11 Sept 2020

ஒரு நாள் உடற்பயிற்சியாளர்கள்

 

ஒரு நாள் உடற்பயிற்சியாளர்கள்

            மன்னுவோட உடற்பயிற்சி செய்யுறதுன்னு முடிவான பெறவு அது பல நாட்கள் தொடர்ந்துச்சு. ஆரம்பத்துல கொஞ்ச நாளைக்கு ஓடிட்டு விட்டுடுவானுவோன்னு நெனைச்ச வயக்காட்டு ஆளுங்களுக்கு அது ஆச்சரியமாப் போயிடுச்சு. இப்போ யாரும் ஓடுற நம்மளையும் மன்னுவையும் வேத்துக்கிரகவாசியாப் பாக்குறதும் நின்னுப் போயிடுச்சு.

            நாங்க ரண்டு பேரும் தெடல்ல ஆரம்பிச்சி வயக்காட்டு வழியா ஓடுவோம். இதெப் பாத்துட்டு அப்பைக்கப்போ சில பேரு வந்து சேருவாங்க. ரண்டு மூணு நாளு கூடவே ஓடியாருவாங்க. அப்புறம் காணாமப் போயிடுவாங்க. அதுல வேற்குடியிலேந்து வந்து சேர்ந்த ஐயப்பனும், பாலாஜியும் எங்களோட நல்லாவே ஒட்டிக்கிட்டாங்க. நாங்க நாலு பேரும் ரொம்ப நாளு காலக் கருக்கல்லயே ஓட்டமும், உடற்பயிற்சியுமா செஞ்சிக்கிட்டு இருந்தோம்.

            வந்த ஒடனே ஓடுறதுதாம். ஓடி வந்து நின்னா ஒடம்பு வியர்த்து விறுவிறுத்துப் போயிடும். அப்படியே உடற்பயிற்சியச் செய்ய ஆரம்பிக்கிறது. கால அகற்றி கைய வீசுறது, நின்ன நிலையிலயே ஒடம்ப அசைச்சுத் திருப்புறது, பஸ்கி போடுறது, தண்டால் எடுக்கிறது, படுத்தபடியே எழுந்திரிக்கிறது இப்படியே கொஞ்ச நாளைக்கு உடற்பயிற்சிப் போனுச்சு.

            பாலாஜி ஒரு நாளு தம்புள்ஸோட வந்தப்போ தம்புள்ஸ் போடுறதும் நடந்துச்சு. தம்புள்ஸ்ஸப் பாத்துட்டு சில பேரு வந்துச் சேர்ந்தாங்க. எதுவும் சில காலங்ற மாதிரி எல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தாம். கொஞ்ச காலம்ன்னாலும் அவுங்க ஆர்வமாக வந்துச் செய்யுறதப் பாக்குறப்போ ஆச்சரியமா இருக்கும். ரொம்ப நாளு செய்யுற நம்பளையே தூக்கிச் சாப்புட்டுடுவாங்களோன்னு தோணும். மறுநாளு பார்த்தா ஒடம்பு வலிக்குதுன்னு சொல்லி எதுவும் செய்யாம அப்படியே உக்காந்துடுவாங்க. அடுத்தடுத்த நாள்ல வருவாங்க, வந்து வேடிக்கப் பார்ப்பாங்க. அப்புறம் அப்பிடியே வர்றதையும் நிப்பாட்டிடுவாங்க. அவுங்கள எங்கயாச்சும் வழியிலப் பார்த்தா, எங்க நேரம் இருக்குதுன்னு அப்பிடிச் சொல்லுவாங்க. அப்படிச் சொல்லிட்டு ஆன்னா வரணும், கண்டிப்பா வரணும் அப்பிடின்னும் சொல்லிட்டுப் போவாங்க.

            ஓடுறதுல ஐயப்பன அடிச்சிக்க முடியாது. நாலு சுத்து ஓடியாந்தாலும் களைப்பே இல்லாம நிப்பாரு. நாம்ம ரண்டு சுத்துக்கே சுருண்டது போல ஆயிடுவேம். மன்னு ரண்டரைச் சுத்து வரை நல்லா போவாம். பாலாஜிக்கு எப்பவும் ஒரு சுத்துதாம். இதுல ஐயப்பனும், நாமளும் அளவான ஒசரம். பாலாஜி நெடுநெடுன்னு ரொம்ப உசரம். அரை தென்னை மர அளவுக்கு இருக்கும். அவரோட காலு அளவுக்குச் செருப்பு கடையில கெடைக்காதுன்னா பாத்துக்கோங்க. அளவெடுத்துச் செஞ்சித்தாம் ஆவணும். மன்னு கட்டை, அதாச்சி குட்டை. போலீஸாயிடனும்ங்ற நெனைப்புல ஒசரத்தை அதிகம் பண்ண ஓட்டத்தோடயும், உடற்பயிற்சியோடயும் தொங்குற மாதிரியான பயிற்சிகளையும் அதிகமா பண்ணிட்டு இருந்தாம்.

            உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சப் பெறவு ஒடம்பு நல்லா கரவு செரவா ஆக ஆரம்பிச்சது. ஓடி வந்து நின்னா போதும் ஒடம்புல இருக்குற அத்தனெ கொழுப்பும் வெயர்வையா கரைஞ்சு ஊத்துறாப்புல இருக்கும். அப்போல்லாம் ஒரு நாளு ஒட்டத்துக்கோ உடற்பயிற்சிக்கோ போவாம இருந்தா ஒரு மாதிரியா இருக்கும். பல்லு வெலக்குற மாதிரி, குளிக்கிற மாதிரி, காத்தால எழும்பி தேத்தண்ணி குடிக்கிற மாதிரி அது ஒரு பழக்கமாவே ஆயிடுச்சு. இந்தப் பழக்கம் மூணு நாலு வருஷம் வரைக்கும் விடாம தொடர்ந்துச்சுன்னு நெனைக்கிறேன்.

            அதுக்கு அப்புறம் தனக்கு இனுமே போலீஸ் வேல கெடைக்காதுன்னு மன்னு வெளிநாடு கெளம்பிப் போனாம். நாலுல ஒரு ஆளு கொறைஞ்சது. பாலாஜி அண்ணனோட அடவுக் கடைக்கு ஒதவியா போறதாவும், ராத்திரி வந்து படுக்குறப்ப பதினோரு மணி, பன்னெண்டு மணி ஆவுறதாவும், அதால காத்தால எழுந்திரிக்க முடியலன்னும், அதால வர முடியலன்னும் சொன்னாப்ப நாலுல ரண்டு கொறைஞ்சது.

            நாமளும் ஐயப்பனும் கொஞ்ச நாளு செஞ்சிக்கிட்டு இருந்தேம். அவரு ஓட்டம், பயிற்சியோட யோகாசனமும் செய்வாரு. ஒடம்பு நல்லா ரப்பரு போல வளையும் அவருக்கு. ரொம்ப கஷ்டமான ஆசனத்தெ கூட அசால்ட்டா போடுவாரு. கொஞ்ச நாள்ல ஊர்ல இருந்தா போழப்பு ஓடாதுன்னு ஐயப்பனும் சென்னைப் பக்கம் போனதுக்குப் பெற நாம்ம ஒரு ஆளு மட்டுந்தாம் மிஞ்சுனது. நாமளும் ரண்டு மூணு மாசம் வரைக்கும் தனியாப் போயி ஓடிட்டும், உடற்பயிற்சிச் செஞ்சிட்டும் இருந்தது. ஒரு கட்டத்துக்குப் பெறவு தனியா ஓடுறதுக்கு ஒரு மாதிரியா இருந்ததால நடந்து போறதும், உடற்பயிற்சி செய்யுறதுமா இருந்தது. ஒரு கட்டத்துல கழுதெ தேய்ஞ்சு கட்டெறும்பு ஆனது போல உடற்பயிற்சி தேய்ஞ்சு நடை பயிற்சியோட நின்னது. நெதமும் காத்தாலயும், சாயுங்காலமுமா தெடல்லயும், வயக்காட்டுலயும் காத்தாட நடந்து போறது மட்டும் இப்ப வரைக்கும் நிக்கல. நடந்துகிட்டெ இருக்குது.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...