20 Sept 2020

கோபக்கார அண்ணாத்தே!

கோபக்கார அண்ணாத்தே!

செய்யு - 570

            ராத்திரி எட்டு மணி போல வர்றதா சொன்ன பாலாமணி பத்து மணிக்கு மேலத்தான் வந்தாம். ரொம்ப நேரம் அவனுக்காகக் காத்திருந்து எல்லாமும் உக்காந்திருந்துச்சுங்க. பாலாமணியோட ஒண்ணுவுட்ட தம்பி தோலாமணி ஏழு மணி வாக்குல வந்தாம். அவ்வேங் கூடத்தாம் பாலாமணி வர்ற வரைக்கும் பேச்சு நடந்துச்சு.

            "யம்பீ! ரொம்பக் கோவப்படுமோ?"ன்னுச்சு வெங்கு தோலாமணிகிட்டெ.

            "ரொம்ப கரிக்டா இருக்கணும் யண்ணனுக்கு.            யண்ணனப் பேச வுட்டுட்டு நாம்ம கேட்டுட்டு இருந்தா பெரச்சனெ யில்ல. நாம்மளா பேசுனா பெரச்சன ஆயிடும். அதெ பேச வுட்டா நாம்ம எதெ பேசணும்ன்னு நெனைக்குறமோ அந்த எடத்துக்கு அதுவாவே வந்துடும். ஆன்னா நாம்ம முங்கூட்டி அந்த எடத்துலப் போயி நிக்கக் கூடாது. யண்ணன் ரொம்ப ரொம்ப நல்ல மனுஷம். அதே நேரத்துல ரொம்ப ரொம்ப கோவமான மனுஷம். ரொம்ப ரொம்ப நல்லவங்க ரொம்ப ரொம்ப கோவமாத்தானே இருப்பாய்ங்க. ஒதவில்லாம் யண்ணனப் போல பண்ணுறதுக்கு ஆளே கெடையாது. கோவில்ன்னா போதும் வாரி வாரி எறைக்கும்! கோவம் வந்துட்டா அதுட்டேயிருந்து நல்ல வார்த்தையே எதிர்பாக்க முடியாது. பேசுறதையல்லாம் பேசிட்டு நாலு நாளைக்கு மொகம் கொடுத்துப் பேயாது. ஆன்னா நாம்ம பேயாம நாம்ம பாட்டுக்கு இருந்தா கொஞ்ச நேரத்துலயே ஒடனே பேசிடும். பேச வைக்கணும்ன்னு நெனைச்சிப பேசிப் பாத்தா பேசப் பேச வெலகிப் போயிட்டே இருக்கும். யண்ணனோட கொணத்துக்குச் செட்டாயி யண்ணங் கூடயே ரொம்ப நாளு அறையில யிருந்த ஒரே ஆளு நாம்மத்தாம்!"ன்னாம் தோலாமணி.

            "இன்னிக்கு அப்பிடித்தாம் நாத்தனாரோட மவ்வேம் கார்ரப் பத்தி பேசிட்டாம்ன்னு கோவம் வந்துப்புட்டு!"ன்னுச்சு வெங்கு.

            "கார்ரப் பத்தி யண்ணனும் சொல்லிட்டுத்தாங் இருந்துச்சு. கடெசீ நேரத்துல இன்னோவா கார்ல போயி நின்னுடுச்சு யண்ணனோட கவனம். பத்து லட்சத்துக்கும் வாங்கிருக்கலாம். என்னவோ பன்னெண்டு லட்சத்துல ஒரு மாடல்லப் போயி நின்னுச்சு. மாடல் பேரு கூட என்னவோ சொன்னிச்சு. பெட்ரோல்ல போறது. மறந்துப் போச்சு. பணங் கொஞ்சம் கொறையுதுங்றதால வாங்கலன்னுச்சு!"ன்னாம் தோலாமணி. சொல்லிட்டு, "யண்ணனோட கோவம் இன்னிக்கே ஸ்டார்ட் ஆயிடுச்சா? வந்த ஒடனே பேயாம நீஞ்ஞ பாட்டுக்கு இருங்க. அதுவா வந்துப் பேசும்! பேசிட்டா போச்சு. வெனையே வாணாம்."ன்னு சிரிச்சாம்.

            "கிளினிக்குப் போயிட்டு வந்துடறதா சொல்லிருக்கு யம்பீ!"ன்னுச்சு வெங்கு.

            "ஆரம்பிச்சிட்டா அதுக்குள்ள கிளினிக்கெ? சொல்லிட்டுதாங் இருந்துச்சு. இருவத்து நாலு மணி நேரமும் எந்திரத்தெப் போல எயங்கிட்டெ இருக்கும். எப்பிடின்னுத்தாம் புரியாது. ராத்திரி வந்தும் யெதை யெதையோ படிச்சிட்டும், எழுதிட்டும் கெடக்கும். தூங்கறப்போ மணி ராத்திரி ஒண்ணும் ஆவும், ரண்டும் ஆவும். ஆன்னா செரியா எழும்பி ஏழு மணிக்குல்லாம் வண்டிய எடுத்துட்டு டியூட்டிக்குக் கெளம்பிடும். எப்பிடின்னே புரியாது! நாஞ்ஞல்லாம் பன்னெண்ட தாண்டி படுத்தாலே காலையில எழும்ப பத்து மணிக்கு மேல ஆவும். வெரசா குளிச்சிட்டு பதினொண்ணு, பன்னெண்டுக்குத்தாங் ஆபீசுக்கு ஓடுவேம். யண்ணன் ஒரு வித்தியாசமான ஆளுதாங். வாரம் தவறாம பாக்குக்கோட்டைப் போயிட்டு வந்துடும். விடியக்காலம்பர நாலு மணிக்கு, அஞ்சு மணிக்குன்னு அறைக்கு வரும். அரை மணி நேரம், ஒரு மணி நேரந்தாம் சின்னதா தூக்கத்தப் போடும். ஒடனே குளிச்சதுன்னா அது பாட்டுக்கு ஓடிட்டெ இருக்கும். எந்திரந்தாம் யண்ணன்! அதால யண்ணி கரிக்டா இருந்துக்குங்க. மித்தபடி ஒண்ணும் கவலெப்பட வேண்டியதில்லே. கேக்காமலயே மனசுல உள்ளதெ கண்டுபிடிச்சி வாங்கியாந்து கொடுத்துடும்!"ன்னாம் தோலாமணி.

            "கேட்டுக்குங்க செய்யு! அதுப்படி பாத்து நடந்துக்கோங்க!"ன்னா ஆயி.

            "நமக்கென்ன யண்ணி? அவுங்க சொல்றதுதாங்!"ன்னா செய்யு.

            "யப்பிடின்னா ஒரு பெரச்சனயும் வர்றப் போறதில்ல!"ன்னு சொல்லிட்டு சிரிச்சாம் தோலாமணி.

            "ஒத்துப் போயிடுறதாங் நல்லதும்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வேற எந்த கெட்டப் பழக்கமும் யண்ணங்கிட்டெ கெடையாது. குடி, சீரெட்டுன்னு எதுவுமே கெடையாது. அதுக்குல்லாம் சேத்து கோவம் வந்துடும். ஒருவேள குடி, சீரெட்டுன்னு யிருந்தா அதெல்லாம் கொறைஞ்சிருக்குமோ என்னவோ?"ன்னு சிரிச்சாம் தோலாமணி.

            அப்படிப் பேச்சு பாலாமணியப் பத்தி பலவெதமா போயிட்டே இருந்துச்சு. பத்து மணிக்கு மேல பாலாமணி வர்றது வரைக்கும் பாலாமணியப் பத்தினப் பேச்சுதாம்.

            எல்லாத்தையும் கேட்ட பெற்பாடு வெங்குவோட மொகத்துல ஒரு கவலரேக படந்தாப்புல இருந்துச்சு. குடித்தனம் ஆயி ரண்டு நாளு கூட ஆகலயே, பத்து மணியத் தாண்டி வர்ற வேண்டிய அவசியம் என்னாங்குறதுதாங் அந்த கவலரேகயோட காரணம். பாலாமணி வர்றதுக்கு மின்னாடியே எட்டு மணி வாக்குல தேங்காய் சட்டினியும், கடப்பாவும் தயாரா இருந்துச்சு. இட்டிலியச் சுட்டிருந்தா சூடு ஆறிடுமேன்னு ஊத்துறதுக்குத் தயாரா இருந்துச்சு. இட்டிலிய ஊத்தப் போற நேரத்துல, "சாப்பாடு ன்னா?"ன்னாம் உள்ளார வந்தப் பாலாமணி. இட்டிலின்னுச் சொன்னதுக்கு அதெ தோசென்னு மாத்திட்டுக் குளிக்கப் போனாம்.

            பாலாமணி குளிச்சிட்டு வந்து உக்காந்தப்போ தோசை தயாரா இருந்துச்சு. சாப்புடுறதுக்குக் கீழயே உக்காந்தாம் பாலாமணி. ஒரு எலையப் போட்டு அவனுக்கு மட்டுந்தாம் சாப்பாடு நடந்துச்சு. பாதிச் சாப்புட்டுருப்பாம். "நீஞ்ஞல்லாம் சாப்புடலையா?"ன்னாம் பாலாமணி.

            யாரும் பேசல. ஆனா யில்லங்ற மாதிரிக்கி தலைய ஆட்டுனுச்சுங்க சனங்க.

            "நீஞ்ஞல்லாம் சாப்புட்டு உக்காந்திருக்குறதா நெனைச்சிட்டுல்லா நாம்ம சாப்புட உக்காந்துட்டேம். மணி யென்ன? பத்தரை ஆவப் போவுது. ஏய் செய்யு? யின்னும் சாப்பாடு பண்ணாம ன்னத்தா பண்ணே?"ன்னாம் பாலாமணி.

            "எல்லாத்துகிட்டேயும் கேட்டாச்சு. நீஞ்ஞ வந்தப் பெறவுதாம் சாப்பாடுன்னுட்டாங்க!"ன்னா செய்யு.

            "யப்பிடின்னா எல்லாத்துக்கு எலையப் போட்டுச் சாப்பாட்ட பண்ண வேண்டித்தானே?"ன்னாம் பாலாமணி.

            "இட்டிலின்னா சுட்டுப் போட்டு அப்பிடிப் பண்ணலாம். தோசன்னா ஒவ்வொண்ணா சுட்டுத்தானே சாப்பாட்ட பண்ண முடியும்! நீஞ்ஞ சாப்புட்டு முடிச்ச பெற்பாடுதாங் ஒவ்வொருத்தர்ர சுட்டுத் தர்ற முடியும்!"ன்னா செய்யு.

            "ஓ! அதாங் நைட்டு இட்டிலின்னியா? நாம்ம அத்துப் புரியாம தோசென்னுட்டேம். சாரிப்பா!"ன்னாம் பாலாமணி. அவ்வேம் சாரின்னு கேக்குறதெ எல்லாத்துக்கும் ஆச்சரியமா இருந்துச்சு. "யிப்போ இட்டிலிப் பானைய வெச்சா முடிச்சிடலாம்ல?"ன்னாம் பாலாமணி.

            "ஒஞ்ஞளுக்கு மட்டும் தோசெ. மித்த எல்லாத்துக்கும் இட்டிலியா? ஒஞ்ஞளுக்கு ஓக்கேன்னா இட்டிலிப் பானைய வைக்குதேம். வெச்சப் பானதானே. எடுத்தாச்சு. எல்லாம் தயாராத்தாம் இருக்கு! உத்தரவுப் போட்டா வேல ஆயிடும்!"ன்னா செய்யு.

            "கிளினிக்குல ரொம்ப கேஸ்ப்பா! நாம்ம எதிர்பாக்கல. அதெ நெனைப்புல வந்துட்டேம். நீந்தாம் போன அடிச்சி கொஞ்சம் ஞாபவம் பண்ணிருக்கலாம்ல!"ன்னாம் பாலாமணி.

            "டியூட்டி டையத்துல போன் அடிக்கக் கூடாதுன்னு சொல்றது. பெறவு போன அடிச்சா ன்னாங்றது? நாம்ம ன்னத்தப் பண்ணுறது? போன அடிக்கலாம்ன்னு டியூட்டி டயத்துல கேட்டுட்டு அடிக்கிறதா? ஒண்ணுக்கொண்ணு மொரண்பாடல்லா போவும்!"ன்னா செய்யு.

            பாலாமணி சிரிச்சாம். பதிலு ஒண்ணும் சொல்லல. "சமயத்துல இப்பிடித்தாம் ஆயிடுது!"ன்னு முணகிக்கிட்டாம். அவ்வேம் சாப்புட்டு முடிச்சப் பெறவு தோலாமணியச் சாப்புடக் கூப்ட்டா அவ்வேம் கடெசீயாத்தாம் சாப்புடுவேம்ன்னு அடம் பண்ணாம். செரின்னு மித்த இருந்த ஆளுக ஒவ்வொருத்தருக்கா தோசெ சுட்டு வந்துகிட்டெ இருந்துச்சு. விகடு சாப்பிட்டு முடிச்சதும் படுக்கை அறைக்குப் பக்கத்துல இருந்த அறைக்குப் போயிருந்த பாலாமணி அங்க கூப்புட்டாம். விகடு அந்த அறைக்கு அப்பத்தாங் போனாம். அறை முழுக்க புத்தகமா அட்டைப் பெட்டிகள்ல கட்டு கட்டி இருந்துச்சு.

            "பழைய ரூம்லேந்து எடுத்தாந்தது. இன்னும் அடிக்கி வைக்கல. மச்சானுக்குப் புஸ்தகம் படிக்குறதுல ரொம்ப இஷ்டம்ன்னுல்லா கேள்விப்பட்டேம்!"ன்னாம் பாலாமணி. ஆமாங்ற மாதிரிக்கி சிரிச்சாம் விகடு சிரிச்சாம்.

            "என்னென்ன மாதிரியான புத்தகங்களப் படிப்பீயே?"ன்னாம் பாலாமணி.

            "நாவல், சிறுகதெ, கவிதெ, தத்துவம் இந்த மாதிரி!"ன்னாம் விகடு.

            "நமக்கு அதெல்லாம் படிக்க நேரமே இருக்குறதில்ல. புல் அன்ட் புல் ஆயுர்வேதாத்தாம். ஒரு நாளைக்கு கொறைச்சலா ஒன் அவர் ரீட் பண்ணாம படுக்க மாட்டேம். ஆயுர்வேதாவுல எந்த டாப்பிக்னாலும் அதெ ஒரு கட்டுரையா அரை மணி நேரத்துல எழுதிடுவேம். எப்பிடியோ எப்பிடியும் எழுதிடுவேம். வேதா ஹெல்த்ன்னு பை மன்த்லி படிக்குறதுண்டா?"ன்னாம் பாலாமணி. இல்லங்ற மாதிரிக்கி தலைய ஆட்டுனாம் விகடு.

            "அதுல ஒவ்வொரு இதழ்லயும் நம்ம கட்டுரை வருது, பாலாமணி பியெயெம்மஸ்ன்னு பேர்ரு போட்டு நலம் தரும் ஆயுர்வேதான்னு. போட்டோவக் கூட போடணும்ன்னு கேட்டாங்க. நாம்ம ஒத்துக்கிடல. எழுதுறதுக்கு பணம்லாம் கூட கொடுப்பாங்க. நாம்ம வாங்கிக்கிறது கெடையாது. கலியாணத்துல கூட புக்கு ஒண்ணு போட்டேம்லா. அத்து கூட வேதா ஹெல்த்தோட பிரிண்டர்ஸ்ல அச்சு பண்ணதுதாம். நமக்குன்னு தெரிஞ்சதும் டிடிபி, பிரிண்டிங் சார்ஜ் ப்ரி. பேப்பர் வாங்கிக் கொடுத்ததுதாம். நாம்ம அவுங்க இதழ்ல எழுதறதுக்கு பணம் வாங்கிக்கிடாததால அப்பிடிப் பண்ணிக் கொடுத்தாங்க. மச்சாம் எழுதுறது உண்டா?"ன்னாம் பாலாமணி. உண்டுங்ற மாதிரி தலைய ஆட்டுனாம் விகடு.

            "தட்ஸ் குட்! எதுலாச்சும் எழுதுனது பப்ளிஷ் ஆயிருக்கா?"ன்னாம் பாலாமணி. ஆயிருக்குன்னு தலைய ஆட்டுனாம். எதுலன்னு பாலாமணி கேக்காதால விகடு மேக்கொண்டு சொல்லல. 'வேதா ஹெல்த்' பத்திரிகையோட பழசுங்க கெடந்ததெ எடுத்து அதுல தன்னோட கட்டுரை வெளிவந்ததெ எடுத்துக் காட்டுனாம் பாலாமணி. அதெ வாங்கிப் படிச்சுப் பாத்தாம் விகடு. "ஒண்ணும் அவ்சரமில்லெ. இதெல்லாம் மச்சாம் வெச்சிக்கிட்டு மெல்லமா படிச்சிக்கிடலாம். புக்ஸூம் நெறைய போட்டுருக்கேம்!"ன்னு சொல்லி பாலாமணி தாம் போட்ட புத்தகங்கள எடுத்து ஒவ்வொண்ணா காட்டுனாம். தலைமுடி கருக்க ஆயுர்வேத வழிகள், மெனியைப் பளபளக்க வைக்கும் ஆயுர்வேதம், ஆயுளை வளர்க்கும் ஆயுர்வேதம், கணவன் மனைவி இன்பத்தைப் பெருக்கும் ஆயுர்வேதம், அன்றாட பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆயுர்வேதம்ன்னு வரிசையா புத்தகங்கள பாலாமணி காட்ட விகடு பாத்துட்டே இருந்தாம்.

            "எல்லா புத்தகமும் ரண்டு மூணு எடிசன் சக்சஸ்புல்லா சேல்ஸ் ஆயிடுச்சு. ஆரெம்பியா இருக்குறவங்ககிட்டெ இந்தப் புத்தகங்களுக்கு நல்ல கிராக்கி. புத்தகத்தெப் போட்டா எங்கிட்டெ கைகாப்பி ஒண்ணு வெச்சிக்கிக்கக் கூட முடியாம போயிடுது. அதால எல்லாத்திலும் ஒண்ணொண்ணுத்தாம் தங்குனுச்சு. நமக்குன்னு ஒரு காப்பி வேணும்லா. அதாங் மச்சானுக்கு இதுல கொடுக்கல. நெக்ஸ்ட் எடிசன் போடுறப்போ மச்சானுக்கு நாமளே போஸ்ட்ல போட்டு வுட்டுடுறேம்!"ன்னாம் பாலாமணி.

            விகடு பாலாமணி பேசுனதையெல்லாம் காதுல வாங்கிட்டானே தவுர ஒண்ணும் பேசல. அதுக்கும் சேத்து பாலாமணியேப் பேசுனாம். "மச்சாம் பேசலையே! நம்மகிட்டெ மச்சாம் ப்ரீயா பேசணும். எதெப் பேசுறதுக்கும் மச்சானுக்கு உரிமெய நாம்ம கொடுக்குறேம். மச்சாம் எழுதுனதெ எல்லாம் தொகுத்து வெச்சீங்கன்னா ஒரு பொத்தகத்தக் கூட போட்டுப்புடலாம். அந்த ஏற்பாடுகள நாம்மப் பாப்பேம்! மச்சானுக்குப் புத்தகம் போடுறதுல விருப்பம் இருக்குல்லா?"ன்னாம் பாலாமணி.

            இல்லங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டுனாம் விகடு. "ஏம்?"ன்னாம் பாலாமணி சின்ன புள்ளைக்கிட்டெ சிரிச்சிட்டுக் கேக்குறாப்புல.

            "ஒரு புத்தகத்துக்காக அதோட காயிகத்துக்காக நெறைய மரங்கள் வெட்டப்படுறத நாம்ம விரும்பல!"ன்னாம் விகடு.

            "பணத்தெ கூட காயிதத்துத்துலதாம் அதாச்சி மரங்கள வெட்டித்தாம் கூழா காய்ச்சி செய்யுறாங்க. அதுக்காக மாச்சானுக்கு பணமும் பிடிக்காதோ ன்னா?"ன்னு பாலாமணி பெரிசா சிரிச்சாம்.

            "புத்தகம் போடணும் மச்சாம். பெரிசா அதுல லாவம் கெடையாது. நெறையப் பேத்துக்கிட்டெ நம்மப் பேர்ர ஒரு புத்தகத்தாலத்தாம் கொண்டுப் போயிச் சேக்க முடியும். நாம்ம புத்தகம் மட்டும் போடலன்னா வேதா ஹெல்த்ல நலந் தரும் ஆயுர்வேதா கட்டுரைய எழுதிருக்கவே முடியா. நாம்ம போட்டப் புத்தகங்கத்தாம் விசிட்டிங் கார்டெப் போல ஒதவிப் பண்ணிச்சு! அதால புக் போடுறதெப் பத்தி யோஜனெ பண்ணுங்க. செரின்னா நாளைக்கே கூட வேலைய ஆரம்பிச்சிடலாம்!"ன்னாம் பாலாமணி.

            "மரங்கள வெட்டி காயிதம் தயார் பண்ணி புத்தகம் போடுற அளவுக்கு உன்னதமான கருத்துக வந்தா பாக்கலாம் மச்சாம். எழுத வேண்டியதெ எல்லாம் எழுதிட்டாங்க. படிக்க வேண்டிய வேலத்தாம் நெறைய இருக்கு. எழுத வேண்டியதுங்றது கம்மித்தாம்!"ன்னாம் விகடு.

            "தட்ஸ் குட்! ‍ஐ லைக் யுவர் தாட்ஸ்! என்னவோ தெரியல மச்சாம் ஒஞ்ஞள நமக்கு ரொம்ப பிடிச்சிப் போயிருக்கு. பட் இந்த ஒலகத்துல பப்ளிசிட்டி யில்லாம இருக்குறது ரொம்ப டேஞ்சரஸ். யாருக்குமே தெரியாம போவுற அபாயம் இருக்கு! கண்டிப்பா மச்சானப் பத்தி குமுதம், கல்கின்னு ரெபர் பண்ணுறேம். அஞ்ஞல்லாம் நமக்குத் தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்க. நம்மகிட்டெ ட்ரீட்மெண்டும் எடுக்குறாங்க. நம்மகிட்டெ ஆர்டிகிள்ஸ் கேட்டுருக்காங்க. யப்போ நேரம் பாத்து அதுல மச்சானோட எழுத்த கொண்டு வர்றேம்! நம்ம புக்ஸ் கலக்சன மச்சாம் பாருங்க!"ன்னாம் பாலாமணி.

            ராத்திரி பன்னெண்டு மணி வரைக்கும் பாலாமணி இந்த மாதிரிக்கே ஒவ்வொரு புத்தகமா எடுத்துக் காட்டுறதும் அதுல இருக்குற முக்கியமான விசயங்களப் பேசுறதுமா இருந்தாம். அதுல பெரும்பாலான ஆயுர்வேத மருத்துவருங்கப் படிக்கிற புத்தகம்ங்க. ரொம்ப நேரம் ஆயிட்டே இருக்குறதப் பாத்து விகடு சொன்னாம், "நீஞ்ஞ படுக்கப் போவணும்!"ன்னாம்.

            "எத்தனெ மணிக்குப் படுத்தாலும் செரித்தாம் காத்தால அஞ்சு மணிக்கு மேல நம்மால தூங்க முடியாது. நாலு அம்பத்து அஞ்சுக்குப் படுத்தாலும் அஞ்சு மணிக்கு எழுந்திரிச்சிடுவேம். அஞ்சு நிமிஷ நேரம் போதும் தூக்கத்துக்கு! ன்னா இருந்தாலும் மச்சாம் சொல்றப்ப கேட்டுத்தாம் ஆவணும். மலை ஏறுறதுனாலும் மச்சாங்கார்ர தயவு வேணும்ன்னு சொல்லுவாங்களே!"ன்னாம் பாலாமணி சிரிச்சிக்கிட்டெ. ஒடனே அவ்வேம் பக்கத்துல இருந்த படுக்கை அறைக்குப் போனாம்.

            விகடு அந்த அறைய வுட்டு வெளியில வந்தாம். ஆயி வெளியில கூடத்துல உக்காந்திருந்தா. "இதுல்லாம் ஞாயமா? புதுசா கலியாணம் ஆன சோடிங்க. அ‍துல ஒண்ணப் பிடிச்சி வெச்சிட்டு பேசிட்டு இருந்தா செரியா? தங்காச்சிக்காரியோட ரூம்ல இருக்கணுமா? அண்ணங்காரரோட ரூம்ல இருக்கணுமா? யோஜனெயே வாராது அதப் பத்தியல்லாம்? கலியாணம் ஆன நீஞ்ஞத்தானே? எல்லாத்தையும் சின்ன புள்ளையாட்டமா எடுத்துச் சொல்லுவாங்க?"ன்னா ஆயி.

            "யிப்பவே நாம்ம சொல்லித்தாம் மச்சாம் கெளம்புறாப்புல!"ன்னாம் விகடு.

            "யிப்பவாச்சும் சொல்லணும்ன்னு தோணுச்சா? ஒஞ்ஞளுக்குத் தூக்கம் வாரதுன்னு அவுகளக் கெளப்பி வுட்டியளா? ஏம்ங்க இந்த வேலய கொஞ்சம் மின்னாடியே செஞ்சாத்தாம் ன்னா? மரமண்டெயப் போல யிருந்தா ன்னாத்தப் பண்ணுறதோ? இங்கிதமெ தெரியாதாக்கும்?"ன்னா ஆயி.

            "நாமாளா பேசல. கூப்ட்டுப் பேசுறப்போ ன்னாத்த பண்ணச் சொல்றே? நீஞ்ஞல்லாம் வேற சாப்புட்டுட்டு இருந்தீயே?"ன்னாம் விகடு.

            "பேயாமப் படுங்க அவுங்கவங்க வேலையப் பாத்துட்டு. காலையில வேற சீக்கிரமா கெளம்பணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதுக்கு மேல ஒண்ணும் சொல்லாம சனங்க ஒவ்வொண்ணும் படுக்க ஆரம்பிச்சதுங்க. நைட் லேம்ப் மட்டும் மங்கலா எரிஞ்சது.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...