14 Sept 2020

காருக்குள்ள கார்ரப் பத்தி...

காருக்குள்ள கார்ரப் பத்தி...

செய்யு - 564

            அந்த ரிஷப்ஷன் முடிஞ்சு சந்தானம் அத்தானோட வூட்டுல எல்லாரும் தங்குறதா முடிவு. தனியா இருக்க வேண்டிய இளஞ்சோடிகள யாரும் தொந்தரவு பண்ண வாணங்ற நெனைப்பு. வேன்ல கிப்ட் சாமானுங்கள எல்லாம் எடுத்துப் போட்டுக்கிட்டு அரும்பாக்கம் வந்து பெறவுதாங் வேன்லேந்து பாக்குக்கோட்டை வகையறா ஊர்ர நோக்கிப் போறதா திட்டம். சுப்பு வாத்தியாரு கெளம்புறப்ப‍ சொன்னாரு, "காலையில அரும்பாக்கத்துல இருப்பேம்!"ன்னு. அதுக்குப் பெறவு சந்தானம் அத்தானோட காரு பெரிய நெருக்கடியச் சந்திக்க வேண்டியதாப் போச்சு. அதுல ஒண்ணு டிராபிக்னா இன்னொண்ணு காருக்குள்ள ஒருத்தரு மடிமேல உக்கார்றாப்புல ஏறுன டிக்கெட்டுங்க. சந்தானம் அத்தானோட குடும்பம், சுப்பு வாத்தியாரோட குடும்பம்ன்னு ரண்டு குடும்பத்துச் சனங்களும் ஒரு காருக்குள்ள இருந்துச்சுங்க.

            கார்ல போறப்ப மத்தியானச் சாப்பாட்டப் பத்தின பேச்சா இருந்துச்சு. "நீஞ்ஞல்லாம் மத்தியானம் வருவீயேன்னு எதிர்பார்த்தேம். யம்பீ என்னவோ அசைவம் சாப்புடாதுன்னு சொன்னதும் சோத்த சமைச்சு, சாம்பார்ர வெச்சு, ரசத்தப் பண்ணி, கறியாக்கி முடிச்சிருந்தேம். வேன்னு எடுக்க கடெசீ நேரம் வரைக்கும் எதிர்பாத்துட்டுக் கெடந்தேம். நீஞ்ஞ வந்து சாப்பாட்டப் போட்டுத்தாங் கெளம்புணும்ன்னு நெனைப்பு. அப்பதாங் தனம் சொன்னிச்சு பொண்ணுக்குத் தொணையா போங்கன்னு. அதுவும் சரிதாங் பழக்கமில்லாத எடத்துல ஒரு தொணையா போறது சரிதாம்ன்னு கெளம்பிட்டெம். தனத்தெ தொணைக்கு அனுப்பலாம்ன்னா புரியாத எடத்துல நாம்ம எப்பிடிக் காத்துக் கெடக்க? மத்தியானம் சாப்புட்டீயளா?"ன்னுச்சு வெங்கு.

            "அதாங் மத்தியானத்துக்கும் சேத்து ராத்திரிச் சாப்பாட்டப் போட்டானுவோள்ல சேத்துச் சாப்புட்டாச்சு!"ன்னுச்சு சந்தானம் அத்தான் கார்ர ஓட்டிக்கிட்டு.

            "யப்பா பொய்யிச் சொல்லுது யாத்தா! நாஞ்ஞ மத்தியானம் சாப்புட்டாச்சு. ன்னா கொஞ்சம் டூ லேட் தட்ஸ் ஆல்!"ன்னாம் சந்தானம் அத்தானோட பையேம்.

            "பிரிட்ஜி, டிவிப்பொட்டி, வாஷிங் மெஷின், கிரைண்டரு, மிக்ஸி யெல்லாத்தையும் சனங்கப் பிரிச்சிப் பாத்துடுச்சுங்க. எல்லாத்தையும் ஓட வுட்டு வேற பாத்துடுச்சுங்க. வெச்ச கண்ணு வாங்காம ஒவ்வொண்ணையும் பாத்ததெப் பாக்க பயமா இருந்துச்சு. இப்பிடியா கண்ணு வைக்குறாப்புல அனுப்பி வுடுறது?"ன்னுச்சு வெங்கு.

            "இன்ஸ்டாலேஷன் நாளைக்குதானே வர்றதாச் சொன்னாங்க யப்பா!"ன்னாம் சந்தானத்தோட மவ்வேம்.

            "பயெ ன்னா சொல்லுதாம்?"ன்னுச்சு வெங்கு.

            "நாளைக்குத்தாம் அதெ போட்டுக் காட்ட ஆளு வர்றதா சொல்றாம். அதுக்குள்ள எப்பிடிப் போட்டாங்கன்னு ஆச்சரியமாக கேக்குறாம்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அத்து என்னவோப்பா நமக்கென்ன தெரியும்? டிவியில படம் நல்லாவே வந்துச்சு. எம்மாம் பெரிய தெரை. சினிமா கொட்டாய்ல பாக்குறாப்புலல்ல இருக்கு!"ன்னுச்சு வெங்கு.

            "கேபிள் கனெக்சன் யில்லாம எப்பிடிப்பா போட்டிருப்பாங்க?"ன்னாம் சந்தானம் அத்தானோட மவ்வேம்.

            "அதல்லாம் வாணாமாம்ல. என்னவோ சின்னதா சாவி மாதிரிக்கி வெச்சிருந்தானுவோப்பா. அதெச் செருவுனானுவோ டிவிப் பொட்டியில. அது பாட்டுக்குப் பாட்டா பாடித் தள்ளுனுச்சு!"ன்னு வெங்கு

            "பென் டிரைவ்ப்பா! அந்த ஆப்ஷன்லாமா இப்போ டிவியில இருக்கு?"ன்னு கண்ண சிமிட்டுனாம் சந்தானம் அத்தானோட ‍பையன்.

            "நியூ மாடல் இப்போ அப்படித்தாம்டா வருது!"ன்னுச்சு சந்தானம் அத்தான். அதெ சொல்லிட்டு சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "ராத்திரிச் சாப்பாடு எப்பிடி மாமா?"ன்னுச்சு.

            "ரொம்ப சாப்பாடு வீண் யம்பீ! ஏம் இப்பிடி ஒரு வேலையப் பண்ணுனானுவோன்னு தெரியல. அஞ்ஞ பாக்குக்கோட்டையில சாப்பாடு பத்தலன்னா, இஞ்ஞ ஏம்டா இம்மாம் சாப்பாட்ட வைக்குறானுவோன்னு போயிடுச்சு! எலையில மிச்சம் வைக்காம சாப்புடணும்ன்னு நெனைக்குற ஆளு நாம்ம. அதுல பாதியக் கூட மல்லுகட்டிச் சாப்புட்டும் சாப்புட முடியல. ஒரு வேள சாப்புடக் கூட முடியாம பட்டினியா கெடக்குற நம்ம நாட்டுல இப்பிடிச் சாப்பாட்ட வெரயம் பண்ணக் கூடாதும்பீ! நமக்கு மனசே சரியில்லாமப் போயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்கும் அதெ கருத்துதாங் மாமா! சாப்பாடு போடாமலும் அனுப்பக் கூடாது, இம்மாம் சாப்பாட்ட போட்டும் அனுப்பக் கூடாது. இப்பிடி மாசத்துக்கு ரண்டு பங்சனுக்கு ஒருத்தன் போனா கூடிய சீக்கிரமே அவனுக்கு சுகரு வந்துடும். பெறவு இருக்காவே இருக்காப்புல ஒம் மாப்புள. போயி மருந்து வாங்கிட்டுச் சாப்புட வேண்டியததாங். அதான மாமா ஒம் மாப்புளயோட திட்டம்?"ன்னுச்சு சந்தானம் அத்தான் வேடிக்கையா.

            "எவ்வளவுதாங் சாப்பாட்ட கொட்டுனாலும் சாப்புடுறது நம்ம கையிலத்தானே இருக்கும்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நீயி ஒம் மாப்புள்ளய வுட்டுக் கொடுக்க மாட்டீயே! அதாச்சி மாமா ஒண்ணுத்தெ சொல்றேம் கேட்டுக்கோ, டாக்கடரு இருக்குற வரைக்கும் வியாதிக்கார்ரேம் இருக்கணும். அதுக்கு இப்பிடில்லாம் விருந்து நடந்தாவணும். அப்பத்தாங் சுகரு வரும். நெறைய வாகனங்க ஒன்னடி மின்னடியா ஓடணும். அப்பதாங் விபத்து ஆவும். ஆபரேஷன்னு காசியப் பிடுங்க முடியும். நெறைய ரசாயனம் அது இதுன்னு போட்டு வெவசாயத்த வளக்கணும். அப்பதாங் நெறைய ஊனங்க உண்டாவும். டாக்கடருமாருகளுக்கு வேல அதிகமாவும். டென்சன், டிப்ரஷன் இப்பிடி நெறைய அதிகமாவணும். அப்பதாங் தூக்க மாத்திரை அது இதுன்னு எழுதிக் கொடுக்க முடியும். இப்பிடிச் சொல்லிட்டே போவலாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "யாரும்பீ ஒன்னய விருந்துக்கு வாரலைன்னு கோவிச்சிக்கிறா? வந்தாலும் சாப்புடலன்னா யாரு வருத்தப்படப் போறா? யாரு ஒன்னய வாகனத்துல போவச் சொல்றா? ரசாயனத்தப் போட்டுத்தாங் வெவசாயத்தப் பண்ணணும்ன்னு யாரு ஒன்னயக் கட்டுப்படுத்துறா? எதுக்கு டென்ஷன்? கேக்குறேம் சொல்லு. எல்லாம் தேவைன்னு நெனைக்கிறேவேம் இருக்காம். அதெ செஞ்சாத்தாம் லாவத்தப் பாக்க முடியும், நாலு காசியப் பாக்க முடியும்ன்னு இருக்குறவேம் இருக்குறாம். அமைதியா வாழணும்ன்னு மனுஷன் முடிவு பண்ணிட்டா இதெல்லாம் இருக்கப் போறதில்ல. ஆன்னா அப்பிடி அமைதியா வாழணுங்றதெ வூட்டுல, சமுதாயத்துல ஒரு மனுஷன் மட்டும் முடிவு பண்ணுற விசயமில்லே. எல்லாரும் சேந்து முடிவு பண்ணணும். அப்பிடில்லாம் முடிவெ பண்ண வூட்டுல, சமுதாயத்துல நாலு பேத்து ஒத்துகிட்டாலும், ஒருத்தெம் ஒத்துக்கிட மாட்டாம். அந்த ஒருத்தெம் இந்த எதுப்பான சொழற்சிய முன்னெடுத்துக்கிட்டுத்தாங் போவாம். அதெ ஒண்ணும் பண்ண முடியாது. வெயாதி வந்தா வைத்தியத்தெ பண்ணிக்கிட வேண்டியதுதாங். அப்பிடி வெயாதி ல்லன்னா ல்லன்னு சந்தோஷமா வாழ்ந்துட்டுப் போவ வேண்டியதுதாங்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அட யாரு பேசுறது மாமாவா? வாவ்! எப்பிடி மாமா பட்டணத்துக் காத்து அடிச்ச ஒடனேயே பட்டணத்தாம் மாதிரி நீயி பேசுறே? ஒங் காத்து எம் மேல அடிச்சதால நாம்ம ஒன்னய மாதிரிக்கிப் பேசுறேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "எங் காத்துல ஒம் மேல அடிச்சதால பேசல நீயி! காலம்பார்ர நம்ம பயகிட்டெ பேசிட்டு நின்னீயே அதுல பேசுறே ஒன்னயும் அறியாம. அந்தப் பயத்தாம் இப்பிடிப் பேசிட்டு இருப்பாம். வாழ்க்கங்றதெ ஒரு சமாளிப்புங்றதெ ஒத்துக்கிட மாட்டாம். இப்பிடித்தாம்ன்னு நூலப் பிடிப்பாம். அப்பிடில்லாம் நூல பிடிக்கிறவேம் வாழவே முடியாது. வாழ்க்கெ அவனெ தூக்கி எறிஞ்சிடும். வேணும்ன்னா அவ்வேம் ஒருத்தனுக்கும் உபயோகம் இல்லாம அவனுக்கு மட்டும் ஒபயோகமான்னா வாழலாம்! இஞ்ஞ எஞ்ஞ நூலப் பிடிச்சாலும் சிக்கிக்கிடும். அதுக்காக நூல பிடிக்காமலும் இருக்க முடியாது. விழுந்த சிக்க எடுக்காமலும் இருக்க முடியாது. நூல பிடிக்குறாப்புல பிடிக்கணும். வெலக்கறாப்புல வெலக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. விகடு ஒண்ணும் பேசாம உக்காந்திருந்தாம்.

            சந்தானம் அத்தான் சொன்னுச்சு, "மாப்ளே! ஒம் மேலத்தாம் பேசப்படுது விசயம். ஒம் மனசுல உள்ளதெப் பத்திச் சொல்லு மாப்ளே!"ன்னு. அதுக்கு அப்பன் மவனாவும், மவன் அப்பனாவும் பேசுறாப்புல ஒரு தோற்றம் உண்டானுச்சு.

            "நமக்கொண்ணும் கருத்தில்ல யத்தாம்! நமக்குத் தேவ ரண்டு வேளச் சாப்பாடு, ராத்திரிக்குக் கொஞ்சம் தூக்கம், படிக்க நெறைய புஸ்தகம். அம்புட்டுத்தாம்! அதுக்குல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டியதில்லன்னு நெனைக்கிறேம். பெரும்பாலனா விசயங்கள்ல நாம்ம எதையும் யோசிக்கிறதில்ல. யப்பாவோட யோஜனெதாம்!"ன்னாம் விகடு.

            "மாமாவோட கருத்துக்கு எதுப்பா இருக்குறாப்புலல்லடா மாப்ளே பல நேரம் மாமா ஒன்னயப் பத்திச் சொல்லுது. நமக்கும் அப்பிடித்தானே படுதுடா மாப்ளே!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ஒஞ்ஞ கருத்துக்கு ஒஞ்ஞளுக்கு உரிமெ இருக்கு. நம்மட கருத்துக்கு நமக்கு உரிமெ இருக்கு. அதுக்காக அடிச்சிக்கிட வேண்டியதில்லா. உண்மையில யத்தாம் கருத்துகளால அடிச்சிக்கிட முடியாது. அடிச்சிக்கிறதுக்காக வேணும்ன்னா நாம்ம கருத்துகள உண்டு பண்ணிக்க முடியும். எங்க வாணாம்ன்னா பாருங்க மாறுபட்ட ரண்டு கருத்துக உள்ள ரண்டு பேரும் அடிச்சிக்க மாட்டாங்க அத்து அவுங்களோட சொந்த கருத்தா இருந்தா. சொந்த கருத்தா யில்லாததுக்கு இத்து ஒத்து வாராது யத்தாம்!"ன்னாம் விகடு.

            "ஏம் மாப்ளே! நாம்ம இப்ப வண்டிய ஒழுங்க ஓட்டிக்கிட்டு வூட்டுலப் போயி வுடவா? ல்லாட்டி எதாச்சி வண்டியில வுட்டு மோதாவா? நீயி சொல்றது எதாச்சும் வெளங்குதா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "வெளங்காத வரைக்கும் ரொம்ப சந்தோஷம் யத்தாம்! சண்டெதாம் எப்பயும் வெளங்கும். அமைதி எப்பயும் வெளங்காது. அஞ்ஞ வெளக்குறதுக்கு ஒண்ணுமில்ல. ஒரு சத்தத்தெ கேக்குறப்பத்தாங் நிசப்தங்றதெ என்னன்னு வெளங்குற உலகம் இத்து. இதுக்கு எல்லாத்தையும் எதிர்மறையாத்தாம் வெளக்கணும். எதிர்மறையிலேந்து வர்ற அர்த்தத்தெத்தாம் இந்த ஒலகத்தால கிரகிச்சிக்க முடியும். உடம்பாடான ஒண்ணுலேந்த இந்த ஒலகத்தால எதையும் வெளங்கிக்கி முடியாது. ஏன்னா மனுஷனோட மனசு அப்பிடி. அதுக்கு எதாச்சும் விஷமம் பண்ணாத்தாம் சேட்டைக பண்ணாத்தாம் எதையும் புரிஞ்சிக்க முடியும்!"ன்னாம் விகடு.

            "மாப்ளே! நீயி பேசாமலயே இருந்துக்கோ! மதுரவாயல நெருங்கியாச்சு. சித்தெ நேரத்துல வூடு போயி சேந்துடலாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "நாம்ம பேயாமத்தானே இருந்தேம் யத்தாம்! நீஞ்ஞத்தானே யத்தாம் நம்மகிட்டெ அறிக்கெ கேக்குறாப்புல கேட்டீயே? அதாங் சொல்றாப்புல ஆச்சு!"ன்னாம் விகடு.

            "ஆளெ வுடுடா சாமி! இனுமே ஒங்கிட்டேருந்து என்னத்தெ அறிக்கெ வருதுன்னு சென்மத்துக்கும் கேக்க மாட்டேம்!"ன்னு விகடுவப் பாத்துச் சொல்லிட்டு, சுப்பு வாத்தியாருட்டு அடுத்ததா கேக்க ஆரம்பிச்சிது, "ஏம் மாமா! கார்ரு வாங்குறதப் பத்தி எதாச்சும் சொன்னானுவோளா? நீயாச்சும் எதாச்சி வெசாரிச்சியா? இப்போ வரைக்கும் நம்மட கண்ணுல படாத சீரு சனத்திச் சாமான்ன்னா அதுதாங். அதால கேக்குறேம். யில்ல யத்தெ சொல்றாப்புல நாம்ம கண்ணு கிண்ணு வெச்சிப்புடுவேம்ன்னு மாமானாரும் மாப்புள்ளையும் வாங்கிட்டு வெசயத்தெ எதயும் மறைக்குதீயளா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "என்னம்பீ பேசுதீயே? ஒஞ்ஞகிட்டெ சொல்லாம மறைக்குமா மாமா?"ன்னுச்சு வெங்கு.

            "அதானே யம்மா! என்னத்தெ பேச்சப் பேசுறதெப் பாரு? விகடு நீயிப் பேசுடாம்பீ! அப்பத்தாங் ஒஞ்ஞ யத்தாம் அடங்கும். நல்ல புள்ளையப் பெத்து வெச்சிருக்கீங்க யம்மா! யில்லன்னா அடக்க ஒரு ஆளு யில்லாமப் போயிருக்கும்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.

            சுப்பு வாத்தியாரு தாம் பேச வேண்டியக் கட்டத்தெ உணர ஆரம்பிச்சாரு. கிட்டதட்ட சொந்தக்காரங்கள்ல பல பேத்துக் கேட்ட கேள்வி. அதுக்கு மலுப்பலா சொன்ன பதில்களோட பல வெதங்களும் சுப்பு வாத்தியாரோட நெனைவுக்கு வந்துச்சு.

            "ன்னா ஆளாளுக்குப் பேசியும் மாமாட்டேயிருந்து பதிலு மட்டும் வர்ற மாட்டேங்குது? அடச் சும்மா மாமா! ன்னா மாடல்ன்னாவது தெரிஞ்சிக்கலாமேன்னுத்தாம் கேட்டேம் மாமா! வேற ஒண்ணும் நெனைச்சிக்காதே மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான் பதிலு வர்றாததப் பாத்துப்புட்டு. அதுக்குள்ள மதுரவாயல்ல இருந்த சந்தானம் அத்தானோட வூடு வந்துச்சு. சந்தானம் அத்தானோட மவ்வேம் போயி கேட்டத் தெறந்தாம். மாளிகைப் போல இருந்த வூட்டுக்குள்ள நொழைஞ்சி காரு நிக்குற எடத்துல நின்னுச்சு காரு.

            "யில்ல நீஞ்ஞ யப்பாவ கேக்கக் கூடாத கேள்வியக் கேட்டுப்புட்டீங்க!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.

            "அப்பிடில்லாம் ஒண்ணுமில்ல யங்கச்சி! நாம்ம அதெ பெரிசு பண்ண வாணாம்ன்னு வுட்டுப்புட்டேம். இப்பதானே எல்லாம் முடிஞ்சிருக்கு. மெதுவா அந்தக் காசிய என்னத்தெ பண்ணிருக்காவோன்னாவது கேக்கணும் இல்லியா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இந்தாரு மாமா! நீயி கேக்கலன்னாலும் செரிதாங். நாம்ம பொண்ணு மாப்புள்ளைக்கு விருந்து வைக்கணும் யில்லியா. நைசா ஒரு நாளு தள்ளிட்டு வந்து விருந்து வைக்குற சாக்குல அதெ கேக்காம வுட மாட்டேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அப்பிடில்லாம் கேட்டுப்புடாதீங்க யம்பீ! நாம்ம நாளைக்கிக் கேக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            கார்லேந்து எறங்குன சனங்க எல்லாம் தனம் அத்தாச்சி வூட்டைத் தொறக்க ஒவ்வொண்ணா உள்ளாரப் போனுச்சுங்க.

            "மாப்ளே! ஏசியிலப் படுக்குதீயா? ஹால்ல படுக்குதீயா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "நமக்கு எப்பவும் வெளியிலத்தாம் மாமா. ஏசியப் போட்டுக்கிட்டு வியாதிக்குச் சிலவு பண்ண காசி இருக்குறவங்க அஞ்ஞ படுக்கலாம்!"ன்னாம் விகடு.

            "சிட்டியில அதல்லாம் யில்லாம இருக்க முடியாது மாப்ளே!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "யப்போ சிலவ பண்ணாமலும் இருக்க முடியாது யத்தாம்!"ன்னாம் விகடு.

            "யப்படித்தாம்பீ! யத்தானப் போட்டுக் கெழட்டு!"ன்னுச்சு தனம் அத்தாச்சி. அத்தோட "யாருக்காச்சும் தோச வேணும்ன்னா சொல்லலாம். சுட்டுப் போடுறேம்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.

            "யே யப்பாடி! மண்டபத்துல சாப்புட்ட சாப்பாடு மூணு நாளைக்கிப் பசியெடுக்காது போலருக்கு! மாப்ள மருமவ்வேம் சண்டெய மொதல்ல வுட்டுத் தொலைஞ்சிட்டுப் படுக்குற வேலயப் பாருங்க!"ன்னுச்சு வெங்கு. அத்தோட சனங்க ஒவ்வொண்ணும் கையி கால அலம்பிட்டுப் படுக்கப் போனுச்சுங்க.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...