையே பாக்க முடியலயே? கிளினிக்குப் போயிருக்காப்புலயா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அந்தக் கதெயே சொல்லலப் பாரு ஒங்கிட்டெ. பொண்டாட்டிக்காரியக் காலையில கொண்டாந்து வுட்டாம். குளிச்சி முடிச்சி கிளினிக்குப் போறேம்ன்னு போனாம். போயிட்டு மத்தியானம் திரும்புனவேம் அவ்சரமா சென்னைக்குப் போயாவணும்ன்னு சாப்புட்டாம், கெளம்பிட்டாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "தாலி பெருக்கிப் போடுறதுன்னா பொண்ணு மாப்புள ரண்டு பேத்தும் இருக்குணுமில்லியா சின்னம்மா?"ன்னுச்சு வெங்கு.

            "இருக்கணும்தாம். கலியாணத்து அன்னிக்குக் கட்டுன பட்டு வேட்டி, பட்டுப் போடவயக் கட்டி ஒண்ணா கெழக்கப் பாத்து உக்கார வெச்சித்தாம் பண்ணுறது வழக்கம். எஞ்ஞ அவ்வேம் சொன்னா கேக்குதாம்? சொல்லிப் பாத்துட்டேம். ஏத்தோ அவ்சரமான வேல நெருக்கடி ஆஸ்பிட்டல்ல இருக்குறதா குதிச்சிட்டுக் கெடந்தாம். அஞ்ஞயிருந்து வேற போனு மேல போனா வந்துட்டுக் கெடந்துச்சு. செரிப் போயித் தொலைடான்னு சொல்லி அனுப்பிட்டேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "நாஞ்ஞ வர்ற வரைக்குமாவது இருந்திருக்கலாம். மாப்புள்ளையப் பாத்துருந்திருக்கலாம். சீக்கிரமா கெளம்புறதா ஒரு சேதி சொல்லிருந்தா நாஞ்ஞ இன்னும் வெரசா கெளம்பிக் கூட வந்திருப்பேம்."ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதுக்கென்ன மாப்ளே! அடுத்தடுத்த வாரத்துல வர்றாமலயே போயிடப் போறாம். தாராளமா வந்துப் பாத்துக்கோயேம் மாப்ளே! ன்னா இஞ்ஞ இருக்குற சென்னைப் பட்டணம். போயி வேணும்ன்னாலும் ஒரு எட்டுப் பாத்துட்டு வாயேம்! இப்பிடித் துடிச்சிப் போறீயே மாப்புளப் பயலெ நெனைச்சு?"ன்னு சிரிச்சிது ராசாமணி தாத்தா.

            "பெறவு சின்னம்மா தெருவுல எல்லாத்துக்கும் சொல்லிட்டேம். நாளைக்கி சனங்க எல்லாரும் வந்துப்புடுறதா சொன்னாங்க. காலங்காத்தால ஒம்போதுலேந்து பத்துக்குள்ள முடிச்சிப்புடலாம் சின்னம்மா! பத்தரைக்கு மேலன்னா எமகண்டம்ல்லா வருது!"ன்னுச்சு வெங்கு.

            "வூட்டுல வேண்டாமேடி வெங்கு!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "வூட்டுல ல்லன்னா வேற எஞ்ஞ வைக்குறது? பொண்ணு வூட்டுல பண்ணுறதுதானே மொறை!"ன்னுச்சு வெங்கு.

            "மொறைதாம். ல்லன்னு சொல்லல. அவ்வேம் பாலாமணி கலியாணம் ஆயி ரண்டு மூணு வருஷ வேண்டுதலுக்குப் பெறவு பொறந்தவேம். பொன்னியம்மங்கிட்டெ வேண்டுன பெற்பாடு பொறந்தவங்றதால அவனுக்குக் கலியாணம் ஆயி அவ்வேம் பொண்டாட்டிக்குத் தாலி பெருக்கிப் போடுறதெ பொன்னியம்மங்கிட்டெ வெச்சிடுறதா யப்பவே வேண்டுனது. அதாச்சிப் பொறக்குறதுக்கு மின்னாடியே வேண்டுனது. கோயில்ல வைக்குறதுல குத்தம் ஒண்ணுமில்லடி! அஞ்ஞயே வெச்சிப்புடலாமா? வேண்டுதலும் நிறைவேறிடும். கோயில்ல நடந்தாப்புலயம் ஆயிடும். பொன்னியம்மன் சக்தி வாய்ஞ்சது!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            சுப்பு வாத்தியாரு ஒரு நிமிஷம் நெத்தியச் சுருக்கி யோசிச்சாரு. "மாப்ளே! என்னத்தெ யோஜிக்குறாப்புல தெரியுது?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "ஒண்ணுமில்ல மாமா! வூட்டுலன்னா ‍தெரு சனங்க வர்ற சுலுவா போயிடும். வடவாதியிலல்லா இருக்கு பொன்னியம்மன் கோயிலு. சனங்க வர்றதுக்கு என்னத்தெ பண்ணுறதுன்னு ஒரு யோஜனெதாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "சனங்க ரொம்ப தேவயில்ல மாப்ளே! நாமளே இஞ்ஞ யாரையும் பெரும்பிடியா கொண்டு வாரப் போறதில்லா. காலங்காத்தால நாமளும் அவ்ளுந்தாம் பஸ்ஸப் பிடிச்சி வந்து எறங்கப் போறேம்! அஞ்ஞ சுந்தரி, நீலுவெ வெச்சி பாத்துக்கிட வேண்டித்தாங்! டிவியெஸ்ஸூ வண்டிக் கெடக்குல்லா. அதுல பேருக்கு நாலு சனத்தெ கொண்டாந்து வுட்டீன்னா போதும். அவ்வேம் பேர்ராண்டிப் பயெ வெகடு நாளைக்கு அஞ்ஞத்தான இருக்கப் போறாம். அவ்வேங்கிட்டெ சொல்லி வுட்டீன்னா போதும். அவ்வேம் பாட்டுக்குக் கொண்டாந்து தள்ளிட்டே இருப்பாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "யில்ல மாமா! வேனு ஒண்ணு சொல்லி வுட்டேம்ன்னா கொண்டாந்து வுட்டுப்புட்டு அழைச்சாந்துப் போயிடுவாம். வர்றப் போற சனங்களுக்கு வசதியா போயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அவ்ளோ சனத்தையா கொண்டாரப் போறே?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "தாலி பெருக்கிப் போடுறதுங்றது பொம்பளைங்க சமாச்சாரம் ல்லியா மாமா! பாஞ்சு இருவது பொம்முனாட்டிங்களாவது வாரணும் ல்லியா மாமா! வேனு எடுத்தாத்தாம் சரிபெட்டு வரும். நாமளும் மெனக்கெட வேண்டிதில்ல பாருங்க மாமா கொண்டாந்து வுட்டுக்கிட்டு. தேவைக்கு வேண்டிய காரியத்தெ பாத்துட்டு நிக்கலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "செரி மாப்ளே! ஒந் தோதுபடிக்குப் பாத்துக்கோ! நாம்ம காலங்காத்தால பொன்னியம்மன் கோயில்ல இருப்பேம். மவ்வேம் தாலிச் சரடுல்லாம் செஞ்கிக் கொண்டாந்துட்டாம். அதுக்குக் கொஞ்சம் காசியப் பெரட்டத்தாம் முடியாமப் போயி மொத மாசத்துல செய்ய வாய்ப்புல்லாம்மப் போயிட்டு. இப்பதாங் பணங்காசித் தோதுபட்டதுன்னு சொன்னாம். அதால ன்னா மாப்ளே? இதுவும் சரியான நேரந்தாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            ஞாயித்துக் கெழமைங்றதால சாயுங்காலம் நாலரைக்கு மின்னாடியே பொண்ண அழைச்சிட்டுக் கார்ல கெளம்பிட்டாங்க வெங்குவும், சுப்பு வாத்தியாரு. பாக்குக்கோட்டையில எடுத்த கார்ரு ஆர்குடியில வந்துதாம் நின்னுச்சு. அங்க  நிப்பாட்டி மறுநாளு வாங்க வேண்டிய சாமாஞ் செட்டுகள எல்லாத்தையும் வாங்கிக்கிட்டாங்க. வர்ற பொம்பள சனங்களுக்கு சின்னதா முப்பது தட்டுங்க, அதுல வெச்சிக் கொடுக்க முப்பது ஜாக்கெட்டு பிட்டுங்க, மஞ்சள், குங்குமா டப்பிங்கன்னு அத்தோட பூவு, பழம் எல்லாம் வாங்கிக்கிட்டாங்க. அந்த வேல முடிஞ்சதும் ஆர்குடியிலேந்து கார்ரு நேரா சுப்பு வாத்தியாரு வூட்டு மின்னாடி வந்துதாம் நின்னுச்சு. கார்லேந்து எறங்கி வந்த செய்யுவப் பாத்ததும் ஆயிக்குக் கண்ணுல தண்ணி வந்துடுச்சு. அப்பிடியே கட்டிப் பிடிச்சிக்கிட்டா. விகடுவுக்கும் கண்ணு கலங்குனாப்புல ஆயிடுச்சு. "யத்தே ஏம்மா இப்பிடி சின்னதாப் போயி வந்திருக்கு?"ன்னு கேட்டா பவ்வு பாப்பா செய்யுவப் பாத்ததும்.

            கார்ரு வந்து நின்னதெப் பாத்து ஓடியாந்த தம்மேந்தி ஆத்தா வூட்டுக்குள்ள வந்து செய்யுவப் பாத்தது, "தாலிப்பெருக்கிப் போடுறதுக்கு வந்திருக்குற பொண்ணு இப்பிடி சுருங்கிப் போயில்லா வந்திருக்கா! என்னடியம்மா பூந்த வூட்டுக்குப் போயி பொறந்த வூட்டுக்கு வர்றப்போ ஒரு சுத்து பெருத்துல்லா வாரணும். ஆன்னா சில பொண்டுவ அப்பிடித்தாம் அப்பம் ஆயி நெனைப்போடயே பிரிஞ்சிப் போவப் போறோமேன்னு நெனைச்சு கலியாணத்துக்கு மின்னாடியே ஒடைஞ்சிப் போயி பூந்த வூட்டுக்கு வர்றப்பவே இன்னும் ஒடைஞ்சிப் போயி வரும்ங்க. அந்த வகையில இருப்பா போலருக்கே இவ்வே! ஏங் கூறு கெட்டப் பொண்ணே! ந்ல்லா சாப்புட்டு தெம்பு தெகிரியமா இருக்கணும்டிம்மா! நீயி அஞ்ஞ நல்ல வெதமா இருக்கேன்னு நெனைச்சிட்டுத்தானே இஞ்ஞ அப்பன், ஆயி, யண்ணன், யண்ணில்லாம் நிம்மதியா இருக்கமுங்க. இப்பிடி வந்து நின்னீன்னா அதுக இனுமே ஒன்னய அனுப்பி வெச்சிட்டு எப்பிடி நிம்மதியா இருக்குமுங்க? அதெ நெனைச்சிப் பாத்தியாடி எம் பொண்ணே?"ன்னுச்சு. அப்பிடியே கைய மொகத்தச் சுத்திக் கொண்டு போயி செய்யுவுக்கு நெட்டி முறிச்சிது. கண்ணுத் தண்ணியா ஊத்துன்னுச்சு தம்மேந்தி ஆத்தாவுக்கு. அதோட அழுகைய நிப்பாட்டி அதெ சமாதானம் பண்ணுறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. 

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...