26 Sept 2020

பதினைஞ்சு மூட்டை வெள்ளைப் பொன்னி!

பதினைஞ்சு மூட்டை வெள்ளைப் பொன்னி!

            'மாதம் மும்மாரி பொழிகிறதா?' என்று கேட்பதெல்லாம் அரசர் காலத்து வசனங்றது இந்த 2019 வருஷத்துல மாறியிருக்கு. நெசமாலுமே மாசம் மும்மாரிப் பொழிஞ்சதுல வயலுக்கு தண்ணி வைக்க வேண்டிய அவசியமே இல்லாம போயிடுச்சு. வயலுங்கள எப்ப பாத்தாலும் தண்ணி வெச்சி கட்டுன மாதிரி அம்புட்டு கட்டுமானமா இருந்துச்சு. பயிறுகளும் உரம் அடிக்காமலே பச்சைப் புடிச்சி பாக்குறதுக்கும் அழகாத்தாம் இருந்துச்சு.

            மும்மாரி மழை 2020ல தை மாசத்துலயும் பெஞ்சப்பத்தாம் சுப்பு வாத்தியாரு கலங்கிப் போயிட்டாரு. பதினெட்டு 'மா'வுக்கு மேல அறுப்பு காணும் அவருக்கு. மெஷின் அறுப்பு பிடிக்காது சுப்பு வாத்தியாருக்கு. ஆளுகள வெச்சி கை அறுப்பாத்தாம் அறுப்பாரு. அப்பத்தாம் நாலு பேத்துக்கு வேல கெடைக்கும்பாரு.

            இந்த வருஷத்தோட மொத அறுப்பு திட்டையில சவடா பாண்டியரோட அறுப்பு. கை அறுப்பா அறுத்துப் போட்டாக்கா அன்னைக்கு ராத்திரி விடியக் காலம்பார நாலு மணி வாக்குல லேசா ஒரு தூத்தலு. செரி லேசா தூறிட்டு நின்னுப்புடும்னு பாத்தா கொஞ்ச நேரத்துல மழை ஒரு பாட்டம் அடிச்சித் தீத்துப்புட்டு. ஒரு பாட்டம் அடிச்சிப்புட்டே, இனுமே நின்னுப்புடும்னு பாத்தா அப்பயும் நிக்கல, மறுநாளு பன்னெண்டு மணி வரைக்கும் நெனைச்சு நெனைச்சு வானம் பாட்டம் பாட்டமா அடிச்சிட்டுக் கெடக்குது.

            வெளைஞ்ச நெல்ல அறுக்காம விட்டாக்கா தப்பிச்சுக்கும். மழை தண்ணி இருக்கே அது நிக்குற பயிருலேந்து வடிஞ்சிப் போயிடும். அறுத்துப் போட்ட பயிறுன்னா அது மழையில நனைஞ்சுதுன்னா அதெ காய வெச்சி அடிக்கிறதுக்குள்ள உசுரு போயிடும். சாமானியத்துல காஞ்சித் தொலையாது. சவடாலு பாண்டியரோட மூணு மா கை அறுப்பு நாசமாப் போயிடுச்சி.

            சரி அவ்வளவுதாம் மழைன்னு நெனைச்சா நாலு நாளு கழிச்சி ஒரு நாளு ராத்திரி பேஞ்ச மழையிலத்தாம் சுப்பு வாத்தியாரு அரண்டு போனாரு. மறுநாளு அறுப்புன்னு ஆளுகளுகிட்ட சொல்லிட்டு வந்ததெ நெனைச்சி பொழுது விடிஞ்சதும், விடியாததுமா அஞ்சு மணிக்கெல்லாம் கெளம்பி அறுக்க வாணாம்னு சொல்லிட்டு வந்துட்டாரு.

            அதுக்கு அடுத்ததா ரெண்டு நாளும் கொழப்பம்தான் சுப்பு வாத்தியாருக்கு, எந்திரத்தெ எறக்கி என்னமா அடிக்கிறதுன்னு? இவரு கொழம்பிக்கிட்டு கெடந்த நேரத்துல ஊரு ஆளுங்க எந்திரத்தெ எறக்கி அறுவடைய பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பண்ணதோட வுடாம இவரோட வயல்லயும் எறக்கி அறுவடைய பண்ண வுட்டுப்புட்டு வூட்டுக்கு ஆள சொல்லி விட்டுப்புட்டாங்க. விசயம் கேள்விப்புட்டு சாக்கு, படுதாவோட வுழுந்தடிச்சி ஓடுறாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னா மக்கா இப்பிடிப் பண்ணிப்புட்டீங்களே? நம்மகிட்ட ஒத்த வார்த்தெ கலந்துக்கக் கூடாதா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.

            "அட ச்சும்மா கெடங்க வாத்தியாரே! எந்திரம் நாமக்கலு மாவட்டத்தி‍லேந்து வந்து எறங்கியிருக்கு. தொடர்ந்து வுடாம இருவது வேலி நெலமாவது அறுக்குறதா இருந்தாத்தாம் அவ்வேம் எந்திரத்தெ அனுப்புவாம்னு சொல்லிப்புட்டாம். மழெ வேறு மூசு மூசுன்னு அது பாட்டுக்கு அடிச்சிட்டுக் கெடக்கு. நாம்ம நாளு ஆள கலந்துகிட்டு எந்திரத்தெ எறக்குறதுக்குள்ள தை போயி, மாசியும் போயி பங்குனியும் வந்துப்புடும். என்னத்தெ சொல்லப் போறீங்க நீங்க?ன்னு யோஜனெயெ பண்ணி தைரியத்தெ உண்டு பண்ணிக்கிட்டு எந்திரத்தெ எறக்கிப்புட்டேம். நெல்ல புடிச்சி கையோட யேவாரிகிட்ட போட்டுட்டு வூட்டப் பாக்க போங்க!" அப்பிடின்னிட்டாரு எந்திரத்தெ பேசி எறக்குன அழகருசாமி.

            சுப்பு வாத்தியாரு வயல்ல எந்திரம் எறங்குனப்ப சாயுங்காலம் அஞ்சு மணி. ஏழரை வரைக்கும் மூணரை மா நெலத்த அறுவடை பண்ணிப்புடுச்சி எந்திரம். அதுபாட்டுக்கு அறுவடை பண்ணிப் பண்ணி வந்து கொட்டிப்புட்டு போவுது. எல்லாம் வெள்ளைப் பொன்னி நெல்லுக. அடிச்ச மழையில அத்தனையும் சாஞ்சிக் கெடக்குதுங்க.

            பொதுவா எந்த நெல்லுக்கு உரம் கொடுத்தாலும் வெள்ளைப் பொன்னிக்கு கொடுக்க முடியாது. உரம் கொடுக்காமலயே அது இடுப்பு ஒசரத்துக்கு வளந்து நிக்கும். எல்லா பயிரும் பச்சைப் பசேல்ன்னு வெளைஞ்சி நின்னா இது மட்டும் கொஞ்சம் வெளுத்த பச்சையாத்தாம் பொலுசா நிக்கும். குமரிப் பொண்ணு கணக்கா வேக வேகமா வளர்றதுல வெள்ளைப் பொன்னிய அடிச்சிக்க முடியாது. அம்மாம் வேக வேகமா வளந்து வெக்கப்பட்டு தலைய சாய்ச்சிக்கிற குமரிப் பொண்ணு கணக்கா அப்படியே சாஞ்சிப் படுத்துபுடும். சின்ன காத்து, மழை எதுக்கும் தாங்காது. எதுவும் இருக்காதப்பவே சாயுற பயிரு கனமான மழைன்னா என்னா பண்ணும்? அது பாட்டுக்கு சாஞ்சிக் கெடக்கு.

            சாஞ்சிக் கெடந்ததெ எந்திரம் அறுத்து முடிச்சிப்புட்டு. எந்திரம் போன சோட்டைப் பாத்தாக்க வாய்க்காலு வாய்க்காலா இருக்கு. கை அறுப்பாத்தாம் அறுக்கப் போறோம்னு நெனைச்சிக்கிட்டு அதுல உளுந்தெ வேற தெளிச்சி வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. இப்ப உளுந்து இருக்கே, அது முளைச்சு வந்தது எந்திரம் போவாத சோட்டுல மட்டுந்தாம் தலைய நீட்டிக்கிட்டு நிக்குது. கை அறுப்பாத்தாம் அமையும்னு நெனைச்ச சுப்பு வாத்தியாருக்கு அடுத்ததா வெதை எப்பிடி எடுக்குறதுன்னு கவலே வந்துப் போச்ச. எந்திரம் அறுத்துக் கொட்டுனதுல ரண்டு தடவெ வுட்டுப்புட்டு பெறவு ரெண்டு மூட்டைய வெதைக்குன்னு பிடிச்சிக்க சொல்றாரு அழகருசாமி. வேற வழி? அப்பிடித்தாம் பிடிச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            வழக்கமா ஒன்றரை மாவுக்கு மேல வெள்ளைப் பொன்னியைப் போட மாட்டாரு சுப்பு வாத்தியாரு. வூட்டுக்கு மட்டுந்தாம் வெள்ளைப் பொன்னிய போடுவாரு. அது பத்து மூட்டையோ பன்னெண்டு மூட்டையோ வெளைஞ்சிக் கொடுக்கும். அதெ அறுவடையப் பண்ணி அவரே அவிச்சி ஆவாட்டிச் சாப்பிட்டாத்தாம் சுப்பு வாத்தியாருக்குத் திருப்தி.

            இந்த வருஷம் அவரோட மவ்வேன் விகடு சொன்னாங்றதுக்காக மூணரை மாவுல போட்டு வெச்சாரு. அவ்வேன் அப்பிடி ஏம் சொன்னான்னா, அவனோட சோக்காளிங்க ரெண்ட பேர்ர பிடிச்சி அவுங்களுக்கு நெல்லு ‍தேவைங்னு சொல்றாங்கன்னு அப்பங்காரர்ட்ட சொல்லி அப்பிடிப் பண்ண வெச்சிட்டாம். அதால மூணரை மாவுல போட்டு வெச்சாரு சுப்பு வாத்தியாரு. மிச்சத்துல பிபிடிங்ற பாப்பட்லாவையும், ஐயாரு இருவதையும் போட்டு வெச்சிருக்காரு.

            எல்லாத்திலயும் வெள்ளைப் பொன்னிய போட்டாக்கா அது மாவுக்கு ஆறு மூட்டையோ, ஏழு மூட்டையோ வெளையும். அதெ கொண்டு போயி யேவாரிக்கிட்டா போட்டாக்கா யேவாரிக்கு வெள்ளைப் பொன்னிக்கும், மித்த நெல்லுக்கும் வித்தியாசம்லாம் தெரியாது. பிபிடிங்ற பாப்பட்லா என்ன வெலைக்குப் போவுதோ அந்த வெலைக்குத்தாம் எடுப்பாரு யேவாரி. அது கட்டுப்படியாவாது வெவசாயம் பண்ற ஆளுங்களுக்கு. அதால வூட்டுக்கு மட்டும் வெள்ளைப் பொன்னிய போட்டுக்கிற ஆளுங்க விக்குறதுக்கு இங்க பாப்பட்டலாவையும், ஐயாரு இருவதையும், தொண்ணுத்து நாலு சைபர் எட்டையும்தாம் நெல்லுகளா போடும்ங்க.

            சோக்காளிகள நம்பி விகடு போடச் சொல்லி போட்டார்ல இல்லையா சுப்பு வாத்தியாரு. இப்ப மவ்வேம்காரங்கிட்ட, "யம்பீ! அறுவடை ஆச்சுப்புடுச்சுடா வெள்ள பொன்னி. ரண்டு நாள்ல நல்லா காய வெச்சிப்புடுறேம். ஒம்மட சிநேகிதனுங்கள வுட்டு எடுத்துகிடச் சொல்லு. இஞ்ஞ வூட்டுல எலிகளோட அட்டகாசம் காங்காது. பெருச்சாளிக ஒவ்வெண்ணும் ஒரு மூட்ட நெல்ல ஒத்த ராத்திரியில திங்கும்!" அப்பிடிங்கிறாரு.

            விகடு சோக்காளிகள்ல ஒருத்தருக்குப் போனைப் போட்டாக்கா, அவரு மச்சாங்காரரு ஒத்திக்குப் பிடிச்ச வயல்லேந்து நெல்லு வர்றதால வாங்குறதுக்கு வாய்ப்பு இல்லங்றாரு. விகடுவுக்குப் பகீர்னு போச்சுது. அதெ அவ்வேன் வெளியில காட்டிக்காம, "அதால ன்னா... யேவாரிகிட்ட போட்டுக்கிறேம்!"ன்ட்டாம். விசயம் சுப்பு வாத்தியாருக்குத் தெரிஞ்சா, "சிறு புள்ளைங்க வெள்ளாமை பண்ணா வூடு வந்து சேருமா?"ன்னு கொதிச்சிப் புடுவாரு.

            சுப்பு வாத்தியாரு வூட்டுத் தேவை போக கூடுதலா பதினைஞ்சு மூட்டைக இயற்கை விவசாயத்துல வெளைஞ்ச வெள்ளை பொன்னிக மூட்டைகளா கட்டிக் கெடக்கு. ஆயிரத்து முந்நூத்துலேந்து, ஆயிரத்து நானூத்து ரூவாய்க்குக் கொடுத்தாத்தாம் அது கட்டுபடி ஆவும். வெதை வெதைச்சி, நாத்துப் பறிச்சி, பறிச்ச நாத்த நட்டு, அதுக்குக் களை பறிச்சி, இப்போ எந்திரத்த வுட்டு அறுக்க காசிய கொடுத்து, அதெ ரெண்டு நாளைக்கு காய வைக்க ஆளுகளுக்குச் சம்பளத்த கொடுத்து, அதெ யேவாரிக்கிட்ட பாப்பட்டலாவ எடுக்குற ஆயிரத்து வெலைக்குப் போட்டா சுப்பு வாத்தியாருக்குக் கோவம் வருமா? வராதா? கோவம் வர்றதை விட, "இந்தப் பய பண்ற காரியம் எப்பவும் இப்படித்தாம் இருக்கு! கரவுசெரவா காரியத்துல இருக்க மாட்டேங்றாம்!"ன்னு வேற திட்டித் தீத்துப்புடுவாரு.

            இந்த பதினைஞ்சு மூட்டை வெள்ளைப் பொன்னியை என்ன பண்றதுன்னு இப்போ மண்டைய போட்டுப் பிச்சிக்கிட்டு கெடந்தாம் விகடு. அப்பத்தாம் மன்னார்குடியில ஒரு வாத்தியாரையும், திருவாரூர்ல ஒரு வாத்தியாரையும் புடிச்சிக் கேட்டதுல, “இயற்கெ வெவசாயம்ன்னு வேற சொல்றீயே. வெள்ளெ பொன்னி ந்நல்லா இருக்கும்னு சொல்றீயே. நெல்லா வாங்கியாந்து டவுன்ல நாங்க எங்கனப் போட்டு அவிக்கிறது? அரிசியாக்கித் தந்தா சொன்ன வெலைக்கு வாங்கிக்கிறேம்!”ன்னாங்க. அப்பாடா தப்பிச்சேம்ன்னு விகடு சுப்பு வாத்தியார்கிட்டெ வந்து இதெ பூசுனாப்புல தக்கபடி, “யப்பா! அரிசியாக்கித் தந்தா கிலோ அறுவது ரூவாய்க்கி வாங்கிக்கிறதா சொல்றாங்க!”ன்னு எடுத்து விட்டாம். கொஞ்ச நேரம் நெத்திய சுருக்கி யோசிச்சவரு, “செரித்தாம் போ! நம்ம வூட்டுக்கு அவிக்கிறப்போ அவுங்களுக்கும் சேத்து அவிச்சிப்புடுவேம். ஆன்னா கிலோ அறுவது ரூபாய்ன்னு ஆசெப்பட்டு அரிசிய கொடுக்குறதா ஆளுகள அதியம் சேத்துப்புடாதே. ரண்டு பேத்து வரைக்குந்தாம் நம்மால தாங்கும். கொடுத்தா தடெயில்லாம வுட்டுப்புடாம கொடுத்துப்புணும். ஒரு மாசத்துக்குக் கொடுத்துப்புட்டு இன்னொரு மாசத்துக்குக் கொடுக்காம வுட்டுப்புடக் கூடாது. அதெயும் பாத்துக்கிடணும்!”ன்னாரு. இப்படியா பதினைஞ்சு மூட்டெ வெள்ளெப் பொன்னிக்கு ஒரு விடிவு கெடைச்சுச்சு.

இப்போ நெறயெப் பேரு வெள்ளெ பொன்னிய அரிசியா ஆக்கித் தந்தா சொன்ன வெலைக்கு வாங்கிக்கிறதா சொல்றாங்க. அதுல மன்னார்குடி வாத்தியாரு சொன்னதுதாங் உச்சம். வழக்கமா அவரு அரிசி வாங்குற கடெயில் ஆளு வாங்க வர்றதில்லன்னு தெரிஞ்சதும் கடெக்காரரு வாத்தியார்ர எதேச்சையா பாத்தப்போ கேட்டுருக்காரு, “ன்னா வாத்தியார்ரே! நம்ம கடெயில அரிசி வாங்குறதெ நிப்பாட்டிப்புட்டதா தெரியுது. வேற எந்தக் கடெயப் பிடிச்சாச்சு?”ன்னு. அதுக்கு மன்னார்குடி வாத்தியாரு இயற்கை மொறையில ரசாயன கலப்பில்லாம வெள்ளெ பொன்னி அரிசி வாங்குற கதெயெ எடுத்து வுட்டுருக்காரு. அதுக்கு அரிசிக் கடெக்காரரு சொல்லிருக்காரு, “அப்பிடியே நமக்கும் மாசத்துக்கு இருவது கிலோ அரிசிய சொல்லி வுட்டுருங்க வாத்தியார்ரே! கேக்குற காசியக் கொடுத்துப் புடுவேம்! ஏன்னா இஞ்ஞ அரிசிய வெச்சி விக்குற நமக்குத்தாம் தெரியும், அதெ பூச்சிப் புடிச்சிடாம இருக்க என்னென்ன காரியங்க பண்ணுறோங்றது. அரிசி இடியாம அரைக்குறது வரைக்கும் ரசாயனம் சேத்தாத்தாம் உண்டு வாத்தியார்ரே!”ன்னு. இந்தச் சங்கதிய மன்னார்குடி வாத்தியாரு விகடுகிட்டெ சொல்லிச் சொல்லிச் சிரிச்சாரு.

மன்னார்குடி வாத்தியாரு இப்பிடின்னா, திருவாரூரு வாத்தியாரு சொன்னது இன்னும் வேற உச்சம், “நமக்கு இயற்கை மொறையில எதெ வெளைவிச்சாலும் செரித்தாம், நம்மள கேக்கவே வேண்டியதில்ல. அதெ கொண்டாந்து கொடுத்துப்புடுங்க. நம்மள ஒஞ்ஞளோட ஆயுட்கால சந்தா உறுப்பினரா சேத்துக்கிடுங்க! நம்மளோட சேத்து நம்மட தங்காச்சி வூட்டுக்கும் இன்னும் இருவது கிலோ மாசா மாசம் கொடுத்துப்புட்டீங்கன்னா ரொம்ப சௌரியமா போயிடும்!” அப்பிடின்னுட்டாரு அவரு. இந்த 2020 வருஷத்துல அதுக்கேத்தாப்புல ஆறு மா அளவுக்கு வெள்ளைப் பொன்னி போட்டிருக்கு. அதோட வெதைப்புல தொடங்கி அறுவடெ வரைக்கும் படமா எடுத்து பதிவு பண்ணணும்ன்னு ஆசெதாம். ஆன்னா வேல பாக்குறப்போ படம் எடுக்க முடியல. படம் எடுக்க ஆரம்பிச்சா வேல பாக்க முடியல. எப்பவாச்சும் ஒரு சில நேரங்கள்ல மட்டும் படம் எடுக்குறதும், வேலயப் பாக்குறதும் ஒத்துப் போறது உண்டு. அப்படி எடுத்த சில படங்கள்ல சில நாட்களுக்கு மின்னாடி இந்த வலைப்பூவுல போட்டிருந்தது. ஒரு வகையில ஒவ்வொரு வருஷமும் பண்ணுற வெவசாயத்தெ படம் பிடிச்சிப் போடுறதும் வருங்காலத்துலேந்து பாக்குறப்போ ஒரு நல்ல பதிவாவும், ஆவணமாவும் இருக்கும் இல்லியா!

கீழே இருக்குற மூட்டையிலத்தாம் இந்த 2020 வருஷத்துக்கு வெள்ளை பொன்னி வெதைய எடுத்துட்டுப் போனது.


கீழெ இருக்குற படங்க எல்லாம் வெள்ளைப் பொன்னிய தெளி வெதையாக வெதைக்குறப்ப எடுத்தது.


தெளி வெதையா வெதைச்ச வெள்ளிப் பொன்னி மொளை வுட்டுருக்குற படங்கத்தாம் கீழே இருக்கு. கொஞ்சம் காய்ச்சலா இருந்தாத்தாம் மொளை வுட்டது கெளைச்சுக் கௌம்பும்ன்னு மொளை வுட்ட வெள்ளைப் பொன்னிக்குத் தண்ணிக் காட்டாம இருக்குது.





நாளைக்கு இங்க சுத்துப் பட்டுல மித்த நெலங்கள்ல எப்படி இப்போ இந்த வருஷம் வெள்ளாம பண்ணுறாங்கங்றதெ பதியுறேம்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...