23 Sept 2020

சந்தோஷத்தின் கடைசி அத்தியாயம்!

சந்தோஷத்தின் கடைசி அத்தியாயம்!

செய்யு - 573

            வேத்துக் கிரகத்துக்குப் போயிட்டு வந்து பூமியில எறங்குனது போல இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. இந்தப் பூமியில இருக்குற எடத்துக்குத்தாம் போயிட்டு வந்திருக்காரு. ஆனாலும் அவருக்கு மனசு அப்பிடித்தாம் இருந்துச்சு. இந்தப் பூமியத் தவுர வேற எந்த கிரகத்துல பேச, பழக உயிர்கள் இருக்கு? அப்பிடித்தாம் அவருக்கு இந்த கிராமம். இந்தக் கிராமத்தத் தவுர வேற எங்க பேச பறவையோ, பயிர்களோ, மர மட்டைகளோ இருக்கு? வேத்துக் கிரகத்துல மண்டிக் கெடக்கற பாறையும், மண்ணையும் போலத்தாம் பட்டணம் முழுக்க காங்கிரட்டும், சுவருமா மண்டிக் கெடக்குது. வேத்துக் கிரக பயணங்றது ஒரு சாகசங்றது போல, பட்டணத்து வாழ்க்கையில சாகசந்தாம் இருக்கு. உயிர்ப்பு எங்க இருக்கு? அந்த உயிர்ப்ப பலி கொடுத்துட்டுதாம் பட்டணமே உருவாகத் தொடங்குது.

            வூட்டுல நொழைஞ்சதும் நொழையாததுமா சுப்பு வாத்தியாரு போயி நின்ன எடம், எதுத்தக் கொல்ல. அஞ்சு தென்னை மரத்துலயும் மட்டை எதுவும் யில்லாம மொட்டையா நின்னுச்சு, கிட்டதட்ட அவரோம நெலமையைப் போல. மரத்துக்கு அடியில உதித்துப் போட்ட மட்டைக கெடந்துச்சு. ஒரு மட்டை மேல பாம்பு ஒண்ணு நெளிஞ்சி நெளிஞ்சி பளபளன்னு போயி மறைஞ்சது. தென்ன மரம் இருக்குற எடத்துல ஒடனடியா மட்டைகள அந்தாண்ட அள்ளிப் போட்டுடணும். மட்டைக ஒண்ணடி மண்ணடியா சேரச் சேர பாம்புகளுக்குக் கொண்டாட்டமா போயிடும். வாழைக்கட்டைக சுத்தமா அழிஞ்சிருந்துச்சு. பொதுவா வாழைக் கட்டெக அழியுறதில்ல. வாழையடி வாழையடியா தழைச்சிட்டுத்தாம் இருக்கும். அத்து எப்பிடி அழிஞ்சதுங்றது புரியாதப் புதிரா இருந்துச்சு அவருக்கு. வெட்டி வுட்டாலும் வெரசா தழைக்குறதுல வாழைக்கி அடக்கந்தாம் மித்ததெல்லாம்.

            கொல்லை என்னவோ சவண்டல் மரக் காட்டப் போல சவண்டல் மரங்கத்தாம் பெரிசு பெரிசா வளந்திருந்துச்சு. அண்ணாந்துப் பாக்குற ஒசரத்துக்கு கழுத்து சுளுக்கிக்கிடும். மாதுளங் கண்ணு பிடிச்சப் பூவு நிக்காம கொட்டிட்டு இருந்ததுல காயிப் பிடிக்காம இருந்துச்சு. கருவேப்புல எலைங்க முழுக்க வெள்ளை நேறத்துல புள்ளிப் புள்ளியா அடிச்சிருந்துச்சு. எலுமிச்சை ரண்டும் பட்டுப் போறதுக்கான குறிகொணத்த காட்டிட்டு நின்னுச்சுங்க. கொல்லக்காரனே ஆனாலும் தொடக் கூடாது சீவன் எலுமிச்சம். ஒரு பழத்தெ பறிக்குறதுன்னாலும் ஒரு கம்பெ எடுத்துத்தாங் தட்டி வுடணும். தொட்டா கோவிச்சுக்கிட்டு உசுரையே வுட்டுப்புடும் எலுமிச்சம். சித்தரத்தைச் செடி புதர்ரப் போல மண்டிக் கெடந்துச்சு. கொல்ல வாங்குன காலத்துலேந்து இருந்த முருங்கெ பூச்சரிச்சிப் போயி மரணப் படுக்கையில கெடக்குறாப்புல இருந்துச்சு. கொல்லையப் பாக்க அவருக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு.

            கொல்லைய நெனைச்சுக்கிட்டு அப்பிடியே நடந்து முடிஞ்சிருந்த கலியாணத்தப் பத்தியும் நெனைச்சுப் பாத்துக்கிட்டாரு. கூட்டிக் கழிச்சிப் பாக்குறப்போ சந்தோஷமான கலியாணந்தாம். வாத்தியாரு சாதிச்சிப்புட்டார்ன்னு ஊரு ஒலகத்துல பேசுற படியான கலியாணம். எம்மாம் காசிப் பணம் செலவானலும் பரவால்லன்னு துணிஞ்சி எறங்கிப் பொண்ணோட கலியாணத்த முடிச்சிட்டார்ன்னு ஊரு பேசுனதெ அவரால மறக்க முடியாது. என்னா ஒண்ணுன்னா கடங்கப்பியில்லாம முடிஞ்சிருந்துச்சுன்னா அவரோட சந்தோஷத்துக்கு அளவே இருந்திருக்காது. அப்பிடியும் நெனைக்கப்படாதுங்றது அவருக்குத் தெரிஞ்சிருந்துச்சு. இந்த அளவுக்குக் கடனெப் பொரட்ட தெம்பு இருந்ததெ அவருக்கு அடிக்கடிச் சொல்லுவாரு. அதெ போரட்டுறதுக்குக் கூட தெம்பு யில்லாமப் போயிருந்தா என்னதெ் பண்ணுறதுங்றதையும் அவரு நெனைக்க தவறுறது கெடையாது.

            மவ்வேங்கிட்டெ ஒரு தவா பேசுறப்போ சொன்னாரு சுப்பு வாத்தியாரு, "கடனில்லாம வூட்டெ கட்டணும், கலியாணத்தெ முடிக்கணும்ன்னு மாளாத ஆசெதாம்டாம்பீ! கடனில்லாம வூட்டையும் கட்ட மிடியல யப்போ. கடனில்லாம கலியாணத்தையும் செய்ய முடியல யிப்போ. அதுக்காக வூட்டுக்காக வாங்குன கடன் அடையாமலாப் போச்சா? அதுப்போல கலியாணக் கடனும் அடைஞ்சித்தாம் போவும். கடன்தான்னாலும் நம்மோட தெம்பக் காட்டுனுச்சுடாம்பீ இந்தக் கடென். எம்மாம் பணத்தெ தெரட்ட முடியுதுங்றதெ இந்தக் கடனெ வெச்சித்தானே தெரிஞ்சிக்கிட்டேம்! கடனெ வாங்கித் தள்ளுறது தப்புன்னாலும் அந்தத் தப்ப பண்ணாம ஒரு நல்ல காரியத்தெ பண்ண முடியாது"ன்னு.

            இனுமெ தனக்குன்னு இருந்த கடமெ முடிஞ்ச திருப்திய சுப்பு வாத்தியாரால தெளிவா பாக்க முடிஞ்சிது. அந்தத் திருப்திக்கு மின்னாடி கடன்ங்றதுல்லாம் தூசி மாதிரிக்கித் தோணுச்சு. அந்தத் தூசியெல்லாம் கண்ணு மின்னாடி பறந்துப் போறாப்புல தோணுனுச்சு. தன்னோட தலைமொறை கடனெ சரியான நேரத்துல நடத்தி முடிச்சதுக்கு தன்னைத் தானே மனசுக்குள்ளப் பாராட்டிக்கிடணும்ன்னு போலவும் தோணுச்சு. இந்த வருஷத்தோட ப்ளாட்டுக்கு வுட்ட வயலுகள எப்படியும் அடுத்த வருஷத்துக்கு மீட்டுப்புடணும். அதுக்கப்புறம் முடிஞ்சா விநாயகம் வாத்தியாரு செய்ததெப் போல வெளைவிச்ச நெல்ல தானே அவிச்சி அதெ அரிசியாக்கி சென்னைப் பட்டணத்துல இருக்குற மவ்வே வூட்டுக்குப் பார்சல்ல போட்டு வுடணும். உளுந்து, பயிறு வெளையுறப்போ எல்லாம் மவ்வே வூட்டுக்கு அனுப்பிட்டெ இருக்கணும். பேத்தியும் வளந்துட்டாங்றதால இனுமே ஒண்ணும் பெரச்சனையில்ல. ஒரு மாசம் ஊர்லயும், ஒரு மாசம் சென்னைப் பட்டணத்துலயும் மாறி மாறித்தாம் இருக்கணும். அதுக்கு யிப்போ அவ்சரப்படக் கூடாது. மவளுக்கு ஒரு கொழந்தெ குட்டின்னு ஆவட்டும். அப்போ வெச்சுக்கணும் அந்த வேலையன்னு பலவெதங்களா நெனைப்பு ஓடுறதெ அவரால கட்டுக்குள்ள கொண்டு வார முடியல.

            எப்பிடியோ அந்த நெனைப்புலேந்து கொஞ்சம் விடுபட்டு வந்து திரும்பவும் கொல்லையப் பாத்தாரு. பட்டுப் போன தென்னெ மரங்கள கூடிய சீக்கிரமா வெட்டிப்புடணும்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. நாளாவ நாளாவ உதுத்துப் போயி கொல்லப் பக்கம் போறவங்க மேல வுழுவுறதுக்கு மின்னாடி அந்த வேலையச் செய்துதாம் ஆவணும். அவரு எதிர்பாக்கல இப்பிடி புள்ளைங்க செத்துப் போவும்ன்னு. ஒம்போது தென்னை மரங்களும் அப்பிடியே இருந்திருந்தா காய்ப்புக்குக் கொறைவில்லாம வூட்டுக்குப் போவ, கானம் போட்டா தேங்காயெண்ணெயும் ஆட்டிக்கிடலாம். தேங்காய்க்கும், எண்ணெய்க்கும் எந்தக் கொறைவுமில்லாம பொழுது ஓடிட்டுக் கெடக்கும். இனுமே அப்பிடி இருக்காது. வூட்டுத் தேவைக்குக் கடையில தேங்கா வாங்குறாப்புலத்தாம் இருக்கும்.

            அந்த ஒம்போதுலயும் நல்லா காய்ச்சிட்டு இருந்த அஞ்சுகத்தாம் பட்டுப் போயிருந்துச்சு. ஏனோதானோன்னு காய்க்குற நாலும் நிமுந்து நின்னுட்டு இருந்துச்சுங்க. நாட்டுல உருப்புடறது சீக்கிரமா போயித் தொலைஞ்சிடுது. உருப்படாதுதாம் நெலைச்சி நிக்குது. அதுக்கு இந்த மரங்களெ நல்ல ஒதாரணம் போல தோணுனுச்சு சுப்பு வாத்தியாருக்கு. இனுமே அந்த நாலு மரங்க காய்ச்சாலும் காயிகப் பெரிசா இருக்காது. ஒரு வெட்டுக்கு ஒரு மரத்துக்குப் பத்துப் பாஞ்சு காயிப் பாக்குறது பெரிய விசயம். ஆனா அதுலயும் ஒரு விஷேசம் இருக்கத்தாம் செஞ்சது. காயும் பருப்பும் சின்னதுன்னாலும் ரொம்ப சுவையா இருக்கும். இதுல மரங்களோட அம்சம்ன்னு ஒண்ணு இருக்கு. பருப்பு நல்லாயிருந்து தண்ணி சுவையில்லாமப் போயோ, தண்ணி நல்லா இருந்து பருப்பு சுவைல்லாமப் போயோ காய்க்குற தென்னைகத்தாம் நாட்டுல நெறைய. தண்ணியும் பருப்பும் சுவையா இருக்குற தென்னைக அபூர்வந்தாம். அப்பிடியான தென்னைக எதிர்கொல்லையில இருந்த தென்னைக. அப்பிடி தென்னைக எல்லாருக்கும் அமையாது. சுப்பு வாத்தியாருக்கு அமைஞ்சிருந்துச்சு. அதுலத்தாம் அஞ்ச பறிகொடுத்துட்டு நிக்குறாரு.

            தென்னைக எல்லாம் நல்லா இருந்து காய்ப்பும் இருந்தா சென்னைப் பட்டணம் போறப்ப கூட இருவது முப்பது காய உரிச்சி எடுத்துட்டு சாக்குல போட்டுட்டுப் போவலாம். வேலங்கடி பெரியவரு அப்பிடி கெராமத்துல என்னத்தெ வெளைஞ்சாலும் சென்னைப் பட்டணம் போறப்ப எடுத்துட்டுப் போவாரு. அதுல அவருக்கு அலாதியான சந்தோஷம். அவர்ரப் போல இனுமே தானும் எடுத்துட்டப் போயி சந்தோஷப்பட முடியுங்றதெ நெனைச்சப்போ சுப்பு வாத்தியாருக்கு ஒடம்பெல்லாம் புல்லரிச்சிது. என்னத்த இருந்தாலும் கெராமத்து மண்ணுல வெளையுற கறிகாயிக்கு இருக்குற ருசியே தனித்தாம். அப்பிடி எடுத்துட்டுப் போறதுக்கு அதுக்கு வாய்ப்பில்லாமப் போயிடுச்சு தென்னைக பட்டுப் போனதுல. அதெ வுட அத்தோட இனுமே எப்பிடிப் பொழுது போவுங்ற நெனைப்பு சுப்பு வாத்தியார்ர வாட்டி வதைக்கத் தொடங்கியிருந்துச்சு.

            அடுத்த வருஷம் எப்படியும் நெலத்தையெல்லாம் மீட்டுப்புடணும்ன்னு நெனைச்சாலும், இருந்த நெலத்த ப்ளாட்டுக்கு வுட்டப் பெறவு அவருக்குன்னு இருந்த ஒரு பிடிமானமும் வுடுபட்டாப்புல இருந்துச்சு. வெளையுதோ வெளையலையோ கெராமத்து மனுஷனுக்கு நிலங்றது ஆலமரத்து விழுதுகளப் போல. மரஞ் சாஞ்சாலும் விழுதுக சாய வுடாது. என்னதாம் மனசு ஒடைஞ்ச மனுஷனா இருந்தாலும் வயலப் பாத்தா தேறிடுவாம். வெளைஞ்சித் தர்ற நாம்ம இருக்குறப்ப எதுக்குடா கவலெப்படுறேன்னு கேக்குறாப்புல இருக்கும் நிலம்ங்க நிக்குற தோரண. யிப்போ ஒத்த மரத்துத் தோப்புல இருக்குறாப்புல இருந்துச்சு. அப்பிடி ஒரு தோப்பு அவரோட மனக்கண்ணுல தோன்றி மறைஞ்சது. இருக்குற எல்லா மரங்களும் பட்டுப் போன பெற்பாடு ஒரு மரம் மட்டும் நிக்குற தோப்பு எப்பிடி இருக்கும்? அப்பிடி ஒரு மனத்தோற்றம் கண்ணுக்கு மின்னாடி விரிஞ்சாப்புல உணர்ந்தாரு. இருந்த காக்கா, குருவியெல்லாம் அஞ்ஞயிருந்து ஓடிப் போயிடுச்சு. நெழலு கங்காணாம எங்கேயோ பதுங்கிக்கிடுச்சு. காத்து என்னவோ வாடைக் காத்தா வீசுறாப்புல பட்டுச்சு. 

            சென்னைப் பட்டணம் போயிட்டு வந்ததுல அவரு பையில இருந்த காசி மொத்தமா காலியாயி இருந்துச்சு. இனுமே வர்றப் போற மாசங்கள நெனைச்சப்போ அவருக்குப் பெருமூச்சு எழும்புனுச்சு. பென்ஷன் காசி, மவனோட சம்பளக் காசின்னு அதுல வர்றது அப்பிடியே வட்டிக்கும், கடனுக்குமா போயிட்டு இருக்கும். இருக்குற காசிய வெச்சி சிக்கனமா ஓட்டிட்டுப் போயாவணும். அஞ்சாறு வருஷத்துக்காவது இந்த நெருக்கடி இருந்துட்டு இருக்கும். நெருக்கடின்னாலும் சுகமான நெருக்கடித்தாம். மவளோட கலியாணத்தெ ரொம்ப சிறப்பா முடிச்சிட்டதா ஊருல சனங்க ஆண்டாண்டு காலத்துக்குப் பேசிட்டுத்தாம் இருக்கப் போறாங்க. அந்த ஒண்ணு போதும். அந்த ஒண்ணுக்கு மின்னாடி சில பல வருஷங்க இருக்குற இந்த நெருக்கடியப் பெரிசு பண்ணிக்கிட கூடாதுன்னு தனக்குத் தானே நெனைச்சிக்கிட்டாரு. அதெ நெனைக்க நெனைக்க மனசு பூரா சொகமும் சந்தோஷமும் அலையப் போல வந்து அடிச்சிது. இந்தப்  பொருளாதார நெருக்கடிங்றது ஒரு சொகமான சொமைதாம். இதெ சொமக்குறதப் போல ஒரு திருப்திய எதுலயும் பெற முடியாது. ஒரு தகப்பன்ங்ற மொறையில சந்தோஷமா ஏத்துக்கிட வேண்டிதுதாங்ன்னு நெனைச்சாரு.

            மருமவ்வேன் பாலாமணி வூடுன்னு கட்டுறப்போ இந்தக் கொல்லைய வித்து, அதுலேந்து அஞ்சு லட்சத்தெ அவ்வேங்கிட்ட கொடுத்துப்புடணும். மிச்சத்தெ அப்பிடியே மவ்வேங்கிட்டத்தாம் கொடுக்கணும். கலியாணத்துக்குன்னு நெரம்ப கடன்பட்டவேம் அவ்வேந்தாம்ன்னு மனசுக்குள்ள சில திட்டங்களப் பண்ணிக்கிட்டாரு. அப்பிடித் திட்டத்தெ பண்ணிக்கிட்டவரு அப்பிடியே நேர்மாறாவும் யோசிச்சாரு. யில்லயில்ல இந்தக் கொல்லைய வித்துப்புடக் கூடாது. வேற எதாச்சும் ஒரு வழியிலத்தாம் அப்பவும் அஞ்சு லட்சத்தெ தெரட்டணும். இந்த வருஷம் கையில நெலம் இருந்தா தர்ற வேண்டிய பெலத்த இந்தக் கொல்லை தர்றதா அவருக்குத் தோணுச்சு. கொல்‍லையோ நெலம்னாலும் கடன்பட்டாலும் வித்துப்புடக் கூடாது. விக்குறது சுலுவு. வாங்குறது கடிசு.

            கார்ரு வாங்கக் கொடுத்த காசி, கலியாணம் பண்ண கொடுத்த காசி, கட்டிலு பீரோ பண்ணக் கொடுத்த காசின்னு எல்லாத்துலயும் பாக்குக்கோட்ட சனங்க நெறைவில்லாத காரியத்தைத்தாம் பண்ணியிருந்துச்சுங்க. பொண்ணு நல்ல வெதமா இருக்குங்றதால அதெ பெரிசுபண்ண வேண்டியதில்லன்னு அவரோட நெனைப்புப் போனுச்சு. இனுமே சொச்சம் இருக்குற காலம் அது பாட்டுக்கு ஓடுங்ற நம்பிக்கெ அவரு மனசுக்குள்ள வந்துச்சு. யிப்போ அவரோட மனசுல கடன்பட்டதுக்கான எந்தச் சொவடும் யில்லாம இருந்ததெப் போல இருந்துச்சு. ஒலகத்துலயே சந்தோஷமான மனிதன் தாம்தாங்ற நெனைப்பும் வந்துப் போச்சு. இந்தக் கிரகத்துல வந்துப் பொறந்ததுக்கான அத்தனெ கடமைகளையும் முடிச்ச ஒரு ஆளா தன்னை உணர்ந்தாரு சுப்பு வாத்தியாரு. அந்த நெனைப்பு வந்த ஒடனேயே சென்னைப் போயிட்டு வந்த களைப்பு அவருக்குப் பெரிசா தெரியல. சித்தெ படுத்து எழுந்திரிக்கலாம்ன்னு கூட தோணல. ராத்திரி முழுக்க தூக்கங் கெட்டுத்தாம் பஸ்ல பிரயாணிச்சு வந்தாரு. அந்தத் தூக்கக் கலகத்தை அடிச்சிச் சாப்புடுறாப்புல ஒரு புத்துணர்வு அவரோட ஒடம்புல ஊத்தெடுச்சு.

            வர்றப் போற நாள்கள்ல கொல்லையச் சுத்தம் பண்ணணும்ங்ற யோசனையில அங்க இங்கன்னு கெடந்த மட்டைகள எடுத்து ஒண்ணா எடுத்துப் போட ஆரம்பிச்சாரு. பட்டு நிக்குற மரங்களெ எல்லாத்தையும் எவ்ளோ சீக்கிரம் அறுக்குறமோ அவ்ளோ நல்லதுங்றதோட அதெ அதே வேகத்துல வந்தக் காசிக்கு வித்துப்புடுறதாங் நல்லதுன்னு அவருக்குத் தோணுனுச்சு. போட்டு வெச்சா பொடிப்பொடியா போயி யாருக்கும் உபயோகம் இல்லாமப் போயிடும்ங்றது அவருக்குத் தெரியும்.  தன்னோட வாழ்க்கையோட சகல அத்தியாயங்களும் நெறைவா முடிஞ்சதுல உண்டான சந்தோஷத்தெ நெனைச்சு நெனைச்சு எதிர்கொல்லையில பூரிச்சிட்டெ இருந்தாரு சுப்பு வாத்தியாரு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...