23 Sept 2020

நீ ஏன் இப்படி இருக்கிறாய்?

நீ ஏன் இப்படி இருக்கிறாய்?

            தனக்கு முன்வந்து அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து குருநாதபுத்தன் உரையாற்றத் தொடங்கினான்.

            "மனதில் ஒரு பொறி உருவாக வேண்டும். பிறகு செயல்பட வேண்டும் என்று நினைக்கிறாய். அப்பிடி ஒன்று உருவாக வாய்ப்பில்லை. செயல்பட வேண்டியதுதான். செயல்பட செயல்பட ஒரு பொறி உருவாகி விடும். விளக்கிடம் போய் வெளிச்சத்தைக் கொடு நான் தீபத்தை ஏற்றுகிறேன் என்று சொல்ல முடியாது. தீபத்தை ஏற்றினால் வெளிச்சம் தானாக வந்து விடப் போகிறது. விசயம் அவ்வளவுதான்.

            உன்னால் இரண்டி நடப்பதுதான் சாத்தியம் என நினைக்கிறாய். ஆனால் மூன்றடி எடுத்து வைக்க ஆசை கொள்கிறாய். அது உன்னுள் கடுமையான மன உளைச்சலை உண்டு பண்ணக் கூடும். எத்தனை அடி நடப்பது சாத்தியம் என்பதையோ, எத்தனை அடி எடுத்து வைக்க ஆசை கொள்கிறாய் என்பதையோ யோசிக்காமல் நடந்திருந்தால் நீ நாற்பது அடிகள் கூட எடுத்து வைத்திருக்கலாம். மனதால் செய்ய முடிவதெல்லாம் குழப்பத்தை உண்டு பண்ணுவதுதான் என்பதைப் புரிந்து கொள்.

            ஒரு நொடியில் இருக்கும் மனமும் இன்னொரு நொடியில் இருக்கும் மனமும் ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொள். இரண்டும் வெவ்வேறு. இரண்டையும் ஒன்றுபடுத்த முடியாது. நீ இரண்டு மனதையும் இயைபுபடுத்த முயல்கிறாய். இரண்டுக்கும் இடையே இணக்கம் காண முயல்கிறாய். அந்தக் கணத்தில் தோன்றிய மனம் அந்தக் கணத்திற்கே உரிய தனித்துவமானது. இன்னொரு கணத்தில் தோன்றும் மனம் அக்கணத்திற்கே உரிய தனித்துவமானது. நீ இரண்டையும் ஒன்றென நினைக்கிறாய். இரண்டும் உன்னிலிருந்து உருவானாலும் இரண்டும் வேறு வேறு. ஒரு மனதிலிருந்து உருவானது போல நினைத்தாலும் இரண்டும் வெவ்வேறு கணங்களில் உண்டானவை.

            கணத்திற்குக் கணம் மாறுபாடு அடையும் மனம் ஒவ்வொன்றும் வெவ்வேறானவை. அரிதாக ஒரு சில மனங்கள் ஒன்றுபடலாம் என்றாலும் அவற்றிற்குள்ளேயும் நுண்ணிய வேறுபாடுகள் இருக்கவே செய்யும். நுட்பமான பிரித்தறியும் அறிவின்மையால் கூட அது புரிபடாமல் போகலாம். ஒன்று போல் தெரியும் இரண்டிற்குள் நுட்பமான வேறுபாடுகள் இருக்கவே செய்யும். உன்னால் இரண்டை, மூன்றை, நான்கை, பலவற்றை ஏற்க முடிந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

            எல்லாவற்றையும் ஒன்று செய்ய முற்படும் போக்கும் எப்போதும் பிரச்சனையையே உண்டு பண்ணும். ஒரே மாதிரியான தன்மையோடு இயங்குவது ஓர் இயந்திரத்திற்குத்தான் சாத்தியம். மனதிற்குச் சாத்தியமல்ல. கட்டுப்பாட்டு இயக்கம் இயந்திரத்திற்கு ஒத்துப் போவது போல மனித மனத்துக்கு ஒத்துப் போகாது. மனித மனம் எப்போதும் கட்டுபாட்டை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவே செய்யும். அது இயல்பாகவே ஒரு கட்டுபாட்டிற்குள்தான் இருக்கிறது. கட்டுபாடில்லாத மனம் என்று எதுவும் கிடையாது. பெரும்பாலான மனதைக் கட்டுபடுத்த செய்யும் முயற்சியே கட்டுபாடில்லாமல் போகக் காரணமாகிறது.

            நீ அப்படி இல்லை என்று நினைப்பதே அபத்தம். அப்படி நினைத்து நீ உன்னை நிராகரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீ ஏன் அப்படியில்லை என்று நினைக்க வேண்டும்? அப்படி நினைக்க வைக்க உன்னை நிர்ப்பந்தபடுத்தி உன்னை நீயே நிர்ப்பந்தம் செய்து கொள்ள செய்கிறார்கள் என்பது உனக்குப் புரியவில்லையா? உனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாமல் உன்னை மற்றவர்கள் ஆதிக்கம் செய்ய முடியாது. உன்னைத் தாழ்வாக நினைக்க வைப்பதில் வெற்றி பெற்று விட்டால் உன் மேல் சவாரி செய்யலாம். அப்படி சவாரி செய்வது ஒரு கருத்தாகவும் இருக்கலாம் அல்லது தலைவர் என்பவராகவும் இருக்கலாம். ஒரு கழுதையின் செயலைச் செய்வதற்கு நிச்சயம் உன்னைப் பற்றி இன்னொன்றாக நினைத்தாக வேண்டும்.

            சாதிக்கவில்லை என்ற எண்ணம் சமீப காலமாக வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது. அதற்கேற்றாற் போல் நீயில்லை என்ற உணர்வை உருவாக்காமல் உன்னிடம் எதையும் பிடுங்க முடியாது என்பதால் அப்படி ஓர் எண்ணம் வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது. நீயே நினைத்துப் பார், நீ ஆரோக்கியமாக இல்லை என்ற எண்ணத்தை உருவாக்காமல் உன்னை மருத்துவமனைக்கு வரவழைக்க முடியுமா? அறிவில்லை என்ற எண்ணத்தை உருவாக்காமல் போதிக்க முடியுமா?

            இல்லை என்ற எண்ணத்தை உருவாக்காமல் உன்னிடம் எதையும் செய்ய முடியாது. அதற்கு இல்லை என்பதை நீ நம்பும்படி செய்ய வேண்டும். அதை நம்பிக் கொண்டு நீயும் அலைகிறாய், என்னிடம் இது இல்லை, அது இல்லை என்று. உன்னிடம் இல்லாத ஒன்று உனக்குத் தேவையா என்பதைக் கூட யோசிக்க முடியாமல் நீ அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாய். மனதைப் பொருத்த வரையில் உனக்குத் தேவையான அனைத்தும் உன்னிடமே இருக்கிறது. அது பல்வேறு சில்லுகளாக இருப்பதால் இப்போது கண்ணுக்குப் புலப்படாதது எப்போதோ புலப்படும். இருப்பதை நீ தேட முடியாது. மனதை ஒரே ஒரு சில்லாக நினைத்து விடாதே. வெளியுலகுக்குத் தேவையானதை வேண்டுமானால் தேடிக் கொள். அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்து விட்டது. போய் வா!"

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...