ஆண்களின் பாலியல் பிரச்சனைகள்!
செய்யு - 577
மாசம் பொறந்தா திருவாரூருக்குப் போயி
மளிகெ சாமானுங்கள வாங்கிட்டு வந்துடுறது விகடுவோட பழக்கம். கலியாணம் ஆன பெற்பாடு அந்தப்
பொறுப்பெ அவ்வேம் கையில எடுத்துக்கிட்டாம். அதுக்கு மின்னாடி வரைக்கும் சுப்பு வாத்தியாரு
எட்டாம் நம்பரு பஸ்ல போயி வாங்கிட்டு ஒரு சாக்குல வாங்கிட்டு வந்திடுவாரு. இதுக்குன்னே
ஒரு யூரியா சாக்கெ சுத்தம் பண்ணித் தயாரா வெச்சிருப்பாரு. அந்த மூட்டையில கட்டித்தாம்
வாங்கிட்டு வந்தாரு. டிவியெஸ் பிப்டி வாங்குன பிற்பாடுலேந்து வண்டியில போயிட்டு வந்துகிட்டு
இருந்தாரு. யூரியா சாக்குல அரை மூட்டை அளவுக்கு மிளகா, மல்லின்னு தேவையான மளிகெ சாமானுங்கள
வாங்குனா ஒரு மாசத்துலேந்து ஒண்ணரை மாசம் வரைக்கும் வரும். உள்ளூர்ல வாங்குறதெ வுட
திருவாரூர்ல வாங்குறப்ப நூத்து, எரநூத்துன்னு பணமும் மிச்சமாவும். சாமாஞ் செட்டுகள்லயும்
ஒரு தரம் இருக்கும். இதுக்குன்னே திருவாரூரு பழனி விலாஸ்ல மாசத்துக்கு ஒரு மொறை நிப்பாரு.
பள்ளியோடம் வுட்டு அன்னிக்குச் சாயுங்காலமாத்தாம்
போனாம் விகடு. கையில ரோக்கா போட்டு எடுத்துட்டுப் போயிடுறதால அரை மணி நேரத்துல
வாங்குற சோலி முடிஞ்சிடும். மூட்டையத் தூக்கி மின்னாடி வெச்சவனுக்கு பாலாமணியோட நெனைப்பு
வந்துச்சு. வேதா ஹெல்த்ங்ற புத்தகத்துல மச்சாங்காரனோட கட்டுரை வருதுன்னு ஒவ்வொரு
தவாவும் நெனைக்கிறது. திருவாரூரு போறப்ப அதெ வாங்கிப் படிச்சிட்டுக் கருத்தெ சொல்லணும்ன்னு
நெனைக்கிறது. எப்பிடியே அந்த நெனைப்பு திருவாரூரு வந்ததும் மறந்து போயிடும். இந்த
மொறைத்தாம் கெளம்புற நேரத்துல சரியா ஞாபவம் வந்துச்சு.
திருவாரூரு பஸ் ஸ்டாண்டுக்கு எதுத்தாப்புல
நெறைய கடைங்க பொட்டிக்கடை சாமாஞ்செட்டுகளோட பத்திரிகெ விக்குற கடைதாம். 'வேதா ஹெல்த்'
இருக்கான்னு ரண்டு மூணு கடையில விசாரிச்சி, நாலாவது கடையில அந்தப் புத்தகத்தெ பிடிச்சாம்.
மருத்துவம் சம்பந்தமான அந்தப் புத்தகத்தெ வாங்குனதும் பாலாமணியோட கட்டுரையத்தாம் தேடுனாம்
விகடு. ஆண்களின் பாலியல் பிரச்சனைகள்ங்ற தலைப்புல கட்டுரை எழுதியிருந்தாம். பல வெதமான
பாலியல் பிரச்சனைகள் பத்தியும், அதுக்கான ஆயுர்வேத தீர்வுகள் குறித்தும் அந்தக் கட்டுரையில
பாலாமணி எழுதியிருந்தாம். மச்சாங்காரனோட கட்டுரைங்றதால வாங்குன எடத்துலயே நின்னு ஒரே
மூச்சுல படிச்சிம் முடிச்சாம். மொத்தமா மூணு பக்கம் இருந்துச்சு அந்தக் கட்டுரை. அதுக்கேத்தாப்புல
கஜூராகோ சிற்பங்கள்ல செலதை அந்தப் பக்கத்துல அச்சு பண்ணிருந்துச்சு. இதெ வாசிச்சு
முடிச்ச பெற்பாடுதாம் இதெ வூட்டுலப் போயி கூட வாசிச்சிருக்கலாம்ன்னு தோணுச்சு விகடுவுக்கு.
பல நெனைப்புக இப்பிடித்தாம், காரியம் முடிஞ்ச பெறவுத்தாம் தோணும். பேஸ்ட்ட பிதுக்குறதுக்கு
மின்னாடியே யோசிக்கணும். பிதுக்குன பெற்பாடு யோசிச்சு என்னத்தெ பண்ணுறது? இனுமே கடந்த
காலத்துல போயி அந்தக் காலத்தெ மிச்சம் பண்ணிட முடியாது. இருட்டு நல்லா வளந்திருச்சு.
ஆத்தூரு ரோட்டு வழியாத்தாம் போயி ஆவணும்.
ரோடு வழக்கம் போலத்தாம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைதாம். கவனமா போயி ஆவணும்ன்னு
நெனைச்சப்போ சரியா பாலாமணிட்டெருந்து அழைப்பு வந்துச்சு விகடுவோட செல்போனுக்கு.
விகடுவுக்கே ஆச்சரியமா இருந்துச்சு. இப்பதாங் கட்டுரைய வாசிச்சேம். அதுக்குள்ள அழைப்பு
வருதுன்னே. சந்தோஷம் தாங்கல அவனுக்கு. போன எடுத்துப் பேசுனாம். "செளரியமா இருக்கீயளா
மச்சாம்! இப்பத்தாம் ஒஞ்ஞளப் பத்தி நெனைச்சேம். ஒஞ்ஞ எழுத்தெ வாசிச்சிட்டு இருந்தேம்!"ன்னாம்
விகடு.
"மச்சாம் சொல்றது புரியலீயே?"ன்னாம்
பாலாமணி.
"திருவாரூரு மளிகெ சாமாம் வாங்க வந்தேம்.அப்பிடியே
நெனைப்பா 'வேதா ஹெல்த்' வாங்குனேம். ஆண்களோட பாலியல் பிரச்சனைகளப் பத்திதானே எழுதியிருக்கீயே!
கடைக்கு மின்னாடியே நின்னு வாசிச்சு முடிச்சிட்டேம். அதெத்தாம் சொன்னேம்!"ன்னாம்
விகடு.
"அதுல ஒரு வெசயம் தெரியுமா?"ன்னாம்
பாலாமணி.
"கட்டுரையில நெறைய வெசயம் இருந்துச்சு.
மச்சாம் எந்த வெசயத்தப் பத்தி சொல்லுறாப்புலன்னு தெரியலையே?"ன்னாம் விகடு.
"அந்தக் கட்டுரைய நாம்ம சொல்லச்
சொல்ல எழுதுனதே செய்யுதாம்! அதெ சொல்ல வந்தேம்!"ன்னாம் பாலாமணி. இதெப் போயி
அவ்வேம் செய்யுகிட்டெ சொல்ல சொல்ல எழுதச் சொன்னாம்ன்னு விகடுவுக்குக் கொழப்பமா
இருந்துச்சு. அதெ புரிஞ்சிக்கிட்டவனப் போல பாலாமணியே பேசுனாம்.
"அவ்வே செய்யு கொஞ்சம் டிப்ரஸ்டா
இருந்தா. ஒரு சேஞ்சா இருக்கட்டும்ன்னு அந்த வேலையப் பண்ணச் சொன்னேம். கட்டுரை எப்பிடி
இருந்துச்சு?"ன்னாம் பாலாமணி.
"ஒரு காலத்துல நாட்டுல நெறைய கொழந்தைங்கப்
பெத்துக்கிட்டது பெரச்சனையா இருந்துச்சு. இப்போ ஒரு கொழந்தெ பொறக்குமாங்றதெ பெரச்சனையா
ஆயிடுச்சு!"ன்னாம் விகடு.
"கொழந்தெ யில்லாததப் பத்தி மச்சாம்
ன்னா நெனைக்குறாப்புல?"ன்னாம் பாலாமணி.
"அதெ அப்பிடியே வுட்டுப்புடலாம்ன்னு
நெனைக்கிறேம். நாட்டுல நெறைய கொழந்தைங்க கவனிப்பு யில்லாம யிருக்காங்க. அவுங்கள்ல
ஒரு கொழந்தைய எடுத்து வளக்கலாம். ஒதவி பண்ணலாம்!"ன்னாம் விகடு.
"ஏம் டாக்கடருங்க நாஞ்ஞ பொழைக்கிறது
மச்சானுக்குப் பிடிக்கலையோ?"ன்னு சொல்லிட்டுப் பெரிசா சிரிச்சாம் பாலாமணி என்னவோ பெரிய ஜோக்கச் சொல்லிட்டாப்புல.
"டாக்கடருங்க செரி பண்ண வேண்டிய விசயங்க
நெறைய யிருக்கு. வெயாதிய மட்டும் சரி பண்ணுறதுதாங் அவுங்களோட வேலையா நெனைக்குதாங்க!"ன்னாம்
விகடு.
"நெறையான்னா? எதெப் பத்திச் சொல்லுதீங்க
மச்சாம்?"ன்னாம் பாலாமணி.
"வெயாதியே யில்லாத சமூகத்தெத்தாம்
அவுங்க உருவாக்கணும். அதுக்கான சுகாதார மொறைங்க, பழக்க வழக்கங்க அதுல குறிப்பா சாப்புடுற
மொறைங்க, மூச்செ வுடுற மொறைங்க இப்பிடி நெறைய சொல்லலாம்ன்னு நெனைக்குறேம்! அடிப்படையில
மனுஷங்றவேம் வெயாதியில்லாத பிராணியாத்தாம் இருக்காம்ன்னு நெனைக்கிறேம். அவ்வேம் வாழ்க்கையோட
மொறைப்பாடலத்தாம் வெயாதிய தேடிக்கிறாம்ன்ன நாம்ம நெனைக்கிறேம். அந்த வாழ்க்கை மொறைப்பாடத்தாம்
ஒவ்வொருத்தரையும் ஆய்ஞ்சுப் பாத்து டாக்கடருமாருக சொல்லணும்ன்னு நெனைக்குதேம்! சொல்லப்
போனா நெறைய வெயாதிக்கு டாக்கடருமாருங்க மருந்துகளெ கொடுக்க வேண்டியதில்லங்றது நம்ம
கருத்து!"ன்னாம் விகடு. இதெ சொன்னதுக்குப் பெறவுதாம் ரொம்ப அதிகமா பேசிட்டோமேன்னு
மனசுக்கு ஒரைச்சது. மறுபடி பேஸ்ட்ட பிதுக்குன கதெதாம். இனுமே கவனமா வார்த்தைகளச் சுருக்கிப்
பேசணும்ன்னு முடிவெ பண்ணிக்கிட்டாம்.
"மச்சாம் சொல்றதெப் பாத்தா ஒரு டாக்கடரு
இருக்குற ஊர்ல வெயாதியே இருக்கக் கூடாதுன்னு நெனைக்குறாப்புல யில்ல!"ன்னாம் பாலாமணி.
"அப்பிடி எஞ்ஞ இருக்குது? டாக்கடரு
இருக்குற எடத்துல வெயாதியஸ்தருங்கத்தானே அதிகமா இருக்காங்க. மக்களெ தேடி எஞ்ஞ டாக்கடருங்க
வர்றாங்க. அவுங்களத் தேடி வர்றாப்புலத்தானே செஞ்சிட்டு இருக்காங்க. எந்த வெசயமா இருந்தாலும்
மக்கள்கிட்டெத்தாம் நாம்ம போவணும். நடக்கறதுல்லாம் நேர்மாறால்லா யிருக்கு!"ன்னாம்
விகடு. மறுபடியும் அவனுக்கு இந்த மொறையும் எல்லையத் தாண்டிப் போயிட்டோமோன்னு தோணுச்சு.
இனுமே இந்தப் பேஸ்ட்டப் பிதுக்கவே கூடாதுன்னு மனசுக்குள்ள திடம் பண்ணிட்டாம்.
"மச்சாம் தீவிரமா அரசியல்லாம் பேசுதாப்புலயே!
கட்சியில எதுலாச்சும் சேந்துப்புட்டாப்புலயா?"ன்னாம் பாலாமணி.
"நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்
மச்சாம். இப்பிடி யிருந்தா செரியா இருக்கும்ன்னு தோணுணதத்தாம் சொன்னேம்!"ன்னாம்
விகடு கொஞ்சம் சுருக்கமா சுருக்கிக்கிட்டு.
"மச்சாம் எந்த அளவுக்கு வாத்தியாரு
வேலையில மக்களெ நோக்கிப் போறாக?"ன்னாம் பாலாமணி.
"வர்றப்ப பெத்தவங்களப் பாத்துட்டா
வூடு வந்துச் சேர்ற நேரமாயிடுது. அவுங்களோட பேசுறதுன்னா நேரங் காலம் போறதெ தெரியாமப்
போயிடுது. புள்ளீயோளுக்கு சிறுதானியத்துல கஞ்சி, அடை செஞ்சிக் கொடுக்குறதெப் பத்தி
சமீபமா பேசிட்டு இருக்கேம். புள்ளீயோளுக்குக் கடையிலேந்து தீனியே கொடுக்கக் கூடாதுன்னு
அந்த ஏற்பாடு. புள்ளீயோள்ட்டயும் அதெ சொல்லிட்டு இருக்கேம். புள்ளீயோ பொறந்த நாளுக்கு
மிட்டாயி, சாக்லேட்டுக் கொடுக்குறதெ பேசிப் பேசி கொஞ்சமே கொஞ்சம் மாத்திருக்கேம்.
ஒண்ணு ரண்டு பெத்தவங்க கடல மிட்டாய், சர்க்கரப் பொங்கல்ன்னு செஞ்சிருக்காங்க. ஆன்னா
யாரையும் போட்டு பெரிசா வற்புறுத்தல. அப்பிடித்தாம் இருக்கணும்ன்னு பிடிவாதம் பண்ணுறதெல்லாம்
இல்ல. அவுங்கள விரும்பி ஏத்திக்கிட்டா செரின்னு வுட்டுடுதேம். வேறொண்ணும் பெரிசா செய்யல
மச்சாம்!"ன்னாம் விகடு. மறுபடியும் தன்னெ அறியாம பெரிசா பேசிட்டது வெளங்குனுச்சு
விகடுவுக்கு. என்னவோ மனசுக்குள்ள உற்சாகம் கொப்புளிச்சிட்டு வந்ததெ உணர்ந்தாம் விகடு.
"தொடந்தாப்புல செய்யுங்க. அப்பிடிச்
செஞ்சி டாக்கடருமாருகளுக்கு வேல யில்லாம பண்ணிப்புடாதீயே?"ன்னாம் பாலாமணி.
"மனசளவுலயும் சனங்க நெறைய மாற வேண்டிக்
கெடக்கு. அதுல மாத்தம் உண்டாவாத வரைக்கும் ஒஞ்ஞளுக்கு எப்பயும் வேல இருக்கும். பெறவு
நகரங்க இருக்குற வரைக்கும் ஒஞ்ஞ பொழைப்புல நீஞ்ஞ கொடிகட்டிப் பறக்கலாம்!"ன்னாம்
விகடு.
"மச்சாங்கிட்டெ ஒரு வெசயம் பேசணும்.
அதுக்குத்தாங் அடிச்சேம். யிப்ப பேசலாமா? பெறவு பேசலாமா?"ன்னாம் பாலாமணி. இப்போ
பேசுனது என்ன வெசயங்ற கொழப்பம் வந்துச்சு விகடுவுக்கு. இதுக்கு மேலயும் ஏதோ ஒரு விசயம்
இருக்கும்ன்னு நெனைச்சிக்கிட்டு, "சொல்லுங்க மச்சாம்!"ன்னாம் விகடு.
"யிப்போ கிளினிக்லத்தாம் இருக்கேம்.
பேஷண்ட்ஸ் யாருமில்ல. ராத்திரித்தாம் அடிக்கலாம்ன்னு நெனைச்சிட்டு இருந்தேம். ப்ரியாத்தானே
இருக்கேம்ன்னு அடிச்சேம். ஒஞ்ஞளுக்கு சில விசயம் தெரியுமா? செய்யு எதுவும் சொன்னாளா?"ன்னாம்
பாலாமணி.
"நேத்தி யாத்தா கொண்டாந்து வுட்டதுதாம்.
நாம்ம அவ்வேகிட்டெ பெரிசா எதையும் பேசல. எதையும் எங்கிட்டெ சொல்லல. கொஞ்சம் ஆளு தொவண்டாப்புல
இருந்தா. ஆளாளுக்கு அதையே கேட்டுட்டு யிருந்ததால நாமளும் அதையே கேட்டு அவ்வே மனசெ தொந்தரவு
பண்ண வாணாம்ன்னு நெனைச்சேம். அதால எதெப் பத்தியும் நாம்ம கேக்கல!"ன்னாம் விகடு.
"மச்சானுக்குத் தெரியணும்ன்னு சொல்லுதேம்.
மித்தபடி வேறெந்த நோக்கமுமில்லே!"ன்னு பீடிகையப் போட்டாம் பாலாமணி.
"மச்சாம்ன்னு கூட நெனைக்க வாணாம்.
ஒரு சிநேகிதனா நெனைச்சிக்கிட்டு எதுவா இருந்தாலும் நீஞ்ஞ சொல்லலாம்!"ன்னாம் விகடு.
"ஒண்ணுமில்ல. ஒரு வாரத்துக்கு மேல
யிருக்கும். ஒரத்தநாட்டுல பிரண்டோட தங்காச்சிப் படிக்கிறதுக்குப் பணம் வேணும்ன்னும்
அதெ கொடுக்கணும்ன்னும் செய்யு ரொம்ப அடம் பண்ணிட்டு யிருந்தா!"ன்னு நிறுத்துனாம்
பாலாமணி.
"நீஞ்ஞ பணத்தெ எதையும் கொடுத்துடலயே?"ன்னாம்
விகடு.
"சில விசயங்க எல்ல மீறிப் போயிடக்
கூடாதுன்னு கொடுக்குறாப்புல ஆயிடுச்சு!"ன்னாம் பாலாமணி.
"நீஞ்ஞ கொடுத்துருக்கவே வேண்டியதில்லா.
இதெப் பத்தி யிப்போ அடிக்குறதெப் போல மின்னாடி நீஞ்ஞ ஒரு போன அடிச்சிருக்கலாம்!"ன்னாம்
விகடு.
"படிப்புச் சிலவுன்னு சொன்னதால செரின்னு
ஒத்துக்கிட்டேம்!"ன்னாம் பாலாமணி.
"சென்னைப் பட்டணம் எஞ்ஞ இருக்கு?
ஒரத்தநாடு எஞ்ஞ இருக்கு? எப்பிடிக் கொடுக்குறதுன்னு தாட்டி வுட்டுருக்கணும் நீஞ்ஞ?
அத்துச் செரி எம்மாம் பணத்தெ கொடுத்தீயே? எப்பிடி கொடுத்தீயே?"ன்னாம் விகடு.
"மச்சாம் ரொம்ப வெட்டி வுட்டாப்புலல்லா
பேசுதீயே! ஒதவி செய்யுற கொணம்லாம் மச்சானுக்குக் கெடையாதா?"ன்னாம் பாலாமணி.
"சத்தியமா கெடையாது. ஒபத்திரவம் பண்ணாம
யிருந்தா போதும்ன்னு நெனைப்பேம். ஒதவின்னு வந்துப்புட்டா திரும்ப அதெப் பத்தி நெனைக்காத
அளவுக்கு நூத்து, எரநூத்தோ அத்தோட முடிச்ச்சிக்கிட்டு அதெப் பத்தியே மறந்துப்புடுறது!
பணத்தெ எப்பிடி கொடுத்தீயே? எம்மாம் கொடுத்தீயே?ன்னு சொல்லவே யில்லையே?"ன்னாம்
விகடு.
"செய்யுதாம் பாங்கியோட அக்கெளண்ட்
நம்பரு வாங்கிக் கொடுத்தா. நாம்ம டிரான்ஸ்பர் பண்ணி வுட்டெம். பத்தாயிரத்தெ கொடுத்தேம்!"ன்னாம்
பாலாமணி.
"பத்தாயிரமா? அதெ கொடுக்குறதுக்கு
மின்னாடி கொஞ்சம் கலந்திருக்கலாமே?"ன்னாம் விகடு.
"நாம்ம கஷ்டப்பட்டு பணத்துக்குச்
செருமப்பட்டு படிச்ச ஆளு. படிப்புக்குன்னு கஷ்டம்ன்னு கேட்டதால செரித்தாம்ன்னு கொடுத்துட்டேம்!"ன்னாம்
பாலாமணி.
"நாம்ம இதெப் பத்தி ஒரத்தநாட்டுல
இருக்குறவங்ககிட்டெ பேசுதேம். எம்மாம் சீக்கிரமா பணத்தெ ஒஞ்ஞ பாங்கிக் கணக்குல சேக்கணுமோ
சேக்கச் சொல்லுதேம். தங்காச்சி அறிஞ்சோ அறியாமலோ பெரும் பணத்தெ கொடுக்கச் சொன்னதுக்கு
நாம்ம ஒஞ்ஞகிட்டெ மன்னிப்புக் கேட்டுக்குறேம். இனுமே தயவுபண்ணி தங்காச்சிச் சொன்னான்னு
இதெ மாதிரி பெருந்தொகைய ஒதவியா பண்ணிட வாணாம்!"ன்னாம் விகடு.
"படிப்புக்குப் பண்ணுற ஒதவி மச்சாம்.
பத்தாயிரம் நமக்குப் பெரிய காசில்ல. ரண்டு கேஸ்ஸுப் பாத்தாவே எடுத்துப்புடுவேம். யிருந்தாலும்
மச்சானுக்கு இத்துத் தெரியணும்ன்னு சொன்னேம்!"ன்னாம் பாலாமணி.
"இப்பவாச்சும் சொன்னதுக்கு நன்றி
மச்சாம். மறுக்கா மறுக்கா சொல்லுதேம். தயவுபண்ணி பணம் தொடர்பான ஒதவிகள ஒஞ்ஞ நோக்குத்துக்குச்
செய்யுறதோட நிறுத்திக்குங்க. செய்யுச் சொல்றான்னு பண்ணிட வாணாம். ஒதவின்னாலும் நாம்ம
செய்யுற ஒதவி நமக்கே ஒபத்தரவமா போயிடக் கூடாதுன்னு நெனைக்கிறேம்!"ன்னாம் விகடு.
"மச்சாம் யிப்படி நெனைப்பாப்லன்னு
நாம்ம நெனைக்கல. யிப்படி நெனைப்பாப்புலன்னா சொல்லிருக்கவே மாட்டேம்!"ன்னாம் பாலாமணி.
"சொன்னதுதாங் செரி! நல்லது மச்சாம்.
ஒஞ்ஞப் பணத்தெ கூடிய சீக்கிரம் கெடைக்குறதுக்கு நாம்ம ஒரு ஏற்பாட்ட பண்ணியாவணும்!"ன்னாம்
விகடு.
"மச்சாம் நமக்கு ஒரு ஒதவிப் பண்ணணும்.
இதெப் பத்தி நீஞ்ஞ யாருகிட்டெயும் சொல்லிக்கிட வாணாம்!"ன்னாம் பாலாமணி.
"செரி மச்சாம்! நாம்ம திருவாரூர்ல
இருக்கேம். நேரம் வேற ஆயிட்டு இருக்குது! கட்டுரெ அருமெ. தொடந்தாப்புல எழுதுங்க. ரொம்ப
சந்தோஷம் மச்சாம். நாம்ம வெச்சிடுறேம்!"ன்னாம் விகடு.
"ஓக்கே! மனசுல வேறெதுவும் நெனைக்கிட
வாணாம்! வெச்சிடுறேம்!"ன்னாம் பாலாமணி. பாலாமணி செல்போன வெச்சிட்டாம்.
*****
No comments:
Post a Comment