10 Sept 2020

தலையில் விழுந்த பாம்பு

 
தலையில் விழுந்த பாம்பு

            வாலிபத்துல உடற்பயிற்சியின் மீது ஓர் ஆர்வம் வர்றது இயற்கை. அத வாலிபத்துக்கே உரிய ஓர் இயல்பூக்கம்ன்னு சொல்லலாம். அப்படித்தான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சது. மன்னுவுக்கும் இதுல ஆசை இருந்துச்சு. அதால வேல ரொம்ப சுலுவா போயிடுச்சு. தனியா உடற்பயிற்சி செய்யுறதுன்னு ஒரு கூச்சம் இருக்கும். ஒரு சோக்காளி கெடைச்சிட்டா சொல்லவா வேணும்.

            மொதல்ல எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம தெரியாம மூர்த்தியப்பர் கோயிலுக்கு தெற்கால இருக்குற தெடல்ல ஓட ஆரம்பிச்சோம். இதுக்குன்னே நானும் மன்னுவும் திருவாரூரு டவுனுக்குப் போயி டவுசர்ரு ரண்ட வாங்கியாந்தோம். மன்னு அதெ பெர்முடாஸ்ன்னு சொன்னாம்.

            தெடலுக்குப் போனதும் கைலிய அவுத்து வெச்சிட்டு, பெர்முடாஸ்ஸ மாட்டிக்கிட்டு ஓடுவோம். தெடல்ல கொஞ்ச தூரம் ஓட ஆரம்பிச்சதும் வயக்காடு வந்துடும். வயக்காட்டு வழியா நல்ல அகலமான பாதைப் போனுச்சு. எவ்ளோ நேரந்தாம் தெடல்ல சுத்திச் சுத்தி ஓடுறதுன்னு அதுல ஓடுறது. அதுவும் இல்லாம பொழுது விடிய ஆரம்பிக்க ஆரம்பிக்க சனங்க வேற தெடலுப் பக்கம் காலைக் கடன முடிக்க ஒதுங்க ஆரம்பிச்சிடும். அதால வயக்காட்டுப் பக்கம் ஓடுறதுதாம் வசதியா இருக்கும்.

            வயக்காட்டுப் பக்கம் ஓடுனா காலையிலயே வயலுக்குத் தண்ணி வைக்கிறவங்க, மடைய அடைக்கிறவங்க, கவணைப் போடுறவங்கன்னு அது ஒரு கூட்டம் அங்கங்க நின்னுகிட்டு இருக்கும்.

            நாங்க ஓடுறதுப் பாத்துட்டு ஒரு சிரிப்பாணி சிரிச்சிக்கிட்டு, "எலே எவம்டா இத்து வேலயத்த வேலயா கருக்கல காட்டிலும் ஓடிக்கிட்டு. வந்து மம்புட்டியப் பிடிச்சி எரநூத்துக் கொத்துக் கொத்துன்னா ஒடம்பு எப்பிடி ஒறுப்பு இருக்கும் தெரியுமுல்லோ!" அப்பிடின்னு ஒரு சத்தத்தையும் விடாம இருக்க மாட்டாங்க.

            "நாம்ம போலீஸ் வேலைக்குச் சேர்றதுக்காக ஓடுறோம்!"ம்பாம் மன்னு.

            "எந்த வேலைக்குப் போறதுன்னாலும் மம்புட்டியப் பிடிச்சிப் பாரு. ஒடம்பு வாட்ட சாட்டமா அம்சமால்லா இருக்கும். மம்புட்டிக் காம்பப் பிடிச்சா ஒலகத்துல எந்தக் கொம்பா இருந்தாலும் பிடிச்சிப்புடலாம்லா!"ம்பாங்க அவுங்க.

            "போலீஸூக்கு ஆளெடுக்குற எடத்துல ஓடச் சொல்லித்தாம் பாப்பாங்களே தவுர, மம்புட்டிப் பிடிக்கச் சொல்லிப் பாக்க மாட்டாங்க!"ம்பாம் மன்னு.

            "அடே எதுக்குடா ஓடச் சொல்றது? அத்துத் தெரியுமா? அத்துத் தெரியாம ஓடிட்டுக் கெடக்குறீயளே! எல்லா விசயமும் நெஞ்சாங் கூட்டுல இருக்குடா. அதுல தம்முப் பிடிக்கத் தெரியணும். தம்முப் பிடிக்கப் பிடிக்க ஒடம்பு பலமாவும். ஒரு திருட்டுப் பயத் தாதியப் புடிக்கணும்ன்னாலும் தொரத்திக்கிட்டு ஓடுறப்ப மூச்சு எரைக்கக் கூடாது பாரு. அதுக்குத்தாம் ஒன்னய ஓட வுட்டுச் சோதனெ பண்ணுறது. அடெ வெவரங் கெட்ட கொககெட்டப் பயலே! மம்புட்டியப் பிடிச்சி வேல செய்யுறது சாதாரணமில்லே. நீயி மட்டும் மம்புட்டிய பிடிச்சி வேல செஞ்சின்னா வவுறு கரைஞ்சிடும். நெஞ்சு நிமுந்துடும். தம்மு பிடிக்கிற தெம்பு ஒன்னய அறியாமலே வந்துடும். மம்புட்டிப் பிடிச்சி அண்டெ போட்டுப் பாரு. பெறவு சொல்லுடா. இதெல்லாம் ன்னா ஓட்டம்? ஒமக்கும் நமக்கும் சோடி வெச்சிப் பாத்துப்பமா? யாரு வேகமா ஓடுறதுன்னு?"ம்பாங்க அவுங்க.

            மன்னுவுக்கு என்ன பதிலு சொல்றதுன்னு தெரியாம முழிப்பாம்.

            "செரி! செரி" ஓடணும்ன்னு முடிவு பண்ணிட்டே. இப்பிடியே பேச்சக் கேட்டுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தா எப்பிடி? ஓடு ராசா ஓடு. அந்தா தூங்குமூஞ்சி மரம் இருக்குல்லா. போயித் திரும்பி. திரும்பியாந்து நூறு பஸ்கி போடு. தண்டாலும் நூறு போடு. அப்பத்தாம்டா ஒடம்பு கரவு செரவா இருக்கும். ஓடியாந்து நின்னா மூச்சு எரைக்கக் கூடாது பாரு. நாயீ மாதிரி மூச்சு எரைச்சா மவனெ நீயி மனுஷனுக்கே லாயக்கில்ல!"ம்பாங்க அவுங்க.

            "இதுக்குத்தாம்டா வெகடு. நாம்ம இவுங்க வர்றதுக்கு மின்னாடியே வந்துப்புடணும். இவுங்க கண்ணுல படாம ஓட்டத்த முடிச்சிட்டு வூட்டுக்கு ஓடிடணும்"ம்பாம் மன்னு. அப்படிச் சொன்னதோட மட்டுமில்லாம மறுநாளு ரொம்ப சீக்கரமாவே வந்துட்டாம். எனக்கு அம்மாம் இருட்டுல அஞ்சரைக்குல்லாம் போறதுக்குக் கொஞ்சம் பயம்.

            "நீயிப் போயிக்கிட்டெ இரு. நாம்ம பின்னாடியே வந்துகிட்டே இருக்கேம்!"ன்னு சொல்லி அவனெ கெளப்பி விட்டு கொஞ்சம் பொழுது விடிஞ்சதுக்குப் பெறவுதாம் நாம்ம அந்தப் பக்கம் போனேம். போனா மதுவாங் கட்டையில ரொம்ப சோகமா பேயடிச்சவம் போல உக்காந்திருந்தாம் மன்னு.

            "என்னடா மன்னு! எத்தனெ சுத்துடா ஓடிட்டு வந்தே?"ன்னு கேட்டேன் நான்.

            "பாதி சுத்துதாம்!"ன்னாம் மன்னு.

            "அதென்னா பாதி? ஓடுனா முழுசா ஓடணும்!"ன்னு சொன்னேன் நான்.

            "ஓடிட்டு இருக்குறப்ப மரத்து மேலந்து தலையில பாம்பு வுழுந்துட்டுடா வெகடு!"ன்னாம் மன்னு.

            "அய்யோ! என்னடா சொல்றே?"ன்னு கேட்டேன் நான்.

            "தலையில வுழுந்து அது பாட்டுக்கு வழுக்கிட்டுப் போயிக் கீழே வுழுந்துட்டுடா! அதுக்கு மேல ஓட பிடிக்கல. அங்கேயிருந்து வெலவெலத்துப் போயி நடந்தே வந்து இங்க உக்காந்துட்டேம்! தலையில பாம்பு வுழுந்தா கலகமாடா?"ன்னாம் மன்னு.

            "அது பல்லிக்குல்லடா சொல்லுவாங்க!"ன்னேன் நான்.

            "பஞ்சாங்கத்தப் பாத்துச் சொல்லுடா! தலையில பாம்பு வுழுந்தா என்னாவும்ன்னு?"ன்னாம் மன்னு. அவன் ரொம்பவே வெலவெலத்துப் போயிருந்தாம்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...