21 Sept 2020

பொழுது புலர்ந்த பின் வந்த மாற்றம்!

பொழுது புலர்ந்த பின் வந்த மாற்றம்!

செய்யு - 571

            காலையில நெலமெ சரியானது போல ஒரு தோற்றம் உண்டாயிருந்துச்சு. ராத்திரி எவ்ளோ நேரந்தாம் இருட்டா இருக்க முடியும்? வெளிச்சம் வந்துதானே ஆவணும்ங்றது போல அது ஒரு தோற்றமா இருந்துச்சு. பாலாமணி எப்போ எழுந்தாம், குளியலப் போட்டாம்ன்னு தெரியல. ஏழு மணிக்கெல்லாம் கெளம்பி காப்பியக் குடிச்சிட்டுக் கெளம்பிருந்தாம் பாலாமணி. காப்பியும் குளியலும் இருந்தா போதும் போல அவனுக்கு. அவ்வன கெளப்பி வுட்ட பெற்பாடு காலைச் சாப்பாட்டுக்கான வேல ஆரம்பமாயிருந்துச்சு. இடியாப்பமும், தேங்காய்பாலும் அத்தோட பொங்கலும் சட்டினியும். அதுக்கான வேலைகள்ல செய்யு, ஆயி, வெங்கு மூணு பேத்தும் மும்மரமா இருந்துச்சுங்க.

            தோலாமணி இன்னும் தூங்கிட்டுதாம் இருந்தாம், தூங்குறதுக்குன்னே பொறந்த ஆளெ போல. அவ்வேம் எழும்புறதுக்கான நேரம் இன்னும் ஆகும் போல இருந்துச்சு. கடியாரம் அதுக்காக ஒம்போது மணி வரையில ஓடியார்ர வேண்டியதா இருந்துச்சு. ஒம்போது மணி வாக்குல எழுந்து அஞ்சே நிமிஷத்துல பல்ல துலக்கிக் குளிச்சிட்டு வந்தவேம் ஜட்டியையும், பனியனையும் புதுசா வாங்கியிருந்த வாஷிங் மெஷின்ல போட்டு ஓட வுட்டாம்.  அதுல துணிகளப் போட்டு பவுடர்ரப் போட்டு வுட்டா அதுவே தொவைச்சி அதுவே அலசி பிழிஞ்சி இருவது நிமிஷத்துல கொடுக்குற மிஷின்ங்றதால அது பாட்டுக்கு வேலையப் பாத்துட்டு இருத்துச்சு. கையால சோப்பப் போட்டு கசக்கிப் பிழிஞ்சிருந்தா ரண்டு நிமிஷத்துக்கு மேல ஆயிருக்காது. இவ்வேம் செய்ய வேண்டிய ரண்டு நிமிஷத்து வேலைய மெஷின்கிட்டெ இருவது நிமிஷத்துக்குச் செய்ய வுட்டுப்புட்டு, தோலாமணி பாட்டுக்கு தலையில எண்ணெய்ய வைக்குறது, புட்டா மாவ்வப் போடுறது, சட்டைப் பேண்ட மாட்டுறதுன்னு வேலைகளப் பாத்துட்டு இருந்தாம்.  "சாப்புடுவோமா?"ன்னதுக்கு, "ம்! இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் போவணும்!"ன்னு சொல்லிட்டு ஒடனே சாப்புட்டாம். ரண்டு நிமிஷந்தாம் எடுத்திருப்பாம் சாப்புட. ஒடனே கெளம்புனாம். சாப்புடன்னு ஒரு மெஷின்னு இருந்திருந்தா அந்த வேலைய அதுகிட்டெ கொடுத்துட்டு இவ்வேம் பாட்டுக்கு செல்போன்ன நோண்டிட்டு இருந்திருப்பானோ என்னவோ!

            அவனெ வியப்பா பாத்துட்டு இருந்த விகடுவப் பாத்து, "யண்ணம் வித்தியாசமா பாக்குறாப்புல! சிட்டி லைப்ன்னா இதாங்! எல்லாம் வெரசா, வேகமா. அமைதியால்லாம் செய்ய முடியாது!"ன்னு சிரிச்சாம்.

            "கொஞ்சம் சீக்கிரமா எழுந்திரிச்சா பண்ணலாம்!"ன்னு விகடுவும் பதிலுக்குச் சிரிச்சாம்.

            "நோ வே! ராத்திரி வெரசா படுத்தா வெரசா எழும்பலாம். வெரசா படுக்குறதுக்குல்லாம் வாய்ப்பே யிலல! இத்து இப்பிடித்தாம். மாத்த முடியாது. வேக வேகமா ஓடிட்டே இருக்கணும். ஓடுற ஓட்டத்துலயே பல்ல துலக்கிட்டு, குளிச்சிக்கிட்டு, சாப்புட்டுகிட்டு, அதுலயே தூங்கிட்டு. எல்லாம் ஓட்டத்துலயேத்தாம். ஒஞ்ஞளுக்குத் தெரியாதுண்ணே! ஓடுற டிரெய்ன்ல, பஸ்ல சாப்புட்டுப் போறவங்களாம் இருக்காங்க! அதுல குடித்தனம் பண்ணாதவங்கத்தாம் பாக்கி. போற போக்குல அதாங் நடக்கப் போவுது. டிராவலுக்குன்னு எதுக்கு தனியா டைம் ஒதுக்கிட்டுன்னு, கூடிய சீக்கரமாவே டிராவல்லயும் அதல்லாம் நடக்கத்தாம் போவுது பாருங்க!"ன்னாம் ஒரு வெத்துச் சிரிப்ப சிரிச்சி. அவ்வேம் பேச்சுல ஒரு வேகம் தெரிஞ்சது.

            "மத்தியானத்துக்குச் சாப்பாடுன்னா எடுத்துத் தரவா?"ன்னா செய்யு.

            "வாணாம்ண்ணி! ஓட்டல்ல பாத்துக்கிறேம்!"ன்னாம் தோலாமணி.

            "மத்தியாம்ன்னா சாப்புட வாங்களேம்!"ன்னா செய்யு.

            "டிராபிக்ல வந்துட்டுப் போறதுல வர்றாமலே இருந்துடலாம் யண்ணி! வந்தாலும் இப்பிடித்தாம் ரண்டே நிமிஷத்துல சாப்புட்டுப் பறந்துட்டுப் போறாப்புல இருக்கும். பரவால்லப் பாத்துக்கிறேம்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்பிட்டாம். அவ்வேம் கெளம்பிப் போயிப் பத்து மணி வாக்குலத்தாம் பாலாமணி வந்தாம்.

            சாப்பாடு ஆரம்பமானுச்சு. சாப்புட்டுட்டு இருக்குறப்பவே, "மதுரவாயல்ல இருக்காப்லயே! வாரலயா?"ன்னாம் பாலாமணி.

            "மவ்வனெ வுட்டுக் கார்ர அனுப்பி வுடுறதா சொல்லிருக்காம். ஏதோ ஒரு வேல இருக்குதாம். அதெ பாத்துப்புட்டு நேரா திருவேற்காடு வந்துப்புடுறதா சொன்னதுதாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆஹாங்!"ன்னாம் பாலாமணி. அவ்வேம் மொகத்துல ஒரு திருப்தியையும், சந்தோஷத்தையும் பாக்க முடிஞ்சது. என்னவோ இனம் புரியாத வெறுப்பு ஒண்ணு பாலாமணிக்குச் சந்தானம் அத்தான் மேல உருவாயிருந்துச்சு.

            "நாஞ்ஞளும் சாப்பாட்ட முடிச்சிட்டுக் கெளம்புதேம். திருவேற்காடுப் போயிப் பாத்துட்டு ஊருக்குப் பஸ்ஸப் பிடிச்சிடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யம்மா கூட நாளைக்கோ நாளா நாளிக்கோ வர்றதா சொன்னிச்சு. இருந்தீங்கன்னா கூட பாத்துட்டுப் போவலாம்!"ன்னாம் பாலாமணி.

            "யம்மா பாக்குக்கோட்டைக்கு வந்தப் பெறவு போயிப் பாத்துக்கிடுறேம். அஞ்ஞப் போற வேலையும் இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வெல்! திருவேற்காடுப் போயி நேரா கோயம்பேடு வந்து ஊருக்குப் பஸ்ஸப் பிடிக்குதீயே! ஓக்கே! இஞ்ஞ வந்துட்டுப் போனாலும் டிராபிக்ல வந்து திரும்பணும். வாணாம். நாம்ம வந்துப் போவலாம்ன்னாலும் டிராபிக்தாம் பெரச்சனெ. கிளினிக்க வேற நேத்து தொறந்தாச்சு. தொறந்த மறுநாளே மூடுனா நல்லா இருக்காது. இன்னிக்கு அப்பாய்ன்மெண்ட்ஸ் வேற நெறைய கொடுத்திருக்கேம்!"ன்னாம் பாலாமணி.

            "நீஞ்ஞ பொழைப்பைப் பாருங்க! நாஞ்ஞ மொல்லமா கெளம்பிக்கிறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            பேச்சு வாக்குலயே சாப்புட்டு முடிஞ்சது. கைய அலம்பி முடிச்சிட்டு பாலாமணி கேட்டாம், "மச்சாம் ன்னா சொல்றாப்புல?"ன்னு.

            "ஆஸ்பிட்டல் மேசெ மேல ஒரு துணி கெடந்துச்சுல்லா..."ன்னு விகடு ஆரம்பிச்சதும், "அதுக்கென்ன யிப்போ?"ன்னாம் பாலாமணி ஒண்ணும் புரியாம.

            "அதெ வர்றப்ப எடுத்தாந்தீயள்ன்னா செய்யு இஞ்ஞ தொவைச்சிக் கொடுத்துப்புடுவா! அதெ தொவைச்சிப் போடணும்!"ன்னாம் விகடு. பாலாமணி வெடிச் சிரிப்பா சிரிச்சாம். "நோ! நோ! அதல்லாம் கவர்மெண்ட் பிராப்பர்ட்டிஸ். தொடக் கூடாது. ஆஸ்பிட்டல்லயே தொவைச்சிப் போடுவாங்க. அங்க உள்ளது எதையும் நாம்ம எடுத்துட்டு வாரக் கூடாது. மச்சாம் வேற எதாச்சும் முக்கியமான விசயம் பேசுவாப்புலன்னு பாத்தா அழுக்குத் துணியப் பத்தியல்லா பேசுறாப்புல! செர்ரி நாம் இதெ நோட் பண்ணிக்கிறேம். எஞ்ஞ ஹெட்டுகிட்டெ சொல்றேம். கவனிக்க வேண்டிய விசயந்தாம். துணி ரொம்ப அழுக்குல்லா!"ன்னாம் பாலாமணி.

            "ரொம்ப அழுக்குல்ல. ரொம்ப ரொம்ப ரொம்ப அழுக்கு, கறெ வேற துணி முழுக்க!"ன்னாம் விகடு.

            "பை தி வே! நாம்ம ஒஞ்ஞளுக்குச் சில புத்தகங்களக் கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணிருக்கேம். வெயிட்!"ன்னு சொல்லிட்டு உள்ளாரப் போயி சில மருத்துவம் சம்பந்தமான புத்தகங்கள எடுத்து வந்தாம்! "இதல்லாம் படிங்க. தெரிஞ்சிக்க வேண்டிய விசயங்க இதுல நெறைய இருக்கு! புள்ளைங்ககிட்டெ இந்த விசயங்களக் கொண்டுட்டுப் போங்க!"ன்னாம் பாலாமணி. அதெ வாங்கிக்கிட்டாம் விகடு. அது எல்லாம் இந்திய மருத்துவ முறைக சம்பந்தமான புத்தகங்க.

            சுப்பு வாத்தியாரு கெளம்புறதுக்குத் தயாரானாரு. சனங்களும் அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல தயாரானுச்சுங்க. செய்யு ஓடியாந்து வெங்குவ கட்டிப் பிடிச்சிக்கிட்டு அழுதா. பெறவு ஆயியக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு அழுதா. வெங்கு தன்னோட கையில இருந்து நூத்து ரூவாய மவ்வேகிட்டெ கொடுத்துச்சு. ஆயியும் தம் பங்குக்குக் கையிலேந்து நூத்து ரூவாய எடுத்துக் கொடுத்தா. சுப்பு வாத்தியாரு மவளோட கையில ஐநூத்து ரூவாயக் கொடுத்தாரு. அதெ வாணாம்ன்னா செய்யு. "யப்பா கொடுக்குறதெ வாணாம்ன்னு சொல்லப்படாது!"ன்னு வெங்கு சொன்னதும் வாங்கிக்கிட்டா.

            பாலாமணி என்ன நெனைச்சானோ தெரியல, "யக்கா! மாமா! ஆசிர்வாதம் பண்ணுங்கோ!"ன்னு செய்யுவ பக்கத்துல வர வெச்சு செய்யுவும் அவனுமா கால்ல வுழுந்தாம்.

            "ந்நல்ல வெதமா இருங்கப்பா! சம்பாதிக்குற சம்பாத்தியம்லாம் போதும். நெறைய ஏழை பாழைகளுக்கு நல்ல வெதமா வைத்தியத்தெ பண்ணி வுடுங்க. ரொம்ப சம்பாத்தியம்லாம் வாணாம். அளவா இருக்குறதுதாங் எல்லாத்துக்கும் நல்லது. ஒத்துமையா சந்தோஷமா குடும்பத்துக்குன்னு நெடுநேரம் செலவு பண்ணி இருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. கால்ல வுழுந்து எழுந்திரிச்சதுக்கு ஆயிரத்து ரூவாய எடுத்து ரண்டு பேரு கையிலயும் கொடுத்தாரு.

            "வாணாம் மாமா!"ன்ன பாலாமணி, "ஆசிர்வாதம் பண்றப்போ கொடுக்குற காசிய வாணாம்ன்னு சொல்லப்படாது!"ன்னு சுப்பு வாத்தியாரு சொன்னதும் வாங்கிக்கிட்டாம்.

            "காருக்கான பணம் பத்திரமா பாங்கியிலத்தாம் இருக்கு. யிப்போ காரு வாங்கப் போறதில்ல. எடந்தாம் வாங்கப் போறதா முடிவு பண்ணிருக்கேம்!"ன்னாம் பாலாமணி.

            "நல்ல எடமா அமையுறப்போ பாத்து வாங்கிப் போடுங்க. அஞ்ஞ வூட்டக் கட்டுறப்போ ஏத்தோ நம்மால முடிஞ்சது அப்போ அஞ்சு லட்சத்தெ தர்றேம். சின்னதா நல்ல வெதமா சிறுகக் கட்டி பெருக வாழ்ங்ற மாதிரிக்கி வீட்டெ கட்டிக்கிட்டு மங்கலகரமா இருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "சின்னம்மாகிட்டெ கலந்துகிட்டு அடுத்த மாசம் தாலி பெருக்கிப் போட்டுப்புடலாமான்னு பாத்துக்கிடலாம். அப்போ வார்றப்போ வூட்டுக்கு வந்துட்டுப் போவலாம்."ன்னுச்சு வெங்கு.

            விகடுவுக்கு அப்போ சந்தானம் அத்தான் மவ்வேங்கிட்டேயிருந்து போன் வந்துச்சு. போன எடுத்துப் பேசுனவேம், "கார்ரு வந்துடுச்சு!"ன்னாம்.

            "செரி கெளம்புவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. கெளம்புறப்போ விகடு ஐநூத்து ரூவா தாளு ஒண்ணுத்தெ செய்யுகிட்டெ கொடுத்தாம்.

            "நீந்தாம் பாக்கின்னு நெனைச்சேம். நீயுமாண்ணா? ஒனக்குத்தாம் பணங் கொடுக்குற பழக்கமெல்லாம் கெடையாதே. எப்பிடிண்ணே இப்பிடி மாறுனே?"ன்னா செய்யு.

            "அதாங் நாம்ம இருக்கேம்லா! வேணுங்ற பணத்தெ கொடுக்குறேம். ஆளாளுக்கு நீஞ்ஞ கொடுக்குறதிலயே பணம் நெறையா சேந்துடும் போலருக்கே. இந்த மாசத்தெ அதெ வெச்சே ஓட்டிப்புடலாம் போலருக்கே! நாமளும் கொடுக்காம இருக்கப் படாது!"ன்னு சிரிச்சிக்கிட்டெ பாலாமணி பவ்வுப் பாப்பா கையில நூத்து ரூவா தாள ஒண்ணுத்தெ எடுத்துக் கொடுத்தாம். அதெ பவ்வுப் பாப்பா வாங்க மாட்டேம்ன்னு கைய இறுக்க மூடிட்டா. ஆயிதாம், "அதெ வாங்கிக்கிடணும், பெரியவங்க கொடுக்குறப்ப!"ன்னு சொல்லி அதெ வாங்க வெச்சா. பணத்தெ வாங்குனவெ அதெ ஒடனே ஆயிகிட்டெ கொடுத்தா.

            "சமத்தாதாங் இருக்குறா பாப்பா! பொம்பளப் புள்ளே யில்ல!"ன்னாம் பாலாமணி சிரிச்சாப்புல.

            ரண்டு கேட்டுகளத் தொறந்துகிட்டு சனங்க எல்லாம் வெளியில வந்துச்சுங்க. "ஏம் மேல வாரல? வர வேண்டித்தானே? வந்து சாப்புட்டு ஒரு காப்பியக் குடிச்சிட்டுத்தாம் கெளம்பணும்! யில்லன்னா கார்ர கெளம்ப வுட மாட்டேம்!"ன்னா செய்யு சந்தானம் அத்தானோட மவ்வனப் பாத்து.

            "இப்பதாங் டேங்க் புல்லானுச்சு. இன்னொரு நாளு வர்றப்ப சாப்புடுதேம். பிரெண்ட்ஸ் வெயிட்டிங். திருவேற்காடு கொண்டுப் போயி வுட்டுப்புட்டு ரிட்டர்ன் ஆவணும். இந்தச் சான்ஸ் வுட்டுப்புட்டா பெறவு யப்பா கார்ரக் கொடுக்காது! கொடுக்குறப்பவே பயன்படுத்திக்கணும்லா!"ன்னாம் சந்தானம் அத்தானோட மவ்வேம். சனங்க எல்லாரும் ஏறுனப்போ காரு கெளம்புனுச்சு. பாலாமணியும், செய்யுவும் டாட்டா காட்டுனாங்க. காரு நேரா போயித் திரும்பி மெயின்ரோட்ட அடைஞ்சு டிராபிக்ல கலந்து செப்பு வெளக்கப் பாத்ததும் சிக்னல்ல நின்னுச்சு. அப்போ ஒரு பெட்டிக்கடைக்குப் பக்கத்துல தோலாமணி நின்னுகிட்டு சீரெட்டு அடிச்சிட்டு இருந்தாம். அதெ கார்ல இருந்த மித்த யாரும் அவனெப் பாக்கல. விகடு மட்டும் பாத்தாம். என்னவோ அவசரமா அவசரமா கெளம்புனாம். இவ்ளோ நேரமா இங்க நின்னுகிட்டு சீரெட்ட ஊதிட்டு இருக்கானேன்னு அவ்வேம் நெனைக்குறதுக்குள்ள சிக்னல்ல பச்செ வுழுந்து கார்ரு நகர ஆரம்பிச்சது.

            "கோவப்பட்டாலும் கொணமான பையந்தாம்! என்னத்தெ சொல்ல? வேல அப்பிடி! நம்மள மாதிரியா? புள்ளைங்களயே பாத்துட்டு இருந்துட்டு புள்ளீயோட புள்ளீயாவே இருந்தாச்சு. பயலும் அப்பிடியே புள்ளீயோள பாக்குறாப்புல வாத்தியாரு ஆயிட்டாம். டாக்கடர்ன்னா நோயாளியளப் பாத்துதாங் ஆவணும். வக்கீல்ன்னா பாவஞ் செஞ்சவனோட பேசித்தாம் ஆவணும். போலீஸ்ன்னா குத்தம் பண்ணவனப் பாத்துதாம் ஆவணும். அந்தந்த வேலைக அப்பிடி. அதுக்கு ஏத்தாப்புல கொணப்பாடு உண்டாயிடும். எல்லா வேலையிலயும் சந்தோஷமான மனுஷங்களப் பாக்குறது வாத்திமாருக மட்டுந்தாம். சம்பளம் கூடவோ கொறைச்சலோ கொடுத்து வெச்சவுக வாத்திமாருக!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "மாமா! தம்மோட வேலைய வுட்டுக் கொடுத்துக்க மாட்டாங்களே?"ன்னா ஆயி.

            "வுட்டுக் கொடுக்குறதுன்னு யில்ல. நெசம் அதுதாம். எல்லா வேலையிலயும் பிடுங்கல் இருக்கு. வாத்தியாரு வேலையில மட்டும் அத்து கெடையாது. புள்ளீயோளோட கள்ளம் கவுடு யில்லாத சிரிப்புத்தாம் எப்பவும் இருக்கு. வேலைன்னா அப்பிடித்தாம் வாத்தியார்ரா போவணும். யில்லன்ன கவர்மெண்டு உத்தியோகத்துல சின்னதா உள்ள உத்தியோகமா கிளார்க்கா, வீயேவோவா போவணும். பெரிய உத்தியோகம்லாம் சுத்தப்படாது. இந்த வேலையிலத்தாம் வேல முடிஞ்சா வூட்டுக்கு வந்தோமான்னு இருக்கலாம். வேலையப் போல குடும்படும் முக்கியம். குடும்பத்தெப் போல வேலையும் முக்கியம். எதுக்காகவும் எதையும் வுட்டுக் கொடுக்காம வேலயப் பாக்கணும்ன்னா இந்த வேலைங்கத்தாம் செரி. ஒரு டாக்கடர்ரத் தேடி எந்த நேரத்துல வெயாதிக்கார்ரேம் வருவான்னே சொல்ல முடியாது. அதுக்கு ஒரு டாக்கடர்ரு தயாராத்தாம் இருக்கணும். ஒரு வழக்கு தீவிரமாயிடுச்சுன்னா வக்கீலால தூங்கவே முடியாது. அதெப் பத்தி யோஜனெ பண்ணிப் படிச்சிட்டெ இருக்கணும். போலீஸ்ல்ல இருக்கவுகளப் பத்திச் சொல்லவே வேண்டியதில்லே. நிம்மதியா ஒரு பத்து நிமிஷம் கண்ணசர முடியுமா? எல்லாத்தையும் பாத்தப் பெறவுத்தாம் சொல்றேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "தாத்தா! நாம்ம படிச்சிட்டு இருக்குற எஞ்சினியர்ரப் பத்தி எதுவும் சொல்லாம வுட்டுப்புட்டீயளே?"ன்னாம் சந்தானம் அத்தானோட மவ்வேம்.

            "நீயி எஞ்சினியர்ரா யம்பீ படிக்குதீயே?"ன்னா ஆயி அதெ கேட்டுட்டு கிண்டல் பண்ணுறாப்புல.

            "அதுல ன்னா சந்தேகம்?"ன்னாம் சந்தானம் அத்தானோட மவ்வேம்.

            "யப்போ யின்னிக்குக் காலேஜ் இருக்கணுமில்லா?"ன்னா ஆயி.

            "அத்து... தாத்தா பாட்டியல்லாம் நீஞ்ஞல்லாம் வந்திருக்கீயே! ஒஞ்ஞள நாம்ம ல்லன்னா யாரு கொண்டுப் போயி கார்ல வுடுறது! அதுக்காகத்தாம். எப்பப் பாத்தாலும் காலேஜூப் போயி படிச்சிட்டு இருக்குறவம்லாம் பெரிய ஆளு கெடையாது. எப்பவாச்சும் காலேஜூ போனாலும் படிக்கிறவ்வம்தாம் பெரிய ஆளு!"ன்னாம் சந்தானம் அத்தானோட மவ்வேம்.

            "நெஜமா தாத்தாப் பாட்டிக்காக எஞ்ஞளுக்காகன்னா பரவால்ல. ஏத்தோ பிரண்ட்ஸ் அத்து இத்துன்னு சொல்லி கார்ரு இன்னிக்குத்தாம் கெடைச்சிதுன்னு சொன்னதெல்லாம்?"ன்னா ஆயி.

            "அத்து வந்து தாத்தாப் பாட்டி ஒஞ்ஞளக் கொண்டுப் ‍போயி வுட்டப் பெறவு டைம் பாஸூக்கு என்னத்தெ பண்ணுறதாம்?"ன்னாம் சந்தானம் அத்தானோட மவ்வேம்.

            "அப்புறம் ஒண்ணும் கேட்டா தப்பா நெனைச்சிக்கக் கூடாது!"ன்னா ஆயி.

            "எதெ வாணாலும் கேக்கலாம். எதெப் பத்தியும் தப்பா நெனைக்க மாட்டாம் இந்த குருநாத்!"ன்னாம் சந்தானம் அத்தானோட மவ்வேம். 

            "காலேஜ்ல எத்தனெ கிளியர்ஸ், அரியர்ஸ்!"ன்னா செய்யு.

            சட்டுன்னு கார்ர ஓரங்கட்டி பிரேக்கப் போட்டு நிறுத்துனவேம், "ஆம்பளைட்ட சம்பளத்தப் பத்தியோ, பொம்பளைட்ட வயசப் பத்தியோ, படிக்குற புள்ளீயோட்ட அரியர்ஸ்ஸப் பத்தியோ கேக்கக் கூடாது. நாட்டுல கடன் வாங்காத இந்தியனும் கெடையாது, காலேஜ்ல அரியர்ஸ் வைக்காத மாணவனும் கெடையாது. இதெப் பத்தி இனுமே யாரும் கேக்கக் கூடாது!"ன்னாம் சந்தானம் அத்தானோட மவ்வேம்.

            "யப்பா! மொதல்ல வண்டிய எடுடா எஞ் செல்லம்! ஒங்கிட்டு படிப்பப் பத்திக் கேப்பாளா எம் மருமவ்வே?"ன்னு வெங்கு சொன்னதும்தாம் கார்ரக் கெளப்புனாம் சந்தானம் அத்தானோட மவ்வேம். அதுக்குப் பெறவு யாரும் எதையும் பேசல. பிரேக்லேந்து கால எடுத்த சந்தானம் அத்தானோட மவ்வேம், வேற எங்கேயும் பிரேக்கப் போடாம கார்ர நேரா திருவேற்காட்டுல மலர் அத்தாச்சி வூட்டுக்கு மின்னாடிக் கொண்டு போயி நிறுத்திப் போட்டாம் பிரேக்க. "எல்லாமும் வேகமா எறங்குங்க. அடுத்த அசைன்மெண்ட்டப் பாக்கணும் அய்யா!"ன்னாம்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...