20 Sept 2020

ரஜினி அரசியலுக்கு வருவாரா?!

 

ரஜினியின் அரசியல்

            தமிழ்த் திரையுலகில் அதி நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்) கருதப்படும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதை அவரது படங்களிலிருந்து தீர்மானிக்க முடியுமா?

            அவரது படங்களைக் கொண்டு அவரது அரசியல் வருகையைத் தீர்மானிப்பது சரியானதாகுமா என்றால், அவரது படங்களும் பட வெளியீடுகளுமே அத்தகைய உணர்வைத் தூண்டியிருப்பதால் அவற்றைக் கொண்டு அறுதியிடுவது ஒருதலைபட்சமானதாகாது எனக் கொள்ளலாம்.

            ரஜினியின் படங்களில் அவரே வெற்றி பெறும் நாயகர் என்றாலும் முத்து என்ற படத்தில் 'முதல் ரஜினி' மனிதர்களை எதிர்கொள்ள விரும்பாமல் துறவு வாழ்க்கையை நோக்கிச் சென்று விடுவார்.  அவரது சொந்தப்படமாகக் கூறப்படும் வள்ளி என்ற திரைப்படத்தில் இறுதியில் அவர் எங்கே சென்றார் என்பதே காட்டப்படாது. லிங்கா என்ற திரைப்பட்டதிலும் 'முதல் ரஜினி' மக்களிடமிருந்து மறைந்து விடுவார். அவரது கதையிலிருந்து கிளைத்தெழும் பாபா என்ற திரைப்படத்தில் அவரது அரசியல் என்பது தன்னையல்லாமல் இன்னொருவரை வைத்து அரசியலில் ஈடுபடுவதாக இருக்கும். அவர் அரசியலை நோக்கி அடியெடுத்து வைக்கிறரா, இல்லையா என்பது குறித்த தீர்க்கமான முடிவெடுக்கு வர முடியாதபடி அப்படத்தின் முடிவில் அவர் அரசியல் கண்ணோட்டம் கொள்ளும் போது படம் முடிவுக்கு வந்து விடும். இப்படங்கள் பலவும் ரஜினியின் குணநலன்களோடு நன்றாக ஒத்துப் போகுபவை எனலாம். இதைக் கொண்டு ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரது அரசியல் நிலையும் அவ்வாறுதான் ஆகும், அதாவது இத்திரைப்படத்தில் இடம் பெறுவது போன்ற ஏதோ ஒன்றாக அமையலாம் என்பதாகக் கணிக்கலாம். அரசியல் என்பது மக்களோடு நின்று களமாடுவது. ரஜினியின் திரைப்படங்களில் அவர் அதிகம் விரும்புவதாக மக்களிடமிருந்து விலகிச் செல்லும் துறவு சார்ந்த ஆன்மிகப் பரிணாமமே அதிகம் வலியுறுத்தப்படுகிறது. இப்பரிமாணத்தை அவர் விரும்பாமல் அவரது இயக்குநர்களால் அவ்வளவு சுதந்திரமாகக் கையாள முடியாது என்பது முழுமைக்குச் சற்று நிகராகவேனும் ஏற்றுக் கொள்ளக் கூடியது எனலாம்.

            ரஜினி ஒரு போராளியாக நின்று நிலைப்பது கபாலி, காலா போன்ற படங்களில். அப்படங்களில் காட்டப்படும் அரசியல் சார்ந்த குணநலன்கள் அவரது சுபாவத்துக்கு ஒத்து வராது என்பதைப் போராட்டம் குறித்து அவர் வெளிப்படுத்திய வாசகங்களே உணர்த்தும். போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடாகி விடும் என்பது அவர் வெளிப்படுத்திய பிரபலமான வாசகங்களுள் ஒன்று. துரதிர்ஷ்டவசமாக அரசியல் என்பதோ போராட்ட களங்களைக் கொண்டது.

            ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த அவரது படங்களின் வசனங்களும், அவர் படங்களில் இடம்பெறும் பாடல் வரிகளும் மிகவும் குழப்பம் ஊட்டுபவை.

            தான் எப்படி வருவேன், எப்போது வருவேன் என்பது தெரியாவிட்டாலும், வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன் என்று ஒரு திரைப்படத்தில் அவர் குறிப்பிடும் வசனம் திரைப்பட மற்றும் அரசியல் சூழ்நிலைகளை அனுசரித்து இருபொருள் தரும் வாதத்தில் எழுதப்பட்டது. இவ்வசனத்தைக் கேட்பதில் கேட்போருக்கு ஒரு விருப்புணர்ச்சி உண்டானாலும் பொருள் கொள்ளும் வகையில் மிகவும் இடரையே தரும் என்பது அவரது அரசியல் வருகை குறித்த அணுகுமுறைகளினின்று மிக எளிமையாக உய்த்துணரலாம். தூத்துகுடி துப்பாக்கிச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தூத்துகுடி சென்ற போது அவர் எதிர்கொண்ட வாசகங்களும், அதை அவர் எதிர்கொண்ட விதமும் அவரின் சரியான நேரத்துக்கு வரும் வருகைக்குக் கட்டியம் கூறுவதன்று.

            கட்சியெல்லாம் தமக்கெதற்கு, காலத்தின் கையில் அது இருக்கு என்பதாக அவரது திரைப்படம் ஒன்றில் இடம்பெறும் பாடல் வரியும் அவரின் நிச்சயமான அரசியல் வருகைக்குக் கட்டியம் கூறுபவை கிடையாது. மேலும் இவ்வரிகளை மிகவும் மலுப்பலான பதிலாகக் கொள்வதா, அரசியல் சாமர்த்தியம் வாய்ந்த பதிலாகக் கொள்வதா என்பதிலும் பெருங்குழப்பமே கொள்ள நேரிடும்.

            இவர்தான் அரசியலை எதிர்கொள்ள முடியும் என்பதற்கு நிச்சயமான நூறு சதவீத சரியான வரையறைகளை வகுத்து விட முடியாவிட்டாலும், அரசியலுக்கான ஆர்வம் என்பது அரசியலை எதிர்கொள்ள அவசியம் என்பதைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது எனலாம். அப்படியான அரசியல் ஆர்வத்தை நேரடியாக ரஜினி வெளிப்படுத்தியது மிகவும் சொற்பம் அல்லது இல்லை என்றும் கூறலாம்.

            இளைஞர்களிடம் ஓர் எழுச்சி வரும் போது தான் அரசியலுக்கு வருவதாக ரஜினி கூறுவது எவ்வகையில் அதை அறுதியிடுவது என்பதில் புதுக் குழப்பத்தை உண்டாக்கக் கூடியது. உலக அரசியல் வரலாற்றில் தலைவர்களின் வருகையே பெரும்பாலும் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. மாறாக இளைஞர்களின் எழுச்சி உண்டாகி அதன் மூலம் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்களா என்பதைத் தேடித்தான் கண்டறிய வேண்டும். இது எதை ஒத்தது என்றால் வெளிச்சத்தைத் தந்த பிறகுதான் அதற்கான தீயைத் தருவேன் என்று விளக்கிடம் நிபந்தனை விதிப்பதைப் போன்றது. எரிவதற்கான தீயைத் தந்தால் விளக்கானது வெளிச்சத்தைத் தாமாகவே தந்து விடும். வெளிச்சத்தைத் தரும் ஒரு விளக்கிற்கு தீயைத் தர வேண்டிய அவசியம் இல்லை.

            ஒருவேளை ரஜினி குறிப்பிடும் ஆன்மீக அரசியல் போல ஆன்மீக அதிசயங்கள் ஏதேனும் நிகழ்ந்து அதன் மூலம் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவர் தொடர்ந்து அரசியலை எதிர்கொள்வது என்பதும் ஓர் ஆன்மிக அதிசயமாகவே இருக்கும். ஆன்மீகத்தைப் பொருத்த வரையில் ஆன்மீகத்திற்குரிய மகான்கள் எப்போது தோன்றுவார்கள் என்பதே ஆன்மீகத்தால் அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆன்மீக அரசியலைக் கைக்கொள்ளப் போவதாகச் சொல்லும் ரஜினிக்கும் இது அப்படியே பொருந்தியும் போகலாம்.

            ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதற்கான நிச்சயமற்ற தன்மைகளை இப்பத்தி முன்வைப்பதாகக் கருதி விட முடியாது. ஏனென்றால் ரஜினியின் அரசியல் குறித்த முடிவுகளிலும் நிலைப்பாடுகளிலும் அப்படிப்பட்ட நிச்சயமற்ற தன்மைகள் அதிகம். ரஜினி அரசியலுக்கு வரலாம், வராமல் போகலாம், ஒருவேளை அவர் வந்தாலும் நிச்சயமான முடிவுகளிலிருந்து வந்தாரென்று கொள்வதற்கு இயலாது என்றே சொல்லலாம்.

            வருங்காலத்தில் இதுதான் நிகழும் என்பதற்கான நிச்சயமற்ற தன்மைகள் இருக்கின்றன. இது ரஜினியின் அரசியலுக்கு அப்படியே பொருந்தும். வரும் ஆண்டில் பூகம்பம் நேருமா? எரிநட்த்திரம் விழுமா? என்பதற்கான இருவிதமான நிலைகள் என்னவெனில் அப்படி நிகழலாம் அல்லது அப்படி நிகழாமல் போகலாம் என்பதே. இவற்றின் நிச்சயம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கான சாத்தியக்கூறுகள் என்பது புள்ளியல் விவரச் சார்புடையன. ஒவ்வொராண்டும் பூகம்பம் நேர்வதையோ, எரிநட்சத்திரம் விழுவதையோ நிச்சயமாகச் சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ ஓர் ஆண்டில் அப்படி நிகழலாம் அல்லது எந்தச் சில குறிப்பிட்ட சில ஆண்டுகளிலும் அப்படி நிகழலாமலும் போகலாம். அநேகமாக ஒவ்வொரு முறையும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதை எதிர்நோக்கும் தமிழர்களுக்கும் இது அப்படியே பொருந்திப் போகலாம், பொருந்தாமல் போனாலும் போகலாம்! ஒரு குழப்பமான நிலை என்பது எந்தச் சாத்தியக்கூறிலும் நிகழலாம்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...