5 Sept 2020

தெளிவிதை


தெளிவிதை

            வெண்ணாற்றுக்கும் வெள்ளையாற்றுக்கும் ஆனால் வெண்ணாற்றாங்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது திட்டை கிராமம். வெள்ளையாற்றின் மறுகரையில் அமைந்திருக்கிறது ஓகையூர் கிராமம். ஓகையூரில் இரண்டரை மா நிலத்திலும், திட்டையில் பனிரண்டரை மா நிலத்திலும் விவசாயம் இருக்கிறது. ஓகையூரில் சுலுவாகத் தண்ணீரைப் பாய்ச்சுவதைப் போல திட்டையில் செய்து விட முடியாது. இதற்கு யோசித்துக் கொண்டே இந்த 2020 வது வருடத்தில் ஓகையூரில் இரண்டரை மாவில் மட்டும் குறுவையைப் போட்டு வைத்தது. திட்டையில் சம்பாவோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவாகி விட்டது.

            அந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதைத் திட்டையில் குறுவையைப் போட்டு விட்டு பம்பு செட்டை வைத்துத் தண்ணீரை இறைத்தவர்களைப் பார்த்த போதுதான் தெரிந்தது. ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லையா என்று கேட்டால் இந்த வருடம் சரியாகத்தான் திறந்தார்கள். ஆனால் பம்புசெட்டை வைத்து இறைத்தால்தான் வாய்க்காலுக்குப் பாய்கிறது. இங்கே ஒவ்வொரு கிராமத்தின் அமைப்பும் அதாவது ஆங்கிலத்தில் டிசைன் என்று சொல்கிறார்களே அது அப்படி.



            பொதுவாகத் தெரிந்த வகையில் பத்து பதினைந்து கிராமங்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு சொன்னால் வெள்ளையாறு பாசனத்துக்கு வசதியாகவும், வெண்ணாறு அவ்வளவு வசதியாக இல்லாதது போலவும் தோன்றுகிறது. மொத்தமாக வெண்ணாறு, வெள்ளையாறு பாயும் அத்தனை கிராமங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் முடிவுகள் மாறக் கூடும்.

            இத்தனை வருட அனுபவத்தில் பார்க்கும் போது வெள்ளையாற்றின் சகாயம் வெண்ணாற்றுக்கு வராது என்றே தோன்றுகிறது. பாய்வதாக இருந்தாலும், வடிவதாக இருந்தாலும் அதில் வெள்ளையாறுக்குத்தான் முதலிடம். வெண்ணாறு வர வர கிணறு போல போய்க் கொண்டிருக்கிறது. வெள்ளையாறுதான் இப்போதும் மிதந்தாற் போல் இருக்கிறது. தண்ணீர் விருட்டெனப் பாய்வதற்கும் வடிவதற்கும் அதுவும் காரணமாக இருக்கலாம். இதை வைத்துக் கொண்டு வெள்ளையாற்றை உயர்வு படுத்தி, வெண்ணாற்றைத் தாழ்வு படுத்தி விட்டதாகத் தயவு செய்து நினைத்து விட வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள நிலைமையை மட்டுமே இதனால் சொல்ல வருவது. மற்ற பிற பகுதிகளில் நிலைமை வேறு மாதிரியாகவும் இருக்கக் கூடும்.

            அநேகக் கிராமங்களில் நாற்றாங்கால் தயார் செய்து, நாற்று விட்டு, நாற்று பறித்து, நடவு செய்வது என்பது மாறி விட்டது. எல்லாம் தெளி விதை என்று மாறி விட்டது. நாற்று பறிப்பதற்கான உழைப்பாளிகள் குறைந்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற சொல்வதா, இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதா என்று சொல்லத் தெரியவில்லை.

            பெரும்பாலான விவசாயத் தொழிலாளிகள் கட்டிடத் தொழிலாளிகளாக மாறி விட்டார்கள். இருந்த கொஞ்ச நஞ்ச விவசாயத் தொழிலாளிகளும் குடித்துக் குடித்தே நாற்றுக் கட்டைத் தூக்க முடியாத அளவுக்கு பலமிலந்து விட்டார்கள்.

            முன்பெல்லாம் நாற்றைப் பறித்தால் நட வேண்டிய வயலுக்குக் கட்டுக் கட்டிக் கொண்டு வந்து நாற்றுக் கட்டுகளை விசிறி விட்டுப் போய் விடுவார்கள். இப்போது நாற்று பறிக்கு தனிக்கூலி, கட்டு கட்டிக் கொண்டு வருவதற்கு தனிக்கூலி என இரண்டு கூலியாகி விட்டது.

            அதோடு இல்லாமல் சரியான நேரத்தில் நாற்றைப் பறிப்பதற்கு உழைப்பாளிகள் கிடைக்காமல் நாற்று முற்றிப் போய் பறிக்கும் நிலைக்கும் ஆளாகி விடுவதுண்டு. ஒரு காலத்தில் வயலை, நாற்றை, நடவைப் புனிதமாகக் கருதிய காலம் இப்போது எங்கோ போய் ஒளிந்து கொண்டது என்று தெரியவில்லை. நாற்றுப்பறி ஆட்கள் குவார்ட்டரை இறக்கிக் கொண்டுதான் பறிக்கவே ஆரம்பிக்கிறார்கள்.

            "பறிச்சிட்டுப் போய் வேணுன்னா குடி. குடிச்சிட்டுப் பறிக்க வுட மாட்டேம்ன்னா மாட்டேம்!"ன்னு பிடிவாதமாக நின்றவர்கள் நாற்றை முற்ற விட்ட கதையெல்லாம் இங்கே நடந்திருக்கிறது. ஒரு ஏக்கர் நிலம் வரை வைத்திருப்பவர்கள் வேண்டுமானால் முயன்று அவர்களே நாற்றைப் பறித்து நடவுக்கு ஏற்பாடு செய்யலாம். அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் மற்றவர்களின் உதவியை நாடித்தான் நாற்றைப் பறித்தாக வேண்டும். அதில் நாற்றுப் பறிப்பவர்களோடு முரண்டு பிடித்தால் அதற்குள் நாற்று முற்றி விடும். அதற்கு யோசித்துக் கொண்டே குவார்ட்டர் சகிதம் ஆட்களைப் பிடித்து அவர்களின் போக்கிற்கு விட்டு நாற்றைப் பறிக்கச் செய்பவர்களும் இருக்கிறார்கள். உழவர்களின் காலடியில்தான் உலகமே விழ வேண்டும் என்று வள்ளுவர் பாடியிருப்பது போய், டாஸ்மாக்கின் காலடியில்தான் உழவர்கள் விழ வேண்டும் என்று பாடும் காலம் வந்து கொண்டிருக்கிறது.

            நாற்றுப் பறிப்பதில் இருக்கும் இது போன்ற கஷ்ட நஷ்டங்களைக் கருத்தில் கொண்டு பெரும்பாலோனோர் இப்போது தெளிவிதைக்கு மாறி விட்டார்கள். நடவு செய்வதில் இருக்கும் அழகு தெளிவிதையில் இருக்காது என்று முரண்டு பிடிக்கும் ஒரு சிலர் மட்டும் வம்படியாக நடவு முறையில் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கையும் வர வர குறைந்து விடும்.

            தெளிப்பு முறையில் நிறைய வேலைகள் குறைவதாகவும், செலவும் குறைவதாகவும் ஒரு நினைப்பு தோன்ற ஆரம்பித்து விட்டது. வயலைப் பக்குவமாக வைத்திருந்தால் தெளிப்பு முறையில் செலவு குறைவுதான். அதற்கேற்றாற்போல வயலை அவ்வபோது உழுது போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். களை பிடிக்க விட்டு விட்டால் தெளிப்பு முறையில் களையெடுத்து மாளாது. அதற்குப் பேசாமல் நடவே செய்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும்.

            இந்த வருடம்தான் சுத்தமாக கொஞ்சம் கூட நாற்றுப்பறி, நடவு என்றில்லாமல் தெளிப்பு என்றாகியிருக்கிறது. அதுவும் குறுவையில் உள்ள சங்கடங்களை யோசித்துக் கொண்டு திட்டையில் சம்பா மட்டுந்தாம் என்று தெளித்த விதைக்கும் போர்செட் மூலம் தண்ணீர் வைக்க வேண்டிய நிலை வரும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. ஆனால் நிலைமை அப்படித்தான் ஆனது. இப்போது அவ்வபோது கொஞ்சம் மழை பெய்கிறது. அந்தச் சம்பவங்களில் சிலவற்றைப் படம் எடுத்தது. அது உங்களது பார்வைக்குக் கீழே இருக்கிறது. இது பூராவும் 'ஆயிரத்து ஒன்பது' என்ற நெற்பயிரைத் தெளி விதையாகப் போட்ட போது எடுத்த படங்கள். வெள்ளைப் பொன்னி செப்டம்பர் முதல் வார வாக்கில் தெளிவிதை செய்யலாம் என்று உத்தேசம். அப்போது அதையும் படமாக எடுத்துப் போடுகிறேன். கிராமத்து விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இது குறித்து அறிந்து கொள்ள விரும்புவர்கள் கருத்திட்டால் அது குறித்து எழுதவும் விருப்பம்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...