12 Sept 2020

இரண்டு மாதத்துக்கான மளிகை சாமான்கள்!

இரண்டு மாதத்துக்கான மளிகை சாமான்கள்!

செய்யு - 562

            மளிகை சாமாங்களயும் வாங்கிடணும்ன்னு சுப்பு வாத்தியாரு குறியா நின்னதுல யாரும் மத்தியானச் சாப்பாட்டப் பத்தி நெனைக்கல. அதுக்குத் தெரிஞ்ச எல்லெஸ்விங்ற சூப்பர் மார்கெட்டுக்குச் சந்தானம் அத்தான் அழைச்சிட்டுப் போனுச்சு. ரண்டு மாசத்துக்கு ஒரு குடும்பத்துக்குத் தேவையான அத்தனெ மளிகெ சாமானுங்களையும் வாங்கியானுச்சு. அத்தோட அந்தச் சூப்பர் மார்கெட்டுலேந்து இதுவரைக்கும் எவர்சில்வர் பாத்திரங்க, ப்ளாஸ்டிக் டப்பாக்க,  கரண்டிங்க, தம்பளுர்கள்ன்னு எதையும் பாக்காதவரு போல அதுகள்ல கொஞ்சத்தையும் சுப்பு வாத்தியாரு, திருவிழாவுல வெளையாட்டுச் சாமானுங்கள ஆவலாதியாத் தேடித் தேடி வாங்குற சின்ன பையனாட்டம் தேடிப் பிடிச்சு வாங்குனாரு.

            "மாமாவ இந்த சூப்பர் மார்கெட்டுக்கே அழைச்சிட்டு வந்திருக்கக் கூடாதுடா மாப்ளே!"ன்னுச்சு சந்தானம் அத்தான். ஏம்ன்னு கேக்காம, ஏங்ற மாதிரிக்கி சந்தானம் அத்தானப் பாத்தாம் விகடு. அதுக்குப் பதில் சொல்றாப்புல, "அதாங் பாத்திர பண்ட சீர்சனத்திக் கொடுத்து அனுப்பியாச்சுல்லா. பெறவென்ன மறுபடியும் பாத்திர பண்டம்ங்க. மளிகெ சாமானுங்கள மட்டும் வாங்கிக் கொடுத்தா ஆவாதாக்கும்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            சுப்பு வாத்தியாரு அதெ கேட்டுக்கிட்டுதாங் இருந்தாரு. "கைய அலம்பப் போறப்ப சமையக்கட்டெ பாத்தேம்பீ! ஒண்ணும் பொழங்குறதுக்கான சாமாஞ் செட்டுக ஒண்ணு ரண்டு கூட யில்லே. வாங்கிக் கொடுத்த சாமாஞ் செட்டுகள்ல எத்தனெ இஞ்ஞ வந்துச்சோ? எத்தனெ அஞ்ஞயேப் போட்டு வெச்சிருக்கானுவோன்னு தெரியல. அதாங் இருக்கட்டுமேன்னு!"ன்னாரு சுப்பு வாதியாரு.

            "அப்பிடிக் கெடையாது மாமா. நீயி சமையக்கட்ட மட்டுந்தானே பாத்தே. வூடு முழுக்கையாப் பாத்தே? அந்தச் சாமாஞ் செட்டுகள்ல செலது உள்ளார எங்காச்சும் வெச்சிருக்கும். அதெப் புரிஞ்சிக்கிடாம இப்பிடி கடெ பரப்பி வைக்குறாப்புல சாமானுங்கள வாங்கித் தள்ளியிருக்குறீயே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அப்பிடில்ல யம்பீ! நீயி பிரிட்ஜி, டிவிப் பொட்டின்னு வாங்கிக் கொடுத்திட்டே. அதுக்குன்னு ஒதுக்குன காசி நம்மகிட்டெதானே இருக்கு. அதெ வெச்சிக்கிட்டு என்னப் பண்ணப் போறேம்? அந்தக் காசியையும் கையோட கொண்டாந்தேம். அதெ ஏம் கையோட வூட்டுக்குக் கொண்டு போயிகிட்டு? சிலவழிச்சி முடிச்சிப்புடலாம்ன்னுத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாந்தாம் மின்னாடியிலேந்து சொல்லிட்டு இருக்கேம்லா மாமா! பணம் நெறைய இருந்தா நம்மகிட்டெ கொடு. நமக்குச் சிலவுக்குப் பணமில்லன்னா, நீயிப் பாட்டுக்குப் பணம் இருக்குதுன்னு இப்பிடிச் சிலவெ பண்ணிட்டு நிக்குதீயே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "யிப்போ கெளம்புனா செரியா இருக்குமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. சந்தானம் அத்தான் மணியப் பாத்துச்சு. ஒண்ணுஞ் சொல்லாம சிரிச்சிக்கிட்டு. வேற யாருக்கும் மணியப் பாக்கத் தோணல. எல்லாருக்கும் அலுத்துப் போயிருந்துச்சு. சாமாஞ் செட்டுகளோட பில்லு ஒம்பதினாயிரத்துச் சில்லற வந்திருச்சு. அதெ கொடுத்து முடிச்சாரு சுப்பு வாத்தியாரு. வாங்குன சாமாஞ் செட்டுகள அட்டைப் பெட்டியிலயும், சாக்குலயும் கட்டி கொண்டாந்த கடைக்கார ஆளுங்க சந்தானம் அத்தானோட கார்ல போட்டுச்சுங்க.

            "மாமா! மணி சாப்பாட்டு நேரத்தக் கடந்தாச்சு. இனுமே அஞ்ஞப் போயி சாப்பாட்டுக்குன்னு நிக்குறது மருவாதியில்லே. அதுவுமில்லாம அஞ்ஞ அசைவச் சாப்பாடு. நாம்ம அய்யப்பன் பக்தேம். அசைவத்தத் தின்னுப்புட்டு குருவாயூரப்பன் கோயில்ல போயி நிக்க முடியாது. இஞ்ஞயே ஒரு ஓட்டல்லப் பாத்து சாப்பாட்ட முடிச்சிக்கிடலாம்ன்னு நெனைக்கிறேம். சாப்பாடுன்னு பிசாத்துப் பயலுவோ அவ்வனுவோகிட்டெ போயி நிக்கப்படாதுல்லா. அதாங் கெளரவம்ன்னும் நெனைக்கிறேம். என்னத்தெ பண்ணலாம் சொல்லு?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அதாங் யம்பீ முடிவு! ஒரு ஓட்டல்லப் பாருங்க! சாப்பாட்ட முடிச்சிப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. சந்தானம் அத்தான் சுபவிலாஸ்ங்ற சைவ மொறைச் சாப்பாட்டு ஓட்டலுக்கு அழைச்சிட்டுப் போனுச்சு. சாப்பாடு நல்ல பெரமாதமானச் சாப்பாடு. மொதல்ல ஒரு குளோப்ஜான வெச்சாம், வரிசையா வெஜிடபுள் பிரியாணி, சர்க்கரைச் சாதம், சப்பாத்தி ஒண்ணு, சாம்பாரு சாதம், ரசம் சாதம், கொழம்பு சாதம், தயிரு சாதம்ன்னு எல்லாம் பெசைஞ்சு சாப்புட அவசியம் இல்லாமா சாதமா கெளறித்தாம் வெச்சாம். அதுக்குத் தொட்டுக்கன்னு கீரை மசியல், வெண்டெக்காய் பொறியல், உருளெ கெழங்கு பொடிமாசு, குருமா, எண்ணெய்ல பொறிச்ச அப்பளப்பூவு, அப்பளம், மோரு மிளாக, கிடாரங்காயி ஊறுக்கான்னு வெச்சு அத்து ஒரு வித்தியாசமான சாப்பாடா இருந்துச்சு. "ந்நல்லா மொறையானச் சாப்பாடா இருக்கேம்பீ!"ன்னு சுப்பு வாத்தியாரு வாயெடுத்துச் சொல்லி முடிக்கல, அந்தச் சாப்பாட்டு ஒவ்வொண்ணுத்துக்கும் நூத்தம்பது ரூவாயத் தீட்டிப்புட்டாம் ஓட்டல்கார்ரேம்.

            "நூத்தம்பது ரூவாயிக்கு ஒரு சாப்பாடுன்னா அப்பிடித்தாம் மொறையா இருக்கும் மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அவ்வளவு ஒசத்தியான சாப்பாடு எதுக்கும்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னா ஒசத்தியானச் சாப்பாடு? சென்னைப் பட்டணம்ன்னா அப்பிடித்தாம். ஒசத்திங்ற பேர்ல காசியப் புடுங்குவாம். விருந்தாடியா வந்திருக்குற ஒன்னய சுமாரான சாப்பாட்ட சாப்புட வைக்க முடியுமா சொல்லு! அதாங். ஒமக்குத் திருப்தின்னா போதும் மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "யிப்போ வரவேற்புக்கு எங்கப் போவணும் யம்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "மகாலிங்கபுரம் போவணும். யிப்போ அஞ்ஞப் போயி அம்ரித்ல வாங்குன சாமாஞ்செட்டுக வந்துப்புட்டான்னு வெசாரிச்சிக்கிட்டு, மளிகெ சாமாஞ் செட்டுகளப் போட்டுப்புட்டு, யத்தெ, தனம், பொண்ணு மூணையும் அழைச்சிக்கிட்டேம்ன்னா  கெளம்பிடலாம். ஆன்னா அரும்பாக்கத்துலேந்து மகாலிங்கபுரம் போவணும்ன்னா இந்த நேரத்துல டிராபிக் தாங்க முடியாது மாமா! நத்தெ போவுது பாரு ஊந்து ஊந்து அப்பிடித்தாம் போவணும்! மூணு மணியாச்சுன்னா சென்னைப் பட்டணத்தெ டிராபிக் சனியனப் போல பிடிச்சிக்கும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "சீக்கிரமா வண்டிய எடுத்துக் கெளம்புடுவேம் யம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. சட்டுபுட்டுன்ன வண்டியில ஏறி உக்காந்து வண்டி நகர ஆரம்பிக்கிறப்பத்தாம் பின்னாடி வந்த வண்டியில ஒருத்‍தெம் வேகமா மின்னாடி வந்து, கார்ர உரசிக்கிட்டு வந்து ஒரு கோட்டப் போட்டு விட்டாம். கார்ல உரசல் விழுந்துடுச்சு. சந்தானம் அத்தானுக்குக் கோவம் வந்துடுச்சு. கார்ர அப்பிடியே நிறுத்திட்டு எறங்கி, "நில்லுடா பேமாளி! பொரம்போக்கு. கெளம்புறப்பவே சொல்லிட்டு வந்துட்டீயா பொறுக்கி நாயே!"ன்னு அது பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சது. அதோட வாயிலேந்து கேக்க முடியாத அளவுக்கு நாரசமா திட்ட ஆரம்பிச்சது. சந்தானம் அத்தானுக்குள்ள இப்பிடி ஒரு சந்தானம் அத்தானான்னு விகடு வெறிச்சிப் போயிப் பாத்தாம்.

            "ராஸ்கல்! போனப் போட்டு இப்பவே போலீஸ்ல பிடிச்சிக் கொடுக்காம வுட மாட்டேம்! படவா ஓரமா போற கார்ல கோட்டெ போட்டு வுட்டுருக்கீயே?"ன்னு அது பாட்டுக்குப் பேசிட்டே இருக்கு. அதோட புருவங்க, மீசென்னு ஒவ்வொண்ணும் துடிக்கிது. கண்ணு ரண்டும் கோவத்துல சாயுங்காலத்துச் சூரியனெ வைச்சாப்புல செவந்துப் போயிடுச்சு.

            கூட நின்னுட்டு இருக்குற சுப்பு வாத்தியாருக்கும், விகடுவுக்கும், சந்தானம் அத்தானோட பையனுக்கும் அதெ எப்பிடி நிப்பாட்டுறதுன்னு தெரியல. "வேண்டாம்பீ! கெளம்புவேம்! சின்ன கீறலுதானே! பாத்துக்கிடலாம்! நாம்ம சிலவெ பண்ணிடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. "நீயிச் சும்மா யிரு மாமா! ஒனக்கு ஒண்ணும் தெரியாது. என்னத்தெ நெனைச்சிட்டு இருக்காம் பேய்யி.... மவ்வேம்?"ன்னு எகிற ஆரம்பிச்சிடுச்சு சந்தானம் அத்தான்.

            "போலீஸ் வந்தாத்தாம்டா கார்ர எடுப்பேம்! வர்றச் சொல்லு போலீஸ!"ன்னுச்சு சந்தானம் அத்தான் அடிவயித்துலேந்து கொரல எடுத்து. அந்த ஒத்தக் கொரலுக்கே அத்து சாப்புட்ட சாப்பாடு அத்தனையும் செரிச்சிருக்கும். ஒரசிட்டு வந்து கார்ல கோட்டெப் போட்டவேம் பயந்துட்டாம். "இங்கயே பேசி முடிச்சிக்கிடலாம்!"ன்னு கெஞ்சுனாம். சந்தானம் அத்தான் விடாம எகிறி அடிச்சிது. "கார் நம்பர்ர நோட் பண்ணி ரிப்போர்ட் பண்ணாம வுட மாட்டேன். ஒங் கார்ர கோர்ட்ல போயி எடுத்துக்கோ!"ன்னு இன்னும் ராவா கேக்க முடியாத வார்த்தையெல்லாம் சேத்துப் போட்டுச் சொன்னுச்சு. கடெசீயில அந்த ஆளு ஆயிரம் ரூவாய எடுத்துக் கொடுத்து பிரச்சனைய முடிக்க முன்வந்தாம். "இனுமே ஒழுங்கு மருவாதியப் போ! அடுத்தவேம் கார்ல கோட்டப் போடணும்ன்னு நெனைக்காதே. பெறவு ஒம் கார்ரு கோடு போட கூட வழியில்லாம நசுங்கி நாசமாப் போயிடும்! எல்லாரும் நம்மள மாதிரிக்கே பொறுமையா போயிட்டு இருக்க மாட்டாம். பதிலுக்கு அவனும் கோட்டே போட்டு விட்டாம்ன்னா வெச்சுக்கோ ந்நல்லா இருக்காது பாத்துக்கோ!"ன்னு சொல்லிட்டு அந்த ஆளு கொடுத்த ரூவாய வேணாம்னுடுச்சு.

            கடைசியா, "இனுமே வண்டியில போறப்போ ஒழுங்கா போடா சாவு கெராக்கி!"ன்னுச்சு. அந்த வண்டியோட ஆளு ஒண்ணும் சொல்ல முடியாம போனாம். இந்தச் சண்டையில ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அந்தாண்ட இந்தாண்ட வாகனங்க எதுவும் நகராம வேடிக்கெ பாக்க ஆரம்பிச்சிடுச்சுங்க. சண்டெ முடிஞ்சி பெற்பாடுதாம் வாகனங்க நவுர ஆரம்பிச்சதுங்க.

            காரு கெளம்ப ஆரம்பிச்ச பெற்பாடு சந்தானம் அத்தாங்கிட்டெ கோவப்பட்டதுக்கான அறிகுறி ஒண்ணுமே காங்கல. அத்து சிரிச்சிது சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "இஞ்ஞல்லாம் இப்பிடித்தாம் மாமா! பேசலன்னா வெச்சுக்கோ நம்மள மேஞ்சிப்புடுவானுவோ. நாம்ம ஒண்ணும் சொல்லலன்னா வெச்சுக்கோ, கார்ர என்னடா ஓட்டுறேன்னு நம்ம மேல பாயுவாம் அந்தக் காருக்கார்ரேம். அதுக்கு நாலு பேத்து நின்னுகிட்டு நம்மகிட்டெருந்து ஆயிரத்தெ புடுங்கிப்புடுவாம். அதுக்கி மின்னாடி நம்ம கொரலு ஒசந்துட்டா வெச்சுக்கோயேம், நாம்ம தப்பிச்சிக்கிடலாம். யில்லன்னா மாட்டிக்கிறாப்புல ஆயிடும். நாமளும் டக்குன்னு இன்டிகேஷன் யில்லாம வண்டிய திருப்புனது தப்புதாம். அவனும் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பாக்காம வேகமா வண்டியக் கொண்டாந்தது தப்புத்தாம். இருந்தாலும் இந்தச் சிட்டியில மாமா, நம்ம மேலயே தப்பு இருந்தாலும் அதெ காட்டிக்கிடாம எதுர்ல இருக்குறவேம் மேல பாஞ்சாத்தாம் நாம்ம தப்பிக்கிலாம்! யில்லன்ன நம்மள வெச்சி ச்சும்மா கும்மிப்புடுவானுவோ கும்மி!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "என்னாம்பீ! முக்கியமான தேவைக்குக் கெளம்புறப்ப எல்லாம் யிப்படி ஒரசலா இருக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதல்லாம் சிட்டியில அப்பிடித்தாம் மாமா! மேல வந்து வந்து ஏறுவானுவோ. நாம்ம அதெத் தாண்டி ஏறணும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "நாம்ம ‍‍அதெ சொல்லல யம்பீ!"ன்னு வாயெடுத்த சுப்பு வாத்தியாரு பேசாம நிப்பாட்டிக்கிட்டாரு.

            "என்னவோ சொல்ல வந்தீயே மாமா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ஒண்ணுமில்லம்பீ! வண்டியப் பாத்து ஓட்டுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இனுமே வண்டி மேல எவனாச்சும் கொண்டாந்து விட்டாம்ன்னா எகிறிப்புடுவேம் எகிறி! ச்சும்மா நசுக்கிப் புடுவேம் நசுக்கி!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            அந்த களேபரம் முடிஞ்சு கார்லேந்து பாலாமணி பாத்து வெச்ச வாடகெ வூட்டுக்கு மின்னாடி வந்து எறங்குனப்போ மாடி கேட்டுக்குப் பக்கத்துலயே தனம் அத்தாச்சியும், அதோட பொண்ணும் நின்னுச்சு.

            "ரிஷப்ஷக்குப் போவணும்ன்னு இப்பத்தாங் சித்தெ மின்னாடி எல்லாரும் கெளம்புனாங்க. நம்மளையும் கூப்டாங்க. நாம்ம அம்மாவ மட்டும் அனுப்பிச்சிட்டு, நீஞ்ஞ வர்றதப் பத்திச் சொல்லி, ஒஞ்ஞளோட வர்றதாச் சொன்னேம். செரின்னு சாவிய நம்மகிட்டெ கொடுத்துட்டு, அவுங்க வந்தப் பெறவு சாவியப் பூட்டிப் பக்கத்துல கொடுத்துட்டு கெளம்பிடச் சொன்னாங்க!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.

            "மாமாவ சூப்பர் மார்கெட்டுல வுட்டது தப்பாப் போச்சு. அது பாட்டுக்கு சாமாஞ் செட்டுகளத் தேட ஆரம்பிச்சதுல நேரம் ஆயிடுச்சு. வண்டியில மளிகெ சாமானுங்க, பாத்திர சாமானுங்க இருக்கு. எறக்கி வெச்சிப்புட்டா கெளம்பிடலாம்! பிரிட்ஜி, டிவிப்பொட்டி, வாஷிங் மெஷின்னு, கிரைண்டரு, மிக்ஸில்லாம் வந்துச்சுல்லா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அதெல்லாம் அப்பயே வந்துட்டு. அதெ வேற சனங்க தொறந்துப் பாத்துட்டு நின்னதுல நேரமாயிடுச்சு. எல்லா கண்ணும் பட்டதுதாங் மிச்சம். கலியாணம் ஆயியும் சீரு மேல சீரு வந்துச் சேர்றதா பேசிக்கிட்டுங்க சனங்க. யிப்போ நாமளும் பேசிட்டு நின்னா இன்னும் நேரமாவும். வண்டியில இருக்குற சாமாஞ் செட்டுகள சுலுவா எறக்கி ஏத்தி எறக்குங்க!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.

            விகடு, சந்தானம் அத்தான், சுப்பு வாத்தியாரு, சந்தானம் அத்தானோட மவ்வேன்னு நாலு பேத்தும் வேக வேகமாக சாமாஞ் செட்டுகள பொட்டிகளாவும், மூட்டைகளாவும் இருந்ததெ எல்லாம் வெரசா கொண்டுப் போயி எறக்கி ஏத்தி எறக்குனாங்க. சின்னதா இருக்குற பெட்டிகள்ல செலத தனம் அத்தாச்சியும், அதோட பொண்ணும் கொண்டாந்து எறக்குனுச்சுங்க. நாலு நிமிஷத்துல வேல முடிஞ்சது.

            "கெளம்புங்க நேரத்தோட நாமளும் ரிஷப்சனுக்குப் போயிடுவேம்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி. எல்லாரும் ஏறி உக்காந்ததும் சந்தானம் அத்தானோட காரு குருவாயூரப்பன் கோயில்ல நோக்கி மகாலிங்கபுரத்துக்குக் கெளம்புச்சு. சந்தானம் அத்தான் சொன்னது சரியாத்தாம் இருந்துச்சு, டிராபிக்ல காரு நின்னு நின்னுப் போனுச்சு. இந்த ஊர்ல இம்மாம் வாகனங்க எங்கடா ஈசல் பூச்சிக் கெளம்புறாப்புல கெளம்புதுன்னு நெனைக்குறாப்புல அம்மாம் வாகனங்க. சமயத்துல ஊர்ல இருக்குற செடி கொடிகள அழிக்க வெட்டுக்கிளிக் கூட்டம் கெளம்பும் பாருங்க, வானத்துச் சூரியன மறைச்சி இருட்டாக்கிக்கிட்டு, அப்பிடி இருந்துச்சு ஒவ்வொரு வாகனத்துலேந்து வந்த பொக எல்லா எடத்தையும் மறைச்சிக்கிட்டு எங்கப் பாத்தாலும் கருப்பா! சென்னைப் பட்டணத்துல சாயுங்காலம் ஆவ ஆவ இருட்டு வர்றது அநேகமா சூரியன் மறையறதால இல்ல, வாகனங்க வெளியிடுற கருப்பான பொகையாலத்தாம். அதே போல திரும்ப இருட்டு மறைஞ்சி கருப்புப் போயி காலையில பொழுது விடியறதுங்றது, ராத்திரியில கொஞ்சம் கொஞ்சமா வாகனங்க கொறைஞ்சிப் பொயி பொக விடுறதும் கொறையிறதாலதாம்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...