27 Sept 2020

ஒரு விபத்துக்குப் பின்...

ஒரு விபத்துக்குப் பின்...

            ஒரு விபத்துச் சம்பவம் பற்றி மனிதர்கள் வெவ்வேறு விதமாகப் பேசுகிறார்கள். வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் ஆபத்தின்றி திரும்ப முடியும் என்பதில் பலர் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். அந்த அளவுக்குப் பாதுகாப்பை நாம் உறுதிபடுத்தி விட முடியாது. அது நிறைய நம்பிக்கைகளைக் கலந்து வைக்கிறது. அதனால் போகும் போது யார் யார் முகத்தில் முழித்து விட்டுச் செல்ல வேண்டும் என்று சனங்கள் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அபசகுனவாதிகள் என சிலரைக் கண்டறிகின்றனர். சகுனவாதிகள் என்று சிலரைக் கண்டறிகின்றனர்.

            அபசகுனவாதிகள் எதிரே வந்தால் உடனே கிளம்பாமல் வீட்டிற்கு வந்து சிறிது தண்ணீர் பருகி விட்டுச் செல்கின்றனர். அது அவர்களுக்குச் சிறிது ஆறுதல் தருகிறது. திரும்ப வீடு வருதல் என்பதும் தண்ணீர் பருகுவதும் பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது.ஒட்டுமொத்தத்தில் வீடுதான் மனிதர்களுக்குப் பாதுகாப்புத் தருவது. அவர்களைப் பொருத்த வரையில் வீடுதான் நிரந்தரம், வீடுதான் எல்லாம். நிரந்தரமான மாறுபாடில்லாத ஒன்றை இறப்பிற்குப் பின் தருவதை அவர்கள் வீடுபேறு என்றே அழைக்கிறார்கள்.

            யாரேனும் பயணம் போய் வந்து வண்டியிலிருந்து கீழே விழுந்தால் தெருவில் நான்கு பேர் மிக மோசமாகப் போட்டு வறுத்தெடுக்கப்பட்டனர். அவர்கள் எதிரே வந்துதான் விபத்துக்கான காரணம் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர். அப்படிப் பேசுவதற்கு எந்த அறிவியல் ரீதியான காரணங்கள் இல்லை என்பது வேறு. அவர்கள் அப்படிப் பேசுவதுதான் சரியென நினைத்துக் கொள்கின்றனர். ஒரு விபத்துக்கான எளிமையான கண்டுபிடிப்புக் காரணமாக அது அமைகிறது மக்களுக்கு.

            ஒரு மோசமான விபத்தை உருவாக்காமல் இருப்பதற்கு சாலை குறித்து நிறைய திட்டமிட வேண்டியிருக்கிறது. அதில் வேகத்தடை என்பது ஒன்று. ஒரு வேகத்தடை என்பது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற புரிதல் இன்றியே சாலைகள் அமைக்கப்படுகின்றன. விபத்துகளைக் குறைப்பதற்காக அமைக்கப்படும் வேகத்தடைகளே பல நேரங்களில் விபத்துகளை உண்டு பண்ணி விடுகின்றன. சாலையின் பல இடங்களில் வேகத்தடை இருக்கிறது என்பது தெரியாமலே பல வேகத்தடைகள் இருக்கின்றன. அந்த வேகத்தடைகளைக் கடக்கும் போதுதான் வேகத்தடை இருப்பதே புரிகிறது.

            மக்களுக்கு விபத்தும் பழகி விட்டது போலிருக்கிறது. சாலையில் விழுந்து எழுந்து மருத்துவரிடம் போய் அவர்களாகவே டிடி ஊசி போட்டு விடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள். பிறகு சிறிது நாட்கள் ப்ளாஸ்திரியோ, மாவு கட்டோ கட்டிக் கொண்டே விபத்துக்குள்ளான வண்டியிலேயே அலைகிறார்கள். யாராவது விபத்திற்குள்ளானால் தனக்கு நேர்ந்த விபத்து அனுபவத்தையும், அதற்கு எடுத்துக் கொண்ட மருந்து வகைகள் பற்றியும் விலா வாரியாக எடுத்துச் சொல்கிறார்கள். பிறகு அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுகிறார்கள். அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது.

            இந்த விபத்துகளிலும் ஒரு உய்த்துணர்வு இருக்கிறது. குண்டும் குழியுமாக இருந்த போது பெரும்பாலும் அநேகமாக இல்லாமலிருந்த விபத்துகள், இப்போது சாலைகள் நன்றாகப் போடப்பட்ட பிறகு அதிகமாக நடக்கிறது. சாலைகள் மோசமாக இருந்தால் மனிதர்கள் நன்றாக இருப்பார்கள் போல. சாலைகள் நன்றாக மாறினால் மனிதர்கள் விபத்துக்கு உள்ளாவர்கள் போல. என்னவோ நம் நாட்டில்தான் எல்லாம் மறுதலையாக நடக்கிறது. 

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...