தற்கொலை எனும் அகநிலைப் பயணம்
பெரும்பாலான சூழ்நிலைகளில் உள்ளுணர்வு
தரும் முடிவுகள்தாம் மனிதர்களது வாழ்வைத் தீர்மானிக்கிறது. வாழ்வதற்கான சூழல் அமையாத
போதும் அதை எதிர்கொண்டு வாழ்ந்து பார்த்து விட வேண்டும் என்று தீர்மானிப்பதும், வாழ்வதற்கான
சரியான சூழல் அமைந்த போதும் இனி வாழ வேண்டாம் என்று தீர்மானிப்பதும் உள்ளுணர்வு கொள்ளும்
முடிவுகளே. தற்கொலை என்பது கண நேரத்தில் மனதின் உள்ளுணர்வில் உண்டாகும் முடிவு. உள்ளுணர்வினால்
உண்டான முடிவைப் பகுத்துப் பார்க்க வேண்டும் எனும் உள்ளுணர்வு தோன்றாத தீவிரமான முடிவு
நிலை என அதை ஒருவாறாக வரையறுக்கலாம்.
புறச் சூழ்நிலையின் தூண்டலோ, அழுத்தமோதாம்
உள்ளுணர்வு கொள்ளும் முடிவுகளுக்குக் காரணம் எனினும் ஒரே வித புறச் சூழ்நிலை பலருக்கும்
அமைந்த போதும் எல்லோரும் ஒரே விதமான உள்ளுணர்வுக்கு வருவதில்லை. ஒவ்வொருவரும் உள்ளுணர்வால்
கொள்ளும் முடிவுகள் வெவ்வேறாக அமையும். ஒவ்வொருவருக்கும் இந்த உள்ளுணர்வு எத்தகைய
முடிவுகளைத் தருகிறது என்பது பல்வேறு காரணிகளைப் பொருத்து அமைகிறது. அப்பல்வேறு காரணிகளில்
முக்கியமாக அமைவதை ஒருவரின் உளப்பாங்கு என்றோ மனப்பாங்கு என்றோ சுபாவம் என்றோ பலவாகக்
குறிப்பிடலாம். இதை மாற்றி அமைக்க முடியாது என பொதுவாகக் கருதப்பட்டாலும் மனிதச் சமூகத்துக்கு
அது அப்படியே பொருந்தாது. முயற்சியாலும், சிந்தனையாலும் அது மாற்றி அமைக்கக் கூடியதே
என்பதை வரலாற்றில் நிரூபித்திருக்கிறார்கள்.
தேர்வு தொடர்பான தற்கொலைகளின் மையமாக
அமைவது பெரும்பாலும் உளப்பாங்கே எனலாம். மாணவர்களின் உளப்பாங்கைச் சரியாக வார்த்தெடுக்க
முடியாத கல்வி முறையின் தோல்வி என்பதாக அதைக் குறிப்பிடலாம். கல்வி என்பது மனிதர்களுக்காகப்
பயன்படக் கூடிய உள்ளார்ந்த பயனுடையதாகவும், கருவிப் பயனுடையதாகவும் ஒரே நேரத்தில் திகழ்கிறது.
இதன் பொருள் பிறழ உணரப்படும் போது அதாவது கல்வியின் கருவிப் பயன்களாக மனிதர்கள் உணரப்படும்
போது மனிதர்கள் கல்விக்கான எந்திரங்களாக உருவாக்கப்படலாம். எந்திரத் தன்மை என்பது
மனித உயிர்ப்புக்கும் மலர்ச்சிக்கும் எதிரானது. அதைப் பொதுவாக மனித மனம் ஏற்று ஒத்துழைப்பதில்லை.
மனித மனம் என்பது தமக்கே உரிய மலர்ச்சியான ஆக்க உணர்விலும் / படைப்புணர்விலும் ஈடுபடவே
விரும்புகிறது. படைப்புணர்வோ பன்மயமானதும் பலதிறப்பட்டதும் ஆகும். சமூகமோ பணம் ஈட்டுவதற்கான
உடனடியான பலன்களைத் தரும் படைப்புணர்வில் மட்டுமே எந்திரத் தனமாக ஈடுபட விரும்புகிறது.
இதன் காரணமாக காலத்திற்கேற்ப மருத்துவம், பொறியியல் என்பன போன்ற சில குறிப்பிட்ட
துறை ஆர்வங்கள் தவிர்த்து பிற துறை ஆர்வங்கள் ஆர்வங்களாகவே கொள்ளப்படாத சூழல் பொதுவாகக்
காணப்படலாம்.
மருத்துவம், பொறியியல் போன்ற சில குறிப்பிட்ட
துறை ஆர்வங்களையும் முயற்சிகளையும் கொண்டிருப்பதே வாழ்வதற்கான தகுதி என்பதாகவும்,
கெளரவத்திற்கான மார்க்கமாகவும் கொள்ளப்படும் சமூக இயங்கு மனநிலை ஒவ்வொரு காலகட்டத்திலும்
தலைதூக்கிய வண்ணம் இருக்கிறது. படிப்படியாகப் பொதுபுத்தியாக மாறும் இப்பொது உள்ளுணர்வே
பெற்றோர்களின் தனித்த உள்ளுணர்வாக மாறி அதைக் குழந்தைகளின் உள்ளுணர்வாக மாற்ற முயலும்
போது குழந்தைகள் தங்களின் இயல்பான உளப்பாங்கிலிருந்து திணிக்கப்பட்ட ஓர் உளப்பாங்குக்கு
மாற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
பெற்றோர்களுக்காக திணிக்கப்பட்ட உளப்பாங்கை
ஏற்கும் மற்றும் ஏற்காத குழந்தைகள் என இருவகைப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். அதை
ஏற்கும் குழந்தைகள் தங்களது திணிக்கப்பட்ட உளப்பாங்கை லட்சிய உளப்பாங்காகக் கொண்டு
அதாவது அதுவொன்றே சரியான உளப்பாங்காகக் கொண்டு அதை அடைவதே உயிர்வாழ்வதற்கான இறுதி
இலக்கு என்பது போன்ற உளப்பாங்கை அடையலாம். அவ்விலக்கை அடைவதே உயிர்வாழ்வதற்கான தகுதி
என்பது போலவும், அதை அடைய இயலாமை உயிர்வாழ்வதற்கான தகுதியற்ற நிலை என்பது போலவும்
ஓர் உள்ளுணர்வைக் காலப்போக்கில் குழந்தைகள் அடையும் போது அவர்கள் கொண்ட இலக்கில்
அடையும் தோல்வியை அவர்களால் ஏற்க முடியாத மனநிலைக்கு வெகு எளிதாக ஆளாகி விடுவார்கள்.
இந்நிலையில் அவர்களின் உள்ளுணர்வை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் அனைத்தும் வாழ்வதற்கான
சராசரியான திறன்களை மறுதலிக்கும் நிலையை அடைந்திருக்கும் எனில் அதை அவர்களின் பேச்சின்
இயல்பு திரிபுவாதத்தைக் கொண்டு வெகு நுட்பமாக ஊகித்தறியலாம். இந்நிலையில் அவர்களின்
மனப்போக்கைத் துல்லியமாகக் கண்டறியலாம் எனினும் அது அவ்வளவு எளிதானதன்று. அவர்களிடம்
தொடர்ந்துப் பழகி நீண்ட நேரம் இணக்கமாகப் பேசுவதன் மூலமே அதை அறிய முடியும். ஆனால்
அவர்களோ நீண்ட நேரம் பேசுவதற்கோ, பழகுவதற்கோ நேரமில்லாதவர்கள் போல நடந்து கொள்வார்கள்.
புறச் சூழ்நிலைகள், அதனால் உண்டாகும் உளப்பாங்கும்
உள்ளுணர்வுகளும் மனிதர்களது பெரும்பாலான முடிவைத் தீர்மானிக்கின்றன. பல நேரங்களில்
புறச் சூழ்நிலைகளை மாற்றியமைப்பது போராட்டமாக அமையும் சூழ்நிலைகளில் அப்புறச்சூழ்நிலையை
எதிர்கொள்ளும் உளப்பாங்கையும், உள்ளுணர்வையும் தொடர்ந்து சரியான முறையில் கட்டிக்
காப்பது சவாலாக அமையக் கூடும். அதுபோன்ற சூழ்நிலைகளில் உளப்பாங்கையும், உள்ளுணர்வையும்
சரியாகக் கட்டிக் காப்பதற்கான எளிமையான அணுகுமுறைகளும் இல்லாமல் இல்லை. மிக மிக எளிமையான
அவ்வணுகுமுறைகள் மிக உயர்ந்த மனப்பாங்கு கொண்டு விளங்குவதே அதைக் கைக்கொள்ள முடியாமைக்குக்
காரணம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் அன்பும் அரவணைப்புமே அவ்வணுகுமுறைகள். மிக
விநோதமாக அவ்வணுகுமுறையைக் கொள்வதற்கே அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது எனலாம்.
இவ்வணுகுமுறையை எப்படிக் கொள்வது, எவ்வாறு கொள்வது என்பற்கான பிரமாதமான வழிமுறைகள்
ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மிக எளிமையான மனநிலையிலிருந்து மிக எளிமையாக அவ்விரண்டும்
பிறந்து விடுகின்றன. எல்லாவற்றிலும் கருவிப் பயன்களை ஆராயும் மனநிலையிலிருந்து அவ்விரண்டும்
விலகியே நிற்கவும் செய்கின்றன.
*****
No comments:
Post a Comment