பஞ்சரான புல்லட்!
செய்யு - 565
மறுநாளு காலையில எழும்புறதுக்கு மின்னாடியே
செய்யு விகடுவுக்குப் போன அடிச்சா. "ராத்திரியே இஞ்ஞ வந்திருக்கலாம்லண்ணா! இனுமே
அஞ்ஞல்லாம் போவக் கூடாது. இஞ்ஞத்தாம வாரணும்ண்ணே! காலச் சாப்பாடு இஞ்ஞ தயாரா இருக்கும்.
யத்தாம் வூட்டுல சாப்புடாம எல்லாத்தையும் இஞ்ஞ கெளப்பியாந்திரு!"ன்னா. சரின்னு
சொல்லிட்டு போன வெச்சாம் விகடு. விசயத்தெ சொன்னதும், "நாம்ம இஞ்ஞ சமைக்கலாம்ன்னு
நெனைச்சமே யம்பீ!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
"ராத்திரியே வாரலன்னு ஒரு கோவம்
இருக்குப் போல செய்யுக்கு!"ன்னாம் விகடு.
"செரி! அப்பிடின்னா ராத்திரிச் சாப்பாடு
நம்ம வூட்டுல!"ன்னு தனம் அத்தாச்சி. ராத்திரியே காருல எடம் இல்லாம நெருக்கி அடிச்சிட்டு
வந்ததெ நெனைச்சிக்கிட்டு சந்தானம் அத்தான் என்பீல்ட புல்லட்டுல வர்றதா சொல்லிடுச்சு.
மவ்வேம் கேட்டாம்ன்னு அத்து ஒரு என்பீல்ட்டு புல்லட்டையும், பொண்ணுக்காக ஸ்கூட்டி
டைப்புல ஒரு ஹீரோ ஹோண்டா ப்ளசர்ரையும் சமீபத்துலத்தாம் அத்து வாங்கியிருந்துச்சு.
காரு, புல்லட், ப்ளசர்ன்னு எல்லாத்துக்கும் ஒரே நம்பராவும் வாங்கியிருந்துச்சு. நம்பருக்கு
மின்னாடி இருந்த இங்கிலீஷ் லட்டருதாம் வேற வேறயா இருந்துச்சு. சந்தானம் அத்தானோட மவ்வேம்
கார்ர ஓட்ட சுப்பு வாத்தியாரு, வெங்கு, விகடு, ஆயி, பவ்வுன்னு கார்ல போறதா திட்டம்
ஆனுச்சு. சந்தானம் அத்தானோட மவ்வே வேலைக்குப் போவணும்ன்னு சொல்லிட்டுக் கெளம்பிடுச்சு.
தனம் அத்தாச்சி கார்ல எடம் இருக்காது, செருமமா இருக்கும்ன்னு சொல்லிட்டு வூட்டுல இருந்துகிடுச்சு.
காலையில மதுரவாயல்லேந்து அரும்பாக்கத்துல
போயி எறங்குனப்போ அண்டாக கசம் அபுக்கா கசம்ன்னு மந்திரம் போட்டு கதவெ தொறக்குறாப்புல
செய்யுவுக்குப் போன அடிச்சி, அவ்வே வந்து வரிசையா கேட்டுகளத் தொறந்து விட்டா. சமைச்சித்
தயாரா வெச்சிருந்தா செய்யு. கூட ஒரு பையன் ஒருத்தம் இருந்தாம். பாலாமணியோட ஒண்ணு வுட்ட
தம்பின்னு அவனெப் பத்திச் சொன்னா செய்யு. பாலாமணி காலையில ஏழு மணிக்கெல்லாம் கெளம்பி
ஆஸ்பிட்டல் போயிருந்தாம். "ஒம்போது மணிக்கு மேல சாப்பாட்டுக்கு வந்துட்டுப்
போறதா சொல்லிட்டுப் போனாங்க!"ன்னா செய்யு. அதுக்குள்ள சந்தானம் அத்தானும் வந்து
சேந்து, போன அடிச்சி அண்டாகா கசம், அபுகா கசம் போட்டதுல அதுக்கு ஒரு தவா போயி கேட்டுகள
வரிசையா தொறக்க வேண்டிருந்துச்சு செய்யுவுக்கு.
சந்தானம் அத்தான் வந்த ஒடனே செய்யுவப்
பாத்துக் கேட்டுச்சு, "சாப்புட்டீயா ன்னா?"ன்னு.
"நீஞ்ஞல்லாம் வர்றாம நாம்ம மட்டும்
எப்பிடிச் சாப்புடுறது?"ன்னா செய்யு.
"நீயி இப்பிடி நாலு தடவெ கேட்ட தொறக்குறதுக்குன்னு
எறங்கி ஏறுனா ஒடம்பு துரும்பா போயி ஒம் புருஷன் ஒமக்கு ட்ரீட்மெண்டு கொடுக்குறாப்புலல்லா
ஆயிடும் போலருக்கு! அதால சமைச்சா மொதச் சாப்பாட்டு நீயி சாப்புட்டணும்!"ன்னு
சொல்லிச் சிரிச்சது. செய்யவும் சிரிச்சா.
"சிரிப்பா யில்லாம யிப்போ சீரியஸான
விசயம் ஒண்ணும் கேட்பேம். பதிலச் சொல்லுவீயா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"கேளுங்க யத்தாம்!"ன்னா செய்யு.
"கார்ரு! கார்ரு அது எஞ்ஞ? அதெ எஞ்ஞ
ஒளிச்சி நிப்பாட்டி வெச்சிருக்கீயே நீயும் ஒம் புருஷனும்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
பதிலச் சொல்ல முடியாம உதட்ட பிதுக்குனா செய்யு.
"இஞ்ஞ மாடிக்குக் கீழ எஞ்ஞயாவதுதாங்
இருக்கும். எறங்கிப் பாக்கவா?"ன்னுச்சு சந்தானம் அத்தான். அதுக்கு ம்ங்றது போல
கண்ணச் சிமுட்டுனா செய்யு. சந்தானம் அத்தான் அதுக்குச் சிரிச்சிக்கிட்டெ தவுர கீழே
எறங்கிப் போவல.
"சாப்புட்டுட்டுத் தெம்பா தேடுங்களேம்
யத்தாம்!"ன்னா செய்யு.
"மாப்ள வந்துடட்டும்! சேந்துச் சாப்புடுவேம்!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"கொஞ்ச நேரமாவுமே யத்தான்! நீஞ்ஞ
சாப்புட்டுப்புட்டு வேலைக்குக் கெளம்புற மாதிரி இருக்குமே!"ன்னா செய்யு.
"ன்னா வேல! நம்ம ஆபீஸூ! நம்ம சைட்டு!
நாம்ம போறதுதாங் நேரம். வந்துடட்டும் மாப்ளே!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"ஒஞ்ஞ மாப்ளே எஞ்ஞ அண்ணந்தானே! அதாங்
வந்துடுச்சே. சாப்புட வேண்டித்தானே?"ன்னா செய்யு.
"ந்நல்லா பேசக் கத்துகிட்டெ!"ன்னு
சொன்ன சந்தானம் அத்தான் பாலாமணியோட ஒண்ணு விட்ட தம்பியப் பத்தி வெசாரிக்க ஆரம்பிச்சது.
அவ்வேம் ஒரு பினான்சியல் கம்பெனியில வடபழனியில வேல பாக்குறதா சொன்னாம். கல்யாணம் ஆவுற
மின்னாடி வரைக்கும் பாலாமணியும் அவனும் ஒண்ணா அறையெடுத்து எடுத்துத் தங்கி இருந்ததையும்
சொன்னாம். அவ்வேம் பேரு தோலாமணின்னு அப்பதாம் சொன்னாம். பேச்சு ஒருத்தரு மாத்தி
ஒவ்வொண்ணா வளந்துகிட்டெ இருந்துச்சு. ஒம்போதரை மணி வாக்குல பாலாமணி செய்யுவோட போனுக்குப்
போன அடிச்சாம். அவ்வேம் ஒரு அண்டாக்க கசம், அபுக்கா கசம்ன்னு கேட்டு தொறக்குறதுக்கான
மந்திரத்தப் போட்டாம். செய்யு சாவிக்கொத்த தூக்கிட்டுக் கேட்டுகள தொறக்க ஓடுனா.
அஞ்சு நிமிஷத்துல பாலாமணி மேல வந்தாம். எல்லாரையும் பாத்தவம், "எனக்காக வெயிட்டிங்கா?
செய்யு சீக்கிரம் எலையப் போடு. சாப்பாட்ட எடுத்து வையி! க்யூக் க்யூக்!"ன்னாம்.
போர்வைய மடிச்சிப் போட்டு உக்கார்றதக்குத் தோது பண்ணிட்டு இருக்குறப்ப, "டைனிங்
டேபிள் வாணாம்! தட்ஸ் குட்! கீழயே உக்காந்துச் சாப்புடுவேம்!"ன்னாம்.
பாலாமணியே தொடந்தாப்புல பேசிட்டு இருந்தாம்.
"நேத்தி மத்தியானம் நீஞ்ஞ சாப்புட வாரலியா? பிரியாணியில அஞ்சாறு மீந்துப் போயிடுச்சு!
எல்லாம் பக்காவா பேக் பண்ணி எண்ணி வாங்குனது. நேத்து இருந்த அலமலப்புல அதெ பாக்க முடியல.
காலையிலத்தாம் தூக்கி எறிஞ்சேம்! வேஸ்ட் ஆப் புட். ஐ டோன்ட் லைக் இட்!"ன்னாம்
பாலாமணி.
"அத்து வந்து மாப்ளே! சாமாஞ் செட்டுகள
வாங்கி முடிக்க ரொம்ப நேரமாயிடுச்சு. இஞ்ஞ சாப்பாடு இருக்குமோ இருக்காதோன்னு ஒரு
சந்தேகம்!"ன்னு இழுத்தாரு சுப்பு வாத்தியாரு.
"நோ ப்ராப்ளம்! பட் இன்னிக்கு லஞ்ச்
நம்ம வூட்டுலதாம். எல்லாம் இருந்துச் சாப்புட்டுப் போவணும்."ன்னாம் பாலாமணி.
"இன்னிக்கு எங்கயும் வெளியில போறாப்புல
யில்ல. இஞ்ஞத்தாம் தங்கப் போறேம்! நாளைக்குத்தாம் திருவேற்காடு போவணும்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"தட்ஸ் நைஸ்! நேத்திக்கு நான் வெஜ்ஜா
போயிட்டதால இன்னிக்கு வெஜ்தாம். ஓக்கே?"ன்னாம் பாலாமணி.
"அதாங் மாப்ளே நல்லது!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு. இலையைப் போட்டு சாப்பாட்டப் போட்டா செய்யு. கேசரி, பொங்கல்,
இட்டிலி, தோசை, சட்டினி, சாம்பாருன்னு செஞ்சி வெச்சிருந்தா செய்யு. அதெ இலையில பரிமாறுனா.
"ரொம்ப வைக்காதே. கொஞ்சம் ஸவீட்.
ரண்டு இட்லி. ஒரு தோசை. பொங்கல் வாணாம். அது போதும். நீயும் ரொம்ப சாப்புடாதே.
வெயிட் போட்டுடுவே!"ன்னாம் பாலாமணி.
"இந்த வயசுல சாப்புடுறதுக்கு ன்னா?
வயசான காலத்துல அதெ பாத்துக்கிடலாம். நாஞ்ஞ யிப்போ நீஞ்ஞ சொல்றபடிக்குச் சாப்புடலாம்.
ஒஞ்ஞளுக்கு ன்னா மாப்ளே? நெறையா நெறைவா சாப்புடுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"தட்ஸ் ராங். யோகிக்கு ரண்டு வேள
சாப்பாடு போதும். போகிக்குத்தாங் மூணு வேள சாப்பாடு. அடுத்ததா ஆஸ்பிட்டல் போயி பேஷண்ட்ஸப்
பாக்கணும். நெறையச் சாப்புட்டா முடியாது. நாம்ம ஒரு நாளைக்குக் கொறைஞ்சது எரநூறு பாப்பேம்.
இட்ஸ் எ ரெக்கார்ட் இன் மை எவ்விரிடே டயரி யு நோ?"ன்னாம் பாலாமணி.
அதுக்கு மேல யாரும் சாப்பாட்டப் பத்தியோ,
சாப்புடுற மொறையைப் பத்தியோ பேசல. எல்லாரும் சாப்புட்டு முடிச்சாங்க. பாலாமணியோட
ஒண்ணு விட்ட தம்பி தோலாமணி, "நாம்ம குளிச்சிட்டுக் கெளம்புணும்ண்ணே! நீஞ்ஞ வருவீயே!
சொல்லிட்டுப் போவேம்ன்னுத்தாம் வெயிட்டிங்!"ன்னாம்.
"மத்தியானச் சாப்பாட்டுக்கு யு மஸ்ட்
கம்!"ன்னாம் பாலாமணி.
"முடியாதுண்ணே. இப்பவே சாப்புட்டுக்
கெளம்பி பதினொண்ணுக்கு மேல ஆயிடும். போயி ஒடனே மத்தியானச் சாப்பாட்டுக்குக் கெளம்புனா
ஒத்துக்கிட மாட்டானுவோ ஆபீஸ்ல. வேணும்ன்னா நாலு இட்டிலியக் கட்டி மத்தியானச் சாப்பாட்டா
எடுத்துட்டுப் போறேம்!"ன்னாம் பாலாமணியோட ஒண்ணு விட்ட தம்பி தோலாமணி.
"செய்யு! க்யூக். எல்லா ஐட்டத்துலயும்
வெச்சு மத்தியானச் சாப்பாட்ட தம்பிக்குப் பேக் பண்ணிக் கொடு!"ன்னாம் பாலாமணி.
சரின்னு சொன்னா செய்யு.
"நெக்ஸ்ட்! மச்சான கவனிக்கணும். சளி
பெரச்சனெ யில்ல. மூக்கு இன்னும் ஊத்திட்டுதாங் இருக்குல்ல. நோ நோ ஒறைஞ்சிருக்கும்.
இன்னிக்கு ட்ரீட்மெண்ட் பண்ணிடுறேம்! பர்ஸ்ட் நாமளும் மச்சானும் போயி இன்னிக்கு மத்தியானச்
சாப்பாட்டுக்கு வேண்டிய கறிகாய வாங்கிட்டு அப்பிடியே மளிகெ சாமானுங்களையும் கொஞ்சம்
வாங்கிட்டு..."ன்னு நெத்தியச் சுருக்கி யோசிச்சாம் பாலாமணி.
"கறிகாயி மட்டும் போதும். மளிகெ
வாணாம்ங்க. யப்பா நேத்திக்கு வாங்கியாந்துட்டாங்க!"ன்னா செய்யு.
"அத்து எப்போ நடந்துச்சு?"ன்னாம்
பாலாமணி.
"அதல்லாம் வாங்கிட்டு வர்றதுக்குத்தாம்
நேரமாயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அப்பிடியா! நைட் வந்து படுத்தது.
ரொம்ப டயர்ட். இன்னும் கிப்ட்ஸையேப் பிரிச்சிப் பாக்கல. ஸோ நமக்கு ஒண்ணும் தெரியல!
அப்புறமென்ன மச்சாம் கெளம்புலாமா? காய்கறி மார்கெட்ட காட்டிட்டு அழைச்சாந்து அப்பிடியே
கொடுத்துட்டு ஆஸ்பிட்டல்லுக்குக் கொண்டு போயிடறேம்! இந்த எடத்தெ எல்லாத்தையும் சுத்திக்
காட்டணும்ல்ல. யாராச்சும் கீழே வர்றாப்புல இருந்தா வந்துடலாம். இல்லன்னா ரண்டு தடவே
பூட்டித் தொறக்கணும்!"ன்னாம் பாலாமணி.
சந்தானம் அத்தான், "நாமளும் வந்துடுறேம்!"ன்னுச்சு.
"நீஞ்ஞ கெளம்புதீயளா? ஒய்? இருந்து
மத்தியானச் சாப்பாட்ட முடிச்சிட்டுக் கெளம்பலாம்!"ன்னாம் பாலாமணி.
"சைட் கொஞ்சம் பாக்கணும். பாத்துட்டு
மத்தியானம் வந்துடுறேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"அப்பிடியே வர்றப்போ அத்தாச்சியையும்
அழைச்சிட்டு வாஞ்ஞ!"ன்னா செய்யு.
"நாமளும் அப்பிடியே கெளம்புறேம்!"ன்னாம்
சந்தானம் அத்தானோட மவ்வேம்.
"சித்தே இருடா. இருந்து கெளம்பலாம்.
ஒரு தடவேயா தாத்தா, ஆத்தா எல்லாத்தையும் கெளப்பிட்டு வந்துப்புடலாம்!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"ரொம்ப போர்ப்பா! போன் மட்டும்
பண்ணச் சொல்லுங்க. இன் டைம்க்கு இந்த எடத்துல இருப்பேம்! அத்தோட காரு வேற இன்னிக்குத்தாம்
கொடுத்திருக்கீயே. பிரண்ட்ஸ்ஸ அழைச்சிக்கிட்டு ஜாலியா ஒரு ரவுண்ட்!"ன்னாம் சந்தானம்
அத்தானோட மவ்வேன். சந்தானம் அத்தான் சிரிச்சிச்சு, "இந்தக் காலத்துப் பயெலுங்க
ஓரிடத்துல இருக்க மாட்டானுவோ!"ன்னு.
"கெளம்பலாமா?"ன்னாம் பாலாமணி.
எல்லாரும் கெளம்பி கீழே வந்தப்போ சுசூகி அக்செஸ்ல பாலாமணி விகடுவெ பின்னாடி உக்கார
வெச்சிக்கிட்டு கறிகாயி வாங்கக் கெளம்புனாம். "வாங்கிட்டு வந்து போன் அடிக்கிறேம்.
கீழே வந்து வாங்கிக்கோ! நாம்ம மேல வர்ற முடியாது!"ன்னாம் செய்யுவப் பாத்து. பாலாமணி
வண்டியக் கெளப்புனாம். அதுக்குப் பின்னாடி கெளப்புன சந்தானம் அத்தானும் அதே வழியா மின்னாடி
போனுச்சு. அப்பதாங் விகடு கவனிச்சாம் சந்தானம் அத்தானோட என்பீல்ட் புல்லட்டோட பின்னாடி
டயரு காத்து கொறைஞ்சிப் போயிட்டு இருக்குறதை. ஒடனே சந்தானம் அத்தானுக்குப் போன அடிச்சாம்.
அத்து எடுக்கல. கொஞ்ச நேரத்துக்குப் பெறவு பாலாமணியோட காய்கறிக் கடையில போயி எறங்குனப்போ,
சந்தானம் அத்தானோட போன் வந்துச்சு பஞ்சர் கடையில நிக்குறதா. அத்தோட சந்தானம் அத்தான்
சொன்னுச்சு, "யாரோ பின்பக்க டயர்ல ஆணியக் குத்தி வெளியில இழுத்துருக்கானுவோ.
டியூப்லஸங்றதால சமாளிச்சி வர்ற முடிஞ்சது. யில்லன்னா அஞ்ஞயே பஞ்சர் பாத்துதாம் எடுத்திருக்க
முடியும்!"ன்னு.
அவ்வளவு கேமிராங்க மரத்துலயும், வூட்டுக்கு
வெளியிலயும் இருக்குற எடத்துல யாரு ஆணிய வெச்சிக் குத்திருப்பான்னு விகடு யோசிச்சிட்டு
இருக்குறப்பே கறிகாய்களை வாங்கிட்டு அதுக்கான பேரத்தெ பேசி முடிச்சிருந்தாம் பாலாமணி.
*****
No comments:
Post a Comment