2 Sept 2020

பொறுமையான புள்ளையாரு!

பொறுமையான புள்ளையாரு!

செய்யு - 552

            ஆறு மணிக்கு மேல பொண்ணு மாப்புள்ளை வந்துடும்ன்னு ரொம்ப எதிர்பார்ப்பாவுது. பொண்ணு மாப்புள்ளையப் பாக்கலாம்ன்னுச் சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு வந்தச் சனங்களும் ஆவலாதியாக் காத்துக்கிட்டுக் கெடக்குதுங்க. "பொண்ணும் மாப்புள்ளையும் எங்க வந்துட்டு இருக்குன்னு கேளுடாம்பீ?"ங்குது விருத்தியூரு பெரிம்மா விகடுகிட்டெ. விகடு செய்யுகிட்டெ போன அடிச்சிக் கேட்டா, "வந்துட்டு இருக்கோம்ண்ணே! எந்த எடம்ன்னு சரியா தெரியல. இரு அவுங்ககிட்டே கேட்டுச் சொல்றேம்!"ங்றா. கேட்டுட்டு, "வேகமா வந்துட்டு இருக்குறோம். சீக்கரமா வந்துட்டு இருக்குறோம். இத்தோ வந்துடுறேம்!"ங்றா செய்யு. அதுக்கு மேல என்னத்தெ கேக்குறதுன்னு, "வந்துடுவாங்கன்னு சொல்றாங்க பெரிம்மா!"ங்றாம் விகடு. "எங்க வருது, எம்மாம் நேரம் ஆவுமுன்னு கேட்டா அதுக்கு இவ்வேம் சொல்றாம் பாரு ஒரு பதிலெ தலையும் வாலுமில்லாம. செரி வாரட்டும் வுடு! பொண்ணு மாப்புள வாராம எங்கப் போயிடும்?"ன்னு சொல்லிட்டுச் சிரிக்கிது பெரிம்மா.

            கொஞ்ச நேரத்துல செய்யு திரும்பவும் போன அடிக்கிறா. "யண்ணே புள்ளையாரு கோயிலு தொறந்து இருக்கா? கோயில்ல ஐயரு வந்துட்டாரா? ஐயரு ஒருவேள போயிட்டார்ரன்னா அவர்ர கூப்புட ஒங்கிட்டெ அவரோட போன் நம்பரு இருக்கா?"ன்னு ஒண்ணு மாத்தி ஒண்ணா கேள்வியா கேக்குறா.

            "யிரு பாத்துச் சொல்றேம்! எங்கிட்டெ ஏது ஐயரோட போன் நம்பர்ல்லாம்? பரமுவோட அப்பாகிட்டத்தாம் கேக்கணும்!"ங்றாம் விகடு.

            "ஒருவேள ஐயரு இல்லன்னா போன் நம்பர்ர வாங்கி அடிச்சி அவர்ர வாரச் சொல்லுதீயா? அப்பிடி இருந்தார்ன்னா சித்தெ இருக்குச் சொல்லுண்ணே! நாஞ்ஞ வந்துக்கிட்டே இருக்கோம்!"ன்னா செய்யு.

            விகடு வூட்டை விட்டு வெளியில வந்து கோயில் பக்கம் ஒரு நடைய வெச்சுப் பாக்குறாம். கோயிலு திறந்திருக்கு. ஐயரு வந்திருக்காரு. அதெ பாத்ததும், "ம்! ஐயரு வந்துருக்காரு! இந்நேரத்துக்கு வந்தீங்கன்னு ரொம்ப செளரியப்படும்!"ங்றாம் விகடு.

            "யண்ணே! கொஞ்ச நேரம் ஆனாலும் ஆவும். ஆனா சீக்கரமே வந்துப்புடுறேம். ஐயர்ரட்ட சொல்லி நிப்பாட்டி வையேம். அவுங்க நிறுத்தி வைக்கச் சொல்றாங்க. பிள்ளையாருக்கு என்னவோ செய்யணுமாம். அதுவும் வேண்டுதலாம்!"ங்றா செய்யு.

            அதென்ன நேரம் ஆனாலும் ஆவும், அதே நேரத்துல சீக்கிரமே வந்துப்புடுறாம்ன்னா, ஒண்ணுமே புரிய மாட்டேங்குதேன்னு, "செரி! நாம்ம சொல்றேம்! நீஞ்ஞ பாத்துப் பொறுமையா வாஞ்ஞ!"ங்றாம் விகடு. சொன்னவம் நேரா புள்ளையாரு கோயிலுக்குப் போனாம். வரசித்த விநாயகரு கோயிலு. ரொம்ப காலம் வரைக்கும் பெருமாள் குளத்துக்கு எதுத்தாப்புல ஒரு கீத்துக் கோட்டாய்ல கெடந்தவரு வரசித்தி விநாயகரு. அவரு மட்டுமில்லாம பெருமாளு, லிங்கம்ன்னு கலந்து கட்டி நெறைய சாமிங்க அந்தக் கொட்டாய்ல கெடந்துச்சுங்க சமத்துவமா. அரியும் சிவனும் ஒண்ணு, அது அறியாதவங்க வாயில மண்ணுங்ற வாசகம் அநேகமா அந்தக் கொட்டாயப் பாத்த பொறந்த வாசகமாத்தாம் இருக்கும்.

            கிராமத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாம ஒதுங்கிப் போயிக் கெடக்கறாரேன்னு சனங்க விநாயகர்ர மட்டும் தூக்கியாந்து முச்சந்தியில மேற்கா போற ரோட்டுக்கு ஓரமா தென்னண்டைப் பக்கமா அவருக்குக் கோயிலு கட்டி பாஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும். அவரோட பேரு வரசித்தி விநாயகருன்னு இருக்குறதால அவரு மட்டுந்தாம் வரத்தெ சித்தியா கொடுக்க முடியும்ன்னும், மித்த சாமிகளால அப்பிடிக் கொடுக்க முடியாதுன்னு சனங்க நெனைச்சிக்கிட்டதுவோ என்னவோ! அந்தச் சாமிகள்ல விநாயகருக்கு மட்டுந்தாம் கொட்டாய்லேந்து கோயில்ல குடியேறுற யோகம் இருந்துச்சு. அதுலேந்து அந்தக் கோயில்லத்தாம் இருக்காரு. ஆக மொத்தத்துல கொட்டாய்ல கெடந்த சாமிகள்ல அவரு ஒருத்தருக்கு மட்டுந்தாம் நல்ல காலம் பொறந்துச்சு. பாக்கிச் சாமிங்க எல்லாம் நல்ல காலத்த எதிர்பார்த்துகிட்டு அந்தக் கொட்டாய்லத்தாம் கெடக்குதுங்க. அதுகளுக்கு என்னிக்கு நல்ல காலம் பொறக்கப் போவுதோ தெரியல.

            பெருமாளுக்கு ஒரு கோயிலக் கட்டிப்புடணும்ன்னு சனங்களும் பேசிக்கிட்டுத்தாம் கெடக்குதுங்க. பேசுற நேரத்தோட அந்தப் பேச்சு முடிஞ்சிப் போயிடுது. அவர்ரப் பத்தி என்னிக்காவது சனங்க நினைச்சிக்கிட்டா அன்னிக்கு ஒரு நாளு கீத்துக் கொட்டாயச் சுத்தம் பண்ணி பூசை நடக்குது. மித்த நாள்கள்ல அவரு பாட்டுக்கு கொட்டாய்க்குள்ளாரயே கெடக்குறாரு. ஆடுக கொட்டாய்கள்ல பூந்து ஆட்டாம் புழுக்கையப் போட்டுட்டுப் போயிடுதுங்க. அவருக்கு எதுத்தாப்புல இருக்குற பெருமாளு கொளம் வெங்காயத் தாமரை மண்டிக் கெடக்குது. அந்தக் கொளத்துல கிராமத்துச் சார்பா கொஞ்ச வருஷம் மீனு வளத்துப் பாத்தாங்க. பெறவு அத்து ஒத்து வரலன்னு அதுல வெங்காயத் தாமரை வளக்குறதோட நிறுத்திக்கிடுவோம்ன்னு நெனைச்சாங்களோ என்னவோ அப்பிடியே வுட்டுப்புட்டாங்க.

            அந்தக் கொளத்த வருஷா வருஷம் சுத்தம் பண்றாங்களோ இல்லியோ, கொளத்த சுத்தி நாலு மூலையிலும் ரண்டு வருஷத்துக்கு ஒரு தவா, ல்லேன்னா மூணு வருஷத்துக்கு ஒரு தவா படித்துறை கட்டுற வேல மட்டும் நடக்குது. நாலு மூலைக்கும் மூணு வருஷ கணக்குல படித்துறை கட்டுனா பன்னெண்டு வருஷக்க கணக்குல படித்துறை கட்டி முடியணும். ஆன்னா முடியாது. எத்தனெ வருஷம் ஆனாலும் படித்துறை கட்டுறது நடந்துகிட்டுத்தாம் இருக்கும். ஏன்னா கட்டி இருக்குற படித்துறைய மூணு வருஷத்துக்கு ஒரு தவா இடிச்சி இடிச்சிக் கட்டுனா அப்பிடித்தாம் ஆவும். ஊருல ஒரு கொளமும், அதுக்கு நாலு மூலையில படித்துறையும் இருக்குறது கான்ட்ராக்டுகாரனுங்களுக்குத்தாம் உபயோகமா இருக்குது. அத்து ஏம்டா சனங்க குளிக்காத கொளத்துக்கு எப்பப் பாத்தாலும் படித்துறையக் கட்டித் தொலைக்குதீயேன்னு ஊர்லயும் யாரும் எந்தக் கேள்வியும் கேக்குறதில்ல. நம்ம ஊர்ல வந்து ஒரு கான்ட்ராக்ட்கார்ரேன் பொழைச்சிட்டுப் போறாங்ற நெனைப்போ என்னவோ! வாத்தியாரு வாராத பள்ளியோடத்துக்குப் புள்ளீயோ போயி படிச்சிட்டு வாராப்புலத்தாம் குளிக்க வாராத கொளத்துக்கு படித்துறை மட்டும் புதுமை கொழையாம அப்பைக்கப்போ கட்டி ஆவுது.

            சனங்க யாரும் அந்தப் படித்துறையப் பொழங்கிப் பாக்க முடியாது. கிராமக் குடிமகன்களுக்குத்தாம் படித்துறை எப்பவும் வசதியாப் போவுது. காலங்காத்தால கெளம்பிப் போனா ஒவ்வொரு படித்துறையிலயும் அரைச் சாக்கு நெறைய குவார்ட்டரு பாட்டில்கள பொறுக்கிட்டு வாரலாம். கொளத்துல தண்ணி வத்துன காலத்துலயும் குவார்ட்டரு பாட்டிலு தண்ணி வத்துனதா வரலாறு இல்ல. வரசித்தி விநாயகரு கோயிலுக்குப் பக்கத்துலயும் ஒரு படித்துறை இருக்கு. அதுலயும் குடிமகன்ங்க அவர்ர சாட்சியா வெச்சிக் குடிச்சிட்டுத்தாங் போறாங்க. விநாயகரு அவுங்கள யாரையும் கண்டுக்கிடறதில்ல. அவரு உண்டு வேல உண்டுன்னு இருந்துக்கிடுறாரு. சாமி சிலையா இருக்குறதுல அதுதாங் ஒரு செளரியம். இல்லன்னா சீட்டாடிக்கிட்டெ பயலுவோ பிடிச்சிப் போடுற பீடி நாத்தத்துக்கும், குடிக்காரப் பயலுவோ குடிச்சிட்டுப் படித்துறையில எடுத்து வைக்குற வாந்திக்கும் என்னிக்கோ அவரு குடல போரட்டிக்கிட்டு ஓடிருப்பாரு. அவரு அப்பிடி என்னிக்காவது சிலையா இருந்தாலும் அதெ தாங்க முடியாம ஓடிப் போயிடுவாரோன்னுத்தாம் கோயில்லயும் பூசை முடிஞ்ச ஒடனே பூட்டிச் வெச்சிப்புடுறாரு ஐயரு.

            நாளு தவறாம சாயுங்கால நேரத்துல ஐயரு வந்து பூசை வெச்சிட்டுப் போயிடுவாரு. வெள்ளி, செவ்வாய்ல ஊரு பொண்டுக வெளக்கப் போட தவறாது. மித்த நேரங்கள்ல வாலிபப் பசங்க புள்ளையாருக்கு மின்னாடி உக்காந்து சீட்டாட தவறுறது இல்ல. சில சமயங்கள்ல தாயமும் வெளையாடுறாங்க. அந்தக் கோயிலு இருக்குற காரணத்தாலத்தாங் தாயம்ங்ற கெராமத்து வெளையாட்டுக இன்னும் உசுரோட ஜீவிச்சிக்கிட்டு இருக்குது. பல நேரங்கள்ல கோயிலுக்குள்ள விநாயகர்ரப் பாக்குறப்போ, ஊருக்கு இளிச்சவாயம் புள்ளையாரு கோயிலு ஆண்டிங்றதெயே மாத்தி அத்து அவருத்தாம்ன்னு சொல்ல தோணுறாப்புல இருக்காரு. இவ்வளவு சங்கடங்களுக்கு மத்தியிலயும் அவரு கிராம சனங்களுக்காக அருள் பாலிச்சிக்கிட்டுத்தாங் இருக்காரு.

            விகடு வூட்ட வுட்டு மேற்காலப் போனா வரசித்தி விநாயகரு மொகத்துல முழிக்காம போவ முடியாது. அதெ ரொம்பப் பெரிய அதிர்ஷ்மா சொல்லிச் சொல்லிச் சிலாகிச்சிக்கும் வெங்கு, அவரு மொகத்துல முழிச்சிட்டுப் போறதாலதாங் போற காரியம் உருப்படுறதா. கிராமத்துச் சனங்களுக்கும் அவரு ஒரு சக்தி வாய்ந்த கடவுளா மாறிட்டு இருந்ததுல சனங்க ஒவ்வொண்ணா கோயிலுக்குச் செஞ்சு இப்போ கோயிலுக்குக் கரண்டு, கோயிலுக்குன்னு புனல் போல இருக்கும் ஸ்பீக்கரு எல்லாம் இருக்கு. மார்கழி மாசம் வந்தா விநாயகரோட காதையே கிழிக்கிற அளவுக்குப் பாட்டெ போட்டு விட்டுடுறாங்க. அந்தச் சத்தத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லங்ற மாதிரிக்கிக் காதெ பொத்திக்கிடாம இருந்திடுறாரு வரசித்த விநாயகரு. அதாங் கடவுளு. கடவுளால மட்டுந்தாம் அந்தச் சத்தத்துக்குக் காதெ பொத்திக்கிடாம அந்த எடத்துல உக்காந்திருக்க முடியும். அந்த ஒரு மாசத்துல மட்டும் காதெ பொத்திக்காம வூட்டுல இருக்குறதுன்னா விகடுவுக்குக் கஷ்டமாத்தாம் இருக்கு. விகடுவுக்குச் சாமி இல்லன்னாலும் அந்தச் சத்தத்தெ தாங்கிட்டு உட்காந்திருக்குற விநாயகர்ரப் பாக்குறப்போ அவர்ர சக்தி வாய்ந்த தெய்வமாத்தாம் பாக்கத் தோணுது.

            கோயிலுன்னு கட்டி கும்பாபிஷேகம் ஆன நாள்லேந்து வந்துட்டுப் போயிட்டு இருந்த கருப்பு ஐயருக்குப் பெறவு அவரோட மகன் சிவப்பு ஐயரு வந்துட்டுப் போறாரு. கிராமத்துச் சனங்க அவுங்களுக்கு வெச்சிருக்குற பேரு அப்பிடி. நெறைய ஐயருமாருக டிவியெஸ்லயும், பைக்கிலயும் வந்துட்டுப் போயிட்டு இருக்குற இந்தக் கால கட்டத்துல சைக்கிள்ல வர்ற ஒரே ஐயருமாரு அவருதாங். ஐயரு பெட்ரோல் போட்டுட்டு வண்டியில வர்ற முடியாது அளவுக்கு அவருக்கு மாசத்துக்கு எரநூத்து, முந்நூத்துக்கு மேல பணத்தெ கொடுக்கக் கூடாதுங்றதுல கிராமத்துலயும் சனங்க உறுதியா இருக்குதுங்க. விகடு போயி நின்ன நேரம் சேப்பு ஐயரு, "கோயிலுக்கு வாராத ஆளுல்லாம் அதிசயமால்ல வருது. என்னடாம்பீ! பொண்ணு மாப்புள வந்துப்புட்டா! கலியாணத்துக்கு வாரணும்ன்னுத்தாம் பாத்தது. முடியாம போச்சு. வந்தாச் சொல்லு, வந்துப் பாத்துப்புட்டு போயிடுறேம்!"ன்னாரு.

            "அவுங்களே ஒஞ்ஞளப் பாக்க இஞ்ஞ வருவாங்க சாமி!"ன்னாம் விகடு.

            "பொண்ணு மாப்புள இன்னும் வல்லையாடாம்பீ?"ன்னாரு சேப்பு ஐயரு.

            "வந்துட்டு இருக்காங்க சாமீ! என்னவோ வேண்டுதலு இருக்காம். சித்தெ இருந்தீங்கன்னா சட்டுன்னு வந்துப்புடுவாங்க!"ன்னாம் விகடு.

            "ஒண்ணும் அவ்சரமில்லே! பொறுமையா வாரச் சொல்லு. இருந்துட்டுப் போறேம்!"ன்னாரு ஐயரு.

            "ரொம்ப நன்றிங்க சாமீ!"ன்னாம் விகடு.

            "ன்னடாம்பீ நன்றி? நீயி காலேஜோ என்னமோ படிக்கிற காலத்தே ரண்டு மூணு மாசம் வூட்டுல யில்லாம எங்கயோ ஓடிப் போயிருந்தே ஞாபவம் இருக்காடாம்பீ? அப்போ ஒங்க அம்மாத்தாம் தெனமும் வந்து வெளக்குப் போட்டுட்டு வேண்டிக்கிட்டுப் போவும். அப்போ அப்பாவும் நானும் ரண்டு பேருமா பூசைக்கு வர்றது. ஒங்க அம்மா சொல்லி அழுவாதா நாளில்லே. அப்போ துன்னூர்ர போட்டு வுட்டுப்புட்டு எங்க அப்பா சொல்லுவாங்கோ ஒங்க அம்மாகிட்டெ, எங்க இருந்தாலும் ஒம் புள்ளையாண்டான் நல்ல வெதமா இருப்பாம், நல்ல வெதமா திரும்பி வருவாம், திரும்பி வந்து நல்ல வெதமா இருப்பாம் கவலப்படாதேன்னு. திரும்பி வந்தப் பயெ ஒரு நாளாச்சும் கோயிலுப் பக்கம் எட்டிப் பாத்திருக்கீயா? இன்னிக்குத்தாம் தங்கச்சிக் கலியாணங்றதுக்காக எட்டிப் பாக்குறே? தெனமும் வாடாம்பீ! சாதாரண விநாயகரு இல்லாடாம்பீ! வரசித்த விநாயகரு!"ன்னாரு ஐயரு. அதெ சொல்ல விகடுவுக்கு வெட்கமா போச்சு. ஏம்டா ஐயர்ரப் பாக்க வந்தோம்ன்னு ஆச்சு அவனுக்கு.

            அப்போ பக்கத்துல பரமுவோட அப்பாவும் நின்னுகிட்டு இருந்தாரு. "நீஞ்ஞ ஒரு ஆளு ஓய்! சாமி ல்லங்றவங்கிட்டெ போயி சாமிக் கும்புட வான்னுகிட்டு! வூட்டுல சொல்லி வுட்டுருக்காங்றதுக்காக வெசாரிக்க வந்திருக்காம் அவ்வேம்!"ன்னாரு.

            "ஓ புள்ளையாண்டான் பெரியாரு கோஷ்டியா? என்னத்தெ பண்ணுறது? எல்லாத்துக்கும் சேத்து நல்லது பண்ணணுங்றது சாமியோட தலையெழுத்து!"ன்னாரு ஐயரு.

            "சாமீ! கெளம்பிடாதீயே! வந்துகிட்டெ இருக்காங்க!"ன்னாம் விகடு.

            "எவ்ளோ நேரம் ஆனாலும் இருக்கேம்டாம்பீ! பொண்ணு மாப்புள வர்றப்போ தவறாம நீயும் வந்தப்புடு. நாலு தடவே அப்பிடி வந்துட்டுப் போனாத்தாம் கடவுளு இருக்காங்றது மனசுலப் பதியும்! இதுல நீயி வாத்தியார்ரு வேற! பாடஞ் சொல்லிக் கொடுக்குற நீயே இப்பிடின்னா ஒங்கிட்டெ பாடம் படிக்குதே புள்ளைக அதுகளச் சொல்லணும்!"ன்னாரு ஐயரு.

            "கட்டாயம் வர்றேம் சாமீ!"ன்னாம் விகடு.

            "கலியாணச் சோலிக்கார ஆளு! போயி வூட்டுல இருக்குற வேலையப் பாரு. பொண்ணு மாப்புள்ள வந்தோடன்ன அழைச்சிட்டு வா! நாம்ம வூட்டுக்குப் போயி என்னத்தெ பண்ணப் போறேம்? பேச்சுத் தொணைக்குந்தாம் ஒரு ஆளு கெடைச்சிருக்கே. இவ்வரே பிடிச்சிப் போட்டுப் பேசிட்டு இருக்கேம்!"ன்னாரு ஐயரு பரமுவோட அப்பாவப் பாத்து.

            அப்போ மணி ஆறரை இருக்கும். ஆனா பொண்ணு மாப்புள வந்தப்போ மணி எட்டு இருக்கும். அது வரைக்கும் காத்துக்கிட்டுத்தாம் இருந்தாரு சேப்பு ஐயரு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...