16 Sept 2020

விதிகளுக்காகத்தான் மனிதர்களா?

விதிகளுக்காகத்தான் மனிதர்களா?

செய்யு - 566

            காய்கறிகள வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு பாலாமணி அப்பிடியே விகடுவெ அழைச்சிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்குப் போனாம். "மத்தியானம் நேரத்துக்குச் சாப்புட வந்திடுங்க!"ன்னு சொல்லிட்டு செய்யு கறிகாயி பைய்ய வாங்கிட்டு உள்ளாரப் போனா. விகடுவும், பாலாமணியும் போறப்ப ஏழ்மையான மக்கள் வசிக்கிற எடத்தெ கடக்குறாப்புல இருந்துச்சு. அந்த எடத்தெ கடந்தப்போ சொன்னாம் பாலாமணி, "இதாங் சேரிங்றது. எடம் எம்மாம் பஞ்சண்டா இருக்குப் பாத்தீயளா மச்சாம்? இந்த மாதிரி எடம்லாம் சுத்தப்படாதுன்னுத்தாம் பன்னெண்டாயிரம் போனாலும் பரவாயில்லன்னு வாடவைக்கி எடத்தெ அஞ்ச எடுத்திருக்கேம். அந்த எடத்துக்காவே வாடகெ அப்பிடி. இஞ்ஞயும் அப்பிடி வூடுக உண்டு. இஞ்ஞ எடுத்திருந்தா ஆறாயிரம் கூட ஆயிருக்காது. பட் பஞ்சண்டா இருக்கும்! ஐ டோன்ட் லைக் இட்! செய்யுவெ டீசன்டான ஒரு நல்ல எடத்துல வெச்சிப் பாத்துக்கிடணும்ன்னு நெனைக்கிறேம்! ஸோ அப்பிடி! பணத்தெப் பாக்கல!"ன்னாம். பாலாமணி விகடுவோட ரொம்ப சகஜமா பேச ஆரம்பிச்சாம். அது ஒரு பெரிய அதிசயமா இருந்தது அன்னிக்கு.

            "வாடவெ பாதிக்குப் பாதி மிச்சமாவுதுன்னா இஞ்ஞயே எடுத்திருக்கலாமே மச்சாம்!"ன்னாம் விகடு.

            "வாட்?"ன்னாம் பாலாமணி ‍அதிர்ச்சியடைஞ்சாப்புல.

            "தேவையில்லாம அந்த எடத்துக்குப் போயி அம்மாம் பணத்தெ கொடுக்க வேண்டியதில்லே!"ன்னாம் விகடு.

            "அந்த எடத்தெச் சுத்தி இருக்குறவங்கல்லாம் யாருன்னு தெரியுமா மச்சாம்? எல்லாம் ஏ கிரேடு ஆபிசர்ஸ். ரொம்ப டீசன்ட் பீப்புள்ஸ். ஏரியா பக்கா சேப். ஆல் அன்டர் ஒன் ரூப். எதுக்காகவும் வெளியில வர வேண்டியதில்லெ. தப்பான நெனைப்போட ஒரு துரும்பு கூட உள்ள நொழைய முடியாது!"ன்னாம் பாலாமணி.

            "அந்த எடத்துக்கும் இந்த எடத்துக்கும் ஆயிர அடி தூரம் இருக்குமா? ரண்டு தெரு கூட இல்லியே?"ன்னாம் விகடு.

            "பட் சனங்க? டீசன்ட் அன்ட் பஞ்சன்ட்! கம்பேரிசன் பாக்கணும்!"ன்னாம் பாலாமணி.

            "அஞ்ஞ இருக்குறவங்களும் மக்கதாம். இஞ்ஞ இருக்குறவங்களும் மக்கதாம். இஞ்ஞயாவது ஆபத்துக்கு ஓடி வர்றதுக்குப் பக்கத்துல ஆளுங்க அஞ்ஞயும் இஞ்ஞயும் இருக்காங்க. அஞ்ஞ மயக்கம் அடிச்சி வுழுந்து கெடந்தா கூட ரண்டு கேட்டுகளோட பூட்டுகள ஒடைச்சி, பெற்பாடு கதவெ ஒடைச்சித்தாம் உள்ளார வர்ற முடியும். ஒரு பேச்சுத் தொணைக்குக் கூட ஆளிருக்காது போல!"ன்னாம் விகடு.

            "பட் மச்சாம்! சிட்டியில அதெ எதிர்பாக்கக் கூடாது. சேப்! சேப்டி! அதாங் முக்கியம்! அதுல வெளையாடக் கூடாது. சிட்டியோட இன்டீசன்ட் பேச்சையெல்லாம் கேட்டதில்லலா. ரொம்ப ராவா இருக்கும். ஒத்து வாராது. அந்தப் பஞ்சன்ட்ட இஞ்ஞ கேக்கலாம்!"ன்னாம் பாலாமணி. விகடு ஒண்ணும் பேசாம இருந்தாம்.

            "ஒண்ணும் பேச்சக் காங்கலயே?"ன்னாம் பாலாமணி.

            "இஞ்ஞ வூட்டப் பாத்திருந்தா ஆஸ்பத்திரிக்கான தூரம் கூட கொறைஞ்சிருக்கும்ன்னாம்!" விகடு.

            "மச்சானுக்கு இன்னும் சிட்டியப் பத்தி புரியல. கொஞ்சம் அசந்தா ஆளத் தூக்கிட்டுப் போயி கிட்டினிய சட்டினிப் பண்ணி வித்துடுவானுவோ! ரொம்ப சூதானமா இருக்கணும். இனுமே அடிக்கடி சிட்டிக்கு வர்றப்ப அது மச்சானுக்குப் புரியும்!"ன்னாம் பாலாமணி.

            "அவுங்க கூடயும் யாராச்சும் வாழ்ந்துதானே ஆவணும்!"ன்னாம் விகடு.

            "யாரு காவாளிப் பயலுவோ, மொள்ளமாரிங்க, முடிச்சவிக்கிங்க கூடயா? வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங் மச்சாம்! ரொம்ப இன்னோசன்ட் மச்சாம் நீஞ்ஞ! மொதல்ல ஒஞ்ஞ திங்கிங் ஆப் வேய மாத்துங்க!"ன்னாம் பாலாமணி. அதுக்குள்ள அரும்பாக்கம் ஆஸ்பிட்டல் வந்துச்சு. அங்கங்க வித்தியாசமான நோயாளிங்களா நின்னாங்க. சில பேத்தோட தோல் ஏம் அப்பிடி இருக்குது? கையி, காலு எல்லாம் ஏம் வித்தியாசமா கெளைச்சு இருக்குன்னு புரிஞ்சிக்க முடியல. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியா, வர்மம், யோகான்னு எல்லாத்துக்குமான வைத்திய சாலைகளும் அங்க இருந்துச்சு. சித்தா வைத்தியசாலையில ஏகப்பட்ட கூட்டமா நின்னுச்சு.

            விகடு அதெ பாத்துட்டு, "அஞ்ஞ ஏம் ஏகப்பட்ட கூட்டமா இருக்கு?"ன்னாம்.

            "சுகருக்கு சித்தா மருந்து ரொம்ப எபக்ட்! பெரிய பெரிய பணக்காரனுங்களே மருந்து வாங்குறதுக்கு நிப்பானுவோ. ஆல் அட் ப்ரீ ஆப் காஸ்ட், அட் த சேம் டைம் வெரி எபக்டிவ்!"ன்னாம் பாலாமணி.

            "சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோ, யோகான்னு இருக்கே. ஒருத்தரு தனக்கான வைத்தியமாக இதுல எதெ தேர்ந்தெடுத்துக்கிறது?"ன்னாம் விகடு.

            "ஒவ்வொண்ணுத்துலயும் ஒவ்வொரு ஸ்பெஷலைசேஷன் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு பிடிச்சி இருக்கும். சாய்ஸ் தேர்ஸ். ஆயுர்வேதாவுல கூட்டம் அதிகம். சித்தாவுல சுகருக்கு மருந்து கொடுக்குற அன்னிக்கு மட்டுந்தாம் கூட்டம் அதிகம். அத்து இன்னிக்கு. மத்த நாள்ல காத்து வாங்கும். ஆயுர்வேதாவுல கான்ஸ்ட்ன்ட கூட்டம் இருந்துகிட்டெ இருக்கும்!"ன்னாம் பாலாமணி.

            "ஏம் அப்பிடி?"ன்னாம் விகடு.

            "சித்தாங்றது சக்கெ. யுனானிங்றது களி. ஓமியோங்றது பல்லி மிட்டாய். யோகாங்றது மெடிசினெ கெடையாது. மெத்தட் ஆப் லிவிங்க. ஆயுர்வேதாங்றது ஒன்லி எசென்ஸ். பெர்பெக்ட் மெடிசன். ஒலகத்துலயே பர்ஸ்ட் அறுவை சிகிச்சைன்னா ஆயுர்வேதாத்தாம். ஆயுர்வேதாத்தாம் ஒலகத்தோட மொத மருத்துவம். சித்தா, யுனானில்லாம் அதுல கலந்து கட்டி வந்துதாம். ஆல் டைம் பெஸ்ட் ஆயுர்வேதாவோட ஸ்பெஷாலிட்டி. ஆயுர்வேதத்தோட டோட்டல் பவர்ரப் பாக்க கேரளாத்தாம் போவணும். அங்க கொண்டாடுவானுங்க சேட்டன்மாருக! நாம்ம ரொம்ப பேசிட்டுப் போறேம். ஏன்னா டைம் ஆயிட்டு இருக்கு. புதுசா கலியாணம் ஆயிருக்கிறதால கொஞ்சம் ரிலாக்ஸேசன்ஸ் கொடுக்குறதெ மிஸ்யூஸ் பண்ண வாணாம்ன்னு பாக்குறேம். நாம்ம போவமா?"ன்னாம் பாலாமணி. விகடு ஒண்ணும் சொல்லாம பாலாமணி பின்னால நடந்தாம்.

            ஆஸ்பிட்டலுக்கு உள்ள நொழைஞ்சதும் உள்ளார ஒக்காந்திருந்த ஆயுர்வேதாவோட தலைமை மருத்துவருக்கு ஒரு வணக்கத்தெ போட்டாம் பாலாமணி. விகடுவும் ஒரு வணக்கத்தெ வெச்சிக்கிட்டாம். பாலாமணி விகடுவெப் பாத்து, "மைத்துனர். ஒய்ப்போட பிரதர்!"ன்னாம் தமிழையும் இங்கிலீஷையும் கலந்துகட்டி. "இஞ்ஞ எதுக்கு? பாவம் அவர்ரப் போட்டு தொல்ல பண்ணிக்கிட்டு? ஒரு கார்ரப் பிடிச்சி சுத்திப் பாக்க வுடாம?"ன்னு சிரிச்சாங்க அந்தத் தலைமை மருத்துவரு. அவுங்க ஒரு வயசான பெண்மணியா இருந்தாங்க. தலைக்கு கருப்பு அடிச்சிருப்பாங்க போல. சில எடம்ங்க செம்பட்டையா இருந்துச்சு. அவுங்களோட கைகள்ல ஒரு மாதிரியா சொரியா சொரியா இருந்துச்சு. அதெ பாத்ததுமே தலைமை மருத்துவருக்கே இப்பிடியான்னு ஒரு நெனைப்பு விகடுவோட மனசுல வந்துச்சு.

            "ஒரு சின்ன ட்ரீட்மெண்ட்! மைத்துனருக்கு சளி ட்ரபிள். நம்ம ஆயுர்வேதாவோட எபெக்ட் காட்ட எ சான்ஸ்!"ன்னாம் சிரிச்சிக்கிட்டெ பாலாமணி.

            "கோ அகெட்!"ன்னாங்க அந்தத் தலைமை மருத்துவரு. அந்த தலைமை மருத்துவரோட கையில இருந்த சொரிகளப் பத்தி விகடு கேக்கணும்ன்னு நெனைச்சாம். ஆனா பாலாமணி வேகமா வந்து வேலையில பிசியாவ ஆரம்பிச்சிட்டாம். கேக்க வந்ததெ வாயிக்குள்ளயேப் போட்டு முழுங்கிட்டாம் விகடு.

            பாலாமணி தன்னோட நாற்காலியில வந்து உக்காந்தாம். அந்தக் காலத்து பழைய நாற்காலியில ஒண்ணு அது. தேக்கஞ் சட்டத்தால செஞ்சிருக்கணும் அந்த நாற்காலி. அதுக்கு மின்னாடி ஒரு மேசை. அழுக்கடைஞ்ச துணியா, போர்வையான்னு தெரியாத ஒண்ணு மேசை மேல விரிச்சிக் கெடந்துச்சு. அதெ பாக்குறப்பவே கொமட்டிக்கிட்டு வாந்தி வந்திடும் போல இருந்துச்சு. பக்கத்துல ஒரு பெஞ்சு கெடந்துச்சு. அதுவும் பழங்காலத்து பெஞ்சுத்தாம். அதுல உக்காரச் சொன்னாம் பாலாமணி. விகடு உக்காந்தாம். வரிசையா கேஸ்களப் பாக்க ஆரம்பிச்சாம் பாலாமணி. இடுப்புவலி, முதுகு வலி, கைகாலு வலின்னு வரிசையா கேஸ்க வர ஆரம்பிச்சது. ஒவ்வொண்ணா பாத்து வேக வேகமா மருந்துகள எழுத ஆரம்பிச்சாம். மருந்துச் சீட்ட கொடுத்துட்டு அவுங்க கொண்டாந்த டோக்கன் சீட்டெ வாங்கி வெச்சிக்கிட்டாம். அந்த டோக்கனோட நம்பர்ர தங்கிட்டெ இருந்த ஒரு பெரிய நோட்டுல குறிச்சிக்கிட்டாம்.

            மருந்தெ கொடுக்குறதுக்குன்னு ஒரு தனி எடம் இருந்துச்சு. அங்கப் போயி மருந்துச்சீட்டுக் கொடுத்து மருந்தெ வாங்கிட்டு இருந்தாங்க டாக்கடர்ரப் பாத்தவங்க. புதுசா மொத மொறையா வர்றவங்களுக்கு மட்டும் டப்பாக்கள கொடுத்து திரவமா இருக்குற மருந்துகள ஊத்திக் கொடுத்தாங்க. மித்தவங்ககிட்டெ போன தடவெ கொடுத்த டப்பாவக் கேட்டாங்க. அதெ எடுத்துக்கிட்டு வர்றாதவங்கள பக்கத்துலப் போயி டப்பாவ வெல கொடுத்து வாங்கிட்டு வாரச் சொன்னாங்க. ஆஸ்பிட்டலுக்கு ஓரமா டப்பா வித்துகிட்டு நாலைஞ்சு சிறு யேவாரிங்க உக்காந்திருந்தாங்க. அவுங்ககிட்டெ டப்பா இல்லாதவங்கப் போயி வாங்கிட்டு வந்தாங்க.  நாலைஞ்சு மருத்தவருங்க உக்காந்து பாத்துகிட்டு இருந்தாலும் கூட்டம் பாலாமணிகிட்டெதாம் அலை மோதுனுச்சு.

            அதுல சில பேத்தப் பாத்த பாலாமணி, "பாஞ்சு நாளு அட்மிட்டு ஆவ முடியுமா? கம்ப்ளீட்டா க்யூர் பண்ணிடறேம்!"ன்னாம். "எஞ்ஞ டாக்கடரு! தெனமும் வேலைக்குப் போனாத்தாம் வண்டிய ஓட்ட முடியும். இதுல பாஞ்சு நாள்ன்னா குடும்பத்துல புள்ளீயோ குட்டியோ பட்டினியிலயே செத்துடும்! ஏத்தோ மருந்தெ எழுதிக் கொடுங்க. குணம் ஆவுற வரைக்கும் ஆவட்டும். முடியாத கட்டத்துக்கு வேற வழில்லன்னா பாத்துட்டு அட்மிட் ஆவுறேம்!"ன்னுச்சுங்க அந்த ஆளுங்க. "ஓரளவுக்குத்தாங் இந்த மருந்துங்றது. அதுக்கு மேல அட்மிட் ஆயித்தாம் போக்கிக்கணும். ஆச்சுவலா அட்மிஷன் நாப்பத்தஞ்சு நாளு. நாம்ம ஒஞ்ஞ நெலமயப் பாத்துட்டு அதெ பாஞ்சு நாளா மூணுல ஒரு பங்கா சுருக்கிச் சொல்றேம்!"ன்னாம் பாலாமணி. "பாக்குறேம் டாக்கடரு!"ன்னு சொல்லிட்டு மருந்துச் சீட்டெ வாங்கிட்டு அந்தச் சனங்க கெளம்புனுச்சுங்க.

            கொஞ்ச நேரமா பாலாமணியைப் பாத்துட்டு நாலைஞ்சு இளம்பொண்ணுங்க நின்னுச்சுங்க நெலைப்படி ஓரமா. விகடு அதெ கவனிச்சாம். அதெ பாலாமணிகிட்டெ சொல்லணும்ன்னு நெனைக்க நெனைக்க பாலாமணி அடுத்தடுத்த கேஸ்கள்ல ரொம்ப பிசியா இருந்தாம். ஆனா அந்தப் பொண்ணுங்க புத்திசாலிங்க. நுட்பமாவும், ஆழமாவும் கவனிச்சிக்கிட்டு நின்ன அதுங்க, பாலாமணி கொஞ்சம் அசந்த நேரமா பாத்து, "டாக்டர்!"ன்னு வந்து மின்னாடி நின்னுச்சுங்க. கையில இருந்த அட்டென்டென்ஸை பவ்வியமா பயந்துகிட்டெ மே‍சை மேல வெச்சதுங்க. பாலாமணி அதெ வேக வேகமா பிரிச்சி 2014 வருஷத்து நவம்பர் மாசத்து வருகைப் பதிவ எடுத்து வெச்சிட்டு அந்தப் பொண்ணுகளப் பாத்தாம்.

            அந்தப் பொண்ணுங்க அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல, "ப்ளீஸ் டாக்டர்! ஆப்சென்ட் டேஸ் அதிகமாவுது! பஸ்ஸப் பிடிச்சி வர்றதுல கூட்டம் அதிகமா இருக்குறதால, சமயத்துல விட்டுடுறதுல லேட்டாயிடுது! இன்னிக்கு ஆப்சென்ட் போட்டுடாதீங்க டாக்டர்!"ன்னு கெஞ்சுனுச்சுங்க அந்தப் பொண்ணுங்க.

            "படிக்கிற காலத்துலயே இப்பிடின்னா டியூட்டின்னு வந்தா வர்றாமலேயே பிரசன்ட் போட வெச்சிடுவீங்க போல. படிக்கிற காலத்துலயாவது ஸ்ட்ரிக்ட்டா இருக்கட்டுமே. பெறவு டியூட்டியுல போயி என்ன கருமாந்திரத்த வாணாம்ன்னாலும் பண்ணிக்கிடுங்க!"ன்னாம் பாலாமணி.

            "ப்ளீஸ் டாக்டர்! இந்த ஒன் டைம் மட்டும் டாக்டர்!"ன்னுச்சுங்க பொண்ணுங்க.

            "நாட் பாசிபிள்!"ன்னு சொல்லி அந்தப் பொண்ணுங்க பேருக்கு நேரா ஆப்செண்ட்ங்றதெ குறிக்குற ஏபிங்றதெ வேக வேகமா குறிச்சாம். அதெ பாக்க பாக்க அந்தப் பொண்ணுகளுக்கு அழுகெ வந்திடுச்சு. கண்ணு தண்ணி பொல பொலன்னு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு.

            "ப்ளீஸ்! ப்ளீஸ்! டாக்டர்! டாக்டர் ப்ளீஸ்!"ன்னு கெஞ்சுனுச்சுங்க அந்தப் பொண்ணுங்க. அதெ குறிச்சி முடிச்சி அந்த அட்டென்டென்டஸ்ஸ தூக்கி மூஞ்சுல வீசுனாம் பாலாமணி. மூஞ்சுல அடிச்ச அட்டென்டென்டஸ்ஸப் பக்குன்னுப் பிடிச்சிடுச்சுங்க அந்தப் பொண்ணுங்க. அதுக எல்லாம் அழுதுகிட்டெ தலைமை மருத்துவர்ரப் பாக்க ஓடினுச்சுங்க. பாலாமணியும் எழுந்துப் போனாம். அதுக்கு மேல அங்க உக்கார முடியாம விகடு எழுந்து வெளியில மரத்தடியப் பாக்கப் போனாம். அவனுக்கு நெஞ்செல்லாம் கனத்தாப்புல ஆச்சு. "பொம்பள புள்ளையோ கெஞ்சுனாவே மனசு தாங்காது. அதுக அழுதும் இவ்வேம் மனசு கரையலீயே! கல்நெஞ்சுக்காரனா இருப்பாம் போலருக்கு!"ன்னு நெனைச்சாம் விகடு. இப்போ பாலாமணியப் பத்தி நெனைக்குறப்ப அவனுக்கு வெறுப்பா வந்துச்சு.

            தலைமை மருத்துவர்கிட்டெ பெரிய வாக்குவாதம் நடக்குற சத்தம் கேட்டுச்சு. "இவுளுக நெதமும் லேட்டா வர்றதுக்கெல்லாம் பிரசன்ட் போட முடியாது மேம். லேட்டா வர்ற ஒவ்வொரு நாளுக்கும் ஆப்சென்ட் போட்டேம். இன்னிக்கும் போட்டேம். அதிகபடி நாயிங்க எல்லாம்!"ன்னாம் பாலாமணி.

            "ஏழ்மையான புள்ளீயோ டாக்டர்! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வுடுங்க. லேக் ஆப் அட்டன்டன்ஸ் நல்லதல்ல. தொலைஞ்சிட்டுப் போவுதுங்க. பிரசன்ட் பண்ணி வுடுங்க!"ன்னாங்க தலைமை மருத்துவரு.

            "நோ! நம்மால முடியாது. நீஞ்ஞ வாணும்ன்னா பண்ணி வுடுங்க. க்ளாஸையும் நீஞ்ஞளே எடுத்துக்குங்க. நாம்ம உருவாக்குன நாலு பேட்சஸ் ஒஞ்ஞளுக்குத் தெரியும். அதுபடி இருக்கணும்ன்னா நீஞ்ஞ நாம்ம எடுக்குற முடிவுக்குச் சப்போர்ட் பண்ணித்தாம் ஆவணும்! இதுகளுக்கு தயவு தாட்சண்யம் பாக்கக் கூடாது!"ன்னாம் பாலாமணி.

            "பாலாமணி! புள்ளீயோ கால்ல வுழுது பாருங்க. அட்ஜஸ்ட் பண்ணுங்க. ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன்ஸ் மனுஷங்களுக்காகத்தாம். ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ்க்காக மனுஷங்க கெடையாது. கன்சிடர் பண்ணுங்க!"ன்னாங்க தலைமை மருத்துவரு.

            "நாட் அட் ஆல். நாட் பாசிபிள். நம்மோட கரியர்ல தப்பான ஒரு உதாரணத்தெ நாம்ம உருவாக்க விரும்பல!"ன்னு சொல்லிட்டு பாலாமணி விருட்டுன்னு வெளியில வர்றதப் பாத்தாம் விகடு. அவனோட மனசுல எழும்புன அதிர்ச்சிய அவனால மறைக்க முடியல. இந்த ஆஸ்பிட்டலுக்கு வந்திருக்கக் கூடாதோன்னு நெனைக்க ஆரம்பிச்சாம் விகடு.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...