சீர்வரிசை 2.0
செய்யு - 561
அரும்பாக்கத்துல அம்ரித் பர்னிச்சரு சந்தானம்
அத்தானுக்குத் தெரிஞ்ச கடெ. அங்கத்தாம் போயி நின்னுச்சு சந்தானம் அத்தானோட காரு.
"நம்ம வூட்டுக்குச் சாமாஞ் செட்டுக
வாங்க ஆரம்பிச்ச காலத்துலேந்து இஞ்ஞத்தாம் வாங்குறது மாமா. இஞ்ஞத்தாம் ஒரு கொத்ரேஜ்
வாஷிங்மெஷினு வாங்குனது இன்ன வரைக்கும் நல்லா ஓடிட்டு இருக்குது. தனந்தாம் அத்து பழைய
மாடலா இருக்குன்ன புதுசா வாங்கணும்ங்குது. நம்ம வூட்டு டிவி, ஏசி, பிரிட்ஜ், பேன் எல்லாம்
இஞ்ஞ வாங்குனதுதாம். பொருளு சரியில்லன்னா ஒடனடியா ரிட்டர்ன்னு மாத்திக்கிடலாம். சர்வீஸ்
அத்து இத்துன்னு அலைய வுடுற வேல இருக்காது. பொதுவாவே வெலைய மித்த கடைகளெ வுட கம்மியாத்தாம்
போடுவாங்க இந்தக் கடையில. அத்தோட இந்தக் கடையோட ஓனரு நமக்கு நல்லப் பழக்கம். நாம்மன்னு
சொன்னா இன்னமும் வெலையைக் கொறைச்சுப் போட்டுப்பாப்புல. கடெ பாக்குறத்துக்குச் சாதாரணமாத்தாம்
தெரியும். உள்ள வந்தீன்னத்தாம் தெரியும் கடெ எம்புட்டுப் பெரிசுங்றது. அத்தனெ கம்பெனி
மாடல்களும் இருக்கும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
கடைய ஒரு சுத்துச் சுத்தி வந்தப்போ ஒரு
ஒழுங்கு மொறையான அமைப்புல கடைச் சாமானுங்க இல்லையே தவுர, எல்லா பிராண்டுகளோட பொருட்களும்
அங்க இருந்துச்சு. "இதெல்லாம் ஒழுங்க அடுக்கி வெச்சா அழகா இருக்கும் அத்தாம் கடெ
இன்னும்!"ன்னாம் விகடு.
"கடெயும் இதாங். கொடோனும் இதாங்.
பண்டம் வர்ற வர்ற வித்துட்டே இருப்பாங்க. பெரிய பெரிய கடைக்காரம்லாம் இஞ்ஞத்தாம் சல்லிசா
வாங்கிட்டுப் போயி அஞ்ஞ அலப்பறையா ஷோ ரூம்ங்ற பேர்ல ஷோ காட்டி காசய நெறைய வெச்சி
விப்பாம். பண்டம் வந்துட்டும் போயிட்டும் ரொட்டேஷன் ஆயிட்டே இருக்கணும். அப்பலேந்து
அதுதாங் இவுங்க பிசினஸ் மாடல். ன்னா ஒரு விசயம்ன்னா நோ லோன், நோ இன்சால்மண்ட். எதுவும்
கெடையாது. ரொக்கத்தெ எடுத்து வெச்சத்தாங் பொருளு அந்தாண்ட போவும். ஓனரு கூட பழைய
ப்ளாஸ்டிக் நாற்காலியலத்தாம் உக்காந்திருப்பாரு. ஆன்னா அவரோட வூட்டெப் பாத்தீன்னா
அசந்துப் போயிடுவே!"ன்னுச்சு சந்தானம் அத்தான் விகடுவெப் பாத்து.
விகடு மொதலாளி உக்காந்திருக்குறதா சொன்ன
ப்ளாஸ்டிக் நாற்காலியப் பாத்தாம். அத்து அப்போ காலியா இருந்துச்சு. மொதலாளி இன்னும்
வந்திருக்கல. அந்த ப்ளாஸ்டிக் நாற்காலிக்குப் பக்கத்துல சுமாரான ஒரு மேசைத்தாம் சின்னதா
இருந்துச்சு. அந்த மேசையில ரோக்கா போடுறாப்புல சீட்டுக்கட்டு அடுக்குன பரீட்சை அட்டை
இருந்துச்சு. பக்கத்துலயே நம்பரு அழிஞ்சிப் போயிக் கெடந்த ஒரு கால்குலேட்டரு கெடந்துச்சு.
அதோட பட்டன்களோட ஓரமெல்லாம் அழுக்கு ஏறியிருந்துச்சு. நாற்காலிக்கு மேல சின்னதா ஒரு
பேன் மட்டுந்தாம் இருந்துச்சு. பேனுக்குப் பக்கத்துல சுவத்துல ஒரு பழையக் காலத்து பிரேம்
செய்யப்பட்ட படம் மாட்டியிருந்துச்சு. அதுல ரண்டு பேத்தோட படம் இருந்துச்சு. கடனுக்கு
விற்றவர்ங்றதெ எழுதி கீழே ஒல்லியா பஞ்சத்துல அடிபட்ட பிஞ்சுப் போன கோட்டு சட்டெ போட்ட
ஒரு ஆளோட படமும், லாபத்துக்கு விற்றவர்ங்றதெ எழுதி அதுக்குக் கீழே புஷ்டியான கோர்ட்டு
சட்டெ போட்ட ஒரு ஆளோட படமும் இருந்துச்சு. அதெயே வெறிச்சிப் பாத்தாம் விகடு. பல பெரிய
பாரம்பரியமான கடைகள்ல இந்தப் படத்தை அவ்வேம் பாத்திருக்காம்.
"என்ன மாப்ளே பாக்குறே? பாரம்பரியமான
கடெ மாப்ளே! அரும்பாக்கம்லாம் உருவான காலத்துலேந்து இருக்குற கடெ. இவுங்களுக்கு ஒரே
கடெதாம். யேவாரம் பிய்ச்சிட்டுப் போவும். இப்போ இருக்குற சரக்கெ மத்தியானத்துக்கு
மேல வந்துப் பாத்தீன்னா இருக்காது. வெறிச்சோடி கெடக்கும். அடுத்த கொஞ்ச நேரத்துலயே
சரக்குப் பாட்டுக்கு வந்து எறங்கிக்கிட்டெ இருக்கும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
சுப்பு வாத்தியாரு அதெ அசந்துப் பாத்துக்கிட்டு இருந்தாரு. அதெப் பாத்ததும் சந்தானம்
அத்தான் சுப்பு வாத்தியார்ரப் பாத்துச் சொன்னுச்சு, "மாமா! சொல்லப் போனா இவுனுங்க
யேவாரமே பண்ணுறது கெடையாது மாமா! கைமாத்தி வுடுறதுதாங் இவனுங்களோட வேல. வர்ற பண்டம்
ஒரு நாளு ரண்டு நாளு இவுனுங்க கடையில இருந்தா அதிகம். வர்ற வேகத்துக்கு தள்ளி வுட்டுப்புட்டே
இருப்பானுவோ! சென்னைப் பட்டணத்துல இந்த மாதிரி கடெயப் பாக்க முடியாது! சென்னைப் பட்டணத்துல
எஞ்ஞ பொருளெ வாங்குனாலும் டொர் டெலிவரி பண்ணுவானுவோ. அதுக்குல்லாம் காசிக் கெடையாது.
அதுக்குன்னே ஏகப்பட்டு ஆளுங்கள வெச்சிருக்கானுவோ!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"கடெ புராணம் போதும்பீ! பொருளே
வாங்கிட்டா சட்டுபுட்டுன்னு அடுத்ததெ பாக்கலாம் பாரும்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதாங் கடெயக் காட்டிப்புட்டேன்னே?
வேல முடிஞ்சிடுச்சு. சூப்பர் மார்க்கெட்டு மாதிரிதாங். போயிப் பாரு. ஒனக்குப் பிடிச்சது
ஏதுன்னு மட்டும் கையக் காட்டு. அதுல பேர்ர எழுதித் தூக்கிட்டு இந்த எடத்துக்குக் கொண்டாந்துப்
புடுவானுவோ. பில்ல போட்டு பணத்தெ கொடுத்துட்டு அட்ரஸ்ஸ எழுதிக் கொடுத்துட்டு நாம்ம
பாட்டுக்கு வந்துக்கிட்டெ இருக்க வேண்டியதுதாங்! வேல முடிஞ்சது. நேரம் ஆவ ஆவ அவனவனும்
படையெடுத்து வருவானுவோ பாரு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"நமக்கு ன்னாம்பீ தெரியும்? நீயே
பாத்து ஒவ்வொண்ணுலயும் நல்லதா ஒண்ணுத்தெ காட்டி வுடு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஏம் மாப்புளைக்கும் ஒண்ணும் தெரியாதா?"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"அவ்வேங்கிட்டெ கேளு! வியாக்யானம்
பண்ணுவாம்! பிரிட்ஜ்ல வெச்சிச் சாப்புடக் கூடாதும்பாம். துணியக் கையால தொவைக்கணும்பாம்.
இட்டிலி மாவ ஆட்டுக்கல்லுல போட்டு ஆட்டணும்பாம். சட்டினிய அம்மியலத்தாம் அரைக்கணும்பாம்.
டிவிப் பொட்டியல்லாம் பாக்கக் கூடாது, ரேடியோ கேட்டுக்கிடணும், தெனசரித் தாள்ல
படிச்சிக்கிடணும்பாம்! எதாச்சும் பொத்தகக் கடென்னா அழைச்சிட்டுப் போ! ந்நல்லா வாங்கிக்
கொடுப்பாம். அவனுக்குச் சூதானம் பத்தாது. நீயே பாத்து வாங்கு!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"செரி வா மாமா பின்னாடியே!"ன்னு
அழைச்சிட்டுப் போயி வாஷிங் மெசின்ல வேர்பூல்ல ஒண்ணுத்தெப் பாத்து, "வெல எம்மாம்?"ன்னுச்சு
சந்தானம் அத்தான். அதோட அமைப்பப் பத்தி வெளக்குன கடையோட ஆளு, பன்னெண்டாயிரத்துச்
சொச்சம்ன்னாம். அதெ கையக் காட்டி வுட்டதும் அத்து மொதலாளியோட எடத்துக்குப் பக்கத்துல
மின்னாடி வந்துச்சு. பிரிட்ஜ்ல சேம்சங்கல ஒண்ணுத்தெப் பாத்து, "ரேட்?"ன்னுச்சு
சந்தானம் அத்தான். அதுக்குப் பக்கத்துல நின்ன கடையாளு அதோட அமைப்பு மொறைகளப் பத்திச்
சொல்லி பாஞ்சாயிரம் சொச்சம்ன்னாம். செரின்னு அதெ கையக் காட்டி வுட்டுப்புட்டு, அடுத்ததா
டிவிப் பொட்டி இருக்குற எடத்துக்குப் போனுச்சு. அந்த எடத்துல எல்லா மாடல் டிவிகளும்
ஓடிட்டு இருந்துச்சு. இருக்குறதுல பெரிசா இருந்த மைக்ரோமேக்ஸ் டிவியக் கையக் காட்டுனுச்சு
சந்தானம் அத்தான். கடைக்கார ஆளு அதெ இருபத்து எட்டாயிரம்ன்னாம். அதெயும் கொண்டு போயி
பேரெழுதி மின்னாடி வெச்சானுச்சு.
அடுத்ததா கிரைண்டர்ரப் பாக்கப் போன எடத்துல
சுப்பு வாத்தியாரு, "செளபாக்யா!"ன்னாரு. சந்தானம் அத்தான் சிரிச்சிது.
"செளபாக்கியாவுக்குப் பெறவு நெறைய பிராண்டு வந்துடுச்சு மாமா! நீயி இன்னும் அந்தக்
காலத்துலயே இரு!"ன்னுச்சு.
"செளபாக்கியாவா இருந்தா தேவலாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அதுலயும் நெறைய நியூ மாடல்ஸ் இருக்கு!"ன்னாம்
கடைக்கார்ரேம். அதுல நல்லா கருப்புக் கல்லா உள்ளதப் பாத்து உள்ளாரயே ரண்டுக் கொழவியோட
சுத்துறதச் சுப்பு வாத்தியாரு தேர்வு பண்ணாரு. அங்க வந்து வாங்குன சாமாங்கள்ல அதெ ஒண்ணுத்தெ
அவரு தேர்வு பண்ணாரு. அத்தோட மிக்சியில ப்ரீத்தித்தாம் வாங்கணும்ன்னு சொன்னாரு. அதுலயும்
மிக்சி பூரா எவர்சில்வரா இருக்குறதாப் பாத்து வாங்குனாரு. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்லாம்
சித்த நேரத்துல தேர்வு பண்ணி முடிஞ்சா, மிக்ஸி, கிரைண்டர்ர தேர்வுப் பண்ண சுப்பு வாத்தியாரு
ரண்டு மணி நேரத்துக்கு மேல எடுத்துக்கிட்டாரு.
சந்தானம் அத்தான் அசந்துப் போச்சு, அலுத்தும்
போச்சு. "பொண்ணுக்குப் பாத்து பாத்து வாங்குறே மாமா! நீயி இருக்குறப்பவே நம்ம
வூட்டுக்கும் ஒரு கிரைண்டரும், மிக்ஸியும் தூக்கிடலாமான்னு பாக்குறேம்!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"பாத்து இன்னும் ரண்டு எடுத்துப்புடவா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"வாணாம் மாமா! அதுக்கு இன்னும் ரண்டு
மணி நேரம் ஆன்னா நாம்ம ரிஷப்ஷனுக்குப் போவ முடியாது! அதெ பெறவு பாத்துக்கிடலாம். பிரிட்ஜ்,
டிவி ரண்டுக்கும் தனித்தனி ஸ்டெபிளைசர்ரு வாங்கிடணும். யானைய வாங்கிட்டு அங்குசத்தெ
வாங்கிப்புடாம வுட்டுப்புடக் கூடாது. விகார்டவே வாங்கிப்புடலாம். காசி கூடன்னாலும்
ந்நல்லா இருக்கும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
வாங்குன சாமாஞ் செட்டுகளுக்கான எஸ்டிமேஷன்
பில்லப் போட்டு ஆனுச்சு. எழுவதாயிரத்து அறுநூத்து ஒம்போது ரூவா வந்துச்சு.
"பாத்துப் பில்லக் கொறைப்பா!"ன்னுச்சு சந்தானம் அத்தான். அவ்வேம் அறுவத்து
ஒம்பதாயிரத்துல வந்து நின்னாம். "இன்னும் கொறைப்பா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"இதுக்கு மேல சத்தியமா கொறைச்சி சென்னையில நீஞ்ஞ எஞ்ஞயும் வாங்க முடியாதுங் சார்!"ன்னாம்
பில்லிங் செக்சன்ல இருந்தவேம்.
"மொதலாளி வல்லையா?"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"மொதலாளி இருந்தா ன்னா ரேட்டுப்
போடுவாரோ அதெ வுடக் கம்மியாத்தாம் போட்டிருக்கேம்!"ன்னாம் அந்த ஆளு.
"மொதலாளிகிட்டெப் பேசிக்கிடவா?"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"தாராளமா பேசிக்கிடுங்க சார்! ஒரு
பத்து ரூவா மிச்சமாவதுன்னா சந்தோஷந்தாம் சார்! நாம்மப் போட்டுக் கொடுத்திருக்குறது
டெட் சீப் ரேட். நீங்க எடுத்துருக்குற ஒவ்வொண்ணும் பிராண்டட் ஐட்டம், காஸ்ட்லி ஐட்டம்.
சத்தியமா இந்த ரேட்டுக்கு நீங்க எதிர்பார்க்கவே முடியாது!"ன்னாம் அந்த ஆளு.
சந்தானம் அத்தான் தன்னோட போன்ல மொதலாளிக்கு
அடிச்சிச்சு. மொதல்ல வழக்கமான குசலத்தெ வெசாரிச்சது. வெசாரிச்சி முடிச்சிட்டு கடைக்கு
வந்ததெப் பத்திச் சொல்லாம, திருவேற்காட்டுல ஒரு ப்ளாட் முக்கியமான எடத்துல வந்திருக்கு
முடிச்சிடலாமான்னுச்சு. அதுக்கு மொதலாளி என்ன பதிலெச் சொன்னாரே தெரியல. அதுக்குப்
பெறவுதாம் அத்துச் சங்கதிய ஆரம்பிச்சது. "கடையில இருப்பீங்கன்னு நெனைச்சு வந்தேம்.
இருந்தீயன்னா திருவேற்காட்டு மேட்டர்ரப் பேசி முடிச்சிடலாம். இஞ்ஞ ஒஞ்ஞளப் பாக்க வந்தா
அந்த நேரத்துல நம்ம மாமா, அதாங் யம்மாவோட தம்பி. சாமாம் வாங்க நிக்குது. நம்ம கடையில
நிக்குறப்போ நாம்ம கடைங்றது காட்டணும் இல்லியா. செரின்னு நாமளும் நின்னேம். சாமாஞ்
செட்டுகள எடுத்தாச்சு. எஸ்டிமேஷன் பில்லப் போட்டாச்சு. அறுவத்து ஒம்பதாயிரமோ, அறுவத்து
எட்டாயிரமோ சொல்றாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
ஒடனே பில்லிங்ல இருந்த கடைக்கார ஆளு,
"சார் அறுவத்து எட்டு இல்ல, அறுவத்து ஒம்போது!"ன்னாம் மெதுவா.
"இருப்பா பேசிட்டு இருக்கேம்ல!"ன்னுச்சு
சந்தானம் அத்தான். "ஓனரு ஒங்கிட்டப் பேசணுமாம். பேசலாம்ல!"ன்னுச்சு சந்தானம்
அத்தான் அடுத்ததா.
சந்தானம் அத்தானோட செல்போன வாங்கி அவ்வேம்
காதுல வெச்சிக்கிட்டாம். மொதலாளி வாங்குன ஒவ்வொரு பொருளா கேக்க அதெ கோட் நம்பரோட
வரிசையா சொல்லிட்டு வந்தாம். ஒவ்வொரு பொருளுக்குமான புது வெலைய மொதலாளி இப்போ
சொல்லிட்டு வர்ற அதெ சட்டு சட்டுன்னு பழைய கால்குலேட்டர்ர எடுத்து வெச்சி அடிச்சிக்கிட்டெ
வந்தாம். அந்தக் கணக்கையல்லாம் மனசுக்குள்ளயே கூட்டிட்டு வந்திருப்பாரு போலருக்கு
மொதலாளி. அறுவத்தஞ்சு வருதான்னு அவரு கேக்குறது கேட்டுச்சு. அதுக்கு ,"வருது
மொதலாளி!"ன்னு அந்த ஆளு சொன்னாம். அந்த ரேட்டுக்கு முடிச்சிப்புடச் சொல்லி
போனைக் கட் பண்ணிட்டாரு.
"பேசியாச்சுங்க சார்! அறுவத்து அஞ்சு.
ஓகேதானே?"ன்னாம் அந்த ஆளு. சந்தானம் அத்தான் தம்ஸ் அப் காட்டுனுச்சு. காட்டிட்டு
"ஓனரு இஞ்ஞ இருந்தார்ன்னா வெச்சுக்கோ அதெ அறுவதாயிரமே ஆக்கியிருப்பேம்!"ன்னுச்சு
சந்தானம் அத்தான் அலம்பல் விடுறாப்புல.
"சார் தப்பா நெனைக்காதீங்க! பொருளோட
வெலைய மொதலாளி கொறைக்கலாம். நாம்ம முடியாது. இந்தா பாருங்க சார்ட் போட்டு கொடுத்திருக்காங்க.
இதுலேந்து ரண்டு பர்சென்ட் வரைக்கும் கொறைக்கத்தாம் நமக்கு லிமிட் இருக்கு சார். அதுக்கு
மேலன்னா மொதலாளிப் பாத்துத்தாம் பண்ணணும். நாம்ம கொறைக்கிறதப் பத்தி யில்ல சார்!
அதுக்கு நாளைக்கிப் பதிலச் சொல்லியாவணும். கடெசீயில எஞ் சம்பளத்துலத்தாங் கைய வைப்பாங்க.
மொதலாளி ரொம்ப ஸ்ட்ரீக்ட் சார். காசி விசயத்துல பைசா காசி போனாலும் வெட்டி அந்தாண்ட
எடுத்துடுவாங்க சார்!"ன்னாம் அந்த ஆளு.
"யம்பீ! கடையில வேல பாக்குற ஆளுகளப்
பாத்து ரொம்ப தொந்தரவு பண்ணாதீயே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நீயி சித்தெ சும்மா இரு மாமா! யிப்போ
நாம்ம மொதலாளிட்டப் பேசலன்னா நமக்குத்தாம் நாலாயிரம் கூட ஆயிருக்கும். யேவாரம்ன்னா
இப்பிடித்தாம். மிச்சப்பட்ட நாலாயிரத்துக்கு பொண்ணு மாப்புள்ளைக்கி வாங்கிக் கொடுக்க
வேண்டிய மளிகெ சாமானுங்கள வாங்கிக் கொடுக்கலாம்ல!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"அந்த வேல வெச்சிக்கிடாதீயே யம்பீ!
இத்தோட நிறுத்திக்கிடுங்க. மளிகெ சாமாஞ் செட்டுல்லாம் நம்ம காசியிலத்தாம் வாங்கிக்
கொடுக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யப்போ மாமாகிட்டெ காசி நெறைய இருக்குப்
போலருக்கு. நெறைய யிருந்தா நமக்குக் கொஞ்சம் கொடேம் மாமா!"ன்னுச்சு சந்தானம்
அத்தான்.
"ஆமாம்டா போடா! ஒமக்கு எப்பவும்
வெளையாட்டுத்தாங்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"சார்! திங்ஸ்லாம் யாரு பேர்ல போடணும்!
கேரண்டி கார்ட்ஸ், பில்ஸ்லாம் போடணும்!"ன்னாம் கடைக்கார ஆளு.
"யாரு பேர்ல மாமா?"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"டாக்டர் பாலாமணி பியெயெம்மஸ்ன்னுப்
போடச் சொல்லுங்கம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஏம் மாமா செய்யுப் பேர்ல போட்டா
ன்னா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"வேண்டாம்பீ! மாப்ளப் பேர்லயே போடுங்க!
நாளைக்கி அதுல கூட பொண்ணு பேர்ல போட்டு வுட்டுப்புட்டதா ஒரு சின்ன பெரச்சனெ வாரக்
கூடாது பாருங்கம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"பேர்ர மட்டும் எழுதிக் கொடுங்க
சார் வித்தெளட் ஸ்பெல்லிங் மிஸ்டேக்! அப்பிடியே கீழே டெலிவரி பண்ண வேண்டிய அட்ரஸ் வித்
கான்டாக்ட நம்பர்!"ன்னாம் கடைக்கார ஆளு ஒரு சின்ன சீட்டெ கொடுத்து. சுப்பு வாத்தியாரு
எல்லாத்தையும் எழுதிக் கொடுத்தாரு அச்சடிச்சாப்புல. அந்தச் சீட்டுல எழுதிக் கொடுத்ததெப்
பாத்து அந்த கடைக்கார ஆளு அசந்துப் போயிட்டாம், "என்னா சார் இது! அப்பிடியே பிரிண்ட்
அடிச்சாப்புல எழுதிக் கொடுத்திருக்கீங்க?"ன்னு.
"அமெளண்ட் கொடுத்தீங்கன்னா பில்லப்
போட்டுப்புடலாம்!"ன்னாம் கடைக்காரு ஆளு. சந்தானம் அத்தான் கார்ட எடுத்து நீட்டுன்னுச்சு.
அதெ வாங்கி ஒரசிக்கிட்டு நம்பர்ரப் போடச் சொல்லிட்டு வெளிவந்த சீட்டுல அதோட கையெழுத்த
வாங்கிக்கிட்டாம் கடைக்கார ஆளு. "திங்ஸ் அரை மணி நேரத்துல டெலிவரி ஆயிடும் சார்!"ன்னாம்
கடைக்கார ஆளு.
"நமக்கு பணங் கொடுத்ததுக்கு அத்தாச்சி?"ன்னு
சந்தேகமா கேட்டாரு சுப்பு வாத்தியாரு. அதெ புரிங்சிக்கிட்டாப்புல கடைக்கார ஆளு,
"பில்லுல்லாம் திங்க்ஸோட பேக்கிங் ஆயி வந்துடும் சார்! பயப்பட வாணாம். ஒங்களுக்காக
வேணும்ன்னா..."ன்னு சொல்லி கடையோட விசிட்டிங் கார்டெ எடுத்து அதுக்குப் பின்னாடி
அறுவத்து அஞ்சாயிரம்ன்னு எண்ணால எழுதி கடையோட சீல வெச்சுக் கொடுத்தாம்.
"செரி கெளம்பலாம் மாமா! கெளம்பி அடுத்த
வேலையப் பாக்கலாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான். விகடு மட்டும் கடைய ஒரு பார்வெ
பாத்தாம்.
"ன்னா சார் பாக்குறீங்க?"ன்னாம்
கடைக்காரன் ஆச்சரியமா.
"பில்லுல்லாம் கம்ப்யூட்டர்ல போடுதீயே!
பெறவு எதுக்கு நம்பரு போயி அழுக்கடைஞ்சிப் போயிக் கெடக்குற கால்குலேட்டரு?"ன்னாம்
விகடு புரியாம.
"மொதலாளி அப்பிடிங்க சார்! அவரு
கம்ப்யூட்டரு பக்கம்லாம் வார மாட்டாரு. மனசுக்குள்ளேய கம்ப்யூட்டர்ர வுட வேகமா கணக்கெ
போடுவாரு. அப்பைக்கப்போ கால்குலேட்டர்ல அவரோட கையி வெளையாடும். ஏதும்ன்னா அந்தச்
சீட்டுல எதாச்சும் எழுதிப் பாத்துக்குவாரு. எதையும் வீணாக்கக் கூடாது, தேவையில்லாம
எதையும் பயன்படுத்தக் கூடாது. ஒரு ரப் கால்குலேஷன கூட புதுசா ஒரு ஏபோர் சீட்டெ எடுத்து
போட முடியாது சார். பழைய ஒன்சைட் பிரிண்டட் பேப்பர்லதாம் செஞ்சிப் பாக்கணும். அவ்வளவு
சிக்கனம் சார். கடையோட ஒரு நாளு டேர்ன் ஓவர்ரக் கேட்டீங்கன்னா அசந்துப் போயிடுவீங்க.
ஆன்னா ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குக் கேப்பாங்க சார் மொதலாளி! தென் சார் வாஷிங் மெஷின்,
பிரிட்ஜ், டிவி இன்ஸ்டாலேசன் நாளைக்குள்ள அட்ரஸ்க்கு வந்துடுவாங்க சார். நாங்க கம்யூனிட்கெட்
பண்ணிடுவேம்!"ன்னாம் அந்த ஆளு.
*****
No comments:
Post a Comment