27 Sept 2020

உதவின்னு உபத்திரவத்தில்ல விழுவதா?

உதவின்னு உபத்திரவத்தில்ல விழுவதா?

செய்யு - 578

            விகடு டிவியெஸ்ஸ மெதுவா உருட்டுனாம். மனசுக்குள்ள புயல் அடிக்குறாப்புல இருந்துச்சு. நெனைவுகளோட சொழல்ல வண்டிய நிறுத்திட்டு கொஞ்ச நேரம் நின்னுடுவோமான்னும் நெனைச்சாம். இருட்டுல எந்த எடத்துல நிக்குறது? நிக்குறதுக்குப் பதிலா மெதுவா போயிட்டே இருக்கலாம்ன்னு நெனைச்சிக்கிட்டு மெதுவா ஓரமா போயிட்டே இருந்தாம். எதுத்தாப்புல வாகனங்க வேற வர்றதும் போறதுமா இருந்துச்சு. வாகனங்களோட வெளிச்சம் கண்ண கூசுறாப்புல இருந்துச்சு. ராயநல்லூரு ரோட்டத் தாண்டி ஆத்தூர்ரு ரோட்டப் பிடிச்சிட்டா வாகனங்களோட பெரச்சனெ இருக்காதுன்னு தோணுன ஒடனே மனசெ கொஞ்சம் திடம் பண்ணிக்கிட்டு மளிகெ சாமாம் மூட்டையே ரண்டு கால்லயும் இறுக்குனாப்புல பிடிச்சபடி வேகமா செலுத்துனாம். வேகம்ன்னா முப்பதெ தாண்டல. நாப்பதுல போறாப்புல யிருந்தா அதெ தாங்காம வண்டிய ஒதறும்.

            செய்யு கமலாம்பாள் காலேஜூல படிக்குறப்ப இப்பிடி ஒதவிப் பண்ணுற வேலைய நெறையப் பண்ணிருக்கா. அந்த ஒதவிங்க பெரும்பாலும் ஆயிரமோ, ஐநூறோன்னுத்தாம் இருக்கும். அதெ தாண்டுனதில்ல. கலியாணம் ஆவுற வரைக்கும் செஞ்சது செரி, இப்பிடிக் கலியாணம் ஆயி செஞ்சிருக்க வேண்டியதில்லன்னு நெனைச்சாம். இதெப் பத்தி நாம்ம கேக்குறதெ வுட, அப்பங்காரர்ட்டெ சொல்லிப் பக்குவமாத்தாம் கேக்கணும்ன்னு நெனைச்சிக்கிட்டாம். வண்டியோட சக்கரம் சுத்துறாப்புல, நெனைப்புக பல வெதமா சுத்துறதெ அவனால தடுக்க முடியல.

            ராயநல்லூர்ர தாண்டி ஆத்தூரு ரோட்ட பிடிச்சப்ப ரோட்டுல கல்லு அங்கங்க கண்ட மேனிக்குக் கெடந்துச்சு. பள்ளம் மேடுன்னு ஒழுங்கில்லாத அந்த ரோட்டெ பாத்தப்போ வாகனங்களோட வந்த ரோடே பரவால்லன்னு தோணுச்சு. ஒரு காலத்துல ராத்திரியில நடந்தே வந்த ரோடுதாம் இது. அதுவும் மழைக்காலத்துல தண்ணி தேங்கிருந்தப்பல்லாம் பயப்படாம வந்திருக்காம் விகடு. இருட்டுக்கோ, தேங்கி நின்ன தண்ணிக்கோ, அங்கயும் இங்கயும் எளைஞ்சிட்டு ஓடுற பாம்புக்கோ பயம் வந்ததில்ல விகடுவுக்கு. மனுசுல யிப்போ அலையலையா எழும்புற நெனைப்புகத்தாம் அவனுக்குள்ள பயத்தெ உண்டு பண்ணிக்கிட்டு இருந்துச்சு.

            இந்தப் பத்தாயிரம் ரூவாப் பெரச்சனையெ ஒடனடியா முடிச்சி வுடணும்ன்னு நெனைச்சிக்கிட்டாம். ஒடனடியா பத்தாயிரத்தெ பொரட்டி ஒரத்தநாட்டுப் பொண்ணு வூட்டுல கொடுக்குறாப்புல பாங்கியில போட்டு வுட்டுப்புடணும். பெறவு அந்தப் பணத்தெ மொல்லாம ஒரத்தநாட்டுப் பொண்ணு வூட்டுல கொடுக்குறப்ப நாம்ம அதெ வாங்கிக்கிடணும். இதால வேறெந்த பெரச்சனையும் வர்றதுக்கு மின்னாடி இந்த வேலையப் பாத்தாவணும்ன்னு நெனைச்சாம் விகடு. அந்த நெனைப்போடயே வூடு வந்துச் சேந்தாம். அவ்வேம் வண்டிய நிறுத்துனதும் சுப்பு வாத்தியாரு உள்ளேயிருந்து வந்து மூட்டையத் தூக்குனாரு. வண்டிய திண்ணையில ஏத்தி நிறுத்துனவேம், "யப்பா! ஒரு நிமிஷம் மாடிக்கு!"ன்னாம். சுப்பு வாத்தியாரு சாமாம் மூட்டையத் தூக்கிப் போயி சமையல்கட்டுல வெச்சிட்டு வந்தாரு.

            விகடு மாடியில போயி கொட்டாய்ல உக்காந்திருந்தாம். "என்னடாம்பீ! மொகம் சரியில்லையே! பணங்காசிப் பத்தலயா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "தங்காச்சிய செல விசயங்கள்ல கொஞ்சம் கண்டிப்பா மொறைப்பாடு பண்ணி வுடணும்ப்பா!"ன்னாம் விகடு.

            "ன்னடா இவ்வேம்! புரியம்படியா சொன்னாத்தானே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "தங்காச்சி ஒரத்தநாட்டுல ஒரு பொண்ணுக்கு மச்சாம் மூலியமா பத்தாயிரம் பணத்தெ வாங்கிக் கொடுத்துருக்குப்பா! மச்சாம் நாம்ம திருவாரூர்ல இருக்கிறப்ப போனடிச்சுச் சொன்னாப்புல!"ன்னாம் விகடு.

            "யம்மாவும் சொன்னுச்சுடாம்பீ! அதுல ஏதோ சண்டெ போல! அதுலத்தாம் இஞ்ஞ வந்திருக்குறதா நாம்ம நெனைக்குதேம். நாமளும் அதெப் பத்தி வெசாரிக்கல. இருக்கட்டும் அதுவா அத்து வாயாலயே வாரட்டும்ன்னு இருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அத்து எப்பவாச்சும் வாரட்டும் யப்பா! தங்காச்சிய யாத்தா எலும்பும் தோலுமா கொண்டாந்து வுடறப்பவே நமக்கு சந்தேவந்தாம். அத்து யிப்போ உறுதியானாப்புல இருக்குப்பா. ஏத்தோ பெரச்சனெ உண்டாயிருக்குப்பா. அத்து என்னா ஏதுன்னு முழுசா தெரியல. யிப்போ அப்பிடி யிப்பிடின்னு லேசுபாவா தலயக் காட்டுறாப்புல தெரியுது. அத்து என்னா வாணாலும் இருந்துட்டுப் போவட்டும். யிப்போ யிந்தப் பத்தாயிரத்தெ அந்த ஒரத்தநாட்டுப் பொண்ணு வூட்டுலேந்து கொண்டாந்து கொடுத்துச் சேத்தாப்புல போயி சேத்து வுடுறதாங் செரிப்பா. இனுமே இந்த மாதிரிக்கி எதையும் செஞ்சிப்புட வாணாம்ன்னு தங்காச்சிக்கிட்டயும் படிமானமா சொல்லிப்புடணும்ப்பா!"ன்னாம் விகடு.

            "திடீர்ன்னு பத்தாயிரம்ன்னா எப்பிடாம்பீ! யிப்பத்தாம் தாலி பெருக்கிப் போட்டு, யோகிப் பாய்க்கு வட்டிப் பணத்தெ கொடுத்து, ஒனக்கும் சொசைட்டி லோன், பெர்சனல் லோன்னு பணத்தெ பிடிச்சிச் செருமமால்லாடா இருக்கும்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "சொசைட்டி லோன்ல பிடிக்க வேண்டிய தவணைத் தொகெ பிடிக்காம ஆபீஸ் வுட்டுப்புட்டாங்கப்பா. அந்தப் பணம் சம்பளத்துலத்தாம் சேந்திருக்கு. அதெ பிடிச்சிடுறாப்புல அந்தப் பணத்துக்குப் பாங்கியில ஒரு டிராப்டப் போட்டு நாளைக்கு எடுத்தார்ற சொல்லிருக்காங்கப்பா!"ன்னாம் விகடு.

            "நாளைக்கிப் பாங்கியில டிராப்ட் எடுத்துட்டு ஆர்குடி ஆபீஸூப் போவணுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆபீஸூ போயித்தாம் ஆவணும். வெவரத்தச் சொல்லியாவணும். டிராப்ட்ட எடுக்கப் போறதில்ல. சொசைட்டியில போயி அடுத்த மாசத்துலேந்து சம்பளத்துலேந்து சரியா பிடிச்சிடச் சொல்லிடப் போறேம்!"ன்னாம் விகடு.

            "தவணெ தள்ளிப் போவப் போவ வட்டியிலத்தாம்லா விடியும். கட்டுற வட்டி கூடல்லா போவும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாதுப்பா! இத்து என்னவோ வெரைவா சரி பண்ண வேண்டிய வெசயத்தப் போல படுது! இதெப் பத்தி தங்காச்சிட்ட இன்னிக்குப் பேசிடலாமா? எப்பிடிப்பா? யில்ல நீஞ்ஞ மட்டும் பேசிப்புடுதீயளா? இனுமே இந்த மாதிரிக்கான ஒதவிகளப் பண்ண வாணாம்ன்னு கண்டிஷன் பண்ணிச் சொல்லிப்புடுதீங்க! இத்து ரொம்ப ஆபத்துலப் போயி முடியும்!"ன்னாம் விகடு.

            "அத்துச் செரிடாம்பீ! ஒந் தங்காச்சித்தாம் சொன்னாம்ன்னா அவ்வேம் புத்தி எஞ்ஞடா போச்சுது? நம்மகிட்டெ ஒரு வார்த்தெ சொல்லணுமா யில்லியா? பணத்தெ கொடுத்துப்புட்டுச் சொல்லுதான்னா எதுக்குடாம்பீ அந்த ஒதவிய அவ்வேம் பண்ணாம்? சொன்ன ஒதவிய மட்டும் சொல்லிக் காட்டக் கூடாதுடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்ம யின்னும் தங்காச்சிட்டெ பேசல. இதெப் பத்தி பேசணும் போலருக்குப்பா! மொதல்ல ன்னா நடந்துருக்குன்னே புரியலையே? தாலி பெருக்கிப் போடுறப்ப வந்தப்போ ஒடம்பும், மொகமும் சரியில்ல. யிப்போ வந்தப்போ பாக்குறதுக்கு இத்து நம்ம தங்காச்சியான்னு நமக்கே சந்தேகமாப் போயிடுச்சு. அதுக்கு ஏத்தாப்புல பாப்பாவே பாத்துட்டுக் கேக்குறா! ன்னாத்தாம் நடக்குதுன்னே புரியவே மாட்டேங்குதுப்பா!"ன்னாம் விகடு.

            "கலியாணம் ஆவுற கொஞ்ச நாள்ல சில பெரச்சனைக அப்பிடி யிப்பிடின்னு வர்றதுதாங். நாம்ம பேயாம இருந்தா அதுவே செரியா போயிடும்! சித்தெ பொறுமையா இருடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யம்மா தெனைக்கும் ஒரு மணி நேரமாச்சும் நம்ம போன எடுத்துட்டுப் போயி தங்காச்சியோட பேசிருக்கும். அத்து கூட ன்னா ஏதுன்னு எதுவும் சொல்ல மாட்டேங்குதுப்பா!"ன்னாம் விகடு.

            "அத்துல்லாம் பொம்பளைங்க சமாச்சாராம்டாம்பீ! வூட்டுக்கு வெலக்காவுறது நிக்கணும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதெப் பத்தில்லாம் ஒங்கிட்டெ சொல்ல மிடியுமா சொல்லு? கலியாணம் ஆன்னா அடுத்தக் கேள்வியே விஷேசம் உண்டா யில்லியான்னுத்தானே சனங்க கேக்கும்? அதெ பத்தினக் கவலையா இருக்கும்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னாப்பா கலியாணம் ஆயி மூணு மாசம் கூட ஆயிருக்காது. அதுக்குள்ள கொழந்தெ குட்டின்னுகிட்டு? சரசு ஆத்தாவுக்கே பாலாமணி பொறக்க ரண்டு மூணு வருஷம் ஆச்சுன்னுத்தானே சொன்னுச்சு!"ன்னாம் விகடு.

            "நீயி ஒருத்தெம்டா! அதெச் சொன்னா ஒத்துப்பாங்களா கேக்குதேம்? மாமியா ஒடைச்சா மண்ணு சட்டி, மருமவ்வேம் ஒடைச்சா பொன்னு சட்டின்னு சொல்லுற ஒலகடமா? ஓங் கருத்துப்படி அப்பிடில்லா நெனைச்சா ஒலகத்துல எந்தப் பெரச்சனைடா வர்றப் போவுது? இத்து கொழந்தெ சம்பந்தமான பெரச்சனைத்தாம்டா! நமக்கு அப்பிடித்தாம் தெரியுது."ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "செரியா வெசாரிக்காம நாமளே முடிவு பண்ணிக்கிடுறது பொருத்தமா யிருக்காது. அனுபவப்பட்டவங்க சொல்றப்ப மேக்கோண்டு நாம்ம என்னத்தெ சொல்லுறது?"ன்னாம் விகடு.

            "இப்பிடில்லாம் செலது நடக்குறதுதாங். பாத்துக்கிடலாம்டாம்பீ! நாம்ம அந்தப் பாக்குக்கோட்டையானுவோளுக்குக் கொடுக்காத பணமா? பத்தாயிரம் பிசாத்துக் காசி! நம்மப் பொண்ணு பண்ணதுக்கு அதெயும் கொடுத்துப்புடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னப்பா சிநேகிதங்க இத்து! இதுவே கலியாணம் ஆயிப் பொயிருக்கு. இதுகிட்டெ போயிக் கேட்டு, அத்து எப்பிடிக் கொடுக்கும்ன்னு ஒரு யோஜனெ வாணாம். கலியாணம் ஆயிப் போனதுமே பத்தாயிரம் காசியப் புருஷங்கிட்டெ கேட்டு சிநேகிகிக்காகக் கொடுத்துருக்கான்னு அந்தச் சனங்களுக்குத் தெரிஞ்சா அதுங்க சும்மா இருக்குமாப்பா? செலதெ யோஜனெ பண்ணாமலே பேசுதீயேங்களப்பா?"ன்னாம் விகடு.

            "நீயி நெனைக்குறது நமக்குப் புரியாம ல்லடாம்பீ! ஒடம்பு எளைச்சிப் போயிக் கெடக்குறவெகிட்டெப் போயி கருத்துச் சொல்லிட்டு இருக்க முடியாது யிப்போ. கொஞ்சம் ஒடம்பையும் தேத்தி பெறவுத்தாம் மனசையும் தேத்தி வுடணும்! யிருந்தாலும் இதெப் பத்திக் கொஞ்சம் பட்டும் படாமப் பேசி வுட்டுப்புடுவேம். அதே நேரத்துல செலதெ சூட்டோட சூடா சொன்னாத்தாம் செரிபட்டும் வரும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "கலியாணம் ஆயிப் போன பொண்ணு தங் குடும்பம், தங் குடித்தனங்றதோட நிப்பாட்டிக்கிடணும். யண்ணங்கார்ரேம் நாம்ம கேட்டாலும் ஒரு ஒதவியப் பண்ணுன்னு புருஷங்கார்ரேம்கிட்டெ கேக்கக் கூடாதுப்பா! ஏத்தோ போனாக்க நல்ல வெதமா சமைச்சிப் போட்டுச்சா, கூட கொறைச்ச கவனிச்சி வுட்டிச்சா அத்தோ நிறுத்திக்கிடணும்ப்பா!"ன்னாம் விகடு.

            "ஆமாம்டாம்பீ! நம்மளக் கேட்டாக்கா யப்பன் ஆயின்னு நம்மளுக்குக் கூட எதுவும் செய்ய வாணாம்ன்னுத்தாம் நெனைக்குறேம். ஏன்னா ஒலகம் அப்பிடி இருக்குதுப்பா! சாமர்த்தியமா இருக்குறதுதாங் இதுல காலம் தள்ள முடியுது! நம்ம வூட்டுப் போண்ணு இப்பிடி இருக்குது? இந்தக் காலத்துல எந்தப் பொண்ணுகிட்டெயிருந்தாவது யிப்பிடி பணத்தெ ஒதவியா வாங்கிப்புட முடியுமா? அத்து கெடக்கட்டும். ராச்சாப்பாட்ட முடிச்சிட்டு ன்னா ஏத்துன்னு பேசுவேம்! மின்னாடிப் பேசுனா அதுல எதாச்சும் முறுக்கிக்கிட்டு சாப்புடாம கெடந்துச்சுன்னா சோலியாப் போயிடும். ஏற்கனவே ஒடம்புக் கெடக்குறதுக்கு ராப்பட்டினி வேற கெடந்தா ஒடம்பு ஒண்ணுக்கும் ஆவாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. இதுக்கப்புறமா ரண்டு பேருமா எறங்கி வூட்டுக்குள்ள வந்தாங்க.

            "ன்னடா வந்ததும் வாரதுமா யப்பங்காரர்ர அழைச்சிட்டுப் போயி மாடியில ஏத்தோ பேசிட்டு இருக்கே? ஒண்ணு ரண்டும் பேயாம ஆளுக்கொரு பக்கமா கெடக்குமுங்க. ல்லன்னா இப்பிடித்தாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஒட்டிக்கிட்டுக் கொலாவுமுங்க!"ன்னுச்சு வெங்கு.

            "ஒண்ணுமில்லம்மா! மேல யிருக்குற கொட்டாயியப் பத்திப் பேசிட்டு இருந்தேம். அதெ மேல இருக்குறதெ காட்டிச் சொன்னாத்தாம் புரியும்ன்னு மேல போயி பேசிட்டு நின்னது!"ன்னாம் விகடு.

            "ஒஞ்ஞ யப்பங்காருக்கு வூட்டெ கட்டுறதெப் பத்திச் சொல்லு! வூட்ட இந்த அளவுக்கு நீட்டி இழுத்தாச்சி. அடுத்ததா மேலப் போயி கொட்டாய்யப் போட்டு நீட்டச் சொல்லு! அதுல்லாம் நீயி சொல்லாமலே பண்ணுற ஆளுடாம்பீ அந்த மனுஷம். யிப்போ வயலு வேற யில்லியா? புத்தி அதெ நோக்கித்தாம் போவும்! அந்தக் கதெயே பேச ஆரம்பிச்சா இன்னிக்கு முடியாது. அதெ தூக்கிக் குப்பையிலப் போடு. ஏம் ஆயி! தோசயெச் சுட்டுப் போடு! அதது சாப்புட்டுப் போயி படுக்கட்டும்! ஏம்டி பவ்வுப் பாப்பா! யத்தையே கொண்டா! அவ்வே ரண்ட சாப்புட்டுப் படுக்கட்டும். ன்னவ்வோ நம்மள எல்லாத்தியும் பாத்த பெற்பாடும் எதையும் சாப்புட மாட்டேங்றா. என்னவோ கோழி கொத்துறாப்புல சாப்பாட்ட வெச்சிக்கிட்டு உக்காந்திருக்குறா! நம்மள பாக்க முடியாத ஏக்கம்ன்னு அவ்வே ஒருத்தி எஞ் சின்னம்மா வேற கொண்டாந்து வுட்டுட்டுப் போயிருக்கா! ன்னா எதுவோ அத்து மேல யிருக்குற ஆண்டவனுக்குத்தாம் தெரியும்! மேல இருக்குறவேம் பாத்துதாம் எதாச்சிம் செய்யணும்!"ன்னுச்சு வெங்கு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...