27 Sept 2020

விவசாயம் மாறிப் போச்சு!

விவசாயம் மாறிப் போச்சு!

            இந்த 2020 வருஷ விவசாயம் மித்த வருஷ விவசாயங்ளோட யோசிச்சுப் பாத்தா ரொம்பத்தாம் மாறிப் போச்சு. குறுவைக்குத் தண்ணி வந்தும் ஒண்டிப்புலியும், ரமேசுந்தாம் குறுவெ போட்டது. அதுவும் எப்படி? ஆத்துல வந்த தண்ணியில வெத வெதைச்சு நாத்து நட்டுப் போடல. அவுங்க போர்ர வெச்சி தண்ணிப் பாய்ச்சி கொத்தூர்லேந்து நாத்து வாங்கியாந்து நட்டாங்க. திட்டையில இருக்குற இருவது வேலியில நாலு மா மட்டுந்தாம் அவுங்கப் போட்ட குறுவெ. அதெப் பாத்துட்டு இன்னொரு நாலு மாவுல பக்கத்துல செவத்தப்புள்ள ரண்டு வாரம் கழிச்சிக் குறுவெ போட்டாரு. குறுவைக்கு ஆத்துல தண்ணி வந்தா ஊர்ர அடைச்சி குறுவெ போட்டுத்தாம் பாத்திருக்கு. இப்பிடி ஊர்ல ஒருத்தரோ, ரண்டியரோ போட்டது இப்பத்தாம். இது ஒண்ணா. இன்னொன்னு என்னான்னா...

            இங்க கிராமத்துல யாரும் தெளிவிதைய விரும்ப மாட்டாங்க. வெத வெதைச்சு நாத்து நட்டு அதுல வர்ற அழகு தெளியில வருமா என்னா? அப்படியே தெளிவெதைன்னாலும் செலவுப் பிடித்தமா ஊர்ல இருக்குற கால்வாசிப் பேரு தெளிப்பாங்க. முக்காவாசிப் பேரு நாத்தாங்கால்லத்தாம் தயாரு பண்ணுவாங்க. சம்பாவுல என்னாச்சுன்னா ஊரே அடைச்சி தெளிவிதையில எறங்கிட்டு. இப்பிடி எந்த வருஷமும் நடந்ததில்ல. இந்த வருஷந்தாம் நடக்குது. போறப் போக்க பாத்தா இனுமே வருஷா வருஷம் தெளிவிதைத்தாம் போலருக்கு. விவசாயத்துல ரொம்ப செலவெ பண்ணி சனங்க அலுத்துப் போயிடுச்சுங்கங்றது நல்லாவே தெரியுது. இந்த தெளியில நாத்தாங்கால்ல தயாரு பண்ணுற செலவு, நாத்துப் பறிக்கிற செலவு, நாத்து நடுற செலவுன்னு காசு மிச்சமாவுறதா சனங்க சொல்லுது.

            தெளிவிதைன்னாலும் சனங்கள எறங்கி நாத்து பறிக்க விட்டாத்தாம் பயிறு நல்லா கெளம்பும்ங்றது ஒரு நம்பிக்‍கை. அதுக்குன்னே நடவாளுங்க கூட்டம் கூட்டமா போட்டிப் போட்டுக்கிட்டு களையப் பறிக்க எறங்கும்ங்க. நாத்து நடுறதா இருந்தாலும், களைப் பறிக்கிறதா இருந்தாலும் பாட்டு ஒண்ணு பொறப்பட்டு தானா வரும். அதெ கேக்குறதே ஒரு சொகமா இருக்கும். "வேல நேரத்துல பாட்டு என்னா பாட்டு வேண்டிக் கெடக்கு? மளமளன்னு வேலயப் பாப்பீங்களா?"ன்னு வயக்காரரு குடையப் பிடிச்சிக்கிட்டு வரப்புல நின்னுகிட்டு ஒரு சத்தத்தெ கொடுத்தாலும் அவரும் அந்தப் பாட்ட ரசிச்சிக்கிட்டுத்தாம் இருப்பாரு. ஆனா தாம் ரசிக்கிறதெ காட்டிக்கிட மாட்டாரு. நடவாளு எறங்கி காலால நல்லா மிதிச்சி விட்டு, களைய பிடுங்கும் போதுதாம் நாத்து நல்லா ஒறுப்பா கெளம்பும்ன்னு சொல்லுவாங்க. அதுலயும் இந்த வருஷம் மாத்தம். நடவாள எறக்கி விட்டு களை பறிச்சா செலவு அதிகம் பிடிக்குதுன்னு வயல வெச்சிருக்குற சனங்க எல்லாம் தண்ணிய வடிய விட்டுட்டு களைக்கொல்லிய அடிச்சி, ஒரு நாலஞ்சு நாளைக்குப் பெறவு தண்ணிய வெச்சிக் கட்டி ஒரு நடவாளையோ, ரண்டு நடவாளையோ வுட்டு அவிஞ்சிப் போயிக் கெடக்குற களையப் பொறுக்கச் சொல்லுதுங்க. அப்படி களைக்கொல்லி அடிச்சிக் கொஞ்ச நாளு கழிச்சி தண்ணி வெச்சிக் கட்டிருக்கிற வயலுங்களோட படத்தெ கீழே போட்டுருக்கேம்.



            நடவு மாறி தெளிவெதை வந்ததுல நடவுப்பாட்டு போச்சுதா. களை பறிக்கிறது மாறி களைக்கொல்லி தெளிக்கிறது வந்ததுல களைப்பறிக்கிறப்ப பாடுற பாட்டும் போச்சுது. அறுப்புலயுந்தாம் கையறுப்புப் போச்சுது. போன வருஷத்துலேந்து இப்போ வயல்ல அறுக்க ஆளு எறங்குறதுல்ல. மிஷினுங்கத்தாம் வந்து எறங்குது. மிஷினு அறுத்துக் கொட்டுன நெல்லையுந்தாம் வயல்லயே ஓரத்துல படுதாவுல அப்படியே கொட்டி வெச்சிருந்தா யேவாரி வயலுக்கே சாக்கோட வந்து எடெ போட்டு லாரியில ஏத்திக்கிட்டுப் போயிடுறாரு. கையறுப்பா அறுத்த கதிரெ கட்டு கட்டி, வரப்பு வழியா தூக்கிக்கிட்டு நடந்து வந்து, களத்துமேட்டுல கையடியலா வெச்சி அடிச்சி, அடிச்சதெ காத்துல தூத்தி, தூத்துனதெ சாக்குல மூட்டையா பிடிச்சி, மூட்டைகள மாட்டு வண்டியில போட்டுக்கிட்டு, வண்டியில நெல்லு வரும்ன்னு பாடிக்கிட்டுப் போனதெல்லாம் இப்போ பழங்கதையா, பழங்கனவா எப்போ எந்தக் காலத்துலு நடந்துச்சுன்னு யோசனையா இருக்கு. வெவசாயம் ரொம்பத்தாம் மாறிட்டு.

            மனுஷனுங்களுக்குப் பதிலா வயல்ல எந்திரங்க எறங்கி வேல பாக்க ஆரம்பிச்சிடுச்சு. வயக்காட்டு ஆளுங்க பாடுன பாட்டையெல்லாம் எந்திரம் இயங்குற இரைச்சலோட, எந்திரத்துக்குள்ள இருக்குற ரிக்கார்டரு குத்துப்பாட்டா பாடுது. அதெ கேட்டுக்கிட்டு எந்திரத்தெ இயக்குறவரு அதெ இயக்கிக்கிட்டு, அப்பைக்கப்போ கைலி மடிப்புல செருவியிருக்கிற குவார்ட்டர்ரு பாட்டில்ல ஒரு இழுப்பு இழுத்துக்கிட்டு வேல நடந்துக்கிட்டு இருக்கு. தண்ணி பாய்ஞ்ச வயலுக்குள்ள குவார்ட்டரு தண்ணி பாய ஆரம்பிச்சிடுச்சு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...