பந்தியில பாழாகும் பணம்!
செய்யு - 563
மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோயிலுக்கு
மின்னாடி எங்க கார்ர நிப்பாட்டுறதுங்றதெ புரியல. கார்ர நிப்பாட்டிட்டு எறங்குறதுக்கு
எடத்தெ தேடுறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இது மாதிரியான நெலமையிலத்தாம் கார்ரோட
செருமம் தெரியும். காரு நம்மளச் சுமக்குறதுங்றது மாறி கார்ர நாம்ம சொமக்குறாப்புல
தோணும். அரை மணி நேரத்துக்கு மேல கார்ர ஒரு எடத்தெ பாத்து நிப்பாட்ட தடுமாற வேண்டியதா
இருந்துச்சு. டிராபிக்ல நின்னு நின்னு வந்ததெ விட அது மோசமா இருந்துச்சு. கார்லேந்து
எறங்கி எடத்துக்குப் போறதும் செருமமாத்தாம் இருந்துச்சு. வாகனங்க வந்துட்டும், போயிட்டும்
அந்த எடமே குறுகலா இருந்துச்சு. சனநடமாட்டம் சொல்றாப்புல இல்ல. புளிமூட்டைய வுட அந்த
எடம் மோசமா இருந்துச்சு. எதுலயும் ஒரு ஒழுங்கு இருக்குறாப்புல தெரியல. ரிஷப்ஷன் ஹால்லப்
பத்தி விசாரிச்சிட்டுப் போயிச் சேந்தப்போ ரிஷப்ஷன் ஆரம்பம் ஆயிருந்தச்சு.
செய்யுவும், பாலாமணியும் மேடையில நின்னுட்டு
இருந்தாங்க. சனங்க வரிசை கட்டிப் போயி அதுகப் பாட்டுக்கு ராணுவ ஒழுங்கோட பரிசெ கொடுக்குறதும்,
அதெ வாங்கிட்டுக் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டு, கொஞ்சம் பேசுறதுமா பொண்ணும் மாப்புள்ளையும்
நின்னுகிட்டு இருந்தாங்க. இந்த வேலைய அவுங்க தொடர்ந்து செய்ய வேண்டியது இருந்துச்சு.
பரிசெ கொடுத்தவங்க அதெ கொடுத்து முடிச்சதும் அந்த வேலையிலேந்து தப்பிச்சவங்கப் போல
இருந்தாங்க. பொண்ணு மாப்புள ரண்டு பேத்து அப்படித் தப்பிக்க முடியாம நெறையப் பரிசுகள
வாங்கிக்கிட்டும், சிரிச்சிக்கிட்டும், பேசிக்கிட்டும் இருந்துகிட்டே இருக்க வேண்டியதா
இருந்துச்சு. அதெ அவுங்க விரும்பவும் செய்யுறாப்புலத்தாம் தோணுச்சு.
எல்லாரும் வந்துப் பாத்து குசலம் விசாரிச்சிப்
பரிசுக் கொடுக்கறதுங்றது சந்தோஷமான தருணந்தாம். அந்த தருணம் ரொம்ப அளவெத் தாண்டி
நடந்துச்சு. வரிசையில நின்னுப் பரிசெ கொடுக்குறவங்களோட எண்ணிக்கைக் கூடிட்டே போனுச்சு.
பரிசுகளும் அது பட்டுக்கு குமிஞ்சிக்கிட்டெ இருந்துச்சு. ஒவ்வொரு பரிசும் கண்ண பறிக்குறாப்புல
பளபள தாளு ஒட்டி, வெதவெதமான நாடாக்களச் சுத்தி ரொம்ப அழகா முடிச்சிப் போடப்பட்டு
இருந்துச்சு. ஒவ்வொரு பரிசுலயும் ஒரு கல்வெட்டப் போல கொடுத்தவங்களோட பேரும், ஊரும்,
பதவியும் இருந்துச்சு. அந்தப் பரிசெ வாங்கி
வைக்குறதுக்குன்னோ பொண்ணு மாப்புள பக்கத்துல ரெண்டு மூணு ஆளுங்க உதவிக்கு நின்னுச்சுங்க.
அத்தோட பொண்ணு மாப்புள்ளைக்கு அலங்காரத்த அப்பைக்கப்போ சரி பண்ணி வுடுறதுக்குன்னு
அது ஒரு ரண்டு பேத்து மேடையில நின்னுச்சுங்க.
உள்ளூர்ல கலியாணத்தப் பண்ண முடியாமப் போறப்போ,
கலியாணத்துக்கு வர்ற முடியாத சில பேத்துக்காக வரவேற்புன்னு ஒண்ணுத்தெ வைக்கிறதாங்.
பொண்ணு ஊர்ல கலியாணம் நடந்தா மாப்புள ஊர்ல வரவேற்புன்னோ, மாப்புள ஊர்ல கலியாணம்ன்னா
பொண்ணு ஊர்ல வரவேற்புன்னோத்தாம் பொதுவா நடக்குறதுண்டு. பாலாமணிக்குச் சொந்த ஊரு,
வேல பாக்குற ஊருன்னு ரண்டு ஊரு இருந்துச்சு. சொந்த ஊரு பாக்குக்கோட்டையில கலியாணங்றதால,
வேல பாக்குற சென்னைப் பட்டணத்துல வரவேற்ப வெச்சிருந்தாம். அதெ கூட அவ்வேம் வேல பாக்குற
அரும்பாகத்துல பக்கத்துலயே வெச்சிருந்தா ரொம்ப செளரியமாப் போயிருந்திருக்கும். மகாபலிபுரத்துல
வெச்சதுக்கு ஒரு அர்த்ததும் இல்லாம இருந்துச்சு. இனுமே இஞ்ஞ வந்த சனங்க இஞ்ஞயிருந்து
ராத்திரியில கெளம்பித்தாம் வூடு போயிச் சேரணம். கடல் கடந்து நீச்சலடிச்சுப் போறாப்புல
வாகனங்க கடந்து, சனங்கள கடந்து ஒவ்வொண்ணும் நீச்சலடிச்சித்தாம் போவணும்.
கலியாணத்துக்குக் கூட்டம் அதிகம்ன்னா வரவேற்புக்குக்
கூட்டம் கம்மியாத்தாம் இருக்கும். இங்க கலியாணத்து அளவுக்குக்குன்னு சொல்றதா, அதெ
வுட தாண்டின்னு சொல்றதா? கூட்டம் அது பாட்டுக்கு நிரம்பி வழிஞ்சது. பாலாமணி அவ்வேங்கிட்ட
வைத்தியம் பாக்க வர்ற அத்தனெ பேத்துக்கும் பத்திரிகெ வெச்சிருப்பானோ என்னவோ! தளும்பி
வழிஞ்சக் கூட்டத்தெப் பாத்தப்போ அத்து இன்னொரு கலியாணத்தப் போலத்தாம் இருந்துச்சு.
அதெ பாத்துட்டு, "ஏம்த்தாம் கூட்டம் இப்பிடி பெலமா இருக்கே?"ன்னாம் விகடு.
"கூட்டம் கம்மியா இருக்கும்ன்னு எதிர்பாத்தியா?"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"கலியாணத்துக்குப் பெரும்பாலான கூட்டம்
வந்துடுங்றதால கொறைவாத்தாம் இருக்கும்னு நெனைச்சேம்!"ன்னாம் விகடு.
"பட்டணம்டா மாப்ளே அப்பிடித்தாம்
எல்லாம் நேர்மாறா இருக்கும். இஞ்ஞ கலியாணம் முக்கியமே கெடையாது. அத்துச் சொந்தக்காரவுங்க,
பொண்ணு வூட்டுக்காரவுங்கன்னு சின்னதா ஒரு கூட்டம் நின்னு பண்ணுறது. ரிஷப்ஷன்தான் பட்டணத்துல
முக்கியம். கூட்டம் இதுக்குதாங் அள்ளும். தெரிஞ்சவேம், தெரியாதவேம் வரைக்கும் எல்லாரும்
வருவாம். ரிஷப்ஷன்னு பத்திரிகெ போனா ராத்திரிச் சாப்பாடு இங்கத்தான்னு முடிவெ பண்ணிட்டு
குடும்பத்தோட கூட்டம் கூட்டமாத்தாம் வருவாம். இதாம்டா மாப்ளே பட்டணத்தோட பண்பாடு!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
ஆளாளுக்குக் கையில ஒரு பரிசுப்பெட்டிய
வெச்சிருந்ததப் பாத்து விகடுவுக்குக் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. "நாமளும்
ஒரு பரிசுப்பெட்டிய வாங்கிட்டு வந்திருக்கலாமோ யத்தாம்?"ன்னாம் சந்தானம் அத்தானப்
பாத்து.
"அதாங் பெரிய பணப்பொட்டியத் தூக்கிக்
கொடுத்திருக்கீயே போல. கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டேம். மாமாகிட்டெ இன்னும் கொஞ்சம்
வாயக் கொடுத்தாதாங் புடுங்க முடியும். சொந்தக் காசில பண்றவேம் இஞ்ஞல்லாம் வெச்சி
இம்மாம் பிரமாண்டமால்லாம் பண்ண மாட்டாம். இஞ்ஞ வாடகெ ன்னா தெரியுமா? பாரு ஒரு பையப்
போட்டு வந்தவங்களுக்கு எல்லாம் அதுல ஆரஞ்சு, சாக்லேட்டுன்னுப் போட்டுக் கொடுக்குறதெ.
மாமாவோட காசி வதியழிதுடா மாப்ளே! காரு விசயத்தப் பத்தி மாமா ஒண்ணும் பேசலையே? ஒங்கிட்டெ
எதுவும் சொன்னுச்சா? நீயொரு மண்டுகம்டா மாப்ளே! அதெப் பத்தி கேக்கவும் மாட்டே. சொன்னாலும்
காதுல போட்டுக்க மாட்டே!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
விகடு அதுக்குப் பேசாம நின்னாம்.
"இதாம்டா மாப்ளே! ஒங்கிட்டெ புடிக்கிறதில்ல. டக்குன்னு பேச்சி நிறுத்திப்புட்டு
நின்னுபுடுவே. அடுத்ததா ன்னா பண்ணலாம்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"நீஞ்ஞ பரிசுப்பொட்டிக் கொடுக்கலையா
யத்தாம்?"ன்னாம் விகடு.
"ன்னா கிப்ட்டு போ! ஒரு அட்டெ பெட்டிக்குள்ள
ஒடைஞ்ச பொம்மையையோ, ஓடாத கடியாரத்தையோ போட்டா அதாங் கிப்ட்டு. அதுக்கு அதெ கொடுத்துப்புட்டு
தின்னுறதுக்குன்னே நாலைஞ்சு பேரு வருவாம். பாரு புள்ளீயோளுக்குப் பலூன எப்பிடிக் காத்தடிச்சுக்
கொடுக்குறானுவோ? லிப்ஸ்டிக் போடுறதுக்குன்னே ஒரு பொம்பளைய நிப்பாட்டி ஆளாளுக்கு
லிப்ஸ்டிக் போட்டு வுடுறானுவோ? பஞ்சு மிட்டாய்க்காரனே பாரு மண்டபத்துக்குள்ளார! ஒருத்தெம்
ஐஸ்கிரிமெ கொடுத்துட்டே இருக்காம். அதெ எத்தனெ சாப்புடணும்ன்னு தெரியாமலே வாங்கிச்
சாப்புட்டு நிக்குறானுவோளே? பழத்தையல்லாம் வெட்டி வெட்டி ஒருத்தெம் பீஸ் போட்டு கப்ல
கொடுக்குறாம் பாரு. வாழைப்பழத்தெ தாறு தாறா கட்டி வெச்சிருக்காம் பாரு. சாப்புட்டு
வந்த சனங்கள்ல ஒண்ணு கூட அந்தப் பழத்தெ தொடுதா பாரு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"ஒரு நாளுதானே யத்தாம்! புள்ளீயோ
சந்தோஷமா இருக்குறதுக்குச் சிலவு பண்ணலாம் யத்தாம்!"ன்னாம் விகடு.
"பண்ணலாம்டா மாப்ளே! மறுக்கா மறுக்கா
ஒரு விசயத்த வுட்டுப்புடுறே பாரு. அதாங் ஒங்கிட்டெ பிடிக்க மாட்டேங்குது. இத்துச் சத்தியமா
இவ்வேம் காசிக் கெடையாது. மாமட்டேயிருந்து அடிச்சக் காசியில அடிச்சி வுடுறாம். இந்தாருடா
பரம்பர பணக்காரந்தாம் இந்த மாதிரிக்கிச் செய்யுவாம். நமக்குத் தெரியும். நாமளும் அந்த
மாதிரிக்கான பங்ஷனுக்குப் போயிருக்கேம். சொந்த வூடு கூட இல்லாத பயெ இந்த வேல பாக்கக்
கூடாது. ரிஷப்ஷனுக்கு ஒரு ரேஞ்சு இருக்கு. இவ்வேம் அந்த ரேஞ்ச தாண்டி வெளையாடுறாம்.
வேணும்ன்னா நீயி நாளைக்கிக் கிப்டப் பிரிக்கிறப்ப பாரு நெறைய ஒடைஞ்ச ப்ளாஸ்டிக்கும்,
ஓடாத கடியாரமுமாத்தாம் இருக்கும். அத்தனையும் குப்பே. அப்பிடியே குப்பத் தொட்டியிலயோ,
தெருவுலயோ போட்டீன்னா வெச்சுக்கோ கார்ப்பரேஷன்காரன் அள்ளி குப்பெ வண்டியில போட்டுட்டுப்
போவாம்! ஒனக்கு இதெ பத்தித் தெரியாதுடா மாப்ளே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"அவுகப் பாக்குற வேலக்கு இப்பிடி
ஒண்ணு செய்யாம இருக்க முடியாதுல்லா?"ன்னாம் விகடு.
"பண்ண வேண்டியதுதாங். இல்லன்னு சொல்லல.
இத்து அநியாயம். ஆத்துல போடுறதெயே அளந்துப் போடத்தாம்டா மாப்ளே சொல்வாங்க. அநியாயத்துக்கு
அள்ளி வீசச் சொல்ல மாட்டாங்க!" ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"சாப்புடலாமா யத்தாம்?"ன்னாம்
விகடு.
"எவனெவனே சாப்புடறப்போ நாமளும் சாப்புட்டுத்தானடா
மாப்ளே ஆவணும். மாமா காசிய நாம்ம மட்டும் ஏம் சாப்புடாம வுடணும்?"ன்னுச்சு சந்தானம்
அத்தான்.
"ரண்டு அர்த்தத்துல பேசுறாப்புல இருக்கே
யத்தாம்?"ன்னாம் விகடு.
"ஏய் மரமண்ட மாப்ளே! புரிஞ்சுட்டாடா
ஒனக்கு? வா! சாப்பாட்டப் போயிப் பாப்பேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான். சாப்புடுற
எடத்துல கூட்டம் தாங்கல. சனங்க வரிசைகட்டி நின்னுச்சுங்க. சாப்புட்டுகிட்டு இருக்குறவங்க
பக்கத்துல எடத்தெ முன்பதிவு பண்ணுறாப்புல நின்ன சனங்க, சாப்புட்டு ஒருத்தரு எழுந்திரிச்சாலும்
அந்த எடத்துல உக்காந்துச்சுங்க. எச்சிலு எலைய எடுக்கலையேங்ற நெனைப்புல்லாம் யாருக்கும்
இல்ல. இப்படி சாப்புடுறதுக்கு மின்னாடி ஒருத்தரு காத்துட்டு நின்னா சாப்புடுறவேம் எப்பிடி
நெறைவாச் சாப்புடுவாங்ற எண்ணமும் இல்ல, சாப்புட உக்கார்றதுக்குன்னே இப்பிடி நின்னுகிட்டு
இருக்கானுவோளே வேகமா சாப்புடுவோங்ற எண்ணமும் சாப்புடறவனுக்கு யில்ல. சாப்புடுறவேம்
எதெப் பத்தின லஜ்ஜையும் யில்லாம சாப்புட்டாம். நிக்குறவனும் எப்படியும் சீக்கிரமா சாப்புட்டுட்டுக்
கெளம்பிடுவாங்ற நம்பிக்கையில நின்னாம்.
எலையில ஒவ்வொண்ணுலயும் சாப்பாடு அளவுக்கு
அதிகமாவே வீணாயிக் கெடந்துச்சு. ரண்டு ஆளு, மூணு ஆளு சாப்புடறாப்புல ஏகப்பட்ட பதார்த்தங்க
எலைகள்ல. அதுல நாலைஞ்சு வகையச் சாப்புட்டாலே மூஞ்சுல அடிச்சிடும். யானை வயிறோ, பானை
வயிறோ இருக்குறவந்தாம் எலையில வெச்சதையெல்லாம் அள்ளி உள்ளார போடலாம். சப்பாத்தி,
பரோட்டா, புலவு, கிச்சடி, பாத்து, பொங்கலு, சாம்பாரு சாதம், கொழம்பு சாதம், தயிரு
சாதம், இட்டிலி ரண்டு, தோசெ ஒண்ணு, ஒரப்படை ஒண்ணு, புட்டு கொஞ்சம், காய்கறி அவியலு,
பால் பனியாரம், அப்பம்ன்னு எலை முழுக்க எலை தெரியாதபடிக்கு பதார்த்தாங்களா இருந்துச்சு.
அதுக்கேத்தாப்புல சட்டினிக நாலைஞ்சு வகெ, குருமா ரண்டு மூணு வகைன்னு அது வேற. அதுல
நாலைஞ்ச சாப்புடுறதெ வயித்துக்குப் போதுமானது. மிஞ்சிப் போனா இன்னும் ரண்டு வகையச்
சாப்புடலாம். அதுக்கு மேல நிச்சயம் தெவட்டிப் போயிடும்.
சாப்புட்டவங்க வயிறு நெறைஞ்சுப் போனதெ
வுட, வயிறு கமந்துப் போனாப்புலத்தாம் போனாங்க. மொதல்ல சாப்புட்டு அந்தாண்ட போனவங்க
யாரும் வாழைப்பழத்தையோ, ஐஸ்கிரிமையோ, பழ நறுக்குகளையோ வாங்கல. பீடா மடிச்சிக் கொடுத்த
எடத்துல பீடாவே மட்டும் வாங்கிப் போட்டுகிட்டுப் போனாங்க. எலையில இருந்த பதார்த்தங்கள
மொதல்ல ஆசெ தீரச் சாப்புடணும்ன்னு நெனைச்சவங்க கூட பாதிச் சாப்புட்டதுக்குப் பெறவு
ஏம் சாப்புட்டோம்ன்னு நெனைச்சிருப்பாங்க. சாப்பாட்ட வைக்குறதுக்குன்னு ஒரு மொறை இருக்கு.
அது மொகத்துல அடிக்காத அளவுக்கு அளவா, இத்தனெ எண்ணிக்கையில வைக்கணுங்றதுதாம். எல்லாம்
அளவு தாண்டி இருந்துச்சு எலையில. அதுல பாதிக்கு மேல அப்பிடியே வீண்தாம். நெறைய எலையில
அப்பிடி நெறையச் சாப்பாடு வீணாயிட்டு இருந்துச்சு. அதெ அப்படியே எலைய மடக்கி வெச்சி
பந்திக்குன்னு விரிச்ச தாளோட வெச்சி சுருட்டிச் சுருட்டிக் குப்பைக்குப் போயிட்டு
இருந்துச்சு.
இப்பிடியே நின்னுகிட்டும் வேடிக்கைப் பாத்துக்கிட்டு
இருந்தா வேலைக்கு ஆவாதுன்னு சந்தானம் அத்தான் எல்லாத்தையும் அங்கங்க நிக்க வெச்சு எடத்தெ
பிடிக்க வெச்சது. எடம் கெடைக்குறதுக்கு அரை மணி நேரத்துக்கு மேல நிக்க வேண்டியதா இருந்துச்சு.
எலையில உக்கார்றப்போ விகடு கேட்டாம், "யத்தாம்! நமக்கு ரண்டு இட்டிலியும், ஒரு
தோசையும் போதும்! மிச்சத்தெ வாணாம்ன்னு கைய காட்டி வுட்டுப்புடலாமா?"ன்னு.
சந்தானம் அத்தான் சிரிச்சிது. "நீயி
கையி காட்டுறதல்லாம் வைக்கிறவனுக்குத் தெரியாது. வைக்கிறப்பப் பாரு. மிஷினு மாதிரி
வெச்சிக்கிட்டெப் போவானுவோ. அவனுங்களுக்கு வைக்கத்தாம் தெரியும். வைக்காம இருக்க
முடியாது. நீயி எது சொன்னாலும் அதெ கண்டுக்கிடாம அடுத்தடுத்த எலைக்கு வெச்சிட்டுப்
போயிட்டே இருப்பானுவோ. நீயி சொல்றதெ நின்னு கேக்க அவனுங்களுக்கு நேரம் இருக்காது.
இஞ்ஞ எல்லாம் வேகந்தாம். நீயி பாட்டுக்கு எலையில வெச்சதுல சாப்புட முடிஞ்சதெ சாப்புடு.
முடியாததெ அப்பிடியே எலையில வெச்சி மடக்கிடு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"நெறைய பொருள்லா யத்தாம் வீணாவுது?
நாட்டுல பட்டினியால கெடக்குறவேம் எத்தனெ பேத்து? இப்பிடி வீணாக்குறாவுளே?"ன்னாம்
விகடு.
"மாமாவுக்குத் தாராள மனசு. அதாங்
இப்பிடி வீணாக்க வுட்டுப்புடுச்சு!"ன்னுது சந்தானம் அத்தான்.
*****
No comments:
Post a Comment