கட்டடக் காட்டுக்குள் தனியே ஒரு மான்!
செய்யு - 572
திருவேற்காட்டுல மலர் அத்தாச்சி வூட்டுக்குள்ள
காலடி எடுத்து வெச்சா, அங்க அதுக்கு மின்னாடியே சந்தானம் அத்தான், தனம் அத்தாச்சி எல்லாரும்
வந்திருந்துச்சுங்க. சந்தானம் அத்தானோட மவளும் அன்னிக்கு லீவு எடுத்துட்டு வந்திருக்கிறதா
சொன்னுச்சு. சுப்பு வாத்தியாரு குடும்பத்தோட போயி எறங்குன நேரம் மசாலா வாசமா வீசுனுச்சு.
ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீனுன்னு எடுத்து சமையலுக்கான வேலைக மும்மரமா நடந்துட்டு இருந்துச்சு.
சுப்பு வாத்தியாரு சென்னைப் பட்டணம் வந்தா தங்குறதும், கெளம்புறதும் எல்லாம் சந்தானம்
அத்தான் வூட்டுலதாம். திருவேற்காட்டுக்கு வந்து தலையக் காட்டிட்டுப் போறதோட செரி.
இருந்து தங்கிச் சாப்புட்டது ரொம்பவே அபூர்வந்தாம். திருவேற்காட்டுல மலர் அத்தாச்சி,
ராமு அத்தான்னு குடி போறப்ப கூட சந்தானம் அத்தான் வூட்டுல தங்கிட்டு குடி போற நேரமா
பாத்து வந்துட்டுப் போனதோட செரித்தாம். அத்து ஒரு கொறையாவே திருவேற்காட்டுச் சனங்களுக்கு
இருந்துச்சு. அந்தக் கொறையப் போக்கிப்புடணும்னுத்தாம் சுப்பு வாத்தியாரு இதெ ஒரு
சாக்கா வெச்சி ஒரு நாளு தங்கிப் போறதா முடிவெடுத்துத் திருவேற்காட்டுக்கு வந்தது.
சந்தானம் அத்தான் எல்லா வூட்டுக்கும் தனித்தனியா
இனிப்பும், காரமும் கொடுக்குறாப்புல வாங்கியிருந்துச்சு. சுப்பு வாத்தியாரு இதெப்
பத்தி முங்கூட்டியே சொல்லியிருந்தாரு வாங்கிடச் சொல்லி அலைஞ்சிட்டுக் கெடக்க முடியாதுன்னு.
திருவேற்காட்டுல ஏழு வூட்டோட சந்தானம் அத்தானோட வூட்டையும் சேர்த்தா எட்டு வூடு தேறும்.
எட்டு வூட்டுக்கும்மா சந்தானம் அத்தான் தனக்குத் தெரிஞ்ச ஆளுகிட்டெ ஒவ்வொரு வூட்டுக்கும்
அரை கிலோ மிக்சரும், அரை கிலோவுக்குப் பலவெத இனிப்புமா கணக்கு வெச்சி வாங்யிருந்துச்சு.
அதுக்கு மொதல்ல காசி எம்மாம்ன்னு கேட்டுக் கொடுத்தவரு ஒவ்வொரு வூட்டுக்கும் போயிட்டு
வர்றதா சொல்லிக் கெளம்புனாரு. மலர் அத்தாச்சி வூட்டுக்கு வலது பக்கத்துலேந்து போனா
வரிசையா வேலங்குடி வகையறா வூடுங்கத்தாம். கலா அத்தாச்சி வூடு, ராமு அத்தானோட வூடு,
அப்பிடியே எதுத்தாப்புல இருக்குற சந்துல போனாக்க மாரி அத்தானோட வூடு. நேரா பிடிச்சிப்
போயி தெரு கடைசியில நின்னா கார்த்தேசு அத்தானோட வூடு. சுப்புணி அத்தானும், வேதா அத்தாச்சியும்
அதெ தெருவுல ப்ளாட்டு வாங்கிப் போட்டு வூடு கட்டாததால பக்கத்துலேயே ரண்டு தெரு தள்ளி
வாடவெ வூட்டுல குடியிருந்துச்சுங்க.
ஒவ்வொரு வூட்டுல போறப்பயும் ஒரே கேள்வித்தாம்,
"ஏம் மாமா! மவளெ கலியாணம் பண்ணித்தாம் ஒவ்வொரு வூட்டுலயும் அடியெடுத்து வைக்கணும்ன்னு
வேண்டிருந்தியா?"ன்னு. கலா அத்தாச்சி கேட்டுச்சு, "அதாங் மவளெ சென்னைப் பட்டணத்துல
கலியாணங் கட்டிக் கொடுத்திட்டீயே மாமா! பெறவென்ன கெராமத்துலக் கெடந்துட்டு? அப்பிடியே
இஞ்ஞ திருவேற்காட்டுப் பக்கமா வந்தீயன்னா பொண்ணுக்குப் பொண்ணையும் பாத்துக்கிட்டாப்புல
இருக்கும். எஞ்ஞளுக்கும் மாமாவ அடிக்கடிப் பாத்தாப்புல இருக்கும்!"ன்னு.
ரவி அத்தானும் வுடாம, "பொண்ணப் பாக்கணும்ன்னு
அலைஞ்சிட்டுக் கெடக்க வேண்டியதில்லப் பாருங்க. வேணும்னா சித்தப்பா இஞ்ஞ ஒரு ஆறு மாசம்ன்னும்,
அஞ்ஞ ஒரு ஆறு மாசம்ன்னும் கூட இருந்துக்கிடலாம்!"ன்னுச்சு.
"அப்பிடி ஒரு அமைப்பு யிருந்தா அதையுந்தாம்
பாப்பமே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டெ.
"யப்போ மாமா! சென்னைப் பட்டணம் வர்றது
உறுதியாயிடுச்சு. அப்பிடின்னா ஒரு ப்ளாட்ட யிப்பவே வாங்கிப் போட்டாக்கா தேவலாம். நாளுக்கு
நாளு வெலயேறிட்டுல்லா போவுதுக ப்ளாட்டுக!"ன்னுச்சு ராமு அத்தான். பெரியவரு வகையறா
வூடுகளுக்கு ஒவ்வொண்ணா போயி முடிச்சி, கடெசீயாத்தாம் சுப்பு வாத்தியாரு சின்னவரு
மவனான கார்த்தேசு அத்தானோட வூட்டுக்குப் போனாரு. அதுவரைக்கும் ஒன்னடி மின்னடியா வந்த
வேலங்கடி பெரியவரு வூட்டுச் சனங்க கார்த்தேசு அத்தானோட வூடுன்னதும் ஒதுங்கிட்டுங்க.
சுப்பு வாத்தியாரு தங் குடும்ப ஆளுகளோட மட்டும்தாம் போறாப்புல இருந்துச்சு. சுப்பு
வாத்தியார்ரப் பாத்ததும், "யங்க மாமா! வர்றாம போயிடுவீயோன்னு நெனைச்சேம்!"ன்னுச்சு
கார்த்தேசு அத்தான்.
"அதெப்பிடிடாம்பீ வர்றாம போவ முடியும்?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"யம்பீயோட கலியாணத்துக்குக் கூட
வாராம இருந்துட்டீயே மாமா! அதெ நெனைச்சித்தாங் அப்பிடிச் சொன்னேம்! நாமளே நேர்ல வந்துதானே
பத்திரிகெ வெச்சேம்!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான். அதுக்குச் சுப்பு வாத்தியாரு
பதிலச் சொல்ல முடியாம தடுமாறுனாரு.
"அதெப் பத்தியல்லாம் பேய வாணாம்பீ!
நடந்தது நடந்துப் போச்சு. நீரடிச்சி நீரா வெலகிடப் போவுது. இனுமே நடக்கப் போறது
நல்ல வெதமா நடக்கட்டும்!"ன்னுச்சு வெங்கு.
"மாமா! இஞ்ஞத்தாம் சாப்புட்டுப் போவணும்!"ன்னுச்சு
கார்த்தேசு அத்தான்.
"யங்க மலரு வூட்டுல வேல நடந்துகிட்டு
இருக்குது. நீயி வூட்டுல டீத்தண்ணிய மட்டும் போட்டுக் கொடு. இனுமேத்தாம் அடிக்கடி
வந்துட்டுப் போவப் போறம்லா. சாப்புடுறேம். மத்தியானத்துக்குச் சாப்புட்டுப்புட்டு
ராத்திரிக்கிக் கெளம்பிப்புடலாம்ன்னு இருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதையெல்லாம்
கேட்டுட்டு நீலாதாட்சி அத்தாச்சி டீத்தண்ணியும், பலவாரமும் கொண்டாந்துச்சு.
"யப்பாவும் யம்மாவும் நம்ம வூட்டுல எல்லாம் சாப்புடவீயளா? பெரிய எடத்துலல்லா பாத்துச்
சாப்புடுவீயே? மருமவ்வேம் வேற டாக்கடர்ராப் போயிட்டாம். சொல்லவா வேணும்?"ன்னுச்சு.
"அப்பிடியில்லாம் ஒண்ணுமில்லையடியம்மா!
ராத்திரிக்கிக் கெளம்புலாம்ன்னு பாக்குறேம். வேறொண்ணுமில்ல. இருந்து இன்னொரு நாளு
சாப்புடுறதா இருந்தா இஞ்ஞத்தாம் சாப்பாடு. யிப்பவே பாரு. மத்தியானச் சாப்பாட்டு நேரத்துக்குத்தாங்
அஞ்ஞப் போறாப்புல யோஜனெ. அது வரைக்கும் இஞ்ஞத்தாம் பேச்சு. போதும்லா?"ன்னுச்சு
வெங்கு. அதெ கேட்டதுக்குப் பெறவு நீலதாட்சி அத்தாச்சியால ஒண்ணும் சொல்ல முடியல. கண்ணு
கலங்குனுச்சு அதுக்கு, "எஞ்ஞ வூட்டுக்கு மருமவளா வர்ற வேண்டியப் பொண்ணு!"ன்னு
உள்ளுக்குள்ள மொணகுனுச்சு.
கார்த்தேசு அத்தான் நெருங்கி வந்து சுப்பு
வாத்தியார்கிட்டெ பேசுனுச்சு. "நீயில்லாம் இருந்தும் மாமா இப்பிடில்லாம் நடக்கலாமா?"ன்னுச்சு.
சுப்பு வாத்தியாருக்கு எடுத்த எடுப்புல என்னங்றது புரியல. அவருக்கு யோசனெ தாசு அத்தானுக்கு
மவளெ கட்டி வைக்காம போனதுதானோங்ற மாதிரிக்கி சிந்தனெ போனுச்சு. அதெ தடுத்து நிறுத்துறாப்புல
கார்த்தேசு அத்தானே மேக்கொண்டு சொன்னுச்சு, "சந்தானம் பண்ணது செரியா?"ன்னு.
இப்பத்தாங் கார்த்தேசு அத்தான் எதெ கேக்குதுன்னு தெரியாம கொழம்ப ஆரம்பிச்சாரு சுப்பு
வாத்தியாரு.
"பங்காளிப் புள்ளீயோளா இருந்துகிட்டு
பேச்சு வார்த்தெ யில்லாம கெடக்குதீயே! நாமளும் சொல்லிப் பாத்துட்டேம். யாராச்சும்
ஒருத்தரு எறங்கித்தாம் வந்தாவணும். யாரு எறங்குறதங்றதுல கெளவரம் பாத்துட்டு நீக்குதீயே?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அத்து யண்ணன் நமக்கு. நாம்ம தம்பித்தாம்.
எறங்கிப் போறதுல எந்தப் பெரச்சனையும் யில்ல மாமா. நமக்குப் பக்கத்துல ப்ளாட்டுதாங்
சந்தானத்தோடது. அதெ விக்குறப்ப நம்மகிட்டெ ஒரு வார்த்தெ சொல்லிருந்தா நாம்ம வாங்கிப்
போட்டுருப்பேம்லா! யிப்போ பாரு யாருகிட்டெயோ வித்துட்டு அது பாட்டுக்குப் போயிட்டு.
பக்கத்துல அதெ வாங்கி வந்தவெம் எடைஞ்சலா இருக்காம் நமக்கு!"ன்னுச்சு கார்த்தேசு
அத்தான். அதெ கேட்டதுக்குப் பெறவுதாம் கார்த்தேசு அத்தான் எதெப் பத்திச் சொல்ல வருதுங்றது
சுப்பு வாத்தியாருக்கு முழுசா வெளங்குனுச்சு.
"ஏம்டாம்பீ! யிப்போ போட்டு பழையக்
கதெயெ கெளறிக்கிட்டு? கலந்துப் பேசிக்குறாப்புலயா நடந்துகிட்டீயே? அவ்வேம் கால்ல புண்ணு
வந்து கெடந்ததுக்கு நீந்தாம் காரணங்றேம். பெரிய யத்தானோட சாவுக்கு சின்ன யத்தாம் வர்றாம
இருந்ததெ இன்னிக்கு வரைக்கும் சொல்லிக் காட்டுறாம். அதுக்குல்லாம் நம்மாள எந்த வெளக்கத்தையும்
சொல்ல முடியல. எதாச்சும் சொன்னாலும் ஏத்துக்கிட மாட்டேங்றாம். என்னவெல்லாமோ நடந்துப்
போச்சு. இதுக்கு மருந்துன்னு ஒண்ணு கெடையாது. காலந்தாம் இருக்குற ஒரே மருந்து. கொஞ்ச
காலம் பொறுமையா அமைதியா இருக்குறதெ தவுர வேற ன்னா மருந்து இருக்குச் சொல்லு? எத்தனெ
காலம் பிரிஞ்சிக் கெடக்க முடியும்? சொந்தம்ன்னா நெரந்தரமா பிரிஞ்சும் கெடக்க முடியாது,
நெரந்தரமா சேந்தும் இருக்க முடியாது. பிரிவும், ஒறவும் மாறி மாறித்தாம் வரும். அதுவா
ஒட்டிக்கிறப்போ ஒட்டிக்கிட்டா தண்ணியில விழுந்த விரிசலப் போல விரிசல் தெரியாம ஒட்டிக்கிடும்.
நாமளா ஒட்டி வெச்சா கண்ணாடியில விழுந்த விரிசல ஒட்ட வெச்சாப்புலத்தாம். பாப்பேம். காலம்
அப்பிடியேவா போயிடப் போவுது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"சாவுல சொந்தம்ங்க சேரும்ன்னு கேள்விப்பட்டிருக்கேம்
மாமா! பிரிஞ்சிப் போனது நம்ம சொந்தம்தாம் மாமா! சேராதுன்னு நெனைச்சிருந்த வேலங்குடி
விருத்தியூரு ஒறவெல்லாம் சாவுல சேந்தப் பெற்பாடு, பிரியாதுன்னு நெனைச்சிருந்த வேலங்குடிக்குள்ள
ஒறவுகப் பிரிஞ்சிடுச்சே மாமா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
"ஏம்ங்க அவுகளே கலியாணங் காட்சி முடிஞ்சி
வந்திருக்காகவோ. அவுகள்ட்டப் போயி அழுகாச்சிய வெச்சிட்டு இருக்கீயளே?"ன்னுச்சு
நீலதாட்சி அத்தாச்சி.
"அதெ வுடுடியம்மா! சொந்தம் பந்தம்ங்றது
இப்பிடி ஒண்ணுக்குள்ள ஒண்ணு கலந்துகிட்டு பேசி ஆத்திக்கிட்டாதானடியம்மா! அதுவும் கூடாதுன்னா
எப்பிடி? சொல்லட்டும் வுடு. மனசுல பாரமா எதுவும் இருக்கப்படாது. அப்பிடி யிருந்தா
குடும்பத்துல பெரியவங்கன்னு நாம்மல்லாம் இருக்குறதுல அர்த்தமே இருக்காது!"ன்னுச்சு
வெங்கு.
"மவ்வேம் ஒரு பொண்ணோட நிக்குறானே!
பேத்தி மட்டும் போதுமா? பேர்ரேம் ஒருத்தம் வேண்டாமா?"ன்னுச்சு அதெ மாத்துறாப்புல
நீலதாட்சி அத்தாச்சி.
"நமக்கும் ஆசெதாம். போவாத கோயிலு
கெடையாது. தண்ணி தண்ணியா மொண்டு எல்லா சாமி மேலயும் ஊத்தியாச்சு. அதுக்கு மேல நாம்ம
ன்னாடியம்மா பண்ணுறது? அவுக அவுக முடிவு பண்ணிச் செஞ்சாத்தாம் உண்டு!"ன்னுச்சு
வெங்கு.
"ஏம்டாம்பீ! ஆசைக்கு பொண்ணு ஒண்ணு
மட்டும் போதுமா? ஆஸ்திக்கு ஒரு ஆம்பளெ புள்ள வாணமா?"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி
விகடுவெப் பாத்து.
"ஆசைக்கும் ஒண்ணுதாம். ஆஸ்திக்கும்
ஒண்ணுதாம். அரசாங்கம் என்னத்தெ சொல்லுது? நாமிருவரு நமக்கு ஒருவர்தானேன்னுத்தாம் சொல்லுது.
நாட்டுல இருக்குற மக்கா போதும். நாமளும் எதுக்குப் பெருக்கிக்கிட்டு?"ன்னாம்
விகடு.
"ஆம்மாம் இவ்வேம் ஒண்ணுத்தெ கூடுதலா
பெத்துக்கிறதாலத்தாம் நாட்டுல எண்ணிக்கெ கூடிடுதாம்!"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
"யிப்பிடித்தாம் யத்தாச்சி! ஒவ்வொருத்தரும்
பெத்திக்கிறப்போ ரண்டு மடங்கா ஆயிடுது! சனத்தொகெ கூடிப் போயிடுது!"ன்னாம் விகடு.
"மாப்ளேகிட்டெ பேசி மீள மிடியாது!
வுட்டுப்புடு!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான். பேசிக்கிட்டெ இருந்ததுல மத்தியானச்
சாப்பட்டுக்கு நேரமாயிட்டு இருந்துச்சு. ராமு அத்தானோட பொண்ணுக வந்து கார்த்தேசு
அத்தானோட வூட்டுக்கு வெளியில எட்டிப் பாத்துச்சு. அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல சுப்பு
வாத்தியாரு சொல்லிட்டுக் கெளம்புனாரு. கெளம்புறப்ப கார்த்தேசு அத்தானும், நீலதாட்சி
அத்தாச்சியும் பவ்வுப் பாப்பாவுக்கு பணத்தெ வெச்சிக் கொடுத்ததுங்க. அதெ வாங்கிட்டு
மலர் அத்தாச்சி வூட்டுக்கு வந்தப்போ ஏழு குடும்பத்து சனங்களும் சாப்புட தயாரா இருந்துச்சுங்க.
எல்லாரும் வரிசையா ஒரே எடத்துல உக்காந்து சாப்புடுறதுல எம்மாம் சந்தோஷங்றது அப்பிடி
உக்காந்து சாப்புடுறப்பத்தாம் தெரியுது.
"யிப்பிடித்தாம் மாமா! ஞாயித்துக்
கெழமென்னா மலருக்கா வூட்டுக்கு வந்து கறிய வாங்கிப் போட்டு சமைச்சி ஒண்ணா சாப்புட்டுப்புட்டுக்
கெளம்புறது! யப்பா இருந்துச்சுன்னா இதெ பாத்துட்டு ரொம்ப சந்தோஷப்படும்!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
யாராலயும் இலையில வெச்சதெ முழுசா சாப்புட
முடியாத அளவுக்கு நெறையச் சாப்பாடு. ஆனாலும் எலையில எதுவும் மிஞ்சிடக் கூடாதுன்னு சனங்க
ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ணப் பாத்தச் சந்தோஷத்துல சாப்புட்டுச்சுங்க. ஒவ்வொண்ணு வயித்துக்குள்ளயும்
ரண்டு ஆளு, மூணு ஆளு சாப்புடுற சாப்பாடு போயிருந்துச்சு. பிரியாணியோட, கறியில கொழம்பும்
பண்ணியிருந்துச்சுங்க. பிரியாணியில கொஞ்சம் சாப்புட்டா தெவட்டிடும். சோறும் கொழம்பும்
அப்பிடித் தெவட்டிடாது. எம்மாம் வாணும்ன்னாலும் சாப்புட்டுகிட்டெ இருக்கலாம். அதுக்காகவே
ரண்டுமே பண்ணிருந்துச்சுங்க. பெருவேலதாம் நடந்திருந்துச்சு. சாப்புட்டு முடிச்சதும்
பாலாமணியப் பத்தி பலவெதமான பேச்சுக ஆரம்பிச்சது.
"நம்ம வகையில யாருட்டேயும் மாப்ளே
பையம் ஒட்டியே பேசலயே சித்தப்பா! ஏம்ன்னே புரியல. நாமளும் நெருங்கிப் போயிப் பேசிப்
பாத்துட்டேம்! ரொம்பவே முறுக்குனாப்புல! செரின்னு வுட்டுப்புட்டேம்!"ன்னுச்சு
பாலு அத்தான்.
"நாம்ம கூட விருந்துக்குக் கூப்ட்டேம்
எப்ப வாரீயேன்னு? பதிலெ ஒண்ணும் சொல்லல மாமா! எதாச்சும் ஒரு வார்த்தெ சொன்னாத்தாம்
என்னாவாம்? மதிச்சித்தானே கூப்புடுறேம்!"ன்னுச்சு ராமு அத்தான்.
"நமக்கு மின்னாடியே மாப்ளே பையனெத்
தெரியும் மாமா! நமக்குச் சுகரு வந்தப்போ அஞ்ஞத்தாம் அரும்பாக்கம் ஆஸ்பிட்டலுக்குப்
போனேம். இந்தப் பையந்தாம் மருந்துல்லாம் கொடுத்தாப்புல. ஒண்ணும் சரியாவல. செரித்தாம்ன்னு
பெறவு இங்கிலீஷ் வைத்தியலத்துலயே காட்டிக்கிட்டேம். யப்போ நமக்குத் தெரியாது பையெம்
நம்ம வகையின்னும், மாமாப் பொண்ணக் கட்டிக்கிட்டுச் சொந்தம் ஆவப் போறாம்ன்னும்!"ன்னுச்சு
மாரி அத்தாம்.
"சொல்லிட்டுப் போ மாமா மாப்ளிக்கிட்டெ!
ஒரு நாளு விருந்து வெச்சி அசத்திப்புடணும். டாக்கடர்ரா இருக்குறதால எல்லா வூட்டுக்கும்
ஒவ்வொரு நாளு வர்றது கஷ்டமா இருந்தாலும் மலரு அத்தாச்சி வூட்டுல வெச்சி எல்லாருமா
சேந்து ஒரே நாள்ல வெச்சி முடிச்சிப்புடுவேம்!"ன்னுச்சு சுப்புணி அத்தான்.
"மாமாவோட மருமவ்வன்னா ச்சும்மா வுட்டுப்புடுவமா?
நல்லாவே கவனிச்சிட மாட்டேம்!"ன்னுச்சு கலா அத்தாச்சி.
"பையந்தாம் மாமா கொஞ்சம் வயசானாப்புல
நமக்குப் பட்டுச்சு. மித்தபடி வேல பரவால்ல. சென்னையில இருக்குறதால நாமல்லாம் இருக்குறதால
பாத்துக்கிடுறேம்!"ன்னுச்சு மலரு அத்தாச்சி.
பேச்செல்லாம் முடிஞ்சி சாயுங்கால காப்பித்
தண்ணியையும், பலவாரத்தையும் சாப்புட்டு முடிச்சா, ஏழு மணி வாக்குல இட்டிலியச் சுட்டு
அதுக்குக் கறிக் கொழம்ப வெச்சி ராத்திரிச் சாப்பாட்டையும் முடிக்க வெச்சதுங்க. ராத்திரி
ஊர்ர நோக்குன பிரயாணங்றதால சாப்பாட்டுக்காக அங்க இங்க நின்னு செருமப்பட வாணாம்ன்னு
அப்பயே சாப்பாடு ஆனுச்சு. மத்தியானம் சாப்புட்ட சாப்பாடே செரிய செரிக்காம, அதலு சாயுங்கால
பலவாரமும் சேந்து நின்னதால யாரும் ராத்திரி வெச்ச இட்டிலியில நெரம்ப சாப்புடல. ரண்டு,
மூணு, நாலுன்னு அதிகபட்சமா நாலத் தாண்டல. பேருக்குச் சாப்புட்டு கெளம்புனுச்சுங்க.
சந்தானம் அத்தான் கார்ல வெச்சி சுப்பு வாத்தியாரு குடும்பத்தெ கோயம்பேட்டு பஸ் ஸ்டாண்டுல
கொண்டாந்து பஸ்ஸூ ஏத்தி வுட்டுச்சு. பஸ்ஸூ ஏறி கெளம்புறப்ப சுப்பு வாத்தியாரு சந்தானம்
அத்தாங்கிட்டெ ஒரு வார்த்தெ சொன்னாரு, "அடிக்கடி அந்தப் பக்கம் போறப்போ போயி
பாத்துக்கடாம்பீ! ஒன்னய நம்பித்தாம்ம் இஞ்ஞ விட்டுருக்கேம்!"ன்னு.
"நீயி ஒண்ணும் கவலெப்படாம போயி வா
மாமா! நாம்ம பாத்துக்கிடறேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
பஸ்ஸூ கெளம்புனுச்சு. செய்யு சரியா அப்போ
விகடுவுக்குப் போன அடிச்சா. மணி அப்போ ஒம்போது இருக்கும். "கெளம்பிட்டேம் யங்கச்சி!"ன்னாம்
விகடு.
"இஞ்ஞ வூட்டுக்கு வந்துட்டுப் போயிருக்கலாம்ண்ணே?"ன்னா
செய்யு.
"மே மாசத்து லீவ்ல அஞ்ஞ வந்துதாம்
தங்குவேம். கவலெப்படாதே. மச்சாம் வந்தாச்சா?"ன்னாம் விகடு.
"ல்லண்ணே! நேத்திதாங் பாத்தீயே கதெயே!"ன்னா
செய்யு.
"பயப்பட ஒண்ணுமில்லே. பாதுக்காப்பான
எடந்தானே. புஸ்தகங்க நெறைய யிருக்கு. படி! டிவிப் பொட்டி யிருக்கு. பாரு! ஊஷாரா யிரு!
நாம்ம ஊரு சேந்தப் பெற்பாடு அடிக்கிறேம். சாப்புட்டீல்லா?"ன்னாம் விகடு.
"அவுக வர்றாம நாம்ம எப்பிடிச் சாப்புடுறது?"ன்னா
செய்யு.
"செரிப் பாத்துக்கோ யங்கச்சி! வெச்சிடுறேம்!"ன்னாம்
விகடு. கோயம்பேட்டுல ஏறுன பஸ்ஸூ வடபழனிய தாண்டிட்டு இருந்துச்சு. பஸ்ஸூக்குள்ள எரிஞ்சிட்டு
இருந்த வெளக்குக அணைஞ்சி, வெளியில வெளக்குகளோட பிரகாசத்துல சென்னைப் பட்டணம் பளீர்ன்னு
தெரிஞ்சிது. தாம்பரம் வரைக்கும் ஒரு சீரான வேகத்துலயே போன பஸ்ஸூ, அதுக்குப் பெறவு
வேகமெடுக்க ஆரம்பிச்சிச்சு. எதோ ஒரு கங்காணாத கட்டட காட்டுக்குள்ளார தங்காச்சிய தனிச்சி
வுட்டுட்டுப் போறாப்புலயே இருந்துச்சு விகடுவுக்கு.
*****
No comments:
Post a Comment