2 Sept 2020

பாடம் நடத்துவதற்கான பாடங்கள்

பாடம் நடத்துவதற்கான பாடங்கள்

            பொதுவாக இது போன்ற தலைப்புகளை நான் எழுத முயற்சிப்பதில்லை. இத்தலைப்புகளில் நிறைய அறிவுரைகள் வந்து குவிந்து விடும். அந்த அறிவுரைகளில் ஒன்றைக் கூட கடைபிடிக்க முடியாது என்பது அனுபவப் பாடம்.

            ஆக இந்தத் தலைப்பைத் துவங்குவது என்றால் பிள்ளைகளுக்குப் புத்தகமோ, பாடமோ அறவே பிடிக்காது என்பதிலிருந்துதான் துவங்க வேண்டும். ஆனால் பிள்ளைகளுக்குக் கதைகள் பிடிக்கும், பாடல்கள் பிடிக்கும், ஆட்டம் பாட்டம் பிடிக்கும், விளையாட்டுப் பிடிக்கும். பாடத்தைக் கதையாக்குவது, பாடலாக்குவது, விளையாட்டாக்குவது பெரிய கலை. அந்தக் கலை தெரிந்தால் பாடம் நடத்த முயற்சிக்கலாம். இல்லையென்றால் பாவம் பிள்ளைகள். அவர்களை அப்படியே விட்டு விடலாம்.

            பிள்ளைகளைப் போரடித்து விடக் கூடாது. அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். போரடிப்பதற்கு எதிரான ஒரு விசயமும் உலகில் இருக்கிறது. அதுதான் நகைச்சுவை. எப்போதும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் புரியாத ஒன்றைச் சொன்னாலும் புரிந்தது போல நினைத்துக் கொள்கிறார்கள் குழந்தைகள்.

            பாடத்தை நடத்தும் போது ரொம்ப சமர்த்தாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் பிள்ளைகள் தாங்கள்தான் சமர்த்தாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அங்கங்கே பாடம் நடத்தும் போது எந்த இடம் கடினமாக இருக்கிறதோ, அங்கே தலையைச் சொரிந்து கொண்டு இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லையே என்று தலையச் சொரிந்தால், பிள்ளைகள் அதை மிக எளிமையாக உங்களுக்குப் புரிய வைப்பார்கள். அது எப்படியோ மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று வரும் போது பிள்ளைகள் மனதில் ஏதோ ஒரு மாயா ஜாலம் நடக்கிறது. நமக்குப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து அவர்கள் தங்களையும் அறியாமல் புரிந்துக் கொண்டு விடுவார்கள். இதை விடுத்து அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று பிரயத்தனங்கள் எடுப்பது விரயத்தனங்களாக ஆவதில்தான் போய் நிற்கும். நீங்கள் புரிய வைக்க நினைக்கும் எந்தக் கருத்தையும் புரிந்து கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டவே மாட்டார்கள்.

            பிள்ளைகளை மதிப்பது என்பது மிகப்பெரிய பண்பு. நாம் அவர்களை மதிக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரிந்தால் போதும் நமக்காக எதைச் செய்யவும் அவர்கள் தயாராக இருப்பார்கள் பாடம் படிப்பது உட்பட.

            நாம் எதைச் செய்கிறோமோ அதைப் பிள்ளைகளும் அதே மாதிரி செய்துப் பார்க்க முயல்கிறார்கள். டி.வி. பார்த்தால் டி.வி.யைப் பார்க்க முயல்கிறார்கள். செல்போனை நோண்டினால் செல்போனை நோண்டிப் பார்க்க முயல்கிறார்கள். புத்தகப் படித்தால் புத்தகங்களைப் படிக்க முயல்கிறார்கள். நாம் பிள்ளைகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி நடந்து காட்டி விடுவதே மேல். சொல்லி வழிக்குக் கொண்டு வருவது பிள்ளைகளைப் பொருத்த வரையில் கடினமானது. நடந்து காட்டி விடுவது ரொம்ப எளிது.

            வெளியே செல்லும் போது தனியாகச் செல்ல நினைக்காதீர்கள். பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் அவர்கள் மேல் அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளமாகப் பிள்ளைகள் அதை நினைப்பார்கள். அந்த அக்கறை நீங்கள் எதைச் சொன்னாலும் அதைச் செய்ய வைக்கும். இப்படித்தான் சொற்கள் குழந்தைகளிடம் செல்லுபடியாகும். வெற்றுச் சொற்கள் அவர்களிடம் செல்லுபடியாவதில்லை.

            குழந்தைகளிடம் நாம் கேள்வி கேட்பதும், குழந்தைகள் நம்மிடம் கேள்வி கேட்பதும் ரொம்ப முக்கியம். பரஸ்பரம் அதற்கான பதில்களும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். எப்போதும் அவர்களிடம் கலந்துப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களை நாம் நமக்குச் சமமாகக் கருதுகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்த உணர்வுதான் உங்களுக்காக எதைச் செய்யவும் அதாவது பாடத்தைப்படிக்கவும் நீங்கள் சொல்கிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதைச் செய்ய அவர்களைத் தூண்டுகிறது.

            குழந்தைகள் தவறு செய்யக் கூடியவர்கள். அவர்கள் தவறு செய்யும் போதெல்லாம் அதைத் திருத்த, வழிகாட்ட, கைதூக்கி விட நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை எப்போதும் அவர்கள் உணர வேண்டும். ஒருபோதும் அவர்களின் தவறுகளைத் திட்டுவதற்காகவோ, கண்டிப்பதற்காகவோ, தண்டிப்பதற்காகவோ நீங்கள் இருக்கிறீர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உண்டாகி விடக் கூடாது. குழந்தைகள் பாடங்களை வெறுப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம். அதில் நேர்ந்து விடும் தவறுக்காக நாம் தண்டிக்கப்படுகிறோம் அல்லது கண்டிக்கப்படுகிறோம் என்ற உணர்வு குழந்தைகளின் மனதில் பேரச்சமாகவும், பெரும் பீதியாகவும் நிறைந்திருக்கிறது. குழந்தைகள் பாடங்களைத் தப்புத் தப்பாகப் படித்தாலும் அதையும் ரசியுங்கள். மழழைக்கு அதுதான் அழகு. திருத்துவதை குழந்தைகள் அறியாத வகையில் திருத்த வேண்டும் என்பதுதான் இதன் பின்னுள்ள ரகசியம்.

            இதற்கெல்லாம் குழந்தையோடு குழந்தையாய் மாற நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களோடு நேரம் செலவிட அவர்களின் முக்கியமான பல தருணங்களில் நாம் ஓர் அங்கமாய் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது நாம் ஓர் ஆசிரியராய் ஆகி விடக் கூடிய அபாயம் இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் ஆசிரியரிடமிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை விட, ஆசிரியரிடமிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்ற உணர்வில்தான் உறுதியாக இருக்கிறார்கள். ஆகப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும் போது நீங்கள் ஓர் ஆசிரியர் இல்லை என்ற உணர்வை உருவாக்குவதைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன். இதற்குத்தான் இது போன்ற தலைப்புகளை நான் எழுத முயற்சிப்பதில்லை. கடைசியில் இப்படி எல்லாமே அறிவுரைகளாகவே வந்து முடிந்து விட்டதற்காக வருத்தப்படுகிறேன்.

•••••

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...