19 Sept 2020

மாப்பிள்ளை முறுக்கு!

மாப்பிள்ளை முறுக்கு!

செய்யு - 569

            நாலு மணிக்கு அறையிலேந்து வெளியே வந்த பாலாமணி மேல, குளிச்ச முடிச்ச சோப்போட வாசனை வீசுனுச்சு. சாப்புடுறதுக்கு மின்னாடிதானே குளிச்சாம்ன்னு நெனைக்குறதுக்குள்ள திரும்ப அறைக்குள்ளப் போயி கிளினிக் கெளம்புறதுக்குத் தயாரா வந்தாம். டக் இன் பண்ண பெல்ட்ட தாண்டி தொப்பை லேசா எட்டிப் பாத்துச்சு. செய்யு சமையக்கட்டுக்குப் போயி காப்பியோட வந்து நின்னா. அதெ வாங்கிக் குடிச்சவேம், "வர்றதக்கு எட்டு மணிக்கு மேல ஆவும்! போனடிச்சா ஒடனே வந்து கேட்டைத் தொறந்துடணும். வெளியில வெயிட் பண்ணிட்டு நிக்குறாப்புல இருந்தா செம கோவம் வந்துடும்!"ன்னாம். செய்யு தலைய ஆட்டிக்கிட்டா. ஒரு சில சாமானுங்கள எடுத்து ஒரு பையில போட்டுக்கிட்டு வெளியில கெளம்புனாம்.

            எல்லாரும் எழுந்து நின்னாங்க. யாருகிட்டேயும் பாலாமணி பேசல. யாருகிட்டேயும் போயிட்டு வர்றேம்ன்னு ஒரு வார்த்தெ கூட சொல்லல. கிளினிக்குக்குக் கூப்புடுவாம்ன்னு விகடு எதிர்பார்த்தாம். கூப்புடல. பாலாமணி போவப் போவ செய்யு மின்னாடிப் போயி கேட்டத் தொறந்து விட்டா. விகடுவும் பின்னாடியே போனாம். கீழே போறப்பயாவது பேசுவாம்ன்னு ஒரு நெனைப்பு. பாலாமணி பேசாமலே போயி வண்டிய ஸ்டார்ட் பண்ணாம். போறப்ப மட்டும், "போய்ட்டு வாங்க மச்சாம்!"ன்னாம் விகடு. அதெ கண்டுக்கிடாதவம் போல அவ்வேம் பாட்டுக்குப் போயிட்டே இருந்தாம் பாலாமணி. சுசூகி அக்செஸ் வழக்கத்தெ வுட அதிகப் பொகையக் கக்குறாப்புல தோணுனுச்சு விகடுவுக்கு.

            கேட்டுகள ஒவ்வொண்ணா பூட்டிக்கிட்டு மேல வந்தப்போ விகடு கேட்டாம், "ஒண்ணும் கோவப்படுறாப்புல இங்க எதுவும் நடக்கலயே. காரு வாங்குறதப் பத்தி முடிவு பண்ணல. பணம் பத்திரமா பாங்கியில இருக்குன்னு சொன்னாலே முடிஞ்சிப் போயிடுச்சு!"ன்னாம் விகடு. "அத்து அவுங்களுக்குப் பிடிக்கலண்ணா! வுட்டுடு!"ன்னா செய்யு. "ஒனக்குமா?"ன்னாம் விகடு. "நீயுமாண்ணே? நம்மால ரண்டுப் பக்கமும் அடி வாங்க தெம்பில்ல. ஒரு பக்கத்து அடியோட நிறுத்திக்கிடலாம்ன்னு நெனைக்கேம். புரிஞ்சிப்பேன்னு நெனைக்கேம் யண்ணே!"ன்னாம் செய்யு.

            உள்ளார வந்ததும் வெங்கு சொன்னிச்சு, "சந்தானம் அதெப் பத்தி அவ்சரப்பட்டு கேட்டிருக்க வேண்டியதில்ல!"ன்னு.

            "அவ்வேம் ஆரம்பத்துலேந்து கேட்டுட்டுத்தாம் இருந்தாம். நமக்கும் ன்னா பதிலச் சொல்றதுன்னு புரியல. ன்னா நடக்குதுன்னு தெரிஞ்சாத்தானே பதிலச் சொல்ல முடியும். ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலச் சொல்றாங்களே தவுர ஒரே பதிலா சொல்லலையே. ஒம் பாக்குக்கோட்டைச் சின்னம்மாவே கேட்டா புக்கிங் பண்ணி வாரப் போவுதுன்னு பதிலு. சித்தப்பாவ கேட்டா கலியாண அலமலப்புல முடியலன்னு பதிலு. யிப்போ ஒரு பதிலப் பாத்தா காரு வாங்கப் போறதில்லன்னு அடுத்தப் பதிலு. கேக்குறவங்க கேக்கத்தாம் செய்வாங்க. அதுக்கு ஒத்தப் பதிலச் சொல்றாப்புல போயிட்டா இந்த வெவகாரம் மேக்கொண்டு எழும்பப் போறதில்ல! இத்து இப்பிடி ஆவும்ன்னு எதிர்பாக்கல. எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோங்ற மாதிரிக்கி யாரு மனசுல ன்னா இருந்து பொறப்படும்ன்னு புரிய மாட்டேங்குது. ஆன்னா சந்தானத்துகிட்டெ இன்ன மாதிரிக்கி விசயம்ன்னா கேக்கப் போறதில்ல. அதெப் பத்தி தெளிவா அவ்வேங்கிட்டெ நாம்ம எதயும் சொல்லங்றதெயும் யோஜனையில வெச்சிக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "சந்தானம் கேட்டதுல தப்பு ஒண்ணும் இல்லீங்றீங்களா?"ன்னுச்சு வெங்கு.

            "சந்தானம் அத்தானுக்குச் சந்தேகமா இருக்கு, மாமாவ ஏமாத்திட்டு இருக்காங்களோன்னு? அதுக்கு ஏத்தாப்புலத்தாம் அத்து நாசுக்கா கேட்டிச்சி. ஒண்ணும் குத்திக் காட்டுறாப்புலயோ, வேணுக்குமுன்னு கேக்குறாப்புலயே கேக்கல. எதார்த்தமா கேட்டுச்சு. வாசகம்லாம் செரியாத்தாம் இருந்துச்சு. எதார்த்தமா பதிலச் சொல்லிருந்தா போதும். கொஞ்சம் காட்டமா பதிலச் சொன்னதுலயும் தப்பில்ல. அதுக்குப் பெறவு கோவப்பட்டு அறைக்குள்ளப் பூந்து பேசுனதுதாங் ஏம்ன்னு புரியல? போறப்ப நம்மகிட்டெ ஒரு வார்த்தெ கூட பேயாம மொகத்தத் தூக்கி வெச்சிக்கிட்டுப் போறதும் ஏம்ன்னே புரியல? நமக்கே யிப்போ கொழப்பமாத்தாம் இருக்கு. ஒண்ணும் வெளங்க மாட்டேங்குது!"ன்னாம் விகடு.

            "யப்பா! அத்து நீஞ்ஞ எஞ்ஞளுக்குக் காரு வாங்குறதுக்குன்னுக் கொடுத்த பணந்தானே. அதுக்குக் கார்ர வாங்குறோம், வாங்காம போறேம். அதெ அப்பிடியே வுட்டுப்புடுங்க. நமக்கொண்ணும் கார்ல போவணும்ன்னுல்லாம் இஷ்டமில்லே. நடத்திக் கூட்டிட்டுப் போனாலும் சம்மதந்தாம். இத்த இத்தோட வுட்டுப்புட்டா தேவலாம். நீஞ்ஞல்லாம் பேசுறதெப் பாத்தா பெரிய ஆராய்ச்சியே பண்ணுறாப்புல இருக்கு!"ன்னா செய்யு.

            "அத்துச் செரி! கலியாணம் கட்டுனவங்கலாம் காரு இருந்தாத்தாம் சந்தோஷமா இருப்பம்ன்னா எப்பிடி? எப்பிடியோ புருஷம் பொண்டாட்டி நீஞ்ஞ ஒத்துமையா சந்தோஷமா இருந்தா போதும். நாஞ்ஞ ன்னா அப்போ இப்போன்னு எட்டிப் பாத்துட்டுப் போற ஆளுங்க. ஒரு ஆத்திர அவ்சரம்ன்னு ஓடியாற ஆளுங்கத்தானே. இனுமே ஒங் குடும்பத்தெ நீந்தாம் பாத்துக்கிடணும்! இந்தக் காரு விசயத்தெ இத்தோட நிப்பாட்டிப்புடுவேம். நீஞ்ஞ காரு வாங்கிட்டாலும் செரித்தாம். யில்ல அந்தக் காசியில ப்ளாட்ட வாங்கிட்டாலும் செரித்தாம். யில்ல பாங்கியிலப் போட்டுக்கிட்டு அதுல வர்ற வட்டிக் காசிக்கு குடும்பத்துக்குச் சிலவெ பண்ணிட்டாலும் செரித்தாம். அதெ ஒனக்குன்னு செஞ்சாச்சு. அதெ நீஞ்ஞ எப்பிடித் தோதோ அப்பிடிப் பண்ணிக்கிடுங்க. யாராச்சும் கேட்டா அந்தக் காசியப் பாங்கியிலப் போட்டு வட்டிய எடுத்துச் சிலவு பண்ணிக்கிறதா முடிவு பண்ணிட்டதா இனுமே சொல்லிக்கிடுதேம்! அப்பத்தாம் இந்தப் பேச்சு அத்தோட முடிஞ்சிப் போவும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வேற ஒண்ணும் சொல்லலியே யம்பீ?"ன்னுச்சு வெங்கு.

            "அவ்ளோதாங். அந்தப் பேச்சு முடிஞ்சதும் தூக்கம் எஞ்ஞயிருந்து வந்திச்சோ தெரியல. தூங்கி எழும்பி ஒரு குளியலப் போட்டாச்சு. கெளம்பியாச்சு."ன்னா செய்யு.

            "நாம்ம கூட ராத்திரிக்கிச் சந்தானம் அத்தானோட வூட்டுக்குப் போவ வாணாம் மாமா! ஒருத்தரு கோவப்படுறாப்புல ஒரு காரியத்தெ ஏஞ் செய்யணும்? இஞ்ஞ தங்கிட்டுக் காலங் காத்தால நேரா திருவேற்காட்டுக்குப் போயிட்டு அப்பிடியே கோயம்பேட்டுக்குப் பஸ்ஸப் பிடிச்சிக் கெளம்பிடலாம்!"ன்னா ஆயி.

            "அதுவும் செரித்தாம். அப்பிடின்னா சந்தானத்துக்கு ஒரு போன போடு. தகவல சொல்லிப்புடணும். எப்பிடிச் சொல்லணும்ன்னா மாப்புள கெளம்புக் கூடாதுன்னு பிடிவாதம் பண்ணுறதாத்தாம் சொல்லணும். ல்லன்னா அவ்வேம் வேற கோவிச்சுக்குவாம். ஒரே நேரத்துல ரண்டு எடத்துல கோவத்தெ உண்டு பண்ணிக்கிடக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. விகடு சந்தானம் அத்தானுக்குப் போனப் போட்டு சுப்பு வாத்தியாரு கையில செல்போனக் கொடுத்தாம்.

            "அல்லோ யாரு சந்தானம் பேசுறதா? நாம்ம மாமா பேசுறேம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்ம எதிர்பாக்கல மாமா இவ்ளோ ஆளு சூடாவாம்ன்னு. அதாங் அதுக்கு மேல நின்னு நெலமெய கெடுத்துட வாணாம்ன்னு வேல இருக்குறதா சொல்லிக் கெளம்பிட்டேம். நீயி ஒண்ணும் தப்பா நெனைச்சுக்கலீயே மாமா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ஒமக்கு எதுவும் மனவருத்தமா போயிடுச்சான்னு நாம்ம அடிச்சா, நமக்கென்ன வருத்தம்ன்னுல நீயி கேக்குறே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நம்ம வூட்டு மாப்ளே! நமக்கென்ன மாமா வருத்தம்? மாப்ள முறுக்குன்னு சொல்லுவாங்கல. இருக்கத்தானே செய்யும். கொஞ்ச நாளு அப்பிடித்தாம் ஓடும். பெறவு மாமா ராத்திரி கூட நீயி இஞ்ஞ வர்ற வாணாம். அஞ்ஞயே இரு. காத்தால நாம்ம கார்ர அனுப்புறேம். அஞ்ஞயிருந்து நேரா திருவேற்காடு வந்துப்புடு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "நாம்ம கூட அதத்தாம்டாம்பீ நெனைச்சிட்டு இருந்தேம். ஆன்னா நாளைக்கி வர்றப்போ அஞ்ஞ மதுரவாயல் வர்றாம‍ நேரா திருவேற்காடு வந்தா சரிபெட்டு வருமா? அஞ்ஞ வந்துட்டு தலையக் காட்டிட்டு திருவேற்காடு போயிட்டா ன்னா? போற வழிதானே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நானும் தனமும் புல்லட்டுல திருவேற்காடு வந்துடுறேம். மவளையும் வண்டிய எடுத்துட்டு வர்ற சொல்லிடுறேம். நாளைக்கு எல்லாரும் திருவேற்காட்டுலத்தாம் கேம்ப். அதாங் சொல்றேம்."ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அப்பிடின்னா செரித்தாம்! வெச்சிடட்டுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அத்தோட கேட்டுட்டு செல்போன விகடுகிட்டெ கொடுத்தாரு. "அதல்லாம் வெவரமான பயெ. மனுஷங்க எடெ போடுறதுல ரொம்ப பெரிய ஆளு. அதாலத்தாம் பெரிய ஆளா இருக்காம். அதாங் நாளைக்கி கார்ர அனுப்புறேம்ங்றாம். அதுல கெளம்பி நேரா திருவேற்காட்டுக்குப் போயிடலாங்றாம். அவனும் குடும்பத்தோட அஞ்ஞ வந்துப்புடுறதா சொல்லிட்டாம். அப்பிடியே பண்ணிக்கிடலாம்!"ன்னாரு  சுப்பு வாத்தியாரு.

            அதுவரைக்கும் வூட்டுல சேர்ந்திருந்த குப்பைய எல்லாம் செய்யு கருப்பான பெரிய பாலிதீன் பையில சேகரம் பண்ணி வெச்சிருந்தா. விகடு அதெப் பாத்தவேம், "போற வழியில ஒரு குப்பைத் தொட்டி இருக்குது. அதுல கெட்டிட்டு எதாச்சும் சாமாஞ் செட்டு வாணும்ன்னா சொல்லு. வர்றப்ப வாங்கிட்டு வர்றேம்!"ன்னாம்.

            "வெளியில கெளம்புதீயாண்ணே? ஒனக்கு ஒரு தவா கேட்டத் தொறந்து மூடணும். எரிச்சலா இருக்குண்ணே!"ன்னா செய்யு.

            "கீழேயும் மேலயும் இருக்குற மித்த சனங்கள்லாம் எப்பிடி?"ன்னாம் விகடு.

            "ஒண்ணும் வெளியில கெளம்பாதாம்ண்ணே! சொன்னாங்க அவுக! எல்லாம் டிவியே போட்டு வுட்டுக்கிட்டு அதெ பாக்குறது, திங்குறது, தூங்குறது. இதாங் வேல. ஒவ்வொரு குடும்பத்துக்கிட்டெயும் ஒரு சாவிண்ணே. அது அதுக தெறந்துக்கும் போவுமுங்க. எதையும் எதையும் கண்டுக்கிடாது போலருக்கு. சவசூன்யங்களா இருக்குதுங்க. பக்கத்துல ஒரு குடித்தனம் வந்திருக்குன்னு வந்து வெசாரிக்க மாட்டேங்குதுங்க. நாம்ம வலியப் போயிப் பேசுனாலும் ஏதோ குத்தம் செய்யுற ஆளுகளப் பாக்குறாப்புல பாக்குதுங்க. நம்ம கெராமம்ன்னா எப்பிடி இருக்கும்? பதிலச் சொல்லி மாள மிடியாது. நம்ம தாத்தம், முப்பாட்டம் வரைக்கும் சாதவத்தெ கேட்டுப்புட்டுத்தாம் சனங்க அந்தாண்ட இந்தாண்ட நவரும். இஞ்ஞ பக்கத்துல ஒரு தீவிரவாதியே கொண்டாந்து குடி வெச்சாலும் சனங்க கண்டுக்கிடாது போலருக்குங்க! எப்போ பாத்தாலும் இந்த எடமே அமைதியா, அமைதின்னா மயான அமைதியா இருக்குறாப்புல இருக்குண்ணே!"ன்னா செய்யு.

            "பட்டணம்லாம் அப்பிடித்தாம் செய்யு. கொஞ்ச நாளு அப்பிடி இருக்கும். பெறவு பழகிப் போயிடும்!"ன்னா செய்யு.

            "அதானே அம்மணமா அலையுற ஊர்ல நாம்ம மட்டும் கோவணமா கட்டிட்டுத் திரிய முடியும்? இந்த ஊரு அப்பிடில்லா இருக்கு. திருட்டு பயம் சாஸ்தியாமே? வூடு பூந்து பொம்பளைய அடிச்சிப் போட்டுல்லாம், கொன்னு போட்டுல்லாம் கொள்ளையடிச்சிட்டுப் போயிடுவானுவோளாமே?"ன்னுச்சு வெங்கு.

            விகடு அந்தக் குப்பைப் பையத் தூக்கிட்டு வெளியில கெளம்புனாம். பவ்வுப் பாப்பா ஓடியாந்தா. "நானும் வர்றேம்ப்பா!"ன்னு. அவளெ ஒரு கையில தூக்கிக்கிட்டாம். "நீயும் வர்றியா?"ன்னா ஆயியப் பாத்து. "ம்ஹூக்கும்! நமக்கு இந்தப் பட்டணமே பிடிக்கல. எப்படா ஊருக்குப் போவேம்ன்னு இருக்கு!"ன்னா ஆயி.

            "வந்து ரண்டு நாளுக்கே இப்பிடின்னா? ஒந் நாத்தனாரு இஞ்ஞத்தாம் குப்ப கொட்டியாவணும். அதெ நெனைச்சிப் பாரு!"ன்னுச்சு வெங்கு.

            "குப்ப கொட்டுற வேலையத்தாம் அண்ணந் தலையில கட்டியாச்சே!"ன்னு சிரிச்சா ஆயி.

            "நாம்ம ஒண்ணு சொன்னா, நீயி ஒண்ணுத்தெ சொல்லு!"ன்னு வெங்கு சொல்ல எல்லாம் சிரிச்சதுங்க. விகடு கெளம்புறப்ப சாவிய வாங்கிட்டாம். "போயி திரும்புற வேலத்தானே. நாமளே தொறந்து பூட்டுகிட்டு, திரும்ப வார்றப்ப தொறந்து பூட்டிட்டு வந்துடுறேம்!"ன்னாம்.

            "இத்துக் கூட நல்ல யோஜனையா இருக்கு. இதெப் போல அவுகளுக்கு ஒரு சாவிய ஏற்பாட்டப் பண்ணிக் கொடுத்துப்புட்டா தொறந்து வுட மேலயும், கீழேயும் அலைய வேண்டியதில்லா!"ன்னா செய்யு.

            "அப்பிடில்லாம் பண்ணிப்புடாதடி. ஒம் புருஷனே கோவக்கார குருத்தா இருக்காம். அவ்வேம் போனப் பண்ணா ஓடிப் போயி தொறந்து வுட்டு உள்ளார கொண்டு வா! ஒமக்கும் மேல கீழே எறங்கி ஒடம்புக்கு ஒரு வேலைப்பாடா இருக்கட்டும்!"ன்னுச்சு வெங்கு.

            சாவிய வாங்கிட்டு, பவ்வு பாப்பாவ ஒரு கையிலயும், குப்பைப் பைய இன்னொரு கையிலயும் கெளம்புனாம் விகடு. போறப்ப ஒரு தவா, "எதாச்சும் சாமாஞ் செட்டுக வாஞ்ஞணுமா?"ன்னாம்.

            "ஒண்ணும் வாஞ்ஞ வேண்டியதில்லா. அம்மாம் சாமானுகள யப்பா வாங்கியாந்து குவிச்சி வெச்சிருக்கு!"ன்னா செய்யு.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...